தருமபுரியில்
நடைபெற்ற ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் (9.12.2012) நிறை
வேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் கண்ணில் ஒத்திக் கொள்ளத்தக்கவை.
தொலைநோக்குப் பார்வை உடையவை!
தற்காலிக பரிகாரம் தொலைநோக்குப் பரிகாரம், சட்ட ரீதியான பரிகாரங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை.
உடனடிப் பரிகாரம் என்பது ஜாதி வெறியர்களால் தீக்கு இரையாக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவைகளைப் பற்றியது.
பாதிக்கப்பட்ட மக்கள் குந்த இடமின்றிக்
கூடாரம் அடித்து அதற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அரசு கொடுத்த ரூ.50
ஆயிரம் எந்த மூலைக்கு?
முதல் வேலையாக அரசு முன்வந்து அந்த
மக்களுக்கு தீப்பிடிக்காத வீடுகளைக் கட்டித் தருவதுதான். நட்ட ஈட்டை
மதிப்பீடு செய்து முழு அளவில் ஈடு செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த
மக்கள் சொன்னது போல ஒரு தலைமுறை உழைத்துச் சம்பாதித்த பொருள்கள் சாம்பலாகி
விட்டன.
அதனை நிமிர்த்த எத்தனை தலைமுறை உழைக்க வேண்டுமோ!
இரண்டாவதாக இந்த ஜாதித் தீ மீண்டும் தலை தூக்கக் கூடாது; பரவக் கூடாது - இதற்கொரு முடிவு எட்டப் பட்டாக வேண்டும்.
காவல்துறையில் கியூ பிராஞ்சு, சாமி சிலை
கடத்தல் இவற்றைக் கண்காணிக்கக் காவல் துறையில் பல பிரிவுகள் இருப்பது போல
புதுப் பிரிவு உண்டாக்கப்பட்டு ஜாதி, மத மோதல் பகுதிகள் கண்காணிப்புச்
செலுத்தப்பட்டு, தொடக்க நிலையிலேயே கெல்லி எறியப்பட வேண்டும்.
மக்கள் மத்தியில் ஒத்த கருத்துடையவர்கள்
இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் (இது குறித்துத்
தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையைக் காண்க).
தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை,
பொது சுடுகாடு - சுடுகாட்டுப் பாதை இவை உடன டியாக அரசு ரீதியில்
கவனிக்கப்பட வேண்டியவை. சட்டம் இருக்கிறது; அதிகாரமும் கையில் இருக் கிறது;
இவ்வளவையும் வைத்துக் கொண்டு கையாலாகாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை சட்டம் நகமும், பல்லும் உள்ள சட்டமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
இவை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளன. இதன்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவே.
இதனை மட்டும் ஒழுங்கு முறையோடு அட்சர
சுத்தமாகச் செயல்படுத்தினால் தீண்டாமை என்னும் குரங்கு வாலைச் சுருட்டிக்
கொண்டு உட்கார்ந்து கொண்டு விடும்.
இந்தச் சட்டம் இருக்கும்போதே வாலாட்டு
கிறார்கள் ஜாதி வெறியர்கள் என்றால் இந்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ள
வேண்டும் என்று கூறுவோரின் கருத்தை ஏற்றால் அவ்வளவுதான் நாடே தீண்டாமை
என்னும் நோயால் பெரும் அவதிக்கு ஆளாகும்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
என்பது நடைமுறை கண்ணோட்டத்தில் உளரீதி யாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப்
புதுத் தெம்பும், தன்னம்பிக்கையும் தானாகவே வளரச் செய்யும்.
மக்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள்பால் பொது மரியாதையும் பெருகும்; தீண்டாமை என்னும் பார்வை இருந்த இடம் தெரியாமலே போகும்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை ஜாதி அற்றவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சதவி கிதத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை ஜாதி அற்றவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சதவி கிதத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
நிரந்தரமான செயல் என்பது - இந்திய அரச
மைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்னும் அரசமைப்புச்
சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதில்
ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
இது ஒரு நிரந்தரத் தீர்வாகும். ஆக,
தருமபுரியில் நடைபெற்ற ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானம்
ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவை; மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப்பட
வேண் டியவை, அரசு நிலையில் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யப்படக்
கூடியவையாகும்.
ஜாதி ஒழிப்பு வரலாற்றில் தருமபுரி
மாநாட்டுத் தீர்மானங்கள் என்றென்றும் பேசப்படும். இந்தியாவே இதுபற்றி பேசப்
போகிறது என்பதில் அய்யமில்லை.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
வளர்க பகுத்தறிவு!!
----------------------------"விடுதலை” 11-12-2012
15 comments:
தருமபுரி மாநாட்டு வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்குப் பாராட்டு
டிசம்பர் 16 முதல் 31 முடிய மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடக்கட்டும்!
புத்தொளி பிறக்கட்டும்!! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தருமபுரி மாநாட்டுத் தீர்மானங் கள் தொலைநோக்குக் கொண்டவை; அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வடமாநிலங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும், தீர்மானங்களை விளக்கிப் பொதுக் கூட்டங்கள் டிசம்பர் 16 முதல் 31 முடிய நடத்தப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தருமபுரியில் 9.12.2012 அன்று நடைபெற்ற ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமும் சரி, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற மாநாட்டிலும் சரி அனைத்து மக்களும் ஒன்று திரண்டு காட்டிய எழுச்சி - திராவிடர் கழக வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சமூகப் புரட்சி வரலாற்றிலேயே கண்டிராத ஒன்றாக இருந்தது!
வெட்கித் தலை குனிய வேண்டும்!
தர்மபுரி அருகே உள்ள நாய்க்கன்கொட்டாய் காலனி, நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று ஆதிக்க ஜாதியின் சில விஷமிகளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொள்ளையடிப்பு, தீ வைப்பு (பெட்ரோல் குண்டு வீச்சு) வீடுகளை எரித்தல் போன்ற வன் கொடுமைச் சம்பவங்கள் மிகவும் அவமான - நாகரிக சமூக மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய அசாதாரண நிகழ்வுகள் ஆகும்.
தலைவர்களின் கருத்துரைகள்
திட்டமிட்டு, மூன்று பகுதிகளில் ஒரே நேரத்தில், ஒரு வகையில் அடித்து நொறுக்கிய பிறகு, பொருள்களை தூக்கி வீசியும், கொள்ளை யடித்த பிறகு பெட்ரோல் குண்டுகளை வீசி அழிப்பு வேலைகளைச் செய்தும் அச்சறுத்தியுள்ள தன் காரணமாக, அமைதி திரும்பவும் சமூக நல்லிணக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் திராவிடர் கழகத்தினரால் 14.11.2012 அன்று சென்று பார்வையிடப்பட்டு வேதனை அடைந்த தோம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை வெட்டிக் கொல்லுங்கள் என்ற சிலரின் வன்முறை வெறிப் பேச்சின்மீது அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது அரசு. பல்வேறு சமுதாயத்து இளைஞர்களின் தனி மனித உரிமையையும் பறித்து, அவர்களை மீண்டும் மனுதர்ம காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் சில மகுட விரும்பிகள் - வாக்கு வங்கி அரசியலுக்காக - தவறான ஒரு பிரச்சாரத்தை திட்டமிட்டே நடத்தி வருவதை நமது கழக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, பிரபல சமூக ஆர்வலர்களான பேராசிரியர் மார்க்ஸ் போன்ற முற்போக்காளர்கள், மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் கண்டித்து, ஜாதி வெறி கிளப்பும் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதை மிகவும் ஆழமாக வும், அழகாகவும் தருமபுரி மாநாட்டில் பேசினர்!
பல்லாயிரக்கணக்கில், மக்கள் கடலாகத் திரண்ட மக்கள் - பாதிக்கப்பட்டோர் ஏராளம் என்ற போதிலும், அவர்கள் காட்டிய கட்டுப்பாடு - பேச்சுகளைவிட மவுனத்திற்கு மிக அதிக சக்தி உண்டு சில முக்கிய தருணங்களில் என்ற அனுபவ மொழிக்கு அடையாளமாக அமைந்தது மிகவும் பாராட்டத்தக்கது.
மானமிகு தொல். திருமாவளவனின் பொறுப்பான பேச்சு
குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான சகோதரர் மானமிகு தொல். திருமாவளவனின் பேச்சு, இவ்வளவு பெரிய இழப்பு, வேதனை - சோதனைக்குப் பின்னரும், பொறுப்புணர்ந்த உரையாக, சமூக நல்லிணக்கத் தின் சாட்சியமாக அமைந்தது.
உணர்ச்சி வயப்படக் கூடிய இந்த சூழலில்கூட, எல்லோரும் (தொல். திருமாவளவன் உட்பட) அறிவு வயப்பட்டு தொலை நோக்கோடும், சமூக ஒற்றுமையை, வாக்கு வங்கி அரசியலுக்குப் பலி கொடுக்கும் பலரின் தவறான நடவடிக்கைகளி லிருந்து, பொது மக்களைக் காக்கும் கருத்தாழ மிக்க பிரகடனங்களாக உரைகள் அமைந்தன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்! இப்பிரச்சினைக் குத் தீர்வு - உடனடி முதல் வருங் காலம் வரை - தொலைநோக்குப் பார்வை , பரிகார சிகிச்சை முறை களாக, அறிவியல் அணுகு முறையைக் கொண்ட தீர்மானங்களாகும்!
டிசம்பர் 16 முதல் 31 வரை தீர்மான விளக்கக் கூட்டங்கள்
நமது இயக்கத்தவர்களும், இதில், ஒத்தக் கருத்துள்ள முற்போக்குக், கட்சிகள், சமூகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், ஆங்காங்கு உடனடியாக வருகின்ற வாரம் முதற் கொண்டே -அதாவது டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை தெரு முனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் இவற்றை நடத்தி, உலகறியச் செய்து, பரவி வரும் ஜாதி வெறித் தீயை அணைக்கும் தீ அணைப்பு வீரர்களின் பணி போல காலந் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்.
இது - காலத்தின் தேவை மட்டுமல்ல; கழகத் தலைமையின் அன்புக் கட்டளையுமாகும்.
இத்தீர்மானங்கள் தந்தை பெரியார் கொளுத்திய அறிவுச் சுடரின் ஒளி வீச்சுகள்; அச்சுடரை ஏந்தி ஒலிம்பிக் சுடர் போல் ஊரெங்கும், உலகெங்கும் பிரச்சாரத்தை அடைமழைபோல் செய்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
பல்வேறு மொழிகளில் தீர்மானங்கள்
தீர்மானங்களை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கும் கொண்டு சென்று இந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்பை, பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூலமே, நம் சமூகத்தின் டெங்கு காய்ச்சலைவிட மோசமாக உயிர்ப் பலி, உடைமை நாசம், பகற் கொள்ளை, வாழ்வுரிமை பறிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். ஒடுக்கப்பட்ட சகோதரர்கள் - இளைஞர்கள் மற்றவர்களைப் போல் தோற்றம் அளிப்பதை, படித்து முன்னேறுவதைக் கூடக் காணச் சகிக்காத புதிய மனுதர்மத்தின் மறு அவதாரங்களுக்கு அமைதி வழியில் பாடம் புகட்ட வேண்டும். மறு சிந்தனைக்கு உட்படுத்தப்படவும் வேண்டும்.
பெரியார் மண்ணில், மதவாத சக்திகளால் கால் ஊன்ற முடியவில்லை; ஆனால் அதன் மறு உருவமாக, ஜாதி வெறிச் சக்திகள் சதிராடிப் பார்க்க முனைகிறது. மதவெறி, ஜாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்று காட்ட வேண்டிய பொறுப்பு, மனிதநேயம் பேணும் நம் அனைவருக்கும் உண்டு.
மாநாட்டு வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டு!
இவ்வளவு குறுகிய காலத்தில் கழகத் தலைமையால் அறிவிக்கப்பட்டதை ஏற்று, மிக மிகச் சிறப்புடன் - சுவர் எழுத்து, தொடங்கி, மாநாட்டு ஏற்பாடுகள், வந்த முக்கிய தோழர் களுக்கு சரியான உபசரிப்பு உட்பட பலவற்றையும் செய்து, தருமபுரியை ஒரு மனுதர்ம புரியாக மாற்றிட ஒரு போதும் மக்கள் இடந்தர மாட்டார்கள் என்று காட்டிய, ஒத்துழைத்த கழகச் செயல்வீரர்கள்: புலவர் இரா. வேட்ராயன் (மாவட்டத் தலைவர்), வீ. சிவாஜி (மாவட்டச் செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாவட்ட ப.க. தலைவர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில ப.க. துணைத் தலைவர்), க. கதிர் (மாவட்டத் துணைத் தலைவர்), கரு. பாலன் (மேனாள் மாவட்ட செயலாளர்), க. சின்னராசு (பென்னாகரம் ஒன்றியச் செயலாளர்), இ. மாதன் (பாப்பாரப்பட்டி, நகரத் தலைவர்), அ. கீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), இர. கிருட்டிணமூர்த்தி (மாவட்ட ப.க. செயலர்), கதிர். செந்தில் (மாவட்ட ப.க. அமைப்பாளர்), சி. காமராசு (மாவட்ட இளைஞரணி தலைவர்), கோவிந்தராசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தீ. ஏங்கல்ஸ் (மாணவ ரணி செயலாளர்), பெ. பெருமாள் (அ.பாப்பாரப் பட்டி செயலாளர்) மற்றும் ஒத்துழைத்த தோழர்கள், பகுத்தறிவாளர்கள், தோழமைக் கட்சியினர், அனைவருக்கும், மாநாட்டிற்கு வந்து கலந்து கொண்ட அத்துணைக் கட்சி நண்பர்களுக்கும் தலைமைக்கும், எமது தோழமை உணர்வுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி - நல்லதோர் துவக்கம்!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?
- என்ற மொழிக்கேற்ப கூடிய மக்கள் திரளுக்கும் எமது மகத்தான பாராட்டுகள்.
ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் தருமபுரி மாநாடு ஒரு துவக்கம். நல்ல துவக்கம் - தொடர் பணி தொய்வின்றி தொடரட்டும். ஜாதி மறுப்பு மன்றல் ஏற்பாடுகளும் ஆங்காங்கே மலரட்டும்!
வாழ்க பெரியார்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 11.12.2012
ஆசிரியருக்குக் கடிதம்
அய்யாவின் எண்ணம்.. ஆசிரியர் முடிப்பது திண்ணம்!
1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் அம்மாவின் மறைவுக்கு அடுத்த நாள்... திராவிடர் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து.. இன்று வரை... நிதானம், பொறுமை, சகிப்புத் தன்மை, கூர்ந்த அறிவு நுட்பம், தொலைநோக்குப் பார்வை... செய்வதை திருந்தச் செய்யும் திண்ணிய உள்ளம், அடக்கு முறை களுக்கு அஞ்சாத நெஞ்சுரம், கொள் கைக்காக எதையும் விட்டுக் கொடுக்காத உயர்ந்த பண்பு... அய்யாவின் கொள் கைகளை நிறைவேற்றுவதில் அயரா உழைப்பு.. இவைகளால் இன்று...
திராவிடர் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; தமிழர் தலைவராகவும் நமக்குக் கிடைத்திருக்கும்...
விலை மதியா பகுத்தறிவுக் கருவூ லமே.. மானமிகு அய்யா வீரமணி அவர்கள்!....
எத்தனையோ பகுத்தறிவாளர்கள் உலகில் தோன்றி மறைந்திருந்தாலும்.. பாமர மக்களின் உள்ளத்திலும் அழியாது ஒளி வீசும் பகுத்தறிவுச் சுடரே தந்தை பெரியார்!....
காலத்தாலழியாத அய்யாவின் கருத்துக்களை இன்று, காலத்திற்கேற்ப.. அகில உலகும் அறியும் வகையில் இணையதளத்தையும் பயன்படுத்தும் பகுத்தறிவுச் சிற்பியே ஆசிரியர் அவர்கள்!..
எண்பது ஆண்டு அகவையில், திராவிட சிசுவாக முகிழ்த்து, ஏறத்தாழ 70 ஆண்டுகளை பொதுப் பணிக்காக செலவிட்டு வருபவர்!..
அவர் கண்ட போராட்டக்களங்கள் ஏராளம்!.. கொலை வெறித் தாக்குதல் கண்டும் அஞ்சாத துணிவு மிக்கவர், அய் யாவைப் போல! பெரியார் மணியம்மை யார் அறக்கட்டளையின் வாயிலாக... செயல்படும்.. 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை... திறம்பட நிர்வகிக்கும் சிறந்த நிர்வாகி... சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்.. திராவிடர் கழகக் குடும்பத்தலைவர்.. குறை காண முடியா ஒழுக்க சீலர், தன்னலம் இல்லா தன் மானத் தளபதி.. வாழ்வியல் சிந்தனை களை வாரி வழங்கும் சிந்தனைக் கருவூ லம், நீதி, நேர்மை, உண்மை, வகுப்புரிமை, பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு இவைகளுக்காக தெளிவாகக் குரல் கொடுக்கும் அற்புதப் பேச்சாளர்.
சுயமரியாதை திருமண நிலையத்தின் வாயிலாக ஜாதி ஒழிப்புக்கு வழிவகை செய்து வரலாறு படைத்து வரும் பெரி யாரின் பெருந் தொண்டர்... எதையுமே அய்யா வழியில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றதால்.. தனது 80ஆம் ஆண்டு பிறந்த நாளைக்கூட.. பயனுள்ள விழா வாக... ஆக்கப் பணிகள் நிறைந்த விழா வாக மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் காக்கும் விழாவாக... பெரியார் (தொண்டர்கள்) நலப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் விழாவாக...கொண்டாட வேண்டும் என்ற புதுமையான, அறிவுலகம் போற்றும் பயனுள்ள விழாவாக மாற்றி புதுமை படைத்து விட்ட புரட்சியாளர்!
தான், அய்யாவின் அணுக்கத் தாய்மை மிகு தொண்டர் என்பதை மெய்ப் பித்து விட்டார், தனது அரிய செயல்கள் வாயிலாக!!
எதிர்காலத்திலும் தமிழர் பாதுகாப் போடும், பகுத்தறிவோடும் வாழ.. அய்யா ஆசிரியர் அவர்களின் சீரிய சிந்தனை கட்டாயமாகத் தேவைப்படுகிறது!
அதற்காகவும்... அய்யாவின் பணியை அகிலமே அறிய முயற்சி மேற்கொண்டு அதிலும் பெரு வெற்றியைக் கொண்டு வருவதற்காகவும்.... தமிழர் பாதுகாப்போடு மட்டுமல்ல உரிமை பெற்றும் வாழ்வதற் காகவும்... ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு கள் வாழ வேண்டும்!
இது தமிழர்களின் எண்ணம் மட்டு மல்ல; அய்யா இப்பொழுது உயிரோடு இருப்பாராயின் அவருடைய எண்ண மும் இதுவாகவே இருக்கும் என்பது உறுதி!
அய்யாவின் எண்ணத்தை...
ஆசிரியர் செயலாக்குவதும் திண்ணம்!
- நெய்வேலி க. தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்
தருமபுரியே - உன் சபதம் வெல்க!
தருமபுரி மண்ணை
தணலாக்கிய சொந்தங்களே!
ஒரு கணம் இனியேனும் எண்ணிப் பாரீர்!
தருமம் தலை காக்க வேண்டும்
தலைகளைக் காவு கேட்கலாமா?
தருமமல்ல - அது வருண தருமம்!
அதன் கர்ப்பத்தில் வளருவது வன்முறை
வாய்த் திறக்கும் போதே வரும் வார்த்தைகள்
தீப்பந்தம் எங்கே
கோடரி எங்கே?என்பதுதான்!
விளங்குமா நாடு?
எந்தக் காலத்திலோ எந்த ஆரியனோ
வைத்த கொள்ளி இன்னும் எரிக்கிறதே
ஏழை பாழைகளின் இல்லங்களை!
பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை
ஈன்றெடுத்தார் எம் பெரியார்!
பார்ப்பான் ஒருவனின்
தலைமுடியேனும் உதிர்ந்ததுண்டா?
தத்துவம்தான் எதிரி!
காந்தியாரைப் பார்ப்பான் கொன்றபோது
கண் ஜாடை பெரியார் காட்டியிருந்தால்
அக்கிரகாரங்கள் அத்தனையும்
அக்னி பகவானின்
இரைப்பைக்குள் அல்லவா
அடைக்கலம் தேடியிருக்கும்!
மாபெரும் மனித நேயத்
தென்றல் காற்று பெரியார்!
எரிமலைக் குழம்பில்
ஈரோடு பிறந்திருக்கலாம்;
எண்ணங்களும் எழுத்துகளும்
இடி முழக்கமாக கொந்தளிக்கலாம்
இவை உண்மைதான் என்றாலும்
தனி மனிதரை நோக்கியல்ல!
தத்துவத்தின் வேரை தரைமட்டமாக்கவே!
வருணாசிரமம் எனும் விரியன் கோட்டைகளின்
வாலை நறுக்கும் வாள் பட்டறை அவை!
பார்ப்பனர் அல்லாதார் என்னும்
இயக்க நதியின் பாய்ச்சலால்
பயிர் மகசூல் கண்டது நாடு - இது
கல்லின் மேலெழுத்தே!
ஆனால் தலித் அல்லாதார் கட்சி கட்டினால்
மீண்டு வந்த செல்வமாம்
உரிமையெலாம்
மீண்டும் மனுதர்மப்
பாம்புக் கன்றோ
இரையாகும்! நாம் அடித்துக் கொண்டால்
நக்கிக் குடிக்க
நரிகள் தயார்
எச்சரிக்கை!
பெரியார் வெறும் பெயரல்ல - உச்சரிக்க!
நெடிய பாழிருளை நெட்டித்தள்ளிய
காலத்தின் நெம்புகோல்!
எச்சரிக்கை தேவை நிதானமும் தேவை!
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது
சிறுபிள்ளைகளின் கோலி விளையாட்டே!
எரிதழலை சிறுபிள்ளைகள் ஏந்தலாமா?
எதிர்விளைவை எண்ணாமல் இருக்கலாமா?
அக்னி ஹோத்திரம் பேசலாமா?
அக்ரகாரக் கைச்சரக்கை ஏற்கலாமா?
அய்யா பெரியாரின் கருத்தை மறக்கலாமா?
இதுதான், ஆம் இதுவேதான்
தருமபுரி மாநாட்டின் தலைப் பிரசங்கம்!
தீர்க்கமான தீர்மானங்கள்
திசைகளையும் சிந்திக்கச் செய்யும்
வெளிச்சத் தூண்டல்!
வெறிகளை அடக்கும் நெறிகளின் கூட்டல்,
கெட்டுப் போவதற்குமுன்
கிடைக்கும் சந்தர்ப்பம் இது
கெட்டியாய்ப் பிடித்துக் கொள்க!
சமூகநீதிக் களத்தில் களமாட வாரீர்!
சாதனைப் பட்டியல் விரிவாகும் பாரீர்!
சக தோழனை சண்டைக்கு இழுப்பதோ!
சாம்பல் மேட்டுக்கு ஜமக்காளம் விரிப்பதோ!
இன ஒற்றுமைக்கு வேட்டு
ஜாதி என்னும் பூட்டு!
இதைச் சொல்லிச் சொல்லியே
ஈரோட்டு வேந்தர் பெரியார்
நாம் தமிழர் எனும்
ஒற்றுமையை விதைத்தார்
தமிழர்களும் ஜாதி நோய்
நீங்கிப் பிழைத்தார்
கூட்டைக் கலைக்க ஆசைப்படலாமா?
இனமா? ஜாதியா? எது தேவை?
மக்கள் கடலில் மிதந்த
தருமபுரி மாநாட்டைக்
கூட்டிக் கழித்தால்
இந்த இடத்திற்குத்தான் வரவேண்டும்
தமிழா, தமிழா, ஒன்றுபடு
தமிழன் பகையை வென்றுவிடு!
அன்பழைப்பு இது
அய்யாவின் அருமைச் சீடர்
ஆசிரியரின் அழைப்பும் இதுவே!
ஆம் நோயை நீக்கி
ஆரோக்கியப் பூங்காவில் அடிவைத்து வருக!
தருமபுரியே!
ஒற்றுமைத் தருமத்தைப்
போதித்தாய்!
ஆம் நீ ஒரு போதித் தாய்!
உன் சபதம் வெல்கவே!
- கவிஞர் கலி.பூங்குன்றன்
அம்பேத்கர் சிலை திறக்கும் இடங்களில் எல்லாம்
தந்தை பெரியார் சிலையையும் திறப்போம்!
தருமபுரி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சங்கநாதம்
விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணி வித்தார். (தருமபுரி - 9.12.2012)
தருமபுரி, டிச. 11- அம்பேத்கர் சிலை திறக் கப்படும் இடங்களில் தந்தை பெரியார் சிலை யையும் திறப்போம் என்றார் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்.
தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் 9.12.2012 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
தமிழர் தலைவருக்கு நன்றி!
தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் எந்தப் பணியை, எந்தக் கடமையைச் செய்திருப் பார்களோ அதே கடமையை அதே பணியை நமது தமிழர் தலைவர் இன்று செய்திருக்கிறார். அதற்காகக் கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை, அங்குதான் நான் சமுதாய இயலை அரசியலில் கற்றுக் கொண்டவன்.
இந்த நிலையில் இந்தத் திருமாவளவன் தடம் மாற மாட்டான் - தவறான வழியையும் காட்ட மாட்டான்.
அன்று பெரியார் போட்ட தீர்மானம்!
இதே நாளில் 1973இல் தந்தை பெரியார் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை நடத்தியதாக இங்கே குறிப்பிட்டார்கள். தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்தற்குப் பதிலாக ஜாதியையே சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்று அந்த மாநாட் டில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என்று அறியும்போது, எந்தளவு தொலைநோக்கோடு தந்தை பெரியார் சிந்தித்து இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
எங்கெங்கெல்லாம் அம்பேத்கர் சிலையைத் திறக்கிறோமோ அங்கெல்லாம் தந்தை பெரியார் சிலையையும் திறப்போம். இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை முழு மனதோடு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
உணர்ச்சி வயப்படக் கூடாது!
இந்த நேரம் மிக முக்கியமான நேரம் அமைதி காக்க வேண்டிய நேரம். உணர்ச்சி வயப்பட்டு எந்த செயலிலும் இறங்கி விடக் கூடாது அதனைத்தான் சிலர் இங்கு எதிர் பார்க்கிறார்கள். அதற்கு நாம் பலியாகி விடக் கூடாது.
என்னை யாரோ தூண்டுவதாக பா.ம.க. தலைவர் கூறி இருக்கிறார். இதில் யாரும் தூண்ட வும் இல்லை; அப்படி யார் தூண்டினாலும் அதற்குப் பலியாகி விடும் பலகீனமானவனும் இந்தத் திருமா வளவன் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். தலித் மக்கள் அரசியல் ரீதியாக பலம் பெறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை.
பெரியார் இயக்கம் போலவே...
திருமாவளவன் எந்த சமூகத்திற்கும், எந்த ஜாதிக்கும் எதிரியானவன் அல்ல. திராவிடர் கழகம் போல பெரியார் இயக்கம் போல ஒழுங்கு முறை யுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இயங்க வேண்டும் என்று கருதி செயல்பட்டு வருகிறோம். பெரியார் இறுதி மூச்சுக்குப் பிறகு நமது தமிழர் தலைவர் அவர்கள் செயல்படும் பாங்கினை உள் வாங்கிக் கொண்டு செயல்பட விரும்புகிறேன்.
தமிழர் தலைவர் சொன்னதுபோல இரட்டைக் குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக நாங் கள் செயல்படுவோம். காதல் கூடாது என்கிறார்கள். பெண்களே இல்லாத ஆண்கள் சங்கம் அமைத்தாலும் அமைப் பார்கள் பெண்களுக் குச் சொத்துரிமை கூடாது என்று கூற ஆரம்பித்து சொத்துரிமையும் கூடாது என்று தீர்மானம் போட்டாலும் போடுவார்களா என்று தெரியவில்லை.
நன்றி! நன்றி!!
இந்த மேடையில் உள்ளவர்கள் தலித் அல்லா தார்தான். ஆனாலும் தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்க முன் வந்துள்ளனர். அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
பெரியாரில் “கருவாகி” உருவான பெருமகனே!
பெரியார்
இமயம் என்றால்
அதனைப் போர்த்தியிருக்கும்
வெண்பனி அழகு நீ!
பெரியார் புவியென்றால்
அதனை மாசுபடாமல்
காக்கும் ஓசோன் படலம் நீ!
பெரியார்
ஆழ்கடல் என்றால்
அதில் மூழ்கி முத்தெடுக்கும்
வித்தைக்கற்றவன் நீ!
பெரியார் ஆகாயமென்றால்
அதனினின்றும் வைரஇழைகளாய்
தரையிறங்கும் மாமழை நீ!
பெரியார் ஆதவனென்றால்
அதன் ஒளிக்கற்றைகளை உள்வாங்கி
குளிர்தருவாய்; தன்மதியாய்
இரவிலும் ஒளி உமிழும்
எங்களுயிர்த் திங்கள் நீ!
பெரியார்
பகுத்தறிவுப் பூங்காவென்றால்
அதில் கள்ளமாடுகள்
உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளும்
ஊதியமில்லா ஊழியன் நீ!
பெரியார்
கழனியென்றால்
அதில் விளைந்த
அறிவுப் பயிர்களை
இருள்சூழ் இல்லங்களில் சேர்த்து
அருள் செழிக்கவைக்கும்
பேருழவன் நீ!
பெரியார்
கணினியென்றால்
அதன் வழி
உலகத் தமிழரின்
உள்ளங்களையெல்லாம்
அறிவு வழியில்
அணியப்படுத்தும் இணையம் நீ!
பெரியார்
பல்கலைக் கழகமென்றால்
பெரியாரியலை பசுமரத்தாணியாய்
பைந்தமிழர் உள்ளங்களில்
பதியவைக்கும் பேராசிரியன் நீ!
பெரியார்
மலைத் தொடரென்றால்
அதில் பிறப்பெடுத்து
தமிழ் நிலத்தைக் கொழிக்கவைக்கும்
வற்றாத நதிநீர் நீ!
பெரியார்
தத்துவமென்றால்
திரிபுவாதத் திருடர்களிடமிருந்து
பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும்
அதனைக் கொண்டு செல்லும்
அறிவார்ந்த வாரிசு நீ!
பெரியார் அறிவுச் சொத்தென்றால்
ஆன்மீகக் கறையான்களும்
அடுத்துக் கெடுக்கும் புல்லுருவிகளும்
அழித்துவிடாமல் பாதுகாத்துவரும்
ஆயுட்காலப் பெட்டகம் நீ!
பெரியார் ஆலமரமென்றால்
அதில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு
எத்தனையோ பறவைகள் பறந்துவிட
இயற்கைச் சீற்றங்களும்
மனிதக் கொடுமைகளும்
வந்து வந்து மிரட்டியும்
மிரளாத; மனங்குலையாத
அன்னை மடியைவிட்டு
அகலாத அக்கினிக் குஞ்சு நீ!
பெரியார் விட்டுச் சென்ற
அசையும் -_ அசையா சொத்துக்களை
அப்படியே அடைக்காத்து
பன்மடங்காய் பெருக்கி
பார் புகழ் நிறுவனங்களாய்
ஆக்கிக் காட்டிய
அய்யாவின் அச்சே!
அவர்தம் உயிர்மூச்சே!
பெரியாரில் கருவாகி
உருவான பெருமகனே!
பெரியாரில்; பெரியாரால்
நீயென்றால்,
உன்னில்; உன்னால்தானே
இயங்குகின்றோம்
இமயம் தொட்டு!
- சீர்காழி கு.நா.இராமண்ணா.
இதயத்தில் வீற்றிருக்கும் வீரமணி வாழ்க!
ஆத்திகம் பேசு வார்முன்
அறிவியல் பேசி, தீய
சாத்திரம் பேசு வார்முன்
சரித்திரம் பேசி, மூடக்
கோத்திரம் பேசு வார்முன்
கொள்கையைப் பேசி, உன்றன்
நாத்திறம் மூலம் நாட்டில்
நல்லதோர் மாற்றம் செய்தாய்!
கற்றவர் கணக்கா யர்கள்
கண்ணியம் மிக்க வர்கள்
உற்றவர் உழைப்ப வர்கள்
ஓங்கிடும் கீர்த்தி பெற்றோர்
பற்றினைத் தமிழ்பால் வைத்தப்
பண்பினில் சிறந்த வர்கள்
நற்றுணை யாக உன்னை
நம்பியே வாழு கின்றார்!
- புலவர் இரா. கூத்தரசன், பெருவளப்பூர்
எனக்கு அமைந்த முதல் ஊர்தி வாழ்விணையர் அவர்கள்தான். அந்த ஊர்தி இருக்கிற காரணத்தால்தான் எனது இலட்சியப் பயணம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.
எங்களுடைய தேனிலவு எல்லாம் தந்தை பெரியாருடைய பிரச்சாரப் பயணமே தவிர வேறு எதுவும் கிடையாது.
நானோ ஒரு காட்டுச் செடி போல இருந்தவன். அவர்களோ குரோட்டன்ஸ் செடி போன்றவர்கள்.
நான் எவ்வளவு துன்பத்தைத் தாங்குகிறேனோ அந்த துன்பத்தை அவர்கள் தாங்கித் தாங்கிப் பழக்கப்படுத்தும்படியாக ஆக்கப்பட்டு விட்டோம் என்பது இருக்கிறதே அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாய நலம் உள்ள ஒருவரை தந்தை பெரியார் எனக்கு அடையாளம் காட்டினார் என்று சொன்னால் பணி தொடருவதற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லி இந்த நேரத்திலாவது நான் என் இணையருக்கு நன்றி காட்ட வேண்டும் என்ற தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வரிகளைப் படித்ததும் ஒரே பூரிப்பாயும் இன்பமாயும் இருந்தது. (நன்றி: விடுதலை நாளிதழ் 24.8.95)
அன்றையக் காலத்தில் பெண்ணே பெண்ணைப் புகழ்ந்தாலும் ஆடவர் யாராவது வேறொரு பெண்ணைப் புகழ்ந்தாலும் பெண் வர்க்கம் சகித்துக் கொள்ளாது என்ற நிலைமை இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு பெண்கள் பொறுமையின் சிகரம் என்று வர்ணித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையின் உருவமாக வும் இருந்தார்கள். ஆனால் இன்று பொறுமையும் அவளை விட்டுப் போய்விட்டது; பொறாமையும் போய்விட்டது என்றே கூறலாம். காரணம் இன்று பகுத்தறிவுப் பகலவன் வித்திட்ட விழிப்புணர்வால் ஆணுக்குச் சரிநிகராக வந்துவிட்டாள். இருந்தா லும் இன்றும் அவளிடம் ஒரு ஏக்க உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
தான் செய்த செயல்கள் சரியா? சரியற்றதா? தானே அதற்கு மதிப்பெண்கள் போடுவதைக் காட்டிலும், தனக்குகந்தவர்கள் மதிப்பளிப்பதில் தான் மகிழ்ச்சியும் மனநிறைவும், மேன்மேலும் தன்னை அச்செயலுக்கு ஈடுகொடுக்க ஆயத்த மாகும் நிலை உண்டாக்கும். இது நாடு நலம் பெறத் துடிக்கும் எல்லோர்க்கும் பொருந்தும்.
அடிமைப்பட்ட பெண்ணினம்; அடிவாங்கிய பெண்ணினம்; அச்சுறுத்தலுக்கு அடங்கிய பெண்ணினம்; இப்படி வாழ்ந்த இனம் இன்று நாடு நலம் பேண, துணைவனுக்கு துணையாய் இருந்து; தலைவனை தரணி போற்றும்போது, தலைவியை தலைவன் போற்றுவது பெருந்தன்மை நிறைந்த கடமை என்று எண்ணி இனமானக் காவலரின் பெருந்தன்மை நிறைந்த உள்ளுணர்வை போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. திராவிடர் கழகத் தலைவரும் நம் குடும்பத் தலைவரும் விடுதலை நாளிதழின் ஆசிரியருமான மானமிகு கி. வீரமணி அவர்களின் பாராட்டுகள் அவரின் இணையர்க்கு மட்டும் கிடைத்தவையாக கருதவில்லை. பெண்ணினத்திற்கே கிட்டிய பாராட்டுகள் என்றே எடுத்துக் கொண்டு பெருமைப்படுகிறோம்.
எண்பதாம் அகவை விழா கொண்டாடும் இந்நாளில் மகளிர் சார்பில் பொங்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
- திருமகள்
பிறவிப் போராளி
ஜனநாயகத்தின் அருமையும், பெருமையும் மக்களுக்குத் தெரிய அன்றைய மத்திய அரசு ஒரு காரியம் செய்தது. அவசர நிலைப் பிரகடனம் வெளியிட்டது. அதற்கு இணங்கிப் போகாத அன்றைய தி.மு.கழக அரசை டிஸ்மிஸ் செய்தது.
1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டது. சூரியனை மறைக்க பவானி ஜமுக்காளமா?
அன்று திண்டிவனத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுக்கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழம்மா மணியம்மையாரும். வீரமணியும் மதியமே புறப்பட்டுச் சென்றனர்.
புறப்படுவதற்கு முன்னர் வீரமணி பிரபல புத்தக நிலையத்தில் புத்தகம் வாங்கினார். அதன் பெயர் நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம்(Freedom at Midnight) என்பதாகும். நாடு விடுதலையாகும் தருணத்தில் டெல்லி பட்டணத் திரைமறைவுகளில் என்னென்ன காரியங்கள் நடந்தன என்பதனை அந்தப் புத்தகம் விவரிக்கிறது. நாடு முழுமையும் பரபரப்பாக விற்பனையானது.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வீரமணி பேசிய பின்னர், அம்மா பேசிக் கொண்டிருந்தார். சென்னையிலிருந்து தொலைப்பேசியில் வீரமணிக்கு அவசர அழைப்புகள் வந்தன. அதேசமயத்தில் கழகப் பிரமுகர்கள் வானொலிச் செய்தியை துண்டுச் சீட்டுகளில் எழுதி வீரமணியிடம் கொடுத்தனர்.
ஒரே செய்திதான். தி.மு.க. அரசை மத்திய அரசு தீண்டிவிட்டது என்பதுதான். அந்தச் செய்தியைப் பார்த்த அம்மா தொடர்ந்து பேசினார். தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டது பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. மீண்டும் நியாயம் வெல்லும்; நேர்மை நிலைநாட்டப்படும். உதயசூரியன் மீண்டும் உதிப்பான் என்று அம்மா உருக்கமாகப் பேசினார். கூட்டத்தில் பரிபூரண அமைதி.
தமிழகத்தில் அடுத்து என்ன நடைபெறுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் குடிகொண்டிருந்தது. ஏற்கெனவே டெல்லிச் சிம்மாசனத்திலிருந்த செங்கோல் களவு போய் சூட்டுக்கோல் நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தது.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அம்மாவும், வீரமணியும் சென்னை திரும்பினர். நள்ளிரவில் சுதந்திரத்தைத் திருட்டுக் கொடுத்துவிட்ட சோகத்தில் சென்னை மாநகரம் மூழ்கியிருந்தது. சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன. தூக்கத்தையே காணாத அண்ணாசாலை கூட அன்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.
ஆனால், வேப்பேரிப் பகுதி தினத்தந்தி திருப்பு முனையிருந்து அய்யாவின் திடல் கடந்தும் ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சாலையோரங்களில் காவலர்கள் கண் விழித்துக் காத்திருந்தனர். அம்மாவும், வீரமணியும் வந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தது. அவ்வளவு தான்.
போலீஸ் பட்டாளம் சுற்றி வளைத்தது; திடலுக்கு வெளியேயும் தமிழ் தெரியாத காவலர்கள் திடலுக்குள் நம் மொழி தெரியாத வட மாநிலக் காவலர்கள், ஏதோ மஞ்சு விரட்டுக் காளையை மடக்கிப் பிடிப்பவர்கள்போல் அவர்கள் சுற்றி வளையமிட்டு வீரமணியை நெருங்கினர். அம்மாவை அவரது அறைக்கு அனுப்பிவிட்டு வீரமணி விடுதலை அலுவலகத்தில் நுழைந்தார்.
அவரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நுழைந்தனர். சென்னை மாநகரக் காவல்துறையின் துணை ஆணையரான (ஏ.சி.) பட் வீரமணிக்கு சற்று தூரத்தில் நின்றார்.
‘‘Sir we have come for the unpleasent job.’’
அய்யா, விரும்பத்தகாத காரியம் செய்ய வந்திருக்கிறோம் என்றார் பட்.
வீரமணியைக் கைது செய்யப் போகிறோம் என்பதனைத்தான் அவர் நாகரிகமாகவும் பணிவாகவும் கூறினார்.
அந்த நள்ளிரவில் காவல்துறையினர் கதவுகளைத் தட்டுகிறார்களென்றால், கல்யாணப் பத்திரிகை வைக்கவா வருவார்கள்?
மிஸ்டர் பட், நான் தயார்; நீங்கள் என்னை கைது செய்யலாம்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். அதற்காக நான் வருந்தவில்லை என்றார் வீரம் விளையும் மணி.
அவருடன் அம்மாவின் தம்பி தியாகராசன், விடுதலை நிருவாகி என்.எஸ். சம்பந்தம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களைக் கைது செய்ய ஏறத்தாழ 200 காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஒருவேளை அய்யாவின் தொண்டர்கள் பாயும் புலிகள் என்று அந்தக் கன்னடத்துக் காவல்துறை அதிகாரியிடம் யாரோ சொல்லியிருக்கக் கூடும். பொதுவாக அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோடுகிறவர் களை நடமாடும் தீப்பொறிகள் என்றுதானே உலகம் கருதுகிறது.
கைது படலத்தை அம்மா கவனித்துக் கொண்டிருந்தார்.
வீரமணியும், மற்றவர்களும் வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது பின்னிரவு 2.30 மணி. மாநகரக் காவல்துறை ஆணையாளர் அலுவலகத் திற்குக் கொண்டு வரப்பட்டனர். ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். சூழ்ந்து நின்ற அதிகாரிகள் அனைவருமே புதுமுகங்கள். அறிமுகமான ஒரு அதிகாரியைக்கூடக் காண முடியவில்லை.
கைது செய்யப்பட்ட தி.மு. கழகத் தோழர்களும் ஒவ்வொருவராகக் கொண்டு வரப்பட்டனர். ஆமாம், வீரமணியையும் அவர்களையும் எதற்காகக் கைது செய்தனர்? அந்த நிமிடம்வரை காரணம் சொல்லப்படவில்லை. ஏதோ திகில் படம் பார்க்கும் மனநிலையில்தான் எல்லோருமே இருந்தனர்.
முதல் நாள் மாலைவரை ஆளும் கட்சியினர் என்ற முறையில் தி.மு. கழகத்தினரின் கூப்பிட்ட குரலுக்குக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள், இன்றைக்கு அதே கழகத்தினரை சுட்டெரிக்கும் கண்களால் பார்த்தனர்.
நிலைமை தெரியாது; காப்பி கிடைக்குமா? டீ கிடைக்குமா? என்று தி.மு. கழகத் தோழர்களும் கேட்டு வைத்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் கீழ்வானம் சிவந்துவிடும். பொழுது புலர்ந்துவிடும். நடிகவேள் எம்.ஆர். ராதாவைக் கைது செய்து அழைத்து வந்தனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் சிறை சென்ற அவர் தண்டனைக் காலம் முடிந்து சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந்தார். தம்மை ஏன் கைது செய்தனர் என்று அவருக்கும் புரியவில்லை. ஆனால், அவரைப் பார்த்ததும் அனைவரின் மன இறுக்கமும் தளர்ந்தது.
ராதா அவர்கள் ஆணையர் அலுவலகத்தை நோட்டம் விட்டார். சுவர்களில் மாட்டப்பட்டிருந்த ஆணையர்களின் படங்களைப் பார்த்தார்.
ஏம்பா, வீரமணி இவங்களெல்லாம் யாரு? சுவர்களில் இருந்த படங்களைப் பார்த்து கேட்டார்.
இவர், அய்.ஜி. அருள் என்றார், வீரமணி.
அடுத்து தொங்குகிறாரே அவரு யாரு?
அவர் அய்.ஜி. ராஜரத்தினம். ஏற்கெனவே பணி செய்தவர்கள் என்றார் வீரமணி.
அந்த வரிசையில் திருவள்ளுவர் படமும் இருந்தது.
ஏம்பா வீரமணி, நம்ம திருவள்ளுவர் எப்போ அய்.ஜி.யாக இருந்தார்? என்று ராதா கேட்டார்.
அவ்வளவுதான், கனத்த மனச்சுமையுடன் இருந்த அனைவருமே வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.
சொல்ல மறந்துவிட்டோம். நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம் என்ற நூலைப் படிப்பதற்கு முன்னரே அன்றைய நள்ளிரவில் வீரமணியின் சுதந்திரம் பறிபோய்விட்டது.
அமர்ந்த நிலையிலேயே பலர் கண் அயர்ந்தனர். மேஜைமீது சிலர் முடக்கிப் படுத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காலைப்பொழுதிலும் கொண்டு வரப்பட்டனர். காலைக்கடன் முடிந்ததும், மதியம் அனைவரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சரித்திரத்தில் கறைபடிந்த ஓர் அத்தியாயம் இணைக்கப்பட்டது.
***
வீரமணியைத் தனது வாரிசு என்று அய்யா அவர்கள் அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார். அதற்கு அவருடைய நாணயமும், பணிவும்தான் காரணமா? அவருடைய எளிமையும், இன்முகமும்தான் காரணமா? சமுதாய தொண்டருக்குரிய அத்தனை பண்புகளும் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. அதனை அய்யா அவர்கள் அறிந்துதான் வீரமணியிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்திருக்கிறார்.
முற்றுப் பெற்று விடுமோ என்று அச்சம் கொண்ட திராவிடர் இயக்க வரலாறை அவர் தொடர்ந்து வடித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் வழக்குரைஞர், சமூகநீதிப் போராளி பழைமைச் சமுதாயத்தைச் சாடிய அய்யாவின் பணியினை இன்றைக்கு முன்னெடுத்துச் செல்கிறார்.
இத்தனை சிறப்பும் கொண்ட ஒரு தலைவர் தமிழகத்தில் இனித்தான் பிறக்கவேண்டும். அவர் பெரியாரின் பெருந்தொண்டர். ஓட்டுப் பெட்டி அரசியலை உதைத்துத் தள்ளியவர். அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருந்தால், தமிழக அரசியலே அவர் வீட்டு முற்றத்தில்தான் பாடம் படித்திருக்கும்.
வாக்குப் பெட்டி அரசியல் என்றால் முதலில் அய்யாவின் சித்தாந்தங்களும், தத்துவங்களும் சிதைந்து போகும். மக்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் மூடப் பழக்கங்களுக்குப் பூச்சூடவேண்டும்.
மாண்புமிகு என்பதனைவிட மானமிகு என்பதைத்தான் வீரமணி விரும்புகிறார், நேசிக்கிறார்.
எதிர்காலத்தில் திராவிடர் கழகத்தை வழிநடத்திச் செல்ல தக்கார் வீரமணிதான் என்று அய்யா தேர்வு செய்தது நியாயமானது. அவரது நீண்ட நெடுங்காலப் பொதுவாழ்வில் அய்யா மனிதர்களை எடை போடக் கற்றுக் கொண்டிருந்தார். அவர் தேர்வு செய்த வீரமணி இன்றைக்கு எழுபத்தி ஏழு வயதை நிறைவு செய்திருக்கிறார். ஆனால், அறுபத்தி எட்டு ஆண்டுகள் பொது வாழ்வில் ஒளிவீசியிருக்கிறார். இவ்வளவு குறைந்த வயதில் பத்தே வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்துப் புகழ் பெற்றவர் வீரமணியாகத்தான் இருக்கும்.
***
ஒரு போர் வீரனின் தோளில் தொங்குகின்ற துப்பாக்கியும், வீரமணியின் தோளில் துவள்கின்ற துண்டும் ஒன்றுதான். அவர் ஒரு பிறவிப் போராளி. ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் சாடுகின்ற போர்க் குணம் இயல்பாகவே அவருக்குப் பிறந்துவிட்டது.
கடலூரில் அவரோடு படித்தவர் உலகம் அறிந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். இளம் பருவத்திலேயே வீரமணி எவ்வளவு வீராவேசமாகப் பேசுவார் என்பதனை ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடலூர் கடைத்தெருவில் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள திடலில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் பனிரெண்டு வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்று பிராமணர்களையும், நமது புராணங்களையும் அதில் பொதிந்துள்ள ஆபாசங்களையும், கடவுள்களையும் கிழி கிழியென்று கிழிப்பதை வாயைப் பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் என்கிறார் ஜெயகாந்தன்.
தமிழக அரசு நிறைவேற்றிய நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து அய்யா அவர்கள் ஓர் இயக்கம் தொடங்கினார். 1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலமெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. அந்தக் கூட்டங்களில் அய்யாவோடு பங்குகொண்டவர் வீரமணி. உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டவர் வீரமணி.
வீரமணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்புரிமைக்கான போரை அய்யா தொடங்கினார். மாணவர்கள் படிப்பு நிறுத்தம் செய்து, பள்ளிகள், கல்லூரிகளின் முன்பு வாயிற்கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட வீரமணி மாநிலமெங்கும் சுழன்று பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டே அவருடைய படிப்பு பாதியில் நின்றது.
அதனைத் தொடர்ந்து கடலூரில் தனது சகோதரர் நடத்திய தேநீர் கடையில் வீரமணி அமர்ந்திருந்தார். சகோதரர் தி.மு.க. உறுப்பினர். அவரைத் தேடி ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து அண்ணா இறங்கினார். அப்போது அவர் புதிதாய் பிறந்த தி.மு. கழகத்தின் தலைவர். வீரமணியோ அய்யாவின் பிரச்சாரப் போர்ப் படைத் தளபதி.
வீரமணியின் சகோதரர் அப்போது கடையில் இல்லை.
அண்ணாவை வீரமணி வரவேற்றார். கருத்து வேறுபாடுகள் காணாமல் போயின.
காரில் ஏறு குறிஞ்சிப்பாடிவரை போய் வருவோம் என்றார் அண்ணா.
காரில் வீரமணி ஏறினார்; பாதியிலேயே அவர் படிப்பு நிறுத்தம் செய்ததை அறிந்த அண்ணா வேதனைப்பட்டார்.
காஞ்சிபுரம் வா, படிப்பைத் தொடரு என்று அண்ணா கூறினார்.
அண்ணாவின் அழைப்பு வீரமணியின் இல்லத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
அண்ணாவின் அழைப்பை ஏற்று வீரமணி காஞ்சி செல்லவேண்டும். கல்லூரிப் படிப்பைத் தொடரவேண்டும் என்பதுதான் குடும்பத்தாரின் ஏகோபித்த கருத்து.
அய்யா ஒரு முகாம்; அண்ணா ஒரு முகாம். அய்யா முகாமின் தொண்டனாகிய நான் அண்ணாவின் அழைப்பை ஏற்று காஞ்சி சென்று எப்படி படிக்க முடியும்?
இனியும் அய்யாவின் வழியில் மாற்று இயக்கங்களை விமர்சிக்க வேண்டியிருக்கும் என்று வீரமணி மறுத்துவிட்டார்.
இப்படி அவருடைய வாழ்விலும் போராட்டங் களைச் சந்தித்தார்.
(மறைந்த எழுத்தாளர் `சோலைஎழுதி ஆயிரக்கணக்கில் விற்பனையான வீரமணி ஒரு விமர்சனம்எனும் நூலிலிருந்து... )
நம்பிக்கைச் சுடரொளி
எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் தன்னைப் பொதுத் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழர் தலைவரின் அரும்பெரும்பணிகளை இந்தச் சிறிய கட்டுரைக்குள் அடக்கிக் காட்ட எண்ணுவது அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் அரிய செயல். மாதந்தோறும் ஏறத்தாழ இருபது நாட்களுக்கு மேல் தமிழகத்திலும், அவ்வப்போது வடபுலங்களிலும், ஆண்டுக்கு ஓரிரு முறைகள் அயல்நாடுகளிலும் பயணம் செய்து பெரியாரியக் கொள்கை விளக்கத்திலும், மக்கள் தொடர்பிலும், இயக்க வளர்ச்சியிலும், மூட நம்பிக்கை ஒழிப்பிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொள்வதைப் பற்றியும் ஈங்கு சுருக்கிக் சொல்லுதல் எளிதல்ல. தலைசிறந்த பேச்சாற்றலும், கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் ஆளுமைத் திறனும் ஆய்வுச் சிந்தனையும் கொண்ட ஆசிரியர் அவர்களிடம் அய்ந்து மணித்துளிகள் உரையாடினாலே, தமிழகத்தின் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல், நிலைமைகளை தெளிவாக அறிந்து பயன் பெறலாம். ஆயினும் யானறிந்த வரையில் தலைவர் அவர்களின் மனித நேயம், அளப்பரிய ஆற்றல், உறுதி, ஊக்கம், சட்ட நுணுக்கம், பொது அறிவு பற்றிய சில செய்திகள் இங்கு கொடுக்கப் பெற்றுள்ளன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் யான் பின்னால் பயின்றாலும் வீரமணி அவர்கள் கடலூரிலிருந்து ரயில் பயணம் செய்து வரும் மாணவர் என்று அறிவேன். இரவில் வந்து செல்லும் ஓரிரண்டு துரித ரெயில் தவிர அனைத்து ரயில்களும் அந்நாட்களில் ஆடி அசைந்து முக்கி முனகி ஒவ்வொரு இடத்திலும் நின்று நின்று இரண்டு மணி நேரம் கழித்துச் சிதம்பரம் வந்து சேரும். ரயில் பயணத்திலேயே தினமும் நான்கு மணிநேரம் போய்விடும்.
அப்படி கடலூரிலிருந்து வருகின்ற மாணவர் குழுவோடு ஒன்றாக வந்து இனிமையாகப் பழகி னாலும், அரட்டைச் கச்சேரியில் சேராமல் ஏதாவது ஒரு நூலையோ, பத்திரிகையினையோ படித்துக் கொண்டு வருவதே இவரது பழக்கம். இல்லை யானால் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி தங்க மெடல் பரிசு வாங்க முடியுமா? அறிவுப் பசியை அடக்கியிராவிட்டால் அரங்கத்தில் ஏறிப் பரிசு பெற்றிருக்க முடியுமா?
முதுகலைப் படிப்புக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திலேயே ஆய்வுப் பணியில் சேர்ந்தாலும், அதனை ஒதுக்கி விட்டு சென்னையில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகிறார். தந்தை பெரியாரின் ஆணைப்படி கடலூர் வழக்கு மன்றத்தைப் புறந்தள்ளி மீண்டும் சென்னை பயணம். விடுதலை நாளிதழை விட்டு விடுவதா அல்லது ஈரோட்டுக்கு எடுத்துச் சென்று வார இதழாக மாற்றுவதா எனும் பெரியாரின் வினாவுக்கு விடை கிடைத்து விட்டது. வீரமணி என்னும் இளைஞர் 1962ஆம் ஆண்டில் சென்னையில் பெரியார் திடலில் விடுதலை நாளிதழின் ஆசிரியராகிறார். பெரியாரே அழைத்துச் சென்று ஆசிரியர் இருக்கையில் அமர்த்துகிறார்.
எழுத்தாளர்களின் பத்திரிகை வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. சிற்சில நேரங்களில் பத்திரிகையின் வாழ்வும் நிரந்தரம் இல்லாமலேயே போய்விடும். அதுவும் ஒரு குறிக்கோளோடு பணபலமின்றி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு அரசின் சட்ட திட்டத்துக்கு அடி பணிந்து பத்திரிகையினை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. பத்திரிகையே மூச்சுத்திணறுவது ஒரு புறமிருக்க, பத்திரிகை ஆசிரியருக்கும், அதனுடைய நிறுவனருக்கும் ஒத்துப் போகாது. பண்டித நேருவுக்கு நெருங்கியவராகக் கருதப்பட்ட கே. ராமராவ் என்பார் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டுக்கு வருவதற்கு முன்னர் ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டு காலம் பதினேழு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். அப்படியின்றி தந்தை பெரியாரின் சிந்தனையை செயலை, உயிர் மூச்சைத் தனதாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் அய்ம்பதாண்டு காலம் விடுதலையின் ஆசிரியராக இருந்ததுவும், தொடர்ந்து இருப்பதுவும், செய்தி உலகத்தில் ஒரு பெரும் இமாலய சாதனை.
எந்த நேரத்திலும் எந்தத் தலைப்பிலும் எடுத்த எடுப்பிலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் தங்கு தடையின்றி பொருத்தமாகவும் சரளமாகவும் பேசுகின்ற தமிழர் தலைவரின் பேச்சாற்றல் வியப்புக்குரியது. கொச்சைத் தமிழும் பண்டிதர் நடையும் ஒதுக்கிய பண்பாட்டுத் தமிழ். நயத்தக்க நாகரிகம், நல்லதோர் மேற்கோள், பொருத்தமான பேச்சு, நிதானமான சொல்லோட்டம் ஆகிய இவையன்றி ஆவேசமோ, ஆத்திரமோ, அறைகூவலோ விடுக்கின்ற அகங்காரப் பேச்சாக இருக்காது. எதிரியின் ஆத்திரத்தைத் தூண்டாமல் அடங்கி விடச் செய்துவிடும்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறுமியர் சிலர் இயற்கைச் சூழலைப் போற்றி ஆதரிக்கின்ற ஒரு நடன நிகழ்ச்சி. அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டுமாறு வேண்டுகோள். மேடையேறிய தலைவர் பேசியது அய்ந்து மணித்துளிகளே என்றாலும் நடனக்கலை பற்றி அவர் பயன்படுத்திய கலைச் சொற்கள் அனைத்தும் அவரது பரந்துபட்ட, ஆழ்ந்த அறிவின் விளக்கமாக இருந்தது. பட்டமளிப்பு விழா, திருமணங்கள், அரசியல் அரங்கம், விவாத மேடை பாராட்டு விழா போன்ற இடங்களில் தலைவரின் சொற்பொழிவு வெறும் உத்தேசமாக அல்லாமல் அய்யத்துக்கு இடமின்றி உண்மையோடும் ஆதாரத்தோடும் அமைந்திருக்கும். குறிப்புகளும், ஆதாரங்களும் அதிகமாயின் மேடையில் அந்தந்த நூல்களே பேசும்.
ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்களின் சொந்தக்காரர் அவர். அவ்வப்போதும் தொடர்ந்தும் படிக்கின்ற நூல்களின் மிகச் சிறந்த கருத்துகளைக் கலந்து அவர் எழுதிய மனித வளக்கலை நூல்கள் இலக்கியம், மொழி, வரலாறு, சமூக இயல், அரசியல், மருத்துவம், உடல்நலம் பற்றிய அரிய கருத்துகளை உள்ளடக்கியவை. பொதுவாழ்வில் அதுவும் சமூகத்தில், அரசியலில் பங்கு பெறும் தலைசிறந்த அறிஞர்களின் இத்தகைய சிந்தனைக் கருவூலங்களை மாணவர்க்குப் பாடமாக வைக்கும் மனப்பக்குவம் கல்லூரிகளில் ஏற்பட வில்லை என்பது ஒரு பெருங்குறை. இதனைச் சீர் செய்ய விரும்பும் பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் இத்தொகுதிகளைக் கருத்தூன்றிப் பயில வேண்டும்.
குணத்தில் உயர்வும், கொள்கையில் பிடிப்பும் அன்பின் மிகுதியும் நேர்மையில் சீர்மையும் தலை வருடன் கூடப்பிறந்தவை. கொண்ட கொள்கை யினை அவர் குழிதோண்டிப் புதைப்பதில்லை. ஒருமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூரில் சிறைவாசம். உடல் நலம் இல்லாத வீரமணி அவர்களை நீங்கள் ஏன் விடுதலை செய்யக் கூடாது எனும் நிருபர்களின் கேள்விக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, விடுதலை அளித்தாலும், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார், என்று கூறிய பதில் தமிழர் தலைவரின் தனித் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கருஞ்சட்டைப் பட்டாளம் சிறையிலிருக்கும்போது, தான் மட்டும் வெளிவரும் பேச்சுக்கே இடமில்லை என்பது உண்மை.
கொள்கையில் உறுதிப்பாடு என்பது பலரது விருப்பு வெறுப்புக்கு ஆளாகும் சிக்கல். வளைந்து கொடுக்காத உறுதி. ஒரு சமயத்தில் அன்றைய முதலமைச்சருக்கு பிடிக்கவில்லை. அதனால் வில்லிப்புத்தூர் அருகே தலைவர் வந்த காரின் மீது தாக்குதல். உடைந்த கண்ணாடி நெற்றிப் பொட்டில் சிதறி இரத்தக் கசிவு. அந்த நிலையிலும மம்சாபுரம் அருகே நிகழ்ச்சி முடிந்த பின்னரே மருத்துவமனை. எந்தநிலையிலும் அந்த முதல்வரை மன்னித்தோம் அவரது செயலை மறந்தோம் என்கிற பெருந்தன்மை. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்னும் சகிப்புத் தன்மை. எதிர்ப்பு கண்டு கலங்காத, தோல்வி கண்டு துவளாத மனப்பக்குவம்.
உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றான் பாரதி. தலைவரோ அச்சம் தவிர்த்த நிலை மட்டுமல்ல. பதட்டம் இல்லாமல் பகையினை வெல்லும் மன உறுதியாளர். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களின் அருங்கொடையால் டில்லி நகர்ப்புறத்தில் உருவாகி அங்குள்ள கிராமப்புற மக்களின் கணினிப் படிப்பிற் கும், தையல் வேலைக்கும், தொழில் வாய்ப்புக்கும் வழி திறந்துவிட்ட எழிலான கண்ணாடிக் கட்டிடம் ஒரு அரசியல் கோமாளியின் கோணல் புத்தியின் வழிப்பட்டு நீதிமன்றத் தடையுத்தரவு வரும் நிலையிலேயே தரை மட்டமாக்கப்பட்டு விட்டது.
உணர்ச்சி வயப்பட்டோராயின் உடைந்த மனதும் உணர்ச்சியின் நெகிழ்வும் கலங்கிய உள்ளமும் உயிரையே போக்கியிருக்கும். ஆனால் கலங்கா நெஞ்சமொடு கண்ணீர் சிந்தாமல் கருத்தூன்றிப் போரிட்டு நியாயத்தை உறுதி செய்த தலைவர் அரசின் தவறுக்குத் தண்டனைபோல அந்த இந்திய தலைநகரிலேயே பிறிதோர் மனையும் பெற்றுவிட்டார். பெரியாரியத்தைச் சிக்கல் செய்யலாமே தவிர சீரழிக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது.
பெரியாரியக் கொள்கைகள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் பரவி நின்றது. அவரது கொள்கை வழித் தோன்றலாகிய தானைத் தலைவரின் பன்முகப் பார்வையாலும் உலகளாவிய கண்ணோட்டத்தாலும், அரிய உழைப்பாலும் பெரியாரியம் இந்தியப் பெருநிலத்தில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. மண்டைச் சுரப்பினை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் கவித்துவம் பொய்யாகவில்லை. உலகின் பல நாடுகளிலும் அறிவுலகப் பேராசானைக் கோலோச்சச் செய்த பெருமை தமிழர் தலைவருக்கே உரியதாகும்.
இன்றியமையாத இன்னுமோர் நிகழ்ச்சியைச் சொல்லியாக வேண்டும். கழகத்தின் தலைமைப் பொறுப்பு தலைவரிடம் வந்தவுடன் காழ்ப்புணர்ச்சி தலைதூக்கி நின்றது. போர் முகத்தில் நேர் வருவதற்கு அஞ்சிய வஞ்சகர் சிலர் வருமானத்துறை வரி விதிக்க வேண்டுமென வரிந்து கட்டித் துணை நின்றனர். அய்யா தேடிய அனைத்துக்கும் வரி விதித்தால் கழகமே மூழ்கி விடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். கழகச் சார்பில் வாதிட்டு நின்ற வழக்குரைஞரும் வீரமும் களத்தில் போட்டு வெறுங்கையோடு வந்து நின்றார். நிதானம் இழக்காமல் தமிழர் தலைவர் அந்த வழக்குரைஞருக்குக் கூறிய சட்ட உத்தி, நீதிமன்றத்தின் மதிய அமர்வில் தலைகீழாக மாறி வெற்றியைத் தந்துவிட்டது. பண்டித நேருவின் வருமானம் காங்கிரஸ் இயக்கத்துக்குச் சேர்ந்ததால், நேருவுக்கோ காங்கிரசுக்கோ வருமான வரி போடவில்லையே! தந்தை பெரியார் தமிழகத்தின் மாபெருந் தலைவர், யுனெஸ்கோவும் அவ்வாறு அவரை உலகப் பெருந் தலைவராகப் பாராட்டி யுள்ளது. எந்த வருமானத்தையும் அவர் தனக் கென்று வைத்துக் கொள்ளவில்லை. எனவே அவரது வருமானம் தனி நபர் வருமானமாகக் கருதி வரி விதிப்புக்கு ஆளாக முடியாது! பண்டித நேருவிற்குப் பொருந்துகின்ற சட்டம் தந்தை பெரியாருக்குப் பொருந்தாமல் போகுமா? இக்கருத்தை மனதில் ஏற்ற வழக்குரைஞர் மதியத்துக்குப் பின் அவ்வாறே வாதாடி வாகை சூடி வந்தார். தமிழர் தலைவரின் சட்ட நுணுக்கக் குறிப்பு வாதம் கழகத்தை மிகப் பெருந்தொல்லையிலிருந்து மீட்டு வந்ததோடு இன்றுவரை நம் திராவிடர் கழகத்தின் கொடியும் கொள்கையும் வானோங்கி வளர்ந்து சிறக்கக் காரணமாய் அமைந்தது. இவ்வாறு கழகத்தின் நாடி நரம்பாகி, நம்பிக்கைச் சுடரொளியாய், உயிர் மூச்சாய்த் திகழும் உன்னதத் தலைவர் நீடு வாழ்ந்து மென்மேலும் சிறக்கப் பல்காலும் வாழ்த்துகிறேன்.
- டாக்டர் பழனி. அரங்கசாமி
Post a Comment