தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947) என்று மிகக் கச்சிதமாக சிறைபிடித்தது போல சித்திரம் தீட்டியவர் அறிஞர் அண்ணா.
சங்கராச்சாரியாக இருந்தாலும், சர்.சி.பி. ராமசாமி அய்யராகவிருந்தாலும், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாராகவிருந்தாலும், சத்தியமூர்த்தி அய்யராகவிருந்தாலும், தினமணி வைத்திய நாதய்யர்களாக இருந்தாலும் அண்ணா சொன்ன அச்சுக்குள்தான் அகப்பட்டுக் கொள்வார்கள்.
சமஸ்கிருத பாஷை பிரமத்திற்குச் சமானம் என்றார் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (நூல்: ஞானவழி)
ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும் நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்கிருதம் என்பது ராஜாஜியின் கணிப்பு (சென்னை லயோலா கல்லூரியில் 25.7.1937).
இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை அது சமஸ்கிருதம்தான் என்கிறார். சர் சி.பி. ராமசாமி அய்யர் (உதகமண்டலத்தில் 5.6.1953).
என் கைக்குச் சர்வாதிகாரம் வந்தால் இந்தி மொழியோடு சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாக்குவேன் என்று சத்தியம் செய்கிறார் சத்தியமூர்த்தி அய்யர்வாள் (மெயில் 25.7.1939) முதல் மூன்று பாரங்களில் மட்டுமே ஹிந்தி கட்டாயம் இருப்பதால் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வேணும் வைக்கலாம்.
-_ ஆனந்தவிகடன் (17.10.1937)
இப்படி வரிசையாகவே சொல்லிக் கொண்டு போகலாம்.
இன்றைக்கு வடமொழி 26 எழுத்துகளை தமிழுக்குக் கொடுத்தும் தமிழிலிருந்து அய்ந்து எழுத்துகளை (எ,ஒ,ன,ற,ழ) பெற்றும் ஒருங்குறி (UNICODE) என்ற பெயரில் சமஸ்கிருதத்துக்குப் புத்துயிர் கொடுத்து, ஏற்கெனவே தமிழைக் கெடுத்தது போதாது என்று புது முயற்சியில் தமிழில் கலப்படத்தை ஏற்படுத்தும் மகாசதியில் ஈடுபட்டுள்ளனர்.
சமஸ்கிருதத்தின் இந்தப் போக்குக் குறித்து பெரும் புலவரும், பார்ப்பனருமான வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்), தமிழ் மொழியின் வரலாறு என்னும் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப்படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங் கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழ வேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும் தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழியென்று உரைப்பாராயினர். அது வடமொழியென்னப்பட்டவுடனே தமிழ்மொழி தென்மொழியெனப்படுவதாயிற்று. தமிழரும், ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும், சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமி-ழொடு மருவு முன்னே, அம்மொழி-யினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலே தான் தமிழ் மொழியினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.
இவ்வழி மொழிகளிலே தெலுங்குதான் வடமொழியொடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்பாடடைந்தது; தனது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக் கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக் கொண்டது. தெலுங் கிலக்கணமெல்லாம் தமிழ்ப் போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையா கரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம். இவ்வாறே கன்னடமுந் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப் படுத்திக் கொண்டது. இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங் கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப் புலவர் பலர் இன்றுமுளர்.
இனி மலையாளமோ வெகுநாள் காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் எழுத்தச்சன் என்பானொரு-வனால் மிக்க திருத்தப்பாடு அடைந்தது. உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்-களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம் மேற்கொண்டது.
மேற்கூறிய தெலுங்கு, கன்னடம், மலையாள மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையுமுடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன.
இனித் தமிழ்மொழியும் வட-மொழியுங் கலந்தியங்கு மாற்றைபற்றிச் சிறிது விரித்துரைப்பாம்.
வடமொழிக் கலப்பு
வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லா-திருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.
முற்சடைப் பலனில்வேறாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்
என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவ லையுங்காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும், மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.
தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப்பாட்டிற்குப் பெரிது மிணங்கினாரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்ட போதிலும், பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துக்களும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. நாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்-கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.
இவ்வாறு தமிழருட் பண்டிதராயினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார். வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வடசொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இது-போலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ அதையும் ஆராய்வாம்.
வடமொழி, தமிழ்மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள பாஷையோடு இரு வகை வழக்குமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின் கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப் பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயிவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்த-வண்ணம், ஓசை வேறுபாடு செய்து-கொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இது தானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.
இனித் தமிழ்ப் புலவர்களாயினார் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப் பார்த்தும் அவற்றை விலக்குதல், முடியாது போயிற்று. போகவே தமிழ்ப் புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதி-கட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.
அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வடசொற்கள் தமிழ் நூல்களிலேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தினுள்ளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.
பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய் விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமி-ழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்-திலே தான் செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந்தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம் என்று எழுதுகிறார் பார்ப்பனரான பரிதிமாற் கலைஞர்.
தமிழ்த் தாத்தா என்று பெருமை பல பேசும் உ.வே. சாமிநாதய்யர் செய்த தமிழ்த் தொண்டு என்ன?
தம்பேரன் திருமணத்திற்கு அவர் அச்சடித்த திருமணப் பத்திரிகையில் தமிழ் பட்ட பாட்டினை குடிஅரசு (18.9.1938) வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ் அறிஞர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், கா. நமசிவாயனார் தம் மகள் திருமண அழைப்பினை எப்படி அச்சடித்துள்ளார்கள் என்றும் அதே குடிஅரசு வெளியிட்டுள்ளது. ஒப்பிட்டு பார்ப்பனர் தமிழை - தமிழர் தமிழை அறிந்துகொள்ளலாம்.
இதோ குடிஅரசு (18.9.1938) உள்ளபடி.
பிராமணத்தமிழ் என்பது ஒன்றுண்டா?
நேயர்களே மகாமகோபாத்தியாய தாக்ஷணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர்களைத் தமிழ்த் தெய்வமென்று நாடெங்கணும் அவர்தம் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் சில ஆண்டு-களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது தங்களுக்குத் தெரிந்ததே. தமிழ் சங்க நூல்களாகிய சிலப்பதிகாரம் புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தியவர்கள் தோழர் அய்யரவர்களே என்பதும் அறிவீர்கள். அண்மையில் இந்திய ஒலிபரப்பில் பார்ப்பன நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் தமிழ் உரை நடை எழுதுகிறவர்களில் தலைசிறந்தவர் தோழர் அய்யரவர்களே ஆவர் என்று புகழ்பாடியதும் தாங்கள் நன்கு தெரிவீர்கள். இத்தகைய தமிழ்ப் பெரியார் தம் மகன் பிள்ளை பேரன் தோழர். கே. சுப்பிரமணியனுடைய திருமணத்தாளை (20.2.30) அச்சிட்டு வெளிப்படுத்தியதைக் கீழே தருகின்றேன். அதனைப் பார்த்தால் பிராமணத்தமிழ் என்று ஒன்று உண்டா என்று கேட்ட கல்வி அமைச்சர், கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் பிராமணத் தமிழைத் தமிழ் தெய்வத்தின் வழியே அறியப்பெறுவது. மகிழ்தற்குரியதல்லவா?
இனி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சொற்பொழிவாளர் பண்டித நா.மு. வெங்கடசாமி நாட்டாரவர்கள் தம் இளைய புதல்வி மங்கையர்க் கரசியாரின் திருமணத் திருமுகத்தையும், காலஞ்சென்ற தமிழரிசிரியர் கா. நமச்சிவாய முதலியாரவர்கள் தம் மூத்த புதல்வி பட்டம்மையாரின் திருமணமடலையும் ஈண்டு தருகின்றேன். இவ்விருவிதழ்களையும் பார்ப்பவர் தனித்தமிழ் நடையாய தமிழன் தமிழ் நடையை அறியப்பெறுவர். ஆகவே டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது பிராமணன் தமிழுக்கும், தமிழன் தமிழுக்கும் வேற்றுமை தெரிவதோடு பிராமணன் தமிழே தமிழ்மொழியை உருக்குலையச் செய்ததென்பதும் அரிய பல தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்ந்து ஒழியச்செய்த தென்பதும் அறிதல் வேண்டும். இந்த நிலையில் இந்தி மொழியும் வந்தால் தமிழ் மொழி இன்னும் கேடுறும் என்பதற்கு அய்யமுண்டோ!
