வெற்றியின் திளைப்பில் தருமபுரி முரசு கொட்டியது
எதிர்பார்த்ததைப் போல தருமபுரியில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு நேற்று (9.12.2012) வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய மாநாட்டில் தமது உரையின் தொடக் கத்தில் குறிப்பிட்டது போல - மகிழ்ச்சியோடு இம்மாநாடு நடத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் நடக்கக் கூடாதது நடந்து
விட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகள் கொளுத்தப்படுகின்றன - இந்த
21ஆம் நூற்றாண் டில் அதுவும் ஒரு காதல் திருமணத்தை முன் வைத்து என்றால் இது
என்ன பிற்போக்குத்தனம்!
இந்தக் குற்றத்துக்கு ஆளானவர்களே அடுத்த
கட்டமாக மேலும் மேலும் தவறுகளை செய்தே தீருவது என்ற வெறியில் விளையாட
ஆரம்பித்து இருக்கின்றனர் என்கிறபோது அது எவ்வளவுப் பெரிய விபரீதம்!
இந்த நாட்டில் இலட்சியங்களை, கொள்கை களை, கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி ஒரு கட்சியைக் கட்டுவது எளிதானதல்ல.
அதே நேரத்தில் எளிதாக அமைப்பை
உருவாக்குவது சுலபமாகத் தலைவராவது என்பதற்கு மிகவும் எளிதான - இலகுவான ஒரே
வழி ஜாதி சங்கத்தை அமைத்துத் தலைவராவதாகும்.
அதைவிடப் பெரிய கொடுமை - இந்த நாட்டில்
ஆண்டாண்டுக் காலமாக அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட உரிமை மறுக்கப்பட்ட அடித்தள
மக்களான தாழ்த்தப்பட்டவர்களை அந்நியப்படுத்தி அதற்காக ஓர் அமைப்பைத்
தொடங்குவது என்பதாகும்.
தருமபுரி மாநாட்டில் தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டது போல கி.மு. காலத்திற்குப் பயணம்
செய்ய ஆசைப்படு கிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் -
தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் இந்த மண்ணை நன்கு பக்குவப்படுத்தி
வைத்துள்ள நிலையில், இங்கே களைகளைப் பயிரிடலாம் என்று சிலர் அடம் பிடிப்பது
- ஆபத்தான போக்காகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜாதிய அமைப்புகள் துளிர்த்ததாக வரலாறு இல்லை; இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும்கூட உண்டு.
இதில் நாம் கவனிக்கத்தக்கது என்னவென் றால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான உரிமைகள் இன்னும் ஏராளமாக இருக் கின்றன.
அந்தத் திசையில் கவனத்தைச் செலுத்தாமல்
சமூக நீதியைப் பின்னுக்குத் தள்ளும் ஒரு செயலில் பிற்படுத்தப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்த சிலர் இறங்கும்போது, திராவிடர் கழகம் அலட்சியமாக இருக்க
முடியாது.நல்லறிவு கொளுத்த வேண்டிய கடமை திராவிடர் கழகத்துக்கு உண்டு - அதுதான் தருமபுரி மாநாடு.
மக்கள் சமுத்திரத்தில் தருமபுரி படகுபோல தத்தளித்தது.
இந்த மாநாட்டின் அருமையை உணர்ந்து கொண்டு
இருக்கிறார்கள் பொது மக்கள்! ஜாதி - தீண்டாமைகளுக்கு இங்கு வேலை கிடையாது -
அவற்றிற்கு இடம் தர மாட்டோம் என்பதை உணர்த்துவதைத்தான் அந்த மக்கள் கடலின்
எழுச்சி வெளிப்படுத்துகிறது.
ஊரே ஒரு புதிய கோணத்தில் தகத்தகாய
எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றது. மாநாட்டுக்கு முன்பும் பேசப்பட்டது -
பின்பும் பேசப்படும் என்கிற அளவுக்கு மாநாடு புத்தெழுச்சியை ஊட்டியுள்ளது.
மாநாட்டின் தீர்மானங்களும், எடுத்து வைக்கப்பட்ட கருத்துரைகளும் புத்துணர்ச்சியை மக்களுக்குக் கொடுத்திருக்கிறது.
தவறு செய்பவர்கள் கூட மறு சிந்தனைக்கு ஆளாகும் வகையில் அவை அமைந்திருந்தன என்பதுதான் மாநாட்டின் உச்சமாகும்.
குறுகிய காலத்தில், திட்டமிட்ட வகையில்
மாநாட்டுப் பணிகளை நேர்த்தியாகச் செய்து வெற்றிக் கொடி நாட்டிய திராவிடர்
கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவு கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் மிகவும்
பாராட்டுதலுக் குரியவர்கள் ஆவார்கள். வெகுவாகப் பாராட்டு கிறோம் -
பாராட்டுகிறோம்!
--------------------------"விடுதலை” தலையங்கம் 10-12-2012
16 comments:
எங்கள் கல்லறைகள்மீது பதவி நாற்காலியா? தருமபுரி மாநாட்டில் தமிழர் தலைவர் அழைப்பு
ஜாதியை அரசியலுக்கு முதலீடாக ஆக்க வேண்டாம்!
எங்கள் கல்லறைகள்மீது பதவி நாற்காலியா?
ஒன்றுபட்டு சமூக நீதிக்காகப் போராடுவோம், வாருங்கள்!
தருமபுரி மாநாட்டில் தமிழர் தலைவர் அழைப்பு
தருமபுரியில் நடைபெற்ற ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார். உடன் பங்கேற்ற பல்வேறு அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (9.12.2012)
தருமபுரி, டிச.10- தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய சமூக நீதிக் களங்கள் உண்டு. அவற்றிற்காகப் போராடுவோம் - வாருங்கள்! ஜாதியை அரசியல் முதலீடாக்கி, கல்லறைகள்மீது பதவி நாற்காலி களைப் போட முயற்சிக்க வேண்டாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
இந்த மாநாட்டை நாங்கள் ஒன்றும் மகிழ்ச்சியாக நடத்திடவில்லை. நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஏனிந்த மாநாடு?
2012இலும் ஜாதி தீண்டாமையை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டியுள்ளது என்ற வேதனை ஒருபுறம்; அதே நேரத்தில் இந்தக் கால கட்டத்தில் நடத்தித் தீர வேண்டிய மாநாடு - இது திராவிடர் கழகத்தின் கடமை.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 தீர்மானங் களும் மிகுந்த தொலைநோக்கோடு நிறைவேற்றப்பட் டுள்ளன. மேக்னகார்டா (ஆயபயேஉயசவய) என்று சொல்லத் தக்கது. இத்தீர்மானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்படும்.
.
மக்களின் சிவில் உரிமைகளுக்காக 1945 முதல் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1955இலும், 1989இலும் சட்டம் வருகிறது.
மனித உரிமைகள் பேணப்படுகின்றனவா?
மனித உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு என்ற வகையில் இயற்றப்படும் சட்டங்கள் பிற்காலத்தில் தேவைப் படாதவைகளாக ஆக வேண்டாமா? அப்பொழுதுதானே மனித உரிமைகள் பேணப்படுகின்றன. தீண்டாமைக்கு இடம் இல்லை என்ற பெருமிதமான நிலை உருவாகும்.
இங்கே என்னடா என்றால் எல்லாம் - தலைகீழாக அல்லவா உள்ளன.
தீண்டாமை என்றால் என்னென்ன? எவை வன்கொடுமைகள் என்று வெளியிடப்படும் பட்டியலைப் பார்த்தால் மக்கள் மத்தியில் மோசமான, அநாகரிகமான எண்ணங்களும், உணர்வுகளும் தான் வளர்ந்து வந்திருக்கின்றன என்று நினைக்கக் கூடிய அளவுக்குத் தான் நிலைமைகள் இருந்து வருகின்றன.
தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தைத் திணிக்கும் அளவுக்கல்லவா தீண்டாமைக் கொடுமை வளர்ந் துள்ளது? இதற்காக வெட்கப்பட வேண்டாமா?
நாயைக் கொஞ்சுபவன் சக மனிதனை வெறுக்கிறானே!
தந்தை பெரியார்தான் கேட்டார், நாயைக் கொஞ்சுகிறான், பூனையைக் கொஞ்சுகிறான் மனிதன். ஆனால் தம் சக மனிதனைத் தீண்டத்தகாதவன் என்ற வெறுக்கிறானே இது கொடுமையல்லவா என்று கேட்டார்.
வெளிநாட்டுக்காரன் நம்மைப்பற்றி என்ன தான் நினைப்பான்?
ஏணிப் படிக்கட்டு அமைப்புமுறை
நம் நாட்டு ஜாதி அமைப்பு முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் மிக அழகான வார்த்தையால் படம் பிடித்தார். படிக்கட்டு முறை ஜாதி அமைப்பு முறை (ழுசயனநன ஐநேளூரயடவைல).
ஏணியின் உச்சியில் ஒருவன் இருக்கின்றான், அவன் பிராமணன் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் இரண்டாவது இடத்தில் இருப்பவன் பிர்மாவின் தோளில் பிறந்த சத்திரியன்; மூன்றாமவன் பிர்மாவின் இடுப்பில் பிறந்த வைசியன், நான்காவது ஆள் சூத்திரன் - பிர்மாவின் காலில் பிறந்தவன் - அதற்கும் கீழ்தான் பஞ்சமன் - தீண்டத்தகாதவன் - அதற்கும் கீழே இருப்பவர்கள் நம் நாட்டுப் பெண்கள்.
மேலே இருப்பவன் கொஞ்சம் ஏணியை அசைத்தால் போதும் முதல் ஆள் இரண்டாவது ஆள்மீது, இரண்டாவது ஆள், மூன்றாவது ஆள்மீது, நான்காவது ஆள் அய்ந்தாவது ஆள்மீதும் விழுகிறான்.
5ஆவது இடத்தில்இருப்பவன் தன்மீது விழுந்த நான்காவது ஆளோடு சண்டைபோடும் நிலை. 4ஆவது ஆளுக்கும், 5 ஆளுக்கும் இடையேதான் சண்டை நடக்கும் இவர்கள் தானே பக்கத்துப் பக்கத்தில் இருக்கின்றனர். நான்காவது ஆளும், அய்ந்தாவது ஆளும் அடித்துக் கொண்டு நிற்கும்போது ஏணியின் உச்சியில் இருக்கிற முதல் ஆள் சர்வ சாதாரணமாக - ஒன்றும் தெரியாதவன் போல், அங்கு என்ன நடக்கிறது, சண்டையா என்று கேட்கிறான்.
அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஏணிப்படி ஜாதிய அமைப்பு முறை இதுதான். எப்பொழுதும் மூலகாரண கர்த்தாக்களை மறந்துவிடக் கூடாது.
இன்றைக்கு இந்து ஏட்டில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்த சிற்றூரில் கயிலாயநாதர் கோயில் - அங்குள்ள பூசாரிக்குத் துணையாக குட்டிப் பூசாரி - தாழ்த்தப்பட்டவர் ஏழு ஆண்டுகளாக அந்தக் கோயிலில் பணி புரிந்து வந்துள்ளார். தலைமைப் பூசாரி வராத நாட்களில் இவரே பூசைகளை நடத்துவதுண்டு.
அதிகார வர்க்கத்தின் போக்கு!
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினையே கிளப்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவன் எப்படி கோயில் பூசாரியாக இருப்பது என்று கூறி தாழ்த்தப்பட்ட அந்தத் தோழரை தாக்கி இருக்கின்றனர்.
தென் கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீது தரப்பட்டது - ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (னுளுஞ) வழக்கை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்துகிறார்.
பாதிக்கப்பட்ட அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பூசாரி மதுரையில் உள்ள எவிடன்ஸ் என்ற அமைப்பின் துணையை நாடுகிறார். அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுகின்றார்.
இதை அறிந்தவுடன் மேலும் அந்தப் பூசாரிக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றனர். முடிவு என்னவென்றால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பூசாரி தூக்கில் தொங்கினார் என்று செய்தி வந்துள்ளது.
நம் நாட்டில் அதிகார வர்க்கம், போலீஸ்கூட யாருக்குத் துணைபோகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு நிகழ்வு. ஏழு தாழ்த்தப்பட்ட தோழர்களை படகில் ஏற்றிக் கொண்டு போய் கங்கையின் நடுப் பகுதியில் தள்ளிக் கொலை செய்துள்ளனர். ஒரு ஆள் மட்டும் நீந்தித் தப்பிப் பிழைத்துள்ளார். வழக்குப் போடப்படுகிறது. ஒரே ஒருவர் தான் சாட்சி என்பதால் மாவட்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார். உயர்நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பு. வழக்கு உச்சநீதிமன்றம் வரைசெல்லுகிறது.
உச்சநீதிமன்றமோ குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்து இப்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.
30 ஆண்டுகளுக்குப்பின் இப்படி ஒரு தீர்ப்புக் கிடைத்துள்ளது. எனவே சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பி விடலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம் - காலந் தாழ்ந்தாவது குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
எங்கள் கல்லறைகள்மீது உங்கள் பதவி நாற்காலியா?
நீங்கள் அரசியல் மூலம் எந்தப் பதவிக்கும் செல்லுங்கள் முதல் அமைச்சர் மட்டுமல்ல. பிரதமராகக் கூடச் செல்லுங்கள் - அதில் எங்களுக்கு என்ன சங்கடம்?
எங்கள் கல்லறைமீது பதவி நாற்காலி போட்டு உட்கார வேண்டும் என்று மட்டும் ஆசைப்படாதீர்கள்.
அடுத்து நாம் எங்கு செல்ல வேண்டும் என்கிற வளர்ச்சியைப் பற்றி சிந்தியுங்கள். கி.மு.க்கு நாட்டை நகர்த்த வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.
நாங்கள்தான் முன் வருவோம்!
நாளைக்கே உங்களுக்குப் பிரச்சினை, சங்கடம் என்றால், உங்களைக் காப்பாற்ற நாங்கள்தான் வருவோம்.
எங்கள் தாக்குதல் என்பது தத்துவத்தின் மீது தானே தவிர தனி மனிதர்கள்மீது அல்ல.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சரி - இருவரும் யார்? உழைப்பாளி மக்கள்தானே - அடிமை மக்கள்தான் என்பதை ளுநசஎஉந ஊடயளள என்றே குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு சாக வேண்டுமா?
நாங்கள் மாநாடு நடத்துவது நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ள அல்ல.
ஒன்றுபட்டுப் போராடுவோம்!
நாம் ஒன்றுபட்டு போராடுவோம் - நாம் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன என்று பொறுப்போடு அழைப்பு விடுப்பதுதானே இந்த மாநாட்டின் நோக்கம்? திருமாவளவனின் பொறுப்பு வாய்ந்த பேச்சு
இங்கே பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் சகோதரர் திருமாவளவன் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியுடன் பேசினார். நான் அதனை மிகவும் பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்.
எங்களோடு, இரட்டைக் குழலொடு, மூன்றாவது குழலாக அவர் முழங்குவார்.
மாண்புமிகுகள் வரும் - போகும், மானமிகு என்பதுதான் முக்கியம், அது நிலைக்க வேண்டும் அதற்காகத்தான் இந்தக் கூட்டணி. கிராமம் தவறாமல், ஊர் தவறாமல் நமது ஒற்றுமைக்காக நல்லிணக்கத்துக்காக கருத்துப் பிரச்சாரத்தை, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதுதான் இனி எங்களின் முழு மூச்சான வேலை. அந்த வேலையைத்தான் செய்து கொண்டுள்ளோம் என்றால் ஒத்த கருத்துள்ளவர்களோடு கூட்டுப் பணியாகத் தீவிரமாகச் செயல்படுவோம்.
வாருங்கள் சேர்ந்துழைக்கலாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்
மனிதன்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை,26.3.1951)
ஜாதியை ஒழிப்போம்! தீண்டாமையை ஒழிப்போம்! சீறி எழுந்தது காண் தருமபுரி!
அரசியல் கூட்டணியல்ல! அடிப்படை சமூக மாற்றத்திற்கான பே()ரணி!
பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் புரட்சி முழக்கம்!
தருமபுரி,டிச.10-ஜாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பே()ரணி இது என்று தருமபுரி மாநாடு குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முழக்க மிட்டனர்.
தருமபுரி - அதர்மபுரி ஆகலாமா? 2012லும் ஜாதி வெறியா? தீண்டமைத் தீயா? என்ற எழுச்சியுடன் ஒரு மாநாடு தருமபுரியில் நேற்று (9.12.2012) நடைபெற்றது.
நவம்பர் 7 என்றால் ருசியாவில் அக்டோபர் புரட்சி நடைபெற்ற மகத்தான நாள். அந்த நாளில் தருமபுரி மாவட்டம் அண்ணா நகர், நத்தம், கொண்டாம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகள் தீக்கு இரையாக்கப்பட்டன - ஜாதி வெறியர்களால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற தோழர், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான் மாபெரும் குற்றமாம். மானம் பறி போய்விட்டதாம். (அந்தப் பெண் பார்ப்பனர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டி ருந்தால் அந்தக் காதல் அங்கீகரிக்கப்பட்டு இருக் கும் - அப்படித்தானே!)
திட்டமிட்டு ஆயிரம்பேர்களுக்குமேல் கூடி அந்த நாளில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப்பு களுக்குள் புகுந்து சொத்துகளைக் கொள்ளை யடித்து, வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி வெறி யாட்டம் போட்டனர்.
இந்தக் கொடுமை கண்டு குமுறி அறிக்கை வெளியிட்ட(9.11.2012) திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் நேரிடையாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று (14.11.2012) அங்கு நடைபெற்ற அவலங்களை நேரில் கண்டார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பரிதாபத்துக்குரிய மக்கள் கதறிக் கண்ணீர் விட்ட காட்சி, அப்பப்பா! சொல்லுந்தரமன்று.
21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு கொடு மையா? தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தக் குரூரமா என்று இரத்தக் கண்ணீர் வடித்தார் தமிழர் தலைவர்.
செய்தியாளர்களைச் சந்தித்தபோது - இந்தக் கொடுமைக்கு எதிராக மக்கள் கருத்துத் திரட்டப் படும். விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படும். டிசம்பர் 9இல் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடை பெறும் என்று அறிவித்தார்.
அப்படி அறிவிக்கப்பட்ட மாநாடுதான் நேற்று - தருமபுரியில் வரலாறு கண்டிராத மாநாடு என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல.
கடந்த பல நாட்களாகவே மாநாட்டைப் பற்றிய சுவர் எழுத்து விளம்பரம், மக்கள் மத்தியில் எங்குப் பார்த்தாலும் இந்த மாநாட்டைப் பற்றிப் பேச வைத்தது.
தேவையான மாநாடு, சரியான காலத்தில் திராவிடர் கழகம் இதனை அறிவித்திருக்கிறது என்று பரவலாகவே பேசப்பட்டது.
அதன் எழுச்சி - வீரியம் நேற்று தருமபுரி மண்ணில் விண்ணுக்கும், மண்ணுக்குமாகத் தாவி நின்றது.
காலை கருத்தரங்கமே களை கட்டியது. மண்டபம் நிறைந்து வழிந்தது; வெளியில் நின்று கொண்டு ஒலிபெருக்கி வழியாக உரைகளைச் செவிமடுத்தனர்.
காலை முதலே அலை அலையாக மக்கள் தருமபுரியை நோக்கி! எந்த சாலையிலும், வீதிகளி லும் மக்கள்! மக்கள்!! தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கருஞ்சட்டைப் பட்டா ளம் குவிந்துகொண்டே இருந்தது. விடு தலைச் சிறுத்தைகளும் வாகனங்கள் மூலம் வந்து குவிந்து கொண்டே இருந்தனர்.
மாநாடு நடைபெற்ற ராஜகோபால் பூங்கா விழி பிதுங்கியது. மக்கள் கொள்ளளவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது.
அந்தப் பகுதியில் உள்ள மாடிகள், மரங்களில் எல்லாம் இளைஞர்கள் - இளைஞர்கள் - மைதானத் தின் இடம் பற்றாமையால்
கலை நிகழ்ச்சிகள்
தோழர் கா.இளங்கோ குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி. சமுதாய மாற்றத்திற்கான உள்ளடக் கத்தைக் கொண்டதாக இருந்தது. புரட்சிக்கவிஞர் பாடல்கள், சமுதாய மாற்றத்திற்கான பாடல் களைப்பாடி அசத்தினார் தோழர் இளங்கோவன்.
பெரியார் திரைப்படத்தில் இடம் பெற்ற கடவுள் இல்லடா என்ற பாடலுக்குப் பெரியார் பிஞ்சுகள் ஆடிய நடனம் என்றும் கண் முன்னால் நிற்கக்கூடியதாகும்.
ஜாதி ஒழிப்பைப்பற்றிய ஓரங்க நாடகமும் மக்களைக் கவர்ந்தது. சென்னை அன்னை மணியம்மையார் குழு வினரின் ஓரங்க நாடகம் தூள் கிளப்பியது. ஜாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்ட அந்த நாடகத்தில் இடம்பெற்ற வசனங்கள், கருத்துகள் பொது மக்களைப் பெரிதும் கவர்ந்தன.
மேலும் மேலும் மக்கள் வந்து குவிந்து கொண்டே இருந்ததால் விரைவாக நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. இதற்குமேல் மக்கள் வந்தால் என்ன செய்வது என்று மாநாட்டு ஏற்பாட்டாளர் ஒரு கணம் திகைத்தனர் என்றே கூற வேண்டும். ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கான பே()ரணியாகக் காட்சியளித்தது.
கொடி உயர்ந்தது!
தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம் மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! ஒழிப்போம் - ஒழிப்போம் ஜாதியை ஒழிப்போம்! ஒழிப்போம் ஒழிப்போம் தீண்டாமையை ஒழிப் போம் என்ற வாழ்த்து முழக்கங்கள் விண்ணை முட்ட, மகளிர் அணிப் பாசறைத் தோழியர் திருப்பத்தூர் அகிலா எழிலரசன் கழகக் கொடியை ஏற்றினார்.
புலவர் இரா.வேட்ராயன்
கொடியேற்றியவுடன் உரை வீச்சுகள் தொடங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் இரா.வேட்ராயன் வர வேற்புரையாற்றினார்.
அண்ணன் - தம்பிகளாக வாழ்ந்து வந்த இந்த மாவட்டத்தில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டது நியாயம்தானா? இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காகவே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம் என்று மாவட்டக் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன் தம் வரவேற்புரையில் குறிப் பிட்டார்.
எஸ்.கே.சின்னப்பன்
25 ஆண்டு காலம் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்து அரும்பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எஸ்.கே.சின்னப்பன் அவர்களின் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் தொடக்கவுரை
மாநாட்டின் தொடக்கவுரையை பேராசிரியர் அ.மார்க்ஸ் (மக்கள் உரிமைக்கழகம்) நிகழ்த்தினார். அவர் தம் உரையில் முக்கிய மாகக்குறிப்பிட்ட தாவது:
தக்க நேரத்தில் இந்த மாநாட்டை அறிவித்து எழுச்சி யுடன் நடத்துகின்ற திராவிடர் கழகத் துக்கும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் நன்றியையும், பாராட்டு தலையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள், இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல - மாறாக ஜாதி ஒழிப்புக் கூட்டணி - தீண்டாமை ஒழிப்புக்கூட்டணி - பாதிக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கூட்டணி - இந்தக் கூட்டணியில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையிலே இவற்றிற்காக நாங்கள் அணி வகுத்து நிற்கத் தயார் என்றும் குறிப்பிட்டார் பேராசிரியர் மார்க்ஸ்.
காதலை எதிர்த்து. ஜாதி சங்கங்களைக் கட்டுவது, கண்டிக்கத்தக்கதாகும். திராவிட என்பதை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் சிலர் - அதுவும் தவறான கருத்தாகும். திராவிடர் என்பது - ஒரு குறியீடாகும்.
ஜாதியை எதிர்த்து தந்தை பெரியார் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். போராடினார். நூறு ஆண்டு களுக்கு மேலாக இதற்கான இயக்கம் நடத்தப் பட்டுள்ளது.
சமூகத்தின் எதிரிகள் பார்ப்பனீயமும், முதலா ளித்துவமும்தான் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை பேராசிரியர்.
28 ஆண்டு காலமாக உள்ள தீண்டாமை ஒழிப்பு வன்முறை கொடுமைத் தடுப்புச்சட்டம் ஓட்டைகள் கொண்டதாக உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும்.
காவல்துறையிலும் ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தருமபுரியில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதே - பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு சென்றுவர்கள் யார்? செல்லாதவர்கள் யார்? என்பதிலிருந்தே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடவில்லை என்று செய்யப்பட்ட பிரச்சாரம் உண்மையல்ல. அது தவறு என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களை நோக்கி நாம் கேட்கும் வினா இதுதான்.
தலித் அல்லாதவர்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனரே! அப்படியென்றால் தலித்துகள் தமிழர்கள் இல்லையா? என்ற நறுக்கான வினாவை முன் வைத்தார் பேராசிரியர் மார்க்ஸ்.
எப்படியோ தருமபுரி சம்பவம் நாட்டில் ஒரு உசுப்பை ஏற்படுத்திவிட்டது என்றும் குறிப் பிட்டார்.
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு
1973 டிசம்பர் 8,9 நாட்களில் அதாவது - இதே நாளில் தந்தை பெரியார் சென்னை யில் தமிழர் சமுதாய இழிவுஒழிப்பு மாநாட்டை நடத்தி அதில் ஜாதி ஒழிப்புத் தீர்மானத்தை நிறை வேற்றினார்.
தீண்டாமை ஒழிக் கப்படுகிறது என்ப தற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண் டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயலவைத் தலைவர் எடுத்துக் காட்டினார்.
உலகில் தொழில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்து இந்தியாவில்தான் தொழிலாளர்கள் ஜாதி யாகப் பிரிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
சமூகநீதிக் களத்தில் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத் தப்பட்டோர் ஒன்றி ணைந்து போராடி உரிமைகள் பெறுவ தற்கான கடமைகள் உண்டு. குறிப்பாக கோயில் கருவறைக்குள் தாழ்த் தப் பட்டவரும், பிற் படுத்தப்பட்டவரும் நுழைய முடியாது. அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுத்துறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை.
மத்திய அரசுத் துறைகளில் 102 செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடம் பூஜ்ஜியம். கூடுதல் செயலாளர்கள் 113 என்றால், அதில் தாழ்த்தப்பட்டோர் 5, மலைவாழ் மக்கள் 3, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு இடம் கூடக் கிடையாது.
இயக்குநர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் 50, மலைவாழ்மக்கள் 20, இதர பிற்படுத்தப்பட்டோ 29 மீதி 578 இடங்கள் உயர்ஜாதியினர். குறிப்பாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில்.
குரூப் ஒன்று பதவிகளை எடுத்துக்கொண்டால், தாழ்த்தப்பட்டோருக்கு 11.5 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு 4.8 விழுக்காடு, இதர பிற்படுத்பட்டோர் 6.9 விழுக்காடு.
இதுபோன்ற தகவல்கள் ஏராளம் உண்டு. ஒரு பிரிவில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள சட்டப் படியான இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படியான இடங்கள் கிடைக்கவில்லையே.
தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை இவை உணர்த்தவில்லையா? இந்த அடிப்படை உரிமைகள்பற்றிச் சிந்திக் காமல், கவலைப்படாமல், பாதிப்புக்கு ஆளான இரு பிரிவினர் ஒன்றிணைந்து போராடுவதை விடுத்து, அவர்களுக்குள் மோதலை உருவாக்கும் போக்கு சரிதானா? இதன் விளைவு ஆதிக்கக் காரர்களுக்கு தானே இலாபம்?
தந்தை பெரியார் பெயரை, அண்ணல் அம் பேத்கர் பெயரை உச்சரித்தால் மட்டும் போதுமா? அந்தத் தலைவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒன்றுபட்டுக் கருத்தில் நிற்க வேண்டாமா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன்.
தோழர் சிங்கராயர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப்பொதுச் செயலாளர் சிங்கரா யர் தம் உரையில் குறிப் பிட்டதாவது:
தருமபுரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பலரும் பார்த்துச் சென்றனர். ஆனால் பார்த்தவு டனேயே அதற்கான தீர்வு பற்றிச் சிந்தித்து ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட்டது திராவிடர் கழகமே. தமிழர் தலைவர் வீரமணி அவர்களே என்று சொன்ன தோழர் சிங்கராயர்,
தமிழ்நாட்டில் பெரியார் கூறுவதைக் கேளுங்கள். அவரைப் பின்பற்றுங்கள் என்று டாக்டர் அம் பேத்கர் அவர்கள் கூறியதையும், நினைவுபடுத்தினார்.
மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஆ.பத்மநாபன் அவர்கள் தம்மிடம் அம்பேத்கர் அவ்வாறு கூறினார் என்று சொன்னதை எடுத்துக் காட்டிதான் அந்தத் தகவலை, கருத்தினைத் தெரிவித்தார் தோழர் சிங்கராயர்.
தோழர் ஜி.ஆனந்தன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு உறுப் பினர் தோழர் ஜி.ஆனந் தன் அவர்கள் தம் உரையில் முக்கியமா கக் குறிப்பிட்டதானது:
இப்படியொரு மாநாட்டை சரியான நேரத்தில் நடத்துவதற் காக மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திராவிடர் கழகத்துக்கு - அதன் தலைவர் வீரமணி அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதாக எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட்டார்.
தாழ்த்தப்பட்ட தோழன் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட், அணியக் கூடாதா? கூலிங் கிளாஸ் போடக் கூடாதா? அப்படிப் போட்ட தலித் ஆண்களின் காதல் வலையில் எங்கள் பெண்கள் விழுந்து விடுவதாகக் கூறலாமா? இது தாழ்த்தப்பட்ட வர்களை மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த பெண்களையும் கேவலப்படுத்து வதாகும் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளைப் பார்த்து, ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொன்னவர்கள் இப்பொழுது ஓட்டுப் பொறுக்கவில்லையா? என்ற வினாவையும் எழுப்பத் தவறவில்லை தோழர் ஆனந்தன்.
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சித்தோழ ரும், சமூக சமத்து வத்துக்கான டாக்டர் கள் சங்கத்தின் பொதுச் செயலாளரு மான டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் அவர்கள் தம் உரை யில் தெரிவித்தாவது:
சிலருக்கு சில நோய் வருவதுண்டு. ஒரு சில ருக்குக்கு காதல் வெறுப்பு நோய் ஏற் பட்டுள்ளது என்று எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்தினார். இலக்கியத்திலேயே பெற் றோர்கள் சம்மதமின்றி காதலர்கள் தனியே செல்வதெல்லாம் கிடையாதா? உடன்போக்கு என்று கூறப்பட்டுள்ளதே என்று காதல் உரிமை பற்றி உரைத்த டாக்டர் - இது ஒன்றும் அரசியல் கூட்டணியல்ல - ஜாதி - தீண்டா மைக்கு எதிரான கூட்டணி - காதலை எதிர்ப்போருக்கு எதிரான கூட்டணி என்ற கருத்தினையும் முன் வைத்தார்.
1998இல் (ஏப்ரல் 28) விடுதலையில் வெளிவந்த தலையங்கம் ஒன்றை எடுத்துக்காட்டி மருத்துவர் ஒரு கருத்தை முன் வைத்தார்.
1998இல் அரசமைப்புச்சட்டம் மறு ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட இருந்த நேரத்தில் எழுதப்பட்ட விடுதலை தலையங்கம் அது. ஜாதி மறுப்புத்திருமணம் செய்துகொள்ளும் இணையர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் ஜாதியற் றோர் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று விடுதலை எழுதிய தலையங்கத்தை மிகப் பொருத்தமாகக் குறிப்பிட்டு, அந்தக் கருத்தை மாநாட்டில் வலியுறுத்தினார்.
இடஒதுக்கீட்டினால் பலன்பெற்றவர்கள் ஜாதி உணர்வு என்ற இரத்தத்தை வெளியேற்ற வேண்டும் என்று விடுதலை தலையங்கத்தைக் குறிப்பிட்டு இருந்ததை மிகவும் பொருத்தமாகக் குறிப்பிடத் தவறவில்லை.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள் வோருக்கு (ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை), ஒரு லட்சம் ரூபாயை ஒடிசா மாநில அரசும், கோவா மாநில அரசும் தருகின்றன. தமிழ்நாட்டில் வெறும் 20ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ரவீந்திரநாத் தமிழ்நாடு அரசும், ஒரு லட்சம் ரூபாய் அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் இரகுமான்கான்
மேனாள் அமைச் சரும் தி.மு.க. செய்தித் தொடர் பாளருமான அ.இரகுமான்கான் அவர்கள் தம் உரையில் தான் கலைஞர் அவர் களின் ஆணைப்படி அவரின் தூதுவராக, தி.மு.க.வின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வதாகக்கூறி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத் தமைக்காகத் தம் மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொண்டார். எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பார்கள்.அதைக் கொஞ்சம் மாற்றி எல்லா சாலைகளும் தருமபுரியை நோக்கி என்று சொல்லும் வண் ணம் இந்த மாநாடு நடைபெற்றுக்கொண் டுள்ளதுஎன்று மாநாட்டின் எழுச் சியை படம் பிடித்துக் காட்டினார்.
இது ஒன்றும் கூடிக் கலையும் மாநாடல்ல. கொள்கை உறுதி கொண்டோர் கூடி நல்ல முடிவுகளை எடுக்கும் மாநாடு என்றார். தருமபுரி அதருமபுரியாக மாறாமல் தடுக்கும் மாநாடு என்று மிக அழகாகக் குறிப்பிட்டார். தந்தை பெரியார் விட்ட பணிகளை அவர் வழியில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இயக்கத்தை நடத்திச் செல்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. குறிப்பிட்ட நபருக்கு எதிராகவோ குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிராகவோ நடத்தப் படும் மாநாடல்ல என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பட்டியலையும் தொகுத்துக் கூறினார். குறிப்பாக மகாராட்டிர மாநிலத்தில், அண்ணல் அம்பேத்கர் பெயர் பல்கலைக் கழகத்துக்குச் சூட்டப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பிய நேரத்தில் கலைஞர் அவர் களின் கட்டளைப்படி ஏராளமான தந்திகள் கொடுக்கப்பட்டன. அப் பொழுது அம்மாநில ஆளுநராக இருந்த அலெக்ஸ்சாண்டர் அதன் விளைவாக டாக்டர் அம்பேத்கர் பெயர் அப்பல் கலைக் கழகத்துக்கு சூட்டப்பட்டதை நினைவூட் டினார்.
நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவ புரங்களை உருவாக்கியதும் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசே. வாத்தைகளால் மட்டுமல்ல, தன் குடும்பத்தில் மருமகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை ஏற்றுக் கொண்டவரும் கலைஞர்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற தாழ்த்தப் பட்டோர் போட்டியிட வேண்டிய ஊராட்சிகளில் தேர்தல் நடத்த முடியாதிருந்த முட்டுக்கட்டையை நீக்கி வெற்றிகரமாக அங்கெல்லலாம் ஊராட்சித் தலைவர் தேர்தலை நடத்தி,அதில் வெற்றி பெற்றவர் களை சென்னைக்கு அழைத்து கலைவாணர் அரங்கில் பாராட்டு நடத்தியவர். முதல்மைச்ச ராகவிருந்த கலைஞரே என்றும் உரிமை முழக்க மிட்டார்.
சூத்திரர்கள் படிக்கக்கூடாது - படித்தால் நாக்கினை அறுக்க வேண்டும், கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். அறிந்து வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரக் கூற்றை எடுத்துக்காட்டினார் மேனாள் அமைச்சர்.
1610இல் மதுரையில் படித்த பத்தாயிரம் பேரும் பார்ப்பனர்களே என்று ராபர் டி நொபிளி எழுதியதையும் எடுத்துக்காட்டினார். நூறு ஆண்டு களுக்கு முன் சென்னை ஒற்றை வாடை கொட்ட கையில் நடத்தப்பட்ட நாடகத்தை பார்ப்பதற்கு பஞ்சமர்களுக்கு - நம் அருமைத் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததே. அந்த நிலைகள் எல்லாம் மாற்றப் பட்டதற்கு யார் காரணம்? எந்த இயக்கம் காரணம்? இப்பொழுது மீண்டும் நாம் நூறு ஆண்டுகளுக்கு முன் போகப் போகிறோமா? என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார் மேனாள் அமைச்சர் இரகுமான்கான்.
ஊமை செயராமன்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஊமை செயராமன் சிறப்பாக ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். குறிப்பாக நேரம் - காலம் ஒழுங்குப்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் வீ.சிவாஜி நன்றிகூறிட மாநாடு இரவு 10 மணிக்கு துல்லியமாக நிறைவுற்றது.
ஜாதி என்ற அளவுகோல் இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே! அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கான வீடுகளை ஊருக்குள் கட்டுக!
சமூக நீதிக் களத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இணைந்து
தங்கள் உரிமைகளுக்காகப் போராட முன் வர வேண்டும்
காதல் திருமணங்களை ஊக்குவிப்போம்!
தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வழிகாட்டும் தீர்மானங்கள்!
தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தகடூர் தமிழ்ச்செல்வி பயனாடை அணிவித்து வரவேற்றார். (தருமபுரி, 9.12.2012)
தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எஸ்.கே.சின்னப்பன் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். (தருமபுரி, 9.12.2012)
தருமபுரி டிச.10- சமூக நீதிக் களத்தில் தாழ்த்தப்பட் டோர் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து போராட முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (9.12.2012) தருமபுரி யில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1 :
(அ). தருமபுரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஜாதி வெறியின் காரணமாக தாழ்த்தப்பட்டோர் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டதற்கு இம்மாநாடு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
(ஆ). சி.பி.அய். விசாரணை மேற்கொண்டு இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து, தண் டனையை விரைந்து அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
(இ). ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன்முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் வலியுறுத்துகிறது.
அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தாதீர்!
(ஈ). அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித் - தலித் அல்லாதார் என்று ஒரு புதிய முறையில் பிளவுபடுத் திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை - செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.
தீர்மானம் 2 :
ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை என் பதும் பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், மனிதத் தன் மைக்கும் விரோதமானதால் அந்தப் பிறவி பேதங் களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 :
ஜாதி வெறியர்களால் கடும் பாதிப்பிற்கு ஆளான தருமபுரி மாவட்டம், கடலூர் மாவட்டப் பகுதிகளில் முழு நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
எரிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட வேண்டும்; இழப்பீட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, முழு அளவிலான இழப்பீடு அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.
தீர்மானம் 4 :
தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமைச் சட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்துக!
தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 :
சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.
இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிளவு மனப்பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட ஏற்படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 :
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று இம்மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 :
இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8 :
ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை!
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 9 :
(அ) ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை. மனிதநேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க நிலையிலேயே மாணவர்களுக்குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இடஒதுக்கீடுக்கு மட்டுமே ஜாதி!
(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன்படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!
(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.
(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.
ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை!
(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர் களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும்.
இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாசாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 10 :
ஒத்த கருத்துள்ளோர் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்
மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒத்த கருத்துள்ளவர்களை, அமைப்புகளை இணைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 11 :
காதல் திருமணங்களை ஊக்குவிப்போம்!
ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் 12 :
சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல் துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல்களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப் பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக கலவரங்கள் - இவற்றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர் துரை. சந்திரசேகரன்
தீர்மானங்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்மொழிந்தார். மக்கள் கடல் அலை ஓசைபோல கைதட்டி வரவேற்க, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Post a Comment