Search This Blog

16.12.12

பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!-தந்தை பெரியார்



கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! 

ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக் குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறா துழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினு மினுப்பை வேண்டி மேலான நறுமணத் தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சி யோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலுபேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச்சவாரி செய் தாலும், உட்கார்ந்து செல்லும் போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  

கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறுவேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகை யில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடை யவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல.

 பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங் காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!

இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!

பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப் பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ் செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம் பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப் பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர் வாதத்தினால் விளைந்த வளர்ச்சி தான் இன்றையத் திராவிடர் கழகம்!

அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர் களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால் மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனை யில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! 

அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லா விட்டால், உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங் களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியது தானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!

அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவி டரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொரு வரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!! இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப் பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை! எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல் லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது! யோசியுங்கள்! இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர் களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! 

தோளோடு தோளிணைத்து நாட்டுக் குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்தமாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக் கிறார்கள். அப்போது பல தீர்மானங் களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட் டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவ தாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 

நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண் டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங் களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்ய வேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.

இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்ப தினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்ய வேண்டிய திருப்பணி என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், தாங்கள் வேறானவர்கள், உயர்ந்தவர்கள் என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத் தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மாநாட்டுக்குப் பிறகு, அடுத்த படியாக, மாகாணத்திற்கு வந்திருக்கும் ஏகாதிபத் தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டேல் பிரபு அவர்கள் பேச்சுகளி லிருந்து தெரிகிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு விடுதலையை ஒழித்து விட வேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந்திருக்கிறது. சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் பட்டேல் பெரு மான் அவர்கள். இந்தப் பெருமான் தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக பவநகரை நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக்காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத் தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க் காரான, மாகாண மந்திரிசபையின ருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந் தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!
ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரை யாகவே நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார் களே, இதைக் கண்டு நாம் உண்மை யாகவே பச்சாதாபப் படுகிறோம்! பார்ப் பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென் கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறைவேற்றியும் விடலாம்.

ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்கு கேட்ட நீதிக்கட்சியை, அய்ம்பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந் தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங் கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத் திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடு கின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித்திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப் படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லா திருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண் டியவர்களும் அவர்கள்தான்!

             ---------------------- தந்தை பெரியார் - "குடிஅரசு" - தலையங்கம் - 26.02.1949

11 comments:

தமிழ் ஓவியா said...


பனகல் அரசர்


இராமராய நிங்கர் எனும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசரின் நினைவு நாள் இந்நாள் 1928.

ஆந்திர மாநிலத்தில் காளகஸ்தியில் பிறந்தவர்; (9.7.1866) இவரின் முன் னோர்கள் பனகல் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர் பெய ரோடு ஊரும் ஒட்டிக் கொண்டு விட்டது.

தெலுங்கு, சமஸ் கிருதம், ஆங்கிலம் மூன் றிலும் புலமை மிக்கவர்!

சென்னை - மாநிலக் கல்லூரியில்தான் எம்.ஏ. முடித்தார். கம்பீரத் தோற் றமும், பேரழகும் கொண் டவர். குழந்தைப் பருவத் தில் அந்த ஊரில் அவரைத் தூக்கிக் கொஞ் சாதவர்கள் யாருமிலர் என்று கூறப்படுவதுண்டு.

டெல்லி சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டபோது அவரின் பேச்சு வன்மையும், செய லாற்றலும் அனைத்துத் தரப்பினரையும் பெரிதும் கவர்ந்தன.

நீதிக் கட்சி சார்பில் சென்னை மாநில சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு, சாதாரண அமைச்சராகவும், பின்பு பிரதம அமைச்சராகவும் விளங்கியவர்.

நீதிக்கட்சி அமைச்சர் களுள் இவரை தந்தை பெரியார் பாராட்டிய அள வுக்கு இன்னொருவரை பாராட்டியதில்லை என் றால் பனகல் அரசரின் அரும் பெருமைகளை எளிதில் புரிந்து கொள்ள லாம்.

பனகல் அரசர் வெற்றி பெற்ற காலத்தை, பனகல் இறந்தார் என்று பார்ப் பனர்கள் ஒரு செய்தியை பரப்பி அற்ப மகிழ்ச்சி அடைந்தனர் - புகை யிலை வழங்கினர் என்று கூறுகிறார் தந்தை பெரி யார் (விடுதலை 21.11.1938 பக்கம் 1)

பனகல் ஆட்சிக் காலத்தில்தான் இந்து அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்க புரியாக இருந்த கோயில் கள் அரசின் கைக்கு வந்தன.

பனகல் காலத்தில் தான் மருத்துவக் கல்லூரி யில் சேர்வதற்கு சமஸ் கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த சூழ்ச்சித் தடை தூக்கி எறியப்பட்டது. வெள்ளை யர் மயமாக இருந்த மருத்துவத்துறை, இந்திய மயமானதற்கும் பனகலே காரணம்.

மகா மகா தந்திரசாலி பனகல் அரசர் என்று பார்ப்பனர்களே சொன் னார்கள் என்பதைவிட பனகல் அரசரின் திற மைக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும்? -

- மயிலாடன் 16-12-2012

தமிழ் ஓவியா said...


மார்கழி மாதம் - கொக்கோகப் பஜனை!


மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையை யும்மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!

கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார் பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல் லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய
கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல் வாய்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும், முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே
என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!

நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...

இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு - பார்க்கலாம்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங் கள் அவர் பாடியவை அல்ல.

பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி இதழில் (1946 செப்டம்பர்) எழுதி விட்டார்.

பக்தி அப்படியே மனதைக் கட்டுப்படுத்து கிறதாம். கடவுளைக் கணவனாக ஆக்கிக் கொண்டு அவனோடு கட்டிப் புரள வேண்டும் - புணர வேண்டும் என்பதுதான் மனதை ஒருமுகப்படுத்தும் யோக்கியதையா?

இந்த மாதம் பூராவும் இந்தக் கேவலமான ஆபாசத் தெருப் புழுதிகளைத்தான் பஜனையாகப் பாடப் போகிறார்கள். இதுபற்றி எல்லாம் எங்களைத் தவிர யார் அம்பலப்படுத்தப் போகிறார்கள்?

வெட்கம்! மகா வெட்கம்!!

(குறிப்பு: நாம் இப்படி எழுதுகிறோம். அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு திருப்பாவை, திருவெம்பாவை தூக்கிப் பிடித்து எழுதுகிறது)

தமிழ் ஓவியா said...


உலகம் அழியும் எனும் கூச்சல் முட்டாள்தனமானது!

டிசம்பர் 20ஆம் தேதி மாலை பெரியார் கல்வி நிறுவனங்கள் மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வர்


மாயன் காலண்டர்படி டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியப் போகிறது என்னும் மூடத்தனத்தை விளக்கி பெரியார் கல்வி நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வார்கள் என்று அறிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

2012 டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் முடிந்துவிடும்; அழிந்துவிடும், மாயன் காலண்டரில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டு விட்டது என்று புளுகுகளைக் கட்டவிழ்த்து விட்டு, பிழைப்பு நடத்த மூடநம்பிக்கை வியாபாரிகளான பலசோதிடர்களும், அதைக் காசாக்கி வாழும் சிலரும் இப்படி ஒரு வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

