Search This Blog

20.12.12

புளுகுணிப் பூணூல்களே, புரியாதோ நோக்கு?


தந்தை பெரியார் அவர்களை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் நாணயமின்றி எழுதித் தாக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ள சோவின் துக்ளக் ஏடு (இது கல்கி குழுமத்தால் - கூட்டத்தால் வெளியிடப்படும் ஏடு என்பதுகூட பலருக்குத் தெரியாது) யாரையாவது ஒரு அரைவேக்காடு எழுத்தாளரை விட்டு எழுதி காசாக்கிக் கொண்டு திரிகிறது.

முன்பெல்லாம் இப்படி எழுதுவதற்கு யோசிப்பார்கள்; இப்போது ஒரு தனி தைரியமும், ஆணவமும் ஏற்பட்டுள்ளன. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு.

1) தங்கள் இனத்தின் ஏகபோக ஆட்சி இங்கே நடக்கிறது;  என்ற திமிர்வாத மனப்பான்மை. (இது அந்த ஆட்சிக்கே ஆபத்தாக முடியப் போகிறது என்பது போகப் போகப் புரியும்).

2) தமிழர்களில் சில பதவி தேடிகளும், நாற்காலிக்காக எதையும் தியாகம் செய்யும் வீடண சுக்ரீவர் அனுமார் கூட்டமும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி அக்கிரகார ஏடுகளின் சடகோபத்தை, சாங்கோ பாங்கமாகி, விரும்பி  சரணாகதி அடைவதுமாக இருப்பது!

ஆனால் இவை மணல் வீடுகளைப் போல் சரியப் போவது உறுதி. இறுதியில் சிரிப்போர் திராவிடர் இயக்கத்தவர். இடையில் சிரித்து, கடைசியில் அழுபவர்கள் அதன் எதிரிகள்.

சென்ற வாரமும், இந்த வாரமும் அக்கிரகாரத்தின் ஏவுகணையான அப்பு ஒன்று எழுதுகிறது!

தமிழ்ப் பேச ஆரம்பித்தால் அதற்காக பிராயச்சித்தம் செய்து கொள்வார்கள் பிராமணர்கள் என்ற கூற்று உண்மையல்ல என்று எழுதுகிறாரே,
அத்தகைய கோயபெல்ஸ்களுக்கு நாம் ஆதாரபூர்வமாக மறுப்புரை தருகிறோம்.

இன்றும் உடுமலைப்பேட்டையில் வாழுபவர் பிரபல வரலாற்றுப் பேரா சிரியரான 98 வயது நிறைந்த  டாக்டர் என். சுப்ரமணியன் அவர் கள்; இவர்  பேராசிரியர்களின் பேராசிரியர் என்ற பெருமை பெற்றவர்.

தனித் தன்மையான சிந்தனையாளர், அவர் இன்றும் இடையறாமல் எழுதிக் கொண்டே இருக்கும் இணையற்ற சிந்தனையாளர்.

பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய தன் வரலாற்றில் குறிப்பிட் டுள்ள தகவல்:   

அவர் காரைக் குடியில் இருந்தபோது தமிழாசிரியரான அவரது தந்தையார் வித்துவான் பலராம அய்யர் அவர்கள் (இவர் பழைய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரருக்கு ஆசிரியர்)  அவரிடம் படித்தவர் - விழுப்புரத்தில் இருந்தவர்.

சுவாமிகள் வந்து ஒரு வாரத்திற்கு மேலாக அங்குத் தங்கியிருந்தாராயினும், தலைமை யாசிரியர் உட்படப் பல பிரமுகர்கள் சுவாமிகளைப் போய்ப் பார்த்து ஆசி பெற்று வந்தனராயினும், எந்தையார் மட்டும் போகாமலே இருந்தார்.
தாங்கள் போகும்போது இவரையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பிய சிலருக்கு ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விட்டார்.

தமிழ்ப் பண்டிதர் மாசிலாமணி தேசிகர் எனக்கு 12.7.1960இல் எழுதிய ஒரு விரிவான கடிதத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு மேலும் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

சுவாமி கள் ந.ப. (ந. பலராமன், சுப்ரமணியம் அவர்களின் தந்தையார்  தமிழா சிரியர்) அவர்களிடம் பயின்ற பழக்கத்தால் வலுவிலே அழைத்துப் பார்த்தார்கள். ந.ப. அவர்கள் சுவாமிகளிடம் செல்லவில்லை. யான் ஒரு சமயம் தனித்து ஏன் மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு ந.ப. அவர்கள் மறைக்காமல் சொன்னதாவது: தமிழ் நாட்டில் தமிழ் மக்களாலே பாராட்டப்படும் பீடத்தினர்.

அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலேதான் பேசுவார்களாம். தமிழிலே பேசினால் ஆச்சாரக் குறைவு என்று கருது கிறார்கள். பூஜை முடிந்து போஜனம் ஆனபின் தான் தமிழிலேயே பேசுவார்களாம். ஆதலால்  அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை ஏன் பார்த்தல் வேண்டும்? என் றார்கள்.

இத்தகவலை பேராசிரியர் டாக்டர் என். சுப்ரமணியம் அவர்கள் என் வாழ்க்கை வரலாறு நூலில் (பக்கம் 83-84) எழுதியுள்ளார்!

இவர் இன்னமும் உடுமலைப் பேட்டையில் வாழ்ந்து கொண் டுள்ளார்.
தந்தை பெரியார் கூறிய கருத்து முன்னாளில் எப்படி தமிழை நடத்தினார்கள் என்று கூறியதின் உண்மையே தவிர வேறென்ன?

தமிழை நீச்சப் பாஷை என்று ஒதுக்கி வைத்து, கோயில்களில் திருவாசகத்தையோ, தேவாரத்தையோ ஓதாமல், திருப்பாவை, திருவெம்பாவைகளுக்கு இடமின்றிச் செய்து, சமஸ்கிருத மந்திரங்களில் தான்வழிபாடு, பூஜை புனஸ்காரம் நடத்த வேண்டும் என்று இன்றும் நடைமுறையில் கடைப்பிடிப்பது பொய்யா?

எந்தப் பார்ப்பனராவது - எவ்வளவு சீர்திருத்தம் - லவுகீகம் பேசினாலும்கூட, தங்கள் திருமணச் சடங்கில் தமிழை, தமிழரைப் பயன் படுத்தி நடத்திக் கொண்டதுண்டா?

கலைஞர் கருணாநிதி அவர்கள் குடும்பத் திருமணம் ஒன்றில் வாழ்த்த சோவை அழைத்தபோது, அவர் பேசி, சமஸ்கிருத சுலோகத்தோடு, அப்பேச்சை முடித்தது இக்கட்டுரையாளரால் மறுக்க முடியுமா? அந்த மனப்பான்மைக்கு என்ன அடையாளம்?

முன்பு திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்தில், தியாகய்யர் அஞ்சலியில் பாட்டுப் பாடிய தண்ட பாணி தேசிகர் சித்தி விநாயகனே என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடி மேடையை அசுத்தப்படுத்தி தீட்டாக்கி விட்டார் என்றுகூறி, அடுத்துப் பாட வந்த பார்ப்பன சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகே பாடுவேன் என்று அடம் பிடித்ததை மறுக்க முடியுமா?  இதுபற்றி குடிஅரசில் (9.2.1946) தீட்டாயிடுத்து என்று கலைஞர் எழுதியதுண்டே!

முதன்முதலாக பழைய தமிழ் ஏடுகளை - தமிழ் இலக்கியங்களைத் திரட்டியவர் உ.வே.சாமி நாதய்யர் என்பதேகூட சரியான தகவல் அல்ல.
அதற்குப் பலகாலம் முன்பே தமிழறிஞர் தாமோதரனார் இந்த அரும்பணியை முன்னோடியாக இருந்து துவக்கியவர் என்பது மறைக்கப்பட்ட வரலாறாக ஆகி விட்டதே!

குருவாக இருந்தவருக்கு மரியாதை செலுத்திய பிறகும் சாப்பாடு என்பதற்குப் பதிலாக போஜனம் என்று சொல்லப் படாதோ என்று கேட்டவர்தானே இந்த தமிழ்த் தாத்தா! புரியாதோ நோக்கு?


  -------------------------- ஊசி மிளகாய்- 20-12-2012 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை

20 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கம் பாஷாணத்தில் புழுத்த புழு! கலைஞர் சங்கநாதம்


இதனை யாராலும் அழித்திட முடியாது! முடியாது!!
பேராசிரியர் பிறந்த நாளில் கலைஞர் சங்கநாதம்

சென்னை, டிச. 20- திராவிடர் இயக்கம் பாஷாணத்தில் புழுத்த புழு என்றார் அஞ்சா நெஞ்சன் அழகிரி! அத்தகயை திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (19.12.2012) மாலை தங்க சாலை - மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு : - வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; உள்ளத்தால் ஒருவரே; மற்று உடலினால் பலராய் காண்பார்; கள்ளத்தால் நெருங்கொணாதே; என வையம் கலங்க கண்டு, துள்ளும் நாள் எந் நாளோ என்று நம்முடைய புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடியதைப் போல, அந்தப் பாட்டையும் வெல்லத்தக்க அளவிற்கு இந்தக் கூட்டத்தை நான் காணுகின்றேன்.

தமிழ் ஓவியா said...

தங்கசாலை வீதியில் இவ்வளவு பெரிய கூட்டத் தைப் பார்க்கும் பொழுது, இது பேராசிரியருடைய 91-ஆவது பிறந்தநாள் விழாவிற்காக நடைபெறு கின்ற கூட்டம் மாத்திரமல்ல; இது மாநாடு. அந்த மாமகனுக்காக நாம் நடத்துகின்ற மாநாடு என்று நானும் கருதுகின்றேன். பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உண்மைத் தமிழர்களே, உண்மைத் திராவிடர்களே நீங்களும் கருதுவீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.


தமிழ் ஓவியா said...

திராவிட இயக்க வரலாற்றில் தங்கசாலை

இந்த அரங்கிற்கு வரும்பொழுது, இந்தப் பகுதியைப் பற்றி நான் சிந்தித்தவாறு வந்தேன். திராவிட இயக்கத்தி னுடைய பழைய கால வர லாற்றில் தங்கசாலை தெருவுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. வரலாற்றுப் பகுதியிலே தங்க சாலையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. எப்படி தங்கசாலை என்று பெயர் வந்தது? என்று நான் வருகிற வழியில் கற்பனை செய்து கொண்டேன். சென்னைக்கு வந்தவர்கள் இங்கிருந்த வர்களைப் பார்த்து, ``இங்கே தங்க வசதி உண்டா? என்று கேட்டதாகவும், ``தங்க சாலை ஒன்று இருக்கிறது என்று விடை அளித்ததாகவும், அப்படியானால் நாங்களெல்லாம் ``தங்க; சாலை என்று அதை அமைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டதைப் போலவும், ``அமைத்துக் கொள்ளலாம், நிச்சயமாக என்று அனுமதித்ததைப் போலவும், அதைக் கேட்டு தங்குவதற்கு ஒரு சாலை சென்னையில் இருக்கிறதாம் வாருங்கள் எல்லோரும் என்று தமிழகத்திலே உள்ள பெருமக்கள் எல்லாம் சென் னைக்குப் படையெடுத்து வந்ததைப்போல் இன்றைக்கு இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பேராசிரியருக்கு விழா எடுத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்!

நம்முடைய அன்பும், பண்பும் மிக்க, பேராசிரியர் அவர்களுக்கு இந்த விழாவை எடுக்க வேண்டும் என்று நான் கருதிய நேரத்தில், அவர்கள் முதலிலே உடன்பட வில்லை. முதலிலே உடன்படா விட்டாலும் நான் பிடிவாதமாக மாவட்டக் கழகச் செயலாளரான பொறுப்பாளர் சேகரையும், செயலாளர் அன்பழகனையும் அழைத்து, ``நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள், அவர் வேண்டாம் என்று சொன் னாலும், நாம் நடத்துவோம் என்று சொன்ன பிறகுதான், பேரா சிரிய ரும் அதை ஏற்றுக் கொண்டு இங்கே வருகை தந்திருக்கின்றார்.

அவர் வந்து ஆற்றிய உரையில் - சிந்திய முத்துக்க ளெல்லாம் செந்தமிழ் முத்துக்கள் என்றாலும் கூட, சிந்தனை முத்துக் களாகவும் அவைகள் இருந்தன (கைதட் டல்) என்பதை நீங்கள் எல்லாம் உணருகின்றீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அரசியல் இயக்கம் மாத்திரமல்ல; சமுதாய இயக்கமும் என்பதை நம்முடைய இளவல் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள். இது அரசியல் இயக்கம் மாத்திரமல்ல; சமுதாய இயக்கமாகவும் இருக்கிற காரணத்தால்தான், சமுதாயத்திற்குத் தேவையான; தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் காட்டிய பல செய்திகளை நாம் செயலாக்கி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே வெற்றி பெற்று சட்டசபைக்கோ, பாராளுமன்றத்துக் கோ சென்றால் மாத்திரம் போதாது. அங்கே சென்று நம்முடைய கருத்துக்களை, நம்முடைய கொள்கைகளை, நாம் நாட்டிலே பரப்பி வருகின்ற லட்சியங்களையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்ற அந்த உறுதியோடுதான் நாம் பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்கின்றோம், சட்டமன்றத்திற்கும் சென்றிருக் கின்றோம்.

பெரியாருடைய கொள்கைகள்

ஆனால் இரு இடங்களிலும் பெரியாருடைய கொள்கைகளை, அண்ணாவி னுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பும் வசதியும் முழுமையாக இல்லாவிட்டாலுங்கூட, நம்மால் முடிந்த அளவிற்கு அந்த லட்சியங்களை, கொள்கைகளை பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதில் பெரும் துணையாக இருப்பவர் பேராசிரியர்!

அப்படி பரப்புவதற்கு என்னைப் பொறுத்தவரை யில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு, தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, என்னைப் பொறுத்த வரையிலே திராவிட இயக்கத்திலே பெரும் துணையாக எனக்கு இருப்பவர் நம்முடைய கழகத்தினுடைய தலைவர்களிலே ஒருவரான பெருந்தகை பேராசிரியர் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தப் பேராசிரியருக்குத்தான் இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

பேராசிரியருக்கு நான் மாலை அணிவித்தேன் என்றால், அது எனக்கு நானே சூட்டிக் கொண்ட மாலை. பேராசிரியருக்கு சால்வை அணிவித்தேன் என்றால் அது எனக்கு நானே போர்த்திக் கொண்ட சால்வை. அந்த அளவிற்கு நானும் அவரும் நெடுங்கால நண்பர்களாக, ஏறத்தாழ 1944 - 45 ஆகிய இந்த ஆண்டுகளில் இருந்து அவரும் நானும் தமிழகத்திலே, திராவிட இயக்கத்திலே ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றோம்! அப்படிப்பட்ட பெருந்தகைக்கு உங்கள் அத்தனை பேருடைய வாழ்த்துக்களையும் குவிக்கின்ற ஒரு விழாவாக இந்த விழா நடந்து இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

தற்கால அரசியல்

இந்த விழாவை நடத்துகின்ற நேரத்திலே நான் அரசியல் குறித்து தற்கால அரசியல் குறித்து சில செய்தி களைச் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்கிறது என்பதை மறக்க முடியாது. இன்றைக்கு நாடு எப்படி இருக்கிறது? இந்த நாட்டின் ஒரு பகுதியான தமிழகம் - தமிழ்மாநிலம் எந்த அளவிற்கு அவலத்தில் சிக்கி இருக் கிறது என்பதையெல்லாம் நான் பட்டியலிட விரும்பவில்லை.

ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவத்தால் அதை உணர்ந்திருக்கின்றீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்து முறை தமிழகத்தினுடைய ஆட்சிப் பொறுப்பிலே இருந்தது. அப்படி ஆட்சிப் பொறுப்பிலே இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மாற்றம் வரப் போகிறது என்ற மாய்மாலத்தை நம்பி ஏமாந்து நம்முடைய கையிலே இருந்த பொருளை வழியிலே போகின்ற திருடனிடத்திலே கொடுத்ததைப் போல், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய திராவிட இயக்கத்தினுடைய கையிலே இருந்த ஆட்சியை யாரிடத்திலோ ஒப்படைத்திருக்கிறோம்.

திராவிடம் மாயையா? என்னைப் பொறுத்தவரையில் நான் இதற்காக வேதனைப்பட வில்லை. பிறக்கும் போதே ஏதோ ஒரு பதவியிலே அமரப் போகிறோம் என்று அதற்காகப் பிறந்தவன் அல்ல. அல்லது படிக்கும்போதோ அல்லது வேலை பார்க்கும்போதோ அல்லது இந்த உலகத்திலே உற்ற நண்பர்களோடு பழகும்போதோ ஒரு பெரிய வாய்ப்பு - மாநிலத்தை ஆளுகின்ற வாய்ப்பு நமக்கு வரும் என்ற எதிர்பார்ப் போடு இதை நான் எண்ணவில்லை. ஆனால், வந்தது! அந்த வாய்ப்பை கொள்கையை வளர்ப்பதற்கு, பெரியாருடைய எண்ணங்களை, பேரறிஞர் அண்ணா வினுடைய கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்காக, செயல் படுத்துவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் அதை பயன்படுத்தினோம். அதனால்தான் நான் செய்த அந்தச் செயல்களை தங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களாக, ஒரு சாரார் கருதி நம்முடைய இனத்தையே வீழ்த்துவதற்கு - இந்த இனத்தின் காவலர்களாக இருக்கின்ற திராவிட இயக்கத்தையே வீழ்த்துவதற்கு முனைந்து அதற்கு சில விபீஷணர்களையும் துணைக்கு இன்றைக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி சென்ற விபீஷணர்கள் உட்பட அத்தனை பேர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் திராவிடம் என்பதே ஒரு மாயை, திராவிடத்தைச் சொல்லி, இல்லாத ஒன்றைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் இன்றைக்குச் சொல்வதை ஏடுகளிலே காணுகிறோம்.
ஏடுகளின் போக்கு!

நான் ஏடுகளைப் பற்றிச் சொன்ன காரணத்தால் நினைவுக்கு வந்ததைச் சொல்கிறேன். அண்மையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒரு போராட்டம் நடத்தினோம். இருண்டு கிடக்கின்ற தமிழகத்தில் ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்ற ஆவலோடு அதற்கு மக்களுடைய எழுச்சியைக் காட்ட வேண்டும், உணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு ஒரு அறப்போராட்டத்தை நடத்தினோம். அந்த அறப்போராட்டம் தமிழகத்திலே ஏறத்தாழ, 500 இடங்களிலே, பட்டிதொட்டியெல்லாம், குக்கிராமங்களில் எல்லாம், மாநகரங்களில், நகரங்களில், மாவட்டத் தலைநகரங்களில் எல்லாம் அந்தப் போராட்டம் - அறப்போராட்டம் நடைபெற்றது. எதற்காக? நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் இங்கே அழகாகக் குறிப்பிட்டார்களே, அதைப் போல ஒளி பரவுவதற்காக- ஞான ஒளி பரவுவதற்காக மாத்திரமல்ல; மக்களுக்குத் தேவையான வெளிச்சம், விளக்கு ஒளி இந்தத் தேவைக்காக நாம் நடத்திய போராட்டம் அது. ஒளி இருந்த தமிழகத்தில் இன்று நடப்பதென்ன?

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே 2 மணி நேரம்தான் மின்சாரம் இல்லை - மின் தடை. ஆனால், இந்த ஆட்சியை மாற்றினால் எப்போதும் உங்களுக்குப் பகல்தான் என்று சொன்னவர்களுடைய ஆட்சியில் 18 மணி நேரம், 20 மணி நேரம் விளக்கு இல்லை. விளக்கொளி இல்லை. வெளிச்சம் இல்லை. இருட்டிலே கிடக்கின்றோம். இந்த இருட்டு யாருக்கு லாபம், யாருக்கு ஆதாயம், கழுத்து மணியை அறுப்பவர்களுக்கு. கழுத்திலே இருக்கின்ற தாலிச் சங்கிலியை அறுப்பவர்களுக்கு, திருடுபவனுக்கு, கொள்ளையடிப் பவனுக்கு ஆதாயம். நாம் பத்திரி கையிலே பார்த்தோம். டெல்லியிலே ஒரு பெண்ணினுடைய உயிருக்கு ஆபத்து வருகின்ற அளவிற்கு பலாத்கார முயற்சியிலே ஈடுபட்டு, அதன் காரணமாக அந்தப் பெண் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறார், உயிர் ஊசலாடிக் கொண்டிருக் கிறார் என்ற செய்தி பத்திரிகையிலே - அது `இந்து ஆனாலும், `தினமணி ஆனாலும் வேறு எந்த ஏடாக இருந்தாலும் அதிலெல்லாம் பக்கம் பக்கமாக செய்திகள் வர - அதற்காக பாராளுமன்றமே ஸ்தம்பிக் கின்ற அளவிற்கு பெரிய ரகளை அங்கே நடைபெற்று இன்றளவும் அந்தக் கொடுமையை ஏன் அனுமதித் தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் காவல்துறை கைகட்டி நிற்கிறது என்ற செய்திகளை யெல்லாம் நாம் பார்க்கிறோம்.

தமிழ் ஓவியா said...

ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவு வெளிச்சம் இருந்த தமிழ்நாட்டில், ஒளி இருந்த தமிழ்நாட்டில் இன்றைக்கு இருள் கவிழ்ந்து, அந்த இருட்டை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டவர்கள், கொள்கின்றவர்கள் டெல்லியிலே ஒரே ஒரு சம்பவம். தமிழ்நாட்டிலே எத்தனை சம்பவங்கள். இந்த நாட்டை ஆளுகின்ற அம்மையார் நேற்று அறிக்கை விடுகிறார். அதிலே சொல்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டிலே பேசுகிறார். தமிழகம் இந்தியாவிலேயே அமைதியான மாநிலமாக இருக்கிறது. வேறு எங்கும் இந்த அளவு கிடையாது. இங்குதான் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்று அம்மையார் சொல்கின்றார். நாட்டை ஆளுகின்ற அம்மையார் - நம்மை ஆளுகின்ற அம்மையார் சொல்கின்றார். ஆனால், இங்கே நிலைமை என்ன? மின்சாரம் இல்லாமல், அதன் காரணமாக விவசாயம் இல்லாமல், விவசாயம் இல்லாத காரணத்தால், விவசாயிகள், ஏழை உழவர்கள் இதுவரையிலே 7 பேர் தற்கொலை செய்து கொண்டு செத்திருக்கிறார்கள்.
மின்சாரம் இல்லாமல் - தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி 7 விவசாயிகள் தற்கொலை!

நான் திருவாரூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர். என்னுடைய தொகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும், வேறு சில மாவட்டங்களிலுமாக 7 விவசாயப் பெருமக்கள் இறந்து போயிருக் கிறார்கள் தற்கொலை செய்து கொண்டு. மயிலாடுதுறையைச் சேர்ந்த பூமிநாதன், கீவளூர் ராஜாங்கம், கீழையூரைச் சேர்ந்த செல்வராஜ், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி. (பேர்தான் சக்கரவர்த்தி.) ஏழை உழவன். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரகீம், சங்கரன்கோவில் வட்டத்திலே செந்தூர் பாண்டியன், சிவகாசி அருகே பாண்டி - இப்படி 7 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக் கிறார்கள், மின்சாரம் இல்லாத காரணத்தால். நாம் அனுபவிக்கின்ற வேதனை களில் பலவற்றில் ஒன்றாக; கிடைக்க வேண்டிய தண்ணீரும் கிடைக்காமல், அதை பெற வேண்டிய முறையையும் பின்பற்றாமல், எங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் இல்லை. அதை நாங்கள் காவேரியிலிருந்து பெற வேண்டும் என்று நாம் கதறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், தண்ணீரை கொடுக்கக் கூடிய இடத்திலே இருக்கின்ற கர்நாடகத்தார், நாம் என்ன செய்யலாம் இதற்கு? தமிழ்நாட்டிலே நடைபெறுகின்ற கிளர்ச்சிகள், அவர்கள் போடுகின்ற வழக்குகளையெல்லாம் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க அங்கே இருக்கின்ற கர்நாடகத்தினுடைய முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

அந்த சர்வக் கட்சிக் கூட்டத்தில், பலருடைய கருத்துக்களையும் கேட்கிறார். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில், தமிழகத்தினுடைய தண்ணீர் தாவாவைப் பற்றி பதில் சொல்கிறார். ஆனால், இங்கே ஏறத்தாழ இரண்டாண்டு காலமாக இந்த காவேரி தண்ணீர் பிரச்சினைக்கு நாம் பேசாத கூட்டம் இல்லை. எழுதாத ஏடுகள் இல்லை. அறிக்கை விடாத நேரம் இல்லை. இவ்வளவு இருந்தும் கூட இதுவரையிலே இங்குள்ள எதிர்க்கட்சிகளை மதித்து, ஏன் தோழமைக் கட்சிகளையாவது மதித்து அவர்களையெல்லாம் அழைத்து ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத்திலே நடைபெற்றிருக்கிறதா என்றால் இல்லை. நடைபெறுகிறதே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம். நடைபெறுகிறதே காவல்துறை அதிகாரிகள் கூட்டம் என்றுதான் படம் காட்டுகிறார்களே அல்லாமல், காவேரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கர்நாடகத்தார் கூட்டுகிறார், அவர்களுடைய கருத்துக்களையெல்லாம் கேட்கிறார். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார். நாம் வதைபடுகிறோம், வாடுகிறோம், நாம் துடிக்கிறோம், துவளுகிறோம். இங்கே 7 பேர் இதுவரையிலே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். மயிலாடுதுறையில் தொடங்கி சிவகாசியிலே பாண்டி என்கின்ற விவசாயி வரையில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டு விவசாயப் பெருங்குடி மக்கள் இறந்திருக்கின்றார்கள்.

செங்கோல் வைத்திருக்கிற ஜெயலலிதாவை கம்யூனிஸ்ட்டுகளால் கேட்க முடியவில்லை!

இதிலே வேடிக்கை என்னவென்றால், வேதனையான வேடிக்கை. நாம் கண் கலங்கி காண வேண்டிய வேடிக்கை. பேசுகிறார்கள். பேசுகின்றவர்கள் வேறு யாரும் அல்ல. நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நண்பர்கள். அவர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. அதுகூட அவர்களாக சிந்தித்து போடப்பட்ட செய்தி அல்ல. யாரோ ஜூனியர் விகடன் பத்திரிகையிலே போட்டார்கள், இங்கே டெல்டா விவசாயிகள் கஷ்டப்படுகிறார்களே இதற்கு கருணாநிதி என்ன செய்தார்? என்று கேட்டிருக்கிறார்கள். கருணாநிதி யினுடைய பகுதிதான் அந்தப் பகுதி. டெல்டா பகுதி. நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால், நான் ஆளவில்லையே? என் கையிலே செங்கோல் இல்லையே? செங்கோல் என்ற பெயரால் கொடுங்கோல் வைத்திருக்கின்றவர் அம்மையார் அல்லவா? அவர் அல்லவா கவலைப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அல்லவா இதற்கு நல்ல வழி காட்டியிருக்க வேண்டும். செய்யவில்லை. அதன் விளைவாக இன்று வரையிலே 7 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள்.

என்னைக் குறை கூறும் கம்யூனிஸ்ட்கள் ஜெயலலிதாவிடம் கேட்க பயப்படுவது ஏன்?

தமிழ் ஓவியா said...

எந்த ஆட்சி வந்தால் தாங்கள் சுபீட்சமாக வாழலாம் என்று கருதி வாக்களித்தார்களோ, அந்த ஆட்சி வந்து விட்டதாகக் கருதியவர்கள் தங்களை ஏழைகளாக, எலும்பு உருவங்களாக, பட்டினி கிடப்பவர்களாக, பரிதவிக்கக் கூடிய, பசி பசி என்று கதறக் கூடியவர்களாக ஆக்கியதன் காரணமாக தங்களுடைய நிலங்களைப் பார்த்து அழுது கண்ணீர் வடித்து இந்த கண்ணீர்தான் நான் உங்களுக்கு பாய்ச்சுகின்ற தண்ணீர் என்கின்ற அளவிற்கு நிலைமை முற்றிப் போய் வேறு வழியில்லாமல் 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக் கின்றார்கள். ``என்ன செய்தார் கருணாநிதி? என்று கேட்கிறார் கள் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள். கம்யூனிஸ்ட்டுகள் என்னைக் கேட்கலாமா? ``என்ன செய்தார் ஜெயலலிதா என்று கேட்கத் தைரியமில்லை. கேட்க தைரியமில்லாத காரணத்தால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல் என்னைப் பார்த்து கேட்கிறார்கள். ``என்ன செய்தாய் நீ? என்று கேட்கிறார்கள். நான் என்ன செய்தேன் என்பதை இந்தக் கூட்டத்திலே சொல்ல விரும்புகின்றேன். 7 விவசாயக் குடும்பங்களுக்கும் நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் வீதம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நிதி வழங்குகிறேன். அந்த நிதியை எங்க ளுடைய திருவாரூர் மாவட்டச் செயலாளர் அவர்களி டத்திலே உங்களின் முன்னிலையிலே வழங்குகிறேன். ஏன் உங்கள் முன்னிலையிலே வழங்குகிறேன் என்று சொல்கிறேன் என்றால், பெயரைச் சொல்லி விட்டு நிதி வழங்காமலே ஏமாற்றி விட்டார் என்று நாளைக்கு இவர்களே சொல்வார்கள். ஏனென்றால், அவர்களைப் போல தினமலர் பத்திரிகையிலேதான் ஒன்றைப் போட்டிருக் கின்றார்கள். ``பேராசிரியர், பேராசிரியர் என்று கருணாநிதி புகழ் பாடுகிறாரே, அந்தப் பேராசிரியருக்கு இவர் 5 முறை முதலமைச்சராக இருந்தபோது என்ன பதவி கொடுத்தார்? என்று தினமலர் கேட்டிருக்கிறது, தினமலர்தான் இப்படிக் கேட்கிறது என்றால், இறந்து போன விவசாயிகளுக்கு கருணாநிதி என்ன செய்தார் என்று ஜனசக்தி வெளியிடுகிறது. தினமலருக்குத்தான் தி.மு.க. என்றால் வேப்பங்காய். ஜன சக்திக்குமா அப்படி? பாண்டியனுடைய ஜனசக்தி வேண்டு மென்றால் அப்படி இருக்கலாம். நான், மாணிக்கத்தி னுடைய ஜனசக்தியை, நான் கல்யாணசுந்தரத் தினுடைய ஜனசக்தியை எண்ணிப் பார்க்கின்றேன். அவர்கள் நடத்திய இந்தப் பத்திரிகைக்கா இந்தக் கோளாறு. நான் அவர்களுக்குச் சொல்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து இந்த 7 குடும்பங்களையும் திராவிடக் குடும்பங்கள் அவை, உழவர் குடும்பங்கள், பாட்டாளி குடும்பங்கள், அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்ட - தற்கொலையால் ஏற்பட்ட இந்த வேதனை யைத் தீர்க்க அவர்கள் மறைந்த பிறகு மிச்சமிருக்கின்றவர்கள் வாழ வழி ஏற்படுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் மூலம் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 7 குடும்பங்களுக்கும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை உங்கள் முன்னிலையிலே வழங்குகின்றேன். (தலைவர் கலைஞர் அவர்கள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனிடம் மேடையிலேயே காசோலையினை வழங்கினார்.)

மாவட்டச் செயலாளர் கலைவாணனிடம் இந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர் நாளைய தினம் திருவாரூர் சென்றவுடன் இந்த ரூபாயை அவர்களுக்கெல்லாம் வழங்கிவிட்டு, அவர்களிட மிருந்து ரசீது பெற்று அனுப்புவார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னிலையில் வழங்குகிறேன்.

தமிழ் ஓவியா said...

நாமெல்லாம் கொண்டிருக்கின்ற கருத்து நம்மைப் போல பேராசிரியரை நேசித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்ட கருத்து என்ன என்பதை இந்தப் பிறந்த நாள் விழாவில் நான் குறிப்பிட்டு படிக்க விரும்புகின்றேன்.

அண்ணாவும் பேராசிரியரும் 1964ஆம் ஆண்டு மத்திய சிறைச்சாலையிலே இருந்தார்கள். அப்பொழுது சிறைக்குறிப்புகள் எழுதுகின்ற வழக்கத்தை அண்ணா அவர்கள் மேற்கொண்டிருந்தார். சிறைச்சாலை செய்திகளை குறிப்பு என்கின்ற பெயரால் ஒரு நோட்டுப் புத்தகத்திலே எழுதுகின்ற வழக்கத்தை அண்ணா அவர்கள் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் எழுதுகிறார், 2.6.1964 அன்று அண்ணா அவர்கள் எழுதுகிறார்.

நம்முடைய பேராசிரியரைப் பற்றி அண்ணா வழங்கிய படப்பிடிப்பு!

``இன்று மாலை 6 மணிக்கு அன்பழகன் சிறையிலே இருந்து விடுதலையானார். அவருடன் குழுவினரும் விடுதலையானார்கள். இவ்வளவு நாளும் மெத்தவும் எனக்கு உதவியாக இருந்து வந்த அன்பழகன் விடை பெற்றுச் சென்றபோது, இருவருமே ஒரு கணம் கவலை கொண்டோம். பிறகோ இரண்டு வாரத்திற்குள் நானும் விடு தலை பெறப்போகும் நினைவை தருவித்துக்கொண்டோம். அன்பழகன் குடும்பமே கழகத்துக்கு சிதம்பரத்தில் ஆண்டு பலவற்றுக்கு முன்பிருந்தே அணிகலனாய் திகழ்ந்து வருகின்ற குடும்பமாகும். அவருடைய தந்தையார் என்னை வரவழைத்து, சிதம்பரத்திலே கூட்டம் நடத்தும் அந்த நாட்களில் ஒல்லியான இந்த உருவம் அன்பழகன் ஓடியாடி வேலை செய்யக் கண்டேன். ஆண்டு பல சென்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அன்பழகன் பயிலக் கண்டேன். அப்போதே ஆர்வம், அஞ்சா நெஞ்சம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று கொள்ளாப் பண்பு எல் லாம் அன்பழகனிடத்திலே உண்டு. கழகத் தொண்டு அப்போதே அவ ருக்கு கற்கண்டு. இருப்பைக் கரைத்து இன்ப வாழ்வு நடத்தும் குடும்பம் அல்ல. எளிய வாழ்க்கை என்றாலும், எவரிடமும் இச்சகம் பேசிடவோ நச்சரித்து வாழ்ந்திடவோ முனைந்ததில்லை. எல்லாப் பிள்ளை களும் கற்றறிவாளர்கள் ஆனார்கள். மூவர் ஆசிரியர் தொழிலை மேற்கொண்டனர். அன்பழகன் பச்சையப் பன் கல்லூரியில் கழகக் கொள்கைகளைக் கலந்து, தமிழ்த் தேன் குழைத்து மாணவர்களுக்குத் தந்து வந்தார். அதனால் கிடைத்த தோழர்கள் பலர் நமக்கு. என் முழு நேரமும் கழகத்திற்கே ஆற்றப் போகிறேன் என்று அவர் என்னிடம் கூறியபோதெல்லாம், தமிழ்ப் பேராசிரியர் என்ற அந்த நிலையை இழந்து விடக் கூடாது என்று கூறி தடுத்து விட்டேன். பிறகு அவர் கல்லூரிப் பணியை விட்டு வெளியே வர இறுதியாக இசைவளித்தேன். இன்று அவர் எனக்கு உற்ற நண்பர்.

தமிழ் ஓவியா said...

நான் ஓய்வை விரும்பும் போதெல்லாம், எனக்கு சென்னையிலே இல்லம் - இவர் இல்லம். அன்பழகன் பேச்சில் கனிவு இருக்கும். குழைவு இருக்காது. தெளிவு இருக்கும். நெளிவு எழாது.

என்று நம்முடைய பேராசிரியரைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய படப் பிடிப்பாகும். அப்படிப்பட்ட பேராசிரியர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிலே நான் கலந்து கொண்டு பேசுகின்ற இந்த நேரத்தில், என்னைப் போலவே அவரும், தமிழகத் தினுடைய நிலையை, தமிழகத்தினுடைய ஆட்சிக் கொடுமையை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. அதனால்தான் இங்கே பேசும்போது, அதை சூசகமாகக் குறிப்பிட்டார். அவருக்கு முன்பு உரையாற்றிய நண்பர்களும், நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், தம்பி சுப.வீரபாண்டியன் அவர்களும், நம்முடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய தலைவர் காதர் மொய்தீன் அவர்களும் இன்றைக்கு அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

திராவிடர் இயக்கத்தை அழித்துவிட முயற்சிப்போருக்கு இடம் தரக்கூடாது!

ஒளி தேவை என்றால், திராவிடர் இயக்கம் வாழ வேண்டும், வலிமை பெற வேண்டும். திராவிடர் இயக்கத்தை எல்லோரும் வளர்க்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் அந்தத் திராவிடர் இயக் கத்தை வீழ்த்த வேண்டும் என்று ஒரு முயற்சி தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதிலே வேடிக்கை என்னவென்றால் திராவிட இயக்கத்தின் கிளைகளாகத் தோன்றிய - நாங்கள் தான் திராவிட இயக்கத்தின் உண்மையான அங்கங்கள் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றியவர்கள் - அதிலே பிரதானமாகச் செயல்படுகிறார்கள். நான் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இளம் சிப்பாய்கள்

யார் எதிர்த்தாலும், எப்படை கொண்டு மோதினாலும், எத்தனை சேனைகள் வந்தாலும் நான் நம்பியிருப்பதெல்லாம் என் எதிரே அமர்ந்திருக்கின்ற இளஞ் சிப்பாய்களாம், திராவிட உணர்வு கொண்ட உங்களைத்தான் நான் நம்பியிருக் கிறேன். இந்த முறை நாம் கோட்டை விட்டோமேயானால், கோட்டையை விட்டவர் களாகவே ஆவோம், அதை மறந்து விடக் கூடாது. தேர்தல் பிரச்சாரம் அல்ல இது. தேர்தலுக்கு முன்பு எழுதப்படுகின்ற முன்னுரை இது. இந்த முன்னுரையில் நான் குறிப்பிடுவது, திராவிடத்தை, திராவிட முன் னேற்றக் கழகத்தை, தமிழர் இன உணர்வை அழித்து ஒழிக்க வேண்டுமென்று இன்றையதினம் நடை பெறுகின்ற முயற்சிகளுக்கெல்லாம் நாம் இடம் தரக் கூடாது. நேற்றையதினம் அவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தினோம். ஆனால் தமிழகம் முழுவதும் எண்ணிறந்த மக்கள் அந்தப் போராட்டத்தைக் கண்டு மெய் சிலிர்த்தார்கள். அந்தப் போராட்டம் தேவை என்பதை உணர்ந்து கலந்து கொண் டார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, 500 இடங்களில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தை சென்னையிலே உள்ள ஒரு சில பத்திரிகைகளைத் தவிர விடுதலை, முரசொலி, தினகரன், தமிழ் முரசு ஆகிய இந்தப் பத்திரி கைகளைத் தவிர வேறு பத்திரிகைகளில் விளக்கமாக வெளியிட்டிருக் கிறார்களா? பத்திரிகை என்பது உலகச் செய்திகளை, நாட்டுச் செய்தி களை, சமுதாயச் செய்திகளை, அரசியல் செய்திகளை, கட்சிச் செய்திகளை வெளியிடக் கடமைப்பட்ட நடுநிலை வகிக்க வேண்டியவைக ளாகும். வருமானமா? தன்மானமா? ஆனால் இன்றையதினம் சில பத்திரிகைகள் வருமானத்தை மாத்திரம் மனதிலே கொண்டு, தமிழ் மானத்தை விற்பதற்குத் தயாராக இருக்கின்ற நிலையிலே உள்ளன. நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன். தமிழ்நாட்டைக் கெடுக்காதீர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள். நீங்கள் நடுநிலையாளர்கள் என்றால் எல்லா செய்தி களையும் வெளியிடுங்கள். காங்கிரஸ் செய்திகளையும் வெளி யிடுங்கள், கம்யூனிஸ்ட் செய்திகளையும் வெளியிடுங் கள், அ.தி.மு.க. செய்திகளையும் வெளியிடுங் கள், தி.மு.கழகச் செய்திகளையும் வெளியிடுங்கள். நாங்கள் தி.மு.க. செய்திகளை வெளியிட மாட்டோம், அதற்கு இடம் தர மாட்டோம், உங்களுடைய பேச்சுக்களுக்கு நாங்கள் இடம் தர மாட்டோம் என்றால், அய்யோ நீங்கள் இடம் தராவிட்டால், நீங்கள்

தமிழ் ஓவியா said...

எங்களை விளம்பரம் செய்யாவிட்டால் நாங்கள் எங்கே போவது என்கின்ற கண்ணீரும் கம்பலை யுமாக இங்கே கருணாநிதி கதறவில்லை. (கைதட்டல்) நான் சொல்வது என்றால், அப்படியே நீங்கள் செய்தால் கூட எங்களுக்கு என்ன சுவர்களா இல்லை, அதிலே எழுத கையிலே கரித்துண்டுகளா இல்லை. அதிலே எழுதி எங்களுடைய நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்வோம். எங்களுடைய திட்டங்களை அதன் மூலம் வெளியிடுவோம். பத்திரிகைகள்தான் எங்களுடைய மூல பலம் என்று நாங்கள் எண்ணவில்லை. எங்களுக்கு மூல பலம் இருக்கிறதோ இல்லையோ, மூளை பலம் இருக்கின்ற காரணத்தால் (கைதட்டல்) எங்களால் அதைச் சாதிக்க முடியும்.

பாஷாணத்தில் புழுத்த புழு

பத்திரிகைகளை மடக்கிப் போட்டு விட்டால், 5 கோடி 6 கோடி என்று சொல்லி எதிர்க்கட்சிகளிலே உள்ளவர்களை யெல்லாம் விலைக்கு வாங்கி விட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விடாது. திராவிடர் இயக்கம் வேரற்றுப் போய் விடாது. திராவிடர் இயக்கம் அடிக்கடி மறைந்த அண்ணன் அழகிரிசாமி சொல்வதைப் போல இது பாஷாணத் திலே புழுத்த புழு - ஆகவே இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. நாங்கள் அழிந்தது போலத் தெரிந்தாலும் மீண்டும் வளருவோம், வளர்ந்து கொண்டே இருப்போம். ஏறத்தாழ நுறு ஆண்டு களுக்கு முன்பு திராவிடச் சங்கம் என்று உதயமான இந்த இயக்கம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகமாக ஆல் போல தழைத்து அருகு போல் வேரோடு, அரசும் அமைத்து அதன் மூலமாக பல அரிய திட்டங்களையெல்லாம் அறிவார்ந்த திட்டங்களை யெல்லாம் நாட்டுக்குத் தந்திருக்கிறோம். ஒரு ஆட்சி மாறி இன்னொரு ஆட்சி வரும்போது, ஏற்கனவே இருந்த ஆட்சியை விட மேலும் என்ன விரிவாக செய்யலாம் என்று யோசிப்பதுதான் ஜனநாயகம். பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்திலே மதிய உணவைக் கொண்டு வந்தார். மதிய உணவைக் கொண்டு வந்த காமராஜர் மறைந்த பிறகு, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், காமராஜர் கொண்டு வந்த திட்டமாயிற்றே என்பதற்காக அதை அழித்து விட வில்லை. அதை அவர் சத்துணவு திட்டமாக மாற்றினார்.

தமிழ் ஓவியா said...

அதற்குப் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டமாயிற்றே என்பதற்காக, சத்துணவு திட்டத்தை அழித்து விட வில்லை. முட்டை வழங்கினோம். முதலிலே வாரத்திற்கு ஒரு முட்டை என்று ஆரம்பித்து, பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை என்று மதிய உணவுக்கு பிள்ளைகளுக்குத் தந்தோம். இது தான் ஒரு அரசாங்கம் மாறி இன்னொரு அரசாங்கம் வரும்போது செய்ய வேண்டிய காரியம். ஆனால் இன்றைக்கு ஆளுகிறவர்களோ, எந்தெந்த திட்டத்தைக் கருணாநிதி கொண்டு வந்தார், அதையெல்லாம் ஒழித்தே தீருவேன், செம்மொழியா? கிடையாது. அதற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது என்று செம்மொழி பூங்காவா கிடையாது என்று அதை அழித்து விட முயலுகிறார்களே, அதைப் போல ஒரு அரசு இருக்கக் கூடாது. அது ஜனநாயகம் அல்ல. அது கடைந்தெடுத்த சர்வாதிகாரம் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இன்றைக்கு இருக்கின்ற கொடுமையான இந்த ஆட்சியை அகற்றுவதும் நம் இயக்கம்தான்!

நான் செம்மொழியை - அல்லது சட்டமன்ற அலுவலகக் கட்டிடத்தை மாற்றுவதற்காக கவலைப் படவில்லை. சட்டமன்றக் கட்டிடத்தை நீங்கள் மாற்றலாம், ஆனால் சட்டமன்றத்திற்கு உறுப்பினர் களைத் தேர்ந்தெடுத்த மக்கள் இருக்கிறார்களே, அவர்களையெல்லாம் மாற்ற முடியாது. அவர்கள் நாளைக்கு திருப்பிப் போடுவார்கள். நாளைக்கு மாற்றத்தைக் கொண்டு வருவார்கள். அந்த மாற்றத்தைக் கொண்டு வர மக்கள் தயாராக இருக் கிறார்கள். அந்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் ராஜராஜ சோழன், கரிகால் பெருவளத்தான், சேரன் செங்குட்டுவன் என்றெல்லாம் சேர, சோழ, பாண்டியர்களுடைய வரலாற்றை உருவாக்கிய பரம்பரை இந்தப் பரம்பரை. இந்தப் பரம்பரையை நீங்கள் யாரையோ வைத்து - எழுத்தாணியைக் கொண்டு அழித்து விடலாமென்று கருதினால் அவர்கள் நிச்சயமாகத் தோற்றுத் தான் போவார்கள்.

தி.மு.க. வெறும் அரசியல் இயக்கமல்ல சமுதாய இயக்கம்! தி.மு. கழகம் அரசியல் இயக்கம் மாத்திரமல்ல, அது சமுதாய இயக்கம் என்பதை எனக்கு முன்னால் இங்கே பேசிய தமிழர் தலைவர் சுட்டிக்காட்டினார். அந்தச் சமுதாய இயக்கம், இந்தச் சமுதாயத்திற்குப் பாடுபடுகின்ற இயக்கம். திராவிட சமுதாயத்திற்காகப் பாடுபடுகின்ற இயக்கம். திராவிட சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்கின்ற இயக்கம். திராவிடச் சமுதாயத்திற்கு பல வெற்றிகளை ஈட்டித் தர வேண்டிய இயக்கம். அப்படிப்பட்ட வெற்றி களில் ஒன்றாக - இன்றைக்கு இருக்கின்ற கொடு மையான ஆட்சியை, இருண்ட ஆட்சியை அகற்றுகின்ற இயக்கமும் இந்த இயக்கம் தான். அகற்றித் தீருவோம் என்ற அந்த உறுதியை இந்த விழாவிலே நான் எடுத்துச் சொல்லி, பேராசிரியப் பெருந்தகையின் விழாவிலே அவருடைய உறுதியின் மீது நான் ஆணை யிட்டு, அவர்கள் கொண்டிருக்கின்ற நட்பின் மீது நான் ஆணையிட்டு நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து உங்களுக்காகப் பாடுபடுவோம், திராவிடச் சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம் என்பதை பெரியோர்கள் நிறைந்துள்ள இந்த அவையிலே நான் ஒரு உறுதியாக எடுத்துக் கூறி விடைபெறுகிறேன். - இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடத் தேசியம்


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வடசென்னையில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.

திராவிடர் இயக்கத்தில் நீண்ட காலம் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவருக்கு இத்தகு விழா எடுத்தது சாலப் பொருத்தமே!

இந்த விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் சரி, பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களும் சரி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் சரி பேசிய உரையின் மய்ய நீரோட்டம் திராவிடர் இயக்கத்தைப் பற்றியதேயாகும்.

ஏதோ வெறும் பாராட்டு விழா என்றளவில் அமைந்திடாமல், திராவிடர் இயக்கத்தில் மூத்த தலைவராக இருக்கக் கூடிய ஒருவருக்கு எடுக்கப்பட்ட விழா - கொள்கையை மய்யப் புள்ளியாக வைத்து கருத்துக்கள் பரிமாறப் பட்டது வரவேற்கத்தக்கதே! அதுவும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் கிளப்பப்பட்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், மூத்த திராவிடர் இயக்கத் தலைவருக்காக நடத்தப்படும் விழாவில் அதுகுறித்த கருத்தினைப் பட்டாங்கமாகத் தெரிவிப்பதுதான் சரியானது. அந்தச் சரியான கடமையை நேற்றைய விழா ஆற்றியிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

திடீரென்று இந்தச் சர்ச்சையை ஏற்படுத்தி யவர்களுக்கு ஏதோ ஓர் உள் நோக்கம் இருக் கிறது. ஆரியர் - திராவிடர் என்பது எல்லாம் வெறும் கட்டுக் கதை, வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள்தான் கூறி வந்தனர்.

பார்ப்பனர்கள் கூறி வந்த இந்தக் கருத் தினைத்தான் தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொண் டவர்கள் கடன் வாங்கிக் கொண்டுள்ளனர்.

உண்மை என்னவென்றால் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே ஆரியர் - திராவிடர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

திராவிடரா - தமிழரா என்ற வார்த்தை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் தமிழ்த் தேசியத்தில் பார்ப்பனர்கள் பற்றிய அவர்களின் புரிதல் என்ன என்பது தான் முக்கியம்.

பார்ப்பனர்களைத் தமிழர்களின் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இந்த இனத்துக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டனர்.

இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர் களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான திராவிட இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

திராவிடர் இயக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை முன்வைத்து எதிர்த்துப் போராடியதன் விளை வாகத்தான் பார்ப்பனர் அல்லாதார்களுக்கு சிவில் உரிமை, கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்தன.

சமூக நீதி என்னும் அருட்கொடையைப் பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைக்கச் செய்தது திராவிடர் இயக்கமே.

இதனை மறந்து விட்டு, தமிழ்த்தேசியம் என்ற பெயரால் பார்ப்பனர்களை வாரி அணைத்துக் கொள்ளத் துடிப்பது சமூக நீதிக்கு வெட்டப்படும் ஆழமான குழியாகும்.

தமிழ்த் தேசியவாதிகளைப் பார்ப்பன ஊடகங்கள் தாங்கிப் பிடிப்பதற்கே காரணம் - இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி, தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் என்கிற அமைப்பை அரசியல் ரீதியாக உருவாக்கத் துடிப்பவரும் ஒரு தமிழ்த் தேசியவாதியே! தாழ்த்தப்பட்டவர் களை விலக்கி, பார்ப்பனர்களை அரவணைத் துக் கொள்வதுதான் தமிழ்த் தேசியமா? இந்த ஆபத்தைப் புரிந்து கொள்வீர்!20-12-2012

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷை களையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


பூமி நிச்சயம் அழியப் போவதில்லை: வெறும் புரளியே!


பூமி நிச்சயம் அழியப் போவதில்லை. உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை.

பூமி அழியப் போகிறது என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆதரவாகக் கூறுகின்ற ஆதாரங் களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளப்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் கோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்கள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.

ஆனால் பூமி அழியப் போவதாக இணையதளத்தில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இணையதளத்தில் வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.

உலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் தள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.

மாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ளன. பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒன்றுமில்லை.

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம் முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது. எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.

தங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன் தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர் சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அடிபணிந்து நடக்கும்படி செய்து வந்தனர். மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது.

இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய கண்டுபிடிப்பு அப்படிப்பட்டதே. உலகம் எப்படி அழியப் போகிறதாம்? நிபிரு என்ற ஒரு கிரகம் பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது. எனவே பயம் வேண்டாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


நிலவுடன் மோதும் நாசா


நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது. நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது.

எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஓர் ஆண்டாக நிலவை சுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் 17.12.2012 அன்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது.

அப்பல்லோ 17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு செயற்கைக்கோள்களை நாசா நிறுவனம் நிலவில் மோத வைத்திருக்கிறது. இந்த இரண்டு செயற்கைக் கோள்களிலும், மிக சக்திவாய்ந்த புகைப்படக்கருவிகள் மற்றும் ஈர்ப்பு விசையை அளக்கும் ஈர்ப்புவிசை அளவைமானிகள் பொருத்தப் பட்டிருந்தன.

எனவே இந்த இரண்டு செயற்கைக்கோள்களும், கடந்த ஓர் ஆண்டாக நிலவை சுற்றி பயணம் செய்யும்போது இந்த புகைப்படக்கருவிகளும், ஈர்ப்புவிசை அளவைமானிகளும் தொடர்ந்து இயங்கின. இதன் விளைவாக, நிலவின் ஒளிப்படங்களும், நிலவின் பல்வேறுபகுதியின் ஈர்ப்புவிசையும் தொடர்ந்து நாசா விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டன.

இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்கள், புகைப்படங்கள், எல்லாமே இதுவரை நிலவு குறித்து கிடைத்திருக்கும் தகவல்களிலேயே மிகத்துல்லியமான வையாக இருப்பதால் நிலவின் தோற்றம் மிகத்தெளிவாக தெரிவதாக நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


புதன் கிரகத்தில் பனிக் கட்டிகள்!


புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்ற மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே பனிக் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும்.

சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. புதனில் வெயில் பொசுக்கி எடுக்க இது ஒன்றே போதும். தவிர, அந்த கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம். இரவு என்பது சுமார் மூன்று மாதம். பகலாக உள்ள பகுதியில் வெயில் 427 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தின் வானில் 11 சூரியன் பிரகாசித்தால் எப்படி? அந்த அளவு வெயில்.

இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரி. புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம் என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் இல்லை. புதன் பொசுங்கிப் போன கிரகம்.

ஆனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியில் தண்ணீரானது பனிக்கட்டி வடிவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ உறைந்த பனிக்கட்டி வடிவில் இருப்பதாக ராடார் மூலம் கண்டறியப்பட்டிருந்தது என்றாலும் பனிக்கட்டி வடிவில் இருப்பது தண்ணீர் தானா என்பது நிச்சயமாகத் தெரிய வரவில்லை. ஏனெனில் வேறு வகை வாயுக்களும் உறை பனி வடிவில் இருக்க முடியும்.

பூமியில் வட தென் துருவங்களில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்கள் உள்ளன. குளிர் காலத்தில் ரஷ்யா, சுவீடன்,போன்ற குளிர்ப் பிரதேசங்களில் கடும் குளிர் வீசும் போது விழும் பனி உறைபனியாக மாறுவதுண்டு. அதாவது பூமியில் உறைபனிக் கட்டிகள் பூமியில் தோன்றுபவை.

மாறாக புதன் கிரகத்தில் வட துருவப் பகுதியில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை பனிக்கட்டிகள் வெளியிலிருந்து இறக்குமதிஆனவை. அதாவது வால் நட்சத்திரங்கள் கொண்டு வந்து சேர்த்தவை. வால் நட்சத்திரங்களைப் பனிக்கட்டி உருண்டைகள் என்றும் கூறலாம்.

அந்த பனிக்கட்டிகள் நீர் உறைந்ததால் ஏற்பட்டவை. பல சமயங்களிலும் வால் நட்சத்திரங்கள் கிரகங்களில் வந்து விழுவது உண்டு. பூமியில் உள்ள நீரில் கணிசமான பகுதி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த வால் நட்சத்திரங்கள் மூலம் கிடைத்ததாக ஒரு கருத்து உண்டு

தமிழ் ஓவியா said...

பேராசிரியரிடம் நம் இளைஞர்கள் பகுத்தறிவு பாடம் படிக்க வேண்டும்
தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்

சென்னை, டிச. 20- முக்கால் நூற்றாண்டை, பொது வாழ்க்கைக்காக கழித்தவர் பேராசிரியர். அவரிடம் நம் இளைஞர் கள் பகுத்தறிவுப் பாடம் படிக்க வேண்டும் என் றும், கலைஞரும் - பேரா சிரியரும் ஒரு நாணயத் தின் இரு பக்கங்களாக திகழ்கிறார்கள் என்று தி.மு.க. பொதுச் செயலா ளர் பேராசிரியர் க.அன் பழகன் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் தமிழர் தலை வர் எழுச்சியுரையாற்றி னார்.

சென்னை தங்கசாலை - மணிக்கூண்டு அருகில் நேற்று (19.12.2012) மாலை, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்க ளின் 91ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் தி.மு.க. வடசென்னை, தென் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

இவ்விழாவில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் பங்கேற்று பேராசிரியர் க.அன்பழ கன் அவர்களை வாழ்த் திப் பேசுகையில்:-

பேராசிரியர் பெருந்த கையின் பிறந்த நாள் விழா மிகுந்த எழுச்சி யோடு நடைபெறும் இன மானத் திருவிழாவாகும் இது. அவரை வாழ்த்த வயது தேவையில்லை, மனம்தான் தேவை யாரும் யாரையும் வாழ்த்தலாம்.

தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் தான். அவர் உருவாக்கிய இரண்டாம் பேராசிரியர் இவர்தான். பேராசிரியர் என்றால் இவர் ஒருவர்தான். இவரி டம் பல பேராசிரியர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் திரா விடர் இயக்கம்தான். பிரிக்க முடியாத ஒரு நாணயத்தின் இரு பக் கங்கள் போல கலைஞ ரும் - பேராசிரியரும் இருக்கிறார்கள். இந்த வயதிலும் கலைஞரும் , பேராசிரியரும் போராட்ட களத்தில் பங்கேற்கிறார் கள் என்றால் அது எவ் வளவு சிறப்பு வாய்ந்தது.

பேராசிரியர் அவர் கள் எங்கு சென்றாலும் பெரியார் - அண்ணா, கலைஞர் ஆகியோர் குறித்தும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை கள் குறித்தும் பேசுவார். அந்த இடம் கொள்கைத் திருவிழாவாக இருக் கின்ற இடமாக இருக் கும். எனவே பேராசிரி யரிடம் நம் இளைஞர் கள் பகுத்தறிவு கொள்கை பாடம் படிக்க வேண் டும்.

முக்கால் நூற்றாண்டை பொது வாழ்க்கையில் கழித்தவர் பேராசிரியர். பதவி அவருக்கு மேல் துண்டு, கொள்கைதான் வேட்டி என சொல்பவர் அவர். இந்த இனத்தின் மீட்சிக்கு வழிகாட்டுப வர்களாக கலைஞரும், பேராசிரியரும் இருக் கிறார்கள். புத்தர் கொள் கையை முழுமையாக கடைப்பிடித்தவர் பேரா சிரியர்.

இன்றைக்கு திரா விடர் இயக்கம் வளர்ந்த விதத்தை இளைஞர்கள் அரிமா நோக்குடன் பார்க்க வேண்டும். அந்த காலத்தில் எங்களைப் போன்ற மாணவர்கள் தான் பேராசிரியரையும், கலைஞரையும் வசதி வாய்ப்பற்ற நிலையிலும் அழைத்து இயக்க வளர்ச் சிக்காகவும், பகுத்தறிவு பிரச்சாரத்திற்காகவும் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம்.

அன்றைய காலகட்டத்தில் பேராசிரியர் மேடையில் என்ன பேசினாரோ அதையேதான் இன்றும் அனைத்து மேடையிலும் சுயமரியாதை கொள்கைகளை பேசி வருகிறார். எனவே திராவிடர் இயக்கம் அடைய வேண்டிய லட்சியம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

அதை அடைய கலைஞரும் பேராசிரியரும் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

உலகம் அழியப் போகிறதா?
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அறிவியல் விளக்கவுரை

திருச்சி, டிச.20- மாயன் காலண்டர் டிசம்பர் 21 ஆம் தேதியுடன் உல கம் அழியப் போகிறது என்ற மூடத்தனத்தைப் பரப்பி வரு கிறது. இந்த மூடத்தனத்தை விளக்கி திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் அறிவியல் விளக்கவுரை நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் அமெரிக்கா (சிகாகோ) டாக்டர் சோம. இளங்கோவன் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு அறிவியல் ரீதியாக விளக்கவுரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகை யில்: உலகத்தில் அறிவியல் சார்ந்த பார்வை, நான் அறிந்த பார்வையில் பெரியார் கல்வி வளாகத்தைவிட வேறு எங்கும் பார்த்ததில்லை. வேறு எந்த கல்வி நிறுவனங்களும் இதை செய்யவில்லை.

உலகம் அழியுது என ஒரு காலண்டரில் பொய் யாக பரப்பப்பட்டுள்ள ஒரு செய்தி மிக மூடத்தனமாது. உலகம் அழியாது இன்னும் பல கோடி ஆண்டுகள் இருக் கும். நீங்கள் எல்லாம் வாழ் வீர்கள்.

மனிதன் காலத்தை புரிந்து கொள்ளத்தான் நாள் காட்டி. இன்றைக்கு மிக துல்லி யமாக கணக்கிடக் கூடிய வசதி கள் வந்துவிட்டன. மனிதர்கள் அடிப்படையில் பெரியாரியல் வழியில் நடப்பவர்கள்தான். ஆனால் அதையும் மீறி மூடத் தனத்தை நம்புகிறவர்கள்தான் இதுபோன்ற பொய்ப் பிரச் சாரத்தையும் நம்புகிறார்கள்.

அறிவியல் ஆசிரியராக, பேராசிரியராக, விஞ்ஞானியாக கூட இருப்பார்கள். ஆனால் அவர்கள் அறிவியல் பார்வை யோடு இருக்க மாட்டார்கள். இந்த பெரியார் கல்வி வளாகம் என்றைக்கும் அறிவியல் பார் வையோடுதான் இருக்கிறது. நிறைய மாணவர்கள் அறிவியல் சார்ந்த விஞ்ஞானிகளாக இந்த வளாகத்திலிருந்து வரவேண்டும்.

பொய்ப்பிரச்சாரத்தையும், மூடத்தனத்தையும் முறியடிக்க வேண்டும். அந்த பணியை இந்த வளாகம் சிறப்பாக செய்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப் போம்! பெரியார் நெறியை பின் பற்றுவோம்.

- இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச் சிக்கு மருந்தியல் கல்லூரி தாளா ளர் ஞான. செபஸ்தியான் முன் னிலை வகித்தார். கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் ப.சுப்பிரமணியன் நிகழ்ச் சியை ஒருங்கிணைத்து வழங் கினார்.

இதில் கல்வி வளாகத் திலுள்ள அனைத்து நிறுவனங் களின் தலைமையாசிரியைகள், ஆசிரியர், ஆசிரியைகள், ஊழி யர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Hari said...

Karunanidhi cm aaga irundhapodhum cho avargal idhe ponru dhan ezhudhinar. Avar yarukum epodhum bayandhadhu illai. Neengal brahmanargal meedhu vishatthai kakkuvadharkaga unmaiyai maraika vendam. Pazhaiya thuglak patrikaiyai edutthu parungal. Avar than manadhil paduvadhai epodhum velipadayaga solvar. Periyar hindu kalaiyum brahmanargalaiyum kanditthu irukirar. Adhe samayam avar yarukum bayapadamal muslim galin moodanambikaiyayum thavarugalaiyum kristhuvargalin moodanambikaiyayum thavarugalaiyum bayapadamal solliullar. neengal periyar in thondan enru peetri kondu irukkinreergal. Avar pol ungaluku muslim galai patriyo kristuvargalai patriyo avargalin thavarugalai solla dhairiyamunda. Ilichavayan brahmanan enru periya veeran enru ninaithu kondu ipadi blog il ezhudhuvadhanal enna prayojanam. Periyar ponru dhairiyam ungalidam unda.? Matra madhatthai patri ungalal vai thirakka mudiyuma?

தமிழ் ஓவியா said...

பெரியார் திடலில்...


வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் அருகில் ரண்டால்ஸ் ரோட்டில் உள்ள பெரியார் திடலில், பெரியார் ஈ.வெ.ரா. அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள் - காலை 9 மணி. சிங்கம் உலாவிய குகை ஒன்றைப் பார்ப்பதுபோன்ற உணர்ச்சி ஏற்படுகிறது...
திடலில் கூட்டங்கள் நடக்கும் கொட்டகைக்கு வலதுபுற மூலையில் பெரியார் நினைவுச் சின்னம் இருக்கிறது. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக்கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடைபோல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந்தது. 19-ம் தேதி தி.நகரில் கடைசியாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.
பேச்சின் இடையில் திடீரென்று அவர், ''ஐயோ... அம்மா...'' என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு ''என்ன... என்ன?'' என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித்துக்கொண்டு நீண்ட நேரம் பேசினார்.

''பங்களா வேண்டாம்!''
பெரியார், ஹெச்.டி.ராஜா, ஜி.டி.நாயுடு மூவரும் சேர்ந்து வாங்கிப் பகிர்ந்துகொண்ட இடத்தில் பெரியார் திடல் உருவானது. 'விடுதலை’ அலுவலகம் அங்கேதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியிலேயே பெரியார் இல்லம் இருக்கிறது. திடலில் நுழைந்ததும் கட்டிலில் பெரியார் அமர்ந்திருக்கும் காட்சிதான் முதலில் கண்ணில் படும்.
சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியாருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்குவதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது.
பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். ''இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு?'' என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.

பல் கிடையாது...
பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7-30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார். கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு, சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி, மலைப்பழம் சாப்பிடுவார். பழங்களில் மலைப்பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறைவான சோறுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது. ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.
சரியாக 2.30 மணிக்கு 'அம்மா’ என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவது உண்டு. ஒரு வேளைதான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடுவார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வரவில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.
பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடுவதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக்கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.

தமிழ் ஓவியா said...

கடைசி நாட்கள்...
டிசம்பர் 21-ம் தேதி வட ஆற்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால், 20-ம் தேதி பிற்பகல், ஹெர்னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந்தைகளைப் போலப் பயம். ''பார்த்துக் குத்துங்க...'' என்று சொல்வார். சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள், அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசாரித்துஇருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே, 21-ம் தேதி பிற்பகல் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.
வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறார் டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றா கத் தூங்கியிருக்கிறார். மறுநாள் 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித்திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு 'வீரமணி’ என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயு வினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலிசெய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங்கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக்கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.
23-ம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் தூக்க நிலையில் இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ் கொடுத்தபோது, 'என்ன அய்யா, வாயில ஊத்தணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன்’ என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக்கொண்டார். 'எதையாவது சாப்பிட்டால் தாடியை அழுத்தமாகத் துடைத்துக்கொள்வதுபோல அப்போதும் துடைத்துக்கொண்டார்’ என்றார் வீரமணி.
23-ம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரியாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால், பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸிஜன் குழாயைப் பொருத்தினார்கள்.
24-ம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. 'பல்ஸ்’ குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7-10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன்றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரியாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.
''யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். பின்னர், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புடவையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடைவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக்கொண்டார். எல்லோ ரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலி யையும் கொண்டுவரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்ந்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்.''
உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச்சியைக் கண்கள் கலங்கக் கூறினார் விடுதலை வீரமணி.
- ராவ்