Search This Blog

17.12.12

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

ஆலமரத்துக்கும், ஆண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

இது என்ன குருட் டுத்தனமான கேள்வி. சம் பந்தா சம்பந்தம் இல்லாத கேள்வி என்று எடுத்த எடுப்பிலேயே கேட்க தோன்றும்.

ஆனால் சம்பந்தம் இருக்கிறது என்று கூறி அந்த ஆலமரத்தையே வெட்டி இருக்கிறார்கள் என்றால் யாரும் எளிதில் நம்ப  மாட்டார்கள்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தானத்தம்பாளையத்தில் தான் இந்த அநியாயம்  நடந்திருக்கிறது.

இந்த ஊரில் 35 குடும்பங்கள் உள்ளன; ஆனால் ஆண் வாரிசு கிடையாதாம். 50 ஆண்டுகளுக்கு முன் சின்னப்பன் கவுண்டர் என்பவருக்குத் திருமணம் நடந் தது. ஆண் வாரிசு இல்லை; இரண்டாவது கல்யாணமும் செய்தார்; அதிலும் பலன் கிட்ட வில்லை.

அவ்வளவுதான் யாரோ ஒரு கிறுக்கன் சொன்னானாம்; ஊருக்குள் ஆலமரம்  வைத்தால் ஆண் வாரிசு பாக்கியம் கிட்டும் என்று சொல்ல, சின்னப்பக் கவுண்டர் ஆலங்கன்று வைத்து மரத்தை உண்டாக்கினார்.

மூன்றாவது கல்யாணம் செய்தார் ஆண் குழந்தை பிறந்ததாம். பிறகு யாருக்கும் ஆண் குழந்தையே இல்லையாம். ஊருக்குள் இன் னொரு ஜோசியக்காரன்  ஒன்றைக் கொளுத்திப் போட்டானாம். ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தரிக்காது என்றானாம் - அந்த (ஆல)மர மடையன்!
உடனே ஊர்கூடி ஆல மரத்தை மொட்டையடித் தனர் - வேரில் ஆசிடும் ஊற்றினர்.

விடயம் வட்டாட்சியருக்குத் தெரியவே. பறந்து வந்தார் அந்தவூருக்கு. ஆலமரத்தை வெட்டியது சட்ட விரோதம் என்றுகூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சோதிடன் ஆண் வாரிசுக்கு ஆலமரம் வேண்டும் என்றான். இன்னொரு சோதிடனோ ஆல் தழைத்தால் ஆண் வாரிசு தழைக்காது என்றான்.
யார் சொல்லுவது உண்மை? அப்பனும்  -பிள்ளையும், கழுதையைச் சந்தைக்குக் கொண்டு சென்ற கதையாக அல்லவா இருக்கிறது.
ஆல மரத்தை வெட் டினால் அதிகாரிகள் வருவார்கள் என்று  எந்த சோதிடனும் சொல்லவில்லையே! குழந்தை பிறப்பு ஆண் - பெண் பிறப்பு என்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் உண்டே! இந்த மூடத் தனத்தை எதிர்த்து எழுத நம்மை விட்டால் யார் இருக்கின்றனர்?


                  ----------------------- மயிலாடன் அவர்கள் 17-12-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

தமிழ் ஓவியா said...


காவிரி நடுவர் மன்ற ஆணை கெசட் செய்யப்பட வேண்டும்!- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்!

தமிழக மீனவர்கள் சித்ரவதைக்கு நிரந்தர முடிவு தேவை!

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்

நாடாளுமன்றத்தில் ஒன்று சேர்ந்து வற்புறுத்துக!



காவிரி நடுவர் நீதிமன்றம் ஆணையை கெசட் பதிவு செய்வது யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் தொடர் சித்ரவதைக்கு முடிவு - இது போன்ற தமிழக முக்கிய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கிவீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு (Final Award) 2007இல் தரப்பட்டது; ஆனால் இதுவரை அத்தீர்ப்பு, மத்திய அரசின் பதிவிதழில் (மத்திய கெசட்) வெளியிடப்படவே இல்லை - மத்தியப் பதிவிதழில் அது வெளியிடப்பட்டால் தான், அது உடனடியாக, முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாக மாறி, தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கும்; காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு ஒரு பெரும் முடிவான நிலையையும் ஏற்படுத்தும்; (அடாவடி வம்பு, வல்லடி வழக்குகளில் ஈடுபடும் மனிதநேயம் தெரியாத, கர்நாடக வாக்கு வங்கி அரசியல்காரர்கள் முன்பு இதுவும் மதிக்கப்படக் கூடியதாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான்)

5 ஆண்டுகளாக கெசட் செய்யப்படவில்லை

இதை கர்நாடகம் எதிர்ப்பது எதிர்பாராததல்ல. நடுவர் மன்றம் நியமிக்கப்பட்ட நாள் முதலே, இதனை எதிர்த்து அவசரச் சட்டங்களையும், அழி வழக்குகளையும் போட்டு ஏதோ காவிரி நதியே கர்நாடகத்தின் தனி உடைமைபோல் கருதி அடாவடித்தனம் செய்து வந்துள்ளது; வருகிறது.

இதுவரை அய்ந்து ஆண்டுகள் (2007-2012) வரை கெசட் செய்யப்படவில்லை என்பது ஏன்? மத்திய அரசே இதனைக் கண்டும் காணாமலும், கர்நாடகத்திற்கும் ஒரு கண் ஜாடை என்பதுபோல் நடந்து கொண்டது; இது நியாய விரோதம், சட்ட விரோதம் ஆகும். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை மத்திய அரசு அறியாதா?

இதை நாம் (திராவிடர் கழகம்) கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம்.

இன்று விவசாயிகளுக்காக கசிந்துருகிக் கண்ணீர் விடும் பல அரசியல் கட்சிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படியோ இதில் மெத்தனமாகவே இருந்தனர் என்பது வேதனைக்குரியது.

என்றாலும் இப்போதாவது, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டு, (காவிரி நதிநீர் ஆணையம்கூட உச்சநீதிமன்றத்தின் கடும் கோபத்திற்குப்பின் தான் பிரதமர் தலைமையில் கூடியது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்) இதுபற்றி சாதகமான பதிலாக, விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கருநாடக அரசு தனது வழமையான கடும் எதிர்ப்பை பிரதமரைச் சந்தித்தே தெரிவித்து (அரசியல்) செய்ய முடிவு செய்துள்ளது!

அரசியல் சட்டப்படி இதனைத் தடுக்க முடியாதே; ஏற்கெனவே 5 ஆண்டுகள் தவறியதே ஒரு குற்றம் போன்றது தான்!

தலைவர் இல்லாத காவிரி நடுவர் மன்றம்

அது மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாத நடுவர் மன்றமாகத் தொடருவதும் சரியானதல்ல.

உடனடியாக புதிய தலைவர் ஒருவரை அதற்கு நியமிக்கவும் நமது தமிழ்நாட்டு எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

கட்சி வேறுபாடு, அரசியல் மாறுபாடு இன்றி பிரதமரைச் சந்திக்கவும், நாடாளுமன்றத்தில் இதுபற்றி பிரச்சினை எழுப்பி தீர்வு காணவும் மற்ற மாநிலத்தவர், உலகத்தவருக்கு, தமிழ் நாட்டின் நியாயத்தை விளக்குவதற்குமான வாய்ப்பை - நாடாளுமன்றம் நடைபெறும் இவ்வேளையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் சிறையில்...

இதுபோல ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகவும், மனித உரிமை மீட்டெடுப்புக்காகவும் குரல் கொடுக்கும் அத்தணை கட்சிகளும், யாழ்ப்பாணத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு அதன் தூதுவர் மூலமோ அல்லது வெளி உறவுத் துறை மூலமோ உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்;

இதுபோன்ற பிரச்சினைகளிலாவது, இலங்கை அரசின், கொடுமைகளை - மீனவர்கள் கைது, சித்ரவதை சிறைச் சாலை, வலைகளில் உள்ள மீன்களைப் பறித்துச் செல்லும் அக்கிரமங்கள் இவற்றைப்பற்றிப் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை அவசியம் ஏற்படுத்தியாக வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையில் அவசியம் தக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசரம்! அவசரம்!! அவசரம்!!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
17.12.2012

தமிழ் ஓவியா said...


விடவும் முடியவில்லை; படவும் முடியவில்லை!

இது மின்னணு யுகம்
முதல் யுகம் வேளாண்மை யுகம்
இரண்டாம் யுகம் தொழிற்புரட்சி யுகம்
மூன்றாம் யுகம் மின்னணு யுகம்
நான்காம் யுகம் தகவல் புரட்சி யுகம்.

இப்படி பல மேலை நாட்டு எழுத் தாளர்கள் நமது மனித குல வர லாற்றைப் பகுத்துச் சொல்கின்றனர்!

இந்த அறிவியல் தொழில் நுட்ப மின்னணுப் புரட்சியை தொலை நோக்கோடு இனி வரும் உலகம் என்ற பொழிவில் தந்தை பெரியார் அவர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினார்கள் - பேசினார்கள்.

மக்கள் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும் இந்த அறிவியல் கருவிகளால் ஏற்படும் பயன்களைப் போலவே அதன் மறுபக்கமாக - கெடுதிகளும் தவிர்க்க முடியாதவை யாகவே இருக்கின்றன. அதனால் அதை வெறுக்கவோ, ஒதுக்குவதோ பகுத்தறிவுள்ள மனிதனுக்கு அழகாக இராது. அவை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

மின்னணுக் கருவிகள் என்ன, கத்தி கூடத்தான்! அதை வைத்து காய்கறியும் வெட்டலாம்; மனிதர் களையும் குத்திக் கொலை செய்ய லாமே! எனவே அணுவை அழிவிற்கும் பயன்படுத்தலாம்; ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாமே!

மனிதநேயமும், பகுத்தறிவும் ஓங்கினால் இத்தவறான -முறையற்ற வகையில் இக்கருவிகளைப் பயன் படுத்துவது தானே ஒழிந்து விடும் அல்லது ஒதுங்கி விடும்!

கைத் தொலைப்பேசி, அலைப்பேசி என்பது இல்லாத இடமே இல்லை; அதுவின்றி எதுவும் அசைய முடியாது இந்த யுகத்தில்.

அதுபற்றி புதிய பார்வை ஏட்டில், முற்போக்கு எழுத்தாளர் தோழர் க.பொ. அகத்தியலிங்கம் அவர்கள் அலைப்பேசி என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு புதுக் கவிதை - ஓர் அருமையான படப்பிடிப்பு - நான் சுவைத்தேன்; நீங்களும் சுவையுங்கள்.

அலைப்பேசி, கைப்பேசி
செல்மொபைல் உன்
பெயர் எதுவானால் என்ன?
பிரச்சினை பிரச்சினைதான்
உன்னோடு வாழவும் முடியவில்லை
நீ இன்றி
வாழவும் முடியவில்லை.
அரக்கப் பரக்க வேலை செய்து
கொண்டிருக்கும்போதும்
அவசரமாக கழிப்பறையில்
ஒதுங்கும்போதும்...
பசி பொறுக்காமல்
உணவுக் கவளத்தை
விழுங்கும்போதும்.
ஒலி எழுப்பி
நிம்மதி கெடுக்கிறாய்.
உரையாடலை முறிக்கிறது உன் டயல் டோன்.

தொடர்பு எல்லைக்கு வெளியே
இருப்பதாய்க் கூறி
உறவையே முறிக்கிறாய்
நீ இன்றி
எந்த ரகசியமும் இல்லை
உன்னிடம்
எதுவும்
ரகசியமாய் இல்லை..
கடன்காரன்
அழைக்கும்போது
சட்டென இணைக்கிற நீ
தேவையான நேரத்தில்
கிட்டாமலே வெட்டியும் விடுகிறாய்..
படம் பிடிக்கிறாய்
பாட்டும் படிக்கிறாய்
போட்டும் கொடுக்கிறாய்
நீ கூட இருந்தால்
கூடவே ஒரு ஆள்
துணை இருப்பதாய்
ஓர் அய்தீகம்.
ஆனால்
கூடவே ஒரு
ஒற்றன் இருப்பதை
அனுபவம் சொல்லும்
இடும்பை கூர்
அலைபேசி
உன்னோடு வாழ்வதரிது
நீ இன்றியும்
வாழ்க்கை அரிது.

என் செய்வேன்
நோக்கியோனே!

இந்த அலைபேசியை வைத்து நாட்டில் பெருகிவரும் குற்றங்கள் அவ தூறுகள் - ஏராளம் என்பதால் தான் சைபர் குற்றங்கள் (Cyber Crimes) என்பதைத் தடுக்கக் காவல்துறையில் ஒரு தனிப் பிரிவே போடப்பட்டுள்ளது!

தேர்வு அறைகளில் காப்பி அடிக்கக் கூட இந்த அலைப்பேசியும் பயன்படு கிறது என்பதால் அந்தத் தேர்வு மய்யங் களில் ‘Jammer’ அந்தத் தொலைபேசி வேலை செய்ய முடியாத தடுப்பான்களை வைத்துள்ளனர்!

அறிவியல் வளர்ந்தால், மட்டும் வளர்ச்சி அல்ல; சரியான பாதையில் வள ருவதே வளர்ச்சியின் முழு வடிவமாகும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


மோடியின் முகம்


குஜராத் மாநிலத் தேர்தல்பற்றி பார்ப்பன ஊடகங்கள் விழுந்து விழுந்து எழுதுகின்றன. மோடி அமோக வெற்றி பெறுவார் - இந்த வெற்றி குஜராத்தோடு நிற்காது - அவரை டில்லிக் கோட்டைவரை கொண்டு போய்ச் சேர்க்கும் என்று கோரஸ் பாடுகிறார்கள்.

ஆனால் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியாது - தெரியும் - மிக நன்றாகவே தெரியும் - மோடி மதச் சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர் மிக முக்கியமான இந்த மய்யப் புள்ளியை அழித்துவிட்டு எழுதுபவர்கள், பிரச்சாரம் செய்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக, விளம்பரம் பெற்ற மேதைகளாக இருந்தாலும் அற்பமானவர்கள் என்றுதான் கருதப்படுவார்கள்.

2002இல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச முறைப் பயங்கரவாதம் மன்னிக்கத் தக்கதா?

இரண்டு கேள்விகள் இருக்கின்றன. ஒன்று, தம் மாநிலத்தில் வாழக் கூடிய மக்கள், அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தாலும் அவர்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். அதனை மோடி செய்தாரா? இல்லை - அவருக்கு அதில் சம்பந்தமேயில்லை என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவார்களேயானால், இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர்.

மோடி முதல் அமைச்சராக இருக்கக் கூடிய குஜராத்தில் 2000-த்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளார்களே - அதற்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டாமா?

மிகச் சிறந்த நிருவாகி மோடி என்று மொத்த சங்குகளையும் குத்தகை எடுத்து ஊதுகிறார்களே, இவ்வளவுப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் எப்படி தலை சிறந்த நிருவாகியாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு இதுவரை மோடியோ அவரது வாடகை ஒலிபெருக்கிகளோ நாணயமான முறையில் பதில் கூறியிருக் கிறார்களா?

அந்த வெறிபிடித்த மனிதர், சிறுபான்மையினர் வேட்டையாடப்பட்டு, அகதி முகாம்களில் தங்கி யிருந்த நிலையில்கூட, அதனைக் கொச்சைத் தனமாக விமர்சித்த ஆபாச மனிதன் அல்லவா!

மக்கள் தொகையைப் பெருக்க வைக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று நாலாந்தர மனிதனாக வாந்தி எடுக்கவில்லையா?

இப்பொழுதுகூட பிஜேபி சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டவர்களுள் ஒரே ஒருவர்கூட முசுலிம் இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அகமது பட்டேலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மோடி தேர்தல் கூடத்தில் எப்படி சொல் லுகிறார்? அகமதுமியான் என்று உச்சரிக்கிறார். பொருள் புரியவில்லையா? அகமது பட்டேல் அல்ல அவர் ஒரு மியான் - அதாவது முசுலிம் என்று வாக்காளர்களுக்கு தெரியப்படுத்துகிறராம்.

உலகில் அதிக அளவில் முசுலிம்கள் வாழும் மிகப் பெரிய நாடு இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு இதுபோன்ற இந்து மதவெறியர்தான் பிரதமராக வர வேண்டும் என்று கருதுவதேகூட ஒரு காட்டு விலங்காண்டித்தனம்தான்.

இந்தியாவின் உச்சநீதிமன்றமே நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டிய ஒரு பேர் வழியா இந்தியாவின் பிரதமர்? குஜராத் கலவரத்துக்குப் பின் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி மனந்திறந்து கூறவில்லையா? எந்த முகத்துடன் வெளி நாடுகளில் காலடி எடுத்து வைப்பேன்? என்று கூனிக் குறுகிப் போய் கருத்தினை எடுத்து வைக்கவில்லையா?

சி.என்.என். அய்.பி.என்., தொலைக்காட்சியில் 5 நிமிடம் உட்கார்ந்து ரெகான்தப்பார் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியேறிய வீராதி வீரர்தான் இந்த நரேந்திர தாஸ், தாமோதர தாஸ் மோடி என்பதை மறக்க வேண்டாம்!

இங்கே இருக்கும் சோ ராமசாமி போன்ற பச்சை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மோடியைத் தூக்கி நிறுத்த ஆசைப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


தருமபுரி சம்பவம்!

தருமபுரி அருகே வன்முறை நடந்த கிராமங்களில் நத்தம் காலனி கொண்டம் பட்டி மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தேசிய ஆதி திராவிட ஆணைய இயக்குநர் வெங்கடேசன் அவர்கள் குழுவினருடன் ஆய்வு நடத்தி யுள்ளார். நூற்றுக்கணக்கானோர் அடங்கிய பல கும்பல்கள் சேர்ந்து மேற் கண்ட கிராமங்களை திடீர் தாக்குதல் நடத்தின. அப்போது 268 வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், வேன்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் இயக்குநர் வெங்கடேசன் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரித்தும் ஆய்வு நடத்தினார். வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் தேசப்படுத்தப் பட்டும், நகைகள், பணம், சூறையாடப் பட்டும் இருப்பதாக வீடுகளில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட் டோர் தரப்பில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தாக் குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் ஒரு தலைமுறையின் உழைப்பு முழுமை யாகச் சூறையாடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் முழுமையாகச் தேசப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகளைச் சீரமைத்துக் கொடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும் என்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியான மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் அரசுக்குப் பரிந்துரைகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட் டில் ஜாதிக் கலவரம் 1957இல் நடை பெற்றதைக் கண்டு தந்தை பெரியார், அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்தார். பல உயிர்கள் பலியாயின. வீடுகள் தீக்கிரையாயின. முதல்வராக இருந்த காமராசர் அவர்கள் உடனடியாக அதி காரிகளை அனுப்பி அமைதிப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வீடுகள், சுகாதார வசதிகள், பள்ளிக் கூடங்கள் சாலை வசதிகளைச் செய்து கொடுத்து உதவி செய்தார்.