அன்பர்களே, உரைநடை எழுதுவதில் தமக்கு மிக்காரும் ஒப்பாருமின்றி பல் வகைகளைப்பற்றி அறிய பல உரைநடை நூல்கள் இயற்றிய தனித்தமிழ்ப் பேராசிரியராய் மறைமலையடிகளாரின் வழிநின்று தனித்தமிழைப் பாதுகாக்க, ஒல்லும் வகையில் முயற்சி செய்வீர்களாக! எழுதுவதும், பேசுவதும் இனி தமிழாகவே இருத்தல் வேண்டும், அதுவும் தனித்தமிழாகவே இருத்தல் வேண்டும் என்பதைக் கடைப்பிடித்துத் தமிழ்மொழி போற்றுமின்! தாய்மொழி போற்றுமின்!
------------------------ சிவாநந்தம்
திருமணத் திருமுகம் திருச்சிற்றம்பலம்
மண்ணி னல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணி னல்லகதிக்,
கியாதுமோர் குறைவிலை கண்ணி னல்லஃதுறுங்
கமுமல வளநகர்ப் பெண்ணினல்லாளொடும்
பெருந்தகையிருந்ததே
திருவாளர்............................................அவர்களுக்கு அன்புள்ள ஐயா,
அம்மையப்பர் திருவருளை முன்னிட்டு, நிகழும் தாது வாண்டு வைகாசித் திங்கள் 18ஆம் நாள் (31.5.36) ஞாயிற்றுக்கிழமை, ஏகாதேசி அத்தம இவை கூடிய நன்னாளில், பகல் 18ரு நாழிகைக்கு மேல் 23ரு நாழிகைக்குள் கன்னி ஓரையில்,
என் இளைய புதல்வி
திருவளர் நங்கை
மங்கையர்க்கரசியை
செங்கரையூரிலுள்ள திருவாளர்
சிவகாமிச்சேதிராயர் அவர்கள்
இளைய புதல்வர் திருவளர் நம்பி
வித்வான் திருநாவுக்கரசுக்கு
மணஞ்செய்விக்க ஆன்றோர்களால் உறுதி செய்யப்பெற்ற வண்ணம் நடுக்காவேரியில் நடைபெறும் திருமணத்திற்கும் அதன் தொடர்புடைய ஏனைய சிறப்பு நிகழ்ச்சிகட்கும் தாங்கள் தமருடன் முன்னரே வந்திருந்து சிறப்பித்து, மண மக்களை வாழ்த்தியருள வேண்டுகின்றேன்.
இங்ஙனம் தங்கள் அன்புள்ள
நா.மு. வெங்கடசாமி நாட்டார் தமிழ்ச் சொற்பொழிவாளர் அண்ணாமலை பல்கலைக்கழகம்
22.5.36 நடுக்காவேரி தங்கள் அன்புள்ள வருகையை எதிர் நோக்கும்
மு. தியாகராஜ நாட்டார்
நிலக்கிழவர், நடுக்காவேரி
மு. கோவிந்தராஜ நாட்டார்,
பி.ஏ., எல்., டி, ஆசிரியர்
நாட்டாண்மை உயர்திறப்பள்ளி பாவநாசம்.
***************************************
சிவமயம்.
விவாகவதூகிரகப்பிரவேச முகூர்த்த பத்திரிகை
மகா_ள_ள ஸ்ரீ......................அவர்களுக்கு ஐயா, உபயக்ஷேமோபரி.
இந்த மங்கலகரமான சுக்ல. வருடம் மாசி மாதம் 27-ந் தேதி (19.3.30) திங்கட்கிழமை, தசமி புணர்பூசம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை 7லு க்கு மேல் 11ரு நாழிகைக்குள்ளாகிய ரிஷபலக்னத்தில்
என் பௌத்தரனும் என் குமாரன் சிரஞ்சீவி எஸ் கலியாணசுந்தரன், புத்திரனுமான சிரஞ்சீவி
கே. சுப்பிரமணியனுக்கு
திருப்பத்தூர் வக்கீல், மாயூரம்
மகா_ள_ள_ஸ்ரீ ந. ராம சேஷைய்ய
ரவர்களுடைய குமாரி சௌபாக்கியவதி
ரங்கநாயகியை
பாணிக்கிரகணம் செய்விப்பதாக ஈசுவர கிருபையை முன்னிட்டுப் பெரியோர்களால் நிச்சியிக்கப்பெற்று முகூர்த்தம் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரியர் தெரு, 6 ஆம் நெ. ராமானுஜ கூடத்தில் நடப்பதால், அதற்கும் பங்குனி-மாதம் 1_உ (14.3.30) வெள்-ளிக்கிழமை ராத்திரி 7 மணிக்கு மேல் 8_மணிக்குள் கன்னியாலக்கினத்தில், திருவேட்டீசுரன் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள எனது கிருகத்தில் நடக்கும் வதூகிரகப் பிரவேசத்திற்கும் தாங்கள் இஷ்ட பந்து ஜனங்களுடன் முன்னதாகவே வந்திருந்து மேற்படி முகூர்த்தங்களை நடப்பித்துச் சிறப்பிக்கும்படி கேட்டுக்-கொள்ளுகிறேன்.
இங்ஙனம் அன்புள்ள,
வே. சாமிநாதையன்,
(மகாமகோபாத்தியாயர்
தாக்ஷணாத்யகலாநிதி)
திருவேட்டீசுவரன்பேட்டை
தியாகராஜ விலாசம்
(20.2.30)
with best compliment of.
V.sundaram Iyer,
clerk, G.P.O. Madras
G. NarayanaswamyIyer. B.A.
Sonior Accountant Pestal Audit-office, Madras
S. Kalyanasundaram Iyer.
Translator. Highcourt Madras.
*****************************************
திருமணம்
அன்பார்ந்த ஐயா,
நிகழும் விபவ வருடம் சித்திரை மீ 14_ந்தேதி (26.4.38) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு என் மூத்த புதல்வி
திரு. பட்டம்மையை,
வடக்கப்பட்டு திரு நாராயணசாமி
முதலியார் அவர்கள்
இளையபுதல்வன்
திரு. சதாநந்தனுக்கு
சென்னை திருமயிலைக் கபாலீச்சரத்தில் சிங்காரவேலர் என்னும் முருகப்பெருமான் திருமுன் திருமணம் செய்து கொடுக்க உறுதி செய்திருப்பதால் அப்பொழுது தாங்கள் அன்பர்களுடன் வந்திருந்து அதனைச் சிறப்புற நடத்துமாறு வேண்டுகின்றேன்.
பின்னர் சாந்தோம் ஹைரோட்டிலுள்ள கடலகத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்.
இசைப்பாட்டு வியாழன் 5.30 மணி
இங்ஙனம்
தங்கள் அன்புள்ள
கா. நமச்சிவாயன்,
கடலகம், திருமயிலை
தங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்க்கும்
கா. மாணிக்கமுதலியார்,
வில்சன் அண்டு கம்பெனி
ச. ஆறுமுகமுதலியார்,
ஸி.ஸி. அண்டு சன்ஸ்
கா. பாலகிருஷ்ணமுதலியார்,
ஜனார்த்தனம் அண்டு கம்பெனி.
**************************
பார்ப்பனர் வளர்த்த வளர்க்கும் தமிழின் இலட்சணத்திற்கும், தமிழர் வளர்த்த வளர்க்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று இப்பொழுது புரிகிறதா?
--------------------13-11-2010 "விடுதலை” ஞாயிறுமலரில் தி.க. பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment