Search This Blog

29.11.10

வைக்கம் போராட்டம்-பெரியாரின்,காந்தியாரின் நிலைப்பாடு என்ன?


வைக்கம் சிந்தனை! (1)

வைக்கம் விழாவின் (1924-25) 85 ஆம் ஆண்டு விழாஅதனையொட்டி தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜாதி ஒழிப்பு மாநாடு இம்மூன்றையும் முன்னிறுத்தி வைக்கத்தில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. (26.11.2010)

இம்மூன்றும் மூன்று பெயர்களில் இருந்தாலும் அடிப்படை நோக்கம் ஒன்றாகும். ஜாதி ஒழிக்கப்பட்டு, சமத்துவம், சமதர்மம் பூத்துக் குலுங்கும் ஒப்பற்ற சமுதாயத்தைப் படைப்பதே ஆகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில், சமுதாயப்புரட்சி வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று குறிப்பிடத் தக்க வரலாற்றுச் சிறப்பும், திருப்பு முனையும் உடையது வைக்கம் போராட்டமாகும்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆரிய-பார்ப்பன வல்லாண்மை கொடிய வாளாக முரசடித்துக் கொண்டிருந்தது.

ஒரு நம்பூதிரிப் பார்ப்பானை எதிரே பார்த்தால் சாணான் (ஈழவர்கள்), 24 அடிகள் தூரம் விலகி இருக்க வேண்டும். ஒரு தீயர் 38 அடிகள் தூரத்தில் ஒதுங்க வேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி ஒதுங்க வேண்டும் என்பதெல்லாம் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது.

பல் குச்சியில் கூட ஜாதி வாரியாக அளவு முறைகள் வேறுபட்டிருந்தன என்றாலே தெரிந்துகொள்ளலாம்- ஜாதியின் குரூரத்தனத்தை.

நாயர் வீட்டுப் பெண்களோடு, நம்பூதிரிப் பார்ப்பனர்கள் சம்பந்தம் என்ற முறையில் அனைத்து உறவுகளையும் மேற்கொள்ளும் உரிமைகளைப் பெற்றிருந்தனர்.

கோயில்களைச் சுற்றி பார்ப்பனர்கள் வீடுகளை அமைத்துக்கொண்டனர். சூத்திரர்களில் ஏராளமான உள்பிரிவுகளை உண்டாக்கி அவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்து விட்டனர்.

நாயர்களுக்குள்ளேயே 64 உள்பிரிவுகள் உண்டாக்கப்பட்டன என்றால், அந்தச் சூழ்ச்சியின் கொடூரத்தைத் தெரிந்துகொள்ளலாமே!

நாயர்களுக்கு உடை வெளுக்கும் பிரிவினர் என்றால் அற்கொரு பிரிவு (வேலுத்தேடன்) நாயர் அல்லாத அந்நாட்டுக் குடிமக்களுக்கு உடை வெளுப்பவருக்கு இன்னொரு பெயர் (வேலன்), வீட்டு வேலைக்காரர்கள் வரை ஏராளமான உட்பிரிவுகளை ஏற்படுத்தினர்.

கடவுள்களிலும் கூட இரு பிரிவினர், சவர்ணக் கடவுள், அவர்ணக் கடவுள்-அதாவது உயர்ஜாதி நம்பூதிரிகளுக்கான கடவுள், மற்றவர்களுக்கு வேறு கடவுள்கள்-கோயில்கள்!

அரசர்களிடமிருந்து ஏராளமான சலுகைகளைப் பார்ப்பனர்கள் பெற்று வந்தனர். கோயில் சொத்துகளுக்கும், பார்ப்பனர் சொத்துகளுக்கும் வரி கிடையாது. போர்க்காலங்களில் தங்கள் சொத்துகளை கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் எழுதிவைத்து விடவேண்டுமாம். அப்படி எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் நாளடைவில் பார்ப்பனர்களுக்குத்தான் வந்து சேர்ந்தன.

எம்.கே.வெள்ளோடி என்பவர் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பு கூறுகிறது.

அந்த வெள்ளோடி தன் குடும்பத்தினருடன் ஒரு கோயில் விழாவுக்குச் சென்றிருந்தார். கோயில் ஊழியர்களான வாரியர் என்பவருடன் தங்கி இருந்தார்.

வாரியர் பெண்கள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் மேலாடையின்றி உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர். (அதுதான் அங்கு வழக்கம்) சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கு வந்த நம்பூதிரிப் பார்ப்பனன் ஒருவன் மேலாடையின்றி உணவு பரிமாறிக்கொண்டிருந்த வாரியர் பெண்ணைக் கட்டிப்பிடித்து காமாந்தகரமாக நடந்துகொண்டான். நம்பூதிரிகள் அதனைக் கண்டு உரக்கச் சிரித்து, அந்தத் தடியனை வாழ்த்தினார்கள்.

வாரியர் பிரிவைச் சேர்ந்த, எந்த ஒருவரிடமும் எந்தவித சலனமும் ஏற்படவில்லையாம்.

கேரளாவை பைத்தியக்காரர்களின் விடுதி என்று விவேகானந்தர் கூறியதன் பொருள் இப்பொழுது விளங்கி இருக்குமே!

இப்படி நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஆதிக்க சொர்க்கமான கேரளாவில்தான் தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தினார் என்பதை எண்ணும்போதுதான்-அந்தப் போராட்டத்தின் சிறப்பு எத்தகைய மகத்தானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

உண்மையான முதல் சமூகப்புரட்சிப் போர் என்பதையும் இதன்மூலம் வரலாறும் ஒப்புக் கொள்ளும்.

------------------”விடுதலை” தலையங்கம் 27-11-2010

வைக்கம் சிந்தனை! (2)

இந்தியத் துணைக் கண்டத்தில் தந்தை பெரியார் தலைமை வகித்து நடத்திய வைக்கம் போராட்டம்தான் முதல் சமூகப் புரட்சி - சுதந்திரப் போராட்டமாகும்.

தீண்டாமை ஒழிப்பு என்று காந்தியார் சொல்லிக் கொண்டாலும், அந்தத் தீண்டாமை ஒழிப்பு என்பது - தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக் கிணறு, தனிப் பள்ளிக்கூடம் என்று ஏற்பாடு செய்து, அவர்களை நிரந்தரமாகத் தீண்டத் தகாதவர்கள் என்று நிலை நிறுத்தும் ஏற்பாடாகும்.

காந்தியாரின் இந்த வகை தீண்டாமை ஒழிப்பைத் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டதில்லை.

தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால், வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால், வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு என்றார் காந்தியார். அப் போது நான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடா தென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லா விட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும்; அவனுக்கு இழிவு நீங்கவேண்டுமென்பதே முக் கியமே தவிர, தண்ணீரல்ல (விடுதலை, 9.10.1957) என்று கூறியவர் தந்தை பெரியார்.

சமூக மாற்றத்தில் காந்தியார் எங்கே இருக்கிறார், தந்தை பெரியார் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை இந்த இடத்தில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்!

பாம்பும் நோகக்கூடாது; பாம்படித்த கொம்பும் நோகக்கூடாது என்கிற அணுகுமுறைதான் காந்தியார் அவர்களுடையது.

வைக்கம் போராட்டத்தில் கூட என்ன நடந்தது? தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன? காந்தியாரின் நிலைப்பாடு என்ன என்பதை இந்து ஏட்டில் (12.3.1925) வெளிவந்த ஒரு செய்தியே போதுமானதாகும்.

Walls Round Vaikom Roads,
(From Our Special Correspondent)

Quilon, March 12, (1925)
‘‘Mr. V.V.S. Iyer of the Tamil Gurukulam at Shermadevi was at Vaikom for the past two days and had a long interview with Mahatmaji on the question of interdining the Vidyalaya. It is understood that Mahatmaji did not wish that there should be any compulsion in the matter, and if any pupil had scruples such scruples had to be respected, Mahatmaji was also against the levelling down of the caste system, because it was a necessary implication of the Hinduism.
‘‘Devosom Commissioner Mr. Raja Raja Varma also interviewed Mahatmaji yesterday with orthodox pundits and discussed the situation at Vaikom. It appears that the Devosom authorities contemplate raising another wall to cover the temple roads on the four sides thus effectively preventing not only Untouchables but also Christians and Mohammodans from entering the prakarams.’’

கிலான் மார்ச் 12 (1925)

வைக்கத்தில் தங்கி இருந்த காந்தியாரை திரு. வ.வே.சு. அய்யர் சந்தித்து சேர்மாதேவி குரு குலத்திலே சமபந்தி போஜனம் நடைபெற்றாக வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி வரு வதைப்பற்றி கருத்துக் கேட்டார். அதற்குக் காந்தி யார், சமபந்தி போஜனம் என்பது வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக் கூடாது. மேலும் ஒரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து சமபந்தி போஜ னம் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட்டாகவேண்டும்.

ஜாதி என்பது ஒழிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப் படவேண்டும் என்பதை மகாத்மாஜி விரும்பவில்லை. ஜாதி அமைப்பு என்பது இந்து சமூகத்தின் முக்கிய அம்சம்.

வைக்கம் தேவஸ்தான கமிஷனர் திரு. ராஜவர்மா சில வைதிகப் பண்டிதர்களுடன் சென்று மகாத் மாவைச் சந்தித்து, வைக்கத்தில் நிலவி வரும் சூழ்நிலைபற்றி விவாதித்தனர்.

விவாதத்திற்குப் பின்பு தேவஸ்தான அதிபதி கள், தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர் கள், முஸ்லிம்களும்கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையாவண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மற்றுமொரு சுவரை எழுப்பினர்.

இதுதான் இந்து ஏடு வெளியிட்ட செய்தியாகும்.

வைக்கம் தேவஸ்தான ஆணையர் ராஜவர்மாவும், வைதிகப் பார்ப்பனர்களும் காந்தியாரைச் சந்தித்து உரையாடியதன் விளைவு - ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல தீண்டத்தகாதவர்கள் என்றுசொல்லப்படு பவர்கள் மட்டுமல்லர்; கிறிஸ்தவர்கள், முஸ்லிம் களும்கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையா வண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மேலும் ஒரு சுவரை எழுப்பினர் என்று கூறுகிறது இந்து ஏடு.

இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாண்டிதான் தந்தை பெரியார் சத்தியாக்கிரகம் நடத்தி வைக்கம் வீரராக வீறுநடை போட்டு வெளிவந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

------------------------”விடுதலை” தலையங்கம் 29-11-2010

0 comments: