Search This Blog

4.11.10

சமுதாய நோய்களில் ஒன்றுதான் தீபாவளி

தீபாவளி வணிகம்


(அறிவுக்கும், பொருளுக்கும் எப்படி எல்லாம் இழப்பு இந்தத் தீபாவளியால் ஏற்படுத்தினர் என்பதைப் பொருளாதாரப் பேராசிரியரான டாக்டர் மு. நாகநாதன் விளக்கியுள்ளார்.)

மக்களைப் போதையில் வீழ்த்துவதுதான் மதம் என்பதை காரல் மார்க்சு 1844ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டார். போதைப் பொருள் உண்பதால் நோய்கள்தான் உண்டாகும். மதம் என்னும் போதையால் நமது நாட்டில் உருவான நோய்கள் பல. அந்த நோய்களில் அதிகச் செலவினை மக்களுக்கு ஏற்படுத்தும் முதன்மையான நோய் தீபாவளியாகும். பாரப்பனரகள் புகுத்திய சமுதாய நோயான தீபாவளி என்ற சொல்லே சமஸ்கிருதச் சொல்லாகும். தீபாவளியின் அடிப்படை எங்கிருந்து புறப்பட்டது என்பதை ஆய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

சமண மதத்தில் இருந்து திருடப்பட்டு கருத்துத் திரிபு செய்த ஒரு புனைந்துரைதான் தீபாவளி. 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமண முனிவரான வர்த்தமானர் என்று அழைக்கப்படுகிற மகாவீரர் 72 ஆண்டுகள் வாழ்ந்தவர். ஒரு ஆசிரியர் நிலையில் தமது கொள்கைகளை மக்களிடம் 30 ஆண்டுகள் எடுத்துக் கூறினார். வர்த்தமானர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கும் போது விடியற்காலையில் சொற்பொழிவு மேடையிலேயே இறந்து விட்டார். இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஒளி விளக்குகளை வரிசையாக ஏற்றி சமணர்கள் விழா எடுக்கின்றனர்.

கடவுள் இல்லை என்று முதன்முதலில் உலகிற்குக் கூறிய சிறந்த பகுத்தறிவாளரான மகாவீரரின் நினைவு நாளைத் திசை திருப்பி பொய்யுரைகளை புனைந்து தீபாவளியை இந்து மதத்தோடு பார்ப்பனர்கள் இணைத்தார்கள். ஆனால், தீபாவளி என்ற சொல்லுக்கு சமஸ்கிருத மொழி அளிக்கும் விளக்கம் விளக்குகளின் வரிசை என்பதாகும். இந்தக் கூற்றினை இன்றளவும் அவர்களால் மறுக்க முடியவில்லை. சமஸ்கிருதச் சொல் அகராதி இந்த விளக்கத்தைச் சான்று பகர்கின்றது.

தீபாவளிக்கு இரண்டாவது விளக்கமும் ஒன்று உண்டு.

17ஆம் நூற்றாண்டில் மொகலாய மன்னர் ஜகாங்கீர் ஆட்சிக்காலத்தில் இந்தியக் குறுநில மன்னர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். பத்தாவது சீக்கீய மத குருவான குரு கோபிந்த சிங் இம்மன்னர்களை விடுதலை செய்து அமிர்தசரசு நகருக்குத் திரும்பிய நிகழ்வை நினைவு கொள்ளும் வகையில்,

சீக்கியர்களால் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சீக்கிய மக்கள் மெழுகுவத்தியையும் விளக்குகளையும் ஏற்றி விழாக் கொண்டாடுகிறார்கள்.

ஆரியர்கள் திராவிடர்களை வென்று உயர்ந்துவிட்டார்கள் என்று ஜாதி ஆணவத்தைக் காட்டுவதற்காகவும் திராவிடர்களை இழிவுப்படுத்துவதற்காகவும் புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் தீபாவளியும் ஒன்றாகும். இந்தக் கட்டுக்கதைகூட ஆரியர்களின் சொந்த மூளையிலிருந்து உதிக்கவில்லை. மேற்கூறிய சமண சீக்கியத்தின் நிகழ்வுகள் தீபாவளியின் உண்மையான தோற்றத்தைப் பறைசாற்றுகின்றன.

எனவேதான் தந்தை பெரியார் 1929ஆம் ஆண்டிலேயே ஈரோட்டில் உண்மை நாடுவோர் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவில் தீபாவளியின் திருட்டுத்தனத்தை ஆபாசத்தை எடுத்துக் கூறினார். விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன் வருண-னுடைய குடையைப் பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றானாம். இதைக் கொண்டாடுவதற்காக இத்தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இதில் ஏதாவது புத்தி உள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தீபாவளிப் பண்டிகையின் ஆபாசத்தைத் தோலுரித்துக் காட்டினார். காலந்தோறும் பொய்களை விற்றே வயிறு வளர்த்த பார்ப்பனியம் தீபாவளியில் இராமனையும் புகுத்த தவறவில்லை.

இலங்கையை ஆண்ட இராவணனைத் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பிய நிகழ்வைப் போற்றும் விழா தீபாவளி என்றும் ஒரு கதையைக் கட்டினார்கள். இவ்வாறாகத்தான் தீபாவளி நமது சமூக அமைப்பில் பொய்யாகப் புகுத்தப்பட்டது. ஒரு நிலையில் திராவிட ஆரியப் போராட்டத்தின் எதிரொலியாகவும் தீபாவளி அமைகிறது. திராவிடர்கள் இந்த மண்ணிற்கு உரிமையானவர்கள். தொன்மையான நாகரிகத்தை உலகில் உருவாக்கியவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர வாழக்கையை மேற்கொண்ட-வர்கள் என்பதற்கு ஆதித்தநல்லூர் அரிக்காமேடு, மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற அகழ்வாராய்ச்சிகள் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கின்றன. பன்னாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று இயல் அறிஞர்களும் தற்போது அறிவியல் தடயங்கள் வழியாக ஆய்ந்து. திராவிட எழுத்துகளின் வரி வடிவங்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலும் தொன்மையா-னது என்று ஆய்வுக்கருத்துகளைச் சுட்டுகின்றனர்.

உண்மை இவ்வாறிருக்க பொய் போற்றப்படுகிறது. எந்தக் கல்-வெட்டிலும் தீபாவளி என்ற சொல்லோ அல்லது விழாவோ இருந்ததாகச் சான்றுகள் ஏதுமில்லை. திராவிட நாகரிகத்திலிருந்து மொழி, கலை, பண்பாட்டுக் கூறுகளைத் திருடியும் திருத்தியும் சமஸ்கிருத மொழியில் ஆரியம் அடிக்கும் அளவிறந்த கொட்டங்கள் பலப்பல. இதில் ஒன்றுதான் தீபாவளி. இதைத் தமிழர்கள் உணரவில்லை. ஆரியப் பண்டிகைக்குத் தங்களுடைய செல்வத்தையும் சேமிப்பையும் செலவிட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பட்டுத் துணி, பட்டாசு என்று செலவிட்டு, அறிவு வளர்ச்சிக்குத் தேவையான நூல்கள், கணினிகள் தமிழர்கள் வாங்குவதில்லை.

காசைக் கரியாக்கி சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இந்தக் கொடுஞ் செயல் இன்றும் தொடர்கிறது. கல்வி வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், தகவல் தொழில்-நுட்பப்புரட்சியும் வளர்ந்து வரும் இக்காலத்திலும் மூடநம்பிக்கையையும் முட்டாள்தனத்தையும் தொலைக்காட்சி தொடங்கி ஏடுகள்வரை தீபாவளியின் புகழ் பாடுகின்றன. பொருளாதாரம் என்றால் என்ன என்பதை விளக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. பொருளாதாரம் என்பது குறைத்துச் செலவிடுவதுதல்ல; அறிவுடன் செலவை மேற்கொள்வதுதான் (Economy is not less spending but wise spendint) என்ற ஒரு விளக்கமும் உண்டு. இந்த விளக்கத்தை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் தீபாவளியைப் புறக்கணிப்பார்கள்.

பொருளாதாரக் காரணங்களை எடுத்துக்கூறி தந்தை பெரியார் 1931ஆம் ஆண்டில் தீபாவளியைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தந்தை பெரியார் துணி, பலகாரங்கள், பட்டாசு, மது வகைகள் ஆகியவற்றில் பணத்தை ஏழை மக்கள் செலவிடுகிறார்கள் என்று கவலையைத் தெரிவித்துக் கண்டனம் தெரிவித்தார். இந்து சமயம் நெறி சார்ந்ததல்ல. அது ஒரு வணிகம். அதுவும் பார்ப்பனர்கள் புகுத்திய தொழில் வணிகம் என்பதை பல ஆய்வாளர்கள் இன்று எடுத்துரைக்கின்றார்கள். இவ்வரிசையில் இந்து சமய சந்தையைப்பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை (Exploring the Market of Hindu Religion) இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றும் பொருளாதார ஆய்வாளர்களான இ`தா தத்தா ராய் துகின், கே.தாஸ் ஆகியோர் இணைந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார்கள். பெருகி வரும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களாலும் அங்கு சென்று வழிபடும் பக்தர்களாலும் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஆய்வு மேற்கொண்டு புள்ளி-விவரங்களைத் திரட்டி சில கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. காளி பூசைதான் இம்மாநிலத்தின் பெரும் விழாவாகக் கொண்டாடப்-படுகிறது என்றும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் கோயில்களுக்குள் ஒரு போட்டிச் சந்தை உருவாகி வருவதாக இவ்வாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அரசர்கள், பணக்-காரர்கள் கட்டிய கோயில்களுக்கும் அந்தந்த வட்டார எல்லைக்குள் உரு-வான கோயில்களுக்கும் நடைபாதையில் உருவான கோயில்களுக்கும் கடும் சந்தைப்போட்டி நடைபெறுகிறது என்று குறிப்பிடுகிறார்கள. இருப்பினும் மத விழாக்களால் கோயில்களால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. மதம் வணிகமாகிறது என்பதுதான் இக்கட்டுரையின் முடிவாகும். தீபாவளியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு வணிக மோசடி!

துணி, நகை, பட்டாசு, செருப்புக் கடைகளில் சிறப்புத் தள்ளுபடிகள் என்று தமிழ்நாட்டிலும் தீபாவளி ஒரு வணிக மோசடியாகவே மாறி வருகிறது. தீபாவளி மலர் வெளியிடும் பார்ப்பன ஏடுகளில் வணிகப் போட்டிக்காக கடவுள்களின் படங்களைவிட நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி தன் தடம் மாறி சாதாரண மக்களின் பணத்தைப் பறிக்கும் வணிகமாக மாறிவிட்டது. எனவேதான் அறிஞர் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தின் புதிர்கள் என்ற நூலில் இந்து மதத்தின் மோசடிகளை ஆணித்தரமாகச் சுட்டியுள்ளார்.

இந்த நூலுக்கு இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுப்புக் கூற முடியவில்லை. இந்நூலின் முன்னுரையில் பார்ப்பனர்களின் வணிகம்தான் இந்து மதம் எனறு அறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மேலும், மும்பைக்கு அருகே உள்ள கல்யாண் என்ற இடத்தில் மலையின் உச்சியில் புகழ் மிக்க இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலமான தர்கா அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த இடத்திற்கு இசுலாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். காணிக்-கைகளை செலுத்துவார்கள். இந்த தரகாவில் இசுலாமியர்களின் உடை-களை அணிந்துகொண்டு மதச் சடங்கு-களைச் செய்து பணத்தைப் பெறுபவர் ஒரு பாரப்பனர். பணத்திற்காகதான் இந்த பணியை மேற்கொள்கிறார்.

மதமோ மதம் அல்லாததோ,. பார்ப்பானுக்குத் தேவையானது தட்சணைதான். பார்ப்பனர்கள் மதத்தை ஒரு வணிகமாகவும் வர்த்தகமாகவும் மாற்றிவிட்டார்கள் (The person in Kalyan near Bombay there is a famous Darga of Pir called Bawa Malangsha on the top of a hill. It is a very famous Darga. Every year a Urs (pilgrimages) is held and offerings are made. The person who officiates at the Darga as a priest is a Brahmin, sitting neat it, wearing the clothes of muslims and receiving monies offered at the Darga. This he did for the sake of money. Religion or no religion what the Brahmin wants is Dakshina. Indeed the Brahmins have made religion a matter of trade and commerce.) என்று அறிஞர் அம்பேத்கர் உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

தீபாவளியும் இந்து மத வணிகம்தானே. மேலும், தமிழர்களை, திராவிடர்களை இழிவுபடுத்தும் ஆண்டுதோறும் நிகழும் ஒரு சடங்குதானே. பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீ விபத்துகள், மீண்டும் மீண்டும் உயிரிழப்புகள், தீபாவளிக்கு முன்பும் பின்பும் பல விபத்துகள் இந்தச் சடங்கையொட்டித் தொடர்கின்றன. தீபாவளி முடிந்தவுடன் பட்டாசு வெடிப்பால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

காவல் துறைக்குத் தலைவலி. அரசிற்கோ பொருளிழப்பு. காரணம், தீபாவளியை ஒட்டி நடக்கும் இந்த வணிகத்திற்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் காவல் துறை தேவைப்படுகிறது. கூட்ட நெரிசலில் களவும் பொருளிழப்பும் காவல் துறை இருந்தும் தடுக்க முடியவில்லை. பட்டாசுச் சத்தம் பிறந்த குழந்தைகள், முதியோர். நோயுற்றோரின் அமைதியைக் கெடுக்கின்றன. பட்டாசால் வெளியிடப்படுகிற புகை அமிலங்கள் ஏற்கெனவே உயர்ந்து வரும் காற்றின் மாசு அளவைப் பெருக்குகின்றன.

சமூகத்தின் அனைத்து மக்களின் நலன்-களையும் பொருளாதார இழப்புகளை-யும் ஏற்படுத்துகிற தீபாவளியால் யாருக்குப் பயன்? தீபாவளி, ஏழை நடுத்தரக் குடும்பங்களின் தேவையற்ற செலவினைப் பெருக்கி கடனாளியாக்-குகிறது. மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது. ஆரியத்தை உயர்த்துகிறது. திராவிடரை இழிவுபடுத்துகிறது. மக்களுக்கு பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி இடர்களை உருவாக்கி வருகின்ற ஒழிக்கப்படவேண்டிய சமுதாய நோய்களில் ஒன்றுதான் தீபாவளியாகும்.

--------------- பேராசிரியர் மு. நாகநாதன் எம்.ஏ.எம்.எல்.பிஎச்.டி.டி.லிட்.
துணைத் தலைவர் மாநிலத் திட்டக்குழு --- “விடுதலை” அசுரன் மலர் 3-11-10

0 comments: