Search This Blog

4.12.12

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் - ஏன்?

 

தருமபுரியை நோக்கி! 

வரும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிக முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரின் பயணமும் தருமபுரியை நோக்கி இருக்கப் போகிறது - இருக்கவும் வேண்டும்!

ஆம் அன்று  ஜாதி - தீண்டாமையை எதிர்த்து கருத்துப் போர் தொடங்கப்பட உள்ளது. காலையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர்  ஒற்றுமை ஓங்க வேண்டிய அவசியம் - ஏன்? உரிமைகள் மறுக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் இணைந்து ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் - ஏன்? எனும் பொருளில் கருத்தரங்கமும், மாலை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள் அடங்கிய பேரணியும், சமூக நீதிச் சிந்தனையும், மனிதநேய மாண்பும், பேதமற்ற சமூகத்தைப் படைக்க விரும்பும் போராளிகளும் போர்க்குரல் கொடுக்கும் பொது மாநாடும் - என்றென்றும் பேசப்படும் வகையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளன.
மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதி வெறிக் கண் கொண்டு பார்ப்பது பாசிச நோயின் சேட்டையாகும்.

தந்தை பெரியார் அவர்கள் ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்களின் பிடியிலிருந்து பிறப்பின் அடிப்படையில் சூத்திரர்களாக்கப்பட்ட பஞ்சமர்களாக்கப்பட்ட மக்களுக்காக பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தொடங்கினார் நடத்தினார்!

அதற்காக அவர் கண்ட களங்கள் கணக் கற்றவை; - சிறைச் சாலைகள் எண்ணற்றவை; எதிர்ப்புகள், ஏளனங்கள், இருட்டடிப்புகள் இவற்றை எல்லாம் கடந்து தந்தை பெரியார் நம்மை எல்லாம் மனிதராக்கினார்.

நடக்கும் உரிமை, படிக்கும் உரிமை, உத்தியோகம் பெறும் உரிமைகள் என்று அங்குலம் அங்குலமாக தமிழர்களை மேலே உயர்த்தினார்.

தமிழன் என்னும் ஓரினக் கோட்பாட்டுக்கு பெருந்தடை ஜாதி என்பதை ஆழமாக உணர்ந்து ஜாதி ஒழிப்பை தன் முதல் கொள்கையாகக் கொண்டார்.
அதன் பலனை தமிழர்கள் அனுபவித்து வரும் இந்தக் கால கட்டத்தில், ஜாதியை முன்னிறுத்தி, தமிழர்கள் என்னும் ஓரினக் கோட்பாட்டை ஒழிக்க சிலர் முயலுகின்றனர் என்றால் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. அதே நேரத்தில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்பதிலும் அய்யமில்லை.
சமூக நீதித்தளத்தில், இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் உரிமைகள் மறுக்கப்பட்ட - வாய்ப்புகளின் கதவுகள் அடைக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்கள் பரிமாற்றம் செய்வது என்பது வேறு!
அதனைத் தலைகீழாகப் புரட்டிப் பிடித்து, தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்குத் துருப்பாகப் பயன்படுத்தும் தந்திரம் வேறு. இந்தக் கண்ணிவெடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. சிக்கிக் கொள்ளவும் மாட்டார்கள்.

ஜாதி என்னும் நச்சுக் காளான் எந்தக் காரணத்தை முன்னிட்டு வளர்க்கப்பட்டாலும் சரி, அது மறைமுகமாக பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை இன்னொருவகையில் மீண்டும் அரியாசனத்தில் அமர வைக்கும் ஆபத்தான முயற்சி என்பதை மறக்க வேண்டாம்!

அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சினையில் கொம்பு சீவி விடுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்!

புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளலாம் என்று கூறும் சூழ்ச்சியை முறியடிப்போம், வாரீர்!

தமிழ்த் தேசியம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு, பிறவியிலேயே ஆண்டாண்டுக் காலமாகத் தீண்டத்தகாத மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக ஆக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாம்! இதுதான் தமிழர்களை ஒன்றுபடுத்தும் தமிழ்த் தேசியத்தின் இலட்சணமோ! தமிழர்களை ஒன்றிணைப்பது திராவிடர் இயக்கம்தான் என்பதைக் காட்டுவோம், வாரீர்  - தருமபுரிக்கு!

      ----------------------------------------------"விடுதலை” தலையங்கம்  4-12-2012

41 comments:

தமிழ் ஓவியா said...


சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா!


தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி - பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில்

புதுடில்லியில் இந்தியாவில் மனிதநேயம் மற்றும் சமூகநீதியில் ஊடகத்தின் பங்கு கருத்தரங்கம்!

சமூக நீதியாளர் அனுமந்தராவ் அவர்களுக்கு

சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா!


புதுடில்லி, டிச.4- புதுடில்லியில் கருத்தரங்கமும், சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சியும் நாளை (5.12.2012) சிறப்போடு நடைபெறுகிறது.

புதுடில்லியில் அம்பேத்கர் அரங்கில் 5.12.2012 அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை இந்தியாவில் மனிதநேயம் மற்றும் சமூக நீதியில் ஊடகத்தின் பங்கு பற்றிய கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.

இக்கருத்தரங்கிற்கு திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழின் ஆசிரியருமான டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று உரை நிகழ்த் துகிறார். அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசுகின்றனர்.

இக்கருத்தரங்கில், மத்திய நலத்துறை அமைச்சகத் தின் முன்னாள் செயலாளர் பி.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு), கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் பேராசிரியர் ரவிவர்மகுமார், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் விவேக்குமார், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் திலிப் சி. மண்டல், ஃபார்வார்டு பிரஸ் முதன்மை ஆசிரியர் இவான் கோஸ்ட்கா ஆகியோர் பங்கேற்று உரையாற்று கின்றனர்.
சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா

புதுடில்லி அசோகா சாலையில் உள்ள ஆந்திர பவன் அம்பேத்கர் அரங்கில், 5.12.2012 அன்று மாலை 5.45 மணியளவில், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமாகிய வி. அனுமந்தராவ் அவர்களுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

இவ்விருது வழங்கும் விழாவில், நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் பேராசிரியர் பி.ஜே. குரியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க இருக் கிறார். இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக் குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் வரவேற்கின்றனர்.

தலைநகரில் வாழும் தமிழர்கள், சமூக நீதியாளர்கள் பெரும் அளவில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


தருமபுரி கலவரம்:


தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான ரூ.5.5 கோடி சொத்துக்கள் சேதம்
ஆட்சியர் அறிக்கை

சென்னை, டிச.4- தர்மபுரி அருகே நடந்த ஜாதிக் கலவரத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நகை கள், பணம் உள்பட தலித் மக்களுக்குச் சொந் தமான ரூ. 5.55 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சூறை யாடப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய் துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தி ல் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததையடுத்து கடந்த மாதம் 7ஆம் தேதி நாயக்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய 3 கிராமங்களில் உள்ள தலித் கிராமங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன.
தலித்களின் வீடுகள், உடைமைகள் சூறையா டப்பட்டன, தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து சி.பி.அய். விசா ரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் செங் கொடி உயர்நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தார். மாவட்ட ஆட் சியர், கண்காணிப்பா ளரை, பணியிடை நீக் கம் செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய் யப்பட்டது.

இந்த மனுக்களுக்கு பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய் யவும், மாவட்ட ஆட் சியர் மற்றும் எஸ்.பிக்கு, தலைமை நீதிபதி இக் பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய பெஞ்ச் உத்தர விட்டது.

இந் நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தபோது தர்மபுரி மாவட்ட ஆட் சியர் லில்லி அளித்த அறிக்கையை தமிழக அரசின் தலைமை வழக் கறிஞர் நவநீதகிருஷ் ணன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட் டுள்ளதாவது:

தலித் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக் குதலில் 297 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 4 கோடி மதிப்புள்ள நகைககள், பணம் உள் பட தலித் மக்களுக்குச் சொந்தமான ரூ. 5.56 கோடி மதிப்புள்ள சொத் துக்கள் சேதப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கலவரம் தொடர்பாக இரு பிரி வினர் மீதும் மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய் யப்பட்டன. 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து வழக்கு களும் சி.பி.சி.அய்.டி விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ளன. அவர் களும் புலன் விசார ணையை துவங்கி விட் டனர். இந்த சம்பவத் தின்போது தங்கள் கடமையை சரிவர செய்யத் தவறிய தர்மபுரி டிஎஸ்பி கோபிக்கு இட மாற்றம் செய்யப்பட் டுள்ளார். இன்ஸ்பெக் டர் ஜெகன்நாதன், பெருமாள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

வருவாய்க் கோட் டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதி காரிகள் மீதும் நடவ டிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 50,000 வீதம் மொத்தம் ரூ. 1.33 கேடி முதல்வரின் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்கப்பட் டுள்ளது. மேலும் பாதிக் கப்பட்ட தலித் குடும் பத்தினருக்கு வன் கொடுமை தடுப்பு சட் டத்தின் கீழும் நிவார ணம் வழங்கப்படும்.

297 குடும்பங்களைச் சேர்ந்த 1,200 பேருக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் 3 வேளை உணவும், குழந்தை களுக்கு பால் போன் றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

முழுமையாக சேதப்படுத்தப்பட்ட 37 வீடுகளை புதிதாக கட்டிக் கொடுக்க ரூ. 99 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்க திட்டம் அனுப் பப்பட்டுள்ளது. 156 வீடுகளை செப்பனிட, நிர்வாக ஒப்புதல் வழங் கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மற் றும் இதர பிரிவினரை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் காவல்துறை சுதந்திரமாக நியாயமாக செயல்படுகின்றன. எந்த குறுக்கீடும் இல்லை. சட்டப்படி அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு அமைதி நிலவுகிறது. சி.பி.சி.அய்.டி விசா ரணை ஆரம்பித்து விட்டதால் சி.பி.அய்., விசாரணை என்ற கேள்வியே எழவில்லை.
இவ்வாறு ஆட்சி யரின் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

கொசு சாமிக்கு அரோகரா

கடவுள் மக்களை உற்பத்தி செய்யாவிட்டாலும் கடவுள்களை மாத்திரம் மக்கள் உற்பத்தி செய்து கொண்டு தானிருக்கிறார்கள்.

சாமிகளுக்குப் பஞ்சம் வந்து விட்டது என்று நினைத்தோ என்னவோ ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரா மாவட்டத்தில் புதிய கடவுள் ஒன்றைக் கற்பித்துள்ளனர்.
யார் அந்தக் கடவுள்? டெங்கு சுரம் உருவாவதற்குக் காரணமான கொசுதான் அந்தக் கடவுள்!

எப்படி இருக்கு? புரோகிதர் மந்திரம் ஓதிட, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொசுவை வழிபட்டனராம்.

கொசுவே எங்களைக் கடிக்காதே என்று வேண்டிக் கொண்டார்களாம். (ஆதாரம்: மாலைமுரசு 29.11.2012)

சபாஷ்! இனிமேல் யாரும் கொசுவை அடிக்கக் கூடாது. கொசு வத்திகளை உபயோகிக்கக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் கொசுவத்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இழுத்து மூட வேண்டும். கொசுவைக் கொன்றால், அது கடவுளைக் கொன்ற பாவம் வந்து சேருமே!

ஆமாம், அதிலென்ன சந்தேகம்? இதுபற்றி துக்ளக் சோவும் கல்கியும் கட்டுரை எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அட, பக்திக் கிறுக்கர்களே!

தமிழ் ஓவியா said...

சுக்கிரன் என்ன சொல்லுகிறான்?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப் பண்பாடு. ஆனால் சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவி அமைவது உண்டு. ஒருவ னுக்கு சுக்கிரன் ஆனப்பட்டவன் கெட்ட இடத்தில் அமர்ந்தால் ஒரு மனைவிக்குப் பதில் இரண்டு மனைவி அமையும் என்பது ஜாதகத் தின் நிலைப்பாடு என்று ஒரு நாளேட்டின் ஆன்மீகச் சிறப்பிதழ் கூறுகிறது. அப்படியானால் அந்த இதழின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட் டுள்ள இந்தியப் பண்பாட்டுக்கு இந்த ஜாதகப் பலன் எதிரானது தானே?

இன்னொரு கேள்வி எழுகிறது. மனைவி ஒருவர் உயிரோடு இருக் கும்போது, இரண்டாவது மனை வியைத் தேடினால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இந்த இடத்தில் எது வெல்லும் - ஜாதகமா? இந்திய அரசமைப்புச் சட்டமா? சோதிடரே, பதில் சொல்வீர்!

தமிழ் ஓவியா said...

கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, நேற்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

கங்கையில் குளித்தால்....

இப்படிஒரு செய்திப் படத்துடன் வெளியாகியுள்ளது. இன்னொரு அபாய அறிவிப்பும் இணையதளம் ஒன்றில் வெளிவந்துள்ளது.

கங்கையில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீரும் என்றுதானே இதுவரை கேள்விப்பட்டு இருக்கி றோம். புராணங்களிலும் அப்படித் தானே எழுதி வைத்துள்ளார்கள்.

சிவபெருமான் தலையில் கங்கை சக்களத்திக் கடவுளாக இடம் பெற்றிருக்கிறாள் என்பதுதானே புராணம்!

இப்பொழுது வெளி வந்துள்ள இணையதளச் செய்தி என்ன சொல் லுகிறது தெரியுமா? கங்கையில் குளித்தால் புற்று நோய் வரும் என்பதுதான் அந்த அபாய அறி விப்பு! கங்கை நீரில் புற்று நோயை உற்பத்தி செய்யும் கார்சினோ ஜென்ஸ் (Carcinogens) என்னும் காரணிகள் இருப்பதாக ஆய்வாளர் கள் கண்டுபிடித்துள்ளனர்.

கங்கை நதிக்கரையில் வாழ் வோர்க்குப் புற்று நோய்ப் பாதிப்பு அதிகம் என்றும் தேசிய புற்றுநோய் மய்யம் தெரிவித்துள்ளது.

கங்கையில் குளிக்க முக்தி என்பது இதுதானோ! அறிவியல் வளர்ந்தால் அந்த வெள்ளத்தில் இந்தப் பழைய பத்தாம் பசலிக் குப்பைகள் எல்லாம் அடித்துக் கொண்டு போகும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்தால் சரி.

மக்கள் நல அரசு என்பது உண்மையென்றால் கங்கையில் குளிக்கக் கூடாது என்று கூறி சட்டம் போட்டுத் தடுக்க வேண் டாமா?

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும். (விடுதலை,20.9.1964)

தமிழ் ஓவியா said...

தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட
மாற்றுத் திறனாளிகள் வாரியத்தை மீண்டும் அமைத்திட வேண்டும்
தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, டிச. 4- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேட்டி - சேலைகளை வழங்கி சிறப் பித்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கழக ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வாரியத்தை இந்த அரசு மீண்டும் அமைத்திட முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- மாற்றுத் திறனாளி களுக்கு தி.மு. கழக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்பதைப்போல முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- மாற்றுத் திறனாளிகள் என்ற பெயரையே அவர்களுக்கு சூட்டியது நாங்கள் தான்; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். ஏற் கெனவே அவர்களை இழிவுபடுத்தும் முறையில், அவர்கள் விரும்பாத அள விற்கு கூன், குருடு, உடல் ஊன முற்றோர் என்றெல்லாம் இடப்பட்ட பெயர்களை மாற்றி, பொதுவாக அனைவருக்கும் மாற்றுத் திறனாளிகள் என்ற பெயரைச் சூட்டியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான்.

தி.மு. கழக ஆட்சியிலேதான் மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாக ஒரு வாரியமே அமைக்கப்பட்டது. அந்த வாரியம் இப்போது இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. அதை அகற்றி விட்டார்கள் அல்லது கலைத்து விட்டார்கள் என்று கேள்விப் படுகிறேன்.

மாற்றுத் திறனாளிகளுக்காக இட ஒதுக்கீட்டில் மூன்று சதவிகிதம் தரப் படவேண்டும் என்ற நிலையை உருவாக் கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். அதுவும் இப்போது பின் பற்றப்பட வில்லை, நடைமுறையிலே இல்லை என்று கேள்விப் படுகிறேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான போக் குவரத்துப் படியை 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அளித்ததும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.

மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் மாற் றுத் திறனாளி களுக்காக கழக ஆட்சி யில் வழங்கப்பட்டது. அதுவும் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டதாம்.

அகில இந்திய அளவில் தனித்துறையை வாதாடிப் பெற்றவர் கவிஞர் கனிமொழி

டில்லியில் நாடாளுமன்றக் கூட் டத்திற்குச் சென்ற கவிஞர் கனிமொழி அவர்கள் பெருமுயற்சி எடுத்து, இந்த மாற்றுத்திறனாளிகளுக்காக அகில இந்திய அளவில் ஒரு தனித் துறை வேண்டுமென்று வாதாடி அதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

மாற்றுத் திறனாளிகளை மதித்து, அன்பு பாராட்டி, எங்கள் சகோதரர் களில் ஒருவராகக் கருதி, அன்று முதல் இன்று வரையில் அரவணைத்துக் கொண்டிருப்பதும் உண்மையிலேயே அவர்களுக்காக பாடுபட்டுக் கொண் டிருப்பதும் தி.மு.கழகமும், தி.மு.கழக ஆட்சியும்தான்.

தமிழ் ஓவியா said...

தி.மு.கழக ஆட்சியில்தான் வேலை வாய்ப்பு களில்கூட, அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற அந்தக் முழக்கத்தை எழுப்பி அதிலே வெற்றி கண்டதும் தி.மு.க. என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது.

அத்தகைய நிலையிலே மாற்றுத் திறனாளிகளுக் காகப் பாடுபட்டு வருகிற இந்தக் கழகத்தைப் பற்றி அறியாத வர்கள் - அறிந்தும் அதை மறைக்க முற் படுபவர்கள் கழக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒன்றுமே செய்ய வில்லை என்கிற ஒரு தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வாயை மூடுகின்ற வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான காரியங்கள் கழக ஆட்சியில் நடை பெற்றுள்ளன. எனவே இதைக் கண்ட பிறகாவது அவர்கள் திருந்தி, தி.மு. கழகத்தைப் பற்றியும், தி.மு.க.தான் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி களுக்காக பாடுபடுகிற ஒரு சமுதாய இயக்கம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களுடைய கழக அலுவலகத் திற்கே வந்து மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளை யெல்லாம் அடிக்கடி வைத்து அதில் வெற்றி கண்டுள்ள இங்கேயுள்ள மாற்றுத் திறனாளிகளின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இன்றுபோல் என்றும் தொடர்ந்து அவர்களுக்காக என்னைப் பொறுத்தவரையிலும், தி.மு.கழகத்திலே உள்ள செயல்வீரர்கள் அனைவரையும் பொறுத்தவரை யிலும் இருப்போம், பணியாற்றுவோம் என்று உறுதி கூறிக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும்

செய்தியாளர்:- இந்த ஆட்சியில் தங்களுடைய கோரிக்கைகள் நிறை வேறாமல் மாற்றுத் திறனாளிகள் அடிக்கடி போராடுகிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்ப தற்காக உண்ணாவிரதம் இருந்தார்கள். அதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

கலைஞர் :- தமிழக அரசு முன் வந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வாரியத்தை மீண்டும் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப் போம்.

செய்தியாளர் :- பா.ம.க. தலைவர் சாதீய அமைப்புகளை கூட்டி, தலித்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அது எவ்வளவு அபாயகரமான அரசியல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கலைஞர் :- கேள்வியிலேயே பதில் அடங்கி யிருக்கிறது. அபாயகரமான அரசியல் என்று நீங்கள் கேட்டீர்களே, அதுதான் பதில்.

செய்தியாளர் :- தேர்தலுக்காக பா.ம.க. செய்கிற முயற்சி என்று எடுத்துக் கொள்ள மா? வாக்கு வங்கியினைப் பெருக்குவதற்காக இப்படி செய் கிறார்களா?

கலைஞர் :- ஜாதிப் பிரச்சினைகளை கையில் எடுப்பது என்பது தீக்குண்டத் திலே இறங்குவது போன்ற அபாயகர மானது.

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக் கிறாரே, அதைப் பற்றி அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எச்சரிக்கைக்கூடச் செய்ய வில்லையே?

கலைஞர் :- சாதி வெறியைக் கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய கருத்தும் வேண்டுகோளும் ஆகும்.

செய்தியாளர் :- இரண்டு பேரை இந்த ஆட்சியில் என்கவுண்டர் செய் திருக்கிறார்களே அதைப்பற்றி?

கலைஞர் :- அந்த என்கவுண்டர் செய்யப் பட்டவர்களின் உற்றார் உறவினர்கள்தான் இதைப் பற்றி நட வடிக்கை கோரவேண்டும். அப்படி கோருவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கலைஞர் பதிலளித்தார்.

தமிழ் ஓவியா said...


மோடிக்கு விசா தரக் கூடாது ஹிலாரியிடம் எம்.பி.கள் வலியுறுத்தல்


வாஷிங்டன், டிச. 4- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா தரக் கூடாது என்று 25 அமெரிக்க எம்.பிக்கள் வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை வலியுறுத்தியுள்ளனராம். இதனால் மோடி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

2002இல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் களுக்கு எதிரான கலவரத்தில் தனது பெயர் சம்பந்தப்படவில்லை என்று இன்னும் மோடி முழுமையாக நிரூபிக்கவில்லை. மேலும் அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமை யான நிவாரணம் தரவில்லை.

தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு இன்னும் சரிவர தண்டிக்கப் படவில்லை என்ற காரணங்களைக் கூறி ஹில்லாரியிடம் இந்த கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனராம்.
இதுகுறித்து அந்த எம்.பிக்கள் ஹில்லாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி இந்தியாவில் பெரிய பதவியை (பிரதமர் பதவி) குறி வைத்து நகர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு விசா தர முடிவெடுத்தால் அது அவருக்கு சாதகமாக அமையும். மேலும் குஜராத் கலவரத்தால் பாதிக் கப்பட்டோருக்கு நீதி கிடைக்க விடாதபடி செய்ய வழிவகுத்து விடும். மேலும் விசாரணை மற்றும் வழக்குகளுக்கு அவர் மேலும் குந்தகம் செய்யும் நிலை உருவாகி விடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நவம்பர் 29ஆம் தேதி இந்தக் கடிதத்தை அவர் கள் ஹில்லாரிக்கு எழுதியுள்ளனர். இந்தக் கடி தத்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோ பிட்ஸ் மற்றும் பிராங்க் உல்ப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இருவரும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தக் கடித விவரத்தை வெளியிட்டனர்.

இந்த கடிதத்தில் முக்கிய எம்.பிக்களான ஜான் கான்யர்ஸ், டிரென்ட் பிராங்க்ஸ், ஜேம்ஸ் மோரன், மைக்கேல் ஹோண்டா, பில் பாஸ்சரல், பார்பரா லீ, எட்வர்ட் மார்க்கி, ஜிம் ஜோர்டன், டேன் பர்டன், மைக்கேல் கோபுவானா, டோக் லாம்போர்ன் ஆகியோரும் கையெழுத்திட்டு உள்ளனர்.

2002 கலவரத்திற்குப் பின்னர் மோடிக்கு விசா தர அமெரிககா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அரசு, மோடிக்கு விசா தருவது குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறி யிருந்த நிலையில் அமெரிக்காவும் விசா தர அனு மதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் ஹில்லாரிக்கு இப்படி ஒரு கோரிக் கையை வைத்துள்ளனர் அமெரிக்க காங்கிரஸ் எம்.பிக்கள்.

தமிழ் ஓவியா said...


பெண்மையைப் போற்றும் பெருமகன்!


- திருமகள்

எனக்கு அமைந்த முதல் ஊர்தி வாழ்விணையர் அவர்கள்தான். அந்த ஊர்தி இருக்கிற காரணத்தால்தான் எனது இலட்சியப் பயணம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

எங்களுடைய தேனிலவு எல்லாம் தந்தை பெரியாருடைய பிரச்சாரப் பயணமே தவிர வேறு எதுவும் கிடையாது.

நானோ ஒரு காட்டுச் செடி போல இருந்தவன். அவர்களோ குரோட்டன்ஸ் செடி போன்றவர்கள்.

நான் எவ்வளவு துன்பத்தைத் தாங்குகிறேனோ அந்த துன்பத்தை அவர்கள் தாங்கித் தாங்கிப் பழக்கப்படுத்தும்படியாக ஆக்கப்பட்டு விட்டோம் என்பது இருக்கிறதே அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாய நலம் உள்ள ஒருவரை தந்தை பெரியார் எனக்கு அடையாளம் காட்டினார் என்று சொன்னால் பணி தொடருவதற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லி இந்த நேரத்திலாவது நான் என் இணையருக்கு நன்றி காட்ட வேண்டும் என்ற தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வரிகளைப் படித்ததும் ஒரே பூரிப்பாயும் இன்பமாயும் இருந்தது. (நன்றி: விடுதலை நாளிதழ் 24.8.95)

அன்றையக் காலத்தில் பெண்ணே பெண்ணைப் புகழ்ந்தாலும் ஆடவர் யாராவது வேறொரு பெண்ணைப் புகழ்ந்தாலும் பெண் வர்க்கம் சகித்துக் கொள்ளாது என்ற நிலைமை இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு பெண்கள் பொறுமையின் சிகரம் என்று வர்ணித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையின் உருவமாக வும் இருந்தார்கள். ஆனால் இன்று பொறுமையும் அவளை விட்டுப் போய்விட்டது; பொறாமையும் போய்விட்டது என்றே கூறலாம். காரணம் இன்று பகுத்தறிவுப் பகலவன் வித்திட்ட விழிப்புணர்வால் ஆணுக்குச் சரிநிகராக வந்துவிட்டாள். இருந்தா லும் இன்றும் அவளிடம் ஒரு ஏக்க உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.

தான் செய்த செயல்கள் சரியா? சரியற்றதா? தானே அதற்கு மதிப்பெண்கள் போடுவதைக் காட்டிலும், தனக்குகந்தவர்கள் மதிப்பளிப்பதில் தான் மகிழ்ச்சியும் மனநிறைவும், மேன்மேலும் தன்னை அச்செயலுக்கு ஈடுகொடுக்க ஆயத்த மாகும் நிலை உண்டாக்கும். இது நாடு நலம் பெறத் துடிக்கும் எல்லோர்க்கும் பொருந்தும்.

அடிமைப்பட்ட பெண்ணினம்; அடிவாங்கிய பெண்ணினம்; அச்சுறுத்தலுக்கு அடங்கிய பெண்ணினம்; இப்படி வாழ்ந்த இனம் இன்று நாடு நலம் பேண, துணைவனுக்கு துணையாய் இருந்து; தலைவனை தரணி போற்றும்போது, தலைவியை தலைவன் போற்றுவது பெருந்தன்மை நிறைந்த கடமை என்று எண்ணி இனமானக் காவலரின் பெருந்தன்மை நிறைந்த உள்ளுணர்வை போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. திராவிடர் கழகத் தலைவரும் நம் குடும்பத் தலைவரும் விடுதலை நாளிதழின் ஆசிரியருமான மானமிகு கி. வீரமணி அவர்களின் பாராட்டுகள் அவரின் இணையர்க்கு மட்டும் கிடைத்தவையாக கருதவில்லை. பெண்ணினத்திற்கே கிட்டிய பாராட்டுகள் என்றே எடுத்துக் கொண்டு பெருமைப்படுகிறோம்.

எண்பதாம் அகவை விழா கொண்டாடும் இந்நாளில் மகளிர் சார்பில் பொங்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தமிழ் ஓவியா said...


ஒரு துளிச் சந்தேகமும் இல்லை


- டாக்டர் கலைஞர்

எனக்கு, என்னுடைய ஆட்சிக்கு நான் எடுத்து வைக்கின்ற சாதனைகளுக்கு எதிர்ப்புகள் எங்கிருந்து தோன்றினாலும், அந்த நேரத்திலே மனம் சற்று சலிப்புறுமேயானால், அந்தச் சலிப்பை நீக்குகின்ற மாமருந்தாக எனக்குத் தோன்றுகின்ற இப்பெரியார் திடல், திருச்சியில் பெரியார் மாளிகை, வீரமணி அவர்களுடைய உருவம் இவர்களெல்லாம் நமக்காக இருக்கும்போது திராவிட இயக்கம் நம்மைப் பெற்றெடுத்த வீடு! திராவிட இயக்கம் நாம் தவழ்ந்து வந்திட்ட தாழ்வாரம்! திராவிட இயக்கம் நம்முடைய கைவேல்! திராவிட இயக்கம் நமக்குக் கவசம்! திராவிட இயக்கம்தான் உயிர்மூச்சு! திராவிட இயக்கத்தினுடைய முதல் போர்வாளாக, முதல் பாதுகாவலனாக, நமக்குத் திராவிடர் கழகம் இருக்கும்போது, நான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்ற உறுதியை நான் எப்பொழுதும் பெற்றிருப்பவன்.

சில நேரங்களிலே சில அபிப்பிராயப் பேதங்கள் வரலாம். அந்த அபிப்பிராயப் பேதங்கள்கூடக் கொள்கை அடிப்படையிலே வந்ததே தவிர, உறவு அடிப்படையில் வந்தது அல்ல. கொள்கை அடிப்படையில் வந்ததென்றால், இந்தக் கொள்கையை எப்படி நிலைநாட்டுவது, எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற அந்த வழிமுறைகளிலே வேண்டுமானால், கருத்து வேறுபாடுகள் வரலாமே தவிர அந்தக் கொள்கையே சரியா? அல்லவா? என்று என்றைக்கும் எனக்கும், நம்முடைய வீரமணியார் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே கிடையாது. வரவே வராது. தமிழர்கள் அதை வரவும் விடமாட்டார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த இயக்கங்கள் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புறத்திலே சமுதாயப் பணிகளை ஆற்றிக் கொண்டு இன்னொரு புறத்திலே அரசியல் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாய இயக்கமாகவும் கொள்ளப்படும். திராவிடர் கழகம் அரசியல் இயக்கமாகவும் இயங்கும். இவை இரண்டுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இவை இரண்டினுடைய தாத்பர்யம் இவற்றின் மூலநோக்கம் திராவிடர்களை வாழ வைப்பது, திராவிடர்களை முன்னேற்றுவது, தமிழர்கள் சுயமரியாதைக் காரர்களாக என்றைக்கும் வாழ பாடுபடுவது, தன்மான சக்திகளாகத் தமிழர்கள் வாழவேண்டு மென்பதற்காகப் பாடுபடுவது என்பதுதான் இரண்டு இயக்கத்தினுடைய நோக்கங்கள் குறிக்கோள்கள். அந்தக் குறிக்கோள் நிறைவேறுமா? நடைபெறுமா? வெற்றி பெறுமா? என்று யாராவது எண்ணுவார் களேயானால், அதில் ஒரு துளிச் சந்தேகமும் இல்லை. அந்த ஒரு துளிச் சந்தே கமும் இன்றைய நிகழ்ச்சியை யாராவது உற்றுக் கவனித் தால் நிச்சயமாக நீங்கிவிடும். எனக்கு நீங்கிவிட்டது.

- (திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரையிலிருந்து, 11.11.2006)

தமிழ் ஓவியா said...


எதிர்கொண்ட அறைகூவல்கள்


அரசியல்வாதிகள் அன்றாடம் எதிர்கொள் ளும் அறைகூவல் இயல்பானது. ஆனால் சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் _அதாவது சவால்கள் அப்படியல்ல; வேறு பாடானவை.

தந்தை பெரியார் என்னும் மாபெரும் சமூக அறிவியலார் எதிர்கொண்ட சந்தித்த அறைகூவல் களை அவருடைய அடித்தோன்றல் அண்ணாவோ, அண்ணாவின் அரசியல் வாரிசு கலைஞரோ சந்திக்கவில்லை எனலாம். ஆனால்,
அந்தவகையில் தந்தை பெரியாரின் அடியொற் றியே நடைபோடும் அவருடைய இயக்க வழித் தோன்றல் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்திக்க நேர்ந்தது இயற்கையான வியப்பின் வெளிச்சக்குறி. ஆம்! தந்தை பெரியார் என்னென்ன போராட்டங் களை_போர்க்களங்களைச் சந்தித்தாரோ அவற்றை யெல்லாம் ஆசிரியர் ஒவ்வொன்றாக அவருடைய எண்பது அகவைக்குள் சந்தித்து வருகிறார், சந்தித்து வருகிறார்.

அர்னால்டு டாயின்பீ

இதற்குக் காரணம் என்ன? என்று சிந்திக்கையில் அர்னால்டு டாயின்பீ என்னும் மேலைநாட்டு வரலாற்று அறிஞர் எழுதிய ‘History of Civilization’ என்னும் நூலில் எடுத்துக்காட்டும் வரலாற்றுத் தத்துவம் நம்முன் நிற்கிறது. அது இதுதான்:

அறைகூவலும் எதிர்கொள்ளலும்

உலக நாகரிகங்களின் நீண்ட, நெடிய வரலாற்றை ஆய்வு செய்து அவர் எழுதிய கோட்பாடு ‘Challenge and Response’ என்பதாகும். அதாவது அறைகூவலும் எதிர்கொள்ளலும் என்பதாகும். அக்கோட்பாட் டின்படி அறைகூவல் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதனை எதிர்கொள்ளலும் அதிகமாகிறது.

சுருக்கமாகச் சொல்வதாயின் எதிர்ப்புகள் வலிமை அதிக வலிமை பெறும் அளவிற்கு அவற்றை எதிர்கொள்ளல் வலிமை பெறுகிறது. இதனை ஆசிரியரின் எண்பதாண்டுக்கால வாழ்வில் நாம் தொடர்ந்து காண்கிறோம்.

வாழ்க்கையே அறைகூவல்

ஆசிரியர் வாழ்க்கை என்பது ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை. இதுபோல் ஒளிவு மறைவில்லாத ஒரு வாழ்க்கையுடைய தலைவர் எவரேனும் இருக்கிறாரா என்று தேடிப்பார்த்தபோது அதிலும் பெரியார்தான் அவருக்கு முன் நிற்கிறார், வழிகாட்டுகிறார். அவருடைய குடும்பம் ஒன்றும் மிட்டா _ மிராசுதார் குடும்பம் அல்ல. எளிய குடும்பம்தான்.

இதைப் பெரியாரே விடுதலை (6-.6.1964) தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்.

பெரியார் வாய்மொழி

பெரியார் அய்யா சொல்கிறார் பெருமை பொங்க: அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்தநிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல் மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகரா கவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன் படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்.

அய்யாவின் அறைகூவல்

ஆகக் கல்வி கற்பதிலிருந்து வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டு, அதில் முன்னணியில் பொற்பதக்கம் பெற்றுத் தேர்வில் வெற்றி பெற்றுச் சட்டக் கல்வியி லும் முன்னணி நிலை வகித்து, சட்டத் தொழிலிலும் கடலூரில் முன்னணி நிலை வகித்தவருக்கு முதல் அறைகூவல் அவரை உருவாக்கிய பெரியார் ஒப்படைத்த விடுதலை ஏட்டைத் தூக்கி நிறுத்துவதில் தொடங்குகிறது. அந்த அறைகூவல் பெரியார் விடுத்த அறைகூவல், அய்ம்பதாண்டுக் கால அறைகூவல். அதை வெற்றிகொண்ட மாமனிதர் என்பதால் முதலில் தலைவணங்குகிறோம்.

தமிழ் ஓவியா said...

அம்மாவின் அறைகூவல்

இயக்கப் பேச்சாளர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருந்த அம்மா அன்னை மணியம் மையார் ஒரு பெறாத பிள்ளையாகக் கருதியதோடு, அள்ள அள்ளக் குறையாத அன்பையும், பாசத்தை யும் _ சிலர் பொறாமைப்படும் அளவிற்குக்கொட்டிய அம்மா அவர்களின் சொற்கள் ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட ஆணைகள் மட்டுமல்ல _ அறைகூவல்களும் கூட என்பேன்.

வீரமணி என்னைவிட அம்மா சொன்னால்தான் தட்டாமல் கேட்பான் என்று பெரியார் அய்யாவே சொல்லுமள விற்குரிய அந்த அன்னை விடுத்த அறைகூவல் 22.12.1977ல் வந்தது. எப்படி?

22.12.1977ல் திடீர் நெஞ்சு வலிக்கு ஆளான அன்னை மணியம்மையார் சென்னை பொதுமருத் துவமனையில் இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர். 25.12.1977 காலை 11 மணிக்குத் திராவிடர் கழக மய்ய நிருவாகக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அறிவிக்கப்பட்டு இருந்தபோது, மருத்துவர்களின் இசைவோடும், மருத்துவர்களின் துணையோடும் வருகை தந்து, தலைமை தாங்கி சிறிதுநேரம் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றியவர், தாம் எழுதி வைத்திருந்த குறிப்பினை, தாம் கழகப் பொறுப்பி லிருந்து விலகுவதாகவும், ஆசிரியர் வீரமணி அப்பொறுப்புகளை ஏற்று கழகத்தை நடத்த வேண்டும் என்று படித்தபோது, அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து, தலைமையிலிருந்து அன்னையார் விலகல் என்னும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக உரையாற்றி அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்த துணிவு, ஓர் அறைகூவலுக்கான பதில். அதனால் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் எண் 10 அன்னையார் அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஒப்புதல் தர நிறைவேறியது என்பது திராவிடர் கழக வரலாறு காட்டும் அறைகூவல்தான்.

அன்றும் என்றும் தலைமைப் பதவிக்குத் தாவிஓடாத, தாவிப்பிடித்து விடவேண்டும் என்னும் தணியாத ஆர்வம் ஏதும் இல்லாத போக்கு, இதற்கெல்லாம் காரணம் இவருக்கு மாறாத மனிதநேயம், மறையாத தன்னல மறுப்பு இவற்றைக் கற்றுத் தந்தவர் நம் தலைவர் தந்தை பெரியார் என்பதுதான்.

தமிழ் ஓவியா said...

விடுதலைக்கு அறைகூவல்

விடுதலையின் வளர்ச்சி என்பது ஒரு மாபெரும் அறைகூவல். விடுதலை என்பது வெறும் ஏடு அல்ல. விடுதலை என்பது பெரியார் ஒப்படைத்த மாபெரும் அறிவாயுதம் என்பதை உணர்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் ஆசிரியர் ஒருவர்தான். ஏனென்றால் விடுதலையின் வளர்ச்சிதான் நம் இனத்தின் எழுச்சி; அது இல்லையேல் நம் இன வீழ்ச்சி என்பதை உணர்ந்து வாழ்நாள் முழுமையும் விடுதலையை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் கொண்டு சேர்க்க எத்தகைய அறைகூவல்களையும் எதிர்கொண்டவர் அவர். இனமான எதிரிகள் நெருக்கடி காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளைத் தூள் தூளாக்கியவர் என்றும் கூறவேண்டும்.

சிறைக் கூவல்கள்

ஒரு சமூகப் புரட்சியாளரின் முன்னணித் தொண்டர் வாழ்வின் எண்பதாண்டுக் காலத்தில் தமிழர் நலன்களுக்காகச் சமூக நீதிக்காகவே போராட்டக் களத்தில் முன் நின்றிருக்கிறார் என்பது பெருமை. அதில் அய்ம்பதுக்கு மேற்பட்ட முறைகள் அரசின் கைதுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது பெருமைமிகு வரலாறு.

1956இல் முதன்முதலாக ராமன் பட எரிப்பில் கைதான வரலாறு _ 2012 வரை தொடர்கிறது. கைதுக்கு முற்றுப்புள்ளி இல்லை, இக்கழகத் தலைவருக்கு. கடைசியாகக் களம் கண்டது நெய்வேலியில் _ கைதானது நெய்வேலியில் _ அதுவும் தம்வாழ்விணையர் திருமதி மோகனா வீரமணி அவர்களையும் களத்தில் சேர்த்துக் கொண்ட பெருமைமிகு வரலாறு வேறு எவருக்கு வாய்க்கும்?

தமிழ் ஓவியா said...

நெய்வேலி நிலக்கரிக்கும், நரிமணம் பெட்ரோ லுக்கும் ராயல்டி கேட்டுப் போராடி வென்ற அத்தலைவர், காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா விற்கு, தமிழ் உழவர் வயிறு காயக் கழுத்தறுப்புச் செய்யும் கர்நாடகத்திற்குக் கடிவாளம் போடக் களமாக, நெய்வேலியைத் தேர்ந்தெடுத்து 15.10.2012இல் வாழ்விணையரோடு போராட்டக் களத்தில் அறைகூவலைச் சந்தித்துத் தொண்டரோடு தொண்டராய் எளிய உணவு உண்டு ஓர் அறைகூவலை எதிர்கொண்டார்.
காலையில் கைதாகி மாலையில் விடுதலை ஆகாமல் காராக்கிரகக் கம்பிகளுக்குள் இருந்த சோதனை நாட்களும் உண்டு. அதில் சோதனை மிகுந்த சிறை வாழ்க்கையை எவ்விதப் போராட்டங் களும் தவறுகளும், குற்றங்களும் இழைத்திடாது, சுயமரியாதை வீரராய் வாழ்ந்ததற்காகவே மிசாக் கைதியாக 3.1.1976 முதல் 23.1.1977 வரை ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்த கொடுமையான அனுப வமும் மறக்க முடியாத, மறுக்க முடியாத அறை கூவல். அதைப்பற்றிக் கேள்விப்படுவோர் நெஞ்சம் நடுங்கும், வேதனைத் தீயில் மூழ்கித் திளைக்கும் _ காரணமானவர் மீது வெறுப்பு அகலவிடாது.

அடுத்த சிறை வாழ்வு 22.3.1979 முதல் 4.4.1979 வரை சென்னை மய்யச் சிறையில். அன்னை நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தானக் கவியை எதிர்த்த அறப்போராட்டம் அளித்த பரிசாகும்.

காவிரி நீருக்கு இன்று மட்டுமல்ல, 27 ஆண்டுகளுக்கு முன்னே போராடிச் சிறைப்பட்டவர் ஆசிரியர். திருவாரூர் வட்ட ஆட்சியர் முன் மறியல் செய்து திருச்சி சிறையில் 30.10.1985 முதல் இருந்தார்.

1986ல் புதிய கல்வித் திட்ட நகலை எரித்ததால் 22.6.1986 முதல் 4.7.1986 வரை மீண்டும் சென்னை மய்யச் சிறை வரவேற்றது. நல்லவேளை மிசாக் கொடுமை அரங்கேறிடவில்லை இப்போது என்பது நமக்கெல்லாம் ஆறுதல்.
சென்னைத் தொலைக்காட்சி, தொல்லைக் காட்சியாகத் தமிழர் வாழ்வில் பலமுறை விளங்கியதுபோல. ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்ய, அதனை முறியடிக்கத் தொடர்வண்டி மறியல் மேற்கொண்டு 26.10.1987 முதல் 4.11.1987 வரை சென்னை மய்யச் சிறையில்.

இதையடுத்துப் பதினைந்து நாள் சிறைவாழ்வு ஏகியது வேலூரில். சமூகநீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவி எரித்துச் சென்னையில் கைது செய்து வேலூரில் 15 நாள் சிறை வைத்தனர்.

இவ்வாறு சிறை சென்று சமூக நீதிக்-கு எதிரான எந்த அறைகூவலையும் எதிர்கொள்ளத் தயங்கியதில்லை.

தமிழ் ஓவியா said...

அறக்கட்டளைக்கு அறைகூவல்

1952இல் தந்தை பெரியார் உருவாக்கிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளை துரோகிகள், எதிரிகள் கண்களை உறுத்தியது. இன்றைக்குப் பெருமையாகப் பெரியார் திடல் செல்கிறோம் என்று கூறுகிறோமே அந்தத் திடல் உள்ளிட்ட அறக்கட்டளைக்கு _ அய்யா காலத்தில் தொடங்கி, அன்னையார் காலத்தில் முடிந்து, ஆசிரியர் காலத்தில் தொடர்ந்த வருமானவரி வழக்கு _ ரூ. 80 லட்சம் வருமான வரி என்று வளர்ந்தது வேறு. அறக்கட்டளைக்கு ஏற்பட்ட அறைகூவலை வீரமணி அவர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்று 80 ஜி எனும் நன்கொடை வரிவிலக்குப் பெற்றதும் பெருமைமிகு அரிய சாதனை மட்டுமல்ல _ அறைகூவல்களுக்கு எதிர்கூவலாகும்.
எம்.ஜி.ஆர் அறைகூவலும் ஈர்ப்பும்

எதிலும், எப்போதும் வெற்றி என்றே கூறப்பட்ட எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானபோது தவறான அணுகுமுறை ஒன்றை மேற்கொண்டார். இடஒதுக்கீட்டிலே வருமான வரம்பு எனும் அளவுகோலைத் திணித்து 2.7.1979இல் அரசாணை பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து முதல் அறிக்கை விட்டவர் வீரமணி. (3.7.79) வெறும் அறிக்கை வீரரல்லர் அவர் என்பதால் 4.7.79இல் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம். 14.7.1979இல் சேலத்திலும், சென்னையில் 22.7.1979லும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகாப்பு மாநாடு, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம், 26.11.1979ல் வருமான வரம்பு அளவுகோல் ஆணை தீயிட்டுப் பொசுக்கல் என்று வரிசையாக நிகழ்வுகள் நடந்ததன் விளைவு, தோல்வி காணாத எம்.ஜி.ஆரின் கட்சி 1980 ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

எனது ஆட்சி இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்று வீரமணி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்தார் என்று எம்.ஜி.ஆர். ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததோடு 21.1.1980ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அதில் வீரமணி அவர்களே பேசினால் போதும் என்று கூறி 45 நிமிடம் அவர் விளக்கிப் பேச 21.1.1980ல் அரசாணையை எம்.ஜி.ஆர் அரசு திரும்பப் பெற்றது எம்.ஜி.ஆரின் அறைகூவலை எதிர்கொண்ட வரலாறு.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை

எம்.ஜி.ஆர். அரசு, அரசாணையைத் திரும்பப் பெற்றது என்று மட்டும் முடித்துக்கொள்ளக் கூடாது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பின் இயக்கத் தலைமைப் பொறுப்பேற்ற ஆசிரியர், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆட்படாமல் செய்து முடிப்போம் என்று சூளுரைத்து 14.7.1979ல் சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு நடத்தி அதிலே இடஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எம்.ஜி.ஆர் 1980 ஜனவரியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தியதையும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 69 விழுக்காடாக்கியதையும் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை எனவும், அதற்குக் காரணமானவர் ஆசிரியர் வீரமணி என்பதையும் பதிவு செய்வோம்.
அறியாமைச் சேற்றில் அல்பர்கள்

தமிழ் ஓவியா said...


31 சி சட்டத்தை 9ஆவது அட்டவணையில் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் சேர்த்திட மேற்கொண்ட முயற்சியையும், அதன் பயனாய்ச் சமூகநீதி காத்த வீராங்கனை என அழைத்ததையும், நன்கு ஆழமாகச் சிந்தித்து அதன் பின்னணியையும் சிறப்பையும் உணராத அற்ப மானிடர் சிலர் அறியாமைச் சேற்றில் விழுந்து இன்றும் நமுட்டாக ஆசிரியரை அறியாமையால் விமரிசிப்பது உண்டு. எனவே எத்தகைய அறைகூவலுக்கு இடையில் 31 சி சட்டம் 9ஆவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பதை விளக்குவோம்.

இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடு தரக் கூடாதென தடை விதித்திட, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு 50ஆகக் குறைத்து 19 விழுக்காடு இழக்கவேண்டிய ஆபத்து உருவாயிற்று. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.என். வெங்கடாசலய்யா, அகர்வால் ஆகியோர் இடைக்காலத் தடை ஆணை விதித்தனர்.

தமிழ் ஓவியா said...

சமூக நீதிக்கு ஆபத்து என்றால் துடித்தெழும் முதல் மாமனிதர் ஆசிரியர் வீரமணிதான். எனவே 1993 செப்டம்பர் முதல் நாள் அந்த ஆணையைக் கொளுத்தினார். இந்தச் சமூக நீதிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களைய வழிதேடினார். இந்திய அரசமைப்புச் சட்டம் 31 சி பிரிவின் கீழ் மாநிலச் சட்டப் பேரவை ஒரு சட்டம் நிறைவேற்றி அதற்குக் குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிடும். இது ஒன்றுதான் தீர்வு.

அப்போது ஆட்சியில் இருந்ததோ செல்வி ஜெயலலிதா. இந்தியத் தலைமை அமைச்சரோ பி.வி. நரசிம்மராவ், ஒப்புதல் அளிக்க வேண்டிய குடிஅரசுத் தலைவரோ சங்கர் தயாள் சர்மா. இது நடக்கக் கூடியதா? என்று பலரும் அய்யுற்றனர். ஏனெனில் மேலே குறிப்பிட்ட மூவரும் பார்ப்பனர்.

இந்நிலையில் இந்த அறைகூவலை வீரமணி எதிர்கொண்டு வென்றார் என்றால் அது சாமானியமானதா? அரசின் சட்டத்துறை செய்ய வேண்டிய பணியான சட்டமுன் வரைவை உருவாக்கும் பணியினை _ 31 சி சட்ட வரைவினை உருவாக்குதலை 17.11.1993ல் செய்து முடித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி 26.11.1993ல் அதனை விளக்கினார். ஆசிரியர் வீரமணி எடுத்துரைத்த நியாயத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றார். ஏற்றதோடு 31 சி சட்டமுன்வரைவு 30.12.1993ல் தமிழகச் சட்டப் பேரவையில் அறிமுகம் ஆகியது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவரை அதற்கு ஒப்புதல் அளிக்க 7.2.1994ல் தந்திகள் அனுப்புமாறு மக்களை வேண்டினார். 31 சி பிரிவுக்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா ஒப்புதல் வழங்கினார். அதனை 9ஆவது அட்டவணையில் சேர்த்திடப் போராடி வீரமணி அவர்கள் வெற்றிமணி ஆனார். மூன்று முதன்மைப் பொறுப்புகளில் பார்ப்பனர் வகுப்பினர் இருந்த நிலையில் 31 சி சட்டத்தை நிறைவேற்றி 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் அறைகூவலில் வெற்றி பெற்றார்.

மண்டல்குழு

மண்டல் குழு அறிக்கை கிடப்பில் கிடந்ததற்கு உயிர் கொடுக்க வகை செய்தவர் ஆசிரியர். 25.2.1982ல் தலைமை அமைச்சருக்குத் தந்தி அனுப்பினர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதுடன் அதனை நடைமுறைப் படுத்திட இடைவிடாமல் போராடிய மாவீரர். நடத்திய போராட்டங்கள் மட்டுமே 16. மாநாடுகள் மட்டுமே 42. பத்தாண்டுக் காலம் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், மாநாடுகள், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், தந்திகள், நேர்முகங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனை. 8.8.1990ல் நடைமுறைக்கு மண்டல் அறிக்கை வந்தது நடைமுறையில்.

தமிழ் ஓவியா said...

நெஞ்சில் தைத்தமுள்

1970ஆம் ஆண்டு டிசம்பர் 2இல் நம் தமிழர் தலைவர் பிறந்த நாளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்றியது கலைஞர் அரசு. ஆனால் பெரியாரின் லட்சியக் கனவு நிறைவேறிடவில்லை. பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படவில்லை. 2006இல் மே மாதம் மீண்டும் கலைஞர் ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேறியது. இன்றும் ஆதிக்க சக்திகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

கல்வி அறைகூவல்

சமூக மாற்றத்திற்குக் கல்வி முதன்மைக் கருவி என்று முழுமையாக நம்பிய பெரியாரின் வழியில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் வழங்கிய 100 பவுன் தங்கத்தைப் பெரியார் நூற்றாண்டு மகளிர் பல்தொழில் நுட்பப் பள்ளியாக உருவாக்கியவர். கல்வி வரலாற்றில் எதிர்கொண்ட அறைகூவலின் வெற்றிக்கனிதான் தஞ்சைத் தரணியில் தலைநிமிர்ந்து பெரியார் _ மணியம்மையார் பெயர் சொல்லும் தந்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்.

தனக்கு ஏற்பட்ட சோதனை

சமூகத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்டு சாதித்த ஆசிரியர். 1982ல், (20.7.1982ல்) இராசபாளையத்தை அடுத்த மம்சாபுரம் புதுப்பட்டியில் பார்ப்பனரால் தூண்டிவிடப்பட்ட சில துரோகிகளால் தாக்கப்பட்டபோதும், 11.4.1985ல் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் எதிரிகளால் கொலைமுயற்சிக்கு ஆளானபோதும், 27.4.1985ல் மீண்டும் கொலை முயற்சிக்கு ஆளானபோதும், 1987இல் சேலம் தம்மம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் 28.8.87இல் தாக்கப்பட்டபோதும், 2011இல் சென்னையில் விருகம்பாக்கத்தில் தாக்குதல் முயற்சிக்கு ஆளானபோதும் அத்தனை அறைகூவல் களையும் துச்சமென உதறித் தன்பயணத்தைத் தொடர்கிறார்.

இத்தனைக்கும் இரண்டு முறை இருதய நோய்க்கு ஆட்பட்டவர். இந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் தன்நலனுக்கு ஏற்பட்ட அறைகூவல்களை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார்.

எனவே இவருடைய வாழ்க்கை _ 11 வயதில் தொடங்கியது 69 ஆண்டுகளாகத் தொடர்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகளையும் அரவணைப்பையும் மிகச் சிறுவயதிலேயே பெற்று வளர்ந்தவர் ஆசிரியர். தலைவர் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத்தை வலிவோடும் பொலிவோடும் வழிநடத்திச் செல்லுவதில் வல்லவராக, தந்தை பெரியார் அவர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும் தளகர்த்தராகத் திகழ்கிறார் என்று கூறி உழைப்பும், தொண்டும் தொடர 75ஆம் அகவையில் வாழ்த்திய தோடு, அறைகூவல்களை எதிர்த்து நின்று வென்று வீரமணியாகவும், வெற்றிமணியாகவும் விளங்குகிறார் என்பதையும் சேர்த்திட வேண்டும்.

- பேரா.ந.க.மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...


அய்யாவின் பாதையிலே

அடியொற்றும் தலை மகனே

பொய்யர்களின் வேரறுக்க

புறப்பட்ட கதிரவனே

கண் தூங்க நினைத்திடாது

காரியங்கள் புரிபவனே

பெண் வாழ்வு செழித்து ஓங்க

போராடும் முதல் மகனே

கருஞ்சட்டைக் காவலனே

கண்ணீரைத் துடைப்பவனே

பெரும்படை நடத்துகின்ற

பேராண்மை படைத்தவனே...!

நீ போர்ப் பரணி, பெண்ணினம் லட்சியம் வென்றிட நித்தமும் முழங்கிடும் போர்ப் பரணி.

நீ வீரத்துணி, பெண் மகள் சிந்திடும் கண்ணீரை முழுதாய் துடைத்திடும் வீரத் துணி.

நாங்கள் எங்கெங்கும் வெற்றியை என்றென்றும் பெற்றிட நித்தமும் உழைத்திடும் நெடு நிழலே!

நீங்கள் கண்டங்கள் யாவையும் காணுங்கள் கல்வியால் என்றெம்மை

நிமிர்த்திடும் புதுப் பகலே!

தடம் மாறிப் பொழியாத தொடர் மழையே!

பெண் வென்றிட வழி சொல்லும் கலங்கரையே!

பெண் பழுதில்லை என்ற எங்கள் பேதத்தை போக்கிட எழுகின்ற அய்யாவின் ஆவேசம்!

பெண் சிலையில்லை என்றெம்மை சிந்திக்க தூண்டிட வருகின்ற வரலாறு உனைப் பேசும் நாங்கள் பட்டங்கள் வாங்கவும்,

பாரினை தாங்கவும், திட்டங்கள் தீட்டிடும் தீ பிழம்பு

நீங்கள் எட்டுங்கள் வானினை என்ற எங்கள் தேம்பலை சட்டென்று நீக்கிடும் ஆண் சிலம்பு சமநீதி காக்கின்ற சர வெடி!

பெண் சமத்துவம் கேட்கின்ற முகவரி!

- யுகபாரதி

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்


தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் இயக்கத் தலைவர், பத்திரிகையாசிரியர் என்ற எல்லையுடன் இயங்குபவர் அல்லர். அவர் பலதுறைகளிலும் அறிவு பெற்ற ஓர் அற்புத அறிவுக் களஞ்சியம்.

அயராது பல்துறை அறிவைத் திரட்டி தன்னுள் தயார் நிலையில் வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம். அவரோடு பேசுகின்ற எவரும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அவருடன் வாகனத்தில் பயணம் செய்யும்போது, பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பேச்சிலும் ஏதாவது ஒரு அரிய செய்தி கிடைக்கும். அத்தனையும் அரிய முத்துக்களாயும் இருக்கும்.

நான் 1979இல் இயக்கத்தில் இணைந்தேன். 1981 முதல் 2011 வரை ஆசிரியர் பணி. எனவே, அவரோடு பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு மிக அரிதாகவே கிடைத்தது. என்றாலும், அந்த சில வாய்ப்புகளில் நான் அறிந்தவை வாழ்நாள் எல்லாம் கடைப்பிடிக்க உகந்தவை; கடைப்பிடித்தும் வருகிறேன். அவற்றை இங்கே குறிப்பிடுவது அனைவருக்கும் நலம் பயக்கும் என்பதால் எழுதுகிறேன்.

சிதம்பரத்திலிருந்து நெய்வேலி நோக்கி தமிழர் தலைவருடன் பயணித்தேன். வடலூர் நெருங்கும்போது ஓர் உன்னதக் கருத்தைச் சொன்னார். படுத்து உறங்குவது சார்ந்து பேச்சு வந்தது. அப்போது தலைக்கு வைக்கும் தலையணை எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றிக் கூறினார். தலைக்கு வைக்கும் தலையணை அதிக தடிமன் இல்லாமல் 2 அங்குல உயரம் (தடிமன்) உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் கழுத்துக்கும், மூளைக்கும் நலம் தரும் என்றார்கள்.

அன்றையிலிருந்து 2 அங்குலத்தில் என் தலையணை மாற்றப்பட்டது. உண்மையில் அதன்பிறகு கழுத்துக்கும் மூளைக்கும் இதம், சுகம், நலம். அனுபவத்தில் என்னால் இப்பயன்களை அறிய முடிந்தது. சுமார் 33 ஆண்டுகள் நிம்மதியாய் தூங்குகிறேன். அதற்குமுன் தடித்த தலையணையைத் தேடியது அறியாமை என்பதையும் அறிந்தேன்.

தமிழ் ஓவியா said...

