Search This Blog

15.11.10

பெரியாரின் சிக்கனம் உலகத்தின் பொக்கிஷம்


பெரியாரிடம் கொடுக்கப்பட்ட செல்வங்கள் மீண்டும் மக்களுக்கே பயன்பட்டிருக்கின்றன

திருவரங்கத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை

பெரியாரிடம் கொடுக்கப் பட்ட செல்வங்கள் மீண்டும் மக்களுக்கே திரும்பக் கிடைத்திருக்கின்றன என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திருவரங்கத்தில் 8.11.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திருவரங்கத்தில் நாத்திக சாதனை!

இன்றைக்கு இந்த திருவரங்கத்தில் திருச்சி திராவிடர் கழக மண்டல மாநாட்டின் மூலமாக நாத்திக சாதனையை சிறப்பாக செய்திருக்கிறது. நாத்திகம் என்பது நன்னெறிதான் என்பதை உலகத்திற்கு பறை சாற்றியிருக்கிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி வாழக் கூடிய வர்கள் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலே இயக்கம் எப்படி வலிவோடும், பொலிவோடும் இருந்ததோ அதற்கு எள்ளளவுக்கும் இடமின்றி உருவத்தால் இன்றைக்கு பெரியார் அவர்கள் மறைந்து 37 ஆண்டுகள் உருண்டோடியிருக்கின்றன என்று சொன்னாலும் கூட, 37 ஆண்டுகள் சென்றாலும் எங்களைப் பொறுத்த வரையிலே பெரியார் என்பவர் ஒரு தனி மனிதரல்லர். அவர் ஒரு தத்துவம். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு வரலாற்றுத் திருப்பம் என்று சொன்னார்களே, அதை எப்படி மக்களுக்கு நிரூபிப்பது என்பதற்காகத்தான் நான் ஒரு கருவியாக அவர்களுக்கு ஆக்கப்பட்டிருக்கின்றேன்.

அதை நிரூபிப்பதற்காகத் தான் இங்கே நண்பர்கள் சுட்டிக் காட்டியதைப் போல தந்தை பெரியார் அவர்களை அவருடைய பிறந்த நாள் விழாக்களின் பொழுது கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி. கடவுளை மற! மனிதனை நினை! என்று தனது வாழ்நாள் முழுவதும் சொன்ன தந்தை பெரியாருக்கு ஒரு காலத்தில் நாங்கள் கல்லடியும், சொல்லடியும் கொடுத்தோம்.

துலாபாரம்!

அதற்கெல்லாம் கழுவாய் தேடுகின்ற வகையிலே உங்களுக்கு நாங்கள் நன்றி காட்டுவதற்கு பக்குவப் பட்டு விட்டோம் என்பதற்கு அடையாளமாகத் தான் தந்தை பெரியாருக்கு நன்றி காட்டுவதற்காக, அவருடைய தொண்டை ஊக்கப்படுத்துவதற்காக, அவர்களுடைய கொள்கை வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக தராசிலே தந்தை பெரியார் அவர்களை உட்கார வைத்து, கழக துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சொன்னார்களே, துலாபாரம் என்ற வடமொழி வார்த்தையை தராசிலே பயன்படுத்தி கிருஷ்ண னுக்குத் துலாபாரம், கடவுளுக்குத் துலாபாரம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அது சமுதாயத்திற்கு, அறிவுக்கு மிகப்பெரிய பாரம் என்று சொல்லக்கூடிய நிலையை மாற்றி மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் திரும் பிப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

தராசிலே அமரவைத்து எடைக்கு எடை பொருள்கள்

ஆரியமே! இனிமேலும் உங்களுடைய அடிமைகளாக நாங்கள் இருப்பதற்குத் தயாராக இல்லை; எழுச்சி பெற்றிருக்கிறோம் என்று காட்டக்கூடிய வகையிலே, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களை தராசிலே வைத்து எடைக்கு எடை பொருள் களை எல்லாம் கொடுத்தீர்கள். அது இன்னமும் தொடர்கிறது (கைதட்டல்).

இன்னமும் பெரியாருக்குத்தான் தந்திருக்கிறீர் களே தவிர, வேறு நபர்களுக்கு அல்ல (கைதட்டல்). நான் உருவத்திலே வீரமணியாக இருக்கலாம். ஆனால், நான் பெரியாருடைய தொண்டனுக் கெல்லாம் தொண்டன். பெரியாருடைய கொள்கை களை எடுத்துச் சொல்லுகின்ற ஒரு ஊது குழல்.

பெரியாருக்கு என்ன மரியாதையோ...

பெரியாரைப் பாராட்டினால், பெரியாருடைய கொள்கையைச் சொன்னால், பெரியாருக்கு என்ன மரியாதை காட்டினோமோ அதே மரியாதையை கிஞ்சித்தும்கூட குறைக்காமல் உங்களுக்கும் காட்டுவோம் (கைதட்டல்). காரணம், பெரியார் எங்களுக்கு ஒரு தத்துவமே தவிர, அவர் பிறப்பு, இறப்பு என்ற இரண்டைக் கொண்ட ஒரு தனி மனித வாழ்வல்ல என்று காட்டுவதற்காகத்தான் இன்றைக்குத் தராசிலே என்னை அமர வைத்து பல பொருள்களை வழங்கி என்னைத் திக்குமுக்காடச் செய்திருக் கிறீர்கள்.

இதுவரையிலே எத்தனையோ ஊர்களில் தராசிலே அமர்ந்திருக்கிறேன். உள்ளே போவதும் தெரியாது. வெளியே வருவதும் தெரியாது. ரொம்ப பக்குவமாக உடல் வலி இல்லாமல் வந்துவிடக் கூடிய வாய்ப்பு இருக்கும்.

மறைக்க முடியாத தண்டனை

ஆனால், இங்கே நீங்கள் கொடுத்த அன்புத் தண்டனை இருக்கிறதே, அது என்றென்றைக்கும் மறைக்க முடியாத தண்டனை (கைதட்டல்).

ஒரு பக்கம் எனக்கு உடல் வலி என்று சொன்னாலும், இதுதான் கொள்கை வலிமை என்ற காரணத்தினாலே வலி தெரியவில்லை (கை தட்டல்). வலிமைதான் தெரிந்தது. நானும் முடிந்து விடும், எழலாம் என்று இரண்டு முறை, மூன்று முறை முயற்சித்தேன்.

கடுங்காவல் தண்டனை போல்...!

அது மட்டுமல்ல, வால்டேர் அவர்களும் அவருடைய அன்பு வாழ்விணையரும், அவருடைய குடும்பமும் இ.ச.இராவணனும், மற்றவர் களும் இங்கே அமர்ந்துகொண்டு என்னிடத்திலே ரூபாய் நோட்டு கொண்ட மாலையைப் போட்டு, அதற்கு மேலே மிக கஷ்டப்பட்டு பொன்னாடையில் ரூபாய் நோட்டையும் பதித்து அதை எனக்கு அணிவித்தார்கள்.

வழக்கம்போல அதை எடுத்து வைத்து விடலாம் என்று நான் ரூபாய் நோட்டு பொன்னாடையை அகற்ற முனைந்தபொழுது தராசிலே இருந்து நீங்கள் எழுந்து வருகின்ற வரையிலே அணிந்து கொண் டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள் (கைதட்டல்). இது கடுங்காவல் தண்டனையை விட மிகக் கொடுமையான தண்டனை என்னைப் பொறுத்தவரையிலே திருமணத்திலே கூட அதிக நேரம் நான் மாலை அணிந்து கொண்டிருக்கவில்லை (கைதட்டல் - சிரிப்பு).

அப்படிப்பட்ட நிலையிலே இவர்களுடைய அன்பு, அவர்களுடைய கட்டளை என்று ஒரு புறம் நாம் மறுத்தாலும், பெரியார் கொள்கையின் வெற்றி ஒளி வீச்சு அது என்று கருதிய காரணத்தால் அவர்களுடைய அன்பிற்குத் தலைவணங்கி அமர்ந்திருந்தோம்.

பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காசும்...

அது மட்டுமல்ல, பெரியாரிடத்திலே நாங்கள் எல்லாம் பழகிய காரணத்தால் இன்னொரு கவலையும் எனக்கிருந்தது. இதிலே ஒட்டப்பட்ட ஒவ்வொரு ரூபாய் நோட்டும் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டுமே, அதில் எதுவும் கீழே விழுந்து விடக் கூடாது. எனவே, அதிலும் குறியாக இருந்து அதை பத்திரமாக மடித்து வைக்கச் செய்தோம். ஏனென்றால், அய்யா தந்தை பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காசும் தமிழ் மக்களுக்கே மீண்டும் திரும்பி வந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் (கைதட்டல்).

அய்யா அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கு நான்கணா வாங்குவார். ஆனால், கழகப் புத்தகம் வாங்கி கையெழுத்து கேட்டால் நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக கழகப் புத்தகம் வாங்கியிருக்கின்றீர்கள் போதும் என்று தெளிவாக அய்யா அவர்கள் சொல்லுவார்கள்.

-----------------------------(தொடரும்) "விடுதலை” 12-11-2010



இயற்கையையே வெல்வதுதான் பகுத்தறிவின் தன்மை திருவரங்கம் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சி முழக்கம்

இயற்கையையே வெல்வது தான் பகுத்தறிவு என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திருவரங்கத்தில் 8.11.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இன்றைய இளைய தலைமுறை அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, கணக்குப் பார்ப்பதில் அய்யாவைத் தவிர வேறு யாரும் இல்லை. தந்தை பெரியாரின் சிக்கனம் உலகத்தின் பொக்கிஷம். பெரியார் திரைப்படம் பார்த்தவர் களுக்குத் தெரியும்.

அய்யா - அண்ணா - நடந்த ஒரு சம்பவம்

அய்யா அவர்களும், அண்ணா அவர்களும் ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு வரவேண்டும். ரயில் டிக்கெட் எடுக்கும்பொழுது கரூர் வரையிலே டிக்கெட் எடு என்று அய்யா அவர்கள் அண்ணா அவர்களிடம் சொல்லுவார்கள்.

கரூரில் வண்டி ரொம்ப நேரம் நிற்கும். கரூரிலிருந்து திருச்சிக்கு இன்னொரு ரயில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்ன அந்தக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். இது நடந்த சம்பவம். பெரியார் திரைப்படத்திலே எதுவும் கற்பனை கிடையாது. ஏராளமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றனவே தவிர, எதுவும் கற்பனையாக சேர்க்கப்படவில்லை.

உடனே அண்ணா அவர்களுக்கு சந்தேகம். அய்யா, இந்த ரயில் நேராக திருச்சிதான் போகிறது. கரூரோடு நிற்கவில்லை. திருச்சிக்கு நேரே டிக்கெட் கொடுக்கிறார்கள். நாம் போகலாம் என்று சொன்னவுடனே, அப்பொழுதுதான் அய்யா அவர்கள் அண்ணா அவர்களிடம் புரியும்படியாக அந்த ரகசியத்தை, விளக்கத்தைச் சொல்லுகின்றார்.

கரூரில் இருந்து திருச்சிக்கு டிக்கெட் எடுத்தால் நான்கணா நமக்கு மிச்சம் (கைதட்டல்). இரண்டு டிக்கெட்டிற்கு எட்டணா மிச்சம். நமக்கு நேரம் இருக்கிறது. வெளியில் சென்று டிக்கெட் எடுத்து வரலாம் என்று பெரியார் திரைப்படத்தில் வருகின்ற காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஒளிப்படம் எடுத்தால் ரூ. அய்ந்து

அது மட்டுமல்ல, அய்யா அவர்களை வைத்து ஒளிப்படம் எடுத்தால் அய்ந்து ரூபாய் கொடுக்க வேண்டுமென்று கணக்கு வைத்திருந்தார்கள். புலவர் இமயவரம்பன் அய்யா அவர்களுடன் இருப்பார். இதோ இங்கேயிருக்கின்ற தி.மகாலிங்கன் அய்யா அவர்களுடன் உடன் இருப்பார்கள்.

பெரியார் மாளிகையிலே இருக்கிறார். எனக்குக் கூட எடைக்கு எடை கேரட் கொடுத்தார். மகாலிங்கன் அவர்களுக்கும் தெரியும். தோழர்கள் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். இப்பொழுது செல்ஃபோன்களை வைத்துக்கூட படம் எடுத்து விடுகிறார்கள். ஆனால் அப்பொழுது அப்படி இல்லை. ஃபிளாஷ் பல்பு இருக்கும். ஒளிப்படம் எடுக்கும்பொழுது ஃபிளாஷ் அடிக்கும். அய்யா அவர்களுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொள்பவர்களிடமிருந்து அய்ந்து ரூபாய் உடன் இருப்பவர்கள் வாங்க வேண்டும்.

அய்யா அவர்களுடன் ஒவ்வொருவராக நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அய்ந்து ரூபாய் பணம் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். கடைசியாக மொத்தப் பணத்தை எண்ணி, புலவர் இமயவரம்பனோ, அல்லது எங்களைப் போன்றவர்களோ, மகாலிங்கன் போன்றவர்களோ கொடுத்தால் அய்யா அவர்கள் கவனமாக எண்ணிப் பார்ப்பார்கள்.

முழுச் செல்வத்தையும் மக்களுக்கு அளித்தார்

எண்ணிப் பார்த்து விட்டு, ஒரு அய்ந்து ரூபாய் குறைகிறதே என்று சொல்லுவார்கள். இவர் எப்படி இவ்வளவு கணக்காக சொல்லுகிறார். நாம் எப்படி விட்டுவிட்டோம். யாராவது ஒருத்தர் கொடுக்காமல் கூட போயிருக்கலாம் அவசரத்தில். ஆனால், அய்யா அவர்கள் அதில் கண்காணிப்போடு தெளிவாக எண்ணிப் பார்த்துக் கேட்பார்கள்.

பத்துத் தடவை கேமரா பல்பு எரிந்ததே. நீங்கள் ஒன்பது பேருக்குத்தானே கணக்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்பார் (கைதட்டல்). அய்யா அவர்கள் அந்த ஃபிளாஷ் அடிப்பதை வைத்தே சொல்லிவிடுவார்.

அய்யா அவர்கள் அப்படி வாங்கிய பணம் என்ன, சொந்தக்காரர்களுக்குக் கொடுத்தாரா? அல்லது தனது ஜாதிக்காரருக்குக் கொடுத்தாரா? அல்லது வேறு வகையிலே ஏதாவது எடுத்துச் சென்றாரா? இல்லை. மாறாக அதுதான் இன்றைக்குப் பகுத்தறிவுக்குக் கேந்திரமாக, பல்கலைக் கழகமாக, மருத்துவமனைகளாக, கல்லூரிகளாக, கல்விக் கூடங்களாக மக்களுக்கே பயன்படக்கூடிய அளவிற்கு வாழ்ந்த ஒரு தலைவர் தன்னுடைய முழுச் செல்வத்தையும் மக்களுக்கே அளித்தார்.

அறிவுச் செல்வத்தையும் வழங்கியவர்

பணத்தையும் அளித்தார். அறிவுச் செல்வத் தையும் நமக்கு அளித்தார். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டர்கள் நாங்கள். எனவேதான் இங்கே நண்பர்கள் சொன்னதைப் போல நீங்கள் கொடுத்த பொருள்கள் ஏராளம் இருக்கின்றன.

தோழர் ஆல்பர்ட் அவர்கள் சொன்னபொழுது, நண்பர்கள் இங்கே சுட்டிக் காட்டியது போல, இது ஏதோ திருவரங்கத்திலேயே ஒரு சூப்பர் மார்க்கெட் வைத்து இங்கேயே உட்கார்ந்து விடக்கூடிய அளவிற்கு அவ்வளவு பொருள்களை மாற்றி, மாற்றி நீங்கள் கொடுத்தீர்கள்.

சூப்பர் மார்க்கெட்டில்தான் எல்லா பொருள்களும் கிடைக்கும். இவ்வளவு பொருள்களை மக்கள் கொடுப்பதற்கு என்ன காரணம்? பெரியாரே ஒரு சூப்பர் மார்க்கெட்தான். அய்யா அவர்களுடைய கொள்கையே ஒரு பேரங்காடிதான். சிலருக்கு சில பொருள்கள் பிடிக்கும். எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

பெரியாரே ஒரு சூப்பர் மார்க்கெட்

எல்லா பொருள்களும் வாங்க வேண்டுமென்று சூப்பர் மார்க்கெட்காரர்கள் யாரும் கோபித்துக் கொள்வதும் கிடையாது.

சிலருக்கு கடவுள் மறுப்பு பிடிக்காது. ஆனால் சமூக நீதி பிடிக்கும். பெரியார் இல்லையானால் என்னுடைய பிள்ளைக்குப் படிக்க இடம் கிடைத்திருக்காது. பெரியார் இல்லையானால் என்னுடைய மகன் படித்திருக்க மாட்டான். எனவே பெரியார் தேவை என்று சொல்லுவார். ஒருவருக்கு மூடநம்பிக்கையின் கெடுதி தெரியும். பெரியாரை விட்டால் வேறு யாரய்யா இதை எல்லாம் பேசுவார்கள்? என்று நான் மறுபடியும் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

தன்மானத்தையும் இழக்கக்கூடிய லட்சியம்

பெரியார் என்று சொல்லுவது ஒரு தத்துவம். ஒரு கொள்கை லட்சியம். அதுவும் எப்படிப்பட்ட லட்சியம்? தான் கொண்ட லட்சியத்திற்காக தன்னுடைய தன்மானத்தையும் இழக்கக்கூடிய அளவுக்குப் பக்குவப்படுத்தப்பட்ட லட்சியம். நன்றி பாராட்டாத ஒரு தொண்டறத்தின் முழு உருவம்தான் அந்த லட்சியம்.

எனவே, அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டர்கள் இன்றைக்கு உற்சாகத்தோடு இந்தத் திருவரங்கத்திலே இதனை சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கின்றார்கள்.

நாங்கள் எதிரிகளாகக் கருதமாட்டோம்!

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே திருவரங்கத்தில் பெரியார் சிலை திறந்ததைப் பற்றி எதிர்ப்புக் காட்டிய நண்பர்களே! நீங்கள் எங்களை எதிரிகளாகக் கருதலாம். ஆனால், நாங்கள் ஒரு போதும் உங்களை எதிரிகளாகக் கருதமாட்டோம். உங்களை மனிதர்களாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமே தவிர தமிழர்களாக்க வேண்டும், திராவிடர்களாக்க வேண்டும் என்பது கூட முடியாது. ஏனென்றால், சில பேரை திராவிடர்களாக்க முடியாது. குறைந்தபட்சம் மனிதர்களாகத்தான் ஆக்க முடியும் என்ற அளவிலே மனித நேயமாவது தழைக்கட்டும் என்று கருதுகின்றவர்கள் நாங்கள்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருடைய மடம் இருக்கிறது. எந்த சங்கராச்சாரி என்ற சந்தேகம் உங்களுக்கு வர வேண்டாம். கொலை வழக்கிலே சிக்கி ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து பிறகு பிறழ் சாட்சிகள் 36 வரையிலே வந்திருக்கிறது.

பிறழ் சாட்சியில் தொங்கிக் கொண்டிருக்கின்ற....

பிறழ் சாட்சியிலயே தனது விடுதலையைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்ற அந்த சங்கராச்சாரியார் இருக்கிறாரே, இன்னமும் நீதிமன்றத்திற்கும் போய்க் கொண்டிருக்கின்ற அந்த சங்கராச்சாரியார் மடத்திற்கு எதிரேயே கடவுள் மறுப்பு வாசகங்களோடு-அதுவும் தமிழிலே மட்டு மல்ல, ஆங்கிலத்திலேயே கடவுள் மறுப்பு வாசகத்தோடு காஞ்சிபுரத்திலே இருக்கிறது.

சங்கராச்சாரியார் பெரியாரை வணங்கும் காட்சி

சங்கராச்சாரியார் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் என்று கையைத் நூக்கினால் முதலில் பெரியாரைப் பார்த்து விட்டுத்தான் பிறகு சூரியனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் பெரியாருக்கும், சூரியனுக்கும் ரொம்ப தொடர்புண்டு. அது உங்களுக்குத் தெரியும். இன்றைக்கும் பெரியாருக்கும், சூரியனுக்கும் தொடர்பு உண்டு. (கைதட்டல்). ஆகவேதான் சூரியன் வெற்றி பெறக் கூடாது;. இருள் இருக்க வேண்டுமென்று பலர் நினைக்கிறார்கள்.

பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று ஒரு சலசலப்பு. அதுவும் அப்பொழுது அ.தி.மு.க. அரசு இருந்ததினாலே பெரியாருக்கு சிலை வைத்தால் நாங்கள் அடிப்போம், உடைப்போம் என்று கூட சிலர் புரியாமல் பேசினார்கள். ஆனால், உறுதியாக நீதிமன்றத்திற்குச் சென்ற பிற்பாடு கூட அது உறுதி செய்யப்பட்டு மாபெரும் விழாவாக நடந்தது.

இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இங்கே அய்யா அவர்களுக்குச் சிலை. இது பெருமையைக் காட்டும். இங்கே கடவுளர்களின் கதைகளை எல்லாம் சொன்னார்கள். நான் அதற்குள்ளே போக விரும்பவில்லை. ஒரு சில சம்பவங்களை மட்டும் சொல்லுகின்றேன்.

ரங்கநாதருக்கு பலவகையான வரலாறுகள்

பெரியாருடைய சிலையும் இருக்கிறது. படுத்திருக்கின்ற ரங்கநாதர் சிலையும் இருக்கிறது. ரங்கநாதரைப் பார்த்ததில்லை. பெரியாரைப் பார்த்திருக்கிறோம். ரங்கநாதருக்கு இருக்கின்ற வரலாறு பல வகையானது. இரவோடு இரவாக பெரியாருடைய சிலையை நாங்கள் எங்கேயும் நூக்கிக் கொண்டு போவதில்லை. திருப்பிக் கொண்டும் வருவதில்லை. அது ஒரே இடத்தில் இருக்கும். ஆனால் பெரியார் அவர்கள் சிலையாகக் காட்சி அளிக்கிறார் என்றால், தமிழனுக்கு தன்மானத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக-தமிழனுக்கு எழுச்சியை உண்டாக்குவதற்காக திராவிட சமுதாயத்தைத் திருத்தி மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்க வேண்டும். அந்தத் தொண்டை நான் ஏன் மேற்கொண்டேன் என்றால், வேறு எவரும் அந்தத் தொண்டைச் செய்வதற்கு முன்வரவில்லை. எனவே, எனக்கு அந்த யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை.

வேறு எவரும் செய்ய முன்வராத காரணத்தால்

வேறு எவரும் செய்ய முன்வராத பணி என்பதாலே நான் செய்ய வந்திருக்கிறேன் என்று இறுதி மூச்சு அடங்குகிற வரையிலே தந்தை பெரியார் அவர்கள் அந்தப் பணியை செய்தார்கள். இன்றைக்கு உலகளாவிய நிலையிலே அவர்களுடைய கொள்கை பரவிக் கொண்டி ருக்கிறது. இந்தியாவைத் தாண்டி, ஆசியாவைத் தாண்டி மிகப் பெரிய அளவிலே பரவிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாகத்தான் அய்யாஅவர்களைப் பற்றி யுனெஸ்கோ மன்றம் புகழ்ந்து கூறியது. இது அகில உலக அமைப்பு. ஆங்கிலத்திலே விருது கொடுக்கும் பொழுது சைட்டேசன் கொடுத் திருந்தார்கள். அய்யா அவர்களைப் பாராட்டி எழுதியிருக்கின்ற அந்த வாசகத்திலே சொல்லப் பட்டிருக்கின்றது.

பெரியார்-புது யுகத்தின் தீர்க்கதரிசி

பெரியார் ஒரு புது யுகத்தினுடைய தீர்க்க தரிசி: உலகத்தின் தொலை நோக்காளர். வருவதை முன்னாலேயே கணித்துச் சொல்லக் கூடிய ஆற்றலாளர். தென் கிழக்கு ஆசியாவினுடைய சாக்ரட்டீஸ் என்று அதிலே பாராட்டப் பட்டிருந்தது. ஆனால் அந்த சாக்ரட்டீசுக்கும், யுனெஸ்கோ மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தந்தை பெரியாருக்கும், என்ன வேறுபாடு? அன்றைக்கு கிரேக்கம் சாக்ரடீசுக்குக் கொடுத்தது விஷம் கடைசியிலே. சாக்ரட்டீஸ் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

தன் கொள்கை வெற்றி பெறுவதை தன் கண் முன்னாலேயே பார்த்தவர்

அதற்குக் கடுமையான விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், பெரியார் ஒருவர்தான் தன்னுடைய கொள்கையின் வெற்றியைத் தன் காலத்திலேயே பார்த்து அனுபவித்த ஒரே தலைவர் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அமெரிக்காவிலிருந்து தந்தை பெரியாருக்கு இதை வலியுறுத்தியது மட்டுமல்ல; சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்தார்கள். பெரியாருக்கு துலாபாரத்தின் மூலம் கொடுக்காத பொருள்களே இல்லை என்று கொடுத்தார்கள்.

கடலூரிலே தந்தை பெரியார் மீது ஒரு காலத்தில் செருப்பு வீசினார்கள். பிறகு அதே ஊரிலே சிலை வைத்து நன்றி காட்டினார்கள் என்ற பெருமை உண்டு. யாருக்காவது எங்களால் இடையூறு உண்டா? நாங்கள் எங்களுடைய கொள்கையை எடுத்துச் சொல்லுகின்றோம். ஏன் இந்தக் கொள்கையை வலியுறுத்துகிறோம்? மக்கள் அறிவு பெற, மக்கள் முன்னேற வலியுறுத்துகின்றோம்.

ஜல் புயல் வந்த நேரத்தில்....

பாபர் மசூதி இடிப்பு சம்பந்தப்பட்ட வழக்கு சென்ற 30ஆம் தேதி தீர்ப்பு வரப்போகிறது என்று சொன்னவுடனே, நேற்று எப்படி ஜல் புயல் வந்தவுடனே இந்தக் கூட்டம் கூட நடக்குமா? என்று யோசித்தோம். வெளியூரில் இருந்த உங்களுக்குத் தெரியாது. சென்னைத் தலைநகரில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். நாங்கள் எல்லாம் கூட இங்கு வந்து சேரமுடியுமோ, மிகப் பெரிய அளவுக்குத் தொல்லையாக இருக்குமோ, ஒரு வேளை இந்த நிகழ்ச்சியை தள்ளி வைக்கலாமா? என்றெல்லாம் கூட நினைத்த நேரத்திலே எதைச் செய்தாலும், திருவரங்கத்தைப் பொறுத்தவரையிலே உறுதியாக நடத்தியே தீர வேண்டும் (கைதட்டல்). அது புயல் அடித்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி, அதிலே மாற்றம் கிடையாது என்ற உறுதியோடு நாங்கள் இங்கு வந்தோம்.

இயற்கையோடு போட்டி

இயற்கையோடு இந்தக் கொள்கை போட்டி போட்டால் கொள்கை வெற்றி அடையும்; இயற்கை தோற்கும் (கைதட்டல்). ஏனென்றால், இயற்கையை வெல்வதுதான் பகுத்தறிவு. இயற்கையைத் தாண்டி சாதனை செய்வதுதான் விஞ்ஞானம்-அறிவியல்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு

சென்ற முறை 30ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு வந்த பொழுது வெளியே எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டங்கள். ஏனென்றால், மதவெறி உச்சக் கட்டத்தில் ஆட்டம் போட்டது. 1992 இல் பாபர் மசூதியை இடித்த பொழுது ரத்த ஆறு ஓடுமோ என்று மத்திய அரசு கவலை எடுத்துக் கொண்டு ஆயத்தம் செய்தது. மாநில அரசுகள் கவலை எடுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக எச்சரிக்கையோடு இருந்தார்கள்.

ஆனால், நல்ல வாய்ப்பாக ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை. அங்கே மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் நடக்காது. ஏனென்றால், இது பெரியார் மண். இந்த மண்ணிலே மதவெறிக்கு இடமே கிடையாது. மனித நேயத்திற்குத்தான் இடமுண்டு என்று கருதக் கூடிய நிலை.

இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர்

இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் பீகாரைச் சார்ந்தவர். அண்மையிலே ஒரு கட்டுரையிலே எழுதியிருந்தார். நான் காஞ்சிபுரம் போனேன் சங்கராச்சாரியாரைப் பார்ப்பதற்காக. அங்கே காஞ்சி மடத்திற்கு எதிர்த்தால் போல் கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டு மிரண்டி என்ற வார்த்தைகள் ஆங்கிலத்திலே போடப்பட்டிருக்கின்றன.

இப்படி வாசகங்கள் கொண்ட பெரியார் சிலையும் அங்கு இருக்கிறது. பக்கத்திலே காஞ்சி மடமும் இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவுக்கே வழி காட்டுகிறது. என்பதற்கு அடையாளம்தான் என்று சொன்னார்கள். அதற்கு அடுத்து இந்த சீரங்கமும் அந்தப் பட்டியலிலே சேர்த்திருக்கிறார்.

எங்களுக்கென்ன கோபம்? நாங்கள் என்ன கோவிலுக்குள்ளே போய் எங்களுக்குப் பதவி வேண்டும் என்றோ, அல்லது மோட்சத்தில் முன்சீட்டு கிடைக்க வேண்டும் என்றோ கேட்பவர்களா? மோட்சம், நரகம் என்பதே முடிச்சுமாறிகளின் பேச்சு என்று கருதக் கூடியவர்கள் நாங்கள். மோட்சத்தைப் பற்றியோ, நரகத்தைப் பற்றியோ கவலைப்பட மாட்டோம். நரகம் என்று ஒன்று இருந்து மீரட்டினாலும் கூட, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சொன்னதைப் போல, நரகத்திற்குப் போவதற்கும் நாங்கள் தயார் என்று சொல்லுவோம்.

----------------(தொடரும்) “விடுதலை” 13-11-2010

0 comments: