Search This Blog

31.12.12

நாஸ்திகமும் சமதர்மமும்


என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.

 நாஸ்திகத்திற்குப் பயந்த வனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.

பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாபிரியர்கள் சொல்லித்திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது.

கிறிஸ்துவையும், முகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்  காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானியஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக் கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத் தந்தான் காரணம்.

ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்தவையென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப் பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகி யவைகளின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். 

ஆகவே நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும்  அல்லது கடவுள் தனது அவதாரங் களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப் படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட் டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப் பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக்கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன் மையாலோ ஏற்பட்டவை என்று சொல் லப்படு கையில், அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லு பவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப் பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்த வனேயாகின்றான்.

அதனால் தான் கிறிஸ்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதிய ரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படு கின்றது. அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?

ஜாதி, உயர்வு-தாழ்வு, செல்வம்-தரித்திரம், எஜமான்-அடிமை ஆகியவை களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? 

கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய, அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும்.

மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும்.

ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத் திற்காக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது.

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள்.
அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம், ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீஸ்வரராய்  இருந்துகொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள்செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியனவேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள் ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப்பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.
உதாரண மாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்சகாலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். இனி கொஞ்சநாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லா தார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள் ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது.

காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டி யதில்லை என்றும், அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டே யொழிய, இப்போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது.
ஆனால் பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலை களும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம். இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம், நாளைக்கு அதர்மமாகி, தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும். கட வுளை மறுக்கத்துணிந்தவனே தர்மத் தின் பேரால் உள்ள இன்றைய கொடு மைகளை ஒழிக்க முடியும். அப்படிக் கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்திற் கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி.

ஏனெனில் அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக் கிறேன்.

             ---------------------------------- தந்தை பெரியார்'குடிஅரசு' - கட்டுரை - 21.05.1949

6 comments:

தமிழ் ஓவியா said...


தமிழின் தலையெழுத்து!


இன்றைய தினமலரில் இப்படியொரு தலைப்பு கொடுத்து மானமிகு கலைஞர் அவர்களை வசை பாடித் தீர்த்திருக்கிறது.

இந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று எந்தத் தலைவரும் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் சென்னையில் இந்தி பிரச்சார சபை இருந் திருக்குமா?

கட்டாயமாக்கக் கூடாது என்பதுதான் திராவிடர் இயக்கத்தின் நிலைப் பாடு - அரைவேக்காடுத் தனமாக எழுதலாமா?

கலைஞருக்குத் திறந்த மடல் எழுதலாம். அந்த யோக்கியதை இருக் கிறதோ இல்லையோ யாரும் எழுதலாம்தான். பைத்தியக்காரன் ஒருவன்கூட கிறுக்க உரிமை உண்டுதான் அதில் உள்நோக்கம் இல் லாமல் எழுத வேண்டும் என்பது அடிப்படை அறிவு நாணயம்.

சமர்ச்சீர் கல்வி தர மற்றதாம். அதனை எல் லோரையும் படிக்க வைத்து நல்ல அம்சங் களையும் கெடுத்துக் குட் டிச் சுவர் ஆக்கிவிட்டா ராம் கலைஞர்.

சமச்சீர் கல்வி ஏதோ கலைஞராகப் பார்த்து முடிவு செய்ததல்ல; கல்வி யாளர்களின் கருத்துக் களையெல்லாம் கேட்டு, அதன் அடிப்படையில் தான் பாடங்கள் தயார் செய்யப்பட்டன.

இந்தச் சிண்டர் களுக்குக் கோபம் ஏன் தெரியுமா? எல்லாருக்கும் சமமான கல்வி திட் டத்தை அளித்ததுதான்.

எல்லாரும் சமம் என் பதை ஏற்றுக் கொள்ளாத கூட்டம் அல்லவா? அத னால்தான் எல்லார்க்கும் சமமான கல்வியைக் கொடுத்தால் குமட்டிக் கொண்டு வருகிறது அவாளுக்கு! இப்படி எல்லாம் மானமிகு கலைஞர்மீது மானாவாரியாக புழுதி வாரி தூற்றும் இந்த நடு நிலையாளர்கள் கொலைக் குற்றத்தைத் தலையில் சுமந்து இன் னும் காஞ்சி மடத்தின் அதிபராக, சங்கராச்சாரி யாராக லோகக் குருவாக திரிந்து கொண்டு இருக்கிறாரே ஒரு காம - கோடி - அதை பற்றி ஒரே ஒரு வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

திராவிடர் இயக்கம் என்ற போர்வையிலே அண்ணா பெயரையும் இணைத்துக் கொண்டு சொர்க்கவாசல் சென்று வரும், அம்மையாரைப் பற்றி வீசம் வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்க லாம். (சொர்க்கவாசல் என்று அண்ணா எழுதி யது படமாகக் கூட வந்துள்ளது).

தினமலரில் எழுதி யவர் முன்னாள் காவல் துறை அதிகாரியாம். அப்படியென்றால் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது எவ்வளவுப் பூணூல் தன மெல்லாம் செய்திருப்பார் நினைத்துப் பாருங்கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ரூ.150 கோடி

குஜராத் முதல் அமைச்சர் பிரதமர் பதவி கனவு காணும் தாமோதரதாஸ் நரேந்திரதாஸ் மோடி அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார் என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உண்டு.

இப்பொழுது அகமதாபாத்தில் முதல் அமைச்சர் தனி அலுவலகத் துக்காக ரூ.150 கோடி செலவில் அதி நவீனமயமான கட்டடம் உருவாக் குகிறாராம்.

மற்ற மற்ற மதக்காரர்களை ஏமாற்றவும் மோடி மதச் சார்பற்ற கொள்கையின் சின்னம் என்ற ஊரை ஏமாற்றிடவும் சத்பவானா என்னும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்து உண்ணா நோன்பு எனும் நாடகத்தை அரங்கேற்றினார்.

அந்த அரங்கம் சினிமா ஜோடனை போல (Settings); எல்லாம் அரசு செலவில் - கோடிக்கணக்கான ரூபாயில்.

அப்படியெல்லாம் முசுலிம் மக்களை ஏமாற்றியும்கூட பிஜேபி சார்பில் சட்டப் பேரவைக்கு ஒரே ஒரு வேட்பாளர்கூட நிறுத்தப்பட வில்லை.

அரசு செலவில் மஞ்சள் குளிப்பது சிறுபான்மை மக்களைச் சிதைப்பது எனும் யோக்கியதையில் உள்ள நீரோ மன்னன் தான் (நாம் கொடுத்த பட்டமல்ல; உச்சநீதிமன்றம் கொடுத்த பட்டம்!)

இந்தியாவின் எதிர்கால பிரதமராம்.. ஹி... ஹி....

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் கடவுள் - ஒய்வாம்!

சூதாட்ட விளையாட்டு என்று பாமர மக்கள் கூடப் பேசும விளையாட் டான கிரிக்கெட்டில் ஒரு நாள் விளை யாட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறப் போகிறாராம். எல்லா ஏடுகளும் முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுள்ளன.

அவராகவா வெளியேறினார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களும், விமர்சகர்களும் கடுமையாக விமர்சித் தனர். வேறு வழியின்றி வெளியேறி னார்.

தினமணி கொடுத்த தலைப்பு என்ன தெரியுமா? கிரிக்கெட் கடவுள் ஓய்வு - கடவுள் என்றால் இந்த யோக்கியதையில் தான் இருக்கும் போலும்! என்ன செய்வார் அவர்? கிரிக்கெட் பணம் காய்க்கும் மரமாயிற்றே! மனம் வருமா வெளியேற?

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி!

கருநாடக மாநிலம் கே.ஜி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர்கள் மேல் மருவத்தூர் அம்மாவைத் தரிசிக்க வந்தனர் தனிப் பேருந்தின் மூலம்.

தொடர்ந்து திருவேற்காடு மற்றும் மாங்காடு கோயில்களுக்குச் சென்று தரிசித்து விட்டு திரும்பும்போது விபத்து ஏற்பட்டு 10 பேர் படுகாயத் துடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர் என்பது இன்னொரு செய்தி.

இதுபோல் அய்யப்பன் கோயி லுக்குச் செல்லும் பக்தர்கள் மரணம்; திருப்பதி சென்று வந்தவர் விபத்தில் பலி! என்பதுபோன்ற செய்திகள் அநேகமாக நாள்தோறும் வந்து கொண்டுதான் உள்ளன.
பக்தர்கள் மரணம் அடைவதால் எங்களுக்கு ஒன்றும் மகிழ்ச்சியில்லை. விலை மதிக்க முடியாத மனித உயிர் கள் இப்படி மலிவாக நாசமாகின் றனவே என்கிற துயரத் துடிப்பு எங்களை ஆட்கொள்கிறது.

அதே நேரத்தில் பக்தர்கள் ஒன் றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

கடவுளைப் பிரார்த்திக்கச் சென்ற வர்கள் இப்படிப் இறக்கிறார்களே தம்மை நாடி வந்த பக்தர்களையே அந்தக் கடவுள்கள் காப்பாற்ற முடியவில்லையே ஏன் என்று சிந்தித் தார்களா?

கடவுள் என்று ஒருவர் இருந்தால் தானே அவரின் சக்தியைப் பயன் படுத்துவார்? யார் கொடுத்த பணத் தாலோ யாரோ ஒரு சிற்பியால் செதுக் கப்பட்ட சிலைதான் கோயிலுக்குள் இருக்கிறது.
அந்தக் கல்லுக்கோ, உலோகத் துக்கோ என்ன சக்தியிருக்க முடியும்?

பிள்ளைகள் பொம்மை விளை யாட்டு விளையாடுகிறார்கள் என்றால் பெரியவர்கள் பெரிய பொம்மைகளை வைத்து விளையாடுகிறார்கள் அவ் வளவுதானே!

பால்தாக்ரே கூட பக்தியின் பழமாக இருந்த அவரின் மனைவி விநாயக சதுர்த்தி அன்று மறைந்தார். அந்த நேரத்தில் மின்வெட்டு, மருந்துகள் வாங்கக்கூட முடியவில்லை.

எவ்வளவு பக்தியோடு இருந்தவர் என் மனைவி. அவள் நம்பிய, மதித்த எந்தக் கடவுளும் அவளைக் காப் பாற்றவில்லையே என்று கூறி வீட்டில் இருந்த சாமிப் படங்களை எல்லாம் தூக்கி எறிந்தாரே - தான் அணிந் திருந்த ருத்திராட்ச மாலைகளை எல்லாம் வீசி எறிந்தாரே!

பக்தர்கள் சிந்திப்பார்களாக! ஏனெனில் அவர்களுக்கும் ஆறாம் அறிவு இருக்கத்தானே செய்கிறது.

தமிழ் ஓவியா said...

15 நாட்களுக்குள் நடுவர்மன்றத் தீர்ப்பை வெளியிடாவிட்டால் தமிழ்நாட்டில் கிளர்ச்சி வெடிக்கும்!
தஞ்சையில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!

தஞ்சாவூர், டிச.30- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை 15 நாட்களுக்குள் அரசிதழில் (கெசட்) வெளியிடா விட்டால் தமிழ்நாட்டில் மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் என தஞ்சையில் தமிழர் தலைவர் அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சையில் இன்று (30.12.2012) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

காவிரி நதிநீர் பிரச்சனையை பொறுத்த வரையில் நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டுமென முதன் முதலாக வலியுறுத்திய இயக்கம் திராவிடர் கழகம். வி.பி.சிங் பிரதமராகவும், கலைஞர் முதல்வராகவும் இருந்த காலத்தில் 250 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டே வந்துள்ளது.

1991-இல் கர்நாடகத்தில் 10 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கராக இருந்த கர்நாடக விவசாய பரப்பு தற்போது 19 லட்சமாக உயர்ந்துள்ளது. அதை மேலும் 6.7 ஆயிரம் ஏக்கர் பரப்பை விரிவுபடுத்த 5,500 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை உருவாக்கப்பட்ட போது 28 லட்சம் ஏக்கர் இருந்த விவசாயப் பரப்பு தற் போது 16 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடி அழிந்த நிலையில் சம்பா பயிரையாவது காப்பாற்ற வேண்டும்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 419 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற ஆணையை கர்நாடகம் மதிக்கவில்லை. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பை இதுவரை கெசட் செய்யவில்லை. காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பை கெசட் செய்ய வேண்டும் என தொடர்ந்து எழுதி வருகிற ஏடு; விடுதலை வலியுறுத்தி வருகிற இயக்கம் திராவிடர் கழகம்.

கிளர்ச்சி வெடிக்கும்!

நதிநீர் ஆணையத் தீர்ப்பை இன்னும் 10,15 நாட்களுக்குள் கெசட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நாடு ஸ்தம்பிக் கக் கூடிய கிளர்ச்சி வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு தமிழக அரசு கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

உயிரிழந்த விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் பேசினார்.

அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் தமிழர் தலைவர்.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்