Search This Blog

4.11.10

தீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்தீபாவலிப் பண்டிகைக்காக வழங்கி வரும