Search This Blog

1.12.12

உலகெங்கும் பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல தோள் கொடுப்பீர்!


உலகெங்கும் பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல தோள் கொடுப்பீர்!
வீடு தொடங்கி நாடுவரை ஒத்துழைப்பு அளிக்கும் அனைவருக்கும் நன்றி! நன்றி!!

தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தி
உலகம் முழுவதும் தந்தை பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல அனை வரும் தோள் கொடுப்பீர் என்று நன்றிப் பெருக்குடன் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
பிறந்த நாள் செய்தியாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாளை எனக்கு 80 ஆவது பிறந்த நாள். என்னைப் பொறுத்தவரையில் அது, அய்யாவின் - எனது அறிவு ஆசானின் அடிச்சுவட்டைப்பற்றிய 70 ஆண்டுகள் நிறைவு நாள்.
அறிவு ஆசானின் இயக்கத்தின் பொறுப்பாளனாக, அய்யா அவர்களால் (1960 முதல்) அமர்த்தப்பட்டு, மானம் பாராத தொண்டனாக ஆக பயிற்சிப் பட்டறையில் ஓர் பணி யாளனாக அனுபவம் பெறும் வாய்ப்பு 
வழங்கப்பட்டவன்.

ஒரே திருப்பணி

இப்பணி - சமுதாய மாற்றத்திற்காக வேறு பலன் எதையும் எதிர்பாராது, காலம் நேரம் கருதாது, நன்றியை எதிர்நோக்காமல், பழி தூற்றப்படுதல், எதிர்நீச்சல் - இவற்றைப் பொருட்படுத்தாத கருமமே கண்ணான பெரும்பணி - அரும்பணி - ஒரே திருப்பணி மன நிறைவான பணி.

ஆயுள் நீட்டும் அருமருந்து

இப்பணிதான் என்னை சில நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த உடல்நோய்களிலிருந்தும் காப்பாற்றி, என்றும் சலிப்பின்றி, சமுதாயப் பணிக்கு உழைத்திடவும் தயார்படுத்தும் பட்டறை - பாசறைப் பணியாகி தாங்கிப் பிடித்து, ஆயுளை நீட்டும் அருமருந்தாகி வருகிறது!
எனது வாழ்விணையர் தொடங்கி, குருதிக் குடும்பத் தினர் அனைவரது ஒத்துழைப்பும் எனது கொள்கைக் குடும்பத்தினர், அன்புப் பொழியும் டாக்டர் நண்பர்கள்  ஆகியோரின் வற்றாத பாசமும், வறளாத உற்சாகமூட்டலும் இப்படி கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியை ஈட்டுவதற்குத் தோள் கொடுக்கும் தோழர்களாகி, தொண்டனுக்குத் தொண்டன் ஆகிய எனக்கு பேராதரவு அளித்து வருகின்றனர்!

என் விரல் பிடித்து கொள்கைப் பாடம் நடத்திய ஆசிரியர் ஆ. திராவிடமணி

என்னை இவ்வியக்க நுழைவு வாயிலுக்கு அழைத்து வந்து, விரல் பிடித்து கொள்கை அ எழுதச் சொல்லிக் கொடுத்த எனது ஆசிரியர் ஆ. திராவிடமணி ஆசானுக்கு இத்தருணத்தில் முதல் நன்றியைப் பணிந்து தெரிவிக் கின்றேன். (அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் - 1914).
அவரது ஆரம்ப காலப் பாடங்கள் இன்னமும் என்னைச் செதுக்கிட உதவிய கருவிகள் ஆகும்.

எனது ஞானத் தந்தையின் கொள்கை வெளிச்சம்!

எல்லாவற்றிற்கும் மேலாக, எவருக்கும் எளிதில் கிடைக்காத பேரின்ப பெருவாழ்வான தொண்டு வாழ்க்கையை, கொள்கை நெறி பிறழாமல், சமரசம் அறியா சமர்க்கள வாழ்க்கையாக வாழச் செய்யும் உறுதியை என்னுள் விதைத்து, என்னை செய்த எனது ஞானத் தந்தையின் கொள்கை வெளிச்சம், மங்காத, மறையாத சூரிய ஒளியாகும்.

ஒரே பணி - ஒரே இலக்கு!

அய்யாவின் கொள்கைகளை, தத்துவங்களை அகிலத்திற்கும் கொண்டு செல்லும் அயராப் பணி எனது ஒரே பணி - ஒரே இலக்கு.
அதை நோக்கியே எங்கள் பயணம்.

அன்னை மணியம்மையார்

நம் அய்யாவை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அதற்குமேல் 5 ஆண்டுகாலம் அவர் தந்த அறிவியக்கத் தையும் பாதுகாத்து, பரப்பி வந்த சோதனைகளை யெல்லாம், நெருக்கடிகளையெல்லாம் சந்தித்து, இயக் கத்தை மீட்டெடுத்து, துரோகங்களைக் களையெடுத்து, தூய இயக்கமாகிய எங்கள் அன்னையாரின் உடல் நலிந்தாலும் - உள்ளம் ஒருபோதும் மனம் தளராது போர்ப்பறை கொட்டிய வீராங்கனையாக நின்று எம்மை மேலும் பக்குவப்படுத்திய தோடு அய்யாவைப் போலவே அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றவே உழைக்கும் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திடும் நாளாகவே இந்நாளைக் கருதிகிறேன்.

என் உயிருக்கு வைக்கப்பட்ட குறிகள்!

எனது கொள்கைப் பயணத்தில் எனது வாழ்வை முடிக்க, கொள்கை எதிரி கள் மூன்று முறை முயன்று தோல்வியுற்றனர். திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் அருகிலும் (1982), வடசென்னை வண் ணாரப்பேட்டைப் பகுதி யிலும் (1985), சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம் பட்டியிலும் (1987) தடம் புரளாது பயணிக்கிறேன் என்று நான் சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் அவை.
சிறைச்சாலை வாசங்களிலேயே மிக மோசமான, கொடுமையான உரிமை பறிப்புகளும், அவமானங்களும், அடி உதைகளையும் பெற்று, எதையும் தாங்கும் பக்குவப் பாடத்தைப் போதித்த நெருக்கடிகால மிசாக் கொடுமை - ஓர் அரிய பேறு! காரணம், எந்த கீழ்நிலையிலும் நம்மால் உறுதியான கொள்கைப் பயணத்தைச் செய்யமுடியும் என்ற மனத்திண்மையை புகுத்தி, பக்குவப்படுத்திய பருவமாக அது அமைந்தது பேறு அல்லாமல் வேறு என்ன?
இச்சந்தர்ப்பங்களில் என்னைவிட என்னைச் சார்ந்த குடும்பத்தவர்கள், தோழர்கள் காட்டிய கொள்கை நெறிபிறழா உறுதி எனக்கு மேலும் உற்சாகம் தந்த டானிக் ஆகும்.

விளையாட்டுபோல விடுதலையில் உழைத்து, 50 ஆண்டுகள் ஓடோடி அது மேலும் இணையப் பதிப்பாகியது, என்றென்றும் நம் உள்ளப் பதிப்பாகி, ஊற்றென மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.

கட்டுப்பாடு காக்கும் எமது கருஞ்சட்டைப் படை தோழர்கள் யாமிருக்க, தயக்கமேன்? என்று முடிவுகள் எடுக்க உதவுகின்றனர்.

மற்றபடி வயது முதிர்வது முதுமையின் அடையாளம் என்றாலும், இக்கொள்கை என்றும் இளமையான கொள்கை என்பதால், இளமை முறுக்கு - எந்த செருக்குக்கும் இடந்தராது, கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட  உதவுகிறது.

மீட்டுருவாக்கங்கள் மிக வேகத்துடன் நடைபெற வேண்டிய கால கட்டம் இது! புற்றீசல்கள்போல், புதுப்புது அறைகூவல்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன நாள் தோறும் - நம்மை நோக்கி!

இயக்கப் பணியின் வளர்ச்சிக்குக் காட்டப்படும் எதிர்ப்பை ஏளனங்களை உரமாக்கிடும் நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், நாணயமும், தன்னலத் துறவும், லட்சியத்திற்காக எந்த கடும் விலையையும் தருவதற்குத் தயாராக உள்ள உறுதியும் உடைய ஒரு கருஞ்சேனையுடன் உள்ளேன் என்ற மகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்?

பிழைக்கும் பட்டாளமல்ல!

இது பிழைக்கும் பட்டாளம் அல்ல; உழைக்கும் வீரர்களின் உன்னத அணிவகுப்பு. மக்களின் சுயமரியாதை வாழ்வே அதன் இலக்கு.
அதை ஏற்படுத்தும் வாய்மைப் போரில் நாம் என்றும் இளையோர்களே -எனவே வயதை வைத்துக் கணக்குப் போடாமல், சலிப்புற்று ஒதுங்காமல், குன்றா உணர்வினைக் கொண்டு, குறையா உற்சாகத்துடன் தளரா நடைபோட வாரீர்! வாரீர்!!

பெரியார் பணி முடிக்க எனது எஞ்சிய வாழ்நாளைப் பயன்படுத்த, துணையாக நில்லுங்கள் தோழர்களே, தோழியர்களே, நல்லெண்ண நண்பர்களே!
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, தமிழ்நாடு முழுவதும் - 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மரக்கன்றுகளை நடுவதற்கான (ஆண்டு முழுவதும்) முயற்சிகளை தொடர்ந்து செய்வோம்.

800 கூட்டங்களை ஆண்டு இலக்காக நாடு தழுவிய அளவில் நடத்துங்கள்.
கழக ஏடுகளை, நூல்களைப் பரப்புங்கள்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

வீடு தொடங்கி, நாடு முழுவதும், ஏன் உலகம் முழு வதும் இக்கொள்கை பரவ உறுதியைப் புதுப்பிக்கும் உங்கள் தொண்டனுக்குத் தோள் கொடுங்கள், தோழர்களே!

இறுதி மூச்சுள்ளவரை, இடர் எதுவரினும் உழைக்கும் உறுதி புதுப்பிக்கும் நாளே இந்நாள் எனக்கு!
உங்கள் உளங்கனிந்த
நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் தொண்டன்
கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் சென்னை

                      --------------------"விடுதலை”1.12.2012

30 comments:

தமிழ் ஓவியா said...


மனிதநேய இமயம்!


எண்பது அகவையில்
எழுபதைப் பொதுவாழ்வில்
இனமானம் மீட்கவே
இயம்பிட்ட தலைவர்!
எங்கள் தமிழர்தம்
எழுச்சித் தலைவர்போல்
எவருண்டு வையத்தில்?
யாரேனும் சொல்லுங்கள்!
பாலின நிகர்நிலை
பாவையர் பெற்றிட
பாடுபட்டார் இவரளவு
பாரெங்கும் வேறெங்கும்
பார்த்தீரா சொல்லுங்கள்?
கண்சாடை கணநேரம்
காட்டி இருந்தாலே
மாண்புமிகு பதவிகள் - இவரை
மண்டியிட்டுத் தொழுதிருக்கும்!
அணுவளவும் பதவியாசை
அண்டா அனல்மலை!
தொண்டர்க்குத் தொண்டரிவர்
தொண்டறத்தின் வடிவமிவர்!
எந்நாட்டுத் தலைவரும்
எட்டித் தொட முடியா
விளம்பரம் விரும்பா
விடுதலைச் சூரியன்!
கண்டதுண்டா இவரனையர் -எம்
காதோரம் ஓதுங்கள்!
உண்டென்றால் எங்கென்று
ஒருவரேனும் காட்டுங்கள்!
அறியாமை அழிக்கும்
அன்றாட இதழின்
ஆசிரியராக அறப்பணி
அய்ம்பது ஆண்டுகள்
அயராது பாடுபட்டார்
ஆரேனும் ஆரேனும்
அகிலத்தில் உண்டென்றால்
அடையாளம் காட்டுங்கள்!
எந்த வேடமிட்டு
இன எதிரிகள் வந்தாலும்
சட்டென சங்கநாதம் முழங்கி
சமர்க்களம் புகும் - இனமான
சக்ரவர்த்தி!
அறிவியல் போர்த்துவரும்
அறியாமையின் பொய்முகத்தையும்
அகிலத்திற்கு உரைக்கும்
அறிவுமணி!
மாநிலம் தாண்டியும்
மதவாதிகள் மரணித்தாலும்
மனமுருகி இரங்கல்
மரியாதை செலுத்தும்
மனிதநேய இமயம்!
அருந்தமிழ்ர்க் கெதிரான
ஆரியத்தின் - சூழ்ச்சிக்
காரியத்தின் வீரியத்தை
வேரோட அழித்திட
வெண்தாடி வேந்தர்
அய்யா பெரியார்
ஆய்ந்து தேர்ந்த
அணு உலை!
அய்யா புகழ் பரப்புதலில்
அலைகடலுக்கு அப்பால்
அயலகத்தில் இருந்தாலும்!
தொல்தமிழ் இனத்திற்கு
தொலைவில் வரும்
தொல்லை தனையும்
நிலையிலிருந்தே காட்டும்
தொலை நோக்கி!
வேதியர்தம் வேடங்களை
வெடுக்கென தோலுரிக்கும்
எலக்ட்ரானிக் லேசர்!
முழிப்பில் நாமறியா
மூடநம்பிக்கையின்
மூலத்தையும் - தன்
விழிவீச்சில் வெளிப்படுத்தும்
மின்னணு எஃஸ்ரே!
எண்பது வயதிலும்
இமைப்போதும் சோராது
தன்னலம் துளியுமின்றி
தமிழர் நலனுக்கே உழைக்கும்
ஒப்பிட்டுச் சொல்ல
ஒருவருமில்லா - எங்கள்
சொக்கத் தங்கமே!
சுயமரியாதையின்
சூத்திரமே!
இனமானத்தின்
இலக்கணமே!
என்றென்றும் வாழ்க!
இனம்வாழ நீ வாழ்க!


- கவிஞர் மதி

தமிழ் ஓவியா said...


எடியூரப்பா எடுத்துக்காட்டு


இந்துத்துவா கட்சியான பாரதீய ஜனதா கட்சி எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தெரிந்து கொள்ள வேண்டும் - தென்னகத்தில் கருநாடக முதல் அமைச்சராக விருந்த பி.எஸ். எடியூரப்பாவையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

கருநாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.க., அங்கு வலுப் பெற்றதற்குக் காரணம் காங்கிரசுக்கு மாற்றாக இருந்த ஜனதா தளம் நசிந்து போன நிலையில், பிஜேபி அந்த இடத்திற்கு நகர்ந்தது.

பி.ஜே.பி.யின் கருநாடக மாநிலத் தலைவராக கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை சமுதாய மான லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கருநாடக மாநிலத்தில் இந்தப் பிரச்சினை எப் பொழுதுமே பொதுவாகவே இருந்து வந்துள்ளது.

பி.எஸ். எடியூரப்பா முதல் அமைச்சர் ஆனாலும் வெகு சீக்கிரத்திலேயே அவர்மீதும், அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ரெட்டி சகோதரர்கள்மீதும் ஊழல் புயலிலே சிக்கினார்கள்.

அதுவும் எடியூரப்பா போன்ற பக்திமானை எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். ஒரு குழவிக் கல்லைகூட விட மாட்டார். கருநாடக மாநிலத்தில் உள்ள கோயில்கள் போதாது என்று புதுவை மாநிலம் - காரைக்காலையடுத்த திருநள்ளார் வரை ஓடி வந்து முட்டிக் கொண்டவர்; முதல் அமைச்சர் ஆன நிலையில் கருநாடக மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோயில்களிலும் தனது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார். எதிர்ப்புக் கிளப்பி விடவே அதனைக் கைவிட்டார்!

அவர் ருத்திராட்சப் பூனை என்பதும் அம்பலமாகி விட்டது. நில ஒதுக்கீடு விவகாரத்தில் வசமாகக் சிக்கிக் கொண்டார். லோக் ஆயுக்தா நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முன்வந்த நிலை யில் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.

அவரது ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட சதானந்தகவுடா அடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் என்று முதல் அமைச்சர்களாக வந்த நிலையில், எடியூரப்பாவை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

எடியூரப்பாவும் எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்றார்.

கட்சியின் மேலிடத்தை சேர்ந்த பெருந் தலைவர்கள் எல்லாம் பெங்களூருவுக்கு ஓடோடி வந்து தாஜா செய்வார்கள். கொஞ்ச நாள் புயலுக்குப் பின் அமைதி தவழ்ந்தாடும், மறுபடியும் போர்க் கொடி தூக்குவார்; மிரட்டல் என்னும் துப்பாக்கியைத் தூக்குவார். இப்படி நான்கு ஆண்டுகள் கருநாடக மாநிலத்தில் பிஜேபியின் கதை கந்தலாகி நாறிப் போய் விட்டது.
இப்பொழுது புதுக்கட்சியைத் தொடங்கியுள்ளார் எடியூரப்பா.

கருநாடக ஜனதா கட்சி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இரு கட்சிகளுக்குமிடையே நடைபெற உள்ள குத்துச் சண்டைகளைப் பார்த்து இரசிக்க லாம்.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பொது மக்கள் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் உள்ள பொது மக்கள் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்; தெளிந்திடவும் வேண்டும்.

பாரதிய ஜனதா என்பது வெகு வித்தியாசமான கட்சி - தார்மீக பண்பாடுகள் நிறைந்த அதிசயமான கட்சி என்றெல்லாம் கேட்டு வாய் வலிக்க கத்திக் கொண்டு திரிகிறார்களே - அந்தக் கட்சியின் யோக்கியதை எந்த அளவுக்குப் படு மட்டமாக இருக்கிறது என்பதை கருநாடகத்தைப் பார்த் தாவது தெரிந்துகொள்ள வேண்டும். ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் சரி கட்டுப்பாடு என்று கணக்கிட்டாலும் சரி. இந்தியாவிலேயே மிகவும் மோசமான படுமோச மான கட்சி பாரதீய ஜனதா கட்சியே!

கொள்கை பற்றியோ கேட்க வேண்டாம்! சிறுபான்மை மக்களை வேட்டையாடி அவர்களின் குடலை கிழித்து மாலையாகப் போட்டு மயானக் கொள்ளை ஆட்சி நடத்த நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!!1-12-2012

தமிழ் ஓவியா said...


குடிவாழ நீ வாழி!


அரை நூற்றாண்டா?
ஆச்சரியக் குறிகூட
அடிமாறி நிற்குமே!
புரட்சி ஏடாயிற்றே!
புள்ளிகளுக்குக்கூட
புலியின் வேகம் உண்டே!
எழுத்தாளர் இல்லையென்று
இரசாயனக் கலவைகளை
ஏட்டில் கொட்டிய
ஈரோட்டாரின் கைத்தடியை
எழுதுகோலாகப் பெற்ற
ஆசிரியரல்லவா நீங்கள்!
அதனால்தான்
இந்தச் சாதனையின் உயரம்!
அறிக்கைகளா அவை?
ஆரிய நஞ்சினை முறிக்கும்
மூலிகைத் தோட்டம்!
பேச்சுகளா அவை?
பூகம்ப நாக்கின்
போர் முரசம்!
பேட்டிகளா அவை?
பீரங்கி நதிகளின்
பெரும்பாய்ச்சல்!
வஞ்சிக்கும் (அ) வாள்
வட்ட மிட்டால்
வாலறுக்கும் சிப்பாய் நீ
வடவருக்கும் துப்பாக்கி!
ஆரியத்தின் சூட்சுமக்
கருவறுக்கும் கலையைக்
கச்சிதமாய்க் கற்றதனாலே
காலத்தின் திசையைச்
சாட்டை அடி கொடுத்து
திசை மாற்றம் செய்வித்து
வெற்றி முகட்டில்
வீர மணிக் கொடியை
முதலில் ஏற்றிய
முதல் டென்சிங் நீயே!
அரசியல் பதவி மோகினி
அண்டாப் பெருநெருப்பு
அதனாலே நீ பெற்ற தெல்லாம்
அசலின் முழுத் தொகுப்பு!
இரு நான்கு பக்கமாக்கி
எதிரிகள் கோட்டைகளை
எண்டிசையும் எரித்தாய்!
இந்த அழிவுப் பணியால்
எம்மின இழிவை ஒழித்தாய்!
சமூகநீதி என்னும்
சரிநிகர் சத்துணவை
சமபந்தி வைத்துப் பரிமாறினாய்
பெட்டை என்று பெண்ணைப்
பேசும் நாக்குகளின்
பட்டையை உரித்து
பெண்ணே நீ பீரங்கி!
வெடித்துக் கிளம்பு என்ற
வீரத்தையூட்டி
வேங்கை யாக்கினாய்!
மூட நம்பிக்கையின் முப்பாட்டன்
ஊருக்கே சென்று
மூலத்தை யழித்து
முழுப் பகுத்தறிவு நிலவு
முத்தம் பொழிந்தாய்!
சுரண்டலின் சூலறுக்கும்
சுணையும் நீயே!
மண் பரப்பு முழுதும்
மனித நேயத் தென்றலும்
சமத்துவ மணமும்
பயிர் செய்ய வந்த
பாட்டாளியும் நீயே!
உறிஞ்சும் வேர்களுக்கு
வேலையில்லை
உழைப்பும் சமம்
ஊதியமும் சமம்
நுகர்வும் சமம்!
விடுதலையே! உன் வேர்வைப்
பாசனத்தின் விளைச்சல் இந்தப் பூமி!
விடுதலையே நீ
விடியலின் பூபாளம்!
உமது ஆசிரியர்
உயர் எண்ணங்களின்
வீரத்தைச் சுவாசிக்கும்
விவேகப் பூக்களின்
மகரந்த சேர்க்கை!
காலத்தால் நாம் பெற்ற
காவிய அறிக்கை!
முப்பதில் உன்னைச் சுமந்த
தோளுக்கோ வயது எண்பது!
நூறிலும் உம்மைச் சுமப்பார்!
நீ வாழ அவரும்
அவர் வாழ நீயும்
எம் குடி வாழ
நீவீர் இருவரும்
வாழிய வாழியவே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


வாழ்வியல் சிந்தனையும் தாக்கமும்


பகுத்தறிவுப் பகலவன் சுயமரியாதைச் சுடரொளியாம் ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் கொள் கைகளையும், கோட்பாடுகளையும் நெறி தவறாமல் நாளும் போற்றி நாடெல் லாம் பரப்பி தன்மானம் காத்த தலை வனின் வழி வந்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களுக்கு அன்பான வணக்கம்.

வாழ்வியல் சிந்தனையெனும் தங்களுடைய அறிவுப் பெட்டகம் பாகம் 1 பாகம் 2ம் வாசித்தேன். அகம் சிலிர்த்தேன், உளம் மகிழ்ந்தேன் வியந்தேன், வியர்த்தேன் காரணம், ஒரு தலைவனாய் இருந்து மாபெரும் இயக்கத்தை கட்டி காத்து அதை செம்மையுடனும், சிறப்புடனும் வழி நடத்திச் செல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதேபோல், ஒரு மருத்துவராய் இருந்து தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதென்பதும், ஒரு தாதியராய் இருந்து நோயாளிகளை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதென்பதும்! ஒரு தந்தையாயிருந்து தான் பெற்ற பிள் ளைகளை நல்வழிப்படுத்துவதென்பதும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு கல்வியாளராயிருந்து மக்களுக்கு சேவை செய்வதும்! கொள்கையில் உறுதி! லட்சியத்தில் உறுதி! செய்கையில் உறுதி! நம்பிக்கையில் உறுதியென சீரிய கருத்துக்களுடன் சிறந்த நல்வழி காட்டியாக வாழ்வியல் சிந்தனைகள் இருக்கின்றன தாங்களும் இருக்கின்றீர்.

தங்களுடைய வாழ்வியல் சிந்தனை கள் பாகம் 1ல் 79வது அத்தியாயத்தில் பெற்றால் தான் பிள்ளையா என்ற தலைப்பில் பக்கங்கள் 255,256,257 படித்ததும், மனதளவிலும், உடலளவி லும், உடைந்து போனேன். காரணம். இல்லற வாழ்வில் பதினைந்து ஆண்டு களை கடந்த பின்னும் மருத்துவம் பார்த்தும், மழலை இல்லாத காரணத் தால், மருத்துவமனை ஒன்றில் பிறந்து இரண்டே நாள் ஆன ஒரு ஆண் குழந்தையை கடந்த பத்து வருடத்திற்கு முன் தத்தெடுத்தோம் பாராட்டி, சீராட்டி, தாலாட்டி, உச்சி மோந்து! வளர்த்த ஒரு வருடத்தில் காய்ச்சல் கண்டது! குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம் காய்ச்சல் மூளையை அடைந்து விட்டது! எனவே வடசென்னையிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் பார்க்கும்படி அனுப்பிவிட, அதன்படி எடுத்துச் சென்று வைத்தியம் பார்த்து! 10 நாட்கள் சிகிச்சைக்குப்பின் நலமுடன் வீடு திரும்பினோம். அதன் பின்னர்தான் எங்கள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது. மகன் வளர்ந்தான்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்! மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகனாய்! பத்து வயது கொண்டவன் இன்னும் பத்து மாத குழந்தையைப் போலதான் உள்ளான்! ஊட்டி விட வேண்டும், உடுத்தி விட வேண்டும்! தேய்த்து விட வேண்டும்! குளிப்பாட்டி விட வேண் டும்! குறிப்பறிந்து! அவன் தேவைகளை தாய் தான் செய்துவிட வேண்டும் மகனால் அனைத்தையும் இழந்தோம், ஆனால் மகனை இழக்க மனமில்லை! நம்மபிக்கையை இழக்கவில்லை! என்றாவது ஒரு நாள் அம்மாவென்றும், அப்பாவென்றும்! எங்களை அழைப் பானென்றும் காத்து கிடக்கின்றோம்!

காசற்ற மனிதனாக இருப்பது கூடாது தான் என்றீர் உண்மைதான்! ஆனால் உழைத்து பெற்றதெல்லாம் கரைந்து போனதே! மகனால் நாங்கள் என்ன செய்வது! ஆனாலும் மாசற்ற மனிதராய் வாழ்ந்து வருகின்றோம்! நாணயத்தை இழந்தவனல்ல நம்பிக்கை துரோகம் துளிகூட என் வாழ்வில் எட்டிப் பார்த்ததில்லை என்று எண்ணும்போது எங்களுக்கு பெருமை தான்! ஏழ்மைதான் எவரிடமும் கையேந்தி நின்றதில்லை! எப்பாடு பட்டாவது மகனை ஒரு நல்வழிக்கு கொண்டு வருவதே! எங்களின் உறுதி யான லட்சியமாய் நாளும் போற்றி வரு கின்றோம்!

வணக்கமுடன்

வ. வெங்கடேசன்
கும்முடிப்பூண்டி

தமிழ் ஓவியா said...


வாழ்க எங்கள் தலைவர்


அன்பாலே அரவணைத்து
அறவழியில் நடைபோட்டு
அறிவென்னும் கருவியினால்
நெறிவளர்த்தவர் நம் - பெரியார்
அரியநூல் கற்றவரையும்
ஆராய்ந்து பாரென்று
அறியாமை அகற்றிய
அருளாளர் நம் - பெரியார்
பல்லுயிரெல்லாம் தன்னுயிர்
பரப்பும் கொள்கையினால்
பெருத்திடு வெற்றிப்படை
பெரும்படை நம் - கழகம்
பட்டுக்கும் நகைக்கும்
பலியான பெண்ணினத்தை
தட்டி எழுப்பி
தலைநிமிர்த்தியது நம் - கழகம்
தந்தையின் கருத்தினை
தாங்கும் ஆல்விழுது
தரணிவாழ் தமிழரின்
தன்மான முகவரி - ஆசிரியர்
களத்தில் எதிர்கொள்ளும்
கடும்போர் தாங்கி
கழகம் காத்து
கடமை ஆற்றும் - ஆசிரியர்
ஊக்கம் உடலுழைப்பு
எளிமை பணிவு
வாய்மை தூய்மை
வளமான பேச்சு - ஆசிரியர்
பலதுறை அறிவும்
படித்து அறிந்தவர்
பத்துவயது முதல்
பார்ப்பான் கோட்டையிடித்தவர்
ஆசிரியர்
எட்டுப் பத்தாண்டகவை
விட்டுக் கொடுக்காத
கட்டுப்பாட்டுடன்
கழகம் காக்கும் - ஆசிரியர்
முன்னோரின் நன்னடத்தை
பின்னோர்க்குப் பெருஞ்செல்வம்
உம்போன்றோர் பின்னாலே
ஊக்கமுடன் வாழ்கின்றோம்!
உற்றபற்றை விட்டிடாது
உடனிருப்போம் பணிமுடிக்க
உயர்வுக்கு வழிகாட்டி - எம்
அய்யா வீரமணி வாழ்க!
உற்ற சுற்றம்
உலக சுற்றும்
போற்ற வாழும்
பெரியாரின் பெருந்தொண்டர்
பிறந்தநாள் காணும் - எம்
அய்யா வீரமணி வாழ்க

பு.பேபிசாந்தாதேவி
பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்
போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்

தமிழ் ஓவியா said...


எப்படிப்பட்ட தொண்டர்கள்


திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் மணியம்மை அறக்கட்டளையின் தலைவர் மானமிகு அய்யா அவர்கட்கு வணக்கம்.

எனது இயற்பெயர் கோவிந்தசாமி என்ற இரா. கோவிந்தராசன் நான் வளர்ந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை. எனது பிறப்பு 1930ஆம் ஆண்டு. நான் 1948ஆம் ஆண்டு கழக உறுப்பினராகி, இன்றுவரை தொடர்ந்து கழகப் பணியாற்றி வருகிறேன்.

அக்காலங்களில் அய்யா அவர்கள் சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் வந்தால் சில சமயங்களில் மேட்டூரிலிருந்த கழகப் பொறுப்பாளர்கள் அய்யாவின் பொதுக் கூட்டம் பணிகள் செய்யும் பொருட்டு என்னை அனுப்பி வைப்பார்கள்.

1948ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற அய்யாவின் பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அன்று சேலம் செவ்வாய்ப்பேட்டையில் சில ரவுடிகள் என்னை வம்புக்கு இழுத்து என்னை கடுமையாக தாக்கினார்கள்.

அப்போது சேலம் மாவட்ட தி.க. செயலாளராக இருந்த சேலம் சித்தையன் இல்லத்தில் அய்யா தங்கியிருந்தார். அது சமயம், அய்யாவிடம் நான் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி தெரிவித்தார்கள். அய்யா, அவர்கள் என்னிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்து கழகத் தொண்டர்கள் பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் கூறி ஒரு ரூபாய் நாணயத்தை என்னிடம் கொடுத்து மேட்டூருக்கு போகும்படி கூறினார்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கடந்த 6-0 ஆண்டுகளுக்கு மேலாக அய்யாவின் நினைவாக போற்றி பாதுகாத்து வருகிறேன்.

நான் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு அகவை. 82. மனைவி மகன்கள் யாரும் இல்லாத நிலையில் இருக்கும் எனக்கு- நீலகிரி மாவட்ட ப.க. தலைவர் மருத்துவர் குன்னூர் இரா. கவுதமன் அவர்கள் உதவி வருகிறார். அய்யா, அவர்கள் எனக்கு கொடுத்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை தந்தை பெரியார் மணியம்மை, அறக்கட்டளையில் சேர்ப்பிப்பதே எனது கடமை எனக் கருதி நமது தலைவர் அய்யாவிடம் ஒப்படைக்கிறேன்.

உண்மையுள்ள, கழகத் தொண்டன்
இரா. கோவிந்தராசன், மேல் கொட்டரக்கண்டி (நீலகிரி)

தமிழ் ஓவியா said...


வென்றிடுவார் நூறாண்டு வீரமணி!


மனிதராய்ப் பிறந்திட்டு மதப்புழுவாய் மாறிவிடும்
பனித்துளியே போல்வார்க்கும் பகுத்தறிவை ஊட்டுகிறார்!
தனித்துவளர் வேற்றுமையைத் தரைமட்டம் ஆக்குகிறார்!
குனித்திங்கே நிற்பாரின் கூன்முதுகை நிமிர்த்துகிறார்!
இனித்தவரே நம்வீர மணிபோல எவர்இங்கே!

பல்கலைக் கழகமுதல் பகுத்தறிவுக் கல்விதந்து
சொல்இனிதே புகழ்ந்தேத்தத் தொண்டறமே புரிகின்றார்!
தொல்தமிழைப் பேசுவோரின் தோன்றலாகி நமக்கெல்லாம்
நல் அறிவை ஊட்டியவர் நாத்திகராம் பெரியார்போல்
அல்பகலும் தொண்டாற்ற யாருள்ளார் இவர்போல!

நித்தமும் விடுதலையை நெஞ்சிலே சுமக்கின்றார்!
அத்துணை உழைப்பையும் அள்ளியள்ளிக் கொடுக்கின்றார்!
இத்தரை மீதினிலே எல்லாரும் சமம்காண
வித்தகம் புரிகின்றார்! வீரமணி யார்போல
எத்தனையோ ருண்டிங்கே இணையாகச் சொல்வதற்கே!

வாழ்வியல் சிந்தனைகள் வளங்காட்டும் மாந்தருக்கே!
தாழ்வுள்ள நிலைமாற்றும்! தகுதிபெற வாழ்வளிக்கும்!
ஆழ்கடலின் விளைபொருள்போல் அத்தனையும் வழங்கிடுமே!
ஏழ்மையிலாத் தமிழீழம் ஏற்றமுறத் தமிழர்களின்
வாழ்வுரிமைக் குழைக்கும் வீர மணிபோல வாழ்பவர் யார்?

அய்யாவின் அடிச்சுவட்டில் அகலாத நங்கூரம்!
மெய்யான பகுத்தறிவு மேன்மையர்கள் ஒளிவிளக்கு!
பொய்யாத இளைஞர்களின் மாணவரின் போர்முரசு!
தொய்யாத மருத்துவத்தால் சோர்வகற்றும் மூலிகைவேர்!
செய்யாத செயலுண்டோ சீர்திருத்தும் போர்மறவர்!

நீரோட்டம் இருந்தாலே நிலப்பெருமை மேலுயரும்!
ஈரோட்டு ஏந்தலுக்கோ எத்திசையும் நன்றிவிழா! பாராட்டும் பண்புள்ளம் பகுத்தறிவின் மணிமகுடம்!
ஊரேட்டில் வந்ததனால் பிராமணப் போர் ஓட்டலதன்
வேரோட்டம் அறுத்தெறிந்தார்! வீரமணி போல்யாரே?

மன்றலெனக் கண்டுசொன்னார் மறுமணத்தின் மாற்றுப்பாதை
தென்றலெனப் பெண்ணினத்தின் சீர்திருத்தவாதியானார்!
அன்று சொன்னார் அய்யாவின் அரும்பணிகள் வெற்றிபெற
இன்றுவீர மணியவர்தான் எடுத்தவீர வாள்இதுவே!
வென்றிடுவார் நூறாண்டு! வினைமுடிக்க வாழ்த்துவமே!

பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்

தமிழ் ஓவியா said...

தருமபுரியைத் தகிக்கும் பிரதிவோமம்!

தமிழர் தலைவரின் தீர்வு

காதல் தமிழரின் வாழ்வியல். தமிழர் தொன்மை வாழ்வு காதலை அடிப்படையாகக் கொண்டது. வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமையில் பழகிக் காதல் வளர்த்து, தாங்கள் சேர்ந்து இல்வாழ்வு நடத்த முடிவு செய்தவுடன், பூங்காவில் தாங்களே தொடுத்த மாலையை ஒருவர் மற்றவருக்குச் சூட்டி இவ்வாழ்வைத் தொடங்குவர். இதுவே, தமிழரின் தொடக்க கால நிலை. இந்நிலையில் சிலர் தங்கள் இணையுடன் சில காலம் இன்பம் நுகர்ந்தபின், தனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லையென்று சொல்லி கைவிட ஆரம்பிக்கவே, தமிழ்ச் சான்றோர் பலர் அறிய காதலர்க்கு திருமணம் செய்வித்தனர். ஆனால், அத்திருமணத்தில் சாதி யில்லை, சடங்கு இல்லை.

ஆனால், ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்து, நம்மோடு கலந்து, நம் பண்பாட் டைக் கெடுத்து, தங்கள் கலாச்சாரத்தை நுழைத் ததன் விளைவாய் ஆரி யத்தின் சாதுரியமும், பெண்ணடிமைத்தனமும் தமிழர்களிடம் வளர்ந்தது. தொன்மைத் தமிழர் வாழ்வில் சாதிகளும் இல்லை; பெண்ணிழிவும் இல்லை. மாறாக, தாய் மையைப் போற்றும் தாய் வழிச் சமுதாயம் காணப் பட்டது. பெண்களுக்கே சொத்துரிமை என்ற நிலையும் இருந்தது. தமிழரின் பண்பாட்டிற்கு ஆரியம் எதிர்மறை யானது என்பதால் சாதி வேற்றுமையும், உயர்வு, தாழ்வும், பெண்ணடிமை வாழ்வு வழக்கில் வந்தது. ஆரியர்கள் என்னதான் சாதிக் கட்டுகள், சாத்திரங்கள் வைத்தாலும், அவர்கள் இனத்திலும், தமிழர் இனத் திலும் இக்கட்டுகளைமீறி காதல் திரு மணங்கள், சாதி மறுப்பு மணங்களும் நிகழ்வே செய்தன. அப்படி சாதி கருதா மணங்கள் நிகழ்ந்தபோது அதை ஆரியம் வகைப்படுத்தியது.

ஆண் உயர்சாதிக்காரனாகவும் பெண் கீழ்சாதிக்காரராகவும் இருந்து மணம் முடித்தால் அது அணுலோம சங்காரம் மேல் சாதிப் பெண்ணைக் கீழ்ச்சாதியைச்

சேர்ந்த ஆண் மணந் தால் அது பிரதிலோம சங்காரம்

ஆரிய பார்ப்பனர்களும் சரி, தமிழர்களும் சரி கீழ் ஜாதிப் பெண்ணை மேல் சாதியான் மணப்பதை மன்னித்து, மேல் சாதிப் பெண்ணை கீழ்ச் சாதியான் மணப்பதையே கடுமையாக எண்ணினர். அதில் பிறக்கும் பிள்ளை சண்டாளர்கள் எனப்பட்டனர்.

இவை சாஸ்திர காலத்தில் தான் நடந்தன என்றில்லை. திலகர் காலத்திலும் இச்சிக்கல் வந்து, திலகரும் இக்கருத்தையே ஆதரித்துள்ளார். இதற்கு மாறாக நீதிக்கட்சி சாதி மறுப்பு மணங்களை ஆதரித்தது. சாகு மகராஜ் சாதி மறுப்பு மணங்களை ஆதரித்தார். அவரது அரவணைப்பில் வளர்ந்த அண்ணல் அம்பேத்காரும் சாதி மறுப்பு மணங்களை ஆதரித்தார். 1918ல் இவையெல்லாம் நிகழ்ந்தன.

அவ்வாண்டு தில்லி மத்திய சட்டசபையில் வித்துலபாய்படேல் என்பவர், கலப்பு மண மசோதாவை முன்மொழிந்தார். இதைத் திலகர் முழுமையாய் எதிர்த்தார்.
அனுலோமத் திருமணங்களை ஆதரித்தால், பிறகு பிரதிலோமத் திருமணங்களையும் தடுக்க முடியாமல் போய் விடும் என்று தனது கேசரி இதழில் எழுதினார்.
இதன் பொருள் என்ன? உயர்சாதிக்காரன் கீழ்சாதிப் பெண்ணை மணக்கச் சம்மதித்தால், கீழ்ச்சாதியான் மேல் சாதிப் பெண்ணை மணப்பதையும் ஏற்றாக வேண்டும். எனவே இம்மசோதா கூடாது என்கிறார்.

அதாவது, ஆரியர் மற்றும் உயர் சாதிக்காரர்களின் நிலைப்பாடு, உயர்சாதியான் கீழ்ச்சாதிப் பெண்ணை மணந்தால் அது அவ்வளவு பெரிய தவறு இல்லையாம். காரணம், ஏதோ அவனுக்கு அவள் ஓர் ஆசை நாயகி, வைப்பாட்டி, காமப் பெருக்கின் வடிகால் என்பதாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால், கீழ்ச் சாதியான் மேல் சாதிப் பெண்ணை மணந்தால், எல்லாமே நாசம் என்பதால் எகிறி எழுகின்றனர்; எரித்துப் பழி தீர்க்கின்றனர். அன்றைக்குத் திலகருக்கு இருந்த கவலைதான் இன்றைக்குத் தீ வைத்தவர்களுக்கும் இருக்கிறது. ஆக, தருமபுரி தகிக்கப்படுவதற்குக் காரணம் பிரதிலோம மனப்பான்மையேயாகும்.

திராவிடத்தை எதிர்ப்பவர்கள் எப்படி ஒத்துப் போகிறார்கள் பாருங்கள்! திராவிடத்தைக் கைவிட்டவர்கள் எவரும் ஆரியத்தை ஏற்கின்றனர் என்பதே அன்றைக்கும் இன்றைக்கும் நிலை.

தமிழ் ஓவியா said...

ஆரியத்தை எதிர்ப்பவர் என்றைக்கு சாதியை எதிர்ப்பர். அதனால்தான் 750 ஆண்டுகளுக்குமுன் ஆரிய எதிர்ப்பை தீவிரப்படுத்திய பெம்மான் பசவர் அவர்கள் கீழ்சாதியார் உயர் சாதியாரை திருமணம் செய்வதை உறுதியாய் ஆதரித்தார். அத்திருமணங்களுக்கும் துணை நின்றார் பசவர் வரலாற்றைப் படியுங்கள்!

ஆரிய எதிர்ப்பு என்பதும் திராவிட ஏற்பு என்பதும் இரண்டும் ஒன்றே. இதை அறியாதவனே திராவிடத்தால் கெட்டோம் என்பான். திராவிடம் என்றால் தமிழ் என்பதே பொருள். திராவிடன் என்றால் தமிழன் என்பதே பொருள். தமிழன் என்று மொழி வழிச் சொல்லும்போது ஆரியர்களும் நானும் தமிழன் என்று சேர்ந்து கொள்வர் என்பதாலே, திராவிடம் என்ற இன அடையாளச் சொல் ஏற்கப்பட்டதே தவிர மற்றபடி இதில் எந்தக் குழப்பத்திற்கும் தேவையில்லை.

திராவிட ஏற்பு என்பதைவிட ஆரிய எதிர்ப்பு என்பதே அடிப்படையானது. திராவிட என்ற சொல் நாளைக்கு வேறொன்றாகக் கூட கொள்ளப்படலாம். ஆனால், ஆரியர் எதிர்ப்பு என்பது என்றைக்கும் வேண்டும். காரணம், அதில்தான் தமிழினின் ஏற்றமும், சுயமரியாதையும் அடங்கியுள்ளது. இதைப் புரிந்து கொண்டால் தமிழ்த் தேசியம் பேசுவோருக்கு தடுமாற்றம் வராது. நாம் திராவிடம் என்றாலும் அவர்கள் தமிழ் என்றாலும், ஆரிய எதிர்ப்பில் உறுதியாய் இருந்தால், தமிழ்த் தேசியம் பேசுவோருக்கும் திராவிடம் பேசுவோருக்கும் மோதலுக்கு வேலையில்லை, ஆரியர் உள்நுழைய வாய்ப்பும் இல்லை.

ஆனால், அரசியல் நோக்கில் வாக்கு நோக்கில் - திராவிடம் எதிர்ப்போர், உண்மையான தமிழ்ப் பற்றுடையோர் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். காரணம், சாதியை ஏற்பவன் தமிழன் இல்லை. காரணம் தமிழர்க்கு சாதியில்லை. தமிழையும் பேசி, சாதியையும் பேசுகின்றவர்கள், ஆரியர்களைவிட ஆபத்தானவர்கள். தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் சாதி ஒழிப்புக்கும், சாதி மறுப்பு மணங்களுக்கும் போராட வேண்டும், ஆரிய ஆதிக்க எதிர்ப்பும் இணையாகச் செய்ய வேண்டும். மாறாக வெறுத்த தமிழ் தமிழர் என்று உணர்ச்சி முழக்கம் இடுதல் ஊரை ஏமாற்றும் வேலை. தமிழர்களே எச்சரிக்கை!

திராவிடத்தைக் கையில் எடுத்துள்ள தமிழர் தலைவர் அவர்கள்தான் சிக்கலின் மூலம் அறிந்து முறைப்படி தீர்வு காண்கிறார். உடனடியாக களம் கண்டு ஆய்வு, ஆறுதல். அடுத்து அதற்கு காரணமானவர்களை அடையாளங் காட்டி மக்களுக்கு விழிப்பூட்டல்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரல்; நாடெங்கும் இயக்கத் தோழர்களைக் கொண்டு கண்டனப் பிரச்சாரம். பாண்டிச்சேரி மாநாட்டையும் கருத்தரங்கையும் தலித் மக்களின் பாதுகாப்புக்கும் சாதியக் கொடுமைகளின் பாதிப்பிற்கும் தீர்வு கண்டார். அடுத்து தர்மபுரியில் மாநாடு. இவரன்றோ தமிழரின் நலன் காக்கும் தலைவர். எனவே, உண்மையான தமிழ் உணர்வாளர்கள் ஆசிரியர் அவர்களின் சாதி ஒழிப்புப் பணிக்குக் கை கோத்து களங் காண வேண்டும். இதுவே 80ஆம் அகவையில் அடி வைக்கும் அவருக்கு செலுத்தும் பாராட்டும் நன்றியுமாகும்.

- மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...


அறிவு நிலா!


அய்யாவின் கைபுனைந்த
அகல்விளக்கு அறிவுநிலா!
இதிகாசத் திரைகிழிக்கும்
இந்நாட்டின் எமர்சன்நீ!
கள்ளம் கலவாத
களிறு நடையை காட்டுமுன்றன்
உள்ளச் சிறப்புக்கு
உவமையினை யாருரைப்பர்?
பூசி மெழுகுகிற
புதுக்கவிதை போலாது
மாசு மறுவற்ற
மரபுக் கவிதை நீ!
ஆரமணி யாரம்
அணிந்திடுமே நின்பேச்சில்
வீரமணித் தோன்றலே
வெற்றித் திருவுருவே!
அறியாமையை வென்றுயரும்
அறிவார்ந்த ஆசானே!
பெரியாரின் சிந்தனைபோல்
பல்லாண்டு வாழியவே!

- கவிஞர் கண்ணிமை

தமிழ் ஓவியா said...


கடவுள் செய்தாரா?



காக்குங் கடவுள் உண்டென்றால் கடல் அலைச் சீற்றத்தைத் தடுத்தாரா?
தீவினை தீர்ப்பது அவனெ ன்றால், - குழந்தைகள்,
தீயில் வெந்ததைத் தடுத்தாரா?

ஈர்க்குங் கருணைப் பார்வை யென்றால்,
ஈழத் தமிழரைக் காத்தாரா?
கடலில் பிறந்திடும் கடும் புயலைக்
கண்டு சொல்பவர் மனிதரன்ரோ?

எரிந்தே வெடிக்கும் எரிமலையை,
ஏனோ கடவுள் தடுக்கவில்லை?
பொன்னை எடுக்கப் பூமிதனில்,
போட்ட ஓட்டைகள் பலபலவே
இங்கே இருக்குது பொன்னென்று
ஏனோ கடவுள் கூறவில்லை?

கற்சிலை இருக்குங் கூடமெல்லாம்,
கடவுளா கட்டினான்; சொல்லுங்கள்?
பற்பலகுடிசையே மானிடர்க்கு,
கற்சிலை வைக்க மாளிகையா?

குளக்கரை கிடந்தால் அப்பாகும்,
குடில்மூன் கிடந்தால் படியாகும்,
கோயிலுனுள்ளே கல் நின்றால்,
கும்பிடும் செயலோ மூடத்தனம்

கோயிலில் இருந்தால் கடவுளென்று,
குமரா! குமரா! என்கின்றார்
திருடன் தூக்கிச் சென்று விட்டால்
சிலையெனக் கூசாதுரைக்கின்றார்

கடவுள் செயலால் உலகினிலே - நன்மை
கடுகின் அளவும் நிகழவில்லை,
கடவுள் கட்டிய கோயிலென்று,
கருத்தைக் கூற வருவார் யார்?

குறிப்பு: பத்தி 1ல் குழந்தைகள் தீயில் என்பது கும்பகோணம் தீ விபத்து
5ம் பத்தியில் அப்பாகும் என்பது துணி துவைக்கும் கல் எனப்படும்

(உ-ம்) அப்பிலே தோய்ந்திட்டு (அடுத்தடுத்து) அடுத்ததத்து நாம் அதனை தப்பினால் நம்மையது தப்பாதோ! இரட்டைப் புலவர்கள்.


உ.கோ. சீனிவாசன்
திருப்பயற்றங்குடி

தமிழ் ஓவியா said...


எண்பதில் எழுபது


எண்பதுக்கு எழுபது.
இன்றுவரை
எவரும் எடுக்காத
பொது வாழ்க்கை மதிப்பெண்.
பிறர் பித்தம் தெளிய வைக்க
தானே மருந்தேற்கும்
பத்தியப் பொதுவாழ்க்கை.
சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வு என்பதனை
எங்களுக்குப் புரிய வைத்துச்
சுகவாழ்வு எமக்களிக்க
சுகமிழந்து உழைக்கிறாய்.
எப்போதும் பேசுகிறாய்!
எப்போதும் சுற்றுகிறாய்!
எப்போது எழுதுகிறாய்?
எப்போதுதான் உறங்குகிறாய்?
உறங்கும் தமிழினத்தை
உலுக்கி எழுப்பிட
உறங்காமல் சுற்றி வரும்
ஊர் சுற்றி நீ.
பதவிக்குப் போகாமல்
பதவிக்குப் போவோர்க்குப்
பயணவிதி வகுத்தளித்து
காவலுக்கு நிற்கும்
கருப்புச் சட்டைக்காரனே!
ஆடுற மாட்டை
ஆடிக்கறந்து
பாடுற மாட்டைப்
பாடிக் கறக்கும்
உளவியல் கற்ற
மனநல மருத்துவன் நீ.
அன்று
ஆரவார அரசியல் புயலில்
திக்குத் தெரியாமல்
திசைமாற விருந்த
ஆட்சிக் கப்பலை
அணியமாய்ச் செலுத்த
உன்னில் உதித்த ஒரு திட்டம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அம்புகள் வீசப்பட்டாலும்
உடல் சிலிர்ப்பில் அவற்றை
உதறித் தள்ளி
இலக்கை நோக்கும்
எங்கள் இயக்ககமே!
சரிபாதி பெண்ணினத்தின்
சரியான உரிமைக்கு
சலிக்காமல் போராடி
ஒலிக்கின்ற போர்முரசே!
ஆரியத்தை அரவணைத்தே
வீரியத்தை வெளிப்படுத்தும்
வாய்ச்சொல் வீரர்கள்
வசைமாரி பொழிந்தாலும்
பண்பாட்டுப் படையெடுப்பைத்
தடுக்கின்ற போர்க்களத்தில்
அரிதாரம் பூசாத
அதிரடிப் படை நீயே.
ஆண்டாண்டு காலமாக
அறியாமை புரியாமை
மூளையிலே போட்டுவைத்த
முந்நூறு முடிச்சுகளை
ஒவ்வொன்றாய் அவிழ்ப்பதற்கு
ஓயாதுழைப்பவனே!
வஞ்சிக்கப்பட்டோரின்
வாழ்வுரிமை காப்பதற்கு
வலியோடு உழைக்கின்ற
வாழ்நாள் உறுப்பினர் நீ
புதைகுழிக்குப் போய்விட்ட
புதுநீதி மண்டலை
உயிரூட்டி உணர்வூட்டி
விதை நெல்லாய் மாற்றுதற்கு
ஊர்கூட்டிப் போராட
உனையன்றி யாருண்டு?
இன்று
நாங்களோ
எங்கள் எச்சமோ
பெறுகின்ற
பணிவாய்ப்பென்னும்
பன்னீர்த்துளிகள் யாவும்
இயக்க வரலாற்றில்
அன்று நீ சிந்திய
வியர்வைத் துளிகளின்
வேதி மாற்றம்.
ஒளிவட்டம் இல்லாத
ஒப்பற்ற தலைவா!
அக்ரகாரத்தின் அடிமடியில்
அணுகுண்டு வீசி
நீ பெற்ற வெற்றியில்
நாங்கள்
உயிர்மூச்சு விடுகிறோம்.
இருட்டு உலகைப்
புரட்டிப் போட்டு
குருட்டு விழியைத்
திறந்து வைக்கக்
கண்தானம் செய்யும்
கருஞ்சட்டை வீரனே!
கண்ணை விற்றுச்
சித்திரம் வாங்குவரோ?
என்பார்.
சமுதாயச் சந்தையில்
தமிழர் நலமெனும்
சித்திரம் வாங்கத்
தம் வாழ்வுக் கண்களைத்
தியாகம் செய்யும்
உன் போன்றோரைக்
கண்ணை விற்றுச்
சித்திரம் வாங்குவோம்
பட்டியலில் சேர்த்தால்
எப்படித் தவறாகும்?
பட்டியல் வளர
நீ வாழ்க பல்லாண்டு

- பொதட்டூர் புவியரசன்

தமிழ் ஓவியா said...


சரியான பாதை நோக்கிப் பயணிப்போம் . . .


மனித உரிமையை அளிக்க மறுக்கும் எதையும் ஒழித்துத் தீரவேண்டியது மனிதத் தன்மையின் குணம் என்பதை சுயமரியாதை இயக்கம் பறையடிக்கிறது என்று அறிவித்து மனித உரிமைக்குத் தடையாக இருக்கும் இந்து மதத்தையும், சாஸ்திரங்களையும், புராணங் களையும், கடவுள்களையும் அம்பலப்படுத்தி, அக்குவேறாய், ஆணிவேறாய் தத்துவத் தலைவர் தந்தை பெரியார் விமர்சித்த பொழுதும், அதற்கென்று மனித உரிமை இயக்கமாம் திராவிடர் கழகத்தை நிறுவி, தனக்குப் பிறகு தந்தை பெரியார் அடையாளப்படுத்திய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விமர்சிக்கும் பொழுதும் அதிலுள்ள கருத்து வலிமைக்குப் பதில் சொல்ல வக்கற்ற இந்து முன்னணி (பார்ப்பன முன்னணி) வகையறாக்கள் தி.கவும், வீரமணியும் இந்து மதத்தை மட்டும்தான் விமர்சிக்கிறார்கள். இந்துக்கள் என்ன இளித்த வாயர்களா? இந்துக்களே ஒன்று படுங்கள் என்று கிளப்பும் மதவெறி மயக்கத்திற்கு ஆளாகும் அப்பாவி இளைஞர்கள் (இந்துக்கள்) உரத்து சிந்திக்க வேண்டிய நேரமிது. . .

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தருமபுரி மாவட்டம், நத்தம் காலனியில் மிகப்பெரிய கலவரம். 200க்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்ட இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இவை யனைத்தும் யாரால் செய்யப்பட்டன? இந்துக்களில் மற்றொரு பிரிவினரான மேல்ஜாதி இந்துக்களால். காரணம் தாழ்த்தப்பட்ட இந்து இளைஞன், மேல்ஜாதி இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால். இந்துக்களுக்குள் கலவரம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இசுலாமியர் களல்ல. கிறிஸ்தவர்களல்ல. இதற்கு காரணமும் இசுலாம் மதமோ, கிறிஸ்தவ மதமோ அல்ல.

இவை அனைத்திற்கும் காரணம் இந்து மதத்தால். இந்து மதக் கடவுளான கிருஷ்ண பகவானால் படைக்கப்பட்டதாக கீதையில் சொல் லப்பட்ட வர்ணாசிரமும், ஜாதியும் தான் என்பது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது.

இவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்த ஏன் வரவில்லை இந்து முன்னணிகள்? இந்து முன்னணி என்பது பார்ப்பன முன்னணி என்பதனை இப்பொழு தாவது தெரிந்து, தெளிந்து கொள் ளட்டும். தம்மையும் இந்துக்கள் என்றும் நம்பும் பார்ப்பனரல்லாத இளைஞர்கள், சரியான பாதை நோக்கி நடக்கட்டும். ஆம் இந்து மதப்புற்று நோயான ஜாதியால் பிளவுபட்டு அழிந்து போகாமல் நாம் மனிதர்களே என்ற உணர்வு பெற வேண்டும் என்று கலவரப் பகுதிக்கே சென்று இரத்தக் கண்ணீர் சிந்தி உருக்கமான வேண்டு கோள் வைத்தது உன்னத தலைவர் கி.வீரமணியன்றோ! திராவிடர் கழகம் தானே!! தந்தை பெரியார் என்ற தத்துவம்தானே!!! கொடுமை செய்யும் மதத்தையும், சாஸ்திரங் களையும், கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோ மானால் நாம் நிரந்தரமாய்ப் பறைய னாகவும், சூத்திரனாகவும், தாழ்ந்தவனா கவும், பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத் தான் இருந்தாக வேண்டும் என்று அறிவுறுத்தினார் அறிவுலக மேதை தந்தை பெரியார்.

எனவே இக்கேவலத்தை ஒழிக்க சரியான பாதை நோக்கி பயணிப்போம். தருமபுரியில் டிசம்பர் 9ல் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் முடிவெடுப்போம்.

- - பூவை. புலிகேசி

தமிழ் ஓவியா said...


வெல்க பெரியாரின் புகழ்!


அகவை எண்பதில் (2012 டிசம்பர் 2) அடியெடுத்துவைக்கும்
அன்பிற்கினிய தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களே!
ஆத்திக வாதிகளுக்கு - பகுத்தறிவு பகலவனைப்போல்
நாத்திகத்தை நயம்பட எடுத்துரைக்கும் பெரியாரியல் வாரிசே!
இலங்கை வாழ் தமிழர்களை சுட்டுக்குவித்த சிங்கள அரசை கண்டித்து
உண்மை இதழில் விடுதலையில் அவ்வப்போது தலையங்கம் தீட்டிய தங்கமே!
ஈரோட்டு பகுத்தறிவு பாசறையில் பயிற்சி பெற்ற
நல்லிதயம் கொண்ட நாத்திக நல்முத்தே!
உழைப்பவர் யார்? பிறர் உழைப்பில் பிழைப்பவர் யார் என்பதை
துல்லியமாக எடை போடும் முதுமையின் இளமையே!
ஊரெல்லாம் உலகெல்லாம் வெண்தாடி வேந்தரின் கொள்கையினை
உரக்க ஒலிக்கச் செய்த தரணி போற்றும் இளைய பெரியாரே!
எண்பதிலும் எழுச்சிமிகு உரையாற்றும் மனம் கமழும் தமிழின் தமிழே!
வைக்கம்வீரர் தந்தை பெரியாரின் வலதுகரமே!
ஏதும் கைம்மாறு கருதாது பிறருக்கு உதவிடும் கருணை உள்ளமே!
தி.க., இல்லையென்றால் கடவுள் லீலைகள் பற்றி எடுத்துக் கூற நாதி ஏது?
அய்யத்திற்கு அப்பாற்பட்ட அய்யாவின் சமுதாய சிந்தனை சிற்பியே!
மூடநம்பிக்கையின் முடை நாற்றத்தை போக்க வந்த சந்தனகாற்றே!
ஒவ்வொரு உங்கள் பேச்சிலும், எழுத்திலும் பெரியாரை பார்க்க வைக்கும்
திராவிடர் கழகத்தின் திருவிளக்கே! அய்யாவின் அடிச்சுவடே!
ஓயாது உழைத்துழைத்து விடுதலை நாளேட்டினை அழகு பெறச் செய்து
ஆசிரியர் பணியில் பொன் விழா கண்ட பூமனமே!
ஔவை மட்டும் இருந்திருந்தால்.. உமது சிறப்பினை எப்படியெல்லாம்
அனுபவித்து பாடி இருப்பார் என்பதை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது
பேமசான பெரியார் திடலில் உறங்கும் அய்யாவின் மூச்சுக் காற்று தென்றலாக தவழ்ந்துவந்து தங்களை தழுவட்டும், இனிதே வாழ்த்தட்டும் என உளமார வாழ்த்துகிறேன்.

- தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

தமிழ் ஓவியா said...


ஜாதியின் நச்சுப்பல்லை பிடுங்குவதற்கு ஒரு பொது இயக்கத்தைக் கட்ட வேண்டும்


சென்னை - மணவழகர் மன்றத்தில் தமிழர் தலைவர் பேச்சு!

சென்னை மணவழகர் மன்ற முத்தமிழ் விழாவில் ஏமாறலாமா? என்ற தலைப்பில் தமிழர்தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். மேடையில் பேராசிரியர் க.அன்பழகன், நீதியரசர் கோகுலகிருஷ்ணன், ஆர்.நல்லகண்ணு, டி.கே.எஸ்.இளங்கோவன், மன்ற செயலாளர் கன்னியப்பன் உள்ளிட்டோர் உள்ளனர். (30.11.2012)

சென்னை, டிச.1-மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய - மணவழகர்மன்றத்தின் 56ஆம் ஆண்டு முத்தமிழ் விழா, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 30.11.2012 அன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங் கியது. பிறகு மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, மேனாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் தலைமையேற்று உரை யாற்றினார். பிறகு சென்னை தொலைக்காட்சியின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் வெ.நல்லதம்பி, தமிழைக் காப்பது எப்படி?, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், பழந் தமிழராட்சி, இந்திய பொதுவுடைமை இயக்கத் தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தென்றல் என்ற தலைப்புகளில், திரு.வி.க. வை வெவ்வேறு கோணங் களில் படம் பிடித்துக் காட்டினர். நிறைவுரையாற்றிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது: தமிழகத்தில், மக்களிடையே தமிழ்மொழியை கொண்டுசெல்ல பாடுபட்டார். தன்மானத்தை வளர்த்தார். தொழிலாளர் நலனுக்காக பாடு பட்டார், சாதி ஒழிப்புக்காக பாடுபட்டார். திரு.வி.க.வின் கருத்துகள் உயர்ந்த சிந்தனைகள் உடையது.

தமிழ் மொழியை காக்க பழந்தமிழர் ஆட்சியை நிலைநாட்ட தமிழ்தென்றலாய் உலவிய திரு.வி.க.வின் கருத்துகள் அனைவரையும் சென்றடைய பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைத்து தமிழை வளர்க்க வேண்டும். தமிழையும், தன்மானத்தையும் கலந்து ஊட்டியவர் திரு.வி.க என்று புகழாரம் சூட்டினார்.

முன்னதாக பேசிய தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள், ஏமாறலாமா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தமது உரையில், தமிழைக்கற்றுக் கொடுத்த திரு.வி.க.வின் பெயரையே மணவழகர் என்று மாற்றக்கூடிய வகையிலும், தமிழ்நாட் டில், தமிழில் ஒரு மன்றம் சிறந்த கொள்கைகளோடு 56 ஆண்டுகள் நடத்தி வருவதற்கென்றே இந்த மன்றநிருவாகிகளை தனியே பாராட்ட வேண் டும் என்றார். மேலும் அவர், பேசும் போது, முதன்முதலில் திரு.வி. க.வே ஏமாந்தார்கள். பெரியார்தான் ஏமாற லாமா? என்று கேட்ட பிறகுதான் மிகப்பெரிய சமூகப்புரட்சி ஏற்பட் டிருக்கிறது. ஆனாலும், இன்றைக்கு சில பிற் போக்குசக்திகள், தாங்கள்அரசியலில் ஏற்றம் பெற ஜாதியை கையில் எடுத்திருக்கிறார்கள். இனியும் நாம் ஏமாறக் கூடாது. அந்த ஜாதியின் விசப்பல்லை பிடுங்குவ தற்காக ஒத்த கருத்துள்ளவர் அனைவரும் சேர்ந்து ஒரு பொது அமைப்பைக் கட்ட வேண்டும். என்று பேசினார்.

தொடர்ந்து, மணவழகர் மன்றத்தின் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றியுரை வழங்க விழா நிறை வடைந்தது. நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், திராவிடர் கழகத் தின் வட சென்னை மாவட்ட தலைவர் திருவள்ளு வன் மற்றும் தங்கமணி, தனலட்சுமி, புலவர் பா.வீரமணி, பேராசிரியர் சோமசுந்தரம், பரமசிவம் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச் சியை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...

வித்தியாசமான தலைவர்



திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இன்றைய தினம் தமிழர் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் மூத்த தலைவராக விளங்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் கூட இவரை விளிக்கும்போது எனது அருமை இளவல் தமிழர் தலைவர் வீரமணி என்று குறிப்பிடத் தவறுவதில்லை.

1. எளிய குடும்பத்தில் பிறந்தவர் - இன்றைக்கு உலகம் அறிந்த தமிழர் தலைவராக ஒளிர்கிறார்.



2. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் சொன்னது மிகப் பொருத்தமானது.
(பெரியாருக்குப் பின்)

வெறிச்சோடிப் போகாமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றியவர் வீரமணி என்பது பாராட்டு என்று கருதக் கூடாது; அதில் ஆழமான பொருளும், உண்மையும் நிறைந்துள்ளன. (16.8.1981)

3. வயது ஒன்பதரை ஆண்டு இருக்கும்போதே மேசையின்மீது ஏற்றப்பட்டு முழக்கமிட்ட புதுமை இவரை சாரும்.

4. 11 வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய அதிசயம்.

5. 11 வயதில் சரித்திர திருப்பம் வாய்ந்த மாநாட்டில் (சேலத்தில் - நீதிக்கட்சி திராவிடர் கழகம் பெயர் மாற்றம் பெற்ற மாநாட்டில்) உரையாற்றிய வாய்ப்பு.

6. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே புதுமை முழக்கம் என்ற கையெழுத்து ஏட்டினை நடத்திய ஆர்வம்.

7. 13 வயதில் இவர் ஆற்றிய வீரவேக உரையைக் கேட்டு பெரும் பேச்சாளரான அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தன் என்று தொலைநோக்கோடு கூறிய பாங்கு! இந்த வயதிலேயே வெளி மாவட்டங்களுக்குப் பேச அழைக்கப்பட்ட விந்தை!

8. தி.மு.க. பிரிந்தபோது இவருக்கு வயது 16. தன்னை கொள்கைப் பாதையில் வார்த்தெடுத்த மூத்த அண்ணன், அவரின் குருநாதர் - சுற்றியுள்ளோர் அனைவரும் பெரியாரை விட்டு விலகிச் சென்ற நிலையிலும், அந்த வயதிலேயே தனக்குத் தலைவர் பெரியார்தான், இயக்கம் திராவிடர் கழகம்தான் என்று சஞ்சலம் ஏதுமின்றி முடிவெடுத்த பக்குவம் - முதிர்ச்சி!

9. திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பல்கலைக் கழகங்களில் படித்திருந்தாலும், கல்வியில் திறன் காட்டியது இவர் அளவுக்குக் கிடையாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பாடத்தில் (பி.ஏ. ஹானர்ஸ்) இரு தங்க மெடல்களைப் பெற்ற சாதனை!

10. சனி, ஞாயிறுகளில் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் செல்லுவது - மற்ற நாட்களில் பல்கலைக்கழகப் படிப்பில் கவனம் எனும் கடமை உணர்வு!

11. திருமணத்தில் கூட பெண்ணை நான் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்த நம்பிக்கை.

12. திருமணம் முடிந்து தேனிலவு என்பது பெரியாரோடு சுற்றுப்பயணம் செய்த உள்ளம்.

13. வக்கீல் தொழிலைத் தொடங்கி நல்ல அளவு அதில் பரிணமித்தபோது, தம் தலைவர் அழைப்புக் கொடுத்தார் என்றவுடன் அனைத்தையும் தூக்கி எறிந்து, சென்னை வந்து விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்ற பொறுப்புணர்வு.

14. யாருக்கும் எளிதில் கிடைக்காத பாராட்டும், நம்பிக்கையும் பெரியாரிடம் இவருக்கு மட்டுமே கிடைத்த பேறு!
விடுதலையை வீரமணியின் ஏகபோக நிர்வாகத்தில் விடுகிறேன் என்று தந்தை பெரியார் விடுதலையில் எழுதிய அதிசயம் (6.6.1964).

15. பெரியார் என்னும் மாமலை சாய்ந்தபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கழகம் கலையாது - இணையாது அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம் என்று சொன்ன உறுதி (25.12.1973).

தமிழ் ஓவியா said...

16. எந்த ஒரு குற்றமும், தவறும் இழைக்காத நிலையில், மிசா கைதியாக ஓராண்டு காலம் கழித்த அவலம். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 47 முறை கைது.

17. பெரியார் அறக்கட்டளையை வருமான வரித்துறை மூலம் கபளீகரம் செய்துவிடலாம் என்ற ஆரிய சூழ்ச்சியை முறியடித்து, அறக்கட்டளைதான் என்று வருமான வரி தீர்ப்பாயத்திடமே (இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள்) தீர்ப்புப் பெற்ற தீரம். வருமான வரித் துறையிடம் கட்டிய பணத்திற்கு வட்டி போட்டுத் திரும்பப் பெற்ற உலக அதிசயம்!

18. உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அவசரமாக அழைத்து நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும், அந்தப் பொறுப்பை வீரமணி ஏற்க வேண்டும் என்று அன்னை மணியம்மையார் எழுதியிருந்த கடிதத்தை சுக்கல் நூறாகக் கிழித்தெறிந்து -அம்மா இருக்கும்வரை அவர்தான் தலைவர் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த உள்ளப் பாங்கு! (25.12.1977).

19. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஆணையை எ(ரி)திர்த்து ஆணையைத் திரும்பப் பெறச் செய்தது - அதன்மூலம் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 ஆக உயர்த்த காரணமாக இருந்தது (எம்.ஜி.ஆர். அரசில் போராட்டம் நடத்தி யாரும் வெற்றி பெற்றது கிடையாது என்பதையும் கணக்கில் கொள்க!)

20. மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி, இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வழி செய்தது.

21. இதன்மூலம் இந்திய அரசியலிலே சமூகநீதி - சமூகநீதிக்கு எதிரான அணி என்னும் புதிய சமூக அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்திய நேர்த்தி.

22. நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து சமூகநீதி உணர்ச்சி பெறுகிறேன் என்று ஒரு பிரதமரே (வி.பி. சிங்) கூறியது.

23. ‘‘Veeramani is the most popular Leader in Tamil nadu’’ என்று ஒரு குடியரசுத் தலைவரே கூறியது (25.5.1987 - கியானி ஜெயில் சிங்).

24. திராவிடர் கழகம் இருக்க, பெரியார் திடல் இருக்க வீரமணி இருக்க நான் எதற்கு அஞ்சப் போகிறேன் என்று முதலமைச்சர் கலைஞர் கூறும் அளவுக்கு உயர்நிலை (11.11.2006 திருச்சி).

25. வீரமணி எங்கள் ராஜகுரு என்று மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பெருமையாக கூறியது.

26. திராவிடர் இயக்க வரலாறு நூலை எழுதிய நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் இயக்க வரலாற்று நூலை வெளியிடத் தகுதி படைத்தவர் வீரமணியே என்று கூறிய கொள்கைப் பார்வை (11.7.1996).

27. 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடங்களைக் காப்பாற்ற சட்டம் எழுதித் தந்து (31-சி) மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றச் செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் பெற்று - நீதிமன்ற குறுக்கீட்டி லிருந்து காப்பாற்ற ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்தது. (76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்). (முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆக மூன்று பார்ப்பனரையும் பயன்படுத்தி சமூகநீதியைக் காப்பாற்றியது - சாதாரணமா?)

28. தந்தை பெரியார் காலத்தில் இருந்த கல்வித் தொடர்பான நான்கு நிறுவனங்கள் இப்பொழுது 50 நிறுவனங்கள் அளவுக்கு வளர்த்த அசாதாரண செயல்_பல்கலைக்கழகம் உள்பட!

29. நான்கு பக்கங்களாக இருந்த விடுதலையை 8 பக்கங்களாக்கி ஆஃப்செட்டில் அச்சிட்டு பூத்துக் குலுங்கும் புதுமலராக நுகரச் செய்துள்ள திறன். திருச்சியிலும் இன்னொரு பதிப்பு. இணைய தளத்திலும் முதன்முதலாக வெளிவந்த ஏடு விடுதலை எனும் பெருமை.

1962ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பிறந்தநாள் விடுதலை மலரை அறிவுப் பெட்டகமாகக் கொண்டு வந்தவர்.

30. அலை அலையாக வெளியீடுகள் பல மொழிகளிலும், 1949 வரை குடியரசு தொகுப்பு, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி.
பழைய நூல்கள், புதிய பொலிவிலும், புது நூல்களும் வெளியிட்டது; கீதையின் மறுபக்கம் (கி. வீரமணி) திராவிடர் இயக்கத்தின் முக்கிய வெளியீடு.

31. உலகளவில் பெரியார் கொள்கையைப் பரப்பிட பெரியார் பன்னாட்டு மய்யம்; உலக மனித நேய அமைப்பில் (I.H.E.U) திராவிடர் கழகம் உறுப்பு. 1994 இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பெரியார் மய்யம் நிறுவிய நிகரற்ற சாதனை.

32. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் கொண்டு வந்து யார் செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கே ஆதரவு என்று நிபந்தனை வைத்து தேர்தலில் ஆதரவு அளித்த கொள்கை வழி அணுகுமுறை.

33. தன் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் தந்தை பெரியார் அவர்களிடமே கூட வாதாடும் நிலை உண்டு.

தமிழ் ஓவியா said...

34. தந்தை பெரியாரை அன்னை மணியம்மையார் உணவுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உடலுக்கு ஒவ்வாத பொருளை தந்தை பெரியார் வாயில் வைத்தால் கையை விட்டு வெளியே எடுத்தெறிந் தவர் அன்னையார். அதே பணியை அன்னை மணியம்மையார் விடயத்திலும் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்ததுண்டு.
35. இரயிலில் முன்பதிவு கிடைக்காமல் மூன்றாம் வகுப்பில் ரயிலில் நடைபாதையில் படுத்து வந்ததும் உண்டு. (இக்கட்டுரையாளர் கரூரிலிருந்து ஆசிரிய ருடன் அத்தகைய பயணத்தில் சென்றிருக்கிறார்).

36. தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குப்பின் இயக்கத்தையும், நாட்டையும் பெரியார் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடித்தமைக்காக எடைக்கு எடை வெள்ளி, தங்கம் அளித்து சீராட்டிய செயல். (எல்லாம் இயக்கத்துக்கே) மாலைக்குப் பதில் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கழகத்திற்கே வந்து சேரும்).

37. 50 ஆண்டுகாலம் ஒரு பத்திரிகைக்கு (விடுதலைக்கு) ஆசிரியராக இருந்த சாதனை. அதற் காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் தோழர் கள் சேர்த்து கொடுத்த அதிசயம்.

38. உடலில் அறுவை சிகிச்சை பெறாத இடம் இல்லை. கண், மூக்கு, தொண்டை, விலா எலும்பு, குடலிறக்கம் மூன்று முறை இருதய சிகிச்சை, மூலம் இவ்வளவையும் தாண்டி, சதா ஓடிக்கொண்டி ருக்கும் நில்லாத கடிகாரம் (காலில் சக்கரம் என்பார் களே அது இதுதானோ!).

39. மாமனார் மானமிகு சித. சிதம்பரம் அவர்கள் மறைந்த போது, அவர் உடலுக்குக் கொள்ளி வைக்கவேண்டும் என்று மாமியார் கேட்டுக் கொண்டபோது, அது என்ன கொள்ளி வைப்பு?- யார் தீ மூட்டினால் என்ன? என்று கொள்கை பிடிவாதம் செய்ததால், திரண்ட சொத்துக்களை இழந்தவர்!

40. படிப்பு, பயணம், பிரச்சாரம், போராட்டம் என்று வாழ்வை வ(ரி)டித்துக் கொண்ட இவருக்கு வாய்ந்த வாழ்விணையர் - (ஒரு வகையில் இரக்கம் ஏற்பட்டாலும் ஈடு கொடுக்கும் ஈகை உள்ளம் படைத்த பெரும் பண்பின் குடியிருப்பு!).

41. நிறுவனங்களை ஏராளமாக வளர்த்துவிட்டு பெரும் சுமையை தொண்டறத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.

42. ஈழத்தமிழர்களுக்காக ஈழ விடுதலை மாநாட்டை உலகத் தமிழர்கள் எழுச்சி கொள்ளும் வகையில் மதுரையில் நடத்திய மாண்பு (17, 18.12.1983)

43. மானமிகு, தொண்டறம் எனும் சொற்களைத் தமிழுக்கு தந்த பெருமை.

44. தமிழர்கள் பிளவுண்டு போகக்கூடாது என்பதற்காக பிரிந்தவர்களை ஒன்றிணைக்க மேற் கொள்ளும் முயற்சி (தி.மு.க.- அ.தி.மு.க.) இணைப் புக்குக் கூட பெருமுயற்சி செய்தவர்.

பிரிந்திருந்த அப்துல் சமது அவர்களையும், அப்துல் லத்தீப் அவர்களையும் ஒன்றிணைக்க தோள் கொடுத்த தோன்றல்)

தமிழ் ஓவியா said...

45. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை உருவாக்கி, ஆக்க ரீதியான பணியில் ஈடுபாடு. திராவிடர் இயக்க கலைக் களஞ்சியம் தயாரிக்கும் பணி.

46. தமிழா! தமிழா! ஒன்றுபடு - தமிழன் பகையை வென்றுவிடு! என்று முழக்கம் கொடுத்துவரும் இனப் பாதுகாவலர்.

47. கட்சிகளைக் கடந்து தமிழர்களால், மக்களால் மதிக்கப் பெறும் மானமிகு தலைவர்.
அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தகுதியுள்ள தலைவர்.

48. மம்சாபுரம் (20.7.1982), வடசென்னை (27.4.1985), சேலம் மாவட்டம் தம்மம்பட்டி (26.8.1987) ஆகிய இடங்களில் உயிருக்குக் குறிவைத்துத் தாக்குதல். பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பாடை கட்டித் தூக்கிச் சென்றனர் (1981).

49. கோபம் வரும் என்றாலும், உள்நோக்கம் இருக்காது. வந்த வேகத்தில் விடைபெறும். எதிலும் துல்லியம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பால் ஏற்படக் கூடிய இயல்பு அது.

இன்னும் பட்டியலிடலாம். விரிக்கலாம் - வியக்கத் தக்க வகையில் வளர்ந்துகொண்டே போகும்.

50. தந்தை பெரியார் இயக்கத்தை உருவாக்கியதோடு தொலைநோக்கோடு செய்த ஏற்பாடுகள், தக்காரை உருவாக்கி அடையாளம் காட்டிய பான்மை பெரிதும் வியக்கத்தக்கது.

சிவகங்கை பொதுக்கூட்டத்தில் (10.4.1965) தந்தை பெரியார் தெரிவித்த கருத்து நூற்றுக்கு நூறு மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பொருந்து கிறது; இதோ பெரியார் பேசுகிறார்.

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள்.

இந்தத் தொண்டும் பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்; உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால் அவன் அடுத்து தலைமை ஏற்க வருவான். அதுவரை யார் என்றால் இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான். முகமது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு அவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை.

அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம்: சிவகங்கையில் 10.4.1965 அன்று ஆற்றிய உரையிலிருந்து. விடுதலை 23.4.1965, பக்கம் 3)

பெரியார் பரவாயில்லை என்று கூறி ஆரியம் நடுங்கும் அளவுகோல் ஒன்றே போதும் - இந்தத் தலைவரின் (பழனியில் பாடை கட்டித் தூக்கவில்லையா?) எழுச்சிக்கும் ஈடில்லா சிறப்பிற்கும்! பெரியாரை இழந்த மானுடம் - பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம்!

51. தந்தை பெரியார் கொள்கைகள் தான் இந்த மண்ணுக்குரியவை! சமுதாயத்தின் எல்லாத் தடத்திலும், தளத்திலும் தலைகீழ் புரட்சியை நடத்தியவை. பெரியார் மறைவுக்குப் பிறகு அந்தக் கொள்கை அடிப்படையில் பணியாற்ற விரும்புவோர் - நாட்டில் நல்லது நடக்க வேண்டும்; பெரும்பலன்கள் வேண்டும், பெரியாரியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அணி வகுத்துக் கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டியது - மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இயங்கும் - திராவிடர் கழகத்தில்தான்.

80 ஆண்டு வயதில் 70 ஆண்டு பொதுவாழ்க்கைக்குத் தொடர்புடையவரும், தந்தை பெரியார் அவர்களால் வார்த்து எடுக்கப்பட்ட வரும், இந்த வகையில் உலகத்தால் அறியப்பட்டு வரும், இந்தப் பிரச்சினையில் வீரமணியின் கருத்து என்ன என்று எதிர்ப்பார்க்கப் பட்டு வருபவருமான ஒரு தலை வரின் கரத்தைப் பிடித்துக் கொள்வதுதான் பொறுப்பான புத்திசாலித்தனம்.

இதை விடுத்த எத்தகையவர் களாயினும், ஆற்றல் மிக்கவரா யினும் அவர்கள் தன்னலச் செறுக்குக்குச் சொந்தக்காரர்களே தவிர, பெரியாரி யலுக்குப் பயன்படமாட்டார்கள் இது கல்லின் மேல் எழுத்தே!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...

அறிவார்ந்த பயன்பாட்டு பொருளியல் சிந்தனையாளர்


ஆயுதம் ஏந்தாமல் அரசியல், பொருளாதார மாற்றங்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. ஆனால் சமூகப்புரட்சி என்பது ஆயுதம் தாங்கித்தான் பெரும் பாலும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அறிவாயுதம் தாங்கி சமூகப்புரட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் சமூகப்புரட்சிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பெரியார் இயக்கமே! சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு, சமுதாயத்தினர் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டுள்ள சமூக அவல நிலையே காரணம் என்பதைப் எடுத்துரைத் தவர் தந்தை பெரியார். இந்த மண்ணுக்கு ஏற்ற சமத்துவத் தத்துவங்களை களம் இறங்கி, துணிச்ச லாகப் பிரச்சாரம் செய்து இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். அரசியல் புரட்சியை விட சமூகப் புரட்சியை முதன்மையாகக் கருதிய தந்தை பெரியார். பொருளாதார மாற்றங்களை விட சமூகமாற்றத்தின் பணி கடுமையானது என எடுத்துரைத்து அந்த சமூக மாற்றத்திற்காக அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாருக்குப் பின் அவர்தம் கொள்கை வழித்தடத்தில் சமூகப்புரட்சிப் பயணத்தை வழிநடத்தி வருபவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார். பெரியாரை இழந்த மானிடம் பெறும் ஆறுதல் பெறுவது இவரிடம் எனும் கவிஞரின் வரிகளுக்கு ஒப்ப பெரியாரின் உளப்பாங்கு, போராட்டக்களப் பாங்கு அணுகுமுறைகளால் வார்த்து எடுக்கப்பட்ட ஆசிரியர் வீரமணி, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்து களை உலகளாவிய அளவில் கொண்டு செல்லு வதில் - தந்தை பெரியாரை உலக மயமாக்கல் (Globalisation of Periyar) என்னும் அரும் பணியில் வெற்றி கண்டு வருகிறார்.

ஒரு சமூகப்புரட்சி இயக்கத்தில், 80 வயதினை எட்டும் தலைவரின் பொதுவாழ்க்கை 71 ஆண்டுகள் என்பது உலகில் ஒப்பிடமுடியாத அரிய தொண்டறப் பணியாகும். சமூக மாற்றம் பற்றிய கண்ணோட்டம் ஆசிரியரது சிந்தனையில் - செயலில் அதிகமாக இருப்பினும், இயல்பான நடைமுறைக்கு உகந்த பொருளாதார எண்ணங்கள் அவரது எழுத்துகளில், செயல்பாடுகளில் சமூக வாழ்வுக்கு பலன்கூட்டி வருகின்றன. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கு ஆசிரியர் வீரமணி அவர்களது உலகளாவிய பொருளாதாரச் சிந்தனைகள் பயன்பட்டு வருவதும் ஒரு நுண்ணிய அணுகுமுறை இயல்பாகும். சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் இந்தத் தலைவரின் பொருளாதாரச் சிந்தனைகள், எண்ண வெளிப்பாடுகள், பொது வாழ்க்கையில் பயணித்த - பயணித்து வரும் இதர தலைவர்களிடம் காணமுடியாதவை. மக்களுக்குப் பயன்படும் பொருளாதாரக் கருத்துகள் மாற்றங் களை உருவாக்கும் வல்லமை தரும் தாக்கங்கள், ஆசிரியர் வீரமணி அவர்களின் பொதுவாழ்க்கை பயணத்தில் - சமூக மாற்றத்திற்கான பயண அலைகடலில் கிடைத்திடும் அரிய முத்துக்களாகும்.


தமிழ் ஓவியா said...

விடுதலையின் 77 ஆண்டு கால இதழியல் காலவெளியில், தமிழர் தலைவர் கி.வீரமணி தொடர்ந்து 50 ஆண்டுகள் அதன் ஆசிரியராக முத்திரை பதித்து வருவது ஒரு உலக சாதனை ஆகும். 1962 ஆம் ஆண்டு விடுதலை ஆசிரியர் பொறுப்பில் தந்தை பெரியாரால் அமர்த்தப்பட்ட தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது முதல் தலையங்கமே பொருளாதாரம் சார்ந்தது. வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? என்பது தலையங்கத்தின் தலைப்பு. பொருளாதாரக் கருத்துகளைச் சொல்லும் பொழுது மக்களுக்கு இனிக்கப்பேசுவதுதான் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலாளனவர்களின் நடைமுறை போக்கு. அந்த நிலையில் கசப்பாக இருந்தாலும் மானிட சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த பொருளா தாரக் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறும் வல்லமை அந்தத் தலையங்கத்தில் தென்படுகிறது.
தனிமனிதனின் பட்ஜெட் என்பது வளரக் கூடிய செலவை அமைத்துக்கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்பதாகும். இது பொருளாதாரக் தத்துவத்தின் பாலபாடம் - விடுதலை 25.8.1962

கடுமையான பொருளாதாரத் தத்துவத்தினை மிக எளிமையாக, எதர்த்தமாக, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் ஒரு பாடம் நடத்துவதைப் போன்ற ஆசிரியப்பாங்கு அவரது முதல் தலையங்கத்திலே வெளிப்பட்டது ஒரு விடிவெள்ளி முளைத்தது போன்றதாகும்.

இந்த நாட்டுப் பொருளாதாரத்தன்மை, மக்கள் நலம் சார்ந்த (Welfare State) சூழல் வாய்ந்தது. செல்வவளம் நிறைந்த மக்களிடமிருந்து வளம் குன்றிய மக்களின் வாழ்வாதார வசதிகளைப் பெருக்குவதுதான் ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும். அதற்கு உரியவர்களிடம் வரிகளை விதித்து, வசூலித்து, உகந்தவர்களுக்கு வழங்குவது அரசின் பணியாக இருக்க முடியும். பொருளாதார வளம் குன்றியவர்கள் பெரும்பாலனவர்கள் வாழும் இந்த மண்ணில், மாநில அரசோ, மய்ய அரசோ வரியில்லாத பட்ஜெட் எனச் சொன்னால் அது ஒரு பொருளாதாரத் தேக்கநிலையை ஊக்குவிக்கும் செயலாகத்தான் இருக்க முடியுமே தவிர பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாக இருக்க முடியாது. Fiscal internation is the economic function of State(நிதி சார்ந்த உகந்த இணைப்பு நடவடிக்கையே ஒரு அரசின் பொருளாதார வளர்ச்சிப் பணியாகும்) முதல் தலையங்கத்தில் வெளிப்பட்ட பொருளாதாரச் சிந்தனைகளின் விரிவு பரிணாமப் போக்கு 80 வயதினை எட்டும் நிலையிலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எண்ண வெளிப்பாட்டில், செயல்பாட்டில் நீடிக்கிறது. ஆரம்ப நிலையில் ஏற்றுக்கொள்வதற்கு உகந்ததாக பொதுமக்களால் கருதப்பட்டாலும்; காலப் போக்கில் உண்மைநிலையை உணர்த்தும் போக்கு ஆசிரியர் வீரமணி அவர்களின் பொருளா தாரம் சார்ந்த அறிக்கைகளின் தனித்துவமாகும்; தொடர்ந்து விடுதலை இதழுக்கு அணி சேர்க்கும் அங்கமாகும்.

தமிழ் ஓவியா said...

2 ஜி ஊழல் (?) என்பது ஊடகங்களால், ஆதிக்கவாதிகளால் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு சதிச்சொல். நீதியினை வழங்க வேண்டிய நிதித் துறை, நிர்வாகத்துறையாக மாறி ஆதிக்கவாதிகளின் கைகளில் செயல்பட்டு வரும் சூழல்கள் நிலவு கின்றன. இல்லாத இழப்பினை, உத்தேச இழப்பாக (presumptive loss) உருவப்படுத்திய நிலையில், பரந்துப்பட்ட செல்பேசி பயன்பாட்டில் ஒரு மாபெரும் தொடர்பு புரட்சி கண்ட நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் வீரமணி அவர்களின் குரல் வலிமையாக எழும்பியது. பொது நீரோட்டத்திற்கு கலந்து சென்று விடாமல், எதிர்த்து நின்று, உண்மை விளக்கத்தின் வெளிச்சமாக ஆசிரியர் வீரமணி விளங்கி வருகிறார். தந்தை பெரியார் தம் துணிச்சலைப் போன்றே களம் இறங்கினார். ஒத்த கருத்தாளர்களை உடன் அழைத்துக்கொண்டு உண்மை விளக்கப் பிரச்சாரம் செய்தார். ஊடகங்கள், ஆதிக்கவாதிகளின் 2 ஜி விசயம் பற்றிய உள்ளீட்டு ஆதாயங்களால், ஆசிரியர் அவர்களின் கருத்துகளுக்கு உண்மையான, வெளிப்படையான ஆதரவு பெருகவில்லை.

ஆனால் ஆண்டுகள் சில கடந்து, இன்று 2 ஜி மறுஏலம்விட்ட தொகை அளவினை ஒப்பிடுகையில் அன்று அரசியல் அதிகாரத்தில் இருந்தோர் எடுத்த முடிவுகள் சரியானவையே என்பதை உணர்த்துவதாக உள்ளன. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்துறையில் நடைபெற்ற ஒரு மாபெரும் புரட்சியை ஊழல் திரையிட்டு மறைத்திடும் வரலாறே 2 ஜி விவகாரம் என்பதை ஆணித்தரமாக வாதம் செய்து வருபவர் ஆசிரியர் வீரமணி. கசப்பாக இருந்தாலும், கால வெள்ளத்தைக் கடந்து மக்களுக்கு உண்மையினை, வளமையினை வழங்க வல்ல கருத்துகளை வழங்கும் பெட்டகமாக ஆசிரியர் வீரமணி விளங்கி வருகிறார். பெரும்பான்மை மக்களின் ஆதரவு தமது கருத்துக்கு வேண்டும் என நினைக்கும் பெரும் பாலான தலைவர்களிடையே, தமது கருத்துக்கு ஆதரவுகள் வரும் நாளில் மக்களுக்கு உண்மை விளங்கும். நன்மை பயக்கும் என கருதி எண்ணங்களை வெளிப்படுத்தி செயல்படும் தனித்துவத் தலைவராக விளங்கி வருகிறார் ஆசிரியர் வீரமணி. அவரது பொருளாதாரம் சார்ந்த கருத்துகளுக்கும் இந்தப் போக்கு முற்றிலும் பொருந்தும்.

தமிழ் ஓவியா said...


நாத்திக இயக்கத்தின் தலைவராக விளங்கும் ஆசிரியர் வீரமணி மதச்சார்ப்பின்மையின் வெளிப்பாடு, வெறும் அரசமைப்புச்சட்டக் குறிப்பாக இல்லாமல், நடைமுறைக்கு வர ஏதுவாக பொருளாதாரம் சார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, நிதி ஆதாரம் குறைவான நிலையில், வெளிநாடுகள், பன்னாட்டு நிதியங்களிடம் கையேந்தும் நிலைக்கு நாடு தள்ளப்படும் சூழலை சரி செய்ய கோயில்களில் பயன்படுத்தப்படாமல் ஆண்டாண்டு காலமாக முடங்கிக் கிடக்கும், தங்க ஆபரணங்கள் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை அரசே ஏற்க வேண்டும், மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

மக்களால் வழங்கப்பட்ட சொத்துகள் மக்களின் மேம்பாட்டிற்கு, நல்வாழ்விற்குப் பயன்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். நிதிஆதாரம் இல்லாமை இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அல்ல; இருக்கும் நிதி ஆதாரத்தை முறையாக, ஆக்கரீதியாகப் பயன்படுத் தாத போக்கே, பொருளாதார வளர்ச்சித் தேக்கத் திற்கு அடிப்படை என்பதை ரத்தினச் சுருக்கமாக வலியுறுத்தி வருகிறார் ஆசிரியர் கி.வீரமணி.

நாட்டுப் பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டு வரும் சூழலில், மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கு, வழங்கப்பட்டு வரும் மானியம் (subsidy) குறைக்கப்பட்டு வரும் போக்கு வலுப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை நாடான இந்தியாவில் மத நம்பிக்கைகளுக்கு அரசே ஊக்கம் கொடுத்து வரும் செயலாக, பல்வேறு மதம் சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள்சென்று வருவதற்கான மானியத்தினை அரசு வழங்கி வரும் செயலினைக் காண்பித்து, இன்னும் பலதரப்பு மத நடவடிக்கைகளுக்கு மானியத்தை வழங்கிடும் போக்கினைக் கண்டித்து - அப்படிப் பட்ட மதம் சார்ந்த மானியங்களை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பொருளாதாரம் சார்ந்த மானியத்தை தொடர்ந்து வழங்கி சமத்துவ நிலை உருவாகிட ஆசிரியர் வீரமணி வெளிப்படுத்தி வருகிறார்.

வளமான, ஆக்க ரீதியான, மக்கள் தொகை பற்றிய எண்ணம் இல்லாமல் - அவர்களின் மேம்பாட்டுக்கு உகந்தவைகளாக தனது பொருளாதாரச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர் வீரமணியின் இந்த தனித்துவத் தன்மைக்கு அவரது பொருளாதாரக் கல்வி அறிவும் ஒரு அடிப்படைக் காரணம் ஆகும்.

ஆம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடை நிலை படிப்பில் (B.A. Hons.), பட்டப் படிப்பில் (Intermediate),பொருளாதாரத்தைப் பாடமாகக் கொண்டவர் ஆசிரியர் வீரமணி. படிக்கும் காலத்திலும் தலைசிறந்த மாணவராக விளங்கினார் என்பது இடைநிலைப் படிப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்றமைக்கு சீமாட்டி ஸ்ட்ரேதி பரிசு (The Lady Strathie Prize 1952-53) மற்றும் பட்டப்படிப்பில் சர் தாமஸ் ஆஸ்டின் பரிசு (The Sir Thomas Austin Prize 1955-56), , நடராஜா தங்கப்பதக்கம் (The Sri Nataraja Gold Medal - 1955-56),சிம்சன் பொருளாதாரப் பரிசு (The Sri J.Simpson Economic Prize 1955-56), பெற்ற பரிசுகளே, அடையாளங்களாகும். பட்டப் படித்த பின்னர், பிரிட்டன் அல்லது அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் மேல்படிப்பு படத்திட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் தலைவர், 1956 ஆம் ஆண்டில் பரிந்துரைத்த வேளையில் (.... I would strongly recommend him for a suitable award for foreign studies in one of the British or American Universities), சட்டப்படிப் பினைத் தொடர்ந்து, பின்னர் தந்தை பெரியாரின் பாதையில் முழுநேர சமுதாயப் பணி ஆற்றிட வந்தார் ஆசிரியர் வீரமணி.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் எனும் பழமொழிக்கு ஒப்ப ஆசிரியர் வீரமணி அவர்களது பொருளாதாரச் சிந்தனைகள் மாணவப் பருவத்தில் மொட்டுவிட்டு, இளம் வயதில் மலர்ந்து இன்று கனியாக சமுதாயத்தின் உண்மையான உகந்த மேம்பாட்டுக்கு வலு சேர்த்து வருகின்றன.

வாழ்க ஆசிரியர் கி.வீரமணி!

பயன் விளைத்திடுக அவர்தம் சிந்னைகள்!!


- வீ.குமரேசன்

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைச் சுடரொளி



எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் தன்னைப் பொதுத் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழர் தலைவரின் அரும்பெரும்பணிகளை இந்தச் சிறிய கட்டுரைக்குள் அடக்கிக் காட்ட எண்ணுவது அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் அரிய செயல். மாதந்தோறும் ஏறத்தாழ இருபது நாட்களுக்கு மேல் தமிழகத்திலும், அவ்வப்போது வடபுலங்களிலும், ஆண்டுக்கு ஓரிரு முறைகள் அயல்நாடுகளிலும் பயணம் செய்து பெரியாரியக் கொள்கை விளக்கத்திலும், மக்கள் தொடர்பிலும், இயக்க வளர்ச்சியிலும், மூட நம்பிக்கை ஒழிப்பிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொள்வதைப் பற்றியும் ஈங்கு சுருக்கிக் சொல்லுதல் எளிதல்ல. தலைசிறந்த பேச்சாற்றலும், கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் ஆளுமைத் திறனும் ஆய்வுச் சிந்தனையும் கொண்ட ஆசிரியர் அவர்களிடம் அய்ந்து மணித்துளிகள் உரையாடினாலே, தமிழகத்தின் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல், நிலைமைகளை தெளிவாக அறிந்து பயன் பெறலாம். ஆயினும் யானறிந்த வரையில் தலைவர் அவர்களின் மனித நேயம், அளப்பரிய ஆற்றல், உறுதி, ஊக்கம், சட்ட நுணுக்கம், பொது அறிவு பற்றிய சில செய்திகள் இங்கு கொடுக்கப் பெற்றுள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் யான் பின்னால் பயின்றாலும் வீரமணி அவர்கள் கடலூரிலிருந்து ரயில் பயணம் செய்து வரும் மாணவர் என்று அறிவேன். இரவில் வந்து செல்லும் ஓரிரண்டு துரித ரெயில் தவிர அனைத்து ரயில்களும் அந்நாட்களில் ஆடி அசைந்து முக்கி முனகி ஒவ்வொரு இடத்திலும் நின்று நின்று இரண்டு மணி நேரம் கழித்துச் சிதம்பரம் வந்து சேரும். ரயில் பயணத்திலேயே தினமும் நான்கு மணிநேரம் போய்விடும்.

அப்படி கடலூரிலிருந்து வருகின்ற மாணவர் குழுவோடு ஒன்றாக வந்து இனிமையாகப் பழகி னாலும், அரட்டைச் கச்சேரியில் சேராமல் ஏதாவது ஒரு நூலையோ, பத்திரிகையினையோ படித்துக் கொண்டு வருவதே இவரது பழக்கம். இல்லை யானால் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி தங்க மெடல் பரிசு வாங்க முடியுமா? அறிவுப் பசியை அடக்கியிராவிட்டால் அரங்கத்தில் ஏறிப் பரிசு பெற்றிருக்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

முதுகலைப் படிப்புக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திலேயே ஆய்வுப் பணியில் சேர்ந்தாலும், அதனை ஒதுக்கி விட்டு சென்னையில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகிறார். தந்தை பெரியாரின் ஆணைப்படி கடலூர் வழக்கு மன்றத்தைப் புறந்தள்ளி மீண்டும் சென்னை பயணம். விடுதலை நாளிதழை விட்டு விடுவதா அல்லது ஈரோட்டுக்கு எடுத்துச் சென்று வார இதழாக மாற்றுவதா எனும் பெரியாரின் வினாவுக்கு விடை கிடைத்து விட்டது. வீரமணி என்னும் இளைஞர் 1962ஆம் ஆண்டில் சென்னையில் பெரியார் திடலில் விடுதலை நாளிதழின் ஆசிரியராகிறார். பெரியாரே அழைத்துச் சென்று ஆசிரியர் இருக்கையில் அமர்த்துகிறார்.

எழுத்தாளர்களின் பத்திரிகை வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. சிற்சில நேரங்களில் பத்திரிகையின் வாழ்வும் நிரந்தரம் இல்லாமலேயே போய்விடும். அதுவும் ஒரு குறிக்கோளோடு பணபலமின்றி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு அரசின் சட்ட திட்டத்துக்கு அடி பணிந்து பத்திரிகையினை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. பத்திரிகையே மூச்சுத்திணறுவது ஒரு புறமிருக்க, பத்திரிகை ஆசிரியருக்கும், அதனுடைய நிறுவனருக்கும் ஒத்துப் போகாது. பண்டித நேருவுக்கு நெருங்கியவராகக் கருதப்பட்ட கே. ராமராவ் என்பார் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டுக்கு வருவதற்கு முன்னர் ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டு காலம் பதினேழு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். அப்படியின்றி தந்தை பெரியாரின் சிந்தனையை செயலை, உயிர் மூச்சைத் தனதாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் அய்ம்பதாண்டு காலம் விடுதலையின் ஆசிரியராக இருந்ததுவும், தொடர்ந்து இருப்பதுவும், செய்தி உலகத்தில் ஒரு பெரும் இமாலய சாதனை.

எந்த நேரத்திலும் எந்தத் தலைப்பிலும் எடுத்த எடுப்பிலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் தங்கு தடையின்றி பொருத்தமாகவும் சரளமாகவும் பேசுகின்ற தமிழர் தலைவரின் பேச்சாற்றல் வியப்புக்குரியது. கொச்சைத் தமிழும் பண்டிதர் நடையும் ஒதுக்கிய பண்பாட்டுத் தமிழ். நயத்தக்க நாகரிகம், நல்லதோர் மேற்கோள், பொருத்தமான பேச்சு, நிதானமான சொல்லோட்டம் ஆகிய இவையன்றி ஆவேசமோ, ஆத்திரமோ, அறைகூவலோ விடுக்கின்ற அகங்காரப் பேச்சாக இருக்காது. எதிரியின் ஆத்திரத்தைத் தூண்டாமல் அடங்கி விடச் செய்துவிடும்.

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறுமியர் சிலர் இயற்கைச் சூழலைப் போற்றி ஆதரிக்கின்ற ஒரு நடன நிகழ்ச்சி. அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டுமாறு வேண்டுகோள். மேடையேறிய தலைவர் பேசியது அய்ந்து மணித்துளிகளே என்றாலும் நடனக்கலை பற்றி அவர் பயன்படுத்திய கலைச் சொற்கள் அனைத்தும் அவரது பரந்துபட்ட, ஆழ்ந்த அறிவின் விளக்கமாக இருந்தது. பட்டமளிப்பு விழா, திருமணங்கள், அரசியல் அரங்கம், விவாத மேடை பாராட்டு விழா போன்ற இடங்களில் தலைவரின் சொற்பொழிவு வெறும் உத்தேசமாக அல்லாமல் அய்யத்துக்கு இடமின்றி உண்மையோடும் ஆதாரத்தோடும் அமைந்திருக்கும். குறிப்புகளும், ஆதாரங்களும் அதிகமாயின் மேடையில் அந்தந்த நூல்களே பேசும்.

ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்களின் சொந்தக்காரர் அவர். அவ்வப்போதும் தொடர்ந்தும் படிக்கின்ற நூல்களின் மிகச் சிறந்த கருத்துகளைக் கலந்து அவர் எழுதிய மனித வளக்கலை நூல்கள் இலக்கியம், மொழி, வரலாறு, சமூக இயல், அரசியல், மருத்துவம், உடல்நலம் பற்றிய அரிய கருத்துகளை உள்ளடக்கியவை. பொதுவாழ்வில் அதுவும் சமூகத்தில், அரசியலில் பங்கு பெறும் தலைசிறந்த அறிஞர்களின் இத்தகைய சிந்தனைக் கருவூலங்களை மாணவர்க்குப் பாடமாக வைக்கும் மனப்பக்குவம் கல்லூரிகளில் ஏற்பட வில்லை என்பது ஒரு பெருங்குறை. இதனைச் சீர் செய்ய விரும்பும் பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் இத்தொகுதிகளைக் கருத்தூன்றிப் பயில வேண்டும்.

தமிழ் ஓவியா said...


குணத்தில் உயர்வும், கொள்கையில் பிடிப்பும் அன்பின் மிகுதியும் நேர்மையில் சீர்மையும் தலை வருடன் கூடப்பிறந்தவை. கொண்ட கொள்கை யினை அவர் குழிதோண்டிப் புதைப்பதில்லை. ஒருமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூரில் சிறைவாசம். உடல் நலம் இல்லாத வீரமணி அவர்களை நீங்கள் ஏன் விடுதலை செய்யக் கூடாது எனும் நிருபர்களின் கேள்விக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, விடுதலை அளித்தாலும், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார், என்று கூறிய பதில் தமிழர் தலைவரின் தனித் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கருஞ்சட்டைப் பட்டாளம் சிறையிலிருக்கும்போது, தான் மட்டும் வெளிவரும் பேச்சுக்கே இடமில்லை என்பது உண்மை.

கொள்கையில் உறுதிப்பாடு என்பது பலரது விருப்பு வெறுப்புக்கு ஆளாகும் சிக்கல். வளைந்து கொடுக்காத உறுதி. ஒரு சமயத்தில் அன்றைய முதலமைச்சருக்கு பிடிக்கவில்லை. அதனால் வில்லிப்புத்தூர் அருகே தலைவர் வந்த காரின் மீது தாக்குதல். உடைந்த கண்ணாடி நெற்றிப் பொட்டில் சிதறி இரத்தக் கசிவு. அந்த நிலையிலும மம்சாபுரம் அருகே நிகழ்ச்சி முடிந்த பின்னரே மருத்துவமனை. எந்தநிலையிலும் அந்த முதல்வரை மன்னித்தோம் அவரது செயலை மறந்தோம் என்கிற பெருந்தன்மை. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்னும் சகிப்புத் தன்மை. எதிர்ப்பு கண்டு கலங்காத, தோல்வி கண்டு துவளாத மனப்பக்குவம்.

உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றான் பாரதி. தலைவரோ அச்சம் தவிர்த்த நிலை மட்டுமல்ல. பதட்டம் இல்லாமல் பகையினை வெல்லும் மன உறுதியாளர். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களின் அருங்கொடையால் டில்லி நகர்ப்புறத்தில் உருவாகி அங்குள்ள கிராமப்புற மக்களின் கணினிப் படிப்பிற் கும், தையல் வேலைக்கும், தொழில் வாய்ப்புக்கும் வழி திறந்துவிட்ட எழிலான கண்ணாடிக் கட்டிடம் ஒரு அரசியல் கோமாளியின் கோணல் புத்தியின் வழிப்பட்டு நீதிமன்றத் தடையுத்தரவு வரும் நிலையிலேயே தரை மட்டமாக்கப்பட்டு விட்டது.

உணர்ச்சி வயப்பட்டோராயின் உடைந்த மனதும் உணர்ச்சியின் நெகிழ்வும் கலங்கிய உள்ளமும் உயிரையே போக்கியிருக்கும். ஆனால் கலங்கா நெஞ்சமொடு கண்ணீர் சிந்தாமல் கருத்தூன்றிப் போரிட்டு நியாயத்தை உறுதி செய்த தலைவர் அரசின் தவறுக்குத் தண்டனைபோல அந்த இந்திய தலைநகரிலேயே பிறிதோர் மனையும் பெற்றுவிட்டார். பெரியாரியத்தைச் சிக்கல் செய்யலாமே தவிர சீரழிக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது.

பெரியாரியக் கொள்கைகள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் பரவி நின்றது. அவரது கொள்கை வழித் தோன்றலாகிய தானைத் தலைவரின் பன்முகப் பார்வையாலும் உலகளாவிய கண்ணோட்டத்தாலும், அரிய உழைப்பாலும் பெரியாரியம் இந்தியப் பெருநிலத்தில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. மண்டைச் சுரப்பினை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் கவித்துவம் பொய்யாகவில்லை. உலகின் பல நாடுகளிலும் அறிவுலகப் பேராசானைக் கோலோச்சச் செய்த பெருமை தமிழர் தலைவருக்கே உரியதாகும்.

இன்றியமையாத இன்னுமோர் நிகழ்ச்சியைச் சொல்லியாக வேண்டும். கழகத்தின் தலைமைப் பொறுப்பு தலைவரிடம் வந்தவுடன் காழ்ப்புணர்ச்சி தலைதூக்கி நின்றது. போர் முகத்தில் நேர் வருவதற்கு அஞ்சிய வஞ்சகர் சிலர் வருமானத்துறை வரி விதிக்க வேண்டுமென வரிந்து கட்டித் துணை நின்றனர். அய்யா தேடிய அனைத்துக்கும் வரி விதித்தால் கழகமே மூழ்கி விடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். கழகச் சார்பில் வாதிட்டு நின்ற வழக்குரைஞரும் வீரமும் களத்தில் போட்டு வெறுங்கையோடு வந்து நின்றார். நிதானம் இழக்காமல் தமிழர் தலைவர் அந்த வழக்குரைஞருக்குக் கூறிய சட்ட உத்தி, நீதிமன்றத்தின் மதிய அமர்வில் தலைகீழாக மாறி வெற்றியைத் தந்துவிட்டது. பண்டித நேருவின் வருமானம் காங்கிரஸ் இயக்கத்துக்குச் சேர்ந்ததால், நேருவுக்கோ காங்கிரசுக்கோ வருமான வரி போடவில்லையே! தந்தை பெரியார் தமிழகத்தின் மாபெருந் தலைவர், யுனெஸ்கோவும் அவ்வாறு அவரை உலகப் பெருந் தலைவராகப் பாராட்டி யுள்ளது. எந்த வருமானத்தையும் அவர் தனக் கென்று வைத்துக் கொள்ளவில்லை. எனவே அவரது வருமானம் தனி நபர் வருமானமாகக் கருதி வரி விதிப்புக்கு ஆளாக முடியாது! பண்டித நேருவிற்குப் பொருந்துகின்ற சட்டம் தந்தை பெரியாருக்குப் பொருந்தாமல் போகுமா? இக்கருத்தை மனதில் ஏற்ற வழக்குரைஞர் மதியத்துக்குப் பின் அவ்வாறே வாதாடி வாகை சூடி வந்தார். தமிழர் தலைவரின் சட்ட நுணுக்கக் குறிப்பு வாதம் கழகத்தை மிகப் பெருந்தொல்லையிலிருந்து மீட்டு வந்ததோடு இன்றுவரை நம் திராவிடர் கழகத்தின் கொடியும் கொள்கையும் வானோங்கி வளர்ந்து சிறக்கக் காரணமாய் அமைந்தது. இவ்வாறு கழகத்தின் நாடி நரம்பாகி, நம்பிக்கைச் சுடரொளியாய், உயிர் மூச்சாய்த் திகழும் உன்னதத் தலைவர் நீடு வாழ்ந்து மென்மேலும் சிறக்கப் பல்காலும் வாழ்த்துகிறேன்.

- டாக்டர் பழனி. அரங்கசாமி

தமிழ் ஓவியா said...



"மறக்க முடியாத நாள்!" என்பார்களே, அப்படித்தான் இருந்தது 25.11.2012. இதே மாதத்தில் தான் 13.11.2012 ஆம் தேதியும் வந்து போனது. அன்றுதான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்றார்கள் சில தமிழர்கள். காரணம், அன்றுதான் தீபாவளியாம். தமிழர்களே! வழி கிடைத்தால் மகிழ லாம்; வலியை எப்படிக் கொண்டாட முடிகிறது? சராசரி வாழ்வுக்கும் வழியில்லாத நிலையில் கடன் பெற்று, சுமை சுமந்து, நிமிரவே முடியாத வலியிலும் எப்படி உங்களால் சிரிக்கவும், மகிழவும் முடிகிறது?

இதோ... அதே நவம்பரில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்ன செய்தது தெரியுமா? உங்களுக்கு நல் வழி காட்டி, உள் வலிக்கு மருந்து தடவியது. ஆம் தமிழர்களே! உங்கள் சகோதர, சகோதரிகளை அக்கறையோடு பார்த்தது. திருமணம் முடியாமலும், விவாகரத்து முடிந்தும், துணைவரை இழந்தும், உடலுறுப்பு களைத் துறந்துமாக அல்லல்படும் அவர்கள் வாழ்வு பூத்துக் குலுங்க, தேதி குறித்துக் காத்துக் கிடந்தது மன்றல்! காரணம், உங்கள் வாழ்வில் வீச வேண்டும் தென்றல்! "மகிழ்வித்து மகிழ்" என்பார்கள்! பெரியார் கொள்கை முழுவதுமே அதுதான் தமிழர்களே!




தமிழ் ஓவியா said...

ஏனடா ஜாதி எனும் கந்தல்!
காதலால் வாழ்வுதனை எரித்தல்!
மனிதம் பார்த்தெங்கள் தேடுதல்!
மனமொப்பப் பேசியதால் எங்களுக்குள் புரிதல்! ஒன்றியதால் உருவான இணைதல்!
உங்களுக்கும் எங்கள் வேண்டல்!
நமக்காக அமைந்தது மன்றல்!
இதோ மலர்ந்தது எங்கள் வாழ்வில் தென்றல்

ஜாதி மறுத்துத் தமிழினம் தழைக்கவும், மதம் மறுத்து மனிதம் மலரவும், மணமுறிவுகளுக்கு மனச் செறிவுக் கூட்டவும், விதவை எனும் சொல்லின் வேர்ச் சொல் பிடுங்கவும், மாற்றுத் திறனாளிகளை மற்றுமொரு திறனாளிகளாக உருவாக்கவும் உருவானதே இந்த மன்றல்.

இது ஓர் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா!

அங்கொன்றும், இங்கொன்றுமாக வட மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டை ஒருங்கிணைத்த முதல் நிகழ்ச்சி இதுதான். வாழ்க்கைத் துணை வரைத் தேடி சற்றொப்ப 300 பேர்கள் பதிவு செய்ய, அவர்களுக்குத் துணையாக 600 பேர்கள் பங்கேற்க, ஆக மொத்தம் ஆயிரம் மனிதர்களை அரங்கத்தில் காண முடிந்தது. அவர்களில் தமிழ்நாடு கடந்து வந்தவர்களும் உண்டு.

தன்னிரு விழிகளை முற்றும் இழந்தவர், வாய் பேச முடியாதவர், இரண்டு கால்கள் இல்லாதவர், 18 வயதில் துணைவரை இழந்தவர் - பிரிந்தவர், தன் 80 வயதிற்குத் துணைத் தேடியவர் எனப் பலரையும் பார்க்க முடிந்தது. "எப்பொழுதும் பார்ப்பனர்களை திட்டுகிறீர்கள்?" என அறியாமையில் சில தமிழர்கள் கேட்பதுண்டு. இதோ... அவர்களுக்கு இந்த வரிகள். துணை தேடி வந்தவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும்தான்! தங்கள் ஜாதி உயர்ந்தது என்றாலும், அவர்கள் ஜாதியிலேயே அவர்களுக்குத் துணை கிடைக்கவில்லை. உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. எத்தனை நாள் பொறுப்பது? தன் சுயமரியாதைக் காக்க, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை நோக்கினர். பெரியார் கொள்கை என்பது கடினமானது அல்ல. உங்களுக்கும் சுகவாழ்வு, எங்களுக்கும் சுகவாழ்வு, எல்லோருக்கும் சுயமரியாதை வாழ்வு! அவ்வளவுதான். இதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்கிற கோபம் எங்களுக்கு இல்லை; ஆனால் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

அதற்கான காரணங்களைக் கூட இப்படி எளிதாகக் கூறிட முடியும். கடவுளை நம்பாதீர்கள் என்றோம், நம்பினீர்கள். ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றோம், பார்த்தீர்கள். மொத்தத்தில் மூடநம்பிக்கைகள் ஒழியுங்கள் என்றோம், அதில்தான் நம்பிக்கைக் கொண்டீர்கள். இதன் விளைவுகள் தானே நம் எல்லா பாதிப்புகளுக்கும் காரணம். மாறாக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள், விட்டுக் கொடுங்கள், மனம்விட்டுப் பேசுங்கள், உதவிக் கொள்ளுங்கள் என்பதுதானே பெரியார் கொள்கை. இதை ஏற்காமல் போனால் வாழ்வில் இழப்புகள் நேரும் என்றோம். ஏற்பதற்குத் தயங்குகிறீர்கள்; இழப்புகளைத் தாங்குகிறீர்கள்!

உங்களுக்கு ஓர் இழப்பு என்றால், "நாங்கள் முன்பே சொன்னோம் கேட்டீர்களா?" என நாங்கள் கேட்பதில்லை. காரணம் பெரியார் எங்களுக்கு அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. சகமனிதன் துன்பப்படும் போது, நீயும் துன்பப்படு என்றவர்தான் பெரியார்! அதனால்தான் அனைவரையும் ஒன்று திரட்டினோம். எங்கள் ஒன்று திரட்டலில் ஜாதி, மதம் கிடையாது, கத்தரிக்காய், வெண்டைக்காய் கிடையாது. மனிதனாக இருக்க வேண்டிய ஒரே தகுதிதான்! அப்படித்தான் வந்து மேடை ஏறினார்கள் அனைவரும். இந்த நவ நாகரிகக் காலத்திலும் ஜாதிச் சங்கப் பிழைப்பு மற்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் ஜாதி மறுத்துத் திருமணம் செய்தால் குத்துவோம், வெட்டுவோம் என்கிறார்கள். ஜாதிக்கு மாறாக எதுவும் நடக்கக் கூடாது எனத் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் ஜாதியில் அவர்கள் அப்பாவும், தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் எனத் தெரிந்துதான் பேசுகிறீர்களா? பிற ஜாதியை அசிங்கப்படுத்த நினைத்தால், அதைவிட கீழான உங்கள் ஜாதி அசிங்கமும் வெளியாகும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதிக்கு ஆதரவாக என்னதான் நீங்கள் தீர்மானம் போட்டாலும், உங்களைப் பற்றியும் மக்கள் என்றோ தீர்மானித்து விட்டார்கள். ஜாதி மறுப்பு இணை தேடலுக்கு வந்தவர் களில் 300 பேரும் ஜாதி மறுத்துத்தான் கேட்டார்கள். இவர்கள் அனைவரும் முற்போக்காளர் என்றோ, பெரியாரை முழுமையாக ஏற்றார்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை. ஆனாலும் ஜாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது ஜாதி மறுத்தாவது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்த எண்ணுகிறார்கள். ஆக ஜாதி என்பது தடை அல்லது தேவை யில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இந்த முடிவுக்கு வந்தவுடன் அவர்களுக்கு நினைவில் வருவது பெரியார் இயக்கம்! அந்த வாய்ப்பைத் தான் இந்த இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது, இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கும். சென்னையில் தொடங்கிய பயணம் கன்னியாகுமரி சென்று, மீண்டும் சென்னையில் தொடங்கும். டிசம்பர் 30-ல் திருச்சிராப்பள்ளியில் அடுத்த மன்றல் நிகழ்வு நடக்கவுள்ளது.ஒரு முடிவுக்கு வரும்வரை, இதற்கும் முடிவு இல்லை. சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் வேண்டுமானால் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் உயிரை எடுக்கும் ஜாதியின் உயிரை எடுக்கும் வரை நாம் ஓயக்கூடாது. தொடர்ந்து ஓடுவோம்!

ஜாதிமறுப்பு இணைதேடல் விழாவான மன்றலில் கலந்து கொண்ட ஒருவர் கூறியது :

"எனது சகோதரன் சென்னையில் பணி புரிகிறான் அவனுக்கு வயது 34. எனது அப்பாவும் மாமாவும் அவனுக்கு ஜாதியில் வரன் தேட ஆரம்பித்தபோது அவனுக்கு வயது 24. 10 வருட மாக பெண் தெடுகிறார்கள் காரணம் நான் கல்லூரியில் படிக்கும் போது ரெயில்வேயில் அப்போது ஒப்பந்த பணியில் இருந்த ஆதிதிரா விடர் ஒருவரை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி மணம்புரிந்தேன், ஆகையால் எனது தம்பிக்கு வைராக்கியமாக ஜாதியில் மணப்பெண் தேடினார்கள், தேடுகிறார்கள், தேடுவார்கள்.

எனது அம்மா எனது முதல் குழந்தைக்கு அவர்கள் பாட்டியின் பெயர் சூட்டி சீராட்டி விட்டுத்தான் நோய்வாய்புற்று இறந்தார்கள, ஆனால் எனது தம்பியிடம் உன் அக்கா ஓடிப்போனதால் தான் கவலையில் அம்மா செத்துப்போனதாக கூறி அவனை எங்களுக்கு எதிரியாக்கி வைத்தார்கள்.

இந்நிலையில் அவன் சென்னைவந்ததும் அவனை சமாதானபடுத்தி அறிவுரை கூறினோம். அப்போது எனது கணவர் பணியில் இருந்துவீடு வரும் போது மன்றல் பற்றிய குறுவிளம்பர பத்திரிக்கை யாரோ தந்தார்கள். அவனிடம் இதுகுறித்து பேசி அவனுக்கான இணையை தேடி ஜாதிமறுப்பு பிரிவில் பதிவுசெய்துள்ளோம், நல்ல உடல்நிலை, நகரவாழ்க்கை பொருளா தார ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏதாவது நல்ல ஒருபணியில் (தனியார் அல்லது அரசாங்கம்) அவனது மனதை புரிந்து கொண்டு நடக்கும் பெண் தான் தேவையே தவிர சாதி பேதி என்ற அசிங்களுக்கு ஆட்பட்ட பெண் தேவையில்லை" என்றார்.

- வி.சி.வில்வம்