Search This Blog

15.11.10

பார்ப்பனப் பெண்கள் மிளகாய்ப் பொடி தூவி அட்டூழியம்


பார்ப்பனர்களை அமர வைத்து பல்லக்கில் தூக்கி வந்தால் மறியல் செய்வோம்!

திருவரங்கம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

பார்ப்பனர்களை அமர வைத்து பல்லக்கைத் தூக்கி வந்தால் அதை எதிர்த்து மறியல் செய்வோம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

திருவரங்கத்தில் 8.11.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொன்னார்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சொல்லுவார்கள் பச்சை அட்டை குடிஅரசை இங்கு வெளியிட்டார்களே, இந்த குடிஅரசை அவர்கள் படித்த காரணத்தினாலே அவர் சொல்லுவார். நான் நரகத்திற்கே போகிறேன். அங்கு தான் நிறைய பேர் இருப்பார்கள். பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று ஒரு நாடகத்திலே சொல்லுவார்.

இங்கே சுட்டிக்காட்டினார்களே! உலகத்தில் எங்காவது பிறக்கும்பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தொடக்கூடாதவன் என்ற பிறவி பேதம் உலகத்தில் எந்தப் பூபாகத்தில் எந்தப் பகுதியிலாவது இருக்கிறதா? அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

சிலர் நினைக்கலாம் என்னய்யா இது? எங்களைத் தாக்குவதற்கா இந்தக் கூட்டம்? எங்களை எல்லாம் எதிர்த்துப்பேசுவதற்கா இந்தக் கூட்டம் என்று பார்ப்பன நண்பர்கள் நினைக்கலாம். அந்த பார்ப்பன நண்பர்களுக்கு நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்த மேடையில் நிற்கக் காரணம்

இன்றைக்கு இந்த மேடையில் நாங்கள் நிற்கிறோம் என்றால், இந்த மேடையைக் கட்டிய பல பேரை நினைத்துக் கொண்டுதான் நான் இங்கு அமர்ந்திருந்தேன். அவர்கள் மத்தியிலே நான் பழகியவனாக இருந்தால்கூட, அவர்கள் எல்லாம் மறைகிற வரையிலே உறுதியாக இருந்தார்கள். பெரியார் பெருந்தொண்டர் கருப்பண்ணன், திருவரங்கம் பாலு ஆகியோரைப் பற்றிச் சொன்னார்கள். கடைசிவரையிலே கொள்கை உறுதியோடு இருந்து மறைந்தவர்கள். அதே போல மணி அவர்கள், அது போலவே நண்பர் ராஜரத்தினம் அவர்கள், அதுபோலவே சுந்தரமூர்த்தி அவர்கள், அது போலவே சீனிவாசன் இப்படி எத்தனையோ பேரை ஒரு பெரிய பட்டியல் போட்டு மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டிருந்தேன்.

சுமமரியாதைச் சுடரொளிகளின் உழைப்பு

ஏனென்றால், எங்களுடைய சுயமரியாதைச் சுடரொளிகளை நாங்கள் ஒரு போதும் மறந்தவர்கள் அல்ல. அவர்களுடைய உழைப்புதான் இந்த மேடையைக் கட்டியிருக்கிறது. அவர்களுடைய உழைப்பால்தான் இந்தத் தராசில் நான் அமர்ந்து கொண்டிருக்கின்றேன். அப்படி எல்லாம் அவர்கள் பாடுபட்டிருக்கின்றார்களே-உங்களோடு அவர்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அவர்களை நீங்கள் எவ்வளவு வேகமாகத் தாக்கினாலும் கூட, அவர்கள் இந்த ஊரிலே ஏதாவது ஜாதிக்கலவரத்தை உருவாக்கியிருப்பார்களா? எங்களால் ஒரு சிறு அசம்பாவிதம் உண்டா? இங்கே சொன்னார்களே! திராவிடர் கழகத்தைப் போல ஒரு கட்டுப்பாடான இயக்கம் கிடையாது. எங்களுடைய பேரணி ஊர்வலம், பொதுக்கூட்டம் என்றால் அங்கே காவல்துறைக்கே வேலை இருக்காது. ஏனென்றால், ஒவ்வொரு கருப்புச் சட்டைக்காரனும் இராணுவத்தை விட தீவிரமான கட்டுப்பாட்டிற்கு, ஒழுக்கத்திற்குப் பெயர் போனவர்கள். (கைதட்டல்). அது மட்டுமல்ல, தந்தைபெரியாரின் கொள்கை ஆழமான கொள்கை. நெருப்பிலே புடம் போட்டு எடுத்த தங்கப் பொன் போன்றவர்கள்.

ஜாதியைக் காப்பதுதானே உங்கள் வேலை

ஆகவே, உங்களோடு எங்களுக்கு என்ன வம்பு? அதே நேரத்தில் ஜாதியைக் காப்பாற்றுவதற்காகத் தானே நீங்கள் கடவுளை பயன்படுத்துகின்றீர்கள்? கடவுள் எல்லோரையும் உற்பத்தி செய்தார். அவர்தான் நம்முடைய தந்தை என்பது உங்களுடைய வியாக்கியானம். அது வடகலையா.? தென் கலையா? இருக்கட்டும்.

நீங்கள் சொல்லுகின்ற கடவுள் இருக்குமேயானால், அந்தக் கடவுள் எல்லோரையும் உற்பத்தி செய்தவராக இருந்தால், எல்லோரும் அவருடைய பிள்ளைகள்தானே!

உன் முதுகில் மட்டும் பூநூல்

அப்படியிருக்க உன்னுடைய முதுகிலே மட்டும் ஏன் பூணூல் தொங்க வேண்டும்? எங்களுடைய முதுகு மட்டும் ஏன் காலியாக இருக்க வேண்டும்? எங்களுடைய முதுகில் ஏறி நீங்கள் சவாரி செய்வதற்காகவா? இங்கே மாவட்ட தலைவர் சேகர் மிகத் தெளிவாகச் சொன்னார். இன்னமும் பார்ப்பனரை பல்லக்கிலே வைத்து தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டார். நிச்சயமாக இதற்கு ஒரு முடிவு கட்டுவோம். (கைதட்டல்). அடுத்த ஆண்டு இப்படி பல்லக்குத் தூக்கி வருவதற்கு முன்னாலே திராவிடர் கழகத் தோழர்கள் இன உணர்வுள்ள பக்தர்களை கட்சி வேறுபாடு இல்லாமல் திரட்டி மறியல் செய்வோம். (பலத்த கைதட்டல்).

மனிதனை அமர வைத்து மனிதன் இழுக்கலாமா?

மனிதனை உட்கார வைத்து மனிதன் கை ரிக்ஷா இழுத்தபொழுது அதை ஒழித்தவர் முதலமைச்சர் கலைஞர். அப்படியிருக்கும் பொழுது மனிதனை மனிதன் சுமப்பது எந்தவிதத்தில் நியாயம்? இது இனவெறி அல்ல. இது மனிதஉரிமையப் பொறுத்தது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மிருகத்தைப் போல நடத்தக்கூடாது என்று நாங்கள் நினைக்கக்கூடியவர்கள்.

உச்சநீதிமன்றத்தில் குறுக்கே போய் நின்று....

ஜாதியைக் காப்பாற்றுவதற்குத்தானே உங்களுக்கு கடவுள் இருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று மனித குலத்திலே சமத்துவத்தை உண்டாக்குவதற்காக இங்கே கூட பயிற்சிப் பள்ளி நடந்ததே. என்ன அதனாலே கெட்டுப்போய் விட்டது?

ஆனால், இன்னமும் உச்சநீதிமன்றம் என்ற கடைசி படிக்கட்டைப் பிடித்துக்கொண்டு-அது சேது சமுத்திர கால்வாய்த் திட்டமாக இருந்தாலும் சரி, அல்லது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்று சொன்னாலும் சரி, அங்கே குறுக்கே போய் நின்றுகொண்டு எவ்வளவு காலம் நிறுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

வரலாற்றில் தோற்றுப் போவீர்கள்

வரலாற்றில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். கடைசியாக வெற்றி பெறுவது பெரியாருடைய கொள்கையாகத்தான் இருக்கும். (கைதட்டல்). நாங்களாகத்தான் இருப்போம். காரணம் நியாயங்கள் எங்கள் பக்கம்.

நீதி, நேர்மை, மனிதத்தன்மை எங்களிடம் இருக்கின்றது. இல்லையானால் பிறக்கும்பொழுதே அடையாளம் உண்டு என்று சொல்வீர்களா? நீங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று எங்களை நடத்துகின்றீர்களே!

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் பிறந்தது எதற்காக? யாரால் பிறந்தது? உங்களால் பிறந்தது. நீங்கள் உருவாக்கிய பேதத்தின் விளைவுதான் இப்படி ஓர் இயக்கமே பிறந்தது.

ஸ்பர்ட்டாங் ரோடு என்று சென்னை எழும்பூர் பக்கத்திலே இருக்கிறது. அங்கு 1916லே பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சியைத் தொடங்கிய டாக்டர் டி.எம்.நாயர் பேசினார்.

டி.எம்.நாயர் நிரம்ப நகைச்சுவை மலிந்தவர். இங்கிலாந்து நாட்டிலே படித்து திரும்பியவர். பிரபலமான டாக்டர். மலையாளம் தனியே பிரியவில்லை. அப்பொழுது ஆந்திரா பிரியவில்லை. கருநாடகத்தின் பெரும்பகுதி கொள்ளேகால் போன்ற பகுதிகள் இருந்தன.

சென்னை ராஜதானியாக இருந்த காலத்தில்

மதராஸ் பிரசிடென்சி-சென்னை ராஜதானி என்று நமது மாநிலத்திற்குப் பெயர் இருந்த காலகட்டம். எனவே, அந்த நிலையிலே எந்தவிதமான பேதம் இல்லாத காலகட்டத்தில் தான் திராவிடர் என்ற அமைப்பே இனரீதியாக பண்பாட்டு அடிப்படையிலே-மொழி அடிப் படையிலே தெளிவாக உருவான ஒன்று.

ஸ்பர்ட்டாங்ரோடு கூட்டத்தில் டி.எம்.நாயர் பார்ப்பனர்களுடைய கொடுமைகளை எடுத்துச் சொல்லுகின்றார். திராவிடர் இயக்கம் எப்படிப் பிறந்தது?

இந்த இயக்கம் ஏன் பிறந்தது?

திராவிடர் இயக்கம் எப்படிப் பிறந்தது? இதை எண்ணிப் பார்த்தால்தான் இன்றைய தலைமுறையினருக்குப் புரியும்.

தேவை இல்லாமல் மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்காக, வசை பாடுவதற்காக கூட்டம் போட்டு பேச நாங்கள் வரவில்லை. மாறாக எங்களுக்கு சமத்துவம் வேண்டும். மனிதர்களுக் குள்ளே பேதம் இருக்கக்கூடாது என்று சொல்லு வதற்காக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அப்பொழுது அவர் சொன்னார். இந்த நாட்டிலே எவ்வளவு பெரிய கொடுமை நடந்தது என்பதற்கு உதாரணமாகச் சொன்னார்.

டி.எம்.நாயருக்கு அருகில் அப்பொழுது சர்.பிட்டி.தியாகராயர் அமர்ந்திருக்கின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கம்-நீதிக்கட்சியை உருவாக்கிய தியாகராயர். சர்.பிட்டி தியாகராயரும், டி.எம்.நாயரும் சண்டை போட்டுக்கொண்டு விரோதிகளாக இருந்தவர்கள். இவர் ஆத்திகர். அவர் நாத்திகர். பேசுவது கூட கிடையாது.

இரண்டு பேரும் காங்கிரஸ்காரர்கள்தான்

தேர்தலில் இரண்டு பேருமே காங்கிரஸ் வேட்பாளர்களாக நின்று பார்ப்பனர்களாலே தோற்கடிக்கப்பட்டவர்கள். சர்.பிட்டி. தியாகராயர் மிகப்பெரிய வியாபாரி. ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு பண வசதி படைத்தவர். அப்பேர்பட்ட சர்.பிட்டி.தியாகராயர் அவர்களும் அந்த நிகழ்ச்சியிலே அமர்ந்திருக்கின்றார்.

கும்பாபிஷேகத்திற்கு தியாகராயர் ரூ.10 ஆயிரம்

சர்.பிட்டி. தியாகராயர் மயிலாப்பூர் கபாலீசுவரர்- கற்பகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அந்தக் காலத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தார். 1916இல் பத்தாயிரம் என்றால் இப்பொழுது பத்து கோடிக்கு சமம்.

கும்பாபிஷேகம் நடந்த அன்றைக்கு இவரிடத்திலே வேலை பார்த்த உரு சாதாரண பார்ப்பானை கும்பாபிஷேகத்திற்கு மேலே வரச்சொல்லி முன்னுரிமை கொடுத்து உட்கார வைக்கப்பட்டார். ஆனால் சர்.பிட்டி.தியாகராயரோ கீழே நிற்கிறார். இவரை சீண்டுவாரில்லை. இவர் உள்ளே போன பொழுது நீங்கள் வெளியே போங்கள், உங்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லி தியாகராயரை அனுப்பினார்கள்.

பணம்திரட்டுவதற்கு மட்டும் சூத்திரன்!

இதைச் சொல்லும்பொழுது இந்தக் கோபுரம் உங்களுக்கு ஞாபகம் வரும். இந்தக் கோபுரம் ஞாபகத்திற்கு வரும்பொழுது இளையராஜாக்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். (கைதட்டல்).

இளையராஜாக்களை இந்த ஊர் முதிய ராஜாக்கள் எங்கே அனுப்பினார்கள்? பாவம், பணம் திரட்டு வதற்கு சூத்திரன் தேவை-பஞ்சமன் தேவை. ஆனால், பல்லக்கிலே பவனி வருவதற்கு கோபுரத்தின் மேலே ஏறிக்கொண்டு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு பார்ப்பனர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்த இயக்கம் ஏன்? எப்படிப் பிறந்தது? சர்.பிட்டி. தியாகராயர் இந்தக் கொடுமையைப் பார்த்தார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அப்பொழுதுதான் பெரியாருடைய சிந்தனை மாதிரி அவருக்குத் தென்பட்டது.

பார்ப்பனர்களுடைய கொடுமையால்

பெரியாருடைய சுயமரியாதை இயக்கமே பார்ப்பனரின் கொடுமையினாலேதான் தொடங்குகிறார். ஆகவே, பார்ப்பனருடைய கொடுமையை உணர்ந்தவுடனே காரில் ஏறினார். நேராக டாக்டர் டி.எம்.நாயர் வீட்டிற்கு காரை விடும்படி கூறினார்.

அவருடைய டிரைவருக்கே புரியவில்லை. அவருடைய டிரைவர் காரை நேராக டி.எம்.நாயர் வீட்டிற்கு விட்டார். தியாகராயர் டி.எம்.நாயரைப் பார்த்தவுடனே கட்டிப்பிடித்துக் கொண்டார். இப்பொழுதுதான் பார்ப்பனர்களுடைய கொடு மையை நாம் உணருகின்றோம். நாம் இரண்டு பேருமே சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால்தான் அவன் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றான்.

இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்தார்கள்

இரண்டு பேருமே ஒன்றாக இருந்து பார்ப் பனரல்லாதார் இயக்கத்தைக் கட்டி, நீதிக்கட்சியை உருவாக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். இந்தப் பேதத்தினால் ஏற்பட்ட கோபம், மானம், ரோஷம் இந்த உணர்வினாலே பிறந்ததுதான் இந்த இயக்கம். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் பார்ப் பனர்கள்தானே! -

-----------------------------(தொடரும்) "விடுதலை”14-11-2010

**************************************************************************


தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மீது பார்ப்பனப் பெண்கள் மிளகாய்ப் பொடி தூவி அட்டூழியம்

திருவரங்கத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவி பார்ப்பனப் பெண்கள் கலாட்டா செய்தனர் என்ற பழைய முக்கிய செய்தியை எடுத்து விளக்கினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

திருவரங்கத்தில் 8.11.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும்!

அந்தக் காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு நம்மாள்களுக்குத் தகுதியே இல்லை என்று சொன்னார்கள். தகுதியைவிட வாய்ப்புக் கிடையாது; கதவு திறக்காது; எல்லாம் பார்ப்பனர்களாகத்தான் இருப்பார்கள். உயர்நீதிமன்றத்தில் முத்துசாமி அய்யரிலிருந்து எல்லோருமே அவர்களாகத்தான் இருப்பார்கள். அவாள்தான் இருப்பார்கள்.

சர்.பி.சங்கரன் நாயர், அவர் சர் பட்டம் பெற்றவர். இலண்டனிலே படித்தவர். மிகப்பெரிய அறிவாளி. இந்த இயக்கம் கேட்டதனாலே பார்ப்பனரல்லாதார் இயக்கம் கேட்டதனாலே பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை இல்லையா என்று கேட்டதனாலே வெள்ளைக்காரர்களால் நீதிபதி யாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

சங்கரன் நாயர் கேரளாவுக்குப் பக்கத்திலே, மலபாருக்குப் பக்கத்திலே உள்ள ஊருக்குப் போனார். டி.எம்.நாயர் இதைச் சொல்லுகிறார். அங்கேயிருக்கிற நம்பூதிரி பார்ப்பனர் கேட்டாராம், ஏண்டா சங்கரா, நீ என்ன அய்க் கோர்ட் ஜட்ஜ் ஆகிவிட்டியாமே, உண்மையா? என்று கேட்கின்றார். அய்க்கோர்ட் ஜட்ஜைப் பார்த்து கேட்கிறார்- ஏண்டா சங்கரா? இவர் சாதாரணமாக நீதிமன்றத்திற்கு உள்ளே போனால் ஓ மை லார்டு! என்று சொல்லுவார்-என் கடவுளே என்று சொல்லுவார்.

ஏண்டா சங்கரா......!

கடவுளுக்குப் பக்கத்தில் தான் நீதிஅரசரை வைப்பார்கள். அப்பேர்ப்பட்ட இடத்தில் உள்ளவரை ஏண்டா சங்கரா என்று மலையாள மொழியிலேயே அழைத்து அந்த நம்பூதிரி பார்ப்பனர் கேட்டார்.

பார்ப்பனர்கள், பிரம்மாவின் முகத்தில் பிறந்தான். தோளில் பிறந்தான், தொடையில் பிறந்தான், காலில் பிறந்தான், அதற்கும் கீழே பிறந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றானே. நானும்தான் இலண்டன் மெடிக்கல் காலேஜில் படித்தேன். ஆனால், எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த மெடிக்கல் புத்தகத்தில் நாங்கள் இதுவரையில் எத்தனையோ உடலை அறுத்திருக்கிறோம். அடக்கம் பண்ணியிருக்கின்றோம். ஆனால், எந்த இடத்திலும் இப்படி பிரசவம் ஆனதே கிடையாது.

இந்த ஒரு நாட்டில்தான் இப்படி பிரசவம் ஆன கடவுள்களைப் பற்றி நாங்கள் கேள்விப் படுகின்றோம் என்று இப்படி கிண்டலாக டி.எம்.நாயர் சொன்னார்.

சிறீரங்கத்தில் நடந்த ஒரு சம்பவம்!

நீங்கள் இப்படி நடந்து கொண்டதனாலேதான் நாங்கள் இவ்வளவு கொடுமைகளை அனு பவித்தோம். அன்றைக்கு அப்படி இருந்தது. இன்றைக்கு இந்த நிலைமை மாறிப்போய்விட்டது என்று நினைக்காதீர்கள்.

திருவரங்கத்திலே பெரியார் சிலை வைத்ததனாலே நாங்களா பிரச்சினை கிளப்புகிறோம்? இதோ என் கையில் இருக்கின்ற புத்தகம். நக்கீரன் இதழிலே வெளிவந்த செய்திகள். அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பு. அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் 100 வயதை தாண்டி இருந்தவர். அண்மைக் காலத்தில்தான் அவர் மறைந்தார். கடைசிவரையில் ரொம்பத் தெளிவாக எழுதிக்கொண்டிருந்தார் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஆச்சாரம், அனுஷ்டானம் கொண்டவர். நாமம் தீட்டியிருந்தவர். அவர் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர். அவர் இந்த சிறீரங்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி இங்கே சொல்லுகிறார்.

கோயிலுக்குப் போய் என்ன சாதித்தீர்கள்?

பக்தி என்பதை வைத்து அல்ல. சிறிய குழந்தை யாழினி இங்கே பேசும் பொழுது ரொம்பத் தெளிவாகப் பேசினார். நீங்கள் எல்லாம் கோவிலுக்குப் போய் என்ன சாதிக்கிறீர்கள்? என்று தெளிவாகக் கேட்டது. குழந்தைகள் எப்பொழுதும் உண்மையைப் பேசுவார்கள். ஏனென்றால், குழந்தைகளின் சாட்சியத்தை சட்டத்தில்கூட மறுக்கமாட்டார்கள். ஏனென்றால், குழந்தைகளுக்குப் பொய் சொல்லத் தெரியாது. நாம் பெரியவர்கள் ஆன பிற்பாடுதான் பொய்யை அழகாகச் சொல்லுகிறோம். பக்குவமாக்குகிறோம்.

இந்து மதம் எங்கே போகிறது? என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்ற செய்தி. இங்கே எவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கின்றது? அதுவும் ஜாதி அடிப்படையில் இங்கே தீண்டா மையைப் பற்றிச் சொன்னார். இந்த இயக்கம் பிறந்ததே பிறவி பேதம் இருக்கக் கூடாது என்பதற்குத்தான்.

இங்கு நடந்த ஒரு சம்பவத்தை தெளிவாகச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். சிறீரங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

சிறீரங்கத்து சம்பவம்

சிறீரங்கத்து சம்பவம் இதுதான் தலைப்பு 101ஆம் பக்கத்திலே இருக்கிறது. அதைப் படிக்கின்றேன். சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் முன் ஆலய நுழைவுப் போராட்டத்தை தாழ்த்தப் பட்ட தோழர்கள் நடத்த முன் வந்தனர். இது குறித்து முடிவு எடுக்கவும், தடுத்து நிறுத்தவும் அக்கிரகாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வித்தியாசமான முடிவு எடுக்கப்பட்டது. ஆம்பளைங்க போய் தடுக்க வேண்டாம். நம்ப ஆத்துப் பொம்பளைங்கள அனுப்புவோம். அர்ச்சனைத் தட்டு எடுத்துச் செல்லும் போக்கில் மிளகாய்த் தூளை எடுத்துச் சென்று, போராட்டம் நடத்துவோரின் கண்களில் தூவி வைப்போம் என்று அக்கிரகாரத்து ஆண்கள் முடிவு செய்தனர்.

அவ்வாறே அக்கிரகாரத்துப் பெண்களும் செய்தனர். போராட்டம் நடத்த வந்த தாழ்த்தப்பட்ட தோழர்களும் கண் எரிச்சலால் அலறி அடித்து ஓடினார்கள்.

காவல்துறையினர் அடிதடி காவல் துறையினர் தடியடி நடத்தினர். அக்கிரகாரத்துப் பெண்களின் மீதும் அடி விழுந்தது. இந்தத் தகவலை கும்பகோணத்தில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியிடம் அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார் சொன்னபோது, அக்கிரகாரப் பொம்பளைங்களை அடிச்சுட்டாளா? என்று கூறி அழுதாராம். சங்கராச்சாரி அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன் என்று இந்த நூலிலே தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்டவர்கள் மீது மிளகாய்த் தூள் தூவியது பற்றி சங்கராச்சாரிகள் கவலைப்படவில்லை.

பார்ப்பனப் பெண்கள் தூவிய மிளகாய்ப் பொடி

அக்கிரகாரப் பெண்கள் மீது அடி விழுந்தது குறித்துதான் அழுது இருக்கிறார். இதுதான் பார்ப்பனர்களின் மனிதாபிமானம். இதை வெளியிட்டது விடுதலை அல்ல. முரசொலி அல்ல. அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார் எழுதியது.

ஹரிஜனங்கள் என்று காந்தியாரே உங்களுக்கு அந்த பெயரை வைத்து அழைத்திருக்கிறார். நீங்களெல்லாம் மகாவிஷ்ணுவுக்கு வேண்டியவர்கள். ஆலயத்திற்குள் வாருங்கள் என்று எந்த தாழ்த்தப் பட்டவரையும் பார்ப்பனர்கள் அழைத்ததில்லை.

பெண்கள் உள்பட மிளகாய்ப் பொடியைத் தூவி கூட்டத்தைக் கலைத்திடப் பார்த்தார்கள். இதுவரை இவர்கள் வீரத்தால் வென்றதில்லை. சூழ்ச்சியாலேயே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நீண்டகால வரலாறு.

ஹரிஜன் என்றால்.......!

தாழ்த்தப்பட்ட சகோதரன் கடவுளைத் தரிசிக்க உரிமை கேட்டான். எங்களைப் போல் கடவுள் இல்லை என்று சொல்லி வெளியே நிற்கவில்லை. கடவுளைத் தரிசிக்க ரங்கா, ரங்கா என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். அந்த ரங்கன் எப்படி இருப்பான்? கறுப்பா? சிவப்பா எங்களுக்குத் தெரியாதே! ஆக அவனையும் பார்க்கலாம் என்பதற்காக தாழ்த்தப் பட்ட சகோதரர்கள் உள்ளே நுழைய முற்பட்ட காலகட்டத்திலே பார்ப்பனப் பெண்கள், மிளகாய்ப் பொடி தூவினார்கள். அன்றைக்குத் தூவிய மிளகாய்ப் பொடியை இன்றைக்கும் தூவுகிறார்கள்.

----------------------------(தொடரும்)"விடுதலை” 15-11-2010

0 comments: