Search This Blog

14.11.10

ஏன் வேண்டும் தி.மு.க. ஆட்சி? - பெரியார்


ஏன் வேண்டும் தி.மு.க. ஆட்சி?

எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவடைந்து, 94 ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது.

93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், பிறைகளில் (அமாவாசைகளும் ) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.

நினைத்தேன்-சொன்னேன்- நடத்திக் காட்டினேன்

என் வாழ்நாளில் நான் மற்றவர்(அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்லப் பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாதது மான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி(பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்ததோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்.

இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணம்கொண்டு அதற்காக வாழ்கிறேன் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வசக்தி தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன் வருகிறேன்.

மக்களுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படவில்லையே

இந்த எனது நிலையால், எனது 93 ஆண்டு வாழ் நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதே யில்லை. மேற்கண்ட எல்லா காரியங்களிலும், மற்றவர்கள் எளிதில் பெறமுடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.

இதனால் உலகுக்கு மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

நோயும் சாவும் மட்டும் ஏராளம்

நமது கருத்து வெளியீடும், பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில், நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10 பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100 க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100க்கு 100 ம் சாவார்கள். இருமல்(க்ஷயம்) வந்தால் 100 க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100 க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பலகுழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.

அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறை யிலும் பார்ப்பன மயமும், முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான் அடிமைத்தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகியிருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப்படாமலும் கவலைப் படாமலும் வாழ்ந்து வந்தோம்.

எல்லாம் கடவுள் செயல்; நம்மால் ஆவதில்லை

இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல் இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல். எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள் தனமும் இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களை- அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.

கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும் ஒழிக்கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது; எப்படி வந்தது என்றால், மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டு களுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல்; தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன் தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம்; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.

எவ்வளவு காட்டுமிராண்டியாக இருந்திருப்பார்கள்?

சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்த மான, மத சம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம, திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.

மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில், 100 க்கு 90 க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர் , வித்துவான், மகாமகோ பாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற படிப்பாளி, அறிவாளிகள் என்பவர்களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப்பதும் அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க மாட்டார்கள்?

அந்தத் துணிவில் அதிசயம் ஏது?

அவ்வளவு ஏன், கிரகணங்களை நம்புகிறவர்கள் எத்தனை பேர் இன்று கூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு அப்பால் உலகம் இருப்பதாகவே தெரியாதோர் எத்தனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால்-நெருப்புக்குச்சி ஏது ?ரயில், கார், கப்பல், ஆகாயக்கப்பல் ஏது? நடந்த நல்ல பாதை ஏது? இந்த நிலைமையில் உள்ள மக்களின் மூட காட்டு மிராண்டி நம்பிக்கையான அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்ளுவானா னால், அத்துணிவில் அதிசயம் ஏது? எப்படியிருக்கு முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்துகொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பன வாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல், ஒழிக்காமல் இருப்பதும், பின்பற்றுவதுமான, முட்டாள்தனமான, காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மை யாகும் என்று சொல்லலாம்.

மூடனுக்கும் புரியாமல் போகாதே

நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத்துகளால், பிரசாரத்தால் இவ்வைம்பது ஆண்டுக்கப்பால் நம் நாட்டாருக்கு மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன? கேடு என்ன என்று பார்த்தால், ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்படவில்லை என்பதோடு மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல்போகாதே.

அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட்டுக்கு மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே நான், 93 ஆண்டு வாழ்ந்ததை வீண்வாழ்வு என்று கருதவில்லை என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.

ஒரே ஒரு பயம்தான்; மற்றபடி மகிழ்ச்சியே

இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.

காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட் டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.

ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.

--------------------- ஈ.வெ.ராமசாமி - தந்தை பெரியார் பிறந்த நாள்
விடுதலை மலர், 1972

2 comments:

Unknown said...

யாரிந்த தமிழர் தலைவர்?

நம்பி said...

//Blogger கிருத்திகன் said...

யாரிந்த தமிழர் தலைவர்?

November 14, 2010 8:53 PM//

ஹி ஹி.... திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி....வர வர குவிஸ் புரோக்கிராம் எல்லாம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க....