பரிகார பூஜை, புனஸ்காரம் என்று பக்தி வியாபாரம் செலுத்திட இது ஒரு புது உத்திபோல நவீனக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஆதாரமற்ற, அறிவியல், வானவியல், ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறான கற்பனை, கட்டுக்கதை, புரட்டு என்று பிரபல நாசா (Nasa) அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த விஞ்ஞானி - மூத்த ஆய்வாளர் - டாரன்யோமென்ஸ் Dow Yedmons அவர்கள் ஒரு பேட்டியே கொடுத்து மறுத்துள்ளார். இதற்குமுன் இந்த நூற்றாண்டிலும் இதற்கு முன்பும் இப்படிப்பட்ட கப்சாக்கள் பல முறை பரப்பட்டு பிறகு அவை வெறும் புஸ்வாணம் ஆன கதி உலகறிந்த ஒன்றாகும். கார்ல்சேகன் (Carlsegan) என்ற பிரபல வானவியல் விஞ்ஞானி கூறினார்: அசாதாரண நிகழ்வுகள் நம்பப்பட வேண்டுமானால் அதற்கு அசாதாரண சாட்சியங்கள் அவசியம் தேவை என்றார்;

அம்மாதிரி இதுவரை விடப்பட்ட புரளிகள் எதையும் ஆதாரப்படுத்திட முன்வரவில்லை! எட்டு (அஷ்ட) கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன; அதனால் உலகம் அழியப் போகிறது என்று சுமார் 15,20 ஆண்டுகளுக்கு முன்பே புரளியை கிளப்பி விட்டனர் சில புருடா மன்னர்கள்! ஒன்றும் ஆகவில்லை.

இப்படி டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப் போகிறது என்பதற்கு நிபுரு என்ற ஒரு பெரிய பொருள் (Object) ஒன்று வந்து மோதி அழிக்கும் என்றும் கதை கட்டியுள்ளனர்; இதற்கு எவ்வித சாட்சியங்களோ, ஆதாரங்களோ கிடையாது என்றும் கூறி, டெலஸ்கோப்பிஸ் ஆதரவு சான்றுகளோ இப்படி சூரிய குடும்பத்தில் புவி ஈர்ப்பின் மூலம் ஏதும் இல்லை என்று கூறுகின்றன. ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், பூமியும் சூரியனும் மில்கிவே என்ற பின் பாதை அருகில் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழமையான நிகழ்வே ஆகும்! அது எந்த ஒரு விளைவையோ, வினையையோ ஏற்படுத்துவதில்லை. இதுபோன்ற புரளிகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல் ஸ்கைலேப் (Skylab) ஒன்று உடைந்து சுற்றி வந்தபோது (1979) இன்னும் 4 நாளில் உலகம் அழியப் போகிறது என்று பாமர மக்களிடையே பலமாகப் பரவி, மிகுந்த அச்ச உணர்வுடன் ஏதோ நாம் எல்லோரும் கடைசியாக விருந்து சாப்பிட்டு விடுவோம் என்று நம்பிய கிராமவாசிகள் உண்டு; மிகவும் வேதனையான வேடிக்கை இது அல்லவா?

இளம் மாணவ - மாணவிகள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, இதுபற்றி பெரியார் கல்வி நிறுவனங்களில், தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் தொடங்கி, திருச்சி, ஜெயங்கொண்டம், வெட்டிக்காடு உயர்நிலைப் பள்ளி (உரத்தநாடு அருகில்) மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து இந்த மூடநம்பிக்கையை - பெரிய வியாபாரப் - புழுதியை, உடைத்தெறிய 20.12.2012 காலை பள்ளி வகுப்புகள் துவங்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் பிரச்சாரம் செய்வர்.

தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவ, பேராசிரியர்கள் பங்கேற்கும் அறிவியல் விளக்கம் 20.12.2012 அன்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அறிவியல் மனப்பான்மையை Scientific Temper வீடுகளில் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறச் செய்ய வேண்டும்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 16.12.2012

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நரம்புக் கோளாறு

செய்தி: இந்த நோய் உங்களுக்கு உண்டா? அப்படியானால் திருவள் ளூர் மாவட்டம் பேரம்பாக் கம் சோழீஸ்வரர் கோயி லில் பிரார்த்தனை செய் யுங்கள். (ஓர் ஆன்மிக இதழில்)

சிந்தனை: இப்படிச் சொல்பவருக்கு ஏதாவது மூளை நரம்புக்கோளாறு இருக்கலாம். உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுகவும். Neuro Doctor)

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இதுதான்!


கோவை அன்னூரில் கடவுள் சிலைகள் திருட்டு

அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வரதை யம்பாளையம் கிரா மத்தில் உள்ள கரிவரத ராஜ பெருமாள் கோவி லில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அப் போது கோவிலின் கரு வறையில் வைத்திருந்த ஐம்பொன்னினால் ஆன சிலைகள் மற்றும் பூஜைக்குரிய வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அன்னூர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழுமலையான் காப்பாற்றினானா?
திருமலையில் ஜீப் கவிழ்ந்தது

நகரி: திருப்பதி வந்த, விசாகப்பட்டினம் பக்தர்கள், திருமலைக்கு பாத யாத்திரையாக சென்று, சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் திருமலையில் இருந்து திருப்பதி திரும்ப, வாடகை ஜீப்பில் பய ணித்தனர். சுவாமிபாதம் என்ற இடத்திற்கு ஜீப் வந்த போது, எதிர் பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. அதில், பயணம் செய்த, 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து, தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் சென்று, காயம் அடைந் தவர்களை திருப்பதி அஸ்வினி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

சபரிமலைப் பக்தனை யானைக் கொன்றது பம்பை: இருமுடி ஏந்தி, சபரிமலை சென்ற, பிளஸ் 1 மாணவனை, காட்டு யானை மிதித்துக் கொன்றது. அவனுடன் சென்ற ஆறு பேரையும் தாக்கியதில், அவர்கள் காயமடைந்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வரு கிறது. அதனால், சுவாமி தரிசனத்திற்காக, தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் செல்கின் றனர். இந்நிலையில், கேரளா, பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் மகனான, பிளஸ் 1 படிக்கும் ரதீஷ், 19, நேற்று முன் தினம், தன் தந்தை மற்றும் சிலருடன், சபரிமலைக்கு இருமுடி ஏந்திச் சென்றான். அவர்கள் அன்று மாலை, கரிமலை கடந்து பெரியானை வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு திடீரென வந்த காட்டு யானை ஒன்று, ரதீஷை காலில் போட்டு மிதித்தது; மீதமுள்ள வர்களையும் தும்பிக் கையால் தாக்கியது. இதில், சிலர் காய முற்றனர். இதுகுறித்து, தகவல் கிடைத்ததும், வனத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்கள், விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்கள் பம்பை அம்ருதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா?

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா (13.12.12) அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். பட்டதாரி ஆசிரியர்கள் 10,621 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 8,722 பேர் உட்பட 19,343 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதில் சிலர் தகுதி இழந்ததாக கூறி 18,382 பேர் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு .பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. இந்த பணிநியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப் பட்டுள்ளதா? தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், தங்கள் இட ஒதுக்கீட்டிற்கு உரிய விகிதாச்சாரப்படி இடம்பெற்றிருக் கிறார்களா?

கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், மொழிப்போர் தியாகிகள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோர் போன்ற முன்னுரிமை வரிசையில் எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்? தேர்வு மதிப்பீட்டில் பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி மதிப்பெண் 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் "சமுக நீதிஅடிப்படையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி மதிப்பெண் குறைக்கப்படவில்லை"என்கிற வழக்கு சிலதினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டதில் நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தாக்கீது அனுப்பியுள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த பணிநியமன விழா நடைபெற்றுள்ளது. தமிழகஅரசின் தகுதித்தேர்வு மோசடியில் சமூகநீதி அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடுமா?

- கி. தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


ஜாதிவெறியைத் தூண்டும் கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் தொல்.திருமாவளவன்

சென்னை, டிச.16-ஜாதி வெறியை தூண் டும் கட்சி தலைவர்கள் மீது தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று தொல். திருமாவளவன் கூறி னார். விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட் டம்சென்னையில் நேற்று 15.12.2012 நடை பெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமைதாங்கினார். அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நடை பெற்ற ஜாதிவெறி கல வரத்திற்கு சி.பி.அய். விசாரணைக்கு அனு மதிக்கவேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப் படுத்தவேண்டும். தலித் மக்களுக்கு எதராக ஜாதி வெறியை தூண்டு வகையில்சிலர் தொடர்ந்து வெளிப் படையாக பேசி வரு கின்றனர். இது வன் கொடுமை தடுப்பு சட் டத்தின் கீழ் தண்டிக்கப் படவேண்டிய குற்றச் செயலாகும். ஜாதி வெறியை தூண்டும்படி செயல்படும் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி கலவரம்

தர்மபுரியில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் முறையாக செய்யப்பட வில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக வீடு கட்டிக்கொடுக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட பழங் குடியினருக்கான பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு குறித்த அர சியல் சட்டதிருத்த மசோதாவை வரவேற் றுள்ள அனைத்து கட்சி யினரையும் விடுதலை சிறுத்தைகள் பாராட்டு கிறது.

கூடங்குளம் அணு மின்உலையை திறக்கக் கூடாது என்பதில் விடு தலைசிறுத்தைகள் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு அந்த முயற் சியை கைவிடவேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம்.

விடுதலை சிறுத்தை கள் கட்சியும் இல்லை ஓரமைப்பும் இல்லை என்று டாக்டர் ராம தாஸ் பேசி உள்ளதாக செய்தியாளர்களாகிய நீங்கள் சொல்கின்றீர்கள். தொல்.திருமாவளவன் வடிவத்தில் பெரி யாரைப் பார்க்கிறேன். அவர் தமிழகம் முழு வதும் வலம் வர வேண்டும் அதற்கு நான் துணையாக இருக் கிறேன் என்று மேடை தோறும் முழங்கிய டாக் டர் ராமதாசை நான் எண்ணிப்பார்க்கிறேன். அவருக்கு இந்த நேரத் தில் நன்றி சொல்கிறேன். டாக்டர் ராமதாசுடன் நான் இணக்கத்தை விரும்புகிறேன். மறு படியும்அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். மறுபடியும் அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகவே நான் வார்தைகளை அளந்து பேசுகிறேன். நேருக்கு நேர் சந்திப் பதற்கு நீங்கள் (செய்தி யாளர்கள்) ஏற்பாடு செய் யுங்கள். -இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் கொள்கையின் அடிப்படையில்
இக்கல்லூரி பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமாக உயர்ந்தது அமெரிக்கத் துணைத் தூதர் புகழாரம்!

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அமெரிக்கத் துணைத் தூதர் திருமதி ஜெனிபர் மெக்கின்டைர் அவர்கள் சிறப்புரையாற்றினார். (12.12.12 தஞ்சை)

தஞ்சை, டிச.16-பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 12ஆம் நாள் புதன் கிழமை அன்று ஆசிரியர் குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்து பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அமெரிக்கத் துணைத் தூதர் திருமதி ஜெனிபர் மெக்கின்டைர் அவர்கள் கீழ்வருமாறு சிறப்புரை ஆற்றினார்.

பெண் கல்வியும் - பெரியாரும்

இப்பல்கலைக்கழகத்தில் வந்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களுக்காகத் தொடங் கப்பட்ட இக்கல்லூரி பெருமை வாய்ந்த நிலையில் பல்கலைக்கழகமாக உயர்ந்திருக்கிறது. பெண் கல்வியின் முன்னேற்றத்தில் பெரியார் பெரிதும் அக்கறை காட்டியுள்ளது மிகவும் பொருத்தமே.

எங்கள் அமெரிக்க நாட்டிலும் பெண்களுக்கு எல்லா வகையிலும் உயர்வும், பெருமையும் அளிக்கிறோம். உங்கள் பல்கலைக்கழகமும் அமெரிக்க நாடும் கல்வி, தொழில் முனைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

இன்றைய இளைஞர்களை கல்வி புகட்டி எப்படி முன்னேற்றுவது என்பதே நம் முன் நிற்கும் முக்கியமான பணிகளாகும். சென்ற ஜுன் மாதத்தில் அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும் இந்திய அமைச்சர் கபில் சிபலும் கல்வி பற்றிய மாநாட்டில் வாஷிங்டன் நகரத்தில் உரையாற்றினர். உயர்கல்வியின் முழுப் பயனும் இரு நாட்டு மாணவர்களையும் சென்று அடைய வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஏற்றவாறு சில ஆண்டுகளாக ஆசிரியர் மாணவ உடன்பாடும், உதவித்தொகைகளும், இணைப்பு வசதிகளும் இந்தோ-அமெரிக்கத் தொடர்புக்கு ஊக்கம் அளித்தன. Ful Bright உதவித்தொகை, நேரு நினைவுப் பரிசு போன்ற வசதிகள் எல்லாம் உயர்கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

அமெரிக்காவின் உதவித்தொகை

1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுதும் ஜக்கிய அமெரிக்க நாட்டின் உதவித்தொகை 17ஆயிரம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் படிப்புக்காகத்தான் இந்த உதவித்தொகை அளிக்கப் படுகிறது. எமது சென்னை அலுவலகத்தில் அமெ ரிக்க நாட்டில் படிப்பதற்குரிய வாய்ப்புகளையும், வசதிகளையும் பற்றிய செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உலகளாவிய முறையில் பணி செய்வதற்கு ஏற்றவாறு எமது அமெரிக்க கல்வி நிறுவனங்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்ற உதவியை அளிக்கின்றன.

இன்றைய நிலையில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்1 இலட்சம் பேருக்கு மேல் உயர்கல்வி பயில்கிறார்கள். அமெரிக்க மாணவர்களும்கூட இந்தியாவுக்கு வந்து படிக்க விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான கல்வி பற்றிய செய்திகளை எமது சென்னை அலுவலகம் அவ்வப் போது வெளியிட்டு வருகிறது. எங்களது இணைய தளத்தின் மூலமாகவும் இச்செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

கல்விப் பணியை அன்றி ஆர்வம் மிகுந்த தொழில் முனைவோராலும் நம் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவி புரிந்து கொள் கின்றன. ஆப்பிள் கணினியின் உயர் பதவியிலிருந்த ளுவநஎந துடிளெ என்பவர் திறமையுள்ள எந்த மனிதனும் அந்த அந்த நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் உதவி புரியலாம் என்பதை விளக்கமாகக் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு 13ஆவது இடம்

தென்னிந்தியாவில் நான் பதவி ஏற்றபிறகு பற்பல தொழில் அதிபர்களை சந்தித்து அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டும், கேட்டும் உள்ளேன். எனவே இத்தகைய தொழில் முனைவோர் நம் இரண்டு நாடுகளுக்கும் ஏற்ற முறையில் தொழில் வளத்திற்கும், வாணிபத்திற்கும் இணைந்து பணி யாற்றுவர் என்று கருதுகிறேன். அமெரிக்காவோடு வாணிபம் செய்வதில் இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ளது.

வணிக நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி அமைப்புகளும் இத்தகைய தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். நியூயார்க் நகரிலுள்ள ஒரு மோட்டார் நிறுவனம் இந்தியாவிலுள்ள மகீந்திரா குழுவினரோடு இணைந்து பணியாற்றுவதை இதற்குச் சான்றாக சொல்லலாம். ஜார்ஜியா நகரிலுள்ள சூரிய ஒளி சாதனங்கள் இந்தியாவில் கைப்பேசி நிறுவனங் களோடு தொடர்பு கொண்டு பணியாற்றுவதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஓவியா said...

Minnesota நகரிலுள்ள குடிநீருக்கான வடிகட்டும் முறை, நீரினுள் ஏற்படும் பிரச்சினைகளை ஒதுக்கி தூய குடிநீர் வழங்குவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது. எனவே அமெரிக்க இந்திய ஒத்து ழைப்பின் மூலம் தூய குடிநீரையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

வெப்பமயமாகும் பூமி

சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையில் பருவநிலை மாறுபாடு, மின் உற்பத்தி, ஆகியவற்றில் இணைந்து பணியாற்றி தொழில் முதலீடு, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் ஒருவருக் கொருவர் உதவி புரிந்து கொள்ளலாம். உலகம் வெப்பமயமாவதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற் கும் தூய்மையான காற்றை நுகர்தற்கும் உரிய முறையில் இணைந்து பணியாற்றலாம். மின் ஆற்றலின் முழுமையான பயன்பாட்டிலும் சிக்க னத்தைக் கடைபிடித்து எரிபொருளை மிச்சப் படுத்தலாம்.

அமெரிக்காவிலும், இந்தியாவிலும்

தமிழ் ஓவியா said...

வன விலங்குகளின் பாதுகாப்பை அவற்றின் தீங்கு இல்லாத வாழ்க்கையை இரு நாடுகளும் கலந்து பேசி உறுதி செய்யலாம். இந்திய, அமெரிக்கத் தொழிலகங்களில் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் மேம்பட்ட கல்வி வளர்ச்சியே அன்றி வன விலங்கின் பாதுகாப்பு, சட்ட விரோதமாக அவற்றைக் கொலை செய்வதைத் தடுத்தல், சமுதாய வளர்ச்சி ஆகியவற்றிலும் இணைந்து பணியாற்றலாம்.

எங்கள் அலுவலகத்திலிருந்து இத்தகைய பணிகளின் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கு என்று இங்குள்ள தனிப்பட்டோர் மற்றும் நிறுவ னங்களோடு தொடர்பு கொண்டு விழிப்புணர்ச்சி யையும், உரிய கல்வியினையும் தொடர்ந்து அளித்து வருகிறோம்.

சென்ற ஆண்டில் சுற்றுச்சூழல் மாதம் என்று ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை வரை முறைப்படுத்தி ஆண்டில் முதல் மூன்று மாத காலத்திற்கு ஏராளமான பள்ளிகளிலும், கல்லூரி களிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதோடு பொருளின் மறு சுழற்சி சிக்கன இந்தியாவை ஆக்குவதுடன் கருத்தரங்குகள், போட்டிகள் மூலமாக அறிமுகப்படுத்தினோம். சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு எமது பல்வேறு திட்டங்களின் பயனாக இளைஞரான மாணவர்களைச் சென்ற டைந்தது.

பசுமைக்குழுத் திட்டம்

சென்ற ஆண்டு இந்த சுற்றுச்சூழல் மாதத்தில் பெரிய தொழில் நிறுவனங்களோடு இணைந்து சென்னை நகரின் பல்வேறு பழம்பெருமை வாய்ந்த கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும், வரலாற்றுச் சின்னங்களைப் புதுப்பிக்கின்ற பணியிலும் நாங்கள் சிறந்த தொண்டு ஆற்றியுள்ளோம். காந்தியார் கூறியவாறு பசுமைக் குழு திட்டத்தை ஏற்பாடு செய்து எங்களுடைய தூதுவர் அலுவலகங்களிலும், எங்கள் இருப்பிடங்களிலும் பசுமையான ஒரு புல் வெளியினை அமைத்து சுற்றுச் சூழலைப் பாது காக்கிறோம்.

எமது பணியிடங்களில் முடிந்த வரையில் முன்னமேயே பயன்படுத்திய பொருள் களை மறு சுழற்சி செய்கிறோம். குப்பைக் கூளங் களை பசுந்தாள் உரமாக மாற்றுகிறோம். எங்கள் அலுவலகத்திலுள்ள பேருந்துகளும், அலுவலகக் கார்களும் மின் ஆற்றலில் இயங்குகின்றன. கரும் புகை ஏதும் அவற்றிலிருந்து வராது. அத்தகைய செயல்கள் மூலம் பாதுகாப்பான சுற்றுச் சூழலை நாங்கள் பேணிப் பாதுகாத்து வருகிறோம்.

இளைஞர்களாகிய நீங்களும் உங்கள் தலைவர்களும், தொழில் அதிபர்களும் எதிர் காலத்தில் இப்படி ஒரு பசுமையான சூழ்நிலையை உண்டுபண்ணிக் கொள்ள வேண்டும். அரசினர் அளவிலும், மக்கள் நிலையிலும் நிறவனங்களைப் பொறுத்தும் நம் இரண்டு நாடுகளும் வளம் மிகுந்த ஒரு எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும், கல்வியாயினும், தொழில் வளமாயினும் சுற்றுச் சூழல் ஆனாலும் நம் இரண்டு நாடுகளும் அறிவு சார்ந்த திட்டங்களின் வளர்ச்சியினை முன் வைத்து இன்றைய 21ஆம் நூற்றாண்டின் சிறந்த குடிமக்களாக சிறப்புற வாழ்வதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

என்னுடைய எளிமையான கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித் தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-தமிழில்: பழனி.அரங்கசாமி

தமிழ் ஓவியா said...


அடுத்து - ஜாதி மறுப்பு இணை தேடல் டிசம்பர் 30இல் திருச்சியில்!


திருச்சி, டிச.16- பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் ஒருங்கிணைக்கும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு இணை தேடல் பெருவிழாவான மன்றல் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 30 ஆம் தேதி திருச்சி பெரியார் மாளிகையில் மிகச் சிறப்போடு நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று (15.12.2012) காலை 11 மணியளவில் புத்தூர், பெரியார் மாளிகையில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மாநில அமைப்பாளர் திருமகள் இறையன் அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலா ளர் ச.கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

தொடக்கத்தில் திருச்சி மாவட்டத் தலை வர் மு.சேகர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தி.க. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொண்டு மன்றல் நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை வழங்கினார். ஊடகத் துறை செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் ஒளிப்படம் மூலம் விளக்கவுரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆலோ சனை குறித்து பொறுப்பாளர்களும், தோழர்களும் பேசினார்கள்.

பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.கலைச்செல்வன், தஞ்சை மண்டல மகளிரணி அமைப்பாளர் கலைவாணி, அம்பிகா, செல்வக்குமாரி, லால்குடி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட், கரூர் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இராசசேகரன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம், மண்டல மாணவரணிச் செயலாளர் ராஜா, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், செயலாளர் அருணகிரி,

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, மாவட்டச் செயலாளர் வீரப்பன், பெல் ம.ஆறு முகம், க.வே.சுப்பிரமணியன், உடுக்கடி அட்ட லிங்கம், லால்குடி ஒன்றியத் தலைவர் உலகநாதன், செயலாளர் பிச்சை மணி, மாவட்டத் துணைத் தலைவர் திருமால், மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வீ.மகாலிங்கன், வழக்குரைஞர் புலிகேசி, இளை ஞரணி தலைவர் அன்புராஜா, மாணவரணி முரளி தரன், செல்வராஜ், அமைப்பு சாரா தொழிற்சங்கத் தலைவர் திராவிடன் கார்த்திக், திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்சுடர், பொன்மலை பகுதி தலைவர் இராமச் சந்திரன், திருவரங்கம் நகரச் செயலாளர் மோகன் தாசு, இளைஞரணித் தலைவர் கண்ணன், செயலாளர் தமிழ்செல்வன், சண்முக நாதன், பெரியசாமி, முத்துக்குமரசாமி, சீராளன், ப.க.பென்னி, குத்புதீன் உள்ளிட்ட கழக நிருவாகி களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

அரிமா சங்கம்

இக்கூட்டத்தில் அரிமா சங்கத்தின் (லயன்ஸ் கிளப்) தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிறீராம், பொருளாளர் செந்தில், பன்னீர்செல்வம், தசரதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மண்டல செயலாளர் சி.காமராஜ் நன்றி கூறினார்.