11 வருடங்களுக்கு பின்பு 26.12.1968ல் நாகப்பட்டினம் அருகில் கீழ்வேலூரை அடுத்த வெண்மணி என்னும் சிறிய ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆண் - பெண் குழந்தைகள் உட்பட 42 பேர்களை ஒரு வீட்டுக்குள் வைத்துப் பூட்டி தீ வைத்துக் கொன்றார்கள். அப்போதும் பெரியாரவர்கள் இந்தியாவை ஆள இந்தியர்களுக்குத் தகுதியில்லையே இதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவா யில்லை என்று கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

அதன் பிறகு தருமபுரி சம்பவம் சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட் டவர்களின் வாழ்வாதாரம் முழுதும் தீ வைத்தும், கொள்ளையடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களைப் பாது காக்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும் நேரில் உடனே சென்று மக்களின் துயரத்திற்கு ஆறுதலும், சில உதவிகளும் செய்துள்ளார்.

- அ. இனியன் பத்மநாதன்
ஈரோடு - 11

தமிழ் ஓவியா said...

கொடியை அறுத்த கொடியோர் யார்?

கடந்த 17.9.2012 அன்று திருமுல்லை வாயல் காலனிப் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அய்யாவின் உருவ சிலை அமைக்க பீடம் கட்டுவதற்கு அடையாளமாக அய்யா வின் படமும், கொடியும் நட்டு வைத் திருந்தோம். 3.12.2012 அன்று இரவு சமூக விரோதிகளால் கொடியை அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். திரா விடர் கொடி திராவிடனால் அறுபட்டது வேதனைக்கு உட்பட்டதாக இருக்கிறது.

தான் பிறந்த தமிழ்நாட்டில் தன்னை யொத்த தமிழ் மக்கள் சமுதாயத்தில் சமத்துவம் இழந்து சமயத்தில் தமிழையும், தன்மானத்தையும் இழந்து தெரு பஜனை, தெருக்கூத்து, தேர் திருவிழா, நீதிமன்றம், பார்ப்பன வழக்கறிஞர் வீடு, கள்ளுக் கடை, சாராயக் கடை என அலைந்து திரிந்த இழிவைக் கண்டு மனம் நொந்து தன்மானம் இழந்த தமிழனுக்கு தன்மான உணர்ச்சியூட்ட துணிந்தவர்தான் பெரியார்.

பகுத்தறிவு, சுயமரியாதை, தன் மானம் இவற்றை உனக்கு புகட்டத்தான், தன் சொந்தங்களை சொத்துக்களை, பட்டம் பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மண் புழுக்களாகக் கிடந்த மக்களை மனிதர்களாக மாற்றி அமைத்து அழகு பார்த்தவர்தான் பெரியார்.

பார்ப்பனர் அல்லாதார் என கேலிப் பேச்சுக்கு இடம் கொடுக்காமல் திராவிடர் என்று பெயர் சூட்டி தமிழன் வாழும் நாட்டிற்கு திராவிடம் என அழைத்து அதன் அடையாளமாக கண் டெடுத்த கொடிதான் திராவிடர் கொடி, உன்னை வளர்த்து ஆளாக்கிக் கொண்டு இருக்கும் கொடியை அறுத்து நிம்மதி அடைந்தத் தோழா உன் அறியாமைக்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

- ச. இரணியன், தி.க.செயலாளர், திருமுல்லைவாயில்

தமிழ் ஓவியா said...


காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலா ஷைகளையும் புரிந்து கொள்ள முடியாத வாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகை கள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு சகோ. சற்றே மக்கள் அறிவியலை உணர்ந்துக் கொண்டால் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லா நம்பிக்கைகளில் இருந்து மீண்டு வருவார்கள் ... என்பேன் .. !