Search This Blog

12.12.12

12.12.12 அதிர்ஷ்ட நாளா?


இந்தத் தேதியைப் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. கொஞ்சம் ரசிக்கத் தோன்றுகிறது.

இதைத் தவிர இதற்குள் வேறு என்ன அதிசயம், முக்கியத்துவம் இருக்க முடியும்?

இது ஏதோ அதிர்ஷ்ட நாளாம் - இந்த நாளில் திருமணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்; இந்த நாளில் குழந்தை பிறந்தால் விசேஷம் என்று விசேஷமாக ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன.

1-1-1, 2-2-2, 3-3-3, 4-4-4 - இப்படியாக ஒவ் வொரு ஆண்டும் ஒரு தேதி வரத்தான் செய்யும்.

அவ்வப்பொழுது இப்படித்தான் அதிர்ஷ்டத் தேவையை இறக்குமதி செய்வார்கள்.

இந்த வித்தியாசமான தேதிகளில் திருமணம் செய்துகொண்டவர்கள் அல்லது இந்த வித்தியாச மான தேதியில் பிறந்தவர்கள் வித்தியாசமாக வாழ்கிறார்கள். அதிர்ஷ்ட தேவதை அப்படியே இவர் களை வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தாள் - ஓகோ என்று வாழ்கிறார்கள்  -அதோ பாரீர் என்று சொல்லுவதற்கு ஏதேனும் எடுத்துக்காட்டுகள் உண்டா?

இந்த வித்தியாசமான தேதிகளில் மாடு கன்று போட்டது இல்லையா? பன்றி குட்டிகள் போட்டது கிடையாதா? செடிகளில் பூ பூத்திருக்கவில்லையா? கொடிகளில் காய்கள் காய்க் கவில்லையா? அவையெல் லாம் எந்த அதிர்ஷ்ட தேவ தையின் அந்தரங்க மாளி கையில் ஆனந்தக் குளியல் போட்டுக் கொண்டுள்ளன?

துபாயில் 696 திருமணங்கள், சிங்கப்பூரில் 540 திருமணங்கள் நடக் கின்றனவாம். தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. முட்டாள்தனம் என்ன ஒரு நாட்டுக்கு மட்டும்தான் சொந்தமா?

ஒவ்வொரு தேதியும் கிழிக்கும்போது நேற்று என்ன சாதித்தோம், இன்று என்ன சாதிக்கப் போகிறோம் என்று சிந்தித்தாலும் பலன் உண்டு.

அதை விட்டுவிட்டு இந்தத் தேதியில் கலியாணம் கட்டிக்கணும், பிள்ளை பெத்துக்கணும் என்று நினைப்பதைவிட முட்டாள்தனமும், பைத்தியக்காரத் தனமும் வேறு ஒன்று இருக்க முடியுமா?

எரியும் வீட்டில் சுருட்டுக்கு நெருப்புத் தேடும் ஆசாமிகள் போல் இது தான் சந்தர்ப்பம் - இந் நாளில் யாகங்கள் நடத்த வேண்டும் என்று புரோகிதர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கல்யாணமானாலும், கருமாதியானாலும் பார்ப் பனர்களின் கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பிக் கொண்டு தானே இருக்கும்.

திராவிடர் கழகம் வெளியிடும் நாள் காட்டியில் ஒரு வாசகம் உண்டு நல்ல நேரம் - 24 மணி நேரமும் என்பதுதான் அந்த வாசகம்.   
                ---------------- மயிலாடன் அவர்கள் 12-12-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...


பக்தியால் ஏற்பட்ட வாந்தி - பேதி!


நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு கிராமத்தில் உள்ள அம்மாகட்டளை என்ற ஊரில் அமைந்துள்ள சக்திகோவிலில் 9.12.2012 அன்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 108 ஆம்புலன்சில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 26 ஆண்களும், 15 பெண்களும், 8 குழந்தைகளும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோவிலில் சாப்பிட்டவர்களையே அந்த அம்மனால் காப்பாற்ற முடியவில்லையே...!

தமிழ் ஓவியா said...

குஷ்புமீது கோபம் ஏன்?

அய்தராபாத்தில் நடைபெற்ற தெலுங்குப் பட விழா ஒன்றில் நடிகை குஷ்பு அணிந்திருந்த சேலையில் ராமன், கிருஷ்ணன், ஆஞ்சநேயன் படங்கள் இருந்தனவாம். இதனைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி கண்டனமாம்.

அட, பைத்தியக்காரர்களே, அந்தப் புடவையை அந்த நடிகையா நெய்தார் - தயாரித்தார்?

அதைத் தயாரித்தவர்களைத் தேடிச் சென்று முட்டிக் கொள்வது தானே! அது சரி, அந்தக் கடவுள்கள் வந்து இந்து மக்கள் கட்சியிடம் முறையிட்டனவா?

அந்தக் கடவுள்களுக்குச் சக்தி யிருந்தால், அவை கவனித்துக் கொள் ளாதா? இவர்களுக்கு என்ன வந்த தாம்?

சாலை ஓரங்களில் எல்லாம் கடவுள் சிலைகளை நட்டு வைத்திருக் கிறார்களே - அந்தச் சாமி சிலைகள் மீது நாய்கள் கால் தூக்குகின்றனவே - அங்கெல்லாம் வராத ஆறாசினம் குஷ்புமீது மட்டும் பாய்வது - ஏன்?

தமிழ் ஓவியா said...

நரபலியா?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது குள்ளப்பன் கவுண்டன்பட்டி. இந்த ஊரில் உள்ள முருகானந்தம் என்பவர் கேரளா சென்று இரு மந் திரவாதிகளை அழைத்து வருவாராம்; பல்வேறு வீடுகளுக்கு அழைத்துச் சென்று செய்வினை மற்றும் தோஷங் களைக் கழிப்பாராம். கிடைக்கும் பணத்தில் உள்ளூர் பேர்வழிக்கு மால் வெட்டுவார்களாம்.

தெருவில் விளையாடிக் கொண் டிருந்த ஒரு சிறுமியைப் பிடித்து ஒரு வீட்டுக்குள் இழுத்துச் சென்று பூஜைகள் செய்ய ஆரம்பித்தனராம். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டுள்ளனர். செமத் தையாக சாத்துப்படி நடந்திருக்கிறது. பிறகு காவல் நிலையத்தில் மந்திர வாதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது செய்தி. (மந்திர சக்தி என்னாயிற்று?)

கொஞ்சம் அசந்திருந்தால் சிறு மியை நரபலி கொடுத்து இருப்பார்கள்.

பக்தி என்பது எவ்வளவு கேவலம் - காட்டுவிலங்காண்டித்தனம் என்ப தைப் புரிந்துகொண்டீர்களா?

இதைக் கண்டிப்பதற்குத் தலைவர் கள் இல்லை - எழுதுவதற்கும் ஊடகங்கள் இல்லை, வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...

பெல்லையும் திரும்பிப் பாருங்கள்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனத்தில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக் கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் விளைவு - முதன் முத லாகப் பணி மூப்புப் பட்டியல் வெளி யிடப்பட்டு, 14 ஆம் தேதிக்குள் 5000 பேர்கள்வரை நிரந்தரப்படுத்தப்படு வார்கள் என்பது நற்செய்தியாகும்.

திருவெறும்பூர் பெல் நிறுவனத் தில் 20 ஆண்டுகள் பணியாற்றியும், பட்டங்கள் பெற்றிருந்தும் நிரந்தரப் படுத்தப்படாத தொழிலாளர்த் தோழர் கள் ஆயிரக்கணக்கில் உள்ளனரே!

அவர்கள்பாலும் இந்தக் கரு ணைப் பார்வை பாயக்கூடாதா? இவ்வளவுக்கும் இந்த நவரத்தினங் கள் இலாபத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனவே!

240 நாள்கள் பணியாற்றினாலே ஒரு தொழிலாளி நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்கிற தொழிலாளர்த் துறை ஆணையெல்லாம் ஏட்டுச் சர்க்கரைதானா?

உழைத்தும் உரிமை கேட்க முடி யாமல், இரக்கத்தின் அடிப்படையில் பிச்சைப் போடுங்கள் என்று கேட்கும் நிலை தொழிலாளர்களுக்கல்ல - அரசுக்குத்தான் கேவலம்! படு கேவலம்!!

இன்னும் எத்தனை ஆண்டுகாலம் இதற்காகத் திராவிடர் கழகம் போராடவேண்டுமோ!

தமிழ் ஓவியா said...

அவ்வப்போது ஆஸ்பிரோவா!

சென்னையை அடுத்த திருப் போரூரில் இருந்து தியாகராயர் நகருக்கு வந்துகொண்டிருந்த பேருந் தில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நான்கு மாணவர்கள் விபத்துக்கு ஆளாகி மரணமடைந்தனர் என்பது அதிர வைக்கும் பரிதாபத் தகவலாகும்.

ஆனாலும், படிக்கட்டுப் பயணம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது! சென்னையை அடுத்த பெருங்குடியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை எச்சரித்த நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

இதில் இரண்டு வகை காரணங் கள் உண்டு. படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வதை ஒரு வீரதீர செயலாகக் கருதும் மாண வர்கள் ஒரு பக்கம்.

இன்னொரு காரணம் காலை, மாலை நேரங்களில் பயணம் செய் வோர் அதிகம். ஆனால், அதற்கேற்பப் பேருந்துகளின் எண்ணிக்கை இல்லை என்பதும் உண்மையே!

குறிப்பிட்ட நேரத்தில் கல்விக் கூடங்களுக்கும், பணிக்கும் செல்ல வேண்டியவர்கள் வேறு வழியின்றி பேருந்துகளில் தொற்றிக்கொண்டு செல்வதையும் முக்கியமாகக் கணக் கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பள்ளிப் பேருந்து விபத்து என்பதும் முக்கியமான செய்தியாக இருக்கிறது.

விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக் கும்போது மட்டும் அவற்றைப்பற்றி அக்கறையாகப் பேசுவது - அதற்குப் பின் ஆறிய கஞ்சி பழங்கஞ்சு என்கிற தோரணையில் அரசு இயந்திரம் இயங்கலாமா?

தலைவலி வந்த நேரத்தில் மட்டும் ஆஸ்பிரோ மாத்திரை என்பது நிரந்தரப் பரிகாரமா? வேறு கொடிய நோயின் அறிகுறியாகக்கூட அது இருக்கலாம் அல்லவா!
அடுத்த தேர்தல் - அன்றாட அரசியல் இவற்றின்மீதுதான் அக் கறை - அதையும் தாண்டி வெளியே வந்தால்தான் அது மக்கள் நல அரசாக இருக்க முடியும்.

தமிழ் ஓவியா said...


கொலைகள்-கொள்ளைகள்-எரிப்புகள் தடுக்கப்படவேண்டும்!


தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டது தொடர்பாக தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய நல ஆணையத்தின் தலைவர் புனியா, இயக்குநர் வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடை யாகச் சென்று (10.11.2012) உண்மை நிலையை அறிந்து சென்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக ஆணையத்தின் தாக்கீது காரணமாக தமிழ்நாடு காவல்துறை சேலம் டி.அய்.ஜி. சஞ்சய்குமார், தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி, தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையில் மயான அமைதி காத்து வருகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி யாகத் தேவைப்படும் வீட்டு வசதிகள் உள்ளிட்ட வைகளில் ஆமை வேகம்தான்.

அன்றாடம் அங்கு அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருள்கள்கூட காலப்படி கிடைக்கவில்லை என்ற புகாரும் ஒரு பக்கத்தில்.

பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஜாதி - பாதிப்புக்குக் காரணமானவர்கள் எந்த ஜாதி என்று பார்த்து அரசியல் ஆதாயம் பார்க்கும் நோக்கம் ஆபத்தானது. எல்லாவற்றையும் வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தால், நாட்டில் நன்மைக்கும், தீமைக்கும், வன்முறைக்கும், நன்முறைக்கும் உள்ள வேறுபாடுகள் அறியப்படாமல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் நிலையைத்தான் உருவாக்கும்.

தருமபுரியைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் எரியூட்டப்பட் டுள்ளன.

இப்படி வீடுகள் எங்கு எரிக்கப்பட்டாலும் அவை தாழ்த்தப்பட்டோரின் வீடுகளாகவே இருப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தேனி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏழு ஆண்டுகளாகக் கோவிலில் துணைப் பூசாரியாக இருந்தவர் எப்படி திடீரென்று தாக்கப்பட்டார்? அதன் பின்னணி என்ன?

தருமபுரிகளும், கடலூர்களும் அரங்கேற்றப்பட்ட பின்பு, தாழ்த்தப்பட்டோர்மீது தாக்குதல் என்கிற புது யுக்தி கிளம்பியுள்ளதா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை மிகத் தீவிரமான செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.

அமைதிப் பூங்காவாக இருந்து வந்த தமிழ் மண்ணில் அண்மைக்காலமாக இந்த நோய் எப்படி பரவுகிறது? இதன் மூலக்கயிறு எங்கே இருக்கிறது? ஜாதித் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்களே - ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை?

பொதுவாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வீடுகள் தீக்கிரை என்கிற செய்திகள் வராத நாளே இல்லை.

அதேபோல விபத்துகளுக்கும் பஞ்சம் இல்லை. இதுபற்றியெல்லாம் உள்துறை உரிய முறையில் சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

அரசியல் நோக்கம் சிறிதும் இல்லாத மக்கள் பொதுநலனை முன்னிட்டு திராவிடர் கழகம் இவற்றை அரசு முன் வைக்கிறது.

புகார் கொடுக்கப்பட்டால் நிகழ்வுகளின் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப்படாமல், அரசியல் செல்வாக்கின் காரணமாக நடவடிக்கையில் தள் ளாட்டம் இருப்பதாகப் பொதுவான குற்றச்சாற்றும் இருந்து வருகிறது.

இதெல்லாம் உண்மையில்லை என்று உண்மை யாகப் பதில் வந்தால் நல்லதுதான். மாறாக, அந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்று கொஞ்சம் தெரிய வந்தாலும், தீர ஆராய்ந்து, குற்றவாளிகள் தாட்சண்யமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த வகையில் தீவிரமாக அரசின் செயல் பாடுகள் இல்லாத நிலை ஏற்படுமேயானால், மேலும் மேலும் தமிழ்நாட்டின் நிலை சிக்கலாகிவிடும் - எச்சரிக்கை!
நாட்டின் நலங்கருதி எடுத்து வைக்கப்படும் கருத்து இது - தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளு மாக!

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

ஆதவன் தீட்சண்யா

அண்ணல் அம்பேத்கர் பார்வையில் சமூக ஒற்றுமைப் பற்றிப் பேசிய ஆதவன் தீட்சண்யா உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் அவசியம்தான் தந்தை பெரியாரையும், டாக்டர் அம்பேத்கரையும் கைகோக்கச் செய்தது. வேறு எந்த காலகட்டத்தையும்விட இப்பொழுது இது தேவைப்படுகிறது.

பல்லுக்குப் பல் என்பது பழங்கால காட்டுமிராண்டித்தனம். ஒரு காதல் திருமணத்திற்காக மூன்று ஊர்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

எரிக்கப்பட்ட அதே நத்தம் கிராமத்தில் இதற்கு முன்பே கூட ஒன்பது ஜாதி மறுப்புக் காதல் திருமணங்கள் நடந்துள்ளன. என்ன கேடு வந்துவிட்டது?

இன்றைக்கு ஜாதி சுத்தம் பேசக் கிளம்பி இருக்கிறார்களே! அந்த நாமக்கல் வட்டாரத்தில்தான் விதவைப் பெண்கள் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஜாதிக்குள் திருமணம் செய்து கொண்டதன் சாதனை இதுதானா?

ஒவ்வொரு 18 நிமிடத்திலும் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டு வருகிறார். இந்தக் கொடுமைகள் இன்னும் நீடிக்கலாமா? அனுமதிக்கலாமா?

பெரியாரியல் வாதிகளும், அம்பேத்கர் வாதிகளும், மார்க்ஸிசவாதிகளும் ஒன்றுபட்டு சந்திக்க வேண்டிய புள்ளி இங்குதான் உள்ளது.

இம்மாநாடு அதன் வரிசையில் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.12-12-2012

தமிழ் ஓவியா said...

டாக்டர் க.அன்பழகன்

தந்தை பெரியார் பார்வையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை குறித்து உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:
வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர் பெரியார். பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் குறிப்பிட்டார்.

தீண்டத்தகாத மக்களின் அடிப்படை உரிமைக்காக மாநிலம் கடந்து வைக்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்று வைக்கம் வீரர் என்று போற்றப்பட்டு வருபவர் பெரியார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக - உரிமைகளுக்காக எண்ணற்ற மாநாடுகளை திராவிடர் கழகம் நடத்திய துண்டு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக வரக்கூடாது?

உயர்நீதிமன்றம் என்ன கோயில் கர்ப்பக் கிரகமா என்ற வினாவை எழுப்பியவர் தந்தை பெரியார்.

அதன் விளைவாகத்தான் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஏ.வரதராசன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அதன் காரணமாக, உச்சநீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதியாக அவரேதான் வரக்கூடிய வாய்ப்புக் கிட்டிற்று.

தந்தை பெரியார் சமுதாயத்தின் இன இழிவை ஒழித்திட சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய் என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்; காலை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய் என்று சொன்னால் காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மல ஜலம் கழிக்க வேறு ஓட்டை போட வேண்டுமென்றால் போட்டுக் கொள்கிறோம். அதில் மல ஜலம் கழிக்கிறோம்.

இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கியப் பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம். அப்படி இருக்க, ஒரு அயோக்கிக்கூட்டம் நம்மை அடிமையாக்கித் தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி இழிவு படுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால் இந்த இழிவுத்தன்மை - சூத்திரத்தன்மை எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது என்று கேட்கிறேன்.

என்மீது கோபிப்பவர்கள், இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால் அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்வார்கள்? என்று தந்தை பெரியார் கேட்டாரே!

இந்த இழிவு வெறும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா? பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தானா?

இந்த இருபிரிவினர்க்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான பார்ப்பனர் அல்லாதார் அத்தனைப் பேரும் சமுதாயத்தில் இழி மக்கள்தானே - சூத்திரர்கள்தானே - பஞ்சமர் கள்தானே!

இந்த இழிவை ஒழிக்க நாம் ஒன்று சேராமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டால், அழித்துக் கொண்டால் நம் இன இழிவு ஒழிவது எப்பொழுது? எப்படி? என்று அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார் - டாக்டர் அதிரடி க.அன்பழகன்.

தமிழ் ஓவியா said...

மேனாள் துணைவேந்தர்
பேராசிரியர் முனைவர் பெ.செகதீசன்

கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் அவர்கள் இன்று கிறித்தவர் களாகவும், முஸ்லீம்களாகவும் இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பெரும்பாகம் தாழ்த்தப்பட்டவர்களாக இந்து மதத்தில் இருந்தவர்கள்தாம்.

இந்து மதத்தின் ஜாதி அமைப்புக் காரணமாக அவர்கள் தீண்டப்படாத மக்களாக ஆக்கப்பட்டதால் அல்லவா மதம் மாறினார்கள்.

இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமுதாயப் பாதுகாப்பு அம்சமாகும்.

வெளிநாட்டிலிருந்து ஓவல்டின் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் டி.டி.கிருஷ்ண மாச்சாரி போன்விட்டா ஏஜன்சி எடுத்திருந்தார். ஆனால் அது வெளிநாட்டு இறக்குமதிப் பொருளைவிட விலை கூடுதலாக இருந்ததால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அப்பொழுது இந்திய அரசாங்கம் என்ன செய்தது? வெளிநாட்டிடம் இறக்குமதி பொருளுக்குக் கூடுதல் வரியை விதித்ததால் அதன்விலை கூடுதலாயிற்று. டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரின் போன்விட்டா மக்களிடம் செலாவணி ஆக ஆரம்பித்துவிட்டது. இதற்குப் பெயர் PROTECTIVE DISCRIMINATION என்று சொல்லப்பட்டு வதாகும். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் இடஒதுக்கீடு என்பது இந்த அடிப்படையில் அமைந்ததேயாகும்.

கல்வியின் மூலமாகத்தான், அதிகார பீடங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்குரிய பங்களிப்பு மூலம்தான் மேல் நோக்கி வளர முடியும். ஜாதியின் கட்டமைப்பும் அப்பொழுதுதான் உடையும்.

இன்று தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களுக்கு ஒரு புரிதல் இல்லை. ஜாதி பற்றிய கண்ணோட்டத்தில் தெளிவு இல்லை. ஆனால் திராவிடம்தான் ஜாதிக்கு எதிரானது தமிழ்த் தேசியத்திலிருந்து திராவிடத் தேசியத்தைப் பிரிப்பது ஜாதி பற்றிய கண்ணோட்டமாகும் என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் தொடர்ந்து உரையாற்றினர்.

புரட்சிக்கவிஞர் பார்வையில் ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை குறித்து கவிஞர் இரா.கண்ணிமை கவிதை முறையில் பேசினார்.

கதிர்செந்தில் நன்றி கூறிட, பிற்பகல் 1.30 மணிக்கு கருத்தரங்கம் சிறப்பாக நிறைவுற்றது.

மண்டபமும் வழிந்து வெளியிலும் நின்றுகொண்டு கருத்தரங்க உரையைப் பொதுமக்கள் செவிமடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்!

Unknown said...

வெற்று எண்களைத்தவிர வேறொன்றும் இல்லை, ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றத்தானே செய்வார்கள். ஏமாற்றுபவன் புத்திசாலி ஏமாறுபவனே முட்டாள் இனியும் தமிழர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டாம்.....