அதே பயணத்தில் நெய்வேலியை நெருங்குவதற் குள் உண்பது சார்ந்து ஒரு செய்தி சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மாதுளை. அதுவும் வெள்ளை மாதுளை உண்பது மிகவும் சிறந்தது என்னும் குறிப்பைச் சொன்னார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மாதுளை உண்ண ஒருநாளும் நான் தவறுவது இல்லை. மாதுளை குடலுக்கு நல்லது;

மூலநோய் வராது; வயிற்றுக் கடுப்பு நீங்கும், குடல் புண் வரவே வராது. உண்மையாகச் சொல்கிறேன். 33 ஆண்டுகளில் எனக்கு வயிற்றுப் பிரச்னை வந்ததே இல்லை! மாதுளை ஓர் உயர்ந்த பழம். குடல், உடல் இரண்டுக் கும் நலம் பயக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். கிடைக்காத காலத்திலும் அதிக விலை கொடுத்தாவது மாதுளையை வாங்கிச் சாப்பிட நான் தவறுவதே இல்லை.
இன்னொரு முறை ஆசிரியருடன் பயணம் செய்தபோது, பப்பாளி பழம் பற்றிய பேச்சு வந்தது.

ஒவ்வொரு நாளும் பப்பாளியை உண்ண வேண்டியதன் அவசியத்தைச் சொன்னார்கள். இரவில் அளவோடு பப்பாளி பழத்தை உண்டு ஒரு டம்ளர் பால் பருகிவந்தால், மலச்சிக்கலே வராது; கண்ணின் மணி ஒளி பெறும், இதயத்திற்கு வலு சேர்க்கும் என்றார்கள். சுமார் 25 ஆண்டுகள் ஆசிரியர் கூறியபடி பப்பாளியும் தவறாது சாப்பிட்டு வருகிறேன். மலச்சிக்கல் இல்லை; இதயம் வலுவாகவுள்ளது; கண் சோதனையிலும் கண்ணின் பார்வைத் திறன் சிறப்பாகவுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியருடன் சிதம்பரத்தில் வேனில் சென்றேன். வேன் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் (எதிரில்) நின்றது. பேருந்து நிலைய கட்டட முகப்பு கோயில் கோபுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, மதச்சார்பற்ற அரசு இப்படி இந்துக் கோயில் சின்னத்தை வைக்கலாமா? நாம் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றேன்.

அதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எது முதன்மைப் பிரச்னையோ அதையே கையில் எடுக்க வேண்டும். பலவற்றை நாம் எதிர்க்க வேண்டிய நிலையில், எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால் நம்முடைய ஆற்றல் சிதறும். நம் ஆற்றலை முதன்மை இலக்கு நோக்கி குவிக்க வேண்டும். அதுதான் இயக்க போராட்ட அணுகுமுறை என்றார்கள்.

அன்று அவர் கொடுத்த அரிய கருத்து, தலைமையாசிரியராய், நிர்வாகியாய் நின்று ஒரு பெரும் கல்வி நிறுவனத்தை நடத்த எனக்கு மிகவும் பயன்பட்டது. ஒவ்வொரு நாளும் பல சிக்கல்கள், எதிர்ப்புகள், எதிர்க்க வேண்டியவைகள் வரும்போதெல்லாம், ஆசிரியர் வழிகாட்டலின்படி முதன்மையானதில் கவனத்தைச் செலுத்தி வெற்றியை எட்டினேன், எய்தினேன். நானும் பலருக்கும் இச்செய்திகளைச் சொன்னேன்.

1981இல் எனது திருமணத்தை நடத்திவைக்க ஆசிரியரிடம் தேதி கேட்டேன். உங்களுக்கு சிதம்பரம் பகுதியில் நிகழ்ச்சியிருக்கும்போது கொடுத்தால் போதும் என்றேன். செவ்வாய்கிழமை ஜூன் 1ஆம் தேதி கொடுத்தார்கள். திருமணம் 10 மணி முதல் 12 மணி வரை வைத்துக்கொள்ளலாம் என்றேன், ஆசிரியர் புறப்பட்டு வர வசதியாய் இருக்கும் என்பதால். வேண்டாம் காலை 7.30 முதல் 8.30க்குள் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, 10 மணிக்குள் திருமணத்தை முடித்துவிடுங்கள். மதியம் சாப்பாட்டுச் செலவை மிச்சப்படுத்தலாம் என்றார். உங்களுக்கு சிரமமாக இருக்குமே என்றேன். நான் இரவு பங்களாவில் தங்கிக் கொள்கிறேன். நெ.து. சுந்தரவடிவேலு அவர்களும் காலை 6 மணிக்கு வந்துவிடுவார். அவரையும் நேரத்தில் அனுப்பி விடலாம் என்றார்கள்.

ஆக, ஒரு நிகழ்வைத் திட்டமிடும்போது சிக்கனம், பலருக்கும் வசதி என்று பலவற்றைச் சிந்தித்து, தொண்டர் வீட்டு நிகழ்ச்சியையும் தன் வீட்டு நிகழ்வாக, நம் குடும்பத்து உறுப்பினரில் ஒருவராக நின்று சிந்தித்து ஆலோசனை வழங்கும் அரிய பண்பிற்குரியவர் ஆசிரியர் அவர்கள். அதனால்தான் அவர் தமிழர்களின் தலைவர்! தமிழ்க் குடும்பங்களுக்கெல்லாம் அவர்தான் ஆசான்! ஆம்; உண்மையான ஆசான்! காரணம், அவர் ஓர் அறிவுக் களஞ்சியம். தமிழர்கள் அக்களஞ்சியத்தில் எவ்வளவு பெறுகிறார்களோ அவ்வளவு உயரலாம்!

வாழ்க தமிழர் தலைவர்!

- மஞ்சைவசந்தன்

தமிழ் ஓவியா said...

தொண்டு செய்து பழுத்தவரின் ரெண்டாம் பாகமே


தொண்டு செய்து பழுத்தவரின் ரெண்டாம் பாகமே

தாகம் கொண்ட தமிழருக்கு எல்லாம் தண்ணீர் மேகமே

பகுத்தறிவு உங்க பள்ளிகூடம்

கருப்புச் சட்ட உங்க சீருட

அய்யா ஒங்க வாத்தியாரு

அய்யா உங்கள போல வேற யாரு?

ஆதி சிவன் உச்சியிலே கங்கை இருக்குதாம்,

அது தமிழ் நாட்டு மக்களோட தாகம் தீர்க்குமா?

ஏழாவது அவதாரமா ராமன் இருக்குறானாம்,

அது ஆறாவது அறிவுக்கு ஒத்து போகுமா?

மதம் பிடிச்ச மனுசனுக்கு நாடு தேவையா?

ஒரு மத யானை வாழ்வதுக்கு கூடு தேவையா?

மானமிகு அய்யாவோட மழையில் ஆடுவோம்

ஒரு மாற்று சக்தி வேண்டும் என்று ஒன்றாய் கூடுவோம்.

கருப்பு கொடியில் சிவப்ப தொட்டு ஒரு கலகம் செய்து உலகை எட்டு..

அடடா, சானத்துல புள்ளையார புடிச்சு வக்கிறான்

அந்த புள்ளையாரு தொப்பையில புள்ள பொறக்குமா?

நாக்கு மேல வேல குத்தி அய்யோ பிச்ச எடுக்குறான்

நம்ம உடன் பிறந்த தாய் மொழிய ஊமையாக்குறான்

ஆகமத்த சொல்லி சொல்லி அடிமையாக்குறான்

நம் மானமுல்ல தமிழினத்த மடமையாக்குறான்

ஆசிரியர் தலைமையில அலையென எழுந்திடுவோம்

உயர் நிலையான சிந்தனையை நிலத்தில் உழுதிடுவோம்

கருப்பு கொடியில் சிவப்ப தொட்டு ஒரு கலகம் செய்து உலகை எட்டு.

- கபிலன்

தமிழ் ஓவியா said...

என்றும் இளைஞர்


நம் ஆசிரியருக்கு வயது எண்பது என்பது நம்மைப் போலவே பலராலும் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் உண்மை. இந்தக் காலத்தில் 70 ஆண்டுக்காலமாகப் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பொதுவாழ்வு என்றால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து (சாய்ந்து) அல்ல. DEMAGOGUE என ஆங்கிலத்தில் கூறுவார் கள்; அப்படிப்பட்ட வல்லமைமிக்க சொற்பொழி வாளர்களையும் அச்சொல் குறிக்கும். அந்த வகையிலும் இவர் விளங்குகிறார். 1933இல் டிசம்பரில் பிறந்திருந்தாலும் 1943 ஜூன் திங்களிலேயே மேடையேறிப் பேசத் தொடங்கியவர். சரியாகச் சொன்னால் மேசையேறிப் பேசத் தொடங்கிவிட்டவர்.

அவருடைய 70 ஆண்டு மேடைப் பேச்சு ஆய்வுக்குரியதாகவே ஓர் ஆய்வாளரால் (முனைவர் நம். சீனுவாசன், மதுரை) எடுத்துக் கொள்ளப்பட்டு நூலாகவும் வெளிவந்து பலருக்கும் பயனளிக்கிறது. எங்கே பேசுகிறோம், அவையோர் எத்தகையவர்கள், என்ன பேசப் போகிறோம் என்பன போன்றவற்றை எண்ணி எண்ணி, அவற்றிற்கான குறிப்புகளைத் தயாரித்துச் சிறந்த கருத்துச் செறிவுள்ள சொற் பெருக்காக ஆற்றும் அவரது ஆற்றல் பலராலும் போற்றப்படுகிறது; பின்பற்றப்படுகிறது. எதையாவது பேசிவிட்டுப் போவது என்பது போலன்றி, எதைப் பேசினாலும் ஆதாரத்துடன் பேசுகிறார் என்ற எண்ணம் உருவாகும் வகையில் அதற்கான ஆதார நூல்களை எடுத்துக்காட்டிப் பேசும் முறை கலைஞர் அவர்களாலேயே பாராட்டப்பட்ட ஒன்று.

தமிழ் ஓவியா said...

100 மீட்டர், 200 மீட்டர் தூரம் போன்று குறுகிய ஓட்டக்காரர்களுக்குத் தேவைப்படும் திறமை, நெடுந்தூர ஓட்டக்காரர்களுக்குத் தேவையான திறமையிலிருந்து மாறுபட்டது. இத்தகைய திறமைகளை மூளையின் ஊக்கம் விளைவிக்கின்றது என்பார்கள். ஒரு துறையிலோ சில துறைகளிலோ மேம்பட்டு ஒளிர்வதைத்தான் கருவிலே திரு என்கிறார்கள். அத்தகைய மேதைமை நம் ஆசிரியரிடம் சிறப்பாக அமைந்து இருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும்.

அவருடைய, அத்தகைய பேராற்றல் -_ பேச்சாற்றல் _ அவர்தம் தாய்மொழியாம் தமிழில் அமைந்திருப்பது வியப்புக்குரியதன்று என நினைத்திடும் வகையில், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நாடுகளில் அவர் இங்கிலீஷ் மொழியில் உரையாற்றுவதைக் கேட்கும்போது _ அறியும்போது _ எவருக்கும் ஏற்படும்.

அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற _ பரப்பிக் கொண்டிருக்கிற _ கொள்கையை விவரிக்கும்போது எவருக்கும் அஞ்சாமல் கருத்துகளைத் துணிவுடன் வெளிப்படுத்தும் பாங்கு தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் வெளிவருவதை “RELIGIOUS FAITH IS USED AS A PSYCHOLOGICAL FORCE BY THE MINORITY BRAHMINICAL CASTES TO KEEP THE VAST MAJORITY OF LOWER CASTES SUBSERVIENT AND SUBJUGATED...” என்கிற சொற்களைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். பகுத்தறிவாளர் அமைப்புகளின் இந்தியக் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டில் ஆசிரியர் நிகழ்த்திய உரையில், மத நம்பிக்கையை மனரீதியிலான பெரும் சக்தியாக, மிகச் சிறுபான்மையராக இருக்கும் பார்ப்பனர்கள் மிகப் பெரும்பான்மையராக இருப்பினும் கீழ்ப்படியும்படிச் செய்யப்பட்ட கீழ் ஜாதியினரிடம் பிரயோகிக் கின்றனர் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதிலே வியப்புக்குரியது என்னவென்றால் மேற்கண்ட அமைப்பில் பார்ப்பனர்களும் இடம் பெற்றிருக் கிறார்கள் என்பதுதான்.

நயம்பட உரைப்பவர் என்றாலும் பயமின்றி உரைப்பவர் நம் ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...

இந்திய மக்களை விவரிக்கும்போது படித்தவர், பாதிப் படித்தவர், படிக்காதவர் என்று பாகுபாடு செய்வார் குஷ்வந்த் சிங். இவர் உலகப் புகழ்பெற்ற இங்கிலீசில் எழுதும் இந்திய எழுத்தாளர். ஆனால் நம் ஆசிரியரோ படித்தவர், முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு பெறாதோர் என்ற அளவில்தான் ஆங்கிலச் சொற்களைக் கையாண்டு மக்களைப் பிரிக்கிறார். இந்த நயம்பட உரைக்கும் தன்மை பலராலும் பாராட்டப் பெறுகிறது.

இங்கிலீசு மொழி உலகம் முழுக்கவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய மொழியாக இருந்தாலும் இங்கிலாந்தில் ஒரு மாதிரியாகவும் அமெரிக்காவில் ஒரு மாதிரியாகவும் உள்ளது. இந்தியாவில் இரண்டு மாதிரியிலும் பேசி எழுதுபவர்களும் உள்ளனர். ஆசிரியரின் ஆங்கிலப் பேச்சு இங்கிலாந்திலும் நடந்துள்ளது. அமெரிக்காவிலும் நடந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபுக்கள் சபையில் 2004இல் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் 1984 முதல் பல்வேறு நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். டென்மார்க் நாட்டுத் தலைநகர் கோபன்ஹேகனில் அமைதிக்கான பன்னாட்டு மாநாட்டில் 1985இல் உரை நிகழ்த்தியுள்ளார். கனடா, ரஷியா, ஜப்பான் போன்ற பல நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்ற அழைக்கப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளார் எனில் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் ஆங்கிலப் பேச்சும் அமைந்துள்ளது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அண்ணா குறிப்பிட்டார், “I RARELY SPEAK IN ENGLISH; BUT IT DOES’NT MEAN THAT ENGLISH IS RARE TO ME” என்று எப்பொழுதாவது பேசினாலும் ஆங்கிலம் கைவராத மொழியல்ல என்பதைப் போலவே நம் ஆசிரியரைப் பற்றியும் கூறலாம்.

பேச்சாளர்களாக இருப்போர் நல்ல எழுத்தாளர்களாகவும் இருப்பது அரிது. அதுபோலவே, பல எழுத்தாளர்களுக்குப் பேச்சுத் திறமை இருப்பதில்லை. இரண்டும் அமையப் பெற்றவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கும் சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எனத் துணிந்து கூறலாம். இரண்டு வகை ஆற்றலும் கைவரப் பெற்றவர் நம் ஆசிரியர். பல நூல்களுக்குத் தொகுப்பாசிரியராக விருந்து தொண்டு செய்திருக்கிறார். தந்தை பெரியாரின் கருத்துக் கருவூலங்கள் பலவற்றைத் தொகுத்து சிந்தனைத் திரட்டு எனும் தலைப்பில் 1958இல் அவர் வெளியிட்டது அவரது முதல் எழுத்துப் பணி. ஏறத்தாழ 100 நூல்களை அவரே எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது அவரது சாதனையில் ஒரு மைல் கல்.

1962 முதல் 51 ஆண்டுகளாக விடுதலை ஆசிரியராக இருப்பது உலகில் எவரும் பெறாத தனிப் பெருஞ்சிறப்பு ஆகும்.

இவற்றினூடே, பல பத்துக்கணக்கான கல்வி நிலையங்களையும் தொடர்புடைய நிறுவனங் களையும் நிறுவி நிருவகித்து வருகிறார். அந்தவகை யில் பலருக்கும் எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டக் கூடியவராகவும் விளங்குகிற மிகச் சிறந்த மேலாளராக, ஆட்சியாளராகத் திகழ்கிறார். இவரைப் பாராட்டி கனடிய அரசு விருது தந்து கல்விப் பணியைச் சிறப்பித்துக் கூறியுள்ளது. அகில இந்திய அளவில் பல விருதுகளைப் பெற்றவராக இவரது தன்னலமற்ற பொதுத் தொண்டு பாராட்டப்பட்டுள்ளது.

வயதில் அறிவில் முதியார் என்றும் வாய்மைப் போருக்கு இளையார் எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியாரைப் போற்றினார். அத்தகு வரிகள் நம் ஆசிரியர்க்கும் பொருந்தும் எனப் பலரும் பாராட்டிடும் வகையில் அவர் எண்பதாம் அகவையை அடைந்துள்ளார்.

முதுமையை இரண்டாம் குழந்தைப் பருவம் என்கிறார்கள். இதற்குப் பொருத்தமாகப் பல முதியோர் இருக்கலாம். இவர் முதிர்ச்சியுற்றவர். இவர் என்றும் இளைஞராக இருந்து நம் அனைவர்க்கும் வழிகாட்டுவார். அவர் வழி செல்வோம்!

- சு.அறிவுக்கரசு

தமிழ் ஓவியா said...

தோழா வா தோழா


தோழா வா தோழா

நாம் கோவில் மணி கூட்டமில்ல

வீரமணி கூட்டமடா

தன்மானமுள்ள கூட்டமடா

தோழா வா தோழா

நாம் தறிகெட்ட கூட்டமில்ல

பெரியாரின் கூட்டமடா

பகுத்தறிவுள்ள கூட்டமடா

ஈரோட்டுச் சிங்கம், இனமானத் தங்கம்

பெரியரின் வழி செல்லடா

வடநாட்டுச் சாமி, தென்னாட்டுச் சாமி

எல்லாமே வெங்காயம்டா

ராமர் சாமி கோவில் விட்டு

ராமசாமி கிட்ட வந்து

தடியால அடி வாங்குடா

வாழ்வில் முன்னேர படி வாங்குடா!

கை ரேக பாத்தான், கிளி பேச்ச கேட்டான், கம்பியூட்டரு கிட்ட போயி

ஜோசியம் பாக்குறான்!

பாதையோர கல்ல செங்கல் சாமியின்னு பொட்டு வச்ச் பூவும் வச்சு உண்டியல் நீட்டுரான்!

பெருமால் கோவில் உள்ள போயி கோவிந்தான்னா என்ன தந்தது

பூணூல் போட்டவன் தொப்ப பெருக தமிழன் நெற்றியில் நாமம் வந்தது

தெரிஞ்சும் திருந்தலையே! பிள்ளையார் பக்தன் நம்ம தெரு குப்பன் அடி பட்டு செத்த லாரியில்

பிள்ளையாறு தொண

மூளைக்குதான் வேலை கொடுக்காததால மத காடு ஆச்சு நாடு இப்ப

வந்தது வெண

ராக்கெட் விடும் காலத்துல இராகு காலம் பாக்குறாண்டா

ரேப்பு கேசு சாமிகிட்ட புள்ள வரம் கேக்குறாண்டா

தெரிஞ்சும் திருந்தலையே!

- நா.முத்துகுமார்

தமிழ் ஓவியா said...

எதிர் நீச்சல்


மானமிகு ஆசிரியர் அவர்கள் முன்பு அமெரிக்கா வந்திருந்த போது கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஒரு அழகான ஏரிக்கரை யோரத்தில் தங்கியிருந்தோம். அந்த ஏரியிலே வாடகைக்கு எடுத்த எந்திரப் படகை நாங்களே ஓட்டிச் சென்று மகிழ்ந்தோம்.ஆசிரியர் அவர்கள் , அவர் பேரன்களை விடக் குழந்தையாக மாறி மகிழ்ச்சியுடன் ஓட்டி மகிழ்ந்தார். நான் படகி லிருந்து குதித்து ஏரியில் நீந்தினேன். அப்போது தான் ஆசிரியர் சொன்னார் நான் குதித்தால் கட்ப்பாரை நீச்சல் தான், எனக்கு நீந்தத் தெரியாது என்றார். ஆம்! அவருக்குத் தண்ணீரில் நீந்தத் தெரியாதே தவிர அவரது வாழ்க்கையே அடுத்தடுத்த எதிர் நீச்சல்கள் தான்!

அவர் பிறந்த உடனே அன்னையை இழந்தார். ஆனால் அவரிடம் வாழ்க்கையில் பல அன்னையர் கள் அன்னை மணியம்மை, அமெரிக்காவில் வாழ்ந்த வர்ஜீனியா கர்ச்னர் போன்ற அன்னையர்கள் அன்பு செலுத்தினர்.இன்றும் பல இயக்க அன்னையர்களின் பாச மழையிலே அவர் நனைந்து மகிழ்கின்றார். இந்த உண்மை அன்பைப் பெற்றவர்கள் அதை மனதால் முழுதும் ஏற்று மகிழ்பவர்கள் என்று பார்த்தால் ஆசிரியர் அவர்கள் எதிர் நீச்சல் வீரர் தானே !

எனக்குப் பள்ளியில் நண்பர்கள் அழைத்த பெயர் "குட்டப் பயல்". ஆம், வகுப்பில் நான் தான் மிகவும் குட்டையானவன். ஆனால் பெரிய மாணவர் களுடனும் போட்டி போட்டு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்பேன். அவர்க ளெல்லாம் எனக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். ஆசிரியரின் உயரம் உங்களுக்கெல்லாம் தெரிந்தது தான். அதைப் பற்றி நான் அவரிடம் கேட்டதில்லை, ஆனால் எனக்குத் தெரியும் பள்ளி வாழ்க்கையில் எத்தனை எதிர் நீச்சல் போட்டிருப்பார் என்று.

கடலூரிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குத் தினமும் புகைவண்டிப் (அந்தக் காலத்து ரயில்) பயணம் தான் .வசதி இருந்திருந்தால் அங்கே விடுதியிலே தங்கிப் படித்திருக்கலாம். அந்தப் புகை வண்டிக்குக் காத்திருந்து நேரங்கெட்ட நேரத்திலே எழுந்து,கிளம்பிச் சென்று வருவதே பெரிய எதிர் நீச்சல் தான். அவருக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட வேண்டிய அவசரச் சூழ் நிலை.அன்று தந்தை பெரியார் அவர்களின் தந்தி மணி ஆர்டர் மூலம் கட்டி எதிர் நீச்சல் அடித்தார்.

கழகத் தொண்டையும் பேச்சாளராகச் செய்து கொண்டு,படிப்பையும் பார்த்துக் கொண்டு அதிலும் தங்கப் பதக்கம் பெறுவது என்பது எதிர் நீச்சல் தானே! வழ்க்கறிஞராகப் படித்த போது கல்லூரிக்குச் சென்ற நாட்கள் மிகக் குறைவே.படித்து முடித்துப் பேராசியரைப் பார்த்த போது அவர் நீ விரமணியில்லை, வகுப்பில் உன்னைப் பார்த்ததே கிடையாதே என்ற பெருமை பெற்ற்வர்.அய்யா பொருளாளர் தான் வகுப்பிற்கு வீரமணி ! இது செய்திக்காகத் தான் இளைய தலைமுறை கடைப்பிடிக்க அல்ல !


தமிழ் ஓவியா said...

வழக்கறிஞர் தொழில் தொடங்கிக் கையில் கொஞ்சம் பணம் புழங்கத் தொடங்கியதும் வந்தது ஒரு பேரதிர்ச்சி. தந்தை பெரியார் அவர்கள் முழு நேரமாகப் பணியாற்றி விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்கச் சொல்கின்றார்.ஆனால் ஆசிரியர் சம்பளம் வாங்க மாட்டேன் என்கின்றார்.சரி யென்று பெரியார் அவர்கள் அவருக்கே உரித்தான நடை முறை முடிவை எடுக்கின்றார். ஆசிரியருக்கு நல்ல வசதியான மணமகளைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கைக்கு வழி வகுத்து விடுகின்றார். அய்யாவும் அன்னை மணியம்மையாரும் பெண் பார்க்கின் றார்கள், ஆசிரியரோ மணமேடையில் தான் பார்க்கின்றார். அந்த மோகனா அம்மையார் தனது கனவுகளையெல்லாம் இந்தக் கொள்கை விரும்பிக்காக விட்டுக் கொடுக்கின்றார்.

மண மேடையிலேயே அவர் விரும்பிய பட்டாடை அணியாமல் வாழ்க்கையைத் தொடங்கி, எளிமை, ஓயாத பயணம், இன்றும் தொடரும் பயணம், செலவத்திலே வளர்ந்தவர் இன்று கொள்கை ஆற்றிலே எதிர் நீச்சல் போட்டுக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி ஆசிரியரைக் கண் இமை போலக் காத்து வருகின்றார். கழகக் குடும்பத்தினரின் அன்பே அவருக்கு நாம் தரும் நன்றியாகும்.அன்னை மணியம்மையார் அய்யா அவர்களை வாழ வைத்தது போல இவரும் ஆசிரியர் அவர்களை வாழவைத்துத் தமிழர்களின் நெஞ்சங்களில் பெருமையடைகின்றார்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் அவர்களின் பொது வாழ்வில் அவர் அடைந்த துன்பங்களை எழுதினால் இடம் போதாது. ஒவ்வொரு இடர்ப் பாட்டையும் மேலே போகும் சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொண்டது தான் அவரது திறமை.பெரியாரின் மூளை. எதிரிகள் உண்டாக்கிய ஒவ்வொரு தடைக் கற்களும் இன்று கொள்கை வெற்றிகளின் மாளிகையின் கற்களாக மாற்றப் பட்டுள்ளன. தமிழன் இன்று ஓரளவிற்கு மானத்துடன் வாழ முடிகிறதென்றால் அதற்கு என்ன விலை கொடுக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தாலே போதும். அந்தக் கருப்பு மெழுகு வர்த்திகளின் அளவிலா அர்ப்பணிப்பு என்பதையே தனது உயிராக, உணர்வாக மதித்து வாழும் நேரம் முழுதும் தமிழர் முன்னேற்றம் என்று எதிர் நீச்சல் போட்டு வருகின்றார். வரும் வெற்றி மாலைகளை விடத் தூற்றுதல்களே மிகுதி. அதுவும் பயன் பெற்ற தமிழர்களே தூற்றுவது தான் மிகவும் வேடிக்கை யான அனுபவம். அதை வேதனையாகக் கொள்ளா மல் விளையாட்டாக அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் என்று புன்னகை புரியும் போது அருகே இருப்போர் ஆச்சரியப் படுவார்கள். எத்தனை நம்பிகைத் துரோகங்களை அனுபவித்துள் ளார்?துணிவில்லாதவர்கள் மலைத்திருப்பார்கள். ஆனால் தந்தை பெரியாரின் துணிவை அருகே இருந்து மூச்சாகப் பெற்றதனால் அதையெல்லாம் தூசியாகத் தள்ளி விட்டு தொடரட்டும் பணி என்று எதிர் நீச்சல் போடுகின்றார்.

நமது எதிரிகளுக்குப் பெருங்குறை இந்த மனிதரி டம் ஏதாவது அப்பழுக்குக் கண்டு பிடிக்க முடியுமா என்று முயன்று தோற்பது தான்.எனக்குத் தெரிந்த பல நல்லவர்கள் மேலே வந்ததும் ஏதாவது ஒரு இடத்திலே வீழ்ந்துள்ளார்கள், வீழ வைக்கப் பட்டுள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தளர்ச்சியை உண்டாக்கி அவர்களை அவரது கொள்கையில் ,பண்பாட்டில் வீழ வைப்பது தான் அரசியல், வணிக, தொழில் வேலை முன்னேற் றம் என்றாக்கி விட்டார்கள். இதையெல்லாம் தாண்டி எந்த குழிகளிலும் வீழாமல் பண்ம், புகழ், பதவி, உறவு என்ற எதற்கும் சிறிதும் இடங் கொடுக்காமல் நெருப்பாக வாழ்ந்து எதிர் நீச்சல் போட்டு வருகின்றார்.கொளகையிலே மறுத்துப் பேசுபவர்கள் கூட அவரது பண்பாட்டைப் பாராட்டுகின்றார்கள்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கடமை வீரர் காமராசர் என்ற தமிழ் கடல்களிலே அன்பால் நீச்சல் அடித்த உண்மையான பெருமை இவருக்குண்டு. அவருடன் சேர்ந்து நாமும் தமிழின முன்னேற்றம் என்ற மாளிகை கட்ட ஒரு துரும்பை எடுத்துப் போடுகின்றோம் என்ற் மன நிறைவே நமது நண்பர்கள், குடும்பங்கள் மற்றவர்களுடன் நாம் போடும் எதிர் நீச்சல்! தொடர்வோம் நீச்சலை!

- சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...

அய்யாவின் இதயத் துடிப்பு


அய்யாவின் இதயத் துடிப்பு

அழகான குழந்தைச் சிரிப்பு

இனமான சூரிய விழிப்பு

கடிகார கால்களின் உழைப்பு

அய்யா வீரமணி
தமிழின எழுச்சி தந்தை பெரியார் - அந்தத் தலைமையின் தொடர்ச்சி வீரமணியார்...

இல்லாத கடவுளை எதிர்த்தார் - அய்யா இருக்கின்ற மனிதனை நினைத்தார்!

பெண்ணின பெருமையை மதித்தார் - அதைப் போற்றா ஆண்களை எதிர்த்தார்.

