Search This Blog

14.4.11

சித்திரையா?60 ஆண்டுகளுக்கும், தமிழுக்கும் என்ன தொடர்பு?


(கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அவர்களது இல்லத்தில் 13.4.2011- புதன்கிழமை அன்று, சிந்தாதிரிபேட்டையிலுள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பாரிமுனையில் உள்ள வேங்கடேச பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோயில், முத்தையால்பேட்டையில் உள்ள ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண பெருமாள் திருக்கோயில், எழும்பூரில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் திருக்கோயில் ஆகியவற்றின் பட்டாச்சாரியார்கள் நேரில் சந்தித்து பிரசாதங்களை அளித்ததுடன், அம்மா அவர்கள் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். - “விடுதலை” 14-4-2011)

பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் 60 ஆண்டுகளுக்கும், தமிழுக்கும் என்ன தொடர்பு? இவை தமிழ் ஆண்டு என்றால் ஒரு பெயராவது தமிழில் இருக்க வேண்டாமா? என்ற கேள்விக்கு நாணயமான முறையில் இதுவரை பதில் இல்லை.

நாணயமான முறையில் பதில் சொல்ல சரக்கு இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் அந்த சமஸ்கிருதப் பெயர்களில் புழங்கும் ஆண்டுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது வெட்கக் கேட்டின் உச்ச மாகும்.

அறிவு ரீதியாக - பண்பாட்டு ரீதியாக இவற்றை ஏற்க முடியாது என்பது ஒரு பக்கம். இந்த ஆண்டுகள் பிறந்ததுபற்றி எழுதி வைத்திருக்கும் ஆபாசத்தை, அருவருப்பை நினைத்தால் சிறு குடலும், பெருங்குடலும் குமட்டிக் கொண்டு வெளியே வந்து விழுந்து விடும்.

ஒருமுறை நாரதமுனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து நீர் அறுபதனாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்கு கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, அதற்கு உடன்பட்டு, எல்லா வீடுகளிலும் பார்த்து வர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ண னிடம் வந்து அவர் திரு மேனியில் மையல் கொண்டு நான் தேவரீரிடம் பெண் ணாய் இருக்க வரிக்க எண்ணங் கொண்டேன்! என்றான்.

கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய் பதம் பெற்றனர் என்று புராண இதிகாச அகராதியாம் அபிதான சிந்தாமணி கூறுகிறது.

கடுகளவு அறிவும், கடுகு மூக்கு அளவு ஒழுக்கமும் உள்ளவர்கள் இந்தக் கேவ லத்தை ஏற்றுக் கொண்டு தமிழ் வருஷம் என்று ஒப்பு வார்களா?

ஆரியர்கள் எவ்வளவு வன்மம் கொண்டு தமிழினை, தமிழனை இப்படிக் கொச் சைப்படுத்தி யிருப்பார்கள்!

இந்தக் கேவலத்தைத் தூக்கி எறிய தமிழர்களின் வேளாண் விழாவையொட்டி தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கக் கோரி தமிழ்ப் புலவர் பெரு மக்களும், திராவிடர் கழகமும் குரல் கொடுத்து வந்ததை ஏற்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக 2008இல் அறி வித்து, திருவள்ளுவர் ஆண் டோடு தொடர்புபடுத்தி, தமிழின வரலாற்றில் மறு மலர்ச்சி அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார். இதற்காகத் தமிழுலகமும் பெரு நன்றி காட்டக் கடமைப் பட்டுள்ளது.

மூடநம்பிக்கையும், ஆபாசமும் இல்லா விட்டால் பார்ப்பனியப் பிழைப்பு நாறிப் போய் விடுமே! அரசின் சட்டத்தை ஏற்காது பழைய சமஸ்கிருத வயப்பட்ட ஆண்டை விடாப்பிடியாகக் கட்டிக் கொண்டு அழுவதும், அதற்குத் தமிழர்கள் நடத்தும் ஏடுகளும் துணைக்குப் போவதும் படு வெட்கக் கேடாகும்.

ஜெயலலிதா இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மறுமலர்ச்சி தி.மு.க. என்ற பெயருடைய கட்சியின் பொதுச்செயலாளர் இந்த அட்டவணையில் இடம் பிடிப்பதும், வாழ்த்துக் கூறுவதும் இடிக்கிறதே! சிந்திப்பார்களாக!

--------------------------- மயிலாடன் அவர்கள் 14-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

rajuselvaraju49 said...

uthaya suriyanum samskirutham thaan