Search This Blog

22.12.12

கடவுளை நம்பும் முட்டாள்களே!


அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்; அவரன்றி ஓர் அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார். என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடி களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?

இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடிவில்லையே. ஏன்?

கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ்போடா மலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லை, ஏன்? மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கின்றான்?

ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?

கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?

மனிதரிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?

ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம் செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் கெட்ட காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?

கெட்ட காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்த வனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?

மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம், துக்கம், திருப்தி, அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும், இருந்தும் வரவேண்டும்?

மனிதன் படும் அவஸ் தைகள் கடவுளுக்குத் தெரி யாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திரு விளையாடலா?

நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனையாகச் சிருஷ்டித்த கடவுளை விட அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?

இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுரு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?

ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்தாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.

ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.

----------------------------14.7.1970 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

7 comments:

தமிழ் ஓவியா said...

சாமியாட்டம் மிக அதிகமாயிருக்கிறது ......
- தந்தை பெரியார்

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அது போல் கும்பிட்ட குழவிக் கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்காகவே இல்லாவிட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேணும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். கல் சாமிக்கு கை தூக்கித் தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டால் வள்ளுவர் மதம் என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால் குறள் நெறி என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின் உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது. அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத் தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.

தோழர்களே, பட்டிக்காட்டானை விட இந்தச் சென்னைப் பட்டினத்துக்காரர்களே பெரிதும் மூட நம்பிக்கைக்காரர்களாக இருக்கிறார்கள். இங்குதான் சாமியாட்டம் மிக அதிகமாயிருக்கிறது. நமது பெண்கள் சாமியாடுவதைப் பார்த்தால் சாமி என்று ஒன்று இருக்குமானால், அதுகூட ரொம்ப வெட்கப்படும். கண்ட பயல்கள் இன்று சாமியாட்டம் ஆடி அல்லது பிறரை ஆட்டி வைத்து காசு பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டிருக் கின்றனர்.

அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் நல்ல பிரம்பால் நாலு சூடான அடி கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்போது காணலாம் எவ்வளவு சீக்கிரமாக அந்தச் சாமி மலையேறி விடுகிறது என்பதை. கிராமங்களிலெல்லாம் இப்போது சாமி ஆடினால் நல்ல உதை கிடைக்கிறது. அதனால்தான் சாமியாட்டம் அங்கு குறைந்துவிட்டது. நாம்தான் முட்டாள் தனமாக பார்ப்பானுக்கு அழுது வருகிறோமே ஒழிய, நாம்தான் நம் மனைவியை இழுத்துக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, கோவிந்தா போட்டுத் தெருவில் வெட்கமில்லாமல் நடந்து கொண்டு, காவடி தூக்கிக் கொண்டு, குரங்கு போல் குதித்துக் கொண்டு, பார்ப்பானுக்கு அழுது, அவன் வயிற்றை வீங்க வைத்து, முட்டாளாகிக் கொண்டு வருகிறோமே ஒழிய, அவனொன்றும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில்லை.

எனவே, நீங்கள் அறிவு பெற்று முட்டாள்தனத்தைக் கைவிடுவீர்களேயானால் அவனொன்றும் உங்களை அசைத்து விடவோ, அழித்து விடவோ முடியாது.

நான் எனது 17-ஆவது வயதிலேயே இந்தக் கடவுளர்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலிருந்து இன்று வரைக்கும் அதாவது சுமார் 53 ஆண்டுகளாக நானும்தான் இதே பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் நானென்ன சீக்கிரத்தில் செத்துப் போய் விட்டேனா? அல்லது என் சொத்தெல்லாம் அழிந்து போய் விட்டதா? அல்லது எனக்கு இழிவு ஏற்பட்டு விட்டதா? இல்லையே. பின் ஏன் நீங்கள் பகுத்தறிவு வழி நடக்க அஞ்சுகிறீர்கள். அச்சம் விடுங்கள்; அறிவு பெற்றெழுங்கள்.

(26.12.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து..) - (விடுதலை 31.12.1948)

தமிழ் ஓவியா said...

பெண் விடுதலைக்கான தொலை நோக்குச் சிந்தனை :


பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது,
மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமான தாகும். அவர்கள் எல்லாரும் இருவருக்கும் சம்பந்தம் ஏற்படும் சமயங்களில் மாத்திரம் தான் அடிமையாக நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும் கொடு மையாகவும் நடத்துகிறார்கள் என்று ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் ணடிமையின் நீட்சியையும் பெரியார் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

சிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா? என்றார் பெரியார்.

பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத் தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங் களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்என்று சமுதாயப் பொறுப்பினை அறிவுறுத்தியவர் பெரியார்.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியார் பெண்கள் கல்வியையும், வேலையையும்தான் தங்கள் அழகாகக் கருதிட வேண்டும் என்றார். உலகப் பெண் கள் எல்லோரையும் விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழுவாழ்க்கை வாழுகின் றவர்களாகவும் மாறவேண்டும் என்றார்.

பெண் விடுதலைக்கான தொலை நோக்குச் சிந்தனையில் கர்ப்பத்தடையை அறிமுகம் செய்து வலியுறுத்திய முதல் பெண்ணுரிமைப் போராளி பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தை இந்த நாட்டில் அரசு தொடங்குவதற்கு முன்பே பெண்கள் கருப்பாதையைச் சாத்திட ஆணையிட்டவர் பெரியார்.

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண் குலத்தை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண் டும். பெண்ணடிமை ஒழிந்த இடமே சமத்து வம், சுதந்திரம் எனும் முளை முளைக்குமிடம் என்று அறிவித்தவர் பெரியார் மட்டுமே! பெண்களுக்கான விடுதலைத்தீர்வாய்-தியாக முத்திரையாய் பெரியார் ஒருவரே திகழ்ந்தார்.

தமிழ் ஓவியா said...

வீரம்-துணிச்சல் என்பது ஆணின் குணமாகவும், மென்மை-அச்சம் போன் றவை பெண்ணின் குணமாகவும் ஆணா திக்கச் சமூகத்தில் உருவகிக்கப்பட்டதை பெரியார் கடுமையாக மறுத்தார். ஆணுக்கும் `சாந்தம்,`மென்மை போன்ற குணஇயல்புகள் தேவையானவையே; பெண்ணுக்கும் `வீரம், `துணிச்சல் ஆகியவை இயற்கையான குணங்களே என்றார். பிள்ளை பெறுகின்ற உடலமைப்பைப் தவிர பெண்ணுக்கும், ஆணுக்குமிடையே வேறெந்த பாகுபாடும் இல்லையென்றார். பெண்களின் உயிரியல் வேறுபாடுகளை வைத்து அவர்களுக்கு பாலியல் தன்மை கற்பிக்கப்படுவதை கண்டனம் செய்தார் பெரியார்!

பெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் என்றார். பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை என்றார்.

பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறியவர் பெரியார். ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண் ணுக்கும் உண்டு என ஓம்புவதே பெண் ணுரிமை என்றும் கூறினார்.

கற்பு

`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.

தமிழ் ஓவியா said...

புருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே என்பது அய்யா பெரியாரின் கருத்து. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை என்று பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடைபகர்ந்தார் எவரும் இல்லை.

விதவைத்தன்மை என்பது எளியாரை வலியார் அடக்கி இம்சிப்பதல்லாமல் வேறல்ல என்றார். விதவைப் பெண்களின் நிலையையும், வேதனையையும், எண்ணிக் கையையும் எடுத்துக்கூறி விதவை மறு மணத்தை வலியுறுத்தினார் பெரியார். விபச் சாரம் என்பதற்குப் பொருள் என்னவென் றால் தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக் கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதே ஆகும் என்றார்.

இளமை மணம்

`பால்ய விவாகம் என்ற பேரால் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டதை பெரியார் எதிர்த்தார். பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுக்கு, கல் யாணம் என்ற கடுவிலங்கு பூட்டி பிஞ்சிலே பழுக்கச் செய்து, வெம்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம்தான் சகித்துக் கொண்டி ருக்க முடியும்? என்றார்.

பெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள்ளவும் முடியும். என்றதுடன், இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் கால கட்டத்தில் செய்தவர் பெரியார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வர குரல் கொடுத் தார். தேவதாசிகள் சமுதாயத்தில் இருந்து தான் தீர வேண்டும் என்ற சத்தியமூர்த்தி பரம்பரையை முறியடித்தார்.

