Search This Blog

2.12.12

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் கடமை என்ன? - திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் 

ஜாதி, தீண்டாமையை எதிர்த்து ஒத்த கருத்து உள்ளவர்களை இணைத்துக் கூட்டுச் செயல் திட்டம்!

காவிரி நடுவர் மன்ற ஆணையைக் கெசட் செய்க!

திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள்

திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார் (சென்னை பெரியார் திடல், 1.12.2012)

ஜாதி, தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தி ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து கூட்டுச் செயல் திட்டம் வகுத்துச் செயல்படுவது - ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு கொடுக்கவேண்டிய அழுத்தம், காவிரி நீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பைக் கெசட் செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.12.2012 சனியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் எண்: 1
தீர்மானம் எண் (1) இரங்கல் தீர்மானம்
திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவரும், சீரிய முன்னணி வீரருமான மதுரை வழக்குரைஞர் கி.மகேந்திரன் (மறைவு 25.8.2012), வேலூர் மாவட்டம் திமிரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.நா.ரங்கராசன் (வயது 86 - மறைவு 19.8.2012- உடற்கொடை, கண்கொடை அளிக்கப்பட்டது.) குடந்தை ஒன்றியம் மதகரம் பெரியார் பெருந் தொண்டர் கல்யாணசுந்தரம் (வயது 95 - மறைவு 25.8.2012) சென்னை - புதுவண்ணை வீரக்குமார் (வயது 62 - மறைவு 8.9.2012), காரை சி.மு.சிவம் அவர்கள் மகன் சிவ.அரசமணி (வயது 64 - மறைவு 29.8.2012), திருவாரூர் மாவட்டம் செருவலூர் பெரியார் பெருந் தொண்டர் - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் வீராசாமி (வயது 82 - மறைவு 5.10.2012), இராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பு பெரியார் பெருந்தொண்டர் தி.இராம லிங்கம் (வயது 92 - மறைவு 28.10.2012), கரூர் திருமதி இலட்சுமி சின்னப்பன் (மறைவு 7.11.2012), முத்துப் பேட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சு.வெங்கிட்டு (வயது 35 மறைவு 4.11.2012), குடவாசல் மஞ்சக்குடி பெரியார் பெருந்தொண்டர் நடேசன் (வயது 82 - மறைவு 8.11.2012), கோட்டூர் ஒன்றியம் விக்ர வாண்டியம் பெரியார் பெருந்தொண்டர் சி.காளிதாசு (வயது 62 - மறைவு 5.11.2012), வேலூர் - சத்துவாச்சாரி பெரியார் பெருந்தொண்டர் சாமி - சம்மாரன் (வயது 79 - மறைவு 13.11.2012), திருவாரூர் மூதாட்டி சுந்தரலீலா சிங்கம் (வயது 90 - மறைவு 22.11.2012) ஆகிய கழகத் தோழர்களின் மறைவிற்கு இப்பொதுக் குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் விலை மதிக்க இயலாத இயக்கப் பணி களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தி.மு.க. முன்னணி செயல்வீரர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சரும், சுயமரியாதை வீரரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி எஸ். ஆறுமுகம்  (வயது 71 - மறைவு 23.11.2012), தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமாகிய நெல்லை ஏ.எல்.சுப்பிரமணியம் (வயது 74 மறைவு 27.10.2012), முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வ ராஜ் (வயது 66 - மறைவு 25.11.2012),  ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

உலக மானுடநேய அமைப்பின் (IHEU) நிகரற்ற முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளருமான அமெரிக்காவின் பால்கர்ட்ஸ் (PAUL KURTZ
- வயது 86 - மறைவு 22.10.2012), மனிதநேயர் - சீரிய சுயமரியாதை வீரர் சேலம் மாரியப்பனார் (வயது 98 - மறைவு  30.9.2012 உடற்கொடை அளிக்கப்பட்டது.). தமிழ் - தமிழின ஆர்வலர் லண்டன் பிபிசி புகழ் சங்கர மூர்த்தி (வயது 82 - மறைவு 10.9.2012), இலண்டன் தமிழ்ச் சங்க நிறு வனர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களின் வாழ் விணையர் பாமிலா செல்வநாயகம் (மறைவு 18.9.2012).
இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.எம்.கோபு (வயது 82 - மறைவு 13.9.2012) சமூகநீதியில் அக்கறை கொண்டவரும் தெலுங்குதேசக் கட்சியின் முன்னணித்  தலைவர்களில் ஒருவருமான எர்ரான் நாயுடு (மறைவு - 1.11.2012), தமிழ் உணர்வு மிக்கவரும் சுயமரியாதை இயக்கச் சுடரொளி சி.டி.நாயகம் அவர்களின் பெயரனும், மார்பக நோய் நிபுணருமான டாக்டர் சி.என்.தெய்வ நாயகம் (வயது 70 - மறைவு 19.11.2012), சீரிய பகுத்தறிவாளர் திருவாரூர் புலவர் சரவண தமிழன் (மறைவு 27.8.2012), சீரிய தமிழ்ப் புலவர் இறைக் குருவனார் (வயது 70 - மறைவு 24.11.2012)
ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
முன்னாள் பிரதமர் அய்.கே.குஜ்ரால் (வயது 92  மறைவு 30.11.2012) அவர்களின் மறைவிற்கு இப்பொதுக் குழு தன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2
கழகத் தலைவர் அவர்களுக்கு கழக பொருளாளர் கோ.சாமிதுரை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜாதியின் பெயரால் அரசியலா?

இலட்சியங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அறவேயில்லாதவர்கள் ஜாதியை முன்னெடுப்பதும், தலித், தலித் அல்லாதார் என்று உத்தி பிரித்துக் (Polarisation) கொச்சை அரசியல் நடத்தத் துடிப்பதும் அசல் வெட்கக்கேடாகும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூகநீதிப் போராளிகளின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு அறைகூவல் விடுவதாகும். தலித் - தலித் அல்லாதார் என்று பிரிப்போர் யாராக இருந்தாலும், அது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு உரியதாகும்.

இதற்குள் தீண்டாமை அனுசரிப்பது என்கிற கொடிய நஞ்சு இருப்பதால், இந்திய அரசமைப்புச் சட்டப் படி இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது போன்று மக்கள் மத்தியில் பிளவுகளை, கலவரங்களை தூண்டி விடுவோர் சட்டத் தின்முன் நிறுத்தப்படவேண் டும் என்றும் இப் பொதுக்குழு தமிழ்நாடு அரசினைக் கேட் டுக்கொள்கிறது.

தருமபுரி மாவட்டத்திலும், கடலூர் மாவட்டத்திலும் அண்மையில் தாழ்த்தப்பட் டோர் குடியிருப்புகள் கொளுத் தப்பட்டதற்கு இப்பொதுக் குழு கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது.

இது ஒரு ஜாதிக் கலவரத் தீயாகப் பரவாமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், ஒத்த கருத்துள்ளோர்களை ஒருங்கிணைத் துக் கூட்டுச் செயல்திட்டங் களை வகுத்துக்கொண்டு செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புது வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும் என்றும், இழப்பீடுகளைக் கணக்கெடுத்து அதற்கேற்றாற் போல இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

வரும் டிசம்பர் 9 ஆம் தேதியன்று தருமபுரியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசுவோர், எழுதுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

கோவில் கருவறைக்குள் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆக முடியாது என்ற நிலை இன்றுவரை இருந்து வருகிறது.

அனைத்து ஜாதியினருக்கு அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் உச்சநீதிமன்றத்தில் முடக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்திட திருச்சியையடுத்த கம்பரசம்பேட்டையில் இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டதை (1996) இப்பொதுக்குழு நினைவுபடுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி செயல்படுத்தினால், இப்பொழுது ஏற்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் மனோ நிலை ஏற்படும் என்றும் இப்பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது!

தீர்மானம் எண்: 3

பிராமணாள் ஒழிப்பு

சிறீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் ஓட்டலில் திடீரென்று பிராமணாள் என்று எழுத்துப் பொறிக்கப்பட்டது. பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதார் மக்களை சூத்திரர்கள் என்று குறிப்பிடுவதாகும் இது என்பதால், அதனை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பிராமணாள் ஒழிந்தது.
சிறீரங்கம் போல வேறு ஊர்களில் பிராமணாள் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தால், தலைமைக் கழகத்துக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் எண்: 4

மாற்றுத் திறனாளிகள் கோவில்களுக்குச் செல்லக்கூடாதா?

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் சுற்றறிக்கை ஒன்றில் மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபட உரிமை இல்லை என்று குறிப்பிட்டு இருப்பது மனிதாபிமானமற்றதும், மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்.

சிவபெருமான் புலித்தோலை இடுப்பில் அணிந்து உள்ளான் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் இப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தச் சுற்றறிக்கையை தமிழ்நாடு  இந்து அறநிலையத் துறை ரத்து செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. இல்லையெனில் இப்பிரச்சினையைத் திராவிடர் கழகம் கையில் எடுத்துக்கொண்டு வீதியில் வந்து போராடும் என்று எச்சரிக்கிறது.


செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபட உரிமை இல்லை என்று குறிப்பிட்டு இருப்பது மனிதாபிமான மற்றதும், மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்.

தீர்மானம் எண்: 5(அ)

ஈழத் தமிழர் பிரச்சினை
ஈழத் தமிழர் பிரச்சினையில் இப்பொழுது ஒரு புதிய நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளது. உலகில்பல நாடுகளும் அய்.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டுள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்; ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கு எடுக்கப்படவேண்டும், சுய அதிகாரம் பெற்ற பன்னாட்டு அமைப்பின்மூலம் விசா ரணை நடத்தப்படவேண்டும் என்பது உள்பட அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்ற உரத்த சிந்தனைகள் பரவலாக எழுந்துள்ளன.
சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு, அதனைத் தொடர்ந்து அதன் தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு ஆகியோர் அய்.நா.வின் துணைச் செயலாளர் (1.11.2012) யான் லிசானிடமும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களிடமும் (7.11.2012) அளித்து, விளக்கம் தந்தது - ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்.நா. தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்று அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அவர்களே ஒப்புக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இத்தகு நல்லதோர் சூழ்நிலையில் இந்திய அரசு உரிய அழுத்தம் கொடுக்குமானால், ஈழத் தமிழர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையுடன் கூடிய நல்வாழ்வு மலர அரசியல் தீர்வும் கிட்டிட வாய்ப்பு இருக்கிறது என்பதை இப் பொதுக்குழு கருதுகிறது.

மத்திய அரசு - இதுவரை இந்தப் பிரச்சினையில் நடந்துகொண்டு வந்த தவறுகளுக்கும் பரிகாரம் காணும் வகையில் ஈழத் தமிழர்களின் மீள்வாழ்வுக்காக போதுமான அழுத்தத்தை அய்.நா.வுக்கு அளிக்கவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5(ஆ)

இந்தியாவில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது; தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் - எத்தனையோ முறை இந்திய அரசு கேட்டுக்கொண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளதால், இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் திட்டவட்டமான வகையில் புதிய முடிவை எடுத்து செயல்படவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண்: 6(அ)

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்மீது நடவடிக்கை தேவை

450 ஆண்டுகால வரலாறு படைத்த உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் ஆறாம் தேதி பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவா சக்திகள், அவர்களின் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதலோடு பட்டப் பகலில் பகிரங்கமாகவே இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டது..
இ.பி.கோ. 147, 153(ஏ), 149, 153(பி), 505 ஆகிய பிரிவுகளின்மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி, வினய் கட்டியார், அசோக்சிங்கால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வீ ரிதம்பரா என்று முக்கிய பிரமுகர்கள் மீது வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளது.
நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் குழு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 60 பேர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
அடல் பிகாரி வாஜ்பேயி உள்படக் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் லிபரான் ஆணையத் துக்காகச் செலவிடப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வளவுக்குப் பிறகும் 20 ஆண்டுகாலமாக வழக்கு நிலுவையில் உள்ளது.
நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம்- உங்களால் என்ன செய்ய முடியும்? என்று மக்களவையில் அதிகாரப் பூர்வ எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் சவால் விட்டுள்ளார்.

இதன்மூலம் குற்றவாளிகள் தாங்களாகவே முன்வந்து ஒப்புக்கொண்ட பிறகும் வழக்கு கிடப்பில் போடப் பட்டுள்ளது.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு ஆகும்.

மிக முக்கியமான ஒரு குற்றத்தில் தீர்ப்புத் தாமதிக்கப் படுவதால், நீதித்துறை, நிருவாகத் துறைகள்மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என்பதை இப்பொதுக்குழு அழுத்தமாகச் சுட்டிக்காட்டி, இதற்கு மேலும் இப்பிரச்சினையில் காலதாமதம் செய்யாமல் வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தி, குற்றவாளி களுக்குரிய தண்டனையைப் பெற்றுத்தருமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6(ஆ)

குண்டுவெடிப்பு வழக்குகளை விரைவுபடுத்துக!

மாலேகான் குண்டுவெடிப்பு,  கோவா குண்டுவெடிப்பு, சப்ஜூதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு என்று சங் பரிவார் சம்பந்தப்பட்ட ஏராள வழக்குகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர்.
மத்திய அரசின் மிகவும் தாமதமான இத்தகு நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்கி வருவதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி, இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை விரைவாகப் பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.

தீர்மானம் எண்: 7 

காவிரி நீர்ப் பிரச்சினை
காவிரி நீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம், காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண் காணிப்புக் குழு ஆகிய அத்தனை சட்டப் பூர்வமான அமைப்புகளின் ஆணைகளை அவமதிக்கும் கருநாடக மாநில அரசின் மீது இந்திய அரசமைப்புச் சட்டம் 365 ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து, தமிழ் நாட்டுக்குச் சேரவேண்டிய நீரை உடனே அளிக்க ஆவன செய்யுமாறு பிரதமர் அவர்களை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
நடுவர் மன்ற தீர்ப்பை உடனே கெசட் செய்யுமாறும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை கருநாடகம் கொடுக்காத பட்சத்தில் நெய்வேலி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
நதிகளை நாட்டுடைமை ஆக்குதல், இந்திய அளவில் உள்ள நதிகளை இணைத்தல், முதற்கட்டமாக தென்னக நதிகளை ஒருங்கிணைத்தல்பற்றி ஆய்வு செய்து,  செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8 
சமூக நீதி
சமூக நீதி திசையில் கீழ்க்கண்ட கருத்துக்களை, திட்டங்களை இப்பொதுக்குழு மத்திய மாநில அரசு களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
(அ)    மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பிற் படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முழுமைப்படுத்துதல்.
(ஆ)    அரசு துறைகளில் ஒரு சதவிகிதம்தான் வேலை வாய்ப்பு என்பதால், வளர்ந்து வரும் தனியார் துறை, பன்னாட்டு நிறுவனங்கள் இவற்றில் இடஒதுக்கீடுக்கு சட்டரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும்.
(இ)    பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும்  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு.
(ஈ)    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அதிகாரங்கள் வழங்கப்படுதல்.
(உ)    நுழைவுத் தேர்வை அறவே ஒழித்தல்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முறையைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டதற்கு உச்சநீதிமன்றமே ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதை இப்பொதுக்குழு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும், மருத்துவக் கவுன்சிலுக்கும் தெரிவித்துக் கொள்கிறது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கச் செய்யும் இந்தத் திட்டத்தை ரத்து செய்யுமாறு இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி தேவையில்லாத விதிமுறைகளைத் திணித்துக் கொண்டு வருகிறது.
குறிப்பாக முதலாண்டு தோல்வியுற்றால்,   இரண்டாம் ஆண்டு கல்வி தொடர முடியாது என்பதும், 90 சதவிகித வருகைப் பதிவேடு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்பதும் சமூகநீதி கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களையும், கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களையும் பாதிக்கக் கூடியது என்பதால், இந்தப் புதிய விதிமுறைகளை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை - மருத்துவக் கவுன்சிலை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
(ஊ)    நீதித்துறை உட்பட விதிவிலக்கின்றி அனைத் துத் துறைகளிலும் இடஒதுக்கிடு வழங்குதல்.
(எ)    சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உள்ஒதுக்கீடுடன் கூடிய 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை விரைவாக நிறைவேற்றுதல்.
(ஏ)    கல்வித் திட்டத்தில் வெறும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மற்ற திறன்களையும் (Ability) மதிப்பீடு செய்யும் முறை.
(அய்)    ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மறுமணம், மனமுறிவு செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்குத் தனியாக குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்தல். (Inter-Caste Quota) ஆகியவற்றைச் செயல்படுத்துமாறு மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்கள் எந்தவித ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கும் கீழ் - அமையவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும்

சி.பி.எஸ்.இ., பாடங்களில் தேவையில்லாத ஜாதிச் சிக்கல்கள், மாமிசம் சாப்பிடுவோர் திருடர்கள், வன்முறை யாளர்கள், காமவெறி கொண்டவர்கள் என்றெல்லாம் (ஆறாம் வகுப்புப் பாடத்தில்) சகட்டு மேனிக்குக் குற்றஞ்சுமத்தி இருபால் மாணவர் களுக்கும் சொல்லிக் கொடுப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். இத்தகைய பாடங்களை உடனே நீக்குவதுடன், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கல்வியாளர்கள் கொண்ட பாடத் திட்டக்குழுவை அமைத்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களைச் சீர்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10(அ)

 புதிய ஊழல் ஒழிப்பு அவதாரங்களிடம் எச்சரிக்கை

ஊடகங்கள் உயர்த்தி, விளம்பர வெளிச்சம் தந்து திடீரென்று சாமான்ய 
மக்களுக்காக என்ற புதிய முகமூடியுடன் வருகின்ற ஊழல் ஒழிப்பு உத்தம வேட தாரிகளிடம் நம் நாட்டு இளைஞர் உலகம் - ஏமாந்து அவர்களிடம்  உள்ள (18 வயது) வாக்குரிமையை - வடையை நரியிடம் பறிகொடுத்த காகம் கதைபோல ஏமாந்துவிடக் கூடாது.

ஊழலை உண்மையாகவே ஒழிக்க முயலும் எவரும் அதை பூஜை அறையிலிருந்தே தொடங்கவேண்டும் (பிரார்த்தனை என்பதே லஞ்சம்தானே!).

நம் நாட்டுத் தேர்தல் விதிமுறைகளை அடியோடு மாற்றியமைத்தால் ஒழிய, ஊழலை வேரோடும், வேரடி மண்ணோடும் கெல்லி எறிய முடியாது.
இந்த ஊழல் ஒழிப்பு அவதாரங்கள் உண்மையாகவே ஊழலை ஒழிக்கக் கூடியவர்கள் அல்லர். இட ஒதுக்கீட்டை ஒழிக்கவும், சமதர்மம், சமூகநீதிக்கு எதிரான மனப் பான்மை உடையவர்கள் என்பதால், பதவிக்குச் செல்ல குறுக்கு வழி இந்த ஊழல் ஒழிப்பு அரசியல் வியாபாரம் என்பதையும், மதவாத சக்திகளுக்கு மறைமுகமாகத் துணை புரியும் என்பதையும் புரிந்துகொண்டு, அவர்களை ஒதுக்கித் தள்ளவேண்டும் இளைஞர்கள். இந்த மயக்க பிஸ்கெட்டுகளின் விளைவு, உண்மை சமூகநீதி, அனைவருக்கும் அனைத்திலும் கிடைக்கச் செய்யாது என்பதை இப்பொதுக்குழு எச்சரிக்கையாகத் தெரி வித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 10(ஆ)

2ஜி அலைக்கற்றை ஊழல் என்பதில் உள்ள மோசடி!
2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆ. இராசா ஊழல் செய்துவிட்டார் - அது 1.76 லட்சம் கோடி ரூபாய் என்ற செய்தியைப் பொய்யாகப் பரப்பி, அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படிச் செய்து சிறைக்குச் செல்லச் செய்தது எல்லாம் திட்டமிட்ட சதி என்ற உண்மைகள் இப்பொழுது வெளிவந்துள்ளன.
சி.ஏ.ஜி.யாக இருக்கக் கூடிய வினோத் ராய் ரூ.1.76 கோடி இழப்பு என்று எழுத்துப் பூர்வமாகவே உத்தரவு போட்டு வலியுறுத்தியதால் நான் அவ்வாறு எழுத நேர்ந்தது என்று சி.ஏ.ஜி. அலுவலகத்தின் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி. சிங் வெளிப்படையாகத் தெரிவித்து இருப்பதன்மூலம் இந்தப் பிரச்சினையில் திட்டமிட்ட சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது அம்பலமாகி விட்டது.
இதில் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான முரளிமனோகர் ஜோஷியின் தலையீடும் அதிகமாக இருந்துள்ளது என்பதும் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் சி.ஏ.ஜி., முரளிமனோகர் ஜோஷி உள்பட சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பல்வேறு வகைகளில் மன உளைச்சலுக்கும், அவதூறுக்கும் திரு. ஆ. இராசா அவர்கள் ஆளாக்கப்பட்டதற்கான பொறுப்பும், குறிப்பிட்ட ஒரு கூட்டத்தைச் சேர்ந்ததே என்றும் இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நிலையில் ஆ. இராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர்மீது போடப்பட்ட பொய் வழக்கினை விலக்கிக் கொள்ள முன்வரவேண்டும் என்று சி.பி.அய்.யை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 11 

சுற்றுச் சூழல் பாதுகாப்பு
நாட்டின் கனிம வளம் சுரண்டப்பட்டும், மணற்கொள்ளை, காடுகள் அழிப்பு, நிலத்தடித் தண்ணீர் பாதிப்பு என்பது போன்ற இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகள் மனித குலத்தின் எதிர்கால வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தல் ஆகும் என்ற விஞ்ஞான ரீதியான எச்சரிகையைக் கணக்கில் கொண்டு, இவற்றை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் கொண்ட தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 12

  கிரிக்கெட் ஊழல்களும், உற்சாகப்படுத்தப்பட வேண்டிய வேறு விளையாட்டுகளும்
கிரிக்கெட் என்னும் விளையாட்டு, இந்தியாவின் வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், அளவுக்கு மீறிய விளம்பரங்கள் (பெரும்பாலும் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளில்தானே இருக்கிறது!) மற்றும் வணிக விளம்பரங்கள் மூலம் கொழுத்த பணம்  பார்ப்பனர்களின் காட்டில் மழையாகப் பெய்கிறது.
இளைஞர்கள் கிரிக்கெட் வெறியர்களாக மாற்றப்படுகின்றனர்.
விளையாடும்போது சம்பளம், மாத சம்பளம், ஆண்டு சம்பளம், பந்தைப் பிடித்தால் அதற்கொரு தொகை, ஆறு ஓட்டம் அடித்தால் அதற்கொரு தொகை (இவை எல்லாம் கிரிக்கெட் விளையாட்டுக்குள் அடங்காதா?) என்று பெரும் வணிகமாக நடந்து கொண்டுள்ளது.
இவை போதாதென்று விளையாட்டுக்காரர்கள் சூதாட்டத்திலும் ஈடுபடுவதால் அதைக் கண்டு உலகமே சிரிக்கிறது.
இப்பொழுது நடுவர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டு, நடுவர் என்ற பெயரையே கொச்சைப்படுத்தி விட்டனர்.
அய்.பி.எல். 20 என்று பெரும் பணத் திமிங்கிலங்கள் குத்தகை எடுக்கும் கிரிக்கெட் அறிமுகமான பிறகே சூதாட்டம், ஊழல் என்பது உச்சத்திற்கே சென்றுவிட்டன.
இந்த அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு உடனே தடை விதிக்கவேண்டும்.
நம் நாட்டுக்கே உரித்தான ஹாக்கி, சடுகுடு மற்றும் கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊக்கம் தந்து, எல்லா வகையிலும் (பொருளாதாரம் உள்பட) மாநில, மத்திய அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இந்த வகையில் இளைஞர்களை ஈடுபடுத்தி,  ஒல்லும் வகைகளில் எல்லாம் முயலவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13  

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது!

இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் போக்கினை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14 

குமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலையைப் பராமரித்திடுக!

கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள வான்புகழ் வள்ளுவனாரின் சிலையைப் பராமரிக்கும் பணியில் உடனடியாக தமிழ்நாடு அரசு ஈடுபட வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படாததால் மிகவும் சிதிலமடைந்துள்ளது என்பதையும் தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண்: 15  

யூனியன் பிரதேசமான அந்தமான் - நிக்கோபார் மாநிலத்தில் தமிழர்களின் தொகை மற்ற மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்றபோதிலும் இதுவரை துணைநிலை Lt.Governor (L.G) ஒருவரை நியமிக்காததை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி அடுத்து தமிழர் ஒருவரை நியமிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறது.
1983 முதலே இதுவரை ஒரு தமிழர் கூட அங்கே துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படவில்லை. இதை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து நாடாளுமன்றத்திலும் எழுப்பிடுவது அவசியமாகும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
அந்தமான் தமிழர்களின் நீண்டகால புறக்கணிக்கப்பட்ட கோரிக்கையாகவே இக்கோரிக்கை உள்ளது என்பதையும் இக்கமிட்டி சுட்டிக்காட்டுகின்றது.
அதுபோலவே இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழர் ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 16 

கழகத்தின் செயல்திட்டம் ஆரிய - இந்துமத - வருணாசிரம அமைப்பினால் ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிளவுண்டு, நாம் ஓரினம் என்ற உணர்வு சிதைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டு கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு என்று பிளவுபட்டுவிட்டது.
தமிழர்கள் வாழ்வில் கோவில், வழிபாடு, பக்தி, பண்டிகைகள், வீட்டு நிகழ்ச்சிகள், சடங்குகள், பெயர் சூட்டல்  முதலியவை ஆரியமயமாக்கப்பட்டுள்ளன.
வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் கல்வி உரிமை - கேவலமான பொருள் கொண்ட சூத்திரர்களுக்கு  பார்ப்பனர்களால் அறவே மறுக்கப்பட்டது. அதனுடைய பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது.
தமிழர்கள் மூளையில் பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கம் எனும் விலங்கு பூட்டப்பட்டுள்ளது. தமிழர்கள் தங்கள் அடையாளத்தை மீட்டுக் கொள்ள எல்லா வகைகளிலும் ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து விடுதலை பெறும் வகையில், திராவிடர் கழகம் தன் பிரச்சாரத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(1)    ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுப் பணியாகச் செயல்படுவது
(2)    தமிழர் வீட்டு பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுதல்
(3)    கோவில்களில் தமிழ் வழிபாட்டு உரிமை
(4)    அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
(5)    நாம் இந்து என்பதை ஏற்காதவர்கள். ஆதலால் அதன் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், செயல்முறைகள் அனைத்திலிருந்து தமிழர்கள் பகுத்தறிவு கொண்டு விடுபட வேண்டும் என்ற பிரச்சாரத்தை வேகமாக முடுக்கி விடுதல்.
(6)    ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் திருமணங்களை நாடெங்கும் நடத்துவது. அடுத்து இதனை டிசம்பர் 30 ஆம் தேதி அன்று திருச்சிராப்பள்ளியில் நடத்துவதென்று முடிவு செய்யப்படுகிறது.  உலகக் காதலர் தினமான பிப்ரவரி 14 அய் ஜாதி ஒழிப்பு - காதல் ஊக்குவிப்பு நாளாக அனுசரிப்பது

(7)    நூல்கள், துண்டறிக்கைகள் வெளியிடுதல், வலைதளம் மூலம் பிரச்சாரம்.
(8)    இன்றைய காலகட்டத்தில் இணையதளம் என்பது பிரச்சார திசையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், இதில் நமது தோழர்கள், இளைஞர்கள் உரிய கவனம் செலத்தி கருத்துப் போர் நடத்துவது. (கழக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இணையதள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது)
(9)    கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணியினர் அந்தந்த அமைப்புகளில் பணியினைத் தீவிரப்படுத்தி, அதன்மூலம் இயக்கத்திற்கு புதிய வரவுகளை ஊக்கப்படுத்துல்; அடிக்கடி சந்தித்தல் - கலந்துரையாடுதல் - சுயமரியாதைக் குடும்ப விருந்து நடத்துதல் - இயக்க ஏடுகளுக்கு, இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்த்தல்.
(10)    கிரிக்கெட், சினிமா, மது முதலிய போதைகளிலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம், தமிழர்களின் வீரவிளையாட்டுக்களை ஊக்குவித்தல், தமிழ் மண்ணுக்குரிய கலைகளை உயிர்ப்பித்தல் - இவற்றை பெரியார் வீர விளையாட்டுக் கழகம், பகுத்தறிவாளர் கழகம், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி இவற்றின் மூலம் செழுமைப்படுத்தல் - இந்த அமைப்புகளையும் நாடு தழுவிய அளவில் விரிவாக்குதல்.
(11)    அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளில் அடிப்படையில் கருத்தரங்குகள் நடத்துதல், தெருமுனைக் கூட்டங்களை நடத்துதல், மூடப் பண்டிகைகளை தோலுரித்து பகுத்தறிவுத் துண்டறிக்கைகளை வழங்குதல்.
(12)    சுவர் எழுத்து பிரச்சாரம்.
(13)    பகுத்தறிவு தகவல் பலகைப் பிரச்சாரம்.
(14)    மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகள் நடத்துதல்; விடுதலை வாசகர் வட்டங்கள் தொடங்கப்படாத ஊர்களில் உடனே தொடங்கப்பட முயற்சி செய்தல்.
(15)    புத்தக சந்தைகளை தொடர்ந்து நடத்துதல்.
(16)    உறுப்பினர் சேர்க்கை; இன்னொரன்ன வகையில் கழகத்திற்கு பலம் சேர்ப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

சிறப்புத் தீர்மானம்

அறிவுலக ஆசான் - அய்யாவின் அருமருந்தன்ன சீடர் - ஆசிரியர் என்று அகிலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அன்பர்களால் ஆர்வப் பெருக்கோடு அழைக்கப்படும் அறிஞர் - அய்யா, அம்மா ஆகியோரின் மறைவிற்குப் பிறகும் இந்த இயக்கத்தைக் கட்டுக்கோப்பு இலக்கணத்துடன் இயக்கம் என்னும் சொல்லுக்கு இம்மியும் மாசு குறையாமல் இயக்கிக் கொண்டிருக்கும் ஏந்தல் - இருபால் இளைஞர்களை இயக்கத்தின்பால் ஈர்த்து ஆற்றுப்படுத்தும் தொலைநோக்குச் சிந்தனை -  இரும்புக் குண்டென இயக்கக் கட்டமைப்பு - பிரச்சாரப் புத்தாக்கம் - தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த கல்விப் பணியைப் பல்கலைக் கழகம் என்கிற அளவுக்கு விரிவாக்கிய வேந்தர் - பிரச்சினைகளின் மீதோ பெரும் புயல் தாக்குதல் போன்ற போராட்ட நடவடிக்கைகள் - பெரியாரை உலக மயமாக்கல் என்னும் பாதையில் பெரும் பாய்ச்சல் - இந்தியாவின் தலைநகரில் பெரியார் மய்யம், பெரியார் பன்னாட்டு மய்யம் உருவாக்கம் - வெளியீட்டுத் துறையில் வேகமும், விவேகமும் மின்னும் நவீன யுக்திப் போக்குகள், திராவிடர் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தும் அரிய சிந்தனை - அதற்கான ஆக்கப்பூர்வ ஏற்பாடுகள் - திராவிடர் இயக்கத்திற்கும், தமிழனத்துக்கும் வரும் சவால்களைச் சந்தித்து எதிரிகளின் பொய்ப் பிரச்சாரங் களை முறியடிக்கும் போர்க்குணம் -  ஈழத் தமிழர் விடுதலைக்காக எண்ணி முடிக்கப்பட முடியாத ஈடு இணையற்ற செயல்பாடுகள் - ஈழ விடுதலை மாநாடு உள்பட வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக் களத்தில் வாட்படையாய்ச் சுழலும் வலிமை - மூட நம்பிக்கை இருளை முற்றாகத் தூக்கி எறிய அறிவியல் வெளிச்சத்தை வாரி இறைக்கும் வற்றாத் திட்டங்கள், சமூகநீதித் திசையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் வழித்துணை - உலகப் பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைக்கும் செல்வாக்கு  - உலகத் தமிழர்களின் மத்தியில் உரத்த சிந்தனையாளர் என்னும் அங்கீகாரம் - கட்சி, அரசியல், வண்ணம் இவற்றையெல்லாம் கடந்து பொது மரியாதைக்குரிய இடத்தை அலங்கரிக்கும் ஆளுமை, மனித உரிமைகள், மனிதநேயம் இவற்றிற்காக எப்பொழுதும் எடுப்பான குரல் கொடுக்கும் இயல்பு - பெரியார் வைத்த நம்பிக்கை என்னும் நந்தா விளக்கை எந்தச் சுழல், புயல் மத்தியிலும் அணையாது ஏந்திச் செல்லும்  இணையற்ற பேராற்றல் - ஓயாப் படிப்பு - ஓயா எழுத்து - ஓயாப் பிரச்சாரம் - ஓயா உழைப்பு என்னும் ஒட்டாரம்.

தந்தை பெரியாரின் எதிர்ப்பார்ப்பை எல்லா வகைகளிலும் நியாயப்படுத்தி செயலாக்கம் செய்த நேர்த்தி மாண்புமிகுக்கும் மேலானது மானமிகு என்பதை நாளும் பாடமாகச் சொல்லிக் கொடுக்கும் பாடசாலை -
மிசா சிறை உள்பட 47 முறை கைதும், சிறையும். பலமுறை உயிர் குறி வைத்துத் தாக்கப்பட்ட கொடுமை, இவற்றையெல்லாம் கடந்து தடைப்படாத - அப்பழுக்கற்ற தூயத் தொண்டறப் பணிகள் - இவை அனைத்தும் கண்டிப்பாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்குச் சூட்டப்படும் புகழாரம் அல்ல - நடைமுறையைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரு படப்பிடிப்பு என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்!

இப்படியொரு தலைவர் தந்தை பெரியாருக்குப்பின் - இயக்கத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்தது பெரும் வாய்ப்பும் - பேரரணும் ஆகும் என்பதைப் பெருமையோடு என்பதைவிட நன்றி உணர்வுடன் எடுத்துக்கூறி, அந்தத் தலைவர் 80 ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார் என்பதை - மட்டில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்து, அந்தத் தலைவரின் அறிவு - அன்புக் கட்டளையை ஏற்று, எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் அய்யா பணி முடிப்போம் என்று சூளுரைத்து, ஆசிரியர் அவர்களின் நூற்றாண்டிலும் இந்த நேர் காணல் விழா நடக்கவேண்டும் என்ற கோடானுகோடி தமிழர்கள் இனம், மொழி, எல்லைகளைக் கடந்த பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், மனித உரிமை விரும்பிகள் சார்பில் இப்பொதுக்குழு மணம் கமழ்ந்த வாழ்த்துகளை வாயார, மனமார, கையாரத் தெரிவித்துக் கொள்கிறது. வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது.

முன்மொழிதல்: கலி. பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தீர்மானம் முன்மொழியப்பட்டவுடன் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

சால்வைப் போர்த்தி பாராட்டியோர்

பொருளாளர்: கோ.சாமிதுரை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர்கள் டாக்டர் சோம.இளங் கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ், முன்னாள் செயலவைத் தலைவர்ராஜகிரி கோ.தங்கராசு ஆகியோர்சால்வை போர்த்தி பாராட்டினார்கள்.

1 comments:

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும். (விடுதலை,20.9.1964)