Search This Blog

6.11.10

சூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன?தீபாவளிக் கதை நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணன் அவன் மனைவியரை ஏவி தந்திரத்தால் கொன்று குவித்த கதைபற்றி விடுதலை வாசகர்கள் அறிவார்கள்.

உடனே, அது முடிந்தவுடன், சூரசம்ஹாரம் என்ற கந்தர் சஷ்டி விழாதிருச்செந்தூர் முதல் பல ஊர்களில் நடைபெறும்.

நாளேடுகள், தொலைக்காட்சிகள், வானொலி முதலிய நவீன அறிவியல் சாதனங்களில் இதுபற்றிய விளக்கங்கள்!

சங்கராச்சாரிகளும், மத வியாபாரிகளும், பக்தி வியாபாரம் செய்து பாமரத்தனமான பக்தர்கள் (இதில் படித்தவர்கள், பதவியாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அடக்கம்தான்!) சுரண்ட, செய்யவேண்டிய வேலையை மேலே காட்டிய விஞ்ஞான சாதனங்களுமா செய்வது?

வெட்கம்! மகாவெட்கம்!!

காற்றில், நீரில் தொற்று நோய்க் கிருமிகள் பரவுவதுபோல, இந்த மூட-நம்பிக்கை நோய்களும் பரவுகின்றன - இந்த ஒலி, ஒளி, அச்சு அலைகள் மூலமாக!

சூரபத்மன் வீழ்ந்த கதை!

ஒரு பார்ப்பன தமிழ் நாளேடு ஒன்றில் (தமிழர்களின் நாளேடுகளும் இந்த மூடத்தன வியாபாரத்தில் சளைத்தவை அல்ல) இன்று சூரபத்மன் வீழ்ந்த கதை என்ற தலைப்பில் அக்டோபர் 30, 2003இல் சூரசம்ஹாரம் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

அக்கட்டுரையைக் கீழே தந்துள்ளோம்.

பக்தியில் சிறந்தவன் தட்சன் என்ற மன்னன்; மிகப்பெரிய தபஸ்வி. அம்பிகையைத் தன் நெஞ்சில் வைத்துப் பூஜித்தன். அவளைத் தன் குழந்தையாகவே பாவித்தான்.

அம்மா! பராசக்தி, உன்னை என் குழந்தை போலவே கருதிவிட்டேன். உன்னைப் பிரிந்திருக்கும் சக்தி எனக்கில்லை. நீ என் மகளாகப் பிறக்க வேண்-டும். உன்னை நான் வளர்த்து, சீராட்டி, பாராட்டி வளர்க்கவேண்டும். உன் மணாளனான சிவபெருமானை நீ பூமியில் மீண்டும் ஒருமுறை மணம் செய்து, உலக மக்களை உய்யச் செய்ய வேண்டும் என வேண்டினான். அவன் கேட்ட வரத்தை அன்னை பராசக்தி அப்படியே கொடுத்தாள். பூவுலகில் தட்சனின் மகளாகப் பிறந்தாள். தட்சனின் மகள் என்பதால், தாட்சாயிணி என பெயர் சூட்டப்பட்டது. குழந்தை இல்லாத தட்சனுக்குப் பிறந்த இந்த மகள் பாலில் குளிப்பாட்டி வளர்க்கப்பட்டாள். இதனால்தான் அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்யும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

தாட்சாயிணி வளர்ந்து பெரியவள் ஆனாள். சிவபெருமான் மீது உளப்பூர்வமான அன்பு கொண்டிருந்தாள். அவரையே நினைத்து தவமிருந்தாள். தன் தவ வலிமையால், சிவலோகம் சென்று மாப்பிள்ளையை தங்கள் இல்லத்திற்கு எழுந்தருளி, தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டினான் தட்சன்.

சிவபெருமானும் தன் தேவியை அடையும் காலம் நெருங்கிவிட்டதால், தட்சனின் அரண்மனைக்கு வருவதாக வக்களித்தார். அவர் அய்ந்து முகம் கொண்டவர் என்றும், மூன்று கண்கள் உடையவர் என்றும், புலித்தோல் உடுத்தி, யானைத் தோலை மார்பிலே அணிந்-தவர் என்றும், புராணங்கள் சொல்கிறதே... அதே நிலையில் தட்சனின் அரண்மனை நோக்கி வந்தார்.

இந்தக் கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளையை யாராவது விரும்புவாரா? தன் வருங்கால மருமகனைப் பார்த்த தட்சனின் மனைவி அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள்.

கொடிய வடிவமுடைய இவனுக்கு என் மகளை கட்டிக் கொடுக்க சம்மதிக்கவே மாட்டேன் என அழுது புரண்டாள். அவள் முன் பிரசன்னமானார் சிவபெருமான்.

தாயே! அழகு நிரந்தரமானதல்ல. நான் பல வடிவங்கள் எடுக்கக் கூடியவன். என் உண்மை வடிவத்தைப் பார்க்கிறாயா? எனக் கூறி, தன் சுயரூபத்தைக் காட்டினார். கோடி சூரியர்களும், கோடி சந்திரர்களும் ஒன்று சேர்ந்தது போன்ற அதிபிரகாசத் தோற்றத்தில் அமைந்திருந்தது அவரது உருவம்.

மலைத்துப் போனாள் மகாராணி. திருமணம் இனிதே முடிந்தது. பார்வதி என அழைக்கப்பட்டாள் தாட்சாயிணி. இந்நேரத்தில் யாகம் ஒன்றை நடத்த விரும்பினான் தட்சன். கடவுளே தனக்கு மருமகன் என்ற மமதை அவன் உள்ளத்தில் எழுந்தது. இதன் விளைவாக யாரையும் மதிக்காமல் திரிந்தான்.

மாமனாரை அவமதித்த மருமகன்!

யாகத்திற்கு மருமகனை அழைக்க வந்தான். அவர் கடவுள் அல்லவா? மாமனாரை எழுந்து வரவேற்கவில்லை. இது தட்சன் மனதை நெருடியது. மாமனாருக்கு மரியாதை கொடுக்காத இவனை ஏன் யாகத்திற்கு அழைக்க வேண்டும் எனக் கருதி, மகளைப் பார்க்க வந்ததாகப் பொய் கூறி, மகளையும் யாகத்திற்கு அழைக்காமல் சென்று விட்டான். ஆனால், மற்ற லோகங்களுக்குச் சென்று பிரம்மா, திருமால், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை யாகத்திற்கு வர அழைப்பு விடுத்தான்.

ஈசன் வீட்டு மாமனார் இல்ல விழா அல்லவா? ஒருவர் விடாமல் அங்கு சென்றுவிட்டனர். சென்ற பின்தான் அங்கு ஈசனும், ஈஸ்வரியும் அழைக்கப்-படவில்லை என்பது தெரிந்து பயந்து போயினர். இந்த விஷயம் பார்வதியின் கவனத்திற்கு வந்தது. தந்தைக்குப் புத்தி புகட்டுவதற்காகப் பூலோகம் செல்ல கணவனிடம் அனுமதி கேட்டாள். மறுத்தார் ஈசன். அவரது சொல்லையும் மீறி, பூலோகம் சென்று தந்தையிடம் நியாயம் கேட்டாள்.

அவனோ மகளை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். அவள் ருத்ர காளியாக மாறினாள். சிவனோ வீரபத்திரராக உருவெடுத்தார். இருவரும் யாக சாலையை அழித்தனர். தன் மாமனாருக்கு சாபம் ஒன்றைக் கொடுத்தார் சிவன்.

என் பக்தனாயினும், நீ ஆணவத்தால் என்னை அவமதித்தாய். எனவே, நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக. மறு ஜென்மத்தில் உனக்கு அசுர குணங்களே தலைதூக்கும். உன்னை அடக்க என்னில் பிறக்கும் ஒரு சக்தி உன்னிடம் வரும். சுப்பிரமணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய்.

நீ சூரபத்மன் என்றும், பத்மாசுரன் என்றும் பெயர் பெறுவாய். நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் உனக்கு கட்டுப்பட்டிருக்கும். உன் இறுதிக் காலத்தில், சுப்பிரமணியன் உன்னை வதம் செய்வான் என்றார்.

இதன்படி மறுஜென்மத்தில் சூரபத்மனாகப் பிறந்தான் தட்சன். அழகுக் கோலத்தில் இருந்த பெண்மணி மீது ஒருசமயம் ஆசை கொண்டார் காசியப முனிவர். அதன் விளைவாக, அவர் பத்மாசுரன், சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் பெற்றார். அதன்பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார். இந்தப் பத்மாசுரனே உலகை அடக்கி ஆண்டான். அவனை திருச்செந்தூர் கடற்கரையில், முருகன் வதம் செய்தார்.

தான் இறக்கும் நிலையில், சூரபத்ம-னுக்குத் தன் முன்ஜென்ம நினைவு வந்தது. எதிரே நிற்பது தன் பேரன் என்பதைப் புரிந்துகொண்டான். மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

முருகா! என் முற்பிறவிப்படி நீ என் பேரனாகிறாய். உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படுகிறேன். நான் உன் மடியில் எந்நாளும் இருந்தால், என்னை மீண்டும் ஆணவம் ஆட்கொள்ளாது! என்றான்.

தாத்தாக்கள், பேரன்களை முதுகில் சுமந்து செல்வது இப்போதும் எப்படி வழக்கமோ, அதேபோல, அந்த ஆசையை சூரபத்மனும் வெளியிட்டான். இதன்படி, சூரனின் ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார் முருகன். ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.

(தினமலர், வாரமலர், 26-10-2003)

இராமாயணம் என்பது கந்த புராணத்தைக் காப்பியடித்து உருவாக்கப்பட்ட கற்பனைதான் என்பதை தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் சுமார் 55 ஆண்டு களுக்கு முன்பு குடிஅரசு வார ஏட்டில் ஆதாரங்களில் உள்ளபடி தொகுத்தளித்துள்ளனர். அதே கருத்தை தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்ற அவரது மிகப்பெரிய (2 தொகுதிகள் கொண்ட) ஆராய்ச்சி நூலிலும் குறிப்பிட்டுள்ளார் என்பது தந்தை பெரியாருக்குத் தெரியாத நிலையிலேயே அவர்கள் அதை எழுதினார்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் வேலும் வில்லும் என்ற ஓர் நூலில், மனித சமூக வளர்ச்சியில், உலோகக் காலத்திலும்கூட முதலில் கண்டுபிடிக்கப்பட்டது வேல் - (மிருகங்களிடமிருந்து, மனிதன் காட்டில் வேட்டையாடு-கையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கண்டுபிடித்த முதல் கருவி வேல்; அறிவு வளர்ந்த பிறகு நாணேற்றி தூரம் வேகமாகப் பாயக்கூடிய வில் என்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. கந்தபுராணம் வேல் கதை; இராமாயணம் வில் கதை என்பதை இலக்கிய நயத்துடன் எடுத்துக்காட்டினார்!)

இக்கதைக்கும், பகுத்தறிவுக்கும், 21-ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றுள்ள அறிவியல் கணினிப் புரட்சி யுகத்திற்கும் கடுகளவு சம்பந்தமுண்டா?

கோபமும் சாபமும் கடவுள் குணங்களா?

(1) கடவுளுக்குப் பக்தன் திருமணம் செய்து வைத்தானாம்.

(2) எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த கடவுள் சராசரி மனிதனைவிட தன் முனைப்பினால் (யாகத்திற்கு) அழைக்காமல் சென்றதால் கோபப்பட்டான் என்பது நியாயமா?

(3) மனைவி பார்வதி காளியாகிட, சிவன் வீரபத்திரரானான். யாக சாலை களை அழித்தான் என்பது நம்ப முடியுமா?

(4) என் பக்தனாயினும், நீ என்னை அவமதித்த குற்றத்திற்காக மறு ஜென்மத்தில் ஆட்டுத் தலையுடன் அசுரன் குணங்கள் கொண்டவனாகப் பிறப்பது என்று சாபமிட்டார். அதோடு, என்னில் பிறக்கும் சக்தி _ உன்னிடம் வரும் சுப்பிரமணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய் என்று சாபம் இட்டார். கோபம் - சாபம் இவைதான் கடவுளுக்கு அழகோ!

(5) சூரபத்மன், பத்மாசுரன் என்று பெயர் நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் கட்டுப்பட்டி ருக்கும். உன் இறுதிக் காலத்தில், சுப்பிரமணியன் உன்னை வதம் செய்வான் என் றது எவ்வகையில் நியாயம்? நற்செயலால் உலகப் புகழ் வாய்ந்தவனை ஒழிப்பதற்கு ஒரு பிறப்பா -_ அதுவும் கடவுள்களிடம்?

(6) காசியப முனிவர் என்பவரின் தனி மனித ஒழுக்கம் எப்படிப் பார்த்தீர்களா?

அழகாக இருந்த பெண்மீது ஆசை கொண்டு இரு மகன்கள், ஒரு மகளையும் (பத்மாசூரன், சிங்கமுகன், அஜமுகி) பெற்றுப் போட்டுவிட்டு, - கைவிட்டு தவம் செய்யப் போய்விட்டாராம்!

இதேபோல், அழகிய கல்லூரி மாணவிகளை டில்லியில் ஜனாதிபதி யின் மெய்க்காவல் படையைச் சார்ந்தோர் கற்பழித்து கொலை செய்து ஓடிவிட்டனர்.

அதே டில்லியில் உலகத் திரைப்பட விழாவிற்கு வந்த சுவிஸ் நாட்டுப் பெண் அதிகாரியை கற்பழித்தனர்.

காசியப முனிவர் செயல், இவர்கள் செய்த செயலினின்று எவ்வகையில் வேறுபட்டது? தண்டனைக்குரியவர்கள் எல்லாம் ஆச்சாரியார்களா? ரிஷிகளா? முனிபுங்கவர்களா?

(7) இறுதிப் பகுதி நரகன் கதை போல தீபாவளியை - நான் செத்ததைக் கொண்டாடச் சொன்னான் என்ற டூப் போலவே, இதிலும் பேரனைச் சுமக்க ஆசைப்பட்டானாம்; மயிலும், சேவலும் வந்தனவாம்.

பஞ்சமர், சூத்திரர் முதுகுகளில் பார்ப்பனரா?

பஞ்சமர், சூத்திரர் முதுகில் இன்னமும் பார்ப்பான் சவாரி செய்வதன் உருவகம் போலும் இது!

வாசக நேயர்களே! உணருங்கள், ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எப்படியெல்லாம் திராவிட இனத்தை அழித்து, பழிசுமத்தி, அழித்ததோடு இல்லாமல், பாதிக்கப் பட்ட அந்த இனத்தின் சந்ததியையே அதைக் கொண்டாட வைத்து மூளைச் சாயம் ஏற்றி, மூளைக்கு விலங்கிட்ட முப்புரி நூல் கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டுதான் தந்தை பெரியார், திராவிடர்கள் அறிவும், மானமும் பெற வேண்டுமென்றார். நியாயப்படி சம்ஹாரம் உண்மையில் எந்த சக்திகள்மீது நடத்தப்பட வேண்டும்?

அடிமை ஜாதியினரே, ஆதிக்க வர்க்கத்தின் அம்புக்கு இரையாகாதீர்!

அறிவுக்குத் திரைபோட்டு அழியாதீர்!


----------------------------கி. வீரமணி எம்.ஏ., பி.எல். - ”விடுதலை” - 26-10-20030 comments: