Search This Blog

18.12.12

தருமபுரி சாம்பல்களும் தருமமிகு ஊடகங்களும்

தருமபுரி சாம்பல்களும் தருமமிகு ஊடகங்களும்

(நம் நாட்டில் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் எப்படி வருண அரசியலின் வார்ப்படங்களாகவும் மனுதர்ம வாரிசுகளாகவும் உள்ளன என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளார் தீக்கதிர் நாளேட் டின் துணையாசிரியர் அ. குமரேசன் அவர்கள். உண்மைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் கட்டுரை - படியுங்கள் - சிந்தியுங்கள்.
- ஆசிரியர்)

தருமபுரியில் என்ன நடந்தது என்பதை விடவும் அதற்கு முன்பும் பின்பும் இந்த தர்மமிகு நாட்டில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண் டிருக்கிறது என்பது முக்கியம்.

ஒரு காலகட்டத்தில் இங்கே பிராமணிய எதிர்ப்பை மையமாக வைத்து திராவிட இயக்கமாக ஓர் அரசியல் அணித் திரட்சி வேலை நடந்தது. பிற்காலத்தில் அதன் வெளிச்சத்தில் ஆட்சியதிகாரத்திற்கே வந்தவர்களது கூச்சமற்ற சமரசங்களில் விமர்சனங்கள் இருக்கலாம் - ஆனால், அப்படி யொரு இயக்கத் திற்கான தேவை இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு, அனைத்து சாதியி னரும் அர்ச்சகராவதற்கான சட்டம், ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை, தேவதாசி முறை ஒழிப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பெண்களுக்கான சில பாதுகாப்புச் சட்டங்கள் இவையெல் லாம் நடைமுறையாகியிருப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இன்று, தலித் மக்களுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்டோரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும் - சுருக்க மாகச் சொல்வதானால் பிராமணர் அல்லாதாரை - அரசியலாகத் திரட்டுகிற வேலை நடக்கிறது. தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிந்து பிறசாதிப் பெண் களை மயக்குகிறார்கள் என்று சொல்லி பெண்களை அவமானப்படுத்துகிற கூச்சமற்ற வெறியூட்டல்கள் நடக் கின்றன. முந்தைய இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவை என் றால், இன்று நடப்பது வரலாற்றுச் சக்கரத்தைக் கடந்த காலத்திற்குத் திருப்புகிற ஆதிக்க சாதிய அயோக்கியத்தனம்.
முற்போக்காளர்களும் ஜனநாயக வாதிகளும் கவலைப்பட வேண்டிய விசயம் - பொது எதிரிகளான ஆளும் வர்க்கத்தினரையும் நாட்டைக் காட் டிக்கொடுக்கும் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதற்காக ஒன்று பட வேண்டிய உழைப்பாளி மக்களை இது கூறுபோடுகிறது. ஒரு பகுதி பாட்டாளி தனது சமூகம் யாரோலோ மிதி படுவதை விடவும், தன் காலில் மிதிபடு வதற்கு இன்னொரு சமூகம் இருப்பதில் மனநிறைவு கொள்கிற, பாட்டாளிவர்க்கக் குணத்திற்கே நேர் மாறான சிறுமைத்தனத்தைக் கெட்டிப்படுத்தும் கைங்கர்யம் இது.

கள்ளச் சிரிப்பு சிரிக்கிறான் மனு.

அந்தச் சிரிப்பு இந்தியாவின் ஊடகக் களத்திலும் ஊடுருவி ஒலிக் கிறது, தலித் மக்கள் மீது தாக்குதல் நடக்கிறபோது, ஒன்று காவல் துறையோ மற்ற அரசு இயந்திரங்களோ அசைவதில்லை. அப்படியே நட வடிக்கை எடுத்தாலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. கல்வி உள்ளிட்ட அரசுத்துறைகளில் தலித்துகளுக்கான இடங்கள் நிரப்பப்படுவதில்லை. இதற் கெல்லாம் காரணம், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங் களின் உயர் அதிகார நாற்காலிகளில் தலித்து கள் கிட்டத்தட்ட அறவே இல்லை என்கிற அளவுக்கு மிகக்குறைவானவர்களே இருப்பதுதான்.
அதே நிலைமைதான் ஊடகங்களி லும். இந்தியாவின் பெரும் வர்த்தக ஊட கங்களின் செய்தித் தயாரிப்பு அறைகளில் - 1992ல் ஒரு தலித் கூட இருக்கவில்லை. இன்று 2012ல் அதே நிலை - கிட்டத்தட்ட ஒரு தலித் கூட இல்லை என்ற நிலைமை தான்.  இந்த ஆய்வை நடத்தியவர் - கென்னத் ஜே. கூப்பர் என்ற ஒரு அமெரிக்க-ஆப்பிரிக்கர். 2006ல் நடத்தப்பட்ட அவரது ஆய்வின் படி, இந்திய ஊடகங்களில் முடிவெடுக்கும் இடங்களில் - குறிப்பாகப் பெரும் தனியார் ஊடகங்களில். இருக்கும் 300 முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. பழங்குடியினரும் இல்லை. தொலைக் காட்சிகளின் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்போரில் ஒருவர்கூட தலித், பழங்குடியினர் இல்லை. இன்றைய நிலைமையில் எங்காவது ஓரிருவர் இருக்கக்கூடும்.

பிறகு எப்படி இந்த பெரிய ஊடகங் களில் தலித் மக்களின் உண்மை நில வரங்கள் வெளிவரும்? தமிழ் சினிமா விலும் இதே நிலை தான்.
எனக்குத் தெரிந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு கதாநாயக நடிகர் விக்ரம். அது பொதுவாக யாருக்கும் தெரியாது - ராம நாதபுரம் மாவட்ட ஆதிக்கசாதியினரைத் தவிர. அவரது தெய்வத்திருமகன் படத்தின் பெயரை அவர்கள் எதிர்த்த தற்கு முக்கிய காரணம் அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதே.
ஏன் - இசைஞானி இளையராஜாவை இங்குள்ள சில பெரிய பத்திரிகை நிறுவனங்கள் எப்போது அங்கீகரித்து அட்டைப்படம் போட்டார்கள் என்றால், அவர் மேல்தட்டினரின் ரசனைக்கேற்ற ஜனனீ ஜனனீ என்ற பாட்டுக்கு இசையமைத்த பிறகுதான்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஸ்பானியர்கள், அமெரிக்க ஆப்பிரிக்கர் கள் அந் நாட்டு ஊடகங்களில் இல்லாத நிலை உள்ளது.
அதன் விளைவு, இந்த மக்கள் பற்றி இதர மக்களிடையே பரவியிருக்கும் 

கருத்து: இவர்கள் வெளியே பயணிப்பதே இல்லை. முறை யாகச் சாப்பிடுவதில்லை. முறையான திருமண உறவு கிடையாது...
இதே போன்ற மனநிலை இங்கேயும். தங்களது பெண்ணுக்கு வேறு சாதிகளில் கூட மாப்பிள்ளை பார்க்க முன்வந்த பெற்றோர், அந்த சாதி மட்டும் வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். ஏன் வேண்டாம் என்று கேட்டபோது, அவங்க திருந்தவே மாட்டாங்க, என்றனர். எந்த வகையில அவர்கள் கெட்டுப்போயிருக் கிறார்கள், திருந்துவதற்கு, என்று நான் விடாமல் கேட்டபோது, மாப்பிள்ளை தேடும் விசயத்தை என்னோடு பேசுவ தில்லை என்று முடிவெடுத்தார்கள்.
இந்த மனநிலையை இறுகிப்போக வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு அல்லது பங்களிப்பின்மை முக்கிய பங் காற்றுகிறது. தலித் இயக்கங்கள் நடத்தும் ஏடுகள், தலித் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயக்க ஏடுகள் தவிர்த்து, பெரும் வர்த்தக (கார்ப்பரேட்) ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் தலித் எழுத்தாளர்கள் கிடையாது.

தில்லியின் மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகக் கல்லூரியின் (யுசிஎம்எஸ்) தலித் மாணவர்கள் 1995ல் ஒரு தொடர் போராட்டம் நடத்தினர். கல்லூரியில் பயிலும் பிற சாதி மாணவர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள், உணவகத்தில் அவர்கள் வரும் நேரத்தில் இவர்கள் சாப்பிட அனுமதிப்பதில்லை, சாதிப்பெயர் சொல்லித் திட்டுகிறார்கள் என்பது அவர்களது புகார்கள். அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோர் கலவரத்தில் இறங்கியபோது, அதை ஏதோ சத்திய ஆவேசப் போராட்டம் போல தினமும் செய்தி வெளியிட்ட ஏடுகள், தலித் மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் பரவட்டும் என இந்த நெருப்பைப் பரப்புக என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய பத்திரிகையாளர் உண்டு. அவருக்கு வாஜ்பாய் அரசில் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இட ஒதுக்கீட்டையே குழிதோண்டிப் புதைப்ப தற்கான பொதுத்துறை கைகழுவல் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது அவரிடம் ஒப்படைக்கப்பட்டது!
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டபோது, எருமை மாட்டின் மீது செல்கிற சிறுவனுக்கு அமைச்சர் டாக்டர் பட்டம் தருவது போன்ற கார்ட்டூன் வெளியிட்டது ஒரு பெரிய ஆங்கில நாளேடு.
தமிழகத்திலேயேகூட, சென்னை யில் சட்டக்கல்லூரி வளாகத்தில் பிற் படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை தலித் மாணவர்கள் தாக்கிய நிகழ்வை (அந்த வன் முறையை நியாயப்படுத்துவதற்கில்லை என்பது வேறு விவகாரம்) நேரடி ஒளிபரப்பாகவும், மறு மறு மறு ஒளி பரப்பாகவும் பரப்பிய தமிழகப் பெருந் தொலைக்காட்சி நிறுவனங்கள், பரமக்குடி, தருமபுரி, கடலூர் உள்பட தலித் மக்கள் தாக்கப்பட்ட கொடுமை குறித்து அந்த அளவுக்கு முக்கியத் துவம் கொடுக்க வில்லையே?
தருமபுரியில் நடந்தது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதற்கு சுயசாட் சியமாக சில தலைவர்கள் பேட்டியளித் திருக்கிறார்கள். பொருள்கள்தானே அழிக்கப்பட்டன, யாருடைய உட லுக்கோ உயிருக்கோ இன்னல் ஏற் படுத்தவில்லையே என்கிறார் இன் னொருவர். மேல் சாதிக்கு சமமான நிலை வர வேண்டுமானால், தங்களின் விந்து மேல் சாதிப் பெண்களின் உட லுக்குள் சென்றாக வேண்டும் என்று தலித் இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்று காதல் உறவுகளைக் கொச்சைப் படுத்தி தனது சமூகத்தினருக்கான தலைமைப்பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார் மற்றொருவர். இப்படிப்பட்டவர்களை அழுத்தமாகக் கண்டிக்க எந்தப் பெரிய ஊடகம் முன்வந்தது? தீக்கதிர் எழுதியது.

உத்தப்புரம் பிரச்சனையில், சுவரை எழுப்பியவர்களின் துயரத்தைத்தான் நம் ஊடகங்கள் பெரிதுபடுத்தின என்பதை மறக்க முடியுமா? இன்று அங்கே இரு தரப்பு மக்களும் இயல்பாக இணைந்து வாழ்கிறார்கள். இந்த இணக்கத்தை ஏற்படுத்தியது மார்க் சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி யும்தான் என்று பாராட்டு கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு. ஏன் பெரிய ஊடகங்கள் ஒரு வரிச் செய்தியாகவாவது வெளியிடவில்லை?
ஊடகங்களின் இந்தத் தொடர்ச்  சியான அணுகுமுறைக்குக் காரணம், அவர்களுக்குள்ளேயும் மனுவாதம் ஊறிப்போயிருக்கிறது. வர்க்க அரசியல் போலவே ஆழமான வர்ண அரசியல் என்பதை மறுக்க முடியுமா? நடுநிலை என்பது அவர்கள் போட்டுக் கொண்டி ருக்கிற ஒப்பனை என்பதை மறக்க வேண்டுமா?

இதன் விளைவு என்ன?

தலித் மக்களின் அவலங்கள் வெளியே தெரியாது. அதை தீவிரவாத சக்திகள், குறுங் குழுவாத கும்பல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. தலித் மக்களுக்கு எதிரான சிந்தனைகள் தொடர்கின்றன. இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கொந்தளிப்புகள் அவ்வப் போது கிளப்பிவிடப்படுகின்றன. அரசமைப்பு சாசனத்தின் சமத்து வம், சகோரதத்துவம் என்ற லட்சியங்கள் எள்ள லுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூகப் பன்முகத்தன்மை மறுக்கப் படுவதால் மேலோங்குகிறது ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கம். உலக அரங்கில் குனிந்த இந்தியாவின் தலை நிமிரவே முடியாமல் போகிறது.

மனு வாதத்தின் மறு அவதாரமான ஊடகங்கள்!

                    --------------------------நன்றி: தீக்கதிர் வண்ணக்கதிர் - 16.12.2012


7 comments:

தமிழ் ஓவியா said...


படித்தவர்?


படித்தவர் செய்யும் செயலா இது? என்ற கேள்வி இந்தச் செய் தியைப் படிக்கும் ஒவ் வொருவரின் மனதிலும் எழுந்துள்ளது.

சென்னை திருமங் கலத்தில் நடந்த நிகழ்வு தான் அது.

எம்.பி.ஏ., படித்தவர். முனைவர் பட்டமும் (பி.எச்.டி) பெற்றவர். கல்லூரி ஒன்றின் துறைத் தலைவர்.

திருமணமாகி 13 வயதில் ஒரு மகள். இந்தச் சூழ்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த தம் மனைவியை நள்ளி ரவில் குழவிக் கல்லைத் தலையில் போட்டுக் கொடூரமாகக் கொன்றி ருக்கிறார்.

என்ன காரணமாம்? மனைவி பெரும் செல் வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கார ணத்தால் கணவனை மட்டம் தட்டிப் பேசுவா ராம். தம் குடும்பத்தை உயர்த்தி, கணவன் குடும்பத்தைத் தாழ்த் திப் பேசுவாராம்.

13 வயதில் மகள் இருக்கிறாள். அப்படி யானால் திருமணமாகி குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாவது ஆகி யிருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை 14 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது என்றால் அதனைச் சரி செய்ய வழி வகையா இல்லை?

எம்.பி.ஏ., படித்து என்ன பயன்? பி.எச்டி. பட்டம் பெற்றுதான் என்ன பிரயோசனம்?

நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை என்பது இப்பொழுது புரிகிறதா

-இல்லையா?

தமிழர் தலைவர் எழுதி வரும் வாழ் வியல் சிந்தனைகள் பகுதி எவ்வளவு அவசி யம் என்பது இப்பொ ழுது புரிகிறதா - இல்லையா?

தாழ்வு மனப்பான்மை என்பது பெரிய இடத் தில் தாண்டவமாடு கிறது.

பணம் - பவிசு - ஆடம்பரம், நுகர்வு வெறி என்கிற குண்டுச் சட்டிக் குள் குதிரை யோட்டும் மனோபாவம் எனும் வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் வெளியுலகக் காற்றைச் சுவாசித்தறியாத சுயநல வாதிகள் படித்து என்ன - பணம் கை நிறைய சம்பாதித்து என்ன பயனோ?

பணம் மட்டும் வாழ் வல்ல; மனம் பண்பட் டால் அதுதான் வெற்றி கரமான வாழ்க்கை!

- மயிலாடன் 18-12-2012

தமிழ் ஓவியா said...


நேர்மையான பேட்டியல்ல


தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான கோவை இராதாகிருஷ்ணன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

ஜாதிய அமைப்பு - மதவாத அமைப்புகளை அவர் கண்டிப்பதாகவும் கூறினார்.

என்ன காரணத்தாலோ பேட்டி கண்டவர் சில கேள்விகளை அவரிடத்தில் வைக்கத் தவறிவிட்டார்.

இந்து ராஷ்டிரம் அமைக்க இருப்பதாக அவர் களின் கட்சி வெளிப்படையாகக் கூறவில்லையா? மதச் சார்பின்மை பற்றி அக்கட்சியின் கொள்கை என்ன? என்ற வினாக்களைத் தொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

சிறுபான்மையினர் பற்றிய அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற வினாவை நேரிடை யாகக் கேட்டிருக்க வேண்டாமா?

காதல்பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவற்றவையாகவே உள்ளன. பெரும்பாலும் வன்னியர் சங்க நிறுவனர் கருத்தோடு உடன் கட்டை ஏறுவதாகவே இருந்தது.

குறிப்பிட்ட வயதில் காதல் வயப்படுவதுபற்றிக் குறை கூறியும் உள்ளார். குறிப்பிட்ட வயதில் வருவதுதான் காதல். இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கருத்து போல கூறுவது நல்ல நகைச்சுவையே.

பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் காதல் திருமணங்கள் நடக்க வேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.

ஜாதிய சமூக அமைப்பில் பெற்றோர்கள் அதனைக் கடந்து வந்து பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்க முடியுமா?

யதார்த்தமான உண்மைகளை மறந்து பேசுவது - உள்ளுக்குள் இந்தப் பிரச்சினையில் அவர்களுக் குள் இருக்கிற குரோத உணர்வைத்தான் வெளிப்படுத்தும்.

தருமபுரியில் நடைபெற்ற காதல் திருமணம் என்பது இருபால் இளைஞர்களும் ஒருவரை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்ட திருமணம் ஆகும். நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோதுகூட அந்தப் பெண் உறுதியாக காதலனை ஏற்றுக் கொண் டதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து மணமகளின் தந்தையார் தற்கொலை செய்து கொண்டது - பல்வேறு அய்ய வினாக்களை எழுப்பியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மணமகளின் தந்தையின் உடலை, மணமகன் வீட்டுக்குமுன் கொண்டு வந்து போட்டு வெறி உணர்ச்சியைத் தூண்டியது எந்த நோக்கத்தில் என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

இன்னொன்றையும் இந்த இடத்தில் குறிப் பிட்டே தீர வேண்டும். நாமக்கல் வட்டாரத்தில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் கூறிவரும் கருத்தின் எதிரொலியையும், கோவை இராதாகிருஷ்ணன் அவர்களின் குரலில் கேட்க முடிந்தது.

வன்முறையில் பி.ஜே.பி.க்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னது - அவரது பேட்டியிலேயே உச்சகட்டமான நகைச்சுவை!

1992 டிசம்பர் 6இல் அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்த வர்கள் யார்?

பிஜேபியின் முக்கிய பெருந்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர் களின் வழிகாட்டுதலில் அந்த வன்முறை அரங்கேற்றப்படவில்லையா?

அவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் பிரிவுகள் (இபிகோ) எத்தகையவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதிபதி லிபரான் குழுவின் விசாரணை ஆணை யம் வாஜ்பேயி உட்பட 68 பேர்களைக் கொண்ட குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளதே.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்றுள்ள முக்கியமான - பிரபலமான வன்முறை களில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்டது. அதிகாரப் பூர்வமாகவே அறிவிக்கப்பட்டதே! இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர். எஸ்.எஸ். அல்லவா! அந்த ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தானே பி.ஜே.பி.யின் பொதுச் செயலாள ராகவும் வர முடியும் என்பது கட்சியின் விதி.

இவற்றை எல்லாம் சாமர்த்தியமாக மூடி மறைக்கிறார் தமிழக முன்னாள் பி.ஜே.பி. தலைவர்.

பேட்டி கண்டவர் இன்னும் அழுத்தமான வினாக்களை எழுப்பி இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


எங்குமில்லை


இன உணர்ச்சியினால் பார்ப்பான் வெகு சிறு இனமாக இருந்தாலும் அவன் மேல் மகனாய் வாழ்ந்தான்; வாழ்கிறான்; வாழ்ந்து வருகின்றான்; இனத்தைக் காட்டிக்கொடுத்து வாழும் பார்ப்பான் உலகில் எங்குமே இல்லை. (பெரியார் சிந்தனைகள்)

தமிழ் ஓவியா said...


அருமைத் தோழர்களுக்கு அன்புத் தொண்டனின் விண்ணப்பம்!


அருமைக் கழகத் தோழர்களுக்கும், பகுத்தறி வாளர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் திராவிடர் தமிழபிமானிகளுக்கும், இருபால் சமதர்ம, சமத்துவ விரும்பிகளுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள்!

50 ஆண்டுக்கான பரிசு!

விடுதலையில் 50 ஆண்டு காலம் ஆசிரியராக நான் பணியாற்றியதைப் பதிவு செய்யும் வகையிலும், விடுதலை நாளேட்டின் பரவல் அனைத்துத் தரப்பிலும் அவசியம் என்ற கொள்கை நோக்கில் கழகத் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் தேனீக் கள் போல பறந்து பறந்து சேர்த்து 2011 டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் நினைவுநாளில் சென்னையில் அளித்து, எம் பணிக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தீர்கள்.

இளைய தோளில் பெரிய மலை

எனது 29ஆவது வயது என்னும் இளந் தோளில் மலை போன்ற பெரும் பொறுப்பை சுமத்தி, எனக்குச் சவாலான பணியில் என்னை இறக்கி விட்டார் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.

சவாலை ஏற்றேனா?

அந்தச் சவாலை ஏற்று, விடுதலையை எட்டுப் பக்கங்களாக்கி சென்னையோடு திருச்சியில் இன்னொரு பதிப்பையும் ஏற்படுத்தி, பல வண்ண இதழாக உலகத் தமிழர்கள் மத்தியில் தவழ்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழக ஏடுகளிலேயே இணையதளத்திலும் வெளிவந்த முதல் ஏடு விடுதலை என்ற பெருமை யும் சேர்த்தோம்.

ஒரு பகுத்தறிவு நாளேடு 77 ஆண்டுகள் எதிர் நீச்சல்போட்டு, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதுபோல, தமிழன் இல்லம் என்பதற்கு அடை யாளமாக விடுதலை வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது!

பழுத்த வாசகர்கள்

காலையில் எழுந்ததும் விடுதலையைப் படிக்காமல் இருக்க முடியாது என்னும் மன அழுத்தத்தில் உள்ள முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் எண் ணற்றோர். அவர்கள்தான் நமது வேர்கள்!

50,60 வருடங்களாகத் தொடர்ந்து விடுதலையைப் படித்து வரும் பழுத்த வாசகர்கள் விடுதலைக்கு உண்டு.

புதிய வாசகர்கள்!

கடந்த ஆண்டு முதல் புதிய வாசகர்கள் ஆயிரக் கணக்கில் விடுதலைக்குக் கிடைத்தனர்.
விடுதலையைக் கொண்டு சேர்ப்பதுதான் உங்கள் கடமை. அப்படி கொண்டு சேர்த்து விட்டால் விடுதலை தன் பணியை விவேகமாகச் செய்து முடித்து, அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக இடம் பிடித்து விடும் என்று நாம் சொல்வதுண்டு.


தமிழ் ஓவியா said...

பாராட்டுகிறார்கள்! பாராட்டுகிறார்கள்!!

நேரில் பார்க்கும் பொழுதும் சரி, கடிதங்கள் வாயிலாகவும் சரி விடுதலையின் நேர்த்தியைப் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர். அது மட்டும் போதுமா நண்பர்களே?

வெறும் கட்சி ஏடு என்ற நிலையையும் தாண்டி (பகுத்தறிவு - சுயமரியாதைக் கருத்துக்களுக்குத் தான் முன்னுரிமை என்பது அடிப்படை) பொது செய் திகள், அறிவியல், மருத்துவம், மகளிர், பகுத்தறிவு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் சிந்தனைகள் என்று பல்துறைக் கொள்கலனாக விடுதலை பூத்துக் குலுங்குவதை வரவேற்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

வாரந்தோறும் வெளிவரும் ஞாயிறுமலர் பெரும் பாலும் பாதுகாத்து வைக்கப்படுகின்றன வாசகர் களால்.

மேலும் மேலும் மெருகேற்றப்பட்டு காலத்தின் பசியைப் போக்கும் வகையில் விடுதலை வெளிவர இருக்கிறது. இன்னும் எத்தனை மாற்றத்திற்கான திட்டங்கள் உள்ளன - நம் கையில்.

விநியோகத்தில் புதிய அணுகுமுறை!

விநியோகத் திசையில் இப்பொழுதுள்ள இடர்ப்பாடுகள் நீக்கப்பட்டு, அன்றாடம் சுடச்சுட கையில் கிடைப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேன்கள் மூலம் பல மாவட்டங்களுக்கும், விரைந்து கொண்டு சென்று விநியோகிக்கப்பட உள்ளன. பல லட்சம் கூடுதல் செலவாகும் என்ற போதிலும்கூட.
இந்த நிலையில் கழகத் தோழர்களே, தமிழினச் சான்றோர்களே!

2013-இல் தமிழனின் ஒவ்வொரு வீட்டிலும் விடுதலை என்னும் எங்கள் இலக்குக்கு உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டுவீர்!

புதிய வரவுகளைப் புதுப்பிப்பீர்!

கடந்த முறை விடுதலை சந்தாதாரராக ஆனவர் களை நேரில் அணுகி சந்தாவைப் புதுப்பிக்கும் வகையில் கழகத் தோழர்களே, விமான வேகத்தில் பணிகளை முடுக்கி விடுவீர்!

எந்த வகையிலும் ஒரு சந்தாகூட வேண்டுமே தவிர ஒரு சந்தா குறைந்தது என்ற இறக்கம் கூடவே கூடாது.

விடுதலையை விட்டால் நாதி ஏது?

மக்களிடத்தில் பகுத்தறிவை எடுத்துச் சொல்ல, சமூக நீதிக் கொடியைப் பறக்கச் செய்ய, மகளிர் உரிமைச் சங்கெடுத்து ஊத, பொது ஒழுக்கத்தைப் போதிக்க, உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையை எடுத்துக் கூற, தமிழ்நாட்டை வஞ்சிக்க வீசப்படும் வலைகளை அறுத்தெறிய, ஜாதீய, மதவாதச் சழக்குகளை சல்லி வேர் ஆணி வேர் வரை சென்று நிர்மூலப்படுத்த விடுதலையை விட்டால் நாதியுண்டா? சிந்திப்பீர்!

விடுதலை ஏன்? ஏன்?

விடுதலையின் வளர்ச்சி விடுதலை ஏட்டுக்காக அல்ல. வருமானத்துக்காகவும் அல்ல - இது ஒரு கொள்கை ஏடு! மக்களின் பொது உரிமைக்கான பொது உடைமை ஏடு! தனியாருடையதல்ல. தமிழர்களின் விடுதலைக் காகவும், தமிழர்களின் தன்மானத்துக்காகவும் எனபதை மறந்து விடாதீர்கள்!

விடுதலைக்கு விளம்பரங்களைக் கொடுத்தால் தீட்டு என்று நினைக்கிற புதுவகைத் தீண்டாமை - அரசின் கண்ணோட்டத்தில்.

பொங்கல் பரிசாகத் தாரீர்!

தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கலுக்குள் இன்று தொடங்கி பழைய சந்தாதாரர்களை புதுப்பிக்கச் செய்தல், புதிய சந்தாதாரர்களைச் சேர்த்தல் என்னும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் பரிசாக, வாழ்த்தாகத் தாரீர்! தாரீர்!! என்று தந்தை பெரியார் என்மீது நம்பிக்கை வைத்ததுபோல உங்கள்மீது நம்பிக்கை வைத்து இந்த வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்; விண்ணப்பிக்கின்றேன்!

என் ஆயுளின் இரகசியம்!

ஏற்கெனவே நான் சொன்னதுபோல என் ஆயுள் நீட்சியின் இரகசியம் இதில் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்ததுதானே! எனக்கு மேலும் வேலை தாருங்கள்!!
வணக்கம்! வணக்கம்! நன்றி! நன்றி!!கி.வீரமணி
அன்புத் தொண்டன்
ஆசிரியர் விடுதலை

சென்னை 18.12.2012

தமிழ் ஓவியா said...


அமெரிக்கா வளர்ந்த நாடா? ஆதிவாசிகளின் - வேட்டைக்காரர்கள் காடா?


அமெரிக்காவில் சில நாள்களுக்கு முன், கனெக்டிக்கெட் மாநிலத்தில் நியூடவுன் என்ற இடத்தில் இருந்த ஒரு பழைய பள்ளிக்கூடத்தில் நுழைந்த ஒரு மாணவன் திடீரென்று சரமாரியாகச் சுட்டதில் 20 பச்சிளங் குழந்தைகளான மாணவர்களும், ஆறு பெரியவர்களும் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக் கும் வெட்கத்திற்குமுரிய மனித நேயமற்ற காட்டுமிராண்டி காலத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் நிகழ்வாகும்.

அமெரிக்காவில் இது - நம் நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்கள் போல் - சர்வ சாதாரணமானதாகி யுள்ளது.

அமெரிக்கா வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் நாடு. அறிவியல், மின்னணுவியல், கட்டுமானங்களில் மட்டுமா அது வளர்ந்த நாடு? இதுபோன்ற படுகாட்டுமிராண்டித்தன அநாகரிகத்திற்கும் - மூடாக் கதவு களும், தடுக்கா சட்டக் கைகளும், கேளாக் காதுகளும் உள்ள நாடாகவும் அல்லவா இது அமைந்துள்ளது!

இதற்குமுன் சில மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 5) விஸ்கான்சின் மாநிலத்தில், பஞ்சாப் சீக்கிய அமெரிக் கர்களின் கோயிலான குருத்துவா ராவில் நுழைந்து அங்கு வழிபாடு நடத்திய சீக்கியர்களைச் சுட்டுக் கொன்ற கோர சம்பவம்; அதற்கு முன் (ஜூலை 20ஆம் தேதி) கொலரோடா மாநிலத்தில் திரைப்பட அரங்குக்குள் நுழைந்து படம் பார்த்துக் கொண் டிருந்த சிலரை சரமாரியாகச் சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டவன்; அதற்கு முன் வர்ஜீஸ் மாநிலத்தில் ஒரு (ஆந்திராகாரர்) அமெரிக்க பேராசிரி யையைச் சுட்ட நிகழ்வு என்று ஏராளம் சொல்லலாம்!

ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தமில் லாதவர்களைச் சுட்டுக் கொன்று, தானும் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனவக்கிரப் பேர் வழிகள் - மன கிறுக்கர்கள் - அமெரிக்காவில் பெருகி வருகின்றனர்?

பெரும் மனஉளைச்சல் என்று கூறுவது பகுத்தறிவாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் மன உளைச்சல் உள்ளவர்கள் அமெரிக்கா வில் மட்டும் தான் இருக்கிறார்களா? உலகம் எங்கும் உள்ளார்களே!

இந்தியாவில் இல்லையா? இலங் கையில் ஏராளம் இல்லையா?

மன உளைச்சலுக்காக தடியெடுத் தவன் எல்லாம் தண்டல்காரனாவது போன்று, துப்பாக்கி பிடித்தவன் எல்லோரையும் சுடுவதைக் காரணம் காட்டத் துவங்கினால், பலரும் மிஞ்ச மாட்டார்களே!

அமெரிக்காவில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை முதலாளித்துவம்தான், அங்குள்ள இரண்டு பெரும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் தேர்தல் பொருள் உதவும் ஊற்றுக்களாக உள்ளது. எனவே அவர்களை அடக்க எந்தக் கட்சி வேட்பாளர்களும் துணிவ தில்லை; துணிய முடியாது.

அவர்களிடம் யாசகம் வாங்கு பவர்களாகத்தான் அங்குள்ள அரசி யல் கட்சித் தலைவர்கள் உள்ளார்கள்! இந்நிலையில் அவர்கள் எப்படி இதனைத் தடுத்து நிறுத்திட சரியான சட்டம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

முதற் கட்டமாக, வயது வந்தவர் களுக்கு மட்டும்; அதுவும் போதிய கார ணங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் அவர்கள் தற்பாதுகாப்புக்காக மட்டுமே துப்பாக்கி வைத்திருக்கும் லைசென்ஸ் பெற முடியும் என்ற ஒரு துணிகரச் சட்டத்தை ஒபாமா நிருவாகம் கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

எந்த மாநிலமும் இதனைச் செயல் படுத்த வேண்டும் என்ற வகையில் இது ஒரு மத்திய சட்டம் (Federal Law) ஆக அமைதல் அவசரம் - அவசியம்!

இல்லையேல் மாணவப் பருவ பூ, பிஞ்சு மொட்டுக்கள்கூட இந்த துப் பாக்கிக் கலாச்சாரத்திலேயே மூழ்கி எழுவார்கள்; துப்பாக்கிப் போதை Gun Addiction
என்பது அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி பரவி, மக்கள் போதிய பாதுகாப்புடன் வாழ முடியாத, மவுடீக மாஃபியாக்களின் வேட்டைக் காடாகவே மாறி விடுவது உறுதி!

மனிதநேயம் என்பதுதான் உண்மை. ஜனநாயகத்தின் மூச்சுக் காற்றுக்கு அதிபர் ஒபாமா உரியது செய்தால் அவர் சரித்திரம் படைப்பார்.

- ஊசிமிளகாய்