Search This Blog

2.12.12

பெரியார் பாராட்டுகிறார்... அறிவுள்ளவர் - ஆற்றல் உள்ளவர் பொறுப்பானவர் வீரமணி

அய்யா பாராட்டுகிறார்... அறிவுள்ளவர் - ஆற்றல் உள்ளவர் பொறுப்பானவர்

சென்னை  - வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் ராதா மன்றத்தில் 28.2.1968 வெள்ளி மாலை 5.30 மணியளவில் மலேயா சென்று மீண்ட விடுதலை ஆசிரியர் திரு கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்களுக்கு விடுதலை அலுவலகப் பணியாளர் சார்பில், தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் வரவேற்பும், தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

கம்போசிங் செக்ஷன் திரு. இராதா அனைவரையும் வரவேற்றுப் பேசி தந்தை பெரியாரவர்களை தலைமை ஏற்கும்படி வேண்டிக் கொண்டார்.

திரு. துரைராஜ் (உதவி ஆசிரியர்) வழிமொழிந்து பேசினார்.

பேரன்புமிக்க தாய்மார்களே! தோழர்களே! ஆசிரியர் வீரமணி அவர்களே! அவரது துணைவியார் மோகனா அவர்களே!

நமது விடுதலை ஆசிரியர் அவர்கள் மலாயா நாடு சென்று சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள மக்களால் நல்ல வண்ணம் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக உடல் நலத்தோடு திரும்பி வந்ததை முன்னிட்டு, நமது விடுதலை அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிக்க மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். இந்த வரவேற்பு விழாவானது விடுதலை அலுவலகத்திலுள்ளவர்களால் நடத்தப்படுகிற விழாவானதால், இந்த விழாவில் நானும், மணியம்மையும் பங்கேற்றுக் கொள்கிறோம்.

ஆசிரியர் அவர்கள், மலாயா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும்போது; அவரை வழி அனுப்ப முடியாது பெரிதும் ஏமாற்றமடைந்தேன். அதுபோலவே அவர் திரும்பி வரும்போதும் அவரை வரவேற்க நான் இருக்க முடியாமல் போய் விட்டது. அம்மாதான் இருந்தார்கள். நான் ஏன் இருக்க முடியாமல் போனதென்றால் முன்கூட்டியே ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியவனாகி விட்டேன். என்னை பொறுத்தவரை நான் ஏற்றுக் கொண்ட காரியங்களுக்குத் தவறாமல் போவது என்று பொது வாழ்வில் ஈடுபட்ட அன்று முதல் எனது பழக்கமாக கடமையாகக் கொண்டிருக் கின்றேன். ஆதலால், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இது எனக்குக் குறையாகவே இருந்தது. ஆசிரியர் அவர்கள் கடிதப்படி 4ஆம் தேதி எதிர்பார்த்தோம். ஆனால், என்ன காரணத்தாலோ 4ஆம் தேதி வர முடியாமல் 5 ஆம் தேதியே வர வேண்டியதாயிற்று நான் 5ஆம் தேதிக்கு தர்மபுரியில் எனது தலைமையில் நடைபெற இருந்த நமது நண்பர் ஒருவரின் தங்கை திருமணத்திற்குச் செல்ல வேண்டியவன் ஆனேன். அதனால் முதல் நாள் வரை இருந்தவன் மறுநாள் தங்கியிருந்து ஆசிரியரை வரவேற்க முடியாமலே போய் விட்டது. 4ஆம் தேதியாக இருந்தால் கண்டிப்பாக நானும் சென்றிருப்பேன்.

கடல் கடந்து சென்றும் இயக்கப் பிரச்சாரம்!

மலாயா போயும் அங்கு எல்லா இடங்களிலும் நமது இயக்கப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். அவருடன் அவர் மனைவியாரும், குழந்தைகளும் சென்றிருந்தார்கள்.

அவர் ஆசிரியராயிருந்து நடத்தும் விடுதலையில் தொண் டாற்றும் தோழர்கள் அனைவரும் அவரை வரவேற்பதன் மூலம் தங்கள் அன்பைக் காட்டிக் கொள்கிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியதாகும்.

அலுவலர் கடமை

என்னைப் பொறுத்தவரை எந்த ஸ்தாபனமானாலும் பணியாற்றுபவர்கள் அன்பிற்குரியவர்களாகவும், அதிருப்தியற்றவர்களாகவும் பதவியிலிருப்பவர்களுக்கு நன்றியுள்ளவர் களாகவும் நடந்து கொள்ள வேண்டும். நமது விடுதலையில் பணியாற்றக் கூடியவர்கள் பாராட்டுக்குரிய வகையில் அன்போடும் பணியில் கஷ்டமிருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் வீட்டு வேலை போல் பொறுப்போடு செய்ய வேண்டும்.

நிர்வாகிகள் கடமை

நிர்வாகப் பதவியிலிருப்பவர்கள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். பணி செய்பவர்களும் தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் நடந்து கொள்வது போல நடந்து கொள்ள வேண்டும். அதுபோல்தான் நடந்து கொண்டு வருகிறார்கள். மற்ற அலுவலகங்களில் நடப்பதுபோல நம் அலுவலகத்தில் எந்தவிதமான தகராறுக்கும் இடமில்லாமல் நடந்து கொள்கிறார்கள்!
நமது ஆசிரியர் வந்து 6 வருஷமாகிறது. ஆனால், நமது ஆபீஸானது ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேலாகவே நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
ஒருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதில்லை!

ஆசிரியர் பொறுப்பிருந்தவர்கள் ஏதோ சொந்த காரணங்களுக்காக விலகிச் சென்றார்களே தவிர, மற்றபடி இங்குப் பணியிலிருந்தவர்கள் வயதான காரணத்தாலும், உடல் நலம் குன்றி வேலை செய்ய முடியாத நிலையில் போயிருக் கிறார்கள். மேலான வாழ்வு கிடைத்து போயிருக்கிறார்களே தவிர, மற்றபடி நாம் யாரையும் போகச் சொல்லியோ அல்லது பிடிக்காமலோ போனவர்கள் கிடையாது.

40 ஆண்டு சர்வீஸ்காரர்!

ஈரோட்டில் முஸ்தபா என்பவர் 40 வருடமாக இருந்து வருகிறார். சண்முகம் பிள்ளை சாகும் வரை குமாஸ்தாவாக இருந்தார். இங்கும் திரு. துரைராஜ் வந்து 20 வருடமாக பணியாற்றுகிறார். திரு. இராதா சிறு பையனாக இருந்தபோதே இங்கு வந்தவர். இப்படி நம்மிடம் வருபவர்கள் எல்லாம் குறையாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் காரியமாக நினைத்தே உழைத்து வருகின்றார்கள். ஒருவருக் கொருவர் உணர்ந்து வேலை செய்து வருகின்றார்கள். இந்த சமயத்தில் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் நீங்கள் வரவேற்பு அன்பு செலுத்துவதோடு பொறுப்போடு ஒற்றுமை யாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

கண்காணிப்பாளர் கடமை

மேலே இருக்கிறவர்களும்  தங்கள் வீட்டு அங்கத்தினர் களிடம் நடந்து கொள்வது போல அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சிறு குற்றங்கள் செய்தாலும் அதை மன்னித்து அவர்கள் திருந்தச் செய்ய வேண்டும். இது பெருமைக்காக மட்டுமல்ல அலுவலகத்தில் நல்ல வண்ணம் வேலை நடக்கவும் சுமூகமாக ஒருவருக்கொருவர் அன்போடு இருக்கவுமாகும்.
சுபாவம் அறிந்து நடக்க வேண்டும்

நிர்வாகத்திலிருக்கும்போது, பணியிலிருக்கும்போது சில குறைகள் ஏற்படலாம். துணைவர்களிடமே உயிருக்குயிரானவர் களிடமே குறை ஏற்படுகிறது. அண்ணன் தம்பிகளிடம் தந்தை மகனிடம் கூட சில குறைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இது இயற்கை. இதை பெரிதுபடுத்தக் கூடாது. சிலரது சுபாவம் ஒரு மாதிரியாக இருக்கலாம். பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அவர் கோபக்காரர். அந்த கோபம் போனால் நன்றாக நடப்பார் என்கிற தன்மையை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

சிலருக்கு தேவை இல்லாமலே பொய் சொல்கிற வழக்கம். சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு முகம் கடுகடு என்று எப்போதும் கோபக்காரராகத் தோன்றும்படி இருக்கும். அது அவரவர்கள் சுபாவம். இந்த மனிதச் சுபாவங்களை உணர்ந்து நமது அலுவலகத்திலுள்ளவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்கட்கும் ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினேன்

திருச்சியில் அரசாங்கத்தில் பணியாற்றும் நிர்வாகஸ்தர்கள், குமாஸ்தாக்கள், சிப்பந்திகள் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அதிலேயும் இதைத்தான் சொன்னேன்.

நீங்களெல்லாம் அன்போடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. உங்களின் ஒற்றுமையை முக்கியமாகக் கருத வேண்டும். மேலே இருப்பவர்களுக்கு அடங்கி நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம்விட நாமெல்லாம் ஓர் இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம் ஈனமற்ற இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னேன். அதைத்தான் உங்களுக்கும் நான் சொல்கிறேன்.

நீங்களெல்லாம் ஒற்றுமையாக இருந்து காரியம் செய்ய வேண்டும்
இந்த நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண்டில் இது ஒரு பகுதி என்பதைத்தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3000-த்துக்குக் குறையாமல் நஷ்டமாகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பது போல உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.

விடுதலை அலுவலகப் பணியும்  பொதுத் தொண்டே!

இது ஒரு பொதுத் தொண்டு செய்ய வேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக  இருக்கிறவருக்கு சம்பளமில்லை மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.

ஆசிரியரின் தியாகம்!

நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மலாயா சென்றதன் நோக்கம் இயக்கத் தொண்டுக்கே!

அவர் மலாயா சென்றது தொண்டை முக்கியமாகக் கொண்டு, மற்ற நிலைமையும் தெரிந்து கொண்டு வரவே யாகும். அவருக்கு நீங்களெல்லாம் வரவேற்பளிப்பது மிகவும் பொருத்தமும், கடமையும் ஆகும் என்று சொல்லி பாராட்டு கிறேன். இந்த உணர்ச்சி கடைசி வரை உங்களிடத்திலே இருக்க வேண்டும். நம்மிடத்திலே ஒன்றும் முறையல்ல; கிட்டத் தட்ட நமது மானேஜர் அவர்களும் இந்தக் கருத்துக்காகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். மற்றபடி எந்த லாபமும் கிடையாது. இதில் எனக்கு தலைமை வகிக்கும் பணியைக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சகிப்புத்தன்மை வேண்டும்

ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிற தன்மை வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிற தன்மை வேண்டும். நான் இரண்டு முறை மலாயா சென்றிருந்த போதும் அங்கிருக்கிற நண்பர்கள் நமக்கு உதவியாக இருந்தார்கள். துரைராஜ் குறிப்பிட்டதுபோல தமிழ் முரசு உரிமையாளர் தமிழவேள் திரு. சாரங்கபாணி அவர்கள் மிக உதவியாக இருந்தார்கள். நானும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன். நான் இரண்டு முறை போயிருந்தபோதும் திரு. சாரங் கபாணி அவர்கள் என்னோடு மிக உதவியாக இருந்தார்கள்.
தமிழ்முரசுவின் சமுதாயத் தொண்டு
சிங்கப்பூரில் நான் போயிருந்தபோதுதான் பத்திரிகையை ஆரம்பித்து வைத்தேன். அவரால் நடத்தப்படுகிற தமிழ்முரசு நமது கொள்கைகளை எல்லாம் அங்கு நல்ல வண்ணம் எடுத்து மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. நமது குடிஅரசுக்கு ஆதரவளித்தவர்களும் அவர்கள்தான். தமிழ்நாட்டில் விற்பனையான அளவுக்கு அங்கும் விற்பனையானது. நிறைய பணமும் வந்தது. நம்முடைய கொள்கைகள் தமிழகத்தைவிட அதிகம் பரவியதற்குக் காரணமே தமிழ்முரசு பத்திரிகை யேயாகும். ஒன்று சொல்கிறேன். நீங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாழ்க்கையையே முக்கிய மாகக் கருதியல்ல. பொதுத் தொண்டுக்காக இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நமது சமுதாயம் முன்னேற வேண்டுமானால் இன்னும் பல காலம் செல்ல வேண்டும்
வெளிச்சம் கொடுக்குது வெளிச்சத்திற்கு எண்ணெய் தேவை வெளிச்சத்திற்கு யாரும் நன்றி செலுத்த மாட்டார்கள். நீங்களெல்லாம் வெளிச்சம் கொடுப்பவர்கள் உங்களுக்கு எல்லாம் என்ன வேண்டும்? எண்ணெய்; அதைத்தான் கொடுக்கிறோம். உங்களுக்கெல்லாம் இது போதாது தான் அது தெரியும். ஆனால் அவ்வளவுதான் முடிகிறது.
இன்னும் நல்ல வாய்ப்பு வந்து வளரும் படியான காலம் வரலாம். அப்படி ஏற்பட்டால் நிறையச் செய்வதற்கு வசதி ஏற்படும். நீங்கள் எல்லாம் பற்றுதலோடு ஒற்றுமையாக இருந்து தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு எனது மனப்பூர்த்தியான நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள் கிறேன் என்றுகூறி முடித்தார்கள்.
திரு. டி.எம். சண்முகம்
சென்னை மாவட்ட தி.க. தலைவர் திரு. டி.எம். சண்முகம் அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:
மலாயா நாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிற விடுதலை ஆசிரியர் திரு. வீரமணி அவர்களுக்கு. அலுவலகத்தில் பணிபுரிகிற நீங்கள் வரவேற்புக் கொடுப்பது மகிழ்ச்சிக்குரியதுடன் பொருத்தமுமாகும். ஆசிரியராக மட்டுமல்லாது கழகப் பிரச்சாரகராகவுமிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இன்றைய விடுதலை அலுவலகத்தில் உள்ள நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்தக் காரியம் செய்ய ஈடுபட்டி ருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைவதோடு எனக்கு வாய்ப் பளித்தமைக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்கள்.
திரு. சாரங்கபாணி
உதவி ஆசிரியர் திரு. சாரங்கபாணி அவர்கள்  தமதுரையில், நாம் இந்தப் பணிமனையில் பல கஷ்டங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால், நம் மக்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டுமென்று பாடுபட்டுக் கொண்டு வருகிற தந்தை பெரியாரவர்களின் கருத்துகளைப் பரப்புவதற்காகவேயாகும். 2000 ஆண்டுகளுக்கு முன் புத்தர் எப்படி அறிவைப் பரப்பினாரோ அதுபோல் இன்று தந்தை பெரியாரவர்கள் பரப்பி வருகிறார்கள்; புத்தரைப் பின்பற்றுபவர்கள் பிசாசுகள் என்று சொல்லி விடுவார்கள். அவர்கள் உலகெங்கும் சென்று கொள்கைகளைப் பிரச்சாரம்  செய்து புத்தக் கொள்கையை உலகமெல்லாம் பரப்பி இருக்கிறார்கள். அதுபோல்தான், நம் ஆசிரியர் திரு. வீரமணி அவர்களும் ஏதோ பயணமாகச் சென்றாலும் அய்யா அவர்களின் கருத்துகளை மலாயாவில் ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். தந்தை பெரியார வர்கள் இந்நிகழ்ச்சிக்கு மனமுவந்து தலைமையேற்றதற்கும், அம்மா அவர்கள் வருகை தந்ததற்கும் நமது மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்கள்.
திரு. நாகேஸ்வரன்
திருநாகேஸ்வரன் (கம்போசிங் பிரிவு) அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
நாம் இங்கே நம் ஆசிரியர் அவர்களை வரவேற்பதற்காகக் கூடி இருக்கின்றோம். தந்தை பெரியாரவர்களின் கருத்துகளை எல்லாம் நம் பத்திரிகையின் வாயிலாகப் பரப்பும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறோம். நான் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றேன். என் தந்தை பெரியாரவர்களின் கொள்கையின் மீதுள்ள பற்றினால்தான் ஆகும். நான் வெளியே சென்றால் அதிகச் சம்பளம் கிடைக்கலாம். ஆனால் நாம் மான உணர்ச்சிக்காகத்தான் கொள்கைக்காகத்தான், பணியாற்றி வருகிறோம். இதை உணர்ந்து எல்லோரும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
திரு. கி.வீரமணி எம்.ஏ.பி.எல்.,
திரு. கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., (ஆசிரியர், விடுதலை) அவர்கள், தமக்களிப்பட்ட வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
இந்த நிகழ்ச்சி, என்னைப் பெரிதும் வெட்கத்தில் ஆழ்த்துகிறது. மலேசியா போய் விட்டுத் திரும்புவது ஒன்றும் பெரிய காரியமல்ல. இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மனிதன் சந்திர மண்டலத்திற்கே சென்று திரும்புகின்றான். இன்று மதிய உணவை முடித்துக் கொண்டு ஏறினால் இரவு உணவுக்கு முன்னாலேயே மலாயா போய் சேர்ந்துவிடக் கூடிய வாய்ப்பு இன்று விஞ்ஞானத்தின் மூலம் ஏற்பட்டு விட்டது. இதை ஒரு பெரிய சாதனையாகக் கருதி எனக்கு இந்த வரவேற்பளிக்கிறார்கள் என்று கருதவில்லை. என் மேலுள்ள அன்பைக் காட்டிக் கொள்ளவும், நான் தந்தை பெரியாரவர்களின் கொள்கைகளை அங்கெல்லாம் எடுத்துச் சொன்னேன் என்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளவுமே இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் கொள்கை உலகில் பலரையும் கவர்ந் துள்ளது. தந்தை பெரியாரவர்களின் கொள்கையானது உலகமெல்லாம் பரவி இருக்கிறது.
பெரியாரை வரவேற்க மலாயா மக்கள் துடிப்பு
நான் சென்ற இடமெல்லாம் எனக்கு மலாயாவில் இருக்கிற தமிழர்கள் மிகச் சிறப்பாக வரவேற்புக் கொடுத்து தந்தை பெரியாரவர்களின் உடல் நலம் பற்றி மிகக் கவலையோடு விசாரித்தார்கள். நமது நாட்டை விட்டு நமது கொள்கைகள் அங்கு நிறையப் பரவி இருப்பது எனக்கும் மகிழ்ச்சியை ஊட்டியது.
நான் பெரியார் தொண்டனே!
எனக்களிக்கப்பட்ட வரவேற்பிற்கெல்லாம் காரணம் நான் தந்தை பெரியாரவர்களின் கொள்கைகளைப் பரப்புகின்ற தொண்டன் என்கின்ற முறையில்தானே தவிர, மற்றபடி வேறு காரணத்தால் அல்ல.
என்னை வழி அனுப்பும் போதும், திரும்ப நான் வரும் போதும் அய்யா அவர்கள் இல்லாது போனது எனக்குக் குறையாகத் தோன்றி இருக்கும் என்று அய்யா அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் அம்மா, அய்யா இருவரையும் ஒன்றாகவே கருதுகின்றேன். அய்யா அவர்கள் வர இயலாவிட்டாலும், அம்மா அவர்கள் நான் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் வந்திருந்தார்கள். அது எனக்கு பெரும் பெருமையேயாகும். அய்யா அவர்கள் குறிப்பிட்டது போல், நான் இங்கு தொண்டாற்றுவதால் இழப்பு ஒன்றுமில்லை. லாபத்தைத்தான் அடைந்திருக்கின்றேன். இங்கு நான் பணத்தைக் கூறவில்லை. பணம் வருவது பெரிய லாபம் என்று நான் கருதவில்லை.
அன்புக்கும் பற்றுக்கும் நன்றி
நீங்கள் உங்களிடத்திலிருக்கிற அன்பை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தந்தை பெரியாரவர்களும் என்மேல் உள்ள அன்பையும் பற்றையும் காட்டிக் கொண் டார்கள். மிக்க நன்றியுடையவனாக என்றுமிருப்பேன்.
நான் ஒரு மாதம் சென்றிருந்தபோதும், நீங்களெல்லாம் கடமை உணர்ச்சியோடு எப்போதும் போல எவ்விதக் குறைவுமின்றி, பத்திரிகையை நடத்தித்  தந்தமைக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தனிப்பணியல்ல பொதுப்பணி என்பதை உணர்ந்து ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் தங்கள் துறை வேறு என்று கருதாமல், இணைந்து செயலாற்றுவதோடு கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பவர்களாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மலேசியா மக்களின் சிறந்த பண்பாடுகள்
மலேசியா மக்கள் அய்யா அவர்களின் வருகையை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அங்குள்ள மக்களின் நினைவாக ஒழுங்கு பணியாற்றும் திறன் கட்டுப்படுத்தியது. அன்புடைமை முதலியவை குறித்தும் குறிப்பிட்டதோடு, சிங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் தன்னுடைய சுற்றுப் பயணங்களில் ஒத்துழைப்புகளை எல்லாம் விடுதலை பத்திரிகையைப் போல வெளியிட்டதோடு நமது கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டு திரு. சாரங்கபாணி அவர்களுக்கும் மற்ற மலாயா தமிழர்களுக் கும் நன்றி தெரிவித்து தமதுரையினை முடித்துக் கொண்டார்.
திரு. துரைராஜ் (துணை ஆசிரியர்) அவர்கள் நன்றி கூறினார்.
                         ---------------------------"விடுதலை" 25.2.1968

10 comments:

தமிழ் ஓவியா said...


தருமபுரி மாநாட்டுச் சிந்தனை நந்தன் முதல் நத்தம் வரை தகடூர் தமிழ்ச்செல்வி


மனித நாகம் மனு வகுத்த சாதிமுறை!
மறுக்காமல் மனித குலம் ஏற்ற பாவம்! மாறாமல் இன்று வரை தொடரும் சாபம்!
கொலைவெறியாய் கொளுத்தும்வெறியாய்,
கோலோச்சும் கொடுமைமிக்க சாதிவெறி!

சாதி துறந்த பிள்ளைகளின் உள்ளங் கலந்த காதல் மணங்கள்! ஏற்று கொள்ளா சாதிசமூகம்! பெற்றவர்களே, பிள்ளைகளை
அநாதைகளாக்கும் அவலங்கள்!
கவுரவ அடைமொழியோடு வீட்டிற்குள்ளே படுகொலைகள்

நந்தனை அன்று எரித்தது! சாதியை வகுத்த வேதியர் கூட்டம் நத்தத்தை இன்று எரித்தது! நெறியற்ற சாதிவெறி பிடித்த கூட்டம் சாதி வெறி கொண்டு அலையும் சாதிய கூட்டணிகளே!
உனது வீட்டுக்குள் கீழ்சாதிக்காரன் நுழைந்தால் தீட்டு!
உனது தெருக்களிலே கீழ்சாதிக்காரன் நடந்தால் தீட்டு! உனது பிள்ளைகளை கீழ்சாதிக்காரன் மணந்தால் தீட்டு!
உனது கோயில்களில் கீழ்சாதிக்காரன் கும்பிட்டால் தீட்டு! ஆனால்,

உன் கை கொடுத்த நன்கொடையால் உருவான கோயில் கருவறைக்குள், அடுக்கடுக்காய் உன் தோள் சுமந்த செங்கற்களால்
அமைக்கப்பட்ட கருவறைக்குள், கடினப்பட்டு நீ ஏற்றிய கருங்கல்லால், கச்சிதமாய் வடிக்கப்பட்ட கருவறைக்குள்,
சூத்திரனே, நுழையாதே! நீ நுழைந்தால் தீட்டு! என
சாத்திரத்தை காட்டி உன்னை தடுத்து நிறுத்தி,
அசிங்கப்படுத்தி ஆர்த்து நிற்குதே ஆரியம்! உச்ச நீதி மன்றம் வரை சென்றும் ,
உறுதிபடுத்துகிறதே! நீ விபச்சாரி மகன், என்று!
உரைக்கவிலையா இது அவமானமென உனக்கு?
சாதி வெறியை எரித்துவிடு!!
மனிதனாக மாறிவிடு !

வர்ண வெறி போற்றும் வந்தேறி கூட்டங்களே,
நந்தன் வரலாறுகள் மட்டும் அல்ல,
நத்தம் வரலாறுகளும் திசை மாறும் ஒரு நாளில்!
அந்த திசை ஐயா பெரியார் காட்டிய திசை!
அந்த திசை அண்ணல் அம்பேத்கர் காட்டிய திசை!
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பாடையிலே செல்லும் திசை!

அத்திசையில்,
சாதி ஒழிப்பு மாநாடு! தீண்டாமை ஒழிப்பு மாநாடு!
சாதி நாகம் தீண்ட அஞ்சும்
சாயாத கொள்கை இமயம்
தரணி போற்றும் தமிழர் தலைவரின் தன்மான அறிவிப்பு !
திசம்பர் திங்கள் ஒன்பதாம் நாளில் தருமபுரி மாநகரில்,

சாதி மறுப்பு வாழ்விணைகள்
சரித்திரத்தில் இடம் பெறவே,
சான்றளித்து பாராட்டுப் பத்திரம் அளித்திட உள்ளார் எம் தலைவர்!
அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் மாறா தமிழர் தலைவர்!

திராவிடத்துச் சொந்தங்களே,
திரண்டு வந்திட வேண்டுகிறோம்! ஆதிக்க வெறி பிடித்த ஆரிய நெறி வகுத்த, ,
சாதியத்தை கருவறுப்போம்! சமத்துவத்தை படைத்து நிற்போம்!
மாண்டு போன மனிதத்துக்கு
மீண்டும் ஒரு முறை உயிர் கொடுப்போம்!.

தமிழ் ஓவியா said...


வாழிய! வாழிய!! வாழியவே!!!


பகுத்தறிவு பகலவனின் பணிமுடிக்கும் செயல்திற பெட்டகமே!

அய்யாவின் அடிச்சுவட்டில் அரியணை கண்டிட்ட

திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தரே!

சின்னஞ்சிறு வயதுமுதல் இந்நாள் வரை

ஆசானின் கொள்கைகளை அகிலமெல்லாம் உரைத்திட்ட சொற்பொழிவு பேரருவியே!

மானம் பாராத பொதுத் தொண்டில் மகிழ்வைக் காணும் மனிதநேய மாண்பாளரே!

மானுடப் பற்றையே வாழ்வியலாகக் கொண்ட வாழ்வியல் வள்ளலே!

திராவிடத் தமிழினத்தின் தன்மானம் காத்திட்ட இனமான காவலரே!

சொந்த புத்தி தேவையில்லை

அய்யா தந்த புத்தி ஒன்று போதும் என்றுரைத்த அடக்கத்தின் திருவுருவே!

தந்தையின் பிறந்தநாளிலே தொண்டர்களின் பிறந்தநாள் அடக்கம்

என்றிட்ட அய்யாவின் மறுபதிப்பே!

இன்பம் பல பெற்றோம் தங்கள் இசைவிற்கே

இன்றே புறப்பட்டோம் தலைநகருக்கே

இனிதே துவங்கட்டும் தொண்டறமே!

இனி தழைத்தோங்கும் தமிழினமே!

நீர் வாழிய! வாழிய!! வாழியவே!!!

தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி -21.

தமிழ் ஓவியா said...


அழகு அழகு


அழகு அழகு

வீரமணி அழகு!

கருத்தழகு

கருஞ்சட்டை அழகு!

தொண்டழகு - வெள்ளைத் துண்டழகு!

அகன்ற காதழகு

அடங்கா வீரம் அழகு!

நேர் வகிடழகு

நேர்மை அழகு!

நடை அழகு - வினா

விடை அழகு!

எழுத்தழகு - கொள்கை

எழுச்சி அழகு!

வாழ்வு அழகு

வாழ்வியல் சிந்தனையழகு!

படிப்பழகு

படியா செருக்கழகு!

அதிரும் பேச்சழகு

அகவை 80 அழகே அழகு!

-கி.தளபதி ராஜ்

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - தமிழர் தலைவர் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


தந்தை பெரியார் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார்

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறை அறிஞர்கள்

கழகப் பெரு மக்கள் அலை அலையாய் வந்து நேரில் வாழ்த்து!

பெரியார் (தொண்டர்கள்) நலப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியும் குவிந்தது

இன்று 80ஆவது பிறந்த நாள் காணும் தமிழர் தலைவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று பல்துறைப் பெரு மக்களும் நேரில் வந்து வாழ்த்துகளை கூறினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2012) சுயமரியாதை நாளாக திராவிடர் கழகத் தோழர்களால் தமிழகமெங் கும் சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகிறது.

பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு

இன்று (2.12.2012) காலை 9 மணியளவில் பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி - மோகனா ஆகியோரை தமிழகமெங்கும் இருந்து வந்த திரண்டிருந்த கழகத் தோழர் - தோழியர்களின் வாழ்த்து ஒலி முழக்கமிட்ட வாறு இரு பக்கங்களிலும் வரிசையாக நின்று வரவேற் றனர்.

தமிழர் தலைவருக்கு சிறப்பு

கழகத் தோழர் புடை சூழ திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறி வரவேற்றார்.

பெரியார் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார்

இதையடுத்து தமிழர் தலைவர் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரி யார் - அன்னை மணியம்மை யார் நினைவிடங்கள் அருகே தமது 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சந்தன மரக் கன்றை நட்டார் அவரது துணைவியர் மோகனா வீரமணி அவர்களும் மற் றொரு மரக் கன்றையும் நட்டார். தமிழர் தலைவருக்கு கனிமொழி வாழ்த்து

மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் இன்று காலை சென்னை பெரியார் திட லுக்கு வருகை தந்து தமிழர் தலைவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார். இதையடுத்து கலைஞர் தொலைக்காட் சியின் தலைவர் கல்வியாளர் ரமேஷ்பிரபா தமிழர் தலை வருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார். வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தமிழர் தலைவருக்கு பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தை கூறினார்.

குருதிக் கொடை முகாம் தொடக்கம்

முன்னதாக இன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மருத்துவமனையில் தமிழர் தலைவர் பிறந்த நாளை யொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குருதிக் கொடை முகாமை மலேசியா திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தமிழர் தலைவருக்கு நேரில் வாழ்த்து

முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட் சகன், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுப. சீதாராமன், தஞ்சை ராசகோபால், ஒப் பந்தக்காரர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் வி.பி.நாராயணன், மறைமலை இலக்குவனார், பொறியாளர் உஸ்மான், மருத்துவர் நரேந்திரன்,

பேராசிரியர் மா.நன்னன், கலைஞர் டி.வி. நிர்வாகி சரத், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் சேகர்பாபு, நடிகர் குமரிமுத்து, திரைப் பட இயக்குநர் செய்யார் ரவி, திருப்பத்தூர் கணேஷ்மல், மதுரை தொழிலதிபர் கனகாம் பரம், பட்டுக்கோட்டை குமாரவேல், சச்சி தானந்தம், இயக்குநர் அமிர்தம், வழக் குரைஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பராதி, பேராயர் எஸ்றா சற்குணம், செங்கை சிவம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருச்சி ஞானராஜ், பெரம்பலூர் முகுந்தன்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகப் பொருளாளர் வழக் கறிஞர் கோ.சாமிதுரை, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு, கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல் செல்வி, வீ.அன்புராஜ் குடும்பத்தினர், தஞ்சை இரா. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, சட்டத்துறை செயலாளர் ச.இன்பலாதன், திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர் ஆ.நாகலிங்கம், திராவிட மகளிரணி மாநில செயலாளர் குடவாசல், கணபதி, மகளிரணி, மாநிலச் செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, மாநில இளைஞரணி செய லாளர் இல.திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் இளந்திரையன், கழக தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே.எடிசன் ராசா, கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், பழநி, புள்ளையண்ணன், சாமி, திராவிடமணி, நாகர்கோவில் ப.சங்கரநாரா யணன், திருப்பத்தூர் கே.சி.எழிலரசன்.
கல்பாக்கம் வேம்பையன், வடசென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி, எழும்பூர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, எழும்பூர் தேவநிதி, காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், கவிக்கோ வா.மு.சேதுராமன், வா.மு.சே. ஆண்டவன், ஈப்போ மாணிக்கம், மருத்துவர் ஞானசுந்தரம், ஆடிட்டர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர்.

வரியியலில் நிபுணர் ராசரெத்தினம், பேராசிரியர் மங்கள முருகேசன், புதுவை மாநில கழகத் தோழர்கள், நீதியரசர் ஏ.கே. ராசன், வழக்கறிஞர் சுப்பாராவ், வழக்கறிஞர் தியாகராஜன், சட்டக்கதிர் சம்பத், தி.மு.க. அமைப்பு செயலாளர் பெ.வ.வீ கல்யாண சுந்தரம், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி.

பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் ரெத்தினம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, முன்னாள் சட்டமன்ற செய லாளர் மா.செல்வராஜ், எழுத்தாளர் விஜயன் பாலா, ஒளிப்பட நிபுணர் முத்துக்குமார், செய்தியாளர்கள் ஆரோக்கியசாமி, பழ. அன்பரசு, தினமணி முருகேசன், ஆடிட்டர் கந்தசாமி, முன்னாள் துணை வேந்தர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் மீனா கந்தசாமி, மருத்துவர் சொக்கலிங்கம், முனைவர் நாகநாதன், முன்னாள் மேயர் சா.கணேசன், எழுத்தாளர் கயல் தினகரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, மருத்துவர் சொக்கலிங்கம், முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன், மாம்பலம் சந்திரசேகரன், காரைக்குடி என்.ஆர்.சாமி குடும்பத்தினர், 100 ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர்.

கடல் சார்பல்கலைக்கழக துணை வேந்தர் நாசே ராமச்சந்திரன், தஞ்சை திருச்சிற்றம் பலம், கவிஞர் காசி , முத்துமாணிக்கம், முனைவர் எஸ்.டி.ரத்தினசபாபதி, கவிவேந்தர் கா.வேழவேந்தன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜின்னா, கடலார் வேலாயுதம், மற்றும் திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் பொதுக்குழு, தலைமை செயற்குழு உறுப் பினர், கழக தோழர் - தோழியர், பெரியார் கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள், விடு தலை பணிமனை பணியாளர்கள் அனை வரும் தமிழர்தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நல்.இராமச்சந்திரன், வழக் கறிஞர்கள் வீரசேகரன், ஆம்பூர் துரைசாமி, பெரியார் திடல் மேலாளர் பி.சீத்தாராமன், விடுதலை அச்சுப்பிரிவு மேலாளர் சரவணன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன், விடுதலை ராதா, பெரியார் கல்வி குழும ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிர மணியன், பேராசிரியர் பர்வீன், மருத்துவர் மீனாம்பாள், மருத்துவர் சாரதா, பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகர் கோவிந்தன், திராவிடன் நல நிதி பொது மேலாளர் அருள்செல்வன், மயிலை காளத்தி, சேதுராமன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் திருவள்ளுவன், செயலாளர் கி.இராமலிங்கம், புலவர் சங்கரலிங்கம்.

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ், மலேசியா திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர்.அன்பழகன், இராம. அன்பழகன், முனைவர் அதிரடி அன்பழகன், இரா.பெரியார் செல்வன், பூவை புலிகேசி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ்சாக்ரடீஸ், மாணவரணி துணை செயலாளர் மு.சென்னியப்பன்.

மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர்கள் வீ.கும ரேசன், வடச்சேரி இளங்கோவன், பிரின்ஸ் என்னாரெசு பெரியார், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் ரத்தினசாமி, செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நீலாங்கரை ஆர்.டி.வீரபத் திரன், சைதை எம்பி பாலு, மயிலை சேது ராமன், மாநில இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன், மற்றும் பொதுமக்கள் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

தமிழ் ஓவியா said...


ஈழத்தில் இன்னும் இராணுவ ஆட்சியா?

இலங்கையில் இன்னமும் இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது. மாறுபட்ட கருத்துக்கும் மதிப்பளிப்பது தான் ஜனநாயகத்தின் தத்துவம்; ஆனால் பாசிசமே ஆட்சி செய்கிறது. முள்ளி வாய்க்கால் படுகொலை களுக்குப் பின்பும், இலங்கையின் நவீன ஹிட்லர் ராஜபக்சேகளுக்கு இரத்தப் பசி தீரவில்லை.

அதன் கோரமுகம் பற்பல ரூபங்களில் இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்ட வெட்கப்படுவதே இல்லை. தமிழர்கள் பெரிதும் வாழும் யாழ்ப்பாணம் பகுதியே சிங்கள இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட பகுதியாகவே காட்சியளிக்கின்றது!

அது மட்டுமா? தமிழர்கள் இல்லத்து நிகழ்வுகள், அவர்களது நகர்வுகள் உட்பட எல்லாமே சிங்கள இராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகே நடந்தாக வேண்டும் என்ற இரும்புச் சட்டம் - அன்றாடம்!

கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று யாழ்ப் பாணத்தில் நடந்த மாவீரர்கள் நாளையொட்டிய நிகழ்வுக்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை மிருகத்தனமாக சிங்கள இராணுவம் தாக்கியுள்ளது.

நமது இளைய தமிழ் ரத்தங்கள், தேவையற்று தங்கள் இன இரத்தத்தை மீண்டும் யாழ் மண்ணில் தெளித்திருக்கிறது.

இது வன்மையான கண்டனத்திற்குரியது! இதற்குப் பெயர்தான் அரசியல் தீர்வா? இந்திய அரசும் உலக நாடுகளும் இத்தகைய அவலங்களைக் கண்டித்து, தடுத்து ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காக்க முன் வர வேண்டும்.

கி.வீர‌மணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
2.12.2012

தமிழ் ஓவியா said...


அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன் பாராட்டுகிறார்


அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் அவர்கட்கு,

வணக்கம். வைதீகம் என்னும் மிகப் பெரிய நச்சு அபாயத்தை முழுமையாக உணர்ந்து, அதை எதிர்த்து ஒடுக்குவதையே வாழ்நாள் தொண்டாகக் கொண்ட நிகரில்லாப் பெருமகனார், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் தம் பணிகளைத் தொடர்வதற்காகக் கவனமாய்த் தேர்ந்தெடுத்து வாழ்த்தித் தன் காலத்திலேயே தன் பொறுப்புகளை ஒப்படைத்த இணையில்லா வாரிசு தாங்கள். பெரியார் தங்கள்மீது சுமத்திய பொறுப்புகளை அப்பழுக்கின்றித் தொடர்ந்து, விரிவுபடுத்தி, அக்கருத்துகளையும் உணர்வுகளையும் மக்களிடம் வலுவாகக் கொண்டு செல்லும் பெருஞ் சாதனையாளர் நீங்கள். அண்மையில் சென்னையில் நடந்த சாதி மறுப்பு வாழ்க்கைத் துணை தேடும் நிகழ்ச்சி மிகப் பெரிய சமூக விழிப்புணர்வு விழா. இதுபோல ஆயிரம் சொல்ல முடியும். 80 வயதிலும் ஆற்றல் மிக்க இளைஞராக உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டும், பெரியார் கருத்துகளைப் பரப்பிக் கொண்டும் வருகிறீர்கள். இந்தப் பெரும் பணியைச் செய்யும் பேராயுதமாம் விடுதலை நாளிதழை 50 ஆண்டு காலத்தைத் தாண்டி வீடுதோறும் எடுத்துச் செல்லும் முயற்சியில் வெற்றிகள் ஈட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அரசியல் லாபமில்லாமல், சமூக லட்சியங்களோடு செயலாற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை உங்களைச் சுற்றி அணி திரட்டியிருக்கிறீர்கள். உங்கள் செயல்கள் மென்மேலும் விரிவடைய, பெரியார் விரும்பிய சுயமரியாதை சமதர்ம ஜனநாயகப் பெருவாழ்வு மென்மேலும் மலர தாங்கள் முழு நலத்துடன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து பணி செய்திட அன்போடு வாழ்த்துகிறேன். தங்களுக்கு ஆற்றல் தந்து கொண்டிருக்கும் தங்கள் மதிப்புக்குரிய துணைவியாரையும் இந்த இனிய நேரத்தில் வணங்குகிறேன்.

அன்புடன் பொன்னீலன்

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகப் பொதுக்குழுக்கூட்டம்திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம், சென்னை பெரியார் திடலில் 1.12.2012 சனியன்று காலை 10.30 மணிக்கு, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடக்கத்தில் அதிரடி க.அன்பழகன் கடவுள் மறுப்புக்கூறினார். சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

இன்றையதினம் சிலர் ஜாதியை முன் வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற முடியாது. ஜாதி நமக்குரியது அல்ல. அதன் பெயரைப் பார்த்தாலே விளங்கும். சாதி என்று போட்டு தமிழை வளர்க்க ஆசைப்பட்டால் அது எதிர்வினையைத் தான் ஏற்படுத்தும்.

இந்தப் பொதுக்குழு இதற்கெல்லம் ஒரு முடிவை ஏற்படுத்தும் என்றார். தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம் உட்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றைக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் முன்மொழிந்தார். சிறப்புத் தீர்மானம் ஒன்றைக் கழகத் தலைவர் முன்மொழிந்தார். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சிறப்புத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் குறித்து சில அறிவிப்புகளை கூறினார்.

மருத்துவர் கூறியபடி சுற்றுப்பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வீடு திறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை மற்றப் பொறுப்பாளர்களை அழைக்கலாமே என்று கேட்டுக்கொண்டார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை மய்யப்படுத்தி பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானம் அது. சிறப்புத் தீர்மானத்தை வழி மொழியும் வகையில் திராவிடர் கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் செயலாளர் முன்னாள் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர்கள் டாக்டர் சோம.இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
பேராசிரியர் இலக்குவன் தமிழ் தன் பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

80இல் 70 ஆண்டு பொது வாழ்வுகண்ட நமது தமிழர் தலைவரின் உழைப்பு வீண் போகக் கூடாது - அது பயனுள்ளதாக அமையுமாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிலர் வாழ்த்த வயது வேண்டும் என்பார்கள். இது ஒரு பிற்போக்கான கருத்தாகும். வாழ்த்திட உள்ளமும், வாழ்த்திட சரியான மனிதர்களும் தேவை.

சில புதிய சவால்கள் நம்மவர்களிடமிருந்தே கிளம்பி உள்ளன. அவற்றைச் சந்திக்கும் வலிமை நமக்குண்டு என்றார்.

மருத்துவர் சோம.இளங்கோவன் அமெரிக்கா

தந்தை பெரியார் காலத்தில் வாழ்ந்த அய்யா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கண்டார்கள், நமது ஆசிரியர் அவர்களின் 80ஆம் ஆண்டைக் கண்டு மகிழும் வாய்ப்பு சாதாரணமானதல்ல.

நாம் நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறுவதற்கு அவரின் குடும்பத்தாருக்கு நன்றி கூறிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும். (விடுதலை,20.9.1964)

தமிழ் ஓவியா said...


ஒரு துளிச் சந்தேகமும் இல்லை


- டாக்டர் கலைஞர்

எனக்கு, என்னுடைய ஆட்சிக்கு நான் எடுத்து வைக்கின்ற சாதனைகளுக்கு எதிர்ப்புகள் எங்கிருந்து தோன்றினாலும், அந்த நேரத்திலே மனம் சற்று சலிப்புறுமேயானால், அந்தச் சலிப்பை நீக்குகின்ற மாமருந்தாக எனக்குத் தோன்றுகின்ற இப்பெரியார் திடல், திருச்சியில் பெரியார் மாளிகை, வீரமணி அவர்களுடைய உருவம் இவர்களெல்லாம் நமக்காக இருக்கும்போது திராவிட இயக்கம் நம்மைப் பெற்றெடுத்த வீடு! திராவிட இயக்கம் நாம் தவழ்ந்து வந்திட்ட தாழ்வாரம்! திராவிட இயக்கம் நம்முடைய கைவேல்! திராவிட இயக்கம் நமக்குக் கவசம்! திராவிட இயக்கம்தான் உயிர்மூச்சு! திராவிட இயக்கத்தினுடைய முதல் போர்வாளாக, முதல் பாதுகாவலனாக, நமக்குத் திராவிடர் கழகம் இருக்கும்போது, நான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்ற உறுதியை நான் எப்பொழுதும் பெற்றிருப்பவன்.

சில நேரங்களிலே சில அபிப்பிராயப் பேதங்கள் வரலாம். அந்த அபிப்பிராயப் பேதங்கள்கூடக் கொள்கை அடிப்படையிலே வந்ததே தவிர, உறவு அடிப்படையில் வந்தது அல்ல. கொள்கை அடிப்படையில் வந்ததென்றால், இந்தக் கொள்கையை எப்படி நிலைநாட்டுவது, எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற அந்த வழிமுறைகளிலே வேண்டுமானால், கருத்து வேறுபாடுகள் வரலாமே தவிர அந்தக் கொள்கையே சரியா? அல்லவா? என்று என்றைக்கும் எனக்கும், நம்முடைய வீரமணியார் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே கிடையாது. வரவே வராது. தமிழர்கள் அதை வரவும் விடமாட்டார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த இயக்கங்கள் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புறத்திலே சமுதாயப் பணிகளை ஆற்றிக் கொண்டு இன்னொரு புறத்திலே அரசியல் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாய இயக்கமாகவும் கொள்ளப்படும். திராவிடர் கழகம் அரசியல் இயக்கமாகவும் இயங்கும். இவை இரண்டுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இவை இரண்டினுடைய தாத்பர்யம் இவற்றின் மூலநோக்கம் திராவிடர்களை வாழ வைப்பது, திராவிடர்களை முன்னேற்றுவது, தமிழர்கள் சுயமரியாதைக் காரர்களாக என்றைக்கும் வாழ பாடுபடுவது, தன்மான சக்திகளாகத் தமிழர்கள் வாழவேண்டு மென்பதற்காகப் பாடுபடுவது என்பதுதான் இரண்டு இயக்கத்தினுடைய நோக்கங்கள் குறிக்கோள்கள். அந்தக் குறிக்கோள் நிறைவேறுமா? நடைபெறுமா? வெற்றி பெறுமா? என்று யாராவது எண்ணுவார் களேயானால், அதில் ஒரு துளிச் சந்தேகமும் இல்லை. அந்த ஒரு துளிச் சந்தே கமும் இன்றைய நிகழ்ச்சியை யாராவது உற்றுக் கவனித் தால் நிச்சயமாக நீங்கிவிடும். எனக்கு நீங்கிவிட்டது.

- (திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரையிலிருந்து, 11.11.2006)