மூடத் தனங்களைப் புதைத்தார் - அறிவின் மூலதனங்களை விதைத்தார்

ஜாதியின் ஆதியை அழித்தார் - இங்கு சமூக நீதியை வளர்த்தார்

பெரியார் ஏற்றிய சுடரை வீரமணியார் பிடித்தார் - அதைச் சூரியனாக வளர்த்தார்.

கண் பார்வை குறைந்திட்ட பொழுதும் - பூதக் கண்ணாடியில் புத்தகம் படித்தார்.

தன்மான இயக்கம் நடக்க, கைத் தடி கொண்டு நின்றவர் நடந்தார்

மூச்சினை இழக்கும் வரையில் - அய்யா மேடையில் முழங்கிச் சிலிர்த்தார்

உயிர் நொடி கரையும் வரையில் நம்மை உயர்த்திட உயர்த்திட நினைத்தார்

பெரியார் ஆற்றிய பணியை வீரமணியார் தொடர்ந்தார்,

அந்த தியாகத்தில் தன்னையே இழந்தார்...

- பழனிபாரதி

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைச் சுடரொளி


எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் தன்னைப் பொதுத் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழர் தலைவரின் அரும்பெரும்பணிகளை இந்தச் சிறிய கட்டுரைக்குள் அடக்கிக் காட்ட எண்ணுவது அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் அரிய செயல். மாதந்தோறும் ஏறத்தாழ இருபது நாட்களுக்கு மேல் தமிழகத்திலும், அவ்வப்போது வடபுலங்களிலும், ஆண்டுக்கு ஓரிரு முறைகள் அயல்நாடுகளிலும் பயணம் செய்து பெரியாரியக் கொள்கை விளக்கத்திலும், மக்கள் தொடர்பிலும், இயக்க வளர்ச்சியிலும், மூட நம்பிக்கை ஒழிப்பிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொள்வதைப் பற்றியும் ஈங்கு சுருக்கிக் சொல்லுதல் எளிதல்ல. தலைசிறந்த பேச்சாற்றலும், கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் ஆளுமைத் திறனும் ஆய்வுச் சிந்தனையும் கொண்ட ஆசிரியர் அவர்களிடம் அய்ந்து மணித்துளிகள் உரையாடினாலே, தமிழகத்தின் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல், நிலைமைகளை தெளிவாக அறிந்து பயன் பெறலாம். ஆயினும் யானறிந்த வரையில் தலைவர் அவர்களின் மனித நேயம், அளப்பரிய ஆற்றல், உறுதி, ஊக்கம், சட்ட நுணுக்கம், பொது அறிவு பற்றிய சில செய்திகள் இங்கு கொடுக்கப் பெற்றுள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் யான் பின்னால் பயின்றாலும் வீரமணி அவர்கள் கடலூரிலிருந்து ரயில் பயணம் செய்து வரும் மாணவர் என்று அறிவேன். இரவில் வந்து செல்லும் ஓரிரண்டு துரித ரெயில் தவிர அனைத்து ரயில்களும் அந்நாட்களில் ஆடி அசைந்து முக்கி முனகி ஒவ்வொரு இடத்திலும் நின்று நின்று இரண்டு மணி நேரம் கழித்துச் சிதம்பரம் வந்து சேரும். ரயில் பயணத்திலேயே தினமும் நான்கு மணிநேரம் போய்விடும்.


தமிழ் ஓவியா said...

அப்படி கடலூரிலிருந்து வருகின்ற மாணவர் குழுவோடு ஒன்றாக வந்து இனிமையாகப் பழகி னாலும், அரட்டைச் கச்சேரியில் சேராமல் ஏதாவது ஒரு நூலையோ, பத்திரிகையினையோ படித்துக் கொண்டு வருவதே இவரது பழக்கம். இல்லை யானால் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி தங்க மெடல் பரிசு வாங்க முடியுமா? அறிவுப் பசியை அடக்கியிராவிட்டால் அரங்கத்தில் ஏறிப் பரிசு பெற்றிருக்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

முதுகலைப் படிப்புக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திலேயே ஆய்வுப் பணியில் சேர்ந்தாலும், அதனை ஒதுக்கி விட்டு சென்னையில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகிறார். தந்தை பெரியாரின் ஆணைப்படி கடலூர் வழக்கு மன்றத்தைப் புறந்தள்ளி மீண்டும் சென்னை பயணம். விடுதலை நாளிதழை விட்டு விடுவதா அல்லது ஈரோட்டுக்கு எடுத்துச் சென்று வார இதழாக மாற்றுவதா எனும் பெரியாரின் வினாவுக்கு விடை கிடைத்து விட்டது. வீரமணி என்னும் இளைஞர் 1962ஆம் ஆண்டில் சென்னையில் பெரியார் திடலில் விடுதலை நாளிதழின் ஆசிரியராகிறார். பெரியாரே அழைத்துச் சென்று ஆசிரியர் இருக்கையில் அமர்த்துகிறார்.

எழுத்தாளர்களின் பத்திரிகை வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. சிற்சில நேரங்களில் பத்திரிகையின் வாழ்வும் நிரந்தரம் இல்லாமலேயே போய்விடும். அதுவும் ஒரு குறிக்கோளோடு பணபலமின்றி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு அரசின் சட்ட திட்டத்துக்கு அடி பணிந்து பத்திரிகையினை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. பத்திரிகையே மூச்சுத்திணறுவது ஒரு புறமிருக்க, பத்திரிகை ஆசிரியருக்கும், அதனுடைய நிறுவனருக்கும் ஒத்துப் போகாது. பண்டித நேருவுக்கு நெருங்கியவராகக் கருதப்பட்ட கே. ராமராவ் என்பார் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டுக்கு வருவதற்கு முன்னர் ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டு காலம் பதினேழு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். அப்படியின்றி தந்தை பெரியாரின் சிந்தனையை செயலை, உயிர் மூச்சைத் தனதாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் அய்ம்பதாண்டு காலம் விடுதலையின் ஆசிரியராக இருந்ததுவும், தொடர்ந்து இருப்பதுவும், செய்தி உலகத்தில் ஒரு பெரும் இமாலய சாதனை.

எந்த நேரத்திலும் எந்தத் தலைப்பிலும் எடுத்த எடுப்பிலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் தங்கு தடையின்றி பொருத்தமாகவும் சரளமாகவும் பேசுகின்ற தமிழர் தலைவரின் பேச்சாற்றல் வியப்புக்குரியது. கொச்சைத் தமிழும் பண்டிதர் நடையும் ஒதுக்கிய பண்பாட்டுத் தமிழ். நயத்தக்க நாகரிகம், நல்லதோர் மேற்கோள், பொருத்தமான பேச்சு, நிதானமான சொல்லோட்டம் ஆகிய இவையன்றி ஆவேசமோ, ஆத்திரமோ, அறைகூவலோ விடுக்கின்ற அகங்காரப் பேச்சாக இருக்காது. எதிரியின் ஆத்திரத்தைத் தூண்டாமல் அடங்கி விடச் செய்துவிடும்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறுமியர் சிலர் இயற்கைச் சூழலைப் போற்றி ஆதரிக்கின்ற ஒரு நடன நிகழ்ச்சி. அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டுமாறு வேண்டுகோள். மேடையேறிய தலைவர் பேசியது அய்ந்து மணித்துளிகளே என்றாலும் நடனக்கலை பற்றி அவர் பயன்படுத்திய கலைச் சொற்கள் அனைத்தும் அவரது பரந்துபட்ட, ஆழ்ந்த அறிவின் விளக்கமாக இருந்தது. பட்டமளிப்பு விழா, திருமணங்கள், அரசியல் அரங்கம், விவாத மேடை பாராட்டு விழா போன்ற இடங்களில் தலைவரின் சொற்பொழிவு வெறும் உத்தேசமாக அல்லாமல் அய்யத்துக்கு இடமின்றி உண்மையோடும் ஆதாரத்தோடும் அமைந்திருக்கும். குறிப்புகளும், ஆதாரங்களும் அதிகமாயின் மேடையில் அந்தந்த நூல்களே பேசும்.

தமிழ் ஓவியா said...

ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்களின் சொந்தக்காரர் அவர். அவ்வப்போதும் தொடர்ந்தும் படிக்கின்ற நூல்களின் மிகச் சிறந்த கருத்துகளைக் கலந்து அவர் எழுதிய மனித வளக்கலை நூல்கள் இலக்கியம், மொழி, வரலாறு, சமூக இயல், அரசியல், மருத்துவம், உடல்நலம் பற்றிய அரிய கருத்துகளை உள்ளடக்கியவை. பொதுவாழ்வில் அதுவும் சமூகத்தில், அரசியலில் பங்கு பெறும் தலைசிறந்த அறிஞர்களின் இத்தகைய சிந்தனைக் கருவூலங்களை மாணவர்க்குப் பாடமாக வைக்கும் மனப்பக்குவம் கல்லூரிகளில் ஏற்பட வில்லை என்பது ஒரு பெருங்குறை. இதனைச் சீர் செய்ய விரும்பும் பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் இத்தொகுதிகளைக் கருத்தூன்றிப் பயில வேண்டும்.

குணத்தில் உயர்வும், கொள்கையில் பிடிப்பும் அன்பின் மிகுதியும் நேர்மையில் சீர்மையும் தலை வருடன் கூடப்பிறந்தவை. கொண்ட கொள்கை யினை அவர் குழிதோண்டிப் புதைப்பதில்லை. ஒருமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூரில் சிறைவாசம். உடல் நலம் இல்லாத வீரமணி அவர்களை நீங்கள் ஏன் விடுதலை செய்யக் கூடாது எனும் நிருபர்களின் கேள்விக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, விடுதலை அளித்தாலும், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார், என்று கூறிய பதில் தமிழர் தலைவரின் தனித் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கருஞ்சட்டைப் பட்டாளம் சிறையிலிருக்கும்போது, தான் மட்டும் வெளிவரும் பேச்சுக்கே இடமில்லை என்பது உண்மை.

கொள்கையில் உறுதிப்பாடு என்பது பலரது விருப்பு வெறுப்புக்கு ஆளாகும் சிக்கல். வளைந்து கொடுக்காத உறுதி. ஒரு சமயத்தில் அன்றைய முதலமைச்சருக்கு பிடிக்கவில்லை. அதனால் வில்லிப்புத்தூர் அருகே தலைவர் வந்த காரின் மீது தாக்குதல். உடைந்த கண்ணாடி நெற்றிப் பொட்டில் சிதறி இரத்தக் கசிவு. அந்த நிலையிலும மம்சாபுரம் அருகே நிகழ்ச்சி முடிந்த பின்னரே மருத்துவமனை. எந்தநிலையிலும் அந்த முதல்வரை மன்னித்தோம் அவரது செயலை மறந்தோம் என்கிற பெருந்தன்மை. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்னும் சகிப்புத் தன்மை. எதிர்ப்பு கண்டு கலங்காத, தோல்வி கண்டு துவளாத மனப்பக்குவம்.

உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றான் பாரதி. தலைவரோ அச்சம் தவிர்த்த நிலை மட்டுமல்ல. பதட்டம் இல்லாமல் பகையினை வெல்லும் மன உறுதியாளர். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களின் அருங்கொடையால் டில்லி நகர்ப்புறத்தில் உருவாகி அங்குள்ள கிராமப்புற மக்களின் கணினிப் படிப்பிற் கும், தையல் வேலைக்கும், தொழில் வாய்ப்புக்கும் வழி திறந்துவிட்ட எழிலான கண்ணாடிக் கட்டிடம் ஒரு அரசியல் கோமாளியின் கோணல் புத்தியின் வழிப்பட்டு நீதிமன்றத் தடையுத்தரவு வரும் நிலையிலேயே தரை மட்டமாக்கப்பட்டு விட்டது.

தமிழ் ஓவியா said...

உணர்ச்சி வயப்பட்டோராயின் உடைந்த மனதும் உணர்ச்சியின் நெகிழ்வும் கலங்கிய உள்ளமும் உயிரையே போக்கியிருக்கும். ஆனால் கலங்கா நெஞ்சமொடு கண்ணீர் சிந்தாமல் கருத்தூன்றிப் போரிட்டு நியாயத்தை உறுதி செய்த தலைவர் அரசின் தவறுக்குத் தண்டனைபோல அந்த இந்திய தலைநகரிலேயே பிறிதோர் மனையும் பெற்றுவிட்டார். பெரியாரியத்தைச் சிக்கல் செய்யலாமே தவிர சீரழிக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது.

பெரியாரியக் கொள்கைகள் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் பரவி நின்றது. அவரது கொள்கை வழித் தோன்றலாகிய தானைத் தலைவரின் பன்முகப் பார்வையாலும் உலகளாவிய கண்ணோட்டத்தாலும், அரிய உழைப்பாலும் பெரியாரியம் இந்தியப் பெருநிலத்தில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. மண்டைச் சுரப்பினை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் கவித்துவம் பொய்யாகவில்லை. உலகின் பல நாடுகளிலும் அறிவுலகப் பேராசானைக் கோலோச்சச் செய்த பெருமை தமிழர் தலைவருக்கே உரியதாகும்.

இன்றியமையாத இன்னுமோர் நிகழ்ச்சியைச் சொல்லியாக வேண்டும். கழகத்தின் தலைமைப் பொறுப்பு தலைவரிடம் வந்தவுடன் காழ்ப்புணர்ச்சி தலைதூக்கி நின்றது. போர் முகத்தில் நேர் வருவதற்கு அஞ்சிய வஞ்சகர் சிலர் வருமானத்துறை வரி விதிக்க வேண்டுமென வரிந்து கட்டித் துணை நின்றனர். அய்யா தேடிய அனைத்துக்கும் வரி விதித்தால் கழகமே மூழ்கி விடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். கழகச் சார்பில் வாதிட்டு நின்ற வழக்குரைஞரும் வீரமும் களத்தில் போட்டு வெறுங்கையோடு வந்து நின்றார். நிதானம் இழக்காமல் தமிழர் தலைவர் அந்த வழக்குரைஞருக்குக் கூறிய சட்ட உத்தி, நீதிமன்றத்தின் மதிய அமர்வில் தலைகீழாக மாறி வெற்றியைத் தந்துவிட்டது. பண்டித நேருவின் வருமானம் காங்கிரஸ் இயக்கத்துக்குச் சேர்ந்ததால், நேருவுக்கோ காங்கிரசுக்கோ வருமான வரி போடவில்லையே! தந்தை பெரியார் தமிழகத்தின் மாபெருந் தலைவர், யுனெஸ்கோவும் அவ்வாறு அவரை உலகப் பெருந் தலைவராகப் பாராட்டி யுள்ளது. எந்த வருமானத்தையும் அவர் தனக் கென்று வைத்துக் கொள்ளவில்லை. எனவே அவரது வருமானம் தனி நபர் வருமானமாகக் கருதி வரி விதிப்புக்கு ஆளாக முடியாது! பண்டித நேருவிற்குப் பொருந்துகின்ற சட்டம் தந்தை பெரியாருக்குப் பொருந்தாமல் போகுமா? இக்கருத்தை மனதில் ஏற்ற வழக்குரைஞர் மதியத்துக்குப் பின் அவ்வாறே வாதாடி வாகை சூடி வந்தார். தமிழர் தலைவரின் சட்ட நுணுக்கக் குறிப்பு வாதம் கழகத்தை மிகப் பெருந்தொல்லையிலிருந்து மீட்டு வந்ததோடு இன்றுவரை நம் திராவிடர் கழகத்தின் கொடியும் கொள்கையும் வானோங்கி வளர்ந்து சிறக்கக் காரணமாய் அமைந்தது. இவ்வாறு கழகத்தின் நாடி நரம்பாகி, நம்பிக்கைச் சுடரொளியாய், உயிர் மூச்சாய்த் திகழும் உன்னதத் தலைவர் நீடு வாழ்ந்து மென்மேலும் சிறக்கப் பல்காலும் வாழ்த்துகிறேன்.

- டாக்டர் பழனி. அரங்கசாமி

தமிழ் ஓவியா said...

தென்றல் வீசிய மன்றல்


"மறக்க முடியாத நாள்!" என்பார்களே, அப்படித்தான் இருந்தது 25.11.2012. இதே மாதத்தில் தான் 13.11.2012 ஆம் தேதியும் வந்து போனது. அன்றுதான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்றார்கள் சில தமிழர்கள். காரணம், அன்றுதான் தீபாவளியாம். தமிழர்களே! வழி கிடைத்தால் மகிழ லாம்; வலியை எப்படிக் கொண்டாட முடிகிறது? சராசரி வாழ்வுக்கும் வழியில்லாத நிலையில் கடன் பெற்று, சுமை சுமந்து, நிமிரவே முடியாத வலியிலும் எப்படி உங்களால் சிரிக்கவும், மகிழவும் முடிகிறது?

இதோ... அதே நவம்பரில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்ன செய்தது தெரியுமா? உங்களுக்கு நல் வழி காட்டி, உள் வலிக்கு மருந்து தடவியது. ஆம் தமிழர்களே! உங்கள் சகோதர, சகோதரிகளை அக்கறையோடு பார்த்தது. திருமணம் முடியாமலும், விவாகரத்து முடிந்தும், துணைவரை இழந்தும், உடலுறுப்பு களைத் துறந்துமாக அல்லல்படும் அவர்கள் வாழ்வு பூத்துக் குலுங்க, தேதி குறித்துக் காத்துக் கிடந்தது மன்றல்! காரணம், உங்கள் வாழ்வில் வீச வேண்டும் தென்றல்! "மகிழ்வித்து மகிழ்" என்பார்கள்! பெரியார் கொள்கை முழுவதுமே அதுதான் தமிழர்களே!
தமிழ் ஓவியா said...

ஏனடா ஜாதி எனும் கந்தல்!
காதலால் வாழ்வுதனை எரித்தல்!
மனிதம் பார்த்தெங்கள் தேடுதல்!
மனமொப்பப் பேசியதால் எங்களுக்குள் புரிதல்! ஒன்றியதால் உருவான இணைதல்!
உங்களுக்கும் எங்கள் வேண்டல்!
நமக்காக அமைந்தது மன்றல்!
இதோ மலர்ந்தது எங்கள் வாழ்வில் தென்றல்

ஜாதி மறுத்துத் தமிழினம் தழைக்கவும், மதம் மறுத்து மனிதம் மலரவும், மணமுறிவுகளுக்கு மனச் செறிவுக் கூட்டவும், விதவை எனும் சொல்லின் வேர்ச் சொல் பிடுங்கவும், மாற்றுத் திறனாளிகளை மற்றுமொரு திறனாளிகளாக உருவாக்கவும் உருவானதே இந்த மன்றல்.

இது ஓர் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா!

அங்கொன்றும், இங்கொன்றுமாக வட மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டை ஒருங்கிணைத்த முதல் நிகழ்ச்சி இதுதான். வாழ்க்கைத் துணை வரைத் தேடி சற்றொப்ப 300 பேர்கள் பதிவு செய்ய, அவர்களுக்குத் துணையாக 600 பேர்கள் பங்கேற்க, ஆக மொத்தம் ஆயிரம் மனிதர்களை அரங்கத்தில் காண முடிந்தது. அவர்களில் தமிழ்நாடு கடந்து வந்தவர்களும் உண்டு.

தன்னிரு விழிகளை முற்றும் இழந்தவர், வாய் பேச முடியாதவர், இரண்டு கால்கள் இல்லாதவர், 18 வயதில் துணைவரை இழந்தவர் - பிரிந்தவர், தன் 80 வயதிற்குத் துணைத் தேடியவர் எனப் பலரையும் பார்க்க முடிந்தது. "எப்பொழுதும் பார்ப்பனர்களை திட்டுகிறீர்கள்?" என அறியாமையில் சில தமிழர்கள் கேட்பதுண்டு. இதோ... அவர்களுக்கு இந்த வரிகள். துணை தேடி வந்தவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும்தான்! தங்கள் ஜாதி உயர்ந்தது என்றாலும், அவர்கள் ஜாதியிலேயே அவர்களுக்குத் துணை கிடைக்கவில்லை. உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. எத்தனை நாள் பொறுப்பது? தன் சுயமரியாதைக் காக்க, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை நோக்கினர். பெரியார் கொள்கை என்பது கடினமானது அல்ல. உங்களுக்கும் சுகவாழ்வு, எங்களுக்கும் சுகவாழ்வு, எல்லோருக்கும் சுயமரியாதை வாழ்வு! அவ்வளவுதான். இதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்கிற கோபம் எங்களுக்கு இல்லை; ஆனால் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது!

அதற்கான காரணங்களைக் கூட இப்படி எளிதாகக் கூறிட முடியும். கடவுளை நம்பாதீர்கள் என்றோம், நம்பினீர்கள். ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றோம், பார்த்தீர்கள். மொத்தத்தில் மூடநம்பிக்கைகள் ஒழியுங்கள் என்றோம், அதில்தான் நம்பிக்கைக் கொண்டீர்கள். இதன் விளைவுகள் தானே நம் எல்லா பாதிப்புகளுக்கும் காரணம். மாறாக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள், விட்டுக் கொடுங்கள், மனம்விட்டுப் பேசுங்கள், உதவிக் கொள்ளுங்கள் என்பதுதானே பெரியார் கொள்கை. இதை ஏற்காமல் போனால் வாழ்வில் இழப்புகள் நேரும் என்றோம். ஏற்பதற்குத் தயங்குகிறீர்கள்; இழப்புகளைத் தாங்குகிறீர்கள்!

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு ஓர் இழப்பு என்றால், "நாங்கள் முன்பே சொன்னோம் கேட்டீர்களா?" என நாங்கள் கேட்பதில்லை. காரணம் பெரியார் எங்களுக்கு அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. சகமனிதன் துன்பப்படும் போது, நீயும் துன்பப்படு என்றவர்தான் பெரியார்! அதனால்தான் அனைவரையும் ஒன்று திரட்டினோம். எங்கள் ஒன்று திரட்டலில் ஜாதி, மதம் கிடையாது, கத்தரிக்காய், வெண்டைக்காய் கிடையாது. மனிதனாக இருக்க வேண்டிய ஒரே தகுதிதான்! அப்படித்தான் வந்து மேடை ஏறினார்கள் அனைவரும். இந்த நவ நாகரிகக் காலத்திலும் ஜாதிச் சங்கப் பிழைப்பு மற்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் ஜாதி மறுத்துத் திருமணம் செய்தால் குத்துவோம், வெட்டுவோம் என்கிறார்கள். ஜாதிக்கு மாறாக எதுவும் நடக்கக் கூடாது எனத் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் ஜாதியில் அவர்கள் அப்பாவும், தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் எனத் தெரிந்துதான் பேசுகிறீர்களா? பிற ஜாதியை அசிங்கப்படுத்த நினைத்தால், அதைவிட கீழான உங்கள் ஜாதி அசிங்கமும் வெளியாகும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதிக்கு ஆதரவாக என்னதான் நீங்கள் தீர்மானம் போட்டாலும், உங்களைப் பற்றியும் மக்கள் என்றோ தீர்மானித்து விட்டார்கள். ஜாதி மறுப்பு இணை தேடலுக்கு வந்தவர் களில் 300 பேரும் ஜாதி மறுத்துத்தான் கேட்டார்கள். இவர்கள் அனைவரும் முற்போக்காளர் என்றோ, பெரியாரை முழுமையாக ஏற்றார்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை. ஆனாலும் ஜாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது ஜாதி மறுத்தாவது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்த எண்ணுகிறார்கள். ஆக ஜாதி என்பது தடை அல்லது தேவை யில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இந்த முடிவுக்கு வந்தவுடன் அவர்களுக்கு நினைவில் வருவது பெரியார் இயக்கம்! அந்த வாய்ப்பைத் தான் இந்த இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது, இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கும். சென்னையில் தொடங்கிய பயணம் கன்னியாகுமரி சென்று, மீண்டும் சென்னையில் தொடங்கும். டிசம்பர் 30-ல் திருச்சிராப்பள்ளியில் அடுத்த மன்றல் நிகழ்வு நடக்கவுள்ளது.ஒரு முடிவுக்கு வரும்வரை, இதற்கும் முடிவு இல்லை. சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் வேண்டுமானால் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் உயிரை எடுக்கும் ஜாதியின் உயிரை எடுக்கும் வரை நாம் ஓயக்கூடாது. தொடர்ந்து ஓடுவோம்!

ஜாதிமறுப்பு இணைதேடல் விழாவான மன்றலில் கலந்து கொண்ட ஒருவர் கூறியது :

"எனது சகோதரன் சென்னையில் பணி புரிகிறான் அவனுக்கு வயது 34. எனது அப்பாவும் மாமாவும் அவனுக்கு ஜாதியில் வரன் தேட ஆரம்பித்தபோது அவனுக்கு வயது 24. 10 வருட மாக பெண் தெடுகிறார்கள் காரணம் நான் கல்லூரியில் படிக்கும் போது ரெயில்வேயில் அப்போது ஒப்பந்த பணியில் இருந்த ஆதிதிரா விடர் ஒருவரை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி மணம்புரிந்தேன், ஆகையால் எனது தம்பிக்கு வைராக்கியமாக ஜாதியில் மணப்பெண் தேடினார்கள், தேடுகிறார்கள், தேடுவார்கள்.

எனது அம்மா எனது முதல் குழந்தைக்கு அவர்கள் பாட்டியின் பெயர் சூட்டி சீராட்டி விட்டுத்தான் நோய்வாய்புற்று இறந்தார்கள, ஆனால் எனது தம்பியிடம் உன் அக்கா ஓடிப்போனதால் தான் கவலையில் அம்மா செத்துப்போனதாக கூறி அவனை எங்களுக்கு எதிரியாக்கி வைத்தார்கள்.

இந்நிலையில் அவன் சென்னைவந்ததும் அவனை சமாதானபடுத்தி அறிவுரை கூறினோம். அப்போது எனது கணவர் பணியில் இருந்துவீடு வரும் போது மன்றல் பற்றிய குறுவிளம்பர பத்திரிக்கை யாரோ தந்தார்கள். அவனிடம் இதுகுறித்து பேசி அவனுக்கான இணையை தேடி ஜாதிமறுப்பு பிரிவில் பதிவுசெய்துள்ளோம், நல்ல உடல்நிலை, நகரவாழ்க்கை பொருளா தார ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏதாவது நல்ல ஒருபணியில் (தனியார் அல்லது அரசாங்கம்) அவனது மனதை புரிந்து கொண்டு நடக்கும் பெண் தான் தேவையே தவிர சாதி பேதி என்ற அசிங்களுக்கு ஆட்பட்ட பெண் தேவையில்லை" என்றார்.

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...


திணறட்டும் தருமபுரி!


தருமபுரி மாநாடு தோழர்களே! தோள் தூக்கி வாரீர் வீரர்களே!
ஜாதி என்னும் சாக்கடைப் புழு - தமிழன்
சோற்றில் தலை தூக்குவதோ!

வேதியன் வைத்த தீ - வேறு
வடிவத்தில் வாலாட்டுவதோ!
ஜாதியின் மூலத்தை அழித்திடவே
சட்டத்தையும் எரித்த கருஞ்சட்டைகளே!

வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!!
வேட்டு முழக்கம் போடுங்கள்! போடுங்கள்!!
ஜாதியாம் பிளவு நோயால் - போய்த்
தொலைந்தவன் தமிழனன்றோ!

ஜாதி விஷத்தின் வேரினை
மோதி முறித்தல்லவோ!
தமிழன் எனும் சிற்பத்தை
செதுக்கினார் எம் பெரியார்!

நான் வன்னியன்
நான் சேணியன்
நான் கவுண்டன்
நான் முதலி யென்று
நான் நானென்று
நாராய்க் கிழிந்து கிடந்த

நாலாஞ் ஜாதிக் கூட்டத்தை
நாடெங்கும் சுற்றிச் சுற்றி
நாப்பறை கொட்டிக் கொட்டி
தமிழன் எனும் உணர்வாம்
தாய்ப்பாலை ஊட்டி ஊட்டி
தாலாட்டி வளர்த்தார் தந்தை பெரியார்

அட, தமிழினச் சோதரர்காள்!
அறிவோடு சிந்திப்பீர்!
மீண்டும் மனுதர்மமா?
மாள்வதுதான் உன் விருப்பமா?

எரிந்தது வீடுகள் அல்ல
எம்தமிழர் மானம்!
இடிந்தது வீடுகள் அல்ல
இன ஒற்றுமைக் கோட்டை!
சீச்சீ, வெட்கம்! வெட்கம்!! - உயிர்
வாழ்வதா முக்கியம்?

ஒடுக்கப்பட்ட தோழனுக்கு
முன்னுரிமை
கொடுப்ப தன்றோ
நம் கடமை!

அடக்க நினைப்பார்
ஆணவத்தை
அடக்கி முடிப்ப தன்றோ
அறிவுடைமை!

புறப்படு புறப்படு எம் தோழா - புயல்
நடை போட்டிடு போட்டிடு எம் தோழா!

ஜாதியைச் சாய்ப்போம்!
ஜாதியைச் சாய்ப்போம்!
சமத்துவம் படைப்போம்!
சமத்துவம் படைப்போம்!

பெரியார் கைத்தடி
கொடுக்கும் நெற்றியடி!
பெரியார் கண்ணாடி - வழி
காட்டும் முன்னாடி!

எதிர்காலம் ஒளிர
இவையே முன்னோடி!
படைப்போம் வாரீர்!
புரட்சிப் பண்பாடி!

தமிழர் தலைவர் அழைக்கிறார்
தருமபுரி திணறட்டும்!

- கவிஞர் கலி.பூங்குன்றன் -

தமிழ் ஓவியா said...


செத்தான்நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)