சொத்துரிமை

பெண் விடுதலைக்கு சொத்துரிமை இன்றியமையாதது என உணர்ந்த பெரியார், பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பொருளாதார ரீதியான பாதுகாப்பும் சுதந் திரமும் பெண்களுக்கு இருக்க வேண்டுமா னால், அதற்கு சுயமாகச் சம்பாதிப்பதற்கு வேலையும், கல்வியும்தான் அவசியம் என்றார். ஆண்கள் புரியும் அனைத்து வேலைகளிலும் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு தேவை என்றார். என்னிடம் ஆட்சி இருந்தால் ஆண்களுக் கான கல்வியைத் தடை செய்துவிட்டு பெண்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலம் படிக்க உத்திரவிடுவேன் என்றார்.

பெண் கல்வி

`வெறும் ஆண்களை மாத்திரம் படிக்கவைத்துவிட்டு, பெண்களை படிக்க வைக்காமல் இருக்கும் சமூகம் ஒரு கண் குருடாக உள்ள சமூகத்தை ஒத்ததாகும் என்பது பெரியாரின் கருத்து.

பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக் கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சந்தி வந்துவிடும். பிறகு தனக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுக்கவும், சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகும். பெண்ணடிமை என் பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள் சொத் துரிமை இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும். ஆதலால், பெண்கள் தாராளமாய், துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் காகக் கிளர்ச்சி செய்து பெற வேண்டும் என்றார் பெரியார்.

தந்திர ஏற்பாடு....

ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதின் கருத்தே பெண் களை அடிமையாக்கவும், அடக்கிப் பய முறுத்திவைக்கவும் செய்த தந்திரமே ஆகும் என்றும், காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு, அவைகளில் உலோகங்களை மாட்டிவைப்பது, மாடுகளுக்கு மூக் கணாங்கயிறு போட்டதால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால், ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கி னால் எதிர்த்து அடிக்க வராமல் இருக்க, எங்கே காது போய் விடுகிறதோ, மூக் கறுந்து போய் விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகைக் காட்டத் தயாராய் இருப்பதற்காகவே அது உதவுகிறது என் றும் பெண்களின் அணிமணிகள் ஆசை யையும், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களின் மனோபாவத்தையும் கண்டித்தார்.

- (புதுச்சேரி வானொலி நிலையத்தில் 17.9.2010 அன்று ஒலிபரப்பப்பட்ட ` பெரியாரின் பெண்ணுடிமைச் சாடல்! எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன் ஆற்றிய உரை)

Anonymous said...

அன்புள்ள ஊடக பொறுப்பாளர்களுக்கு வணக்கம், கீழ் குறிப்பிடும் அறிக்கையை தங்களுடைய ஊடகங்களில்

செய்தியாக வெளியிட்டு உதவும் படி விக்டரி கட்சி சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.Please Note: Click the original copy to select your Known language and read itதேசத்தொண்டு செய்வோம் வாருங்கள்அன்புடையீர் வணக்கம்விக்டரி கட்சி சார்பாக, தேசம் முழுவதும் இப்படத்திலுள்ளது போல் இலவச கழிவறைகள் அமைக்க தீர்மானித்துள்ளோம்.


தாங்களும் உதவ முன் வரலாம். ஒரு கழிவறை அமைக்க செலவு ரூபாய் 9000/. பள்ளிகளோ, கல்லூரிகளோ, மாணவர்களோ, சங்கங்களோ, கடைகளோ, தனி தனியாக உதவலாம். நீங்கள் விரும்பும் பெயர்களும் அதில் எழுதுவோம்.நன்றி, வெல்க விக்டரி கட்சியின் சேவை.


தொடர்பு கொள்ள: 805 65 46 395 , 89 406 763 41


வாக்களிப்பீர் இந்தியர்களின் வெற்றி கட்சிக்கேWebsite: www.indiansvictoryparty.com

Email: ivp@indiansvictoryparty.com

கன்னியாகுமரி இந்திய மக்கள் நலப்பணியில்
18-12-12 என்றென்றும் மகிழ்வுடன். ஷாலின்

பெருமாள் தேவன் செய்திகள் said...

ராமசாமி நாயக்கர் ஒரு அறிவாளி, அவரைப் பற்றி பேசும் குறுக்கு வழிச் சீர்திருத்தப் பேர்வழிகள் பஹூத்தறிவாளிகள். என்னத்தச் சொல்ல?