Search This Blog

23.12.12

மூடத்தனத்திற்கு முடிவுரை - உலகம் அழியவில்லை!விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தினால் போதுமா?
விஞ்ஞான மனப்பான்மையைக் கொள்ள வேண்டாமா?


கடற்கரையில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, டிச.22- உலகம் அழியப் போகிறது என்ற மூடப்பிரச்சாரம் பற்றியும், மக்கள் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. விஞ்ஞான மனப்பான்மையைக் கைக் கொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்துரைத்தார்.

உலகம் அழியப் போகிறது என்று பிரச்சாரம் செய்தது மூடத்தனம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதன் தொடர்ச் சியாக இன்று காலை 7 மணியளவில் சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி சார்பாக திராவிடர் கழக இளைஞரணி மாணவரணி தோழர்கள் நடத்திக் காட்டிய வீதி நாடகத்தைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:

உலகம் அழியப் போகிறது என்ற பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த மூடத்தனம் இப்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது.

6ஆவது அறிவு எதற்கு?

மக்களுக்கு 6ஆவது அறிவான பகுத்தறிவு இருந்தும் அதனை எல்லாவற்றிலும் பயன்படுத்துவதில்லை. தன்னம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, மூடநம்பிக் கைக்கு பலியாகியுள்ள நிலையில் ஏமாற்றுகிறவர்கள் பெருகி வருகிறார்கள்.

இதுதான் சந்தர்ப்பம் என்று யாகம், பிராயச் சித்தம் என்று சொல்லி மக்களின் பணத்தைச் சுரண்டுகிறார்கள்.

படித்தவர்கள் ஏமாறுகிறார்களே!

படித்தவர்கள்கூட ஏமாறுகிறார்கள். விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்களே தவிர விஞ்ஞான மனப்பான்மை உள்ளவர்களாக இல்லை.

சொல்லுகிறவர்கள் எதையாவது சொல்லி விட்டுப் போகட்டும்; கேட்கிறவர்கள் சிந்திக்க வேண்டாமா?

படித்த - அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி கள்கூட அதிக வட்டி தருகிறேன் என்று சொல்கிறவர் களிடம் ஏமாறுகிறார்களே!

இரண்டு மடங்கு பணம் எப்படி கொடுக்க முடியும் என்று சிந்திப்பதில்லையே! பேராசை பெரும் நட்டத்தில் முடிகிறதே.

பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களுக் கென்று ஒரு தனி சங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அளவுக்கு மோசமாகி விட்டது.  இந்த மோசடியைத் தடுப்பதற்கென்றே காவல்துறையில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால் படித்த மக்களின் பகுத்தறிவற்ற பரிதாப நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவன் அருளா - அறிவியல் வளர்ச்சியா?

30 வயது சராசரி என்கிற அளவுக்கு வாழ்ந்து வந்த வர்கள் இப்பொழுது சராசரி 70 வயதை எட்டியது எப்படி?

அறிவியல் வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சியல்லவா? ஆண்டவன் தலையில் எழுதியதெல்லாம் பொய்யென்று  ஆகிவிடவில்லையா?

செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று வந்து அங்கு என்ன இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கி சொன்ன தற்குப் பிறகும்  பெண்ணுக்குச் செவ்வாய்த் தோஷம் என்று கூறிக் கல்யாணத் தடையை உண்டாக்கிக் கொள் கிறார்களே.
ஊடகங்களின் கடமை என்ன?

நம் நாட்டு ஊடகங்களின் தன்மை என்ன? உலகம் அழியப் போகிறது என்று மதவாதிகள், மூடநம்பிக்கை வாதிகள் பரப்பினால், அறிவியல் ரீதியாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய விஞ்ஞானக் கருவிகளான ஏடுகள், தொலைகாட்சி ஊடகங்கள் பீதியைக் கிளப்பும் வேலையில் அல்லவா ஈடுபடுகின்றனர்? இது அறிவு நாணயமா?

இந்த மூடத்தனத்தை முதலாக வைத்து இன்னும் அதிகப் பிரதிகளை விற்கலாம் என்ற போக்கு தானே - வியாபாரப் புத்தி தானே நமது ஊடகங்களுக்கு!

மூடத்தனப் பரப்புதலையும் - எதிர்ப்பையும் சமமான அளவில் வைத்து செயல்படலாமா?

மாயன் காலண்டர் சரியா?

மாயன் காலண்டரைப் பற்றிப் பேசப்படுகிறது. அந்தக் காலக் கட்டத்தில் பெற்றிருந்த அறிவின் அடிப்படையில் எழுதியிருக்கலாம்.

அய்யாயிரம் ஆண்டுகளில் எவ்வளவோ வளர்ச்சி - புதிய கண்டுபிடிப்புகள்; இந்த நிலையில் 5000 ஆண்டு களுக்கு முன்பு சொன்னதை நம்பி ஏமாறலாமா? பிரச்சாரம் செய்யலாமா?

விஞ்ஞான ரீதியாக என்ன சொல்லப்படுகிறது? குறிப்பாக நாஸா என்ன சொல்லுகிறது? அதைத்தானே கவனிக்க வேண்டும்.

மின்சக்தியா? கடவுள் சக்தியா?

அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிறார்கள் இன்றைக்குப் பவர் கட் என்றால், கடவுளுக்கும் சேர்த்துத் தானே பவர் கட்?

கடவுள் சக்தியா - மின் சக்தியா என்று கேட்டால் மக்களுக்குத் தேவை மின்சக்தி என்பதுதானே  உண்மை - யதார்த்தம்!

எல்லாம் கடவுள் சக்திதான் என்று மக்கள் நம்புவ தானால், ஏன் மின்சாரம் கிடைக்கவில்லை என்று அந்தக் கடவுளிடம் ஏன் கேட்பதில்லை?
மூளை என்பது குப்பைத் தொட்டியா?

முதலில் மக்கள் தங்கள் மூளையை மூடநம்பிக்கையின் குப்பைத் தொட்டியாகக் கருதக் கூடாது! அந்தக் குப்பைகளைத் தூக்கி எறிய வேண்டும்; அகத்தூய்மை, புறத் தூய்மை இரண்டுமே அவசியமாகும்.

உலகம் அழியப் போகிறது என்று பிரச்சாரம் செய்கிறார் கள். உலகம் அழியாது, பூமியும் அழியப் போவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் அழியப் போகிறான் என்று தெரிகிறது.
பூமி வெப்பமாதல்!

பூமி வெப்பமாதல் (Global Warming) என்பதுபற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள்.

காடுகள் அழிக்கப்படுகின்றன; நிலத்தடி நீர் சுரண்டப் படுகிறது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. கிணற்றைக் காணோம் என்று ஒரு திரைப்படத்தில் சொல் லுவதுபோல குளங்களைக் காணவில்லை, ஏரிகளைக் காணவில்லை, மலையைக் காணவில்லை என்று சொல்கிறார்கள்.

காற்றைக் காசுக்கு வாங்கவேண்டும்  -எச்சரிக்கை!

இனி நல்ல காற்றுக்கூட மீட்டர் வைத்து விற்பனை என்னும் நிலை உருவானால் ஆச்சரியப்படுவதற்கில்லை

இயற்கை வளங்கள் இப்படி சுரண்டப்படுவதால் பூமி வெப்பமாதல் மூலம் தான் மனிதன் அழிவான்! பூமி அழியாவிட்டாலும் மனிதன் அழிவான் - மனிதனின் சுயநலத்தாலும் சமூகப் பொறுப்பு அற்ற தன்மையாலும்,

சமூகம் என்றால் என்ன?


தனி மனிதர்கள் எல்லாம் சேர்ந்தது தான் சமூகம். எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பும், கடமை உணர்வும் இருக்கிறது. இதிலிருந்து மனிதன் தப்பிக்க வேண்டுமானால் வீட்டுக்கு வீடு செடிகளை, மரக்கன்றுகளை வைக்க வேண்டும். மக்களிடத்தில் பசுமை உணர்ச்சி வளர வேண்டும்.

சீனாவும் சைக்கிளும்

இன்றைக்கு சீனாவை எடுத்துக் கொண்டால் சைக்கிள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நலம் பேணப்படுகிறது என்பதோடு, எரிபொருள் மூலம் வெளியேறும் மாசும் தடுக்கப்படுகிறது.

திராவிடர் கழகம் தானே செய்கிறது!

இதைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும், மக்களிடத்தில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் அவசியமான பணியைத்தான் திராவிடர் கழகம் செய்துவருகிறது.

மக்களிடத்தில் பகுத்தறிவு உணர்ச் சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் தந்தை பெரியார் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டார்கள். அந்தப் பணியைத் தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டுள்ளோம். திராவிடர் கழகம் திட்ட மிட்ட வகையில் செயல்பட்டு வருகிறது.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணிக்குப் பாராட்டு

திராவிடர் கழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் இங்கு வீதி நாடகத்தை நடத்தி நல்ல கருத்துக்களை உங்களிடம் பரப்பினார்கள்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி இதனை முன்னெடுத்துக் கொண் டுள்ளது. அவர்களை பாராட்டுகிறேன். இவ்வளவுத் திரளாகக் கூடி நின்று எங்கள் கருத்துக்களைச் செவி மடுக்கும் உங்களுக்கும் நன்றி.

தேவை விஞ்ஞான மனப்பான்மை

விஞ்ஞானத்தை பயன்படுத்திக் கொள் வதோடு விஞ்ஞான மன்பான்மையை உடையவர்களாக மாறுங்கள்.

பூமி வெப்பமாதலைத் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு! என்று குறிப்பிட் டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தோழர்கள் வருகை!

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த. வீரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. திருமகள், மண்டல செயலாளர் வெ. ஞானசேகரன், தென் சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தையன், ஆவடி மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு, கார்த்தி, கும்முடிப்பூண்டி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னேரி பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் ஆர்.டி. வீரபத்திரன், தென் சென்னை மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கி.செங்குட் டுவன்,  காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா, செல்வநாதன்,

இளைஞரணி தோழர்கள் பாஸ்கர், தாஸ், மற்றும் தங்கமணி செயலட்சுமி, செல்வேந்திரன், பண்பொளி, சி. வெற்றிச்செல்வி, மரகத மணி, பார்த்தீபன், குன்னூர் இராவணன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், இராமேசுவரம் சிகாமணி,  ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, ஏழுகிணறு கதிரவன், இதழாளர் கோவி. லெனின் அறிவியல் அறிஞர் சித்து முருகானந்தம், சுரேஷ், போக்குவரத்து தொழிலாளரணி நாகரத்தினம், புரசை அன்புசெல்வன், மாநில ஊடகத்துறை செயலாளர் பிரின்ஸ், இறைவி, இசையன்பன்,

மு. சண்முகப்பிரியன், கு. செல்வேந்திரன், தங்க. ரமேஷ், ச. மகேந்திரன், ச. தாஸ், மஞ்சை நாதன், பழனிசெல்வம், புரூனோ, பசும்பொன், மயிலை சாமிநாதன், அன்பு அப்துல்லா, வி. வளர்மதி, வி. யாழ்ஒளி, இரா. பிரபாகரன், பண்பொளி, கீர்த்தி, மாலதி, கலைமதி, மரகதமணி, செந்தமிழ் சேகுவோர, ஆனந்தி ஆ.செ. வசந்தன், வ. கலைச்செல்வி, ஆ.செ. பூங்குழலி மற்றும் ஏராளமான கழக தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் திரள்! மக்கள் திரள்!!

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் நடத்திக் காட்டிய வீதி நாடகத்தினை கடற்கரையில் நடை பயிற்சி பெற்ற பெருமக்கள் ஏராளமாக  கூடிக் கண்டு ரசித்தனர். இடை இடையே கை தட்டி ஆதரவு காட்டினர். கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையை ஆர்வமாகக் கேட்டனர்.


நிகழ்ச்சி முடிந்ததும் கழகத் தலைவரைச் சந்தித்து கை கொடுத்து இந்த முயற்சியை பெரிதும் பாராட்டினர். கடற்கரை நடைப் பாதையினர்க்குத் தேவைப்படும் வசதிகளையும் கூறி பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தொடக்கத்தில்  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார். பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் நன்றி கூறினார்.
தஞ்சையிலும் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
22.12.2012 காலை 10 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மனமே அஞ்சாதே உலகம் அழியாது உலகம் வாழும் உலகம் அழியும் என்ற மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்ட  விழிப்புணர்வு நாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங் தலைமை வகித்தார். கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் அ. முருகேசன், நகர ப.க. அமைப்பாளர் ரவிக்குமார் ஒன்றிய அமைப்பாளர் போட்டோ மூர்த்தி நகர இளைஞரணி அமைப்பாளர் இரா. வெற்றிக்குமார், துணைத் தலைவர் பெரியார்செல்வன் மற்றும் மகளிரணி செயலாளர் அ. கலைச்செல்வி, கரந்தை டேவிட் சரபோஜி கல்லூரி மாணவர் கிருஷ்ணமூர்த்தி,

மண்டலச் செயலாளர் மு. அய்யனார் தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.தனபால் நகரத் தலைவர் ஸ்டாலின், பகுத்தறிவாளர் கழக புரவலர் தஞ்சை இரத்தினகிரி மாவட்டத் துணைத் தலைவர் ப. தேசிங்கு, பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே. பொய்யாமொழி, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, ஓட்டுநர் அண்ணாத்துரை நகர தி.மு.க. பொரு ளாளர், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி,

ஓட்டுநர் அண்ணாதுரை ஒன்றிய ப.க. தலைவர் சோ. இராமகிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்றனர். திறுவையாறு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங் கோவன், தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டதை விளக்கி உரையாற்றினர். ஏராளமான பொது மக்கள் தெளிவு பெற்றனர். இனிப்பு வழங்கப்பட்டது.
                       -----------------------------"விடுதலை” 23-12-2012

15 comments:

தமிழ் ஓவியா said...

மதம்

திருமணம் மற்றும் சமூக வலைதளங்களில் முசுலிம்களின் நிழற்படங்கள் இடம் பெறுவது மத சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதராசமன்சார்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு கூறியுள்ளது.

(பாஸ்போர்ட்டு போன்றவைகளுக்கு அனுமதி உண்டாம் ஏனிந்த முரண்பாடு?)

தமிழ் ஓவியா said...


வீதி நாடகம்


சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலையின் அருகில் இனநலம் இசைக்குழுவின் சார்பில் பூமி சுற்றும் உலகம் வாழும் என்ற தலைப்பில், வீதி நாடகம் நடைபெற்றது. முன்னதாக அறிவிப்பு செய்திருந்தபடியே கருஞ்சட்டைத் தோழர்கள் காலை 6 மணி முதலே கூடத் தொடங்கி விட்டனர். சரியாக காலை 7 மணிக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார்.

அவரின் வருகையைத் தொடர்ந்து, மாயன் நாட்காட்டியின்படி இந்த பூமி அழிந்துவிடும் என்றுபோக்கத்தவர்கள் பீதி கிளம்பியதையும், அதனால், உலகளவில் அச்சத்தின் காரணமாக மக்கள் எப்படி எப்படி தங்கள் உணர்வுகளை (முட்டாள்தனங்களை) வெளிப்படுத்தினார்கள் என்பதைக் காட்சி வடிவிலும், வாயசைவுகள் மூலமும் வெளிப்படுத்தி, பூமி அழியாது என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகளை எடுத்துக்காட்டி விட்டு, இறுதியில், பூமி அழியாது.

ஆனால், மனிதர்கள் இயற்கைக்கு மாறாக சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதன் மூலம் மனித குலமே அழிந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று விளக்கிவிட்டு, ஆகவே, ஊகங்களை கண்டும், வதந்தியைக் கண்டும் அஞ்சாதீர்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் வைத்து, ஏமாற்றுகின்றவர்களுக்கும், ஏமாறுகின்ற வர்களுக்கும் சேர்த்து, ஏமாற்றாதே! ஏமாறாதே! என்று சுட்டிக்காட்டி, உலகம் பிறத்தது நமக்காக, அதை நாமும் காப்போம் நலமே என்ற பாடலுடன் நாடகம் நிறைவு செய்யப்பட்டது.

காலையில் நடைப்பயிற்சிக்காக வந்திருந்த மக்கள் ஏராளமாக கூடி நின்று திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்தை நல்ல வண்ணம் ரசித்தனர். நாடகம் நிறைவு பெற்றதும் அழிந்ததா உலகம் என்ற தலைப்பில் பூமி இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு வாழும் என்று பல்வேறு அறிவியல் அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகள் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.

மாயன் நாட்காட்டியில் சொன்னதாக உலகம் அழியும் என்று சொன்ன கற்பனை வழக்கம் போலவே தோற்றது. ஆகவே எல்லோரும் இன்பமாக வாழுங்கள், ஜாதி மத பேதங்கள் இல்லாமல், அணியாக வாழுங்கள் என்கிற அடிப்படையில் கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்தக் கருத்துக்களை விளக்குகின்ற வகையில் பதாகைகளும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இறுதியில், தமிழர் தலைவர் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். மக்கள் மலர்ந்த முகத்தோடு கருத்துக்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.

இனநல இசைக் குழு நடத்திய வீதிநாடகத்தில் குழுவின் தலைவர் இறைவி, இசையன்பன், உடுமலை வடிவேல், ஓவியச் செல்வன், மீனாட்சி, பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்பாக பங்கேற்று நடித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் நினைவு நாள்


மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

கல்லூரி காணாத பேராசிரியர் பெரியார்
பல்கலைக் கழகமாய்த் திகழ்கின்றார்!
சிந்திக்க முடியாத சிந்தனைகள்
துணிவுடனே வெளியிட்டார் மூக்கில் விரல்வைத்துப் பாராட்ட
இன்று உலகில் அவை நடைமுறையில் !
கைபேசி, கருவில் புரட்சி
பெண்களின் முழு மாற்றம்
மதம் அழிந்து மனித நேயம்
மேற்கு நாட்டில் மட்டுமல்ல
உலகே காண்கிறது தலைநிமிர்ந்து!
அய்யா உம் அடிச்சுவட்டில்
அயராது உழைத்திடும் ஒரே
ஆசிரியரின் தலைமையிலே
படைத்திடுவோம் புத்துலகை உமது புகழ் நிலைத்திடுமே !
---சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கொடி ஏற்றும் உரிமை


(மணிவாசகர் பதிப்பகத் தின் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை ந.முடிகோபதி அவர்களின் நூலில் 21ஆம் பக்கத்தில் இருப்பது:)

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது.

ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு மேலாக கோட்டை கொத்தளத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடிக்கு பதிலாக இந்திய தேசியக் கொடி ஆளுநர் சர். ஆர்ச் பால்ட்நை (ஷிவீக்ஷீ கிக்ஷீநீலீதீஷீறீபீ ழிஹ்மீ) அவர்களால் பறக்க விடப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டு முதல் ஒவ் வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஆளுநர் இக்கொடியை பறக்க விடுவது வழக்கமாக இருந்தது.

1973ஆம் ஆண்டு வரை இம்முறை பின்பற்றப்பட்டது. கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போது பிரதமர் இந்திராகாந்தி அவர்களுடன் போராடி, தேசிய அபிவிருத்தி கவுன்சிலிலும் வாதாடி, சுதந்திரத் திருநாளில் டெல்லி செங் கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவது போன்று, மாநிலங்களிலும் தலைமைச் செயலகங்களில் முதலமைச்சர்களே கொடி ஏற்ற வேண்டும் என்றும் மண் மீட்க எழுந்த போராட்டத்தின் முடிவில் வெற்றிக் களிப்புடன் விண் முட்டப் பறந்து பட் டொளி வீசிடும் இந்திய தேசியக் கொடியை மக் களின் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில முதலமைச் சர்கள்தாம் இந்த நாளில் ஏற்றி வைக்க வேண்டும் என்றும் உரிமைக் குரல் எழுப்பினார். அதில் வெற்றியும் பெற்றார். அவ்வெற்றியின் முகத்தான் 1974ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15ஆம் நாள் கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசியக் கொடியை முதலமைச்சர் கருணாநிதி ஏற்றிய தோடன்றி, மற்ற மாநில முதலமைச்சர்களுக்கும் அவ் வுரிமையினைப் பெற்றுத் தந்து பெருமை பெற்றார்.

தகவல்: க. பழநிசாமி
தெ. புதுப்பட்டி (கி.அ.) கண்ணிவாடி (து.அ.)

தமிழ் ஓவியா said...


எப்படி இருக்கு?


கிளப் ஆஃப் மெட்ராஸ் ஹார்மனி - பம்பா வாசன் பக்த சபா இணைந்து கண் அறுவை சிகிச்சை முகாமை சென்னையில் நடத்தியுள்ளனர்.

நல்லது - வரவேற்கத்தகுந்ததே! எதன் பேரில் நடந்தாலும் மக்களுக்கு நலம் தானே!

அதே நேரத்தில் ஒரு கேள்வி! பம்பா வாசன் பக்த சபாவினர் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். அய்யப்ப சாமி அறுவை சிகிச்சை செய்யாமல் குணப்படுத்த மாட்டாரா? அவருக்கு அந்தச் சக்தியெல்லாம் கிடையாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா?

ஏனிந்த இரட்டை வேடம்? கடவுளை மறந்து மனிதனை நினைப்பானேன்? கடைசி கடைசியாக பெரியார் சொன்ன இடத்துக்குத் தானே வந்து சேர்ந்துள் ளார்கள். சிந்திக்கவும்.

தமிழ் ஓவியா said...


இவர்தான் பேராசிரியர்


பேராசிரியர் என்றால் தி.மு.கவின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியரைத்தான் குறிக்கும். வளர்ந்த பருவத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்தைக் கேட்டுச் சிந்தித்து, இந்த இயக்கத்திற்கு வந்து சேர்ந்தவரல்லர் அவர். அவரே பலமுறை பல நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக எடுத்துச் சொன்னதைப்போல அவரது தந்தையார் கலியாணசுந்தரனார், மாமா மாயவரம் நடராசன் ஆகியோர் தம் சுற்றுச்சூழல், இயல்பாகவே தந்தை பெரியார்பால் சிறுவன் அன்பழகனைக் கொண்டு வந்து சேர்த்தது. இது மற்றவர்களுக்குக் கிட்டாத பெரும் பேறே!

அய்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே வியப்பாக இருந்த பருவத்திலேயே அவர்களை அறியத் தலைப்பட்டவன் நான். தந்தையின் முதல் சந்திப்பு எதுவென்று மகன் கூற முடியாத நிலையே என் நிலை என்று அழகாக அவரே குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்தில் பேசினாலும் அதில் கறார்த்தன்மை இருக்கும்- பட்டுக் கத்தரிப்பதுபோல திடமாக இருக்கும். இரு பொருளுககு இடம் தரும் பேச்சு அவர்பால் இருக்காது இது அவரின் தனித்தன்மை. சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் (23.10.2009) கலந்து கொண்ட மாண்புமிகு கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் என்ன பேசினார்?

இங்கே பேசிய பேராசிரியர் அ.இராமசாமியாக இருந்தாலும் சரி, அவருக்குத் தூண்டுகோலாக இருந்த கவிஞர் கருணானந்தமாக இருந்தாலும் சரி, இந்த நூலை யாத்த புலவர் மணியனாக இருந்தாலும் சரி, இப்படி மேடை அமைத்தும், அதில் நம் சிந்தனைகளைப் பேசுவதுமான எல்லா நிலைகளுக்கும் அடித்தளமே தந்தை பெரியார்தான். முன்னே சென்ற முதல் வீரர்தான் தந்தை பெரியார். அண்ணாஅறிஞர்தான், பெருமைக்குரியவர்தான் ஆனாலும், பெரியார் என்ற மாமனிதர் இல்லை என்றால், அண்ணா இல்லை அண்ணாவே இல்லை என்றால் நாம் இல்லை என்று அர்த்தம். - இப்படியெல்லாம் நிறைகுடம் ததும்பாது பேசும் மாமனிதருககுப் பெயர்தான் நமது இனமானப் பேராசிரியர்!

91ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் (டிசம்பர் 19) அப்பெருமகனார் நூற்றாண்டை எளிதிற் காண்பாராக!

- மயிலாடன் 22-12-2012

தமிழ் ஓவியா said...


ஹிந்து மதம் மட்டும் என்னவாம்?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மதிப்பிற்குரிய திரு அனந்த பத்மநாபன் அவர்களே! வணக்கம். தாங்கள் அனுப்பிய மடல் படித்துப்பார்த்தேன். கிறிஸ்துவ , இஸ்லாமிய மதங்களில் உள்ள யதார்த்த நிலையை விளக்கி உள்ளீர்கள். அதனை படித்து விபரங்கள் தெரிந்து கொண்டேன். அந்தந்த மதங்களில் உள்ள உள்வேறுபாடுகள் எவ்வளவு உள்ளன என்பதை நான் அறிந்து கொண்டேன். நமது ஹிந்து மதம் மட்டும் என்ன ஒரே கோட்பாடு கொண்ட தாகவா இருக்கிறது? யோசனை செய்து பார்த்தால் நமது மதத்தில் உள்ள உள் வேறுபாடுகள் விரல் விட்டு எண்ண முடியாது. அத்தனை உள் வேறுபாடுகள் பொங்கி வழிகின்றன. முதலில் பிராமணர் களிலிருந்து துவங்குவோம். முதலில் அய்யங்கார் அவர்கள் சிவனை முருகனை கணபதியை வணங்கும் ஸ்மார்த்தர்கள் என்ற அய்யர்களை ஒப்பவில்லை. அவர்கள் வணங்கும் கோவில்களுக்குச் செல்ல மாட்டார்கள் யானை துரத்தினாலும் சிவன் கோவி லுக்குள் நுழையக் கூடாது அதைவிட யானைக் காலால் மிதிபட்டுச் சாகலாம் என்று ஆணித்தரமாக கூறுவார்கள். மேலும் சிவன் கோவிலை மசானம் (சுடுகாடு) என்று வர்ணிப்பார்கள்.. மேற்படி உள்ள அய்யங்கார் அய்யர் ஆகிய இரண்டு பெரும் காளி கோவி லுக்குச் செல்லமாட்டார்கள். காளி உபாசகர்கள் தனிரகம் அந்த மூன்று பிரிவினரும் சுடலை மாடன் கோவிலுக் குச் செல்ல மாட்டார்கள். சுடலை பக்தர்கள் தனி ரகம் அந்த நான்கு பேரும் காட்டேரியை வணங்க மாட் டார்கள்.

மேலும் அய்யங்கார்களில் வடகலை தென்கலை என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. வடகலை அய்யங் கார்கள் தென்கலை அய்யங்கார்களை பிராமணர்களாகவே மதிக்க மாட்டார் கள். தென்கலை ஐயன்கார்களோ ராமானுஜரை தென்கலை அய்யன் காராகவே பாவித்து வடகலை அய்யங்கார்களை தூஷிப்பார்கள். அய்யர் என்று அழைக்கப்படும் ஸ்மார்த்தர்களில் மூன்று பிரிவுகள் உள்ளன .அவர்கள் வடமன் ப்ரஹச் சரணம் வாத்திமா என்று மூன்று பிரிவினர்கள் இவர்களில் வடமன் தான் உசத்தி என்று கூறுபவர்கள் சொல்லும் வசனம் இதுதான் வடமன் கட்டு வாத்திமன் மட்டு ப்ரஹச்சரணம் பெப்பே..இப்படி முரண்பாடு . இவர்களைத் தவிர மாத்துவர்கள் என்று ஒரு பிரிவினர். அவர்கள் தாங்கள்தான் மிக்க ஆசார சீலம் கொண்டவர்கள் என்று பறை சாற்றிக் கொள்வார்கள். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதில் கூட முரண்பாடு கள். கிருஷ்ணன் பிறந்த நாளை ஜன் மாஷ்டமி என்று ஸ்மார்த்தர்கள் கொண்டாடுவார்கள். அய்யன்கார் களோ அதற்கு மறுநாள் ரோகினி நட்சத்திரத்தை முக்கியமாகக் கொண்டு ஸ்ரீஜயந்தி என்று கொண்டாடுவார்கள். இவை பிராமணர்களைப் பற்றியது பிள்ளைமார்களை எடுத்துக் கொண்டால் சைவப்பிள்ளைமார் அசைவ பிள்ளைமார் வைணவப் பிள்ளைமார் கார்காத்த பிள்ளைமார் திருநெல்வேலிப் பிள்ளைமார் தஞ் சாவூர் பிள்ளைமார் என்று பலவகை இவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள். மேலே குறுப்பிட்ட பிராமணர்களும் பிள்ளைமார்களும் முதலியார்களை மதிக்க மாட்டார்கள்.

இவர்கள் மூவரும் ஆசாரியை மதிக்க மாட்டார்கள். இந்த நான்கு பேரும் செட்டியார்களை மதிக்க மாட்டார்கள் இந்த அய்ந்து பேர்களும் நாயக்கர் சமூகத்தை மதிக்க மாட்டார்கள்.இந்த ஆறு பேர்களும் முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தேவர் கள்ளர் அகமுடையார்களை மதிக்கமாட் டார்கள் இந்த ஒன்பது பேர்களும் பள்ளர் என்ற ஜாதியை தீண்டத்தகாத ஜாதி என்று ஒதுக்கி விடுவார்கள். அந்த பள்ளர் ஜாதியைசேர்ந்தவர்கள் பறையனை மதிக்கமாட்டார்கள் இவர்கள் அனைவரும் சக்கிலியனை மதிக்க மாட்டார்கள். இதற்கும் மேலாக குறவர்கள் என்ற ஜாதியில் நாட்டுக் குறவர்கள் என்றும் நரிக்குறவர்கள் என்றும் இரண்டு வகை. அவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க மாட் டார்கள்.; மேலே கூறப்பட்ட ஜாதிகள் அனைத்தும் வணங்கும் தெய்வ இடங் கள் தனித்தனி ஆகியவை. எனவே வீட் டுக்கு வீடு வாசற்படி அவ்வளவு தான்.

(அனந்த பத்பநாபன் சுப்பிர மணியர்க்கு பி.ஆர். கிருஷ்ண அய்யங் கார் எழுதிய மடல் இது. இணைய தளத்திலிருந்து 18.12.2012)

தமிழ் ஓவியா said...


மறைக்கப்பட்டு வரும் திராவிட நாகரீகம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகில் பல மனித இனங்கள் இருந்தன, இவைகளின் நாகரிகம் பலவித மானது, உன்னதமானது ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான நாகரிகம், இன்று வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் போன்றவை போன்று அன்றும் இருந்து வந்தது, இதில் முக்கியமானது நதிக்கரை நாகரிகம் மனித இனத்தின் நாகரிகத்தின் தொட்டில்கள் என்று வரலாற்று அறிஞர்கள் கூறு கிறார்கள், இன்று அகழ்வாராய்ச்சிகள் மற்றும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் அந்த நாகரிகத்தின் தொன்மையை அறிந்து வருகிறோம், நைல், யூப்ரடீஸ் டைகரீஸ், மஞ்சள் நதி, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம், இன்று நைல் நாகரிகம் எகிப்திய மக்களின் புகழை உலகெங்கும் பறைசாற்றிவருகிறது, அது போலவே யூப்ரடீஸ் டைகரீஸ் இன்று யூதர்கள் அராபியர்கள் என இரண்டு பிரிவாக பிரிந்து உலகை தங்கள் வசம் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்றால் அன்றும் யூப்ரடீஸ் டைகரீஸ் கரைகளில் தங்கள் நாகரிகத்தை கட்டிக்காத்தனர், வல்லரசுகளில் ஒன்றான சீனநாகரிகமும் மஞ்சள் நதிக்கரையில் உருவானது தான், ஆனால் சிந்துவெளி நாகரிகம் என்ன ஆனது, உலகத்திற்கே தெரிந்த ஒன்று அது திராவிட நாகரிகம் என்று, நமது கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் அதற்கான சான்றுகள் பகர்கிறது, ஆனால் இன்று நடப்பதென்ன சில வருடங்களுக்கு முன்பு திராவிடர் என்று ஒரு இனம் இல்லை, என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்களாம், ஆந்திர பல்கலைகழகம் ஒன்று இது குறித்து ஆய்வு செய்தார்களாம் வைகோ அவர்கள் ராஜபக்சே வருகிறார் என்று போராட போனார்களே அதே மத்திய பிரதேச அரசு தென்பகுதியில் வாழ்ப வர்கள் ஆப்ரிக்காவில் இருந்து வந்த இனங்கள் என்று திராவிடர்கள் என்று சொல்லாமல் நம்மை வந்தேறிகள் என்று சொல்லி விடுகிறது,

எடுத்துக் காட்டுக்கு கர்நாடக மேற்கு கடற் கரைகிராமங்களில் வாழும் நீக்ரோவை ஒத்த சில ஆயிரம் பேர் கொண்ட ஓர் இனத்தை காட்டுகிறது, இதற்கெல் லாம் சிகரம் வைத்தாற் போல் மும்பையில் ஓர் நிகழ்ச்சி நடந்தது, ஆம் 1994-ல் சிவசேனா ஆட்சிக்கு வந்த உடன் இளவரசர் வேல்ஸ் மீயூசியம் பெயர் சத்திரபதி சிவாஜி அருங் காட்சியகம் என்று மட்டும் மாற்றப் படவில்லை, உள்ளே நுழைந்த உடன் கண்ணில் படும் மிகப்பெரிய படங் களான சிந்து சமவெளி நாகரித்தை குறிக்கும் பட விளக்கங்களில் ஒரு பெயர் மட்டும் அளிக்கப்பட்டது அது இங்குவாழ்ந்த இனம் திராவிடம் எனப்பட்டது இந்த வார்த்தை அழிக்கப்பட்டு பெயர் தெரியாத ஓர் இனம் வாழ்ந்தது (ஸீளீஸீஷீஷ்ஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீவீஷீஸீ ) எவ்வளவு நுணுக்கமான மாற்றம், அங்கு திராவிடர்கள் என்ற பெயர் 1994 முன்பு இருந்தது, அதற்கான பட ஆதாரங்கள் இன்றும் உள்ளன, ஏன் மாற்றினார்கள் அப்படி என்றால் அவர்கள் யார் என்று கூறப்போகிறார் கள் என்று பார்த்தால் நேற்று க்ஷீணீஸ்மீறீ க்ஷீமீஸீபீ பயணதொலைக்காட்சியில் இதற் கான விளக்கம் ஆரம்பமானது ஆம் தொலவீரா(குஜராத்) என்ற பகுதியில் உள்ள ஹரப்பா நாகரீக பதிவுகளை படமெடுத்து அதற்கான விளக்கம் கூறுகிறபோது பெயர் தெரியாத இந்த உன்னத நாகரிக இனத்தினர் மத்திய ஆசியாவின் பாபிலோனில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினார்கள், அதாவது அவர்கள் பயன்படுத்திய சில மண்பாண்டங்கள் பாபிலோனியர்கள் பயன்படுத்துவதைப் போல் இருக்கிறதாம் ஆகையால் இந்த முடிவிற்கு அகழ்வாராச்சியாளர்கள் வந்தார்களாம், தொலவீரா என்ற ஹரப்பா பண்டைய நாகரிகம் இன்று கானப்படும் பகுதியே திராவிட என்ற வார்த்தையின் மறுவு தான் என்று கண்ணாடியாய் தெரியும் போது ஏன் மத்திய ஆசியா என்று குறிப்பிட வேண்டும்.

எப்படியும் இன்னும் 5 வருடத்திற் குள் சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர் களின் நாகரீகம் என்று பதிவு செய்து விடுவார்கள், இதற்கான மாற்றம் தான் அசைவம் சாப்பிடுபவர்கள், நாடார்கள் என அடிமட்ட பூச்சுக்கள் பாடத்திட் டங்களின் மூலம் ஆரம்பமாகிவிட் டதோ என்னவோ?

-சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...


சாதிச் சண்டை


சாதிச் சண்டைப் போட்டுக் கொண்டால் வாழ முடியுமா? - தமிழர்
சரித்திரத்தில் சமத்துவத்தைக் காண முடியுமா?
ஆரியத்தால் சாதி வந்தது மறுக்க முடியுமா? - இதை
அறிந்திடாமல் அழிந்துவிட்டாய் உனக்குத் தெரியுமா? - (சாதி )

அரசியலில் சாதிவந்து அரசைக்கடித்து விழுங்குது - அதை
ஆதரிக்கும் கட்சிகளோ அழியப் போகுது
அறிவுஆசான் பெரியார் சொன்னதை எவனும் கேட்கலே - நாடு
எரிந்து சாம்பல் ஆகுமுன்னே புரிந்துகொள்வாய் நீயும் - (சாதி)

ஆர்.எஸ்.எஸ்.ஸில் தமிழர்கள் போய்ச் சேர்ந்திடலாமா? - அவன்
அப்பன்பாட்டன் அழிந்தகதை மறந்திடலாமா?
தேசத் தந்தை காந்தியையே சுட்டெரித்தவண்டா - நம்
காமராசர் உயிரைக்குடிக்க முயற்சிசெய்தவண்டா (சாதி)

உனக்கும்எனக்கும் சாதியில்லை உணரும்காலம் வரணும் - அந்த
உணர்வினிலே தமிழரெல்லாம் ஒன்றுசேர வேண்டும்
ஓரினமாய் வாழுதற்கு சாதிஒழிய வேண்டும் - நாம்
உலகில் மனித உயிர்கள் என்ற உருவங்காண வேண்டும் - (சாதி)

- திருவாரூர் பாடகர் க. முனியாண்டி

தமிழ் ஓவியா said...


நிலவுக்குச் செல்ல ஆசையா?


நிலாவுக்கு சென்று இரு நாட்கள் தங்கி சுற்றுலா செல்லுவது ஏற்பாடாகி யுள்ளது. இப்போதல்ல; 2020இல். அமெரிக்காவில் உள்ள கோல்டன் ஸ்பைக் என்ற நிறுவனம்தான் இந்த ஏற்பாட்டைச் செய்து வருகிறது. முன் பதிவு செய்து கொள்ளலாம். இருவர் சென்று வர அதிகம் ஒன்றும் செல வில்லை ரூ.8250 கோடி தானாம்.

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தை புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.


(விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


பெரியார் தந்த ஈரோடு வேலைத் திட்டம் நீதிக்கட்சி ஏற்றது(இவற்றை இந்திய காங்கிரசை ஏற்றுக் கொள்ளச் செய்கிறேன் என சிறையில் பெரியாருக்கு உறுதிகூறிப் பெற்று, காங்கிரசிற்கு ஜீரணிக்கும் வலிமை இல்லை என்று தோழர் காந்தியாரைக் கலந்த பிறகு கூறினார் தோழர் ஆச்சாரியார். இன்றைய கவர்னர் ஜெனரல் காங்கிரஸ் ஜீரணிக்க முடியாததை அன்றைய நீதிக் கட்சி ஜீரணிக்க முன் வந்தது 07-06-1934ஆம் நாள் கீழ்வரும் 10 முடிவுகளையும் தனது எதிர்கால வேலைகள் என ஒப்புக் கொண்டு நீதிக்கட்சி வெளிப்படுத்தியது. (ஆ-ர்))

1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்தத் தன்மையைக் கெடுக்கக் கூடியனவாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியனவாகவும் இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிகமிகத் தாங்க முடியாததாகவும் இருப்பதால் அவற்றைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும் மீத்துப் பெருக்கி வைப்பதற்கு லாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.

2. பொது ஜனத் தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திரச்சாலைகள், போக்குவரவுச் சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படி செய்ய வேண்டும்.

3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன் இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும், விவகாரங்கள் குறையும்படியாகக் கோர்ட்டு முறையும், சட்டத்தன்மையும், வக்கீல் தொல்லையும் ஒழியும்படியும் சொத்து பாத்திய விவகாரத்திற்கு இடமில்லாமல் சரியான ஆதாரம் சர்க்காரே வைத்திருக்கவும், ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் குறிப்பிட்ட ஒரு அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழியும்படியாகவும், ஒரு அளவுக்கு உத்தியோகங்கள் எல்லா ஜாதி மதக்காரர்களுக்கும் சரிசமமாய் இருக்கும்படிக்கும் உடனே ஏற்பாடுகள் செய்வதுடன், இவை நடந்து வருகின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்துத்தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படி செய்வதுடன் அரசியலில் நிர்வாகத்தில் அவை எவ்விதச் சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக்கூடாது.

7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்கவரும்படிக்காரருக்கோ, அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப்பளுவே இல்லாமலும் மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அந்நியரால் விவசாயம் செய்யப்படுவதின் மூலம் பயனடைபவர்களுக்கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.

8. லோக்கல்போர்டு, முனிசிபாலிட்டி, கோவாபரேட்டிவ் இலாகா ஆகியவைகளுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிர்வாகம் செய்ய வசதிகள் செய்து தக்க பொறுப்பும் நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவற்றை நிர்வாகம் செய்ய வேண்டும்.

9. விவகாரங்களையும், சட்டச் சிக்கல்களையும் குறைப்பதுடன் சாவுவரி விதிக்கப்பட வேண்டும்.

10. மேலேகண்ட இந்த காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமலில் கொண்டுவரக் கூடியவற்றைச் சட்டசபைகள் மூலமும் அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளைக் கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

குடிஅரசு - செய்தி - 22.11.1947

தமிழ் ஓவியா said...


திருக்குறள் ஆட்சி ஆசிரியர்: அரங்கசாமிவெள்ளையன் போனாலும் இருந்தாலும், நம் நாட்டை ஆண்டதும் - ஆண்டு வருவதும் மனு நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்து லாவே. ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்ற ஓரவஞ்சகமில்லாமல், மக்கட் குலத்திற்கு மனித நீதி ஒரு தன்மையானதாகவே இருக்க வேண்டுமென்று வற்புறுத்தவும், வாழ்கைத்துறை ஒவ்வொன்றிலும் திருக்குறள் மணங்கமழச் செய்ய விரும்பியும் உழைப்பது, இதன் நோக்கமென அறிகின்றோம்.

திருக்குறளின் பெருமையை விளக்குவது 82ஆம் 144ஆம் பக்கம் என்று நம்பி, அந்த முறையில் பெருமையை விளக்க முற்படுவது, கருதுகின்ற பலன் கைக்கூடாது போகுமே என்று நினைக்கின்றோம். மயிலாப்பூர், முப்புரி நூலையும், விபூதி பூச்சையும் தள்ளிவிட்டு, இதுதான் திருவள்ளுவர் உருவம் என்று காட்ட முயலுவது பொருத்தமில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தவரின் உருவத்தை, இப்பொழுது கண்டுபிடிப்பது வீண் வேலை. பொருளுக்காகப் பற்றுவைக்கும் காலம் மலையேறி பயனுக்காகப் பற்று வைக்கும் காலம் என்பதையுணர்ந்து, மக்களுக்குப் பயன்படும் வழிகளில் திருக்குறள் உண்மைகளை விளக்கி வரவேண்டும். இது நமது ஆவல். சிறப்பாகச் செந்தமிழ் நாட்டுச் சிறுவர்கள், தங்களின் மொழியறிவைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், பொதுவாகத் தமிழ்ப் பொதுமக்கள் திருக்குறளின் சிறப்பையுணர்ந்து கைக்கொள்ளவும் திருக்குறள் ஆட்சி உதவி செய்யும் என்பதே நம் நம்பிக்கை.

குடிஅரசு - மதிப்புரை - 22.11.1947

தமிழ் ஓவியா said...


தமிழ் நிலம் (கிழமை இதழ்)


எழுத்தாளர்: குடியேற்றம் முருகப்ப அண்ணல் தங்கோ

கட்டாய இந்தி எதிர்ப்புணர்ச்சி நம் நாட்டில்கரைபுரண்டோடிய நிலையை அடிப்படையாகக் கொண்டு வேலூரில் பிறந்த தமிழ் நிலம் அய்ந்தாண்டு ஓய்விற்குப் பின் மீண்டும் தமிழ் நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தோடு தன்மானக் குரல் எழுப்பிச் சென்னையிலிருந்து வெளிவந்திருக்கின்றது.

பிறசொல் கலவாத தமிழிலே பேசவும், எழுதவும் இயலுமோ? என அய்யப் படுவோர்களுக்குச் செயல் வழியாக விடைகூற வேண்டுமென்ற எண்ணத்தோடு, எத்துறைச் சொல்லையும் என் தாய் மொழியிலேயே கூறுவேன் என்ற உறுதிகொண்டு புரியாத பொது மக்களுக்கும் புரியவைப்பேன் என்ற மனத் திட்பம் படைத்த எழுத்தாளரை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். தமிழ்ப் பற்றுடைய பெருமக்களும் இதனை வரவேற்பார்கள் என நம்புகின்றோம்.

குடிஅரசு - மதிப்புரை - 22.11.1947

தமிழ் ஓவியா said...


செங்கற்பட்டு அழைக்கிறது - வாரீர்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மின்சாரம் -

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24; இம்முறை செங்கற்பட்டு அழைக்கிறது தோழர்களே!

மறுநாள் 25.12.2012 எண்ணூர் இரு கரம் கூப்பி அழைக்கிறது நண்பர்களே!

டிசம்பர் 24 மாலை செங்கற்பட்டில் தந்தை பெரியார் படிப்பகமும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையும் திறக்கப்பட உள்ளன.

எத்தகைய செங்கற்பட்டில்? முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்ற (17, 18.2.1929) அந்தச் செங்கற்பட்டில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா!

1929இல் பிறக்காத நாம் - இன்று இருக்கிறோம். அதைப் பார்க்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் இதனைக் கண் குளிரக் காணலாமே!

சென்னை தியாகராயர் நகரிலிருந்து செங்கற்பட்டு வரையிலும் ஊர்வலமாம்; நினைத்துப் பார்க்க முடிகிறதா?

வழி நெடுக ஏகப்பட்ட இடங்களில் வரவேற்பு வைபவங்களாம்.

சுயமரியாதை மாநாட்டின் தலைவர் ஊ.பு.அ.சவுந் திரபாண்டியன் எப்படி வந்தார் தெரியுமா?

மாநாட்டுக்கென்று மதுரையிலிருந்து 12 பெட்டிகள் இணைக்கப்பட்ட ஸ்பெஷல் ரயிலாம். ஆயிரம் பிரதி பிரதிநிதிகள் புடை சூழ மாநாட்டுத் தலைவர் வருகை. படிக்கும்போதே புல்லரிக்கவில்லையா?

தனி அஞ்சலகம், தனி இரயில்வே நிலையம் என்று - அதற்கு முன் எந்தக் கட்சி மாநாடும் அந்த அளவிற்குத் துள்ளலுடனும், கம்பீரத்துடனும் நடத்தப் படவில்லை என்கிற அளவிற்கு நடத்தப்பட்ட மாநாடு அது.

அந்த மாநாட்டுக்கு யார் யாரையெல்லாம் தந்தை பெரியார் அழைத்தார்?

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டி ருப்பவர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்

- என்று அழைப்புக் கொடுத்தார் அய்யா என்றால், எண்ணிப் பாருங்கள்.

இந்தக் கோணத்தில் எவர் சிந்தித்தார்? எவர் செயல்பட்டார்?

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பங்கேற்றனர்? தந்தை பெரியர், ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன், முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயன், ஆர்க்காடு ஏ.இராமசாமி முதலியார், பி.டி.ராஜன், அஞ்சாநெஞ்சன் அழகிரி, வகுப்புரிமை தந்தை எஸ்.முத்தையா முதலியார், சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன், ஏ.டி.பன்னீர் செல்வம், ஜெ.எஸ்.கண்ணப்பர், கைவல்யம், எஸ்.இராம நாதன் இன்னும் பட்டியல் விரிவடையும்.

எத்தகைய தீர்மானங்கள்? பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பட்டங்களைத் துறப்பது என்ற தீர்மானம். அந்த இடத்திலேயே சவுந்தரபாண்டியன் நாடாரில் உள்ள நாடாரும், சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன் சேர்வையில் உள்ள சேர்வை ஜாதிப் பட்டமும் தூக்கி எறியப்பட்டனவே! பெண்களுக்குச் சொத்துரிமை பற்றிய தீர்மானமும் அந்த மாநாட்டில்தான்.

அந்தத் தீர்மானங்களை விஞ்சிய முற்போக்குத் தீர்மானங்கள் உண்டோ என்று சவால் விடும் அளவுக்கு அத்தனைத் தீர்மானங்களும் விலை மதிப்பில்லா முத்துக்கள்.

(திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று மனச்சான்று இல்லாமல் பேசும் பேர்வழிகள் ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்!)

அந்த மாநாட்டின் 80ஆம் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து இதே செங்கற்பட்டில் மாபெரும் விழா எடுத்தோம் (18.2.2008).

முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்ற அந்த இடத்தை விலைக்கு வாங்கி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்தார் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு அ.கோ.கோபால் சாமி (எளிய முன்னாள் இரயில்வே ஊழியர் - திறக்கப்பட உள்ள தந்தை பெரியார் சிலையும் அவரின் அன்பளிப்பே!).

அன்று பெரியார் படிப்பகத்துக்கு மானமிகு கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டிட, அந்த இடத்தில் பெரியார் படிப்பகம் உருவாக்கப்பட்டு, அதனை டிசம்பர் 24 அன்று தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார்.

தந்தை பெரியார் முழு உருவச் சிலையை தி.மு.க. பொருளாளர் - இளைஞர் சேனையின் நம்பிக்கை நட்சத்திரத் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

என்ன பேறு பெற்றோம் நாம்! இந்தச் சந்தர்ப் பத்தை நழுவ விட்டால், நம்மை விட வாய்ப்பு கெட்ட வர்கள் யார்? இந்த ஆண்டு அய்யா நினைவு நாள் - நமக்கெல்லாம் செங்கற்பட்டில் அமையட்டும்! அமை யட்டும்!!

1929இல் நாம் பிறக்கவில்லை. அதனால் நாம் பங்கேற்கவில்லை. இப்பொழுதுதான் பிறந்துவிட்டோமே. அந்தச் சுயமரியாதை இயக்கத்தால் மனிதராகவும் ஆகிவிட்டோமே!
அதனை நிரூபிக்க வேண்டாமா? வாருங்கள் தோழர்களே வரிப்புலியாய் - கொள்கைச் சிங்கங் களாய் - சுயமரியாதைச் சூரர்களாய்!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் வெட்கித் தலைவணங்கி புதுச் சிந்தனைப் புது வெள்ளத்தில் நீந்தட்டும்!

செங்கற்பட்டு - இயக்க வரலாற்றில் புதுக் கல்வெட்டாக நிலைக்கப்போகிறது. அதில் கலந்து கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் கூட அந்த வரலாற்றில் இடம் பெறுவோம்! வாரீர்! வாரீர்!!