Search This Blog

28.12.12

ஊரெங்கும் பெரியார் சிலைகள் உருவாகட்டும்!


எண்ணூரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா 25.12.2012 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பொது மக்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.
கழகத் தோழர்களின் இடையறாத முயற்சியால் 5 ஆண்டுகள் சிறுகச் சிறுகச் சேர்த்து, சிறு துளி பெரு வெள்ளம் போல் ஆக்கி இந்த மாபெரும் பணியைச் செய்து முடித்துள்ளனர்.

தந்தை பெரியார் சிலையைத் திறப்பது - ஒரு தத்துவத்தை மக்கள் மத்தியில் பறைசாற்றுவதற்காக - நிலை நிறுத்துவதற்காக.

பெரியார் சிலைப் பீடங்களில் பொறிக்கப்படும் வாசகங்கள் மிக மிக முக்கியமானவை.

கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு உள்ளிட்ட தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் பீடத்தில் பொறிக்கப்பட்டு வருகின்றன.

உலகில் எந்த நாட்டிலும் இந்த நிலையைக் கேள்விப்பட்டுக்கூட இருக்க முடியாது.

எதையும் மன்னிக்கலாம் - ஆனால் அறிவைக் கெடுப்பவர்களை மன்னிக்கவே கூடாது என்றார் பகுத்தறிவுப் பகலவன்.

அப்படி அறிவைக் கெடுப்பதில் கடவுளும், மதமும் முக்கிய இடம் வகிப்பதால் தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தில் கடவுள் மறுப்பும், ஆத்மா மறுப்பும் முக்கியமாக இடம் பெற்று வருகின்றன.

இதனை எதிர்த்து நீதிமன்றங்கள் சென்றவர்கள் உண்டு. ஏன், எண்ணூரில்கூட சில அடிப்படை இந்து மதவாத சக்திகள் பிரச்சினையைக் கிளப்பிப் பார்த்தனர். பொது மக்களின் அபரீதமான ஆதரவால் அந்தக் கூச்சல் கிஞ்சிற்றும் எடுபடவில்லை. இதுபோல பொது இடங்களில் இத்தகைய வாசகங்கள் இடம் பெறலாமா என்று வினா எழுப்புபவர்களுக்கு விடையை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்களே, மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துச் சொல்லிவிட்டார்.

பெரியாருக்குச் சிலை வைத்தால் பெரியாரின் கருத்தைத்தானே பொறிப்பார்கள் - அதில் என்ன குற்றம் இருக்கிறது என்ற நெற்றியடி தீர்ப்பை வெளியிட்டு வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

ஏன், இரண்டு மாதங்களுக்கு முன் கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்புத் தொடர்பான வழக்கில்கூட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.கே. சந்துரு சவுக்கடி கொடுத்துபோல தீர்ப்புக் கூறினாரே!

1926இல் பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். கடவுளைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, ஏதுமறியாத அப்பாவி மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு பார்ப்பனப் பூசாரி வர்க்கத்தை உருவாக்கி நிலை நிறுத்தும் ஒரு மோசமான சமூக நடைமுறையை மதம்தான் ஏற்படுத்திக் காத்துவருகிறது என்ற அவர் நம்பினார் - அதனால் கடவுள் மறுப்பு மற்றும் மதத்திற்கு எதிரான ஒரு போராளியாக பெரியார் மாறினார் என்று குறிப்பிட்டுள்ளாரே!

இந்த விவரங்கள் எல்லாம் தெரியாமல் சிறு பிள்ளைத்தனமாக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஊளை விடுவார்களேயானால், தமிழ்நாட்டு மக்களால்(பக்தர்களாக இருந்தாலும் கூட) அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுமையும் இந்தக் கும்பல் தங்கள் கை வரிசையைக் காட்டிப் பார்த்தாலும், தமிழ்நாட்டில் அது எடுபடாமல் போனதற்கு தேர்தல்களில் சுத்தமாகத் துடைத்துத் தூக்கி எறியப்படுவதற்குக் காரணமே தந்தை பெரியார்தான் - அவர்தம் தத்துவம்தான் அவரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம் தான் இந்தக் கொள்கைகளைக் கொண்டுள் இயக்கங் களால்தான், கட்சிகளால்தான்.

மக்கள் மத்தியிலிருந்து பிற்போக்கு மதவாத, தீய நம்பிக்கைகள், போக்குகள் அறவே அழித்தொழிக்கப் படவும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவை காலூன்றச் செய்யாமல் செய்யப்பட வேண்டுமானால் ஊருக்கு ஊர் தந்தை பெரியார் சிலையும், சிலைப்பீடத்தில் வாசகங்களும் மிக முக்கியமானவை.
அந்த வகையில் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் இடங்களில் எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் சிலையும் நிறுவப்படும் என்று எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது - வரலாற்றினை மிகச் சரியான அறிவிப் பினை ஒரு சரியான கால கட்டத்தில் செய்தவர் என்ற பெருமைக்குரியவராகவும் ஆகி விட்டார் தோழர் திருமாவளவன்.

 -                       --------------------------”விடுதலை” தலையங்கம் 27-12-2012

15 comments:

தமிழ் ஓவியா said...

எண்ணூரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் சீர்த்தி!
ஊர்த் திருவிழா போல் மக்கள் திரண்டனர்
தமிழர் தலைவர் திறந்து வைத்து தன்மான உரை!

எண்ணூர் நகராட்சி வணிக வளாகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ரிமோட் மூலம் திறந்து வைத்தார். உடன் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி, கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு மற்றும் தோழர்கள் உள்ளனர். (எண்ணூர் - 25.12.2012 )

எண்ணூரில் தந்தை பெரியார் ழுழு உருவ வெண்கலச் சிலையை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 25.12.2012 செவ்வாய் மாலை திறந்து வைத்தார். ஊர்த் திருவிழா போல மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருந்தனர். அறிஞர் பெரு மக்கள் கருத்து முரசு கொட்டினர்.

சென்னை திருவொற் றியூரையடுத்த எண்ணூர் ஒரு துறைமுக நகரமாகும். அந்த ஊரில் தந்தை பெரியார் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று கழகத் தோழர்கள் முயற் சியை மேற்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

2007ஆம் ஆண்டு முதல் முயற்சி தொடங்கப் பட்டது. சிறுகச் சிறுக நன்கொடைகளை குருவி சேர்ப்பதுபோல் சேர்த்து தலைமைக் கழகத்தில் ஒப்படைத்து வந்தனர்.

பெரியார் படிப்பகம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தோழர்களும், திரா விடர் கழகத் தோழர்களும் ஒருங்கிணைந்து இந்தப் பணிகளை மேற்கொண் டனர். எண்ணூர் நகர திரா விடர் கழகத் தலைவர் கவிஞர் மு. காளியப்பன், செயலாளர் வெ.மு. மோகன் இணை பிரியா இரட்டையர்கள். எங்கும் இந்த இருவரும் சேர்ந்து வருவார்கள்.

கழகத் தோழர்களின் அன்பான அணுகுமுறை களும், பண்பார்ந்த நடவ டிக்கைகளும் மக்கள் மத்தியில் பெரும் மரியா தையை அவர்கள் பால் ஈட்டித் தந்தன என்றால் மிகையாகாது.

தமிழின உணர்வோ டும், பகுத்தறிவுச் சிந்தனை யோடும் செயல்பட்டால் சங்பரிவார்க் கும்பலுக்குப் பிடிக்குமா? இந்து முன்ன ணியினரிடம் வாலாட்டிப் பார்த்தனர். கருஞ்சட்டைச் சேனையிடமா நடக்கும்? ஒவ்வொன்றையும் அவ்வப் போது முறியடித்தனர்.

எண்ணூர் வணிக வளாகத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்ட மேடையில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது.

அதன் திறப்பு விழா 25.12.2012 செவ்வாயன்று மாலை சிறப்பாக நடை பெற்றது. ஒரு மாத காலமாக சுவர் எழுத்துப் பிரச்சாரம், தட்டிப் பிரச்சாரம், துண்டு வெளியீடுகள் மூலம் பிரச் சாரம் என்பவையெல்லாம் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின்மீது பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண் டாக்கிற்று.

ஊரின் எல்லாப் பகுதி களிலும் குழல்விளக்குகள் இரவைப் பகலாக்கிக் காட்டின.

திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக் கான இருக்கைகள் பார்வையாளர்களுக்கு. 25.12.2012 மாலை 5.30 மணியளவில் திருவொற் றியூர் டோல்கேட் அருகே விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வட சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழகத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், செயலாளர் கி. இராமலி ங்கம் ஆகியோர் தலைமை யில் வரவேற்பு அளிக்கப் பட்டது.

நூற்றுக்கணக்கான திராவிடர் கழகத் தோழர் கள் இரு சக்கர வாகனங் களில் அணி வகுத்துச் செல்ல கழகத் தலைவர் எண்ணூரை நோக்கிச் சென்றார். மாலை 6.30 மணிக்கு எண்ணூருக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். அப்பொழுதே இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

இரவு ஏழு மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச் சித் தமிழர் தொல். திருமா வளவன் வந்து சேர்ந்தார். மாலை 5 மணி முதல் திருத்தணி பன்னீர்செல் வம் குழுவினரின் பகுத் தறிவு இன்னிசை களை கட்டியது.

மானமிகு மு. காளியப்பன் வரவேற்பு

நகர திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் மு. காளி யப்பன் அனைவரையும் உரை நடையிலும், கவிதை யிலுமாக வரவேற்று உரை யாற்றினார்.

சிறுசிறு உதவியாக ஊர் மக்கள் அளித்த நன் கொடை மூலம் உருட்டிச் சேர்த்த தொகையைக் கொண்டு தந்தை பெரியார் சிலையை இன்றைய தினம் இங்கே திறக்கிறோம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் ஆதரவு அளித்தனர் என்று பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.

மானமிகு வெ.மு. மோகன்

எண்ணூர் நகர திரா விடர் கழகத் தலைவர் வெ.மு. மோகன் விழா விற்குத் தலைமை வகித் தார்.

தொடக்கத்தில் அமைதி யாகப் பேச ஆரம்பித்த தோழர் மோகன், நேரம் ஆக ஆக கொஞ்சம் வெடித்துச் சிதறினார். காரணம் இந்து முன்னணி என்ற பெயரால் ஒரு சிறு கூட்டம் கொடுத்துவந்த தொல்லைதான் அந்த வெடிப்புக்குக் காரண மாகும்.

தந்தை பெரியார் சிலை பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்பட்டால் மனம் புண்படுகிறது என்ற இந்து முன்னணியினர் பிரச்சாரம் செய்தார்கள். நாங்கள் சொன்னோம் நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை; மாறாகப் பண் படுத்துகிறோம்.

எவ்வளவு ஆண்டு காலமாக எங்கள் மக்களை பஞ்சமர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் இழிவு படுத்தினீர்கள். இன்றுகூட பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் கோயில் கருவறைக்குச் சென்றால் சாமி சிலை தீட்டாகி விடும் என்று சொல்கிறீர்களே இது எங்கள் மனதைப் புண்படுத்தாதா?

எங்கள் தமிழர்களைப் பார்த்து சக்கிலிப் பயல் என்றும், சாணாரப் பயல் என்றும் ஒருமையில் கேவலமாகப் பேசி நடத்தினீர்களே. அது எங்களைப் புண்படுத்தாதா என்று கேள்விமேல் கேள்விகளை அடுக்கினார்.

தொடர்ந்து தமிழர் தலைவர், தொல். திருமாவளவன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி உள்ளிட்ட அனைவருக்கும் விழாக் குழுவின் சார்பில் பயனாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் சிலை திறப்பு

தந்தை பெரியார் முழு உருவ வெண் கலச் சிலையை, மின் பொத்தானை அழுத்தித் திறந்து வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் வாழ்க!

அன்னை மணியம்மையார் வாழ்க!

தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!

என்ற முழக்கங்கள் கோடை இடியென முழங்கின.

மேனாள் அமைச்சர் கே.பி.பி. சாமி

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறி தமிழனை முதுகெலும்போடு உலகமே வியக்கும் வகையில் நிமிர்ந்து நடக்கச் செய்த தந்தை பெரியார் சிலை எண்ணூரில் திறக்கப்பட்டு இருப்பது பெருமைக்கு உரியதாகும்.

அத்தகைய தலைவரின் சிலை இங்கே திறக்கப் படுவதற்காக பெருமைப்பட வேண்டும் - வரவேற்க வேண்டுமே தவிர எந்த வகையிலும் எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமற்றது என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

தமிழர்களின் இழிவைத் துடைப்பதற்கு வாழ்நாள் எல்லாம் பாடுபட்டவர் தந்தை பெரியார்.

திருச்செந்தூர் கோயிலை எடுத்துக் கொண்டால் கோயிலுக்குள் உள்ள முருகனைப் பார்க்க வேண்டு மானால் அதற்கென்று கதவில் ஓர் ஓட்டை போட்டு வைத்திருந்தார்கள். அதன் வழியாகத் தான் நாடார் பெரு மக்கள் கடவுள் சிலையைப் பார்க்க முடியும்.

எண்ணூர் பெரியார் சிலை திறப்பு விழாவில் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை - பெரியார் பிஞ்சு பெரியார்செல்வன் பாடினார். (25.12.2012)

அந்த நிலை மாறி அக்கோயிலில் தர்ம கர்த்தாவாக நமது அன்புக்குரிய சிவந்தி ஆதித்தன் அவர்கள் வர முடிகிறது என்றால் வரவேற்கத்தக்க இந்த மாற்றத் திற்குத் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் உழைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

மத்திய அமைச்சர் கே.எஸ். இராமசாமி என்பவர் திருச்செந்தூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய சென்றபோது அங்கு இருந்த அர்ச்சகப் பார்ப்பான் பிரசாதத்தைத் தூக்கி எறிந்தான். நான் யார் தெரியுமா? மத்திய அமைச்சர் என்று உரக்கக் கத்தினார், கத்தி என்ன செய்ய முடியும்? அங்கு சென்றால் அப்படித்தான் அதற்கான அமைப்பு முறையை மாற்றி அமைக்கும் வரையில் இழிவை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்?

எண்ணூர் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பெருந்திரளாக திரண்டிருந்த பொதுமக்கள், மற்றும் இன உணர்வாளர்கள் (டிச.25)

தமிழ் ஓவியா said...

அந்த இழிவைத் துடைக்கப் பாடுபட்டவர்தான் இங்கே இன்று சிலையாக நிற்கின்ற தந்தை பெரியார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டம் கலைஞர் ஆட்சியில் இயற்றப்பட்டு, அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு செயல்படுத்த முடியாதபடி பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றிருக் கின்றனரே - இதற்கெல்லாம் ஆரியர்களோ, அவர்களின் அடி வருடிகளோ என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பெரியார் சிலைப் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் சட்டப்படி தவறானதா? எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - நீதிபதி எம்.எம். இஸ்மாயில் என்ன சொன்னார்?

யாருடைய சிலை திறக்கப்படுகிறதோ அவருடைய வாசகங்களைத்தான் சிலைப் பீடத்தில் பொறிப்பாளர்கள் என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார் என்பதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது? என்ற வினாவோடு தமதுரையை நிறைவு செய்தார் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைக் கொள்கை என்பது ஜாதி ஒழிப்பே!

தமிழ் ஓவியா said...

மனித சமூகத்தில் பேதங்களுக்கு இடமில்லை என்று எடுத்துச் சொன்னவர், இடித்துச் சொன்னவர் தந்தை பெரியார்.

அந்த ஜாதியைப் பாதுகாக்கக் கடவுள் வந்தபோதும் மதம் வந்த போதும், சாஸ்திரங்கள் வந்தபோதும், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் வந்தபோதும் அவற்றை எதிர்க்கக் கிளர்ந்து எழுந்தவர் தந்தை பெரியார்.

1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு தனி (ஸ்பெஷல்) மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்களைத் தந்தனர்.

இந்தவகையில் அதுதான் முதல் நிகழ்ச்சியாகும். அம்மாநாட்டில்தான் தந்தை பெரியார் தெரிவித்தார். ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டம் எப்படி சுதந்திர மக்களுக்கானது? சுதந்திரம் இருக்கும் நாட்டில் அதன் அரசியல் சட்டத்தில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு இன்று வரை விடை இல்லையே!

ஜாதியை ஒழிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் திருத்தா விட்டால் அந்தப் பகுதியைப் பகிரங்கமாக நாள் குறித்து திராவிடர் கழகத் தோழர்கள் எரிப்பார்கள் என்று அறிவித்தாரே - இதுவரை சட்டம் திருத்தப்படவில்லையே!

சட்டத்தை எரித்தால் 3 ஆண்டு தண்டனை என்றுதானே அந்தப் போராட்டத்துக்காக நிறைவேற்றி னார்கள் அது கண்டு தந்தை பெரியாரோ, திராவிடர் கழகத் தோழர்களோ அஞ்சவில்லையே முப்பதாண்டுத் தண்டனை என்றாலும் பின் வாங்கப் போவதில்லை என்று அறிவித்தாரே தந்தை பெரியார். பத்தாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றை எடுத்துக் கூறினார் துணைத் தலைவர்.

சிலைக் குழுவின் தலைவர் கோ. நாராயணமூர்த்தி அவர்கள் தமதுரையில், வைகுண்டசாமி போன்ற சீர்திருத்தத் தலைவர்கள் ஜாதியை எதிர்த்துப் போராடிய தகவலை எல்லாம் எடுத்துக் கூறி தந்தை பெரியார் ஒட்டு மொத்தமான தமிழர்களின் இணையற்ற தலைவர் - அவரின் சிலையை எண்ணூரில் திறப்பது பெருமைக் குரியது என்று கூறினார். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எழுச்சியுரை யாற்றினர்.

பெரியார் படிப்பகம் மா. லட்சுமணன் நன்றி கூறினார். சிலை வைக்க உழைத்த தோழர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...


சொர்க்கவாசல் சென்ற முதல் அமைச்சர் கலைஞர் கருத்து


கேள்வி: தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், தமிழக முதல் அமைச்சர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றிருக்கிறாரே?

கலைஞர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விடியற்காலை 4 மணிக்கே முதலமைச்சர் ஜெயலலிதா, தன் உடன்பிறவாச் சகோதரி (?) சசிகலாவுடன் வைகுண்ட வாசலைப் பார்க்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று அய்யங்கார்கள் புடைசூழ நிழற்படத்தில் காட்சி அளிப்பதைப் பார்த்து, தமிழகம் எப்படிப்பட்ட முதல் அமைச்சரைப் பெற்றிருக்கிறது என்பதை தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் எண்ணி வேதனை அடைந்திருப்பார்!

ஜெயலலிதாவுக்கு வாக்களித்த பரிதாபகரமான டெல்டா மாவட்ட விவசாயிகளோ, முதல் அமைச் சருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது, நாம் பயிரிட்ட இந்தக் கருகிய பயிர்களைப் பார்க்க நேரம் இல்லையா என்றுதான் எண்ணியிருப்பார்கள்!

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 30இல் திருச்சியில் மாபெரும் இணைதேடல் பெருவிழா

டிசம்பர் 30இல் திருச்சியில் மாபெரும் இணைதேடல் பெருவிழா
தி.க. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேட்டி

திருச்சியில் 30ஆம் தேதி நடைபெறவுள்ள மன்றல் 2012 இணை தேடல் பெருவிழா குறித்து செய்தியாளர்களிடையே திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் விளக்கம் அளித்தார். உடன் பிரீமியர் அரிமா சங்க தலைவர் ராஜேந்திரன், சேர்மன் தசரதன், தி.க. மாவட்ட தலைவர் மு. சேகர் ஆகியோர் உள்ளனர்.

திருச்சி, டிச.27- டிசம்பர் 30ல் திருச்சியில் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா நடைபெறவுள்ளதாக தி.க. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கூறினார்.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் மற்றும் பிரிமீயர் அரிமா சங்கம் இணைந்து, வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி திருச்சி பெரியார் மாளி கையில் மாபெரும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு- இணைதேடல் பெருவிழா மன்றல் நிகழ்ச்சியினை நடத்துகின்றன.

இதனையொட்டி தி.க. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை ஏராளமான ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்கள் நடத்தப்பட் டுள்ளன. சென்னை பெரியார் திடலில் கடந்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி நடைபெற்ற மன்றல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது.

அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் இரண்டு ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது திருச்சியில் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த இணைதேடல் நிகழ்ச்சியில் ஜாதி, மதம், ஜாதகம் பார்க்காமல் நடத்தப்படுகிறது. இதில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்றுத்திறனாளிகள், மணமுறிவு பெற்றவர்கள், துணையை இழந்தவர்கள் என 5 பிரிவுகளின் அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

காலை 8 மணி முதல் பதிவுகள் நடைபெறும். அதில் ஒவ்வொருவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. அதிக பேர் பதிவு செய்வதால் இந்த அறிமுக நிகழ்ச்சிக்கு 200 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற வர்களும் இணையதளம் மூலம் தொடர்பு கொள் ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்நிகழ்வில் பங்கேற் போருக்கு மருத்துவ, உளவியல், சட்ட ஆலோ சனைகளுக்கென சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்ப ட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும் சிறப்புரை ஆற்றுவார்.

சென்னை, திருச்சியை தொடர்ந்து மதுரை, சேலம், கோவை ஆகிய மாநகராட்சிகளில் இந்த மன்றல் நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பெரியார் கல்வி நிறுவ னங்களின் ஒருங்கிணைப்பாளர் பேரா.ப.சுப்பிர மணியன், மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், பிரிமீயர் அரிமா சங்கத் தலைவர் ராஜேந்திரன், தசரதன், பன்னீர்செல்வம், சோமு ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


தனிமையை ஒதுக்கி நட்பு வட்டத்தைப் பெருக்குங்கள்!
-----------தமிழர் தலைவர்

தனிமையை இனிமை என்று பலர் சொல்வதுண்டு; ஆனால் அது சில நேரங்களுக்கு மட்டுமே; சில மனிதர்களுக்கு மட்டுமே.

எப்படி, எதையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அதுவே உடலுக்கு ஊறு செய்கிறதோ, அதுபோலத்தான் தனிமையும்கூட. உயிர்க் கொல்லியாக, முடியாத மனிதர்களாக நம்மை ஆக்கி முடக்கி - விரைவில் முதுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்று நம்மை உருட்டி விட்டிடக் கூடும்.

நல்ல பிள்ளைகளைவிட நாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது நல்ல நட்புறவு கொண்ட நல்லவர் களான நண்பர்கள் வட்டத்தைத்தான்.

எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது, நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், குறிப்பெடுத்தல் - அதுபற்றிய அசை போடுதல் (Reflecting thinking - Proactive thinking) ஆக்க ரீதியான எண்ணவோட்டங்களை வளர்த்தல் இவையெல்லாம் முதுமையை பெரும் அளவு வீழ்த்தும் விவேகமான வாழ்க்கை நடைமுறைகளாகும்.

இவற்றுக்கெல்லாம் மேலானதும், தேவையானதும் நண்பர்களிடம் கலந்து கலகலப்பாகப் பேசுதல்; அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் நடத்திடும் சுயமரியாதைத் திருமணங்களில்கூட உற்ற நண்பர்களாக வாழுவோம் என்ற உறுதிமொழியை மணமக்கள் இருவரும் எடுக்கும்படிச் செய்தார்கள்.


தமிழ் ஓவியா said...

மனந்திறந்த நட்பு, லாபக் கணக்குப் போடாது நம்மின் உண்மை நலம் விரும்பிய நட்பு, நகுதற்பொருட்டு இருக்காது, மிகுதியாக நாம் செல்லும் போது, இடித்துச் சொல்லி, அல்லது படித்துப் படித்துச் சொல்லி நம்மை நல்வழியை விட்டு நகராது பார்த்துக் கொள்ளும் முறை சார்ந்த நட்பு மிக மிக அவசியம் அல்லவா?

அப்போதுதான் அது உடுக்கை இழந்தவன் கை போன்ற நட்பாக அமைய முடியும்; இன்றேல் உடுக்கை (இடுப்பு வேட்டி) பறிப்பாக அல்லவோ மாறி விடக் கூடும்?

தனிமையை ஒரு தண்டனை போல் கருதிட வேண்டும்; (சிறைச் சாலைத் தண்டனை களிலேயே கொடுமை யான தண்டனை தனிமைச் சிறைதானே! - ஒரு குறிப்பிட்ட அளவு தனிமை என்றால் அத் தகைய கைதிகள் தங் களது நடத்தைப்பற்றி தாங்களே சுயபரிசோ தனை செய்து மாற்றத் திற்கு ஆளான மனிதர் களாகவும் மாறலாம். ஆனால் அதுவே 24 மணி நேரமும் என்றால் அக்கைதி அல்லது அதுபோல் வாழ்பவர்கள் பைத் தியம் பிடித்து, சலிப்படைந்து, விரக்தியின் விளம்பிற்கே சென்று தெருவார்க்கும் பயனற்ற வீணன் ஆகி விடுவார்கள்.

இத்தனிமை, முதுகுடிமக்களுக்குத் திணிக்கப்படும் சூழல்தான் இன்று எங்கும்!

தமிழ் ஓவியா said...

பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ, படிப்பு, கல்வி, வீட்டில் உள்ள பலரும் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் யந்திரங்களாகி விட்டு வீடுகளுக்கு வரும்போது உண்ணக் கூட எண்ணாது, அப்பாடி களைப்பு நீங்க படுத்தால் போதும் என்று வரும்போது, தன் துணைவி மக்களுடன்கூட பேச முடி யாமல் அரக்க பறக்க உண்டு உறங்கிடச் செல்வர்; இல்லையேல் வீடுகளில் அறைக்கு அறை அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து, அப்போதைக்கு ஆளாகி உறங்கிடுவர்;

வீட்டின் பெரியவர்கள் பேட்டி கேட்டு வரம் பெற்று வாழும் நவீன வாழ்க்கையின் அங்கங்களாக நாளை எண்ணுவோராக அல்லது தள்ளுபவர் களாக வாழ்ந்து முடிய வேண்டியவர் களாகிறார்கள்.

எனவே ஊன்றுகோல் எப்படி முதுமை யில் பயன்படுகிறதோ அப்படி முதியவர் களுக்குப் பயன்பட வாழ்விணையர்கள் 2 பேரக் குழந்தைகள் (வீடுகளில் குடும்பங் களில்) வெளியில் கிளம்பி அல்லது சங்கடமில்லை என்றால் வீடுகளுக்கு உயிர்த் தோழர், தோழியர்களை வர வழைத்துக்கூட பழகி உரையாடி மகிழலாமே!

அதுகூட இருவழிப் பாதையாக அமைவது அவசியம் - எப்படி என் கிறீர்களா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கு அய்ந்தாம் பாகமான முதியோர் காதல் என்ற நூலைப் படித்து அதுபோல வாழுங்கள்; அல்லது வாழ முயலுங்கள்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியை சற்று ஒதுக்கி வையுங்கள் - நம் சுயமரியாதை, வசதி எவ்வளவு முக் கியமோ அதுபோல நம்முடன் உள்ளவர் களின் வசதி, சுயமரியாதையையும் பற்றி நினைத்துப் பழகுங்கள்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள சன் என்ற பத்திரிகை குழுமம் தனிமை எவ்வளவு மனிதர் களின் உயிர்க் கொல்லி என்பதுபற்றி அண்மையில் விளக்கி ஓர் ஆய்வினை வெளியிட்டுள்ளது.

அதன்படி உடல் பருமனால் உயிருக்கு எப்படி ஆபத்தோ, 15 சிகரெட்டுகளை ஒரு நாளைக்குக் குடித்தால் அது எப்படி ஆபத்தானதோ, அது போன்றே தனித்தே இருப்பது; அதைப் போக்க எப்போதும் டி.வி.யின் முன்பே அமர்ந்து பார்த்திருப்பதைத் தவிர்த்து அந்தநாள் ஞாபகம் வந்ததே, நண்பனே நண்பனே என்று தழுவி வாழுங்கள்.

குறிப்பாக இது 75 வயது ஆன அனைத்து (இருபால்) முதியவர்களுக் கும் பொருந்தும் WRVS என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஒரு சர்வே நடத்தியுள்ளது.

பிரிட்டனில் உள்ள 65 வயதுக்கு அதிகமான பத்து லட்சம் பேர்.

600,000 பேர்கள் வெறும் தொலைக்காட்சி முன்னே உட் கார்ந்தே தம் நேரத்தைத் தொலைப் பதிலேயே வாழ்வின் எஞ்சிய காலத்தையும் தொலைக்கிறார்களா?

அடிக்கடி நண்பர்களோடு அரட்டை அடித்தாலும் பரவாயில்லை. நடைபயிற்சியில் காலை, மாலை, இடையில் தூக்கம் ஓர் அளவு (Cat’s Nap) உடற்பயிற்சி பேரப் பிள்ளை களுக்கு உதவுதல் - பொதுநலப் பணிகள் அமைப்புகளுக்குச் சென்று உதவிடுதல் - இவை மூலம் உங்கள் நேரத்தைப் பகிர்ந்து, தனிமையை ஒதுக்கி, பொதுமையை - நட்பு வட்டத்தை வளர்த்து, உங்கள் ஆயுளை யும் வளர்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள், முதியவர்களே!

தமிழ் ஓவியா said...


கழகத் தலைவரின் தருமபுரி உரை

பெரியாரின் உழைப்பாலும் திராவிடர் இயக்கத்தின் தொண்டாலும் படித்துப் பட்டம் பெற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் சில புல்லுருவிகள் நமது மக்களிடையே ஜாதி எனும் நச்சு விதையை விதைத்து, இதிகாச காலத்துக்கு மீண்டும் நம்மை இட்டுச் செல்ல, பார்ப்பனருக்கு துணை போகும் காரியத்தில், சுயநலம் கருதி இறங்கி உள்ளார்கள். இது மிகவும் ஆபத்தானது.

இந்நிலையில் தருமபுரியில் நடைபெற்ற நமது ஜாதி ஒழிப்பு மாநாடு, காலத்தின் கட்டளை ஆகும். 1950ஆம் ஆண்டு முதல் விடுதலை நாளிதழைப் படிப்பது என்பது என்னுடன் ஊறிப் போன ஒன்று.

ஆசிரியரின் தருமபுரி மாநாட்டு உரையை விடுதலை யின் ஊன்றிப் படித்தேன். நமது இளைய சமுதாயத்துக்கு எச் சரிக்கை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து கொடுப்பதாகவும் அமைந் துள்ளது. இந்த சிறப்பான உரையை புத்தக வடிவில் வெளியிட்டு ஆவணமாக்க வேண்டுகிறேன்.

- மா. கிருட்டிணமூர்த்தி
மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...

பெரியார் ஊழித் தீ - யாரும் அழிக்க முடியாது!
திராவிடர் கழகத்தை எதிர்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும்!
எண்ணூர் பெரியார் சிலை திறப்பு விழாவில் எழுச்சித் தமிழர் கர்ச்சனை!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் துவங்க இருக்கும் மருதம் தொலைக்காட்சிக்கு தொல்.திருமாவளவன் அவர்களிடம் தமிழர் தலைவர் மூலமாக தங்க நாணயம் நன்கொடை வழங்கிய தோழர் (எண்ணூர், 25.12.2012)

எண்ணூர், டிச. 27- திராவிடர் கழகத்தின் கொள்கையை எதிர்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

எண்ணூரில் 25.12.2012 மாலை நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியதாவது:

புதிய தலைமுறைக்கு பகுத்தறிவுச் சிந்தனை வெளிச்சத்தைப் பரப்பித்தான் இங்கே தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதற்காகப் பாடுபட்ட தோழர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.

யாருக்குச் சிலை திறப்பு?

நாமெல்லாம் தலைநிமிர்ந்து நடமாடமுடிகிறது என்றால் அதற்கான உரிமையைப் பெற்றுத் தந்த தலைவருக்கு நன்றி செலுத்தவே இங்கே சிலை திறக்கப்படுகிறது. நன்றி உணர்வு உள்ளவர்கள் வரவேற்பார்கள். நன்றி உணர்வு இல்லாதவர்கள் குறை கூறுவார்கள். அதுபற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மூதறிஞர் என்று கூறப்படும் ஆச்சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியிலே எங்கள் கலைஞர் அமரமுடிகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் அய்யா.

நான் தலை நிமிர்ந்து நிற்பது யாரால்?

இந்த மேடையிலே தலைநிமிர்ந்து நிற்கிறேன் - தோளுயர்த்தி நிற்கிறேன் என்றால் அதற்கான முழுப் பொறுப்பு தந்தை பெரியார் என்பதை மிகுந்த நன்றியோடு, உண்ர்ச்சியோடு தெரிவித்துக் கொள் கிறேன் (பலத்த கரவொலி).

திருமாவளவன் இப்படிப் பேசுகிறானே - உரிமை முழக்கமிடுகிறானே என்று சிலர் ஆத்திரப்படு கிறார்கள். நியாயமாக என்மீது ஆத்திரப்படுவதை விட என்னை தன்மான உணர்வோடு உரத்தக் குரலில் பேச வைத்த தந்தை பெரியார் மீது ஆத்திரப் படவேண் டும். எனக்கு இந்தத் துணிவைத் தந்த தந்தை பெரியாரிடம் ஆத்திரப் படவேண்டும். துணிவிருந்தால் தந்தை பெரியாரை எதிர்த்துப் பேசுங்கள் பார்க்கலாம்.

ஒற்றை மனிதர் உருவாக்கிய புரட்சி

அந்த ஒற்றை மனிதர் உருவாக்கிய புரட்சி சாதாரணமானதல்ல!

டாக்டர் அம்பேத்கர் ஜாதியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்துப் பேசினார். போராடினார் என்றால் அதற்கொரு நியாயம் இருக்கிறது. அவரே ஜாதிக் கொடுமையால் அவமதிக்கப்பட்டவர். அதற்காகப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் தந்தை பெரியாருக்கு என்ன அவசியம் வந்தது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவரா?

கீழ் ஜாதி என்று தள்ளி வைக்கப்பட்டவரா? இல்லையே! அவர் நினைத்திருந்தால் பார்ப்பனர் களின் தோளில் கை போட்டுக் கொண்டு செல்லலாமே!

அந்தஸ்துள்ள குடும்பத்தில் பிறந்தவர். பொரு ளாதார வளமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ வாழ்ந்திருக்க முடியும். தான் வகித்த 29 பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு செல்வச் செழுமைகளை எல்லாம் உதறி எறிந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தானே குரல் கொடுத்தார்? அதற்கான பாதையைத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார்?

தமிழ் ஓவியா said...

எத்தனை எத்தனை இன்னல்களை அதற்காக அவர் எதிர்கொள்ள நேரிட்டது? அழுகின முட்டையால் அடிக்கவில்லையா? எதற்காக அவர் அதனை ஏற்றுக் கொண்டார்? யாருக்காகப் போராடினார்? ஒட்டுமொத்த தமிழர் சமுதாயத்துக் குத்தானே வாழ்நாள் முழுவதும் போராடினார்.

பெரியாருக்கு ஈடு - இணை உண்டா?

எத்தனை அரசர்கள் தோன்றினார்கள்? எத்தனை மகான்கள், மகாபுருஷர்கள் எல்லாம் வந்தார்கள்? யாரும் ஜாதி இழிவைப் பற்றிக் கவலைப்பட வில்லையே. பெரியார்தானே சிந்தித்தார். அவர் சிந்தித்து எடுத்துச் சொன்னபிறகுதானே நமக்கு உணர்வு வந்தது? பெரியாருக்கு முன்னால் இதே கருத்தைக்கூட சிலர் அங்கொன்றும், இங்கொன்று மாக எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

இயக்கம் கண்டது யார்?

அயோத்திதாசர் பேசி இருக்கிறார், எழுதி இருக்கிறார் - வைகுந்த சாமி சொல்லியிருக்கலாம். அய்யன் காளிகர் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் தனிப்பட்டவர்கள் சொன்ன கருத்துக்களே தவிர, அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இயக்கம் நடத்தியவர் யார்? களத்தில் நின்று போராடியவர் யார்?

தனக்குப் பின்னாலும் அந்த இயக்கம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவர் யார்? தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு தமிழர் தலைவர் எவ்வளவு சிறப்புடன் இயக்கத்தை நடத்திச் செல்லுகிறார்!

உலகத்திலேயே திராவிடர் கழகம் போன்ற நாத்திகத்தை - பகுத்தறிவைப் பறைசாற்றும் இயக்கம் உண்டா? அமைப்பு உண்டா? கிடையாதே! (பலத்த கரவொலி) பகுத்தறிவு பரப்பும் ஒரே விசன் (vision) திராவிடர் கழகமே.

ஜாதி என்னும் பருப்பு இங்கு வேகாது என்று சொன்னார்கள். அது முற்றிலும் உண்மை. பெரியார் என்னும் நெருப்பு சாதாரணமானதல்ல - அது ஒரு ஊழித் தீ! யாராலும் அதனை அணைக்க முடியாது - அழிக்கவும் முடியாது!

என்னை ஓரங்கட்டலாம்

திருமாவளவனை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டலாம். ஆனால் பெரியார் இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. பெரியார் இயக்கம் என்றால் அதில் திருமாவளவனும் இருக்கிறான்.

என்னை யாரும் தனிமைப்படுத் தவும் முடியாது. அந்தத் தைரியத்தில்தான் திருமா வளவனும் இருக்கிறான். சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்றாரே தந்தை பெரியார். கொலை வாளினை எடடா சில கொடியோர் செயல் அறவே என்று புரட்சிக் கவிஞர் பாடவில்லையா? புரட்சிக் கவிஞர் என்ன ரவுடியா? வன்முறையாளரா?

அத்துமீறு என்றால் திருமாவளவன் வன்முறை யைத் தூண்டுகிறான் என்று சொல்லலாமா?

பெரியார் திடலில் வளர்ந்தவன் திருமாவளவன்


எண்ணூரில் மோகன் குடும்பத்தார் சார்பில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.

நான் பெரியார் திடலில் வளர்ந்தவன். சமுதாயத் தைத் தெரிந்து கொண்டவன். அரசியலைக் கற்றுக் கொண்டவன். பெரியார், அம்பேத்கரை உள்வாங்கிக் கொண்டவன். ஆதலால் நாகரிகம் தெரிந்தவன். அவதூறாகப் பேச எனக்குத் தெரியாது. தமிழர் தலைவர் அடிக்கடி சொல்லுவார். எங்களுக்குச் சொந்த புத்தி தேவையில்லை; தந்தை பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்வார். நானும் அதைத்தான் சொல்லுகிறேன்.

வேண்டாம் அவதூறு!

வீணாக அரசியல் லாபத்துக்காக அவதூறுகளைப் பரப்பக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மோதலை உண்டாக்க ஆசைப்படக் கூடாது. தொழிலாளர்கள் மத்தியிலே மாச்சரியங்களை ஏற்படுத்தக் கூடாது. எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ளக்கூடிய பக்குவத்தைத் தமிழ் மண்ணில் தந்தை பெரியார் உருவாக்கி வைத்து உள்ளார். உணர்ச்சிகளைத் தூண்டி, வன்முறைகளை உருவாக்கி விடலாம் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம்.

தந்தை பெரியார் சிலை இல்லாத ஊரே இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களால் வணங்கத்தக்க, பின்பற்றத்தக்க தலைவர் தந்தை பெரியார். பெரியார் கொள்கைக்கு எதிர்ப்பு என்று வந்தால் திராவிடர் கழகத்தோடு தோளுக்குத் தோளாக நிற்பார்கள் விடுதலைச் சிறுத்தைகள் என்பதை பெரியார் சிலை திறப்பு விழாவிலே கூறிக் கொள்கிறேன் (கரஒலி அடங்க வெகு நேரமாயிற்று).

விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும். சொல், செயல்பாடு அனைத்திலும் துணை நிற்கும். பெரியார் வெல்க! ஜாதி ஒழிக!!

- என்று முழக்கமிட்டார் - விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது!


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது எதற்கு?

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக் கொள்கையினை _ சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும் என்று கூறி சிலை வைத்திட அனுமதி அளித்தார்.

பொது வாழ்வில் பங்கேற்ற பலருக்கும் சிலை வைத்திடும் பொழுது அவரது பெயர் மற்றும் வாழ்ந்த நாள் பற்றிய குறிப்புகளுடன் சிலை நிறுவிடுவர். ஆனால் தந்தை பெரியாருக்கு எத்தனை சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவரது பகுத்தறிவுக் கருத்துகளும் அவைகளில் பொறிக்கப்படுகின்றன. பரந்துபட்ட, நிலைத்திடும் கருத்துப் பரவலுக்கு உரிய அணுகுமுறையின் முழுமையான அடையாளமே தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிடுவது. இதில் வழிபாடு கிடையாது. பகுத்தறிவுக் கருத்துப்பரவல்தான் சிலை வைத்திடுவதன் முழுப் பரிமாணமாகும்.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயக்கம் பெரியார் இயக்கம். சோதனைகளையே சாதனையாக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றது பெரியார் இயக்கம். தந்தை பெரியார் வாழ்ந்த பொழுது, ஒரு சமயம் சுற்றுப் பயணத்தில் அவரது எதிரிகள் அவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் அவரை நோக்கி செருப்பு வீசினர். வீசப்பட்ட ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் பெரியாரது வாகனத்தில் வந்து விழுந்தது. பயணப்போக்கில் சற்று தூரம் வந்துவிட்ட பெரியார், வாகனத்தை திருப்பச்சொல்லி, செருப்பு வீசப்பட்ட இடத்திற்கு வந்தார். வீசப்பட்ட செருப்பு ஜோடிகளில் மற்றொன்றையும் எடுத்துக் கொண்டு, வீசப்பட்ட செருப்புகளின் பயன்பாட்டையும் ( ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இருப்பதால் யாருக்கும் பயனில்லை; வீசப்பட்ட மற்றொரு செருப்பும் இருந்தால் நன்றாகப் பயன்படுமே!) வெளிப்படுத்தி எதிரிகளை நாணம் அடையச் செய்து, அவர்தம் செயலினை முறியடித்தார். பின்னர், எந்த இடத்தில் செருப்பு வீசி பெரியாரை அவமானப்படுத்திட நினைத்தார்களோ அந்த இடத்திலேயே அவருக்கு சிலை வைத்து வந்த எதிர்ப்பினையும், பெரியார் தொண்டர்கள் கருத்துப் பிரச்சார வாய்ப்பாக மாற்றினர். செருப்பொன்று விழுந்தால் சிலையொன்று முளைக்கும் எனும் அந்த நிகழ்வின் கவித்துவ வரிகள் - பெரியார் இயக்க கருத்துப் பரப்பல் அணுகுமுறையின் கட்சிதமான கட்டமைப்புகள்!

- வீ.குமரேசன்

( உண்மை - மார்ச் 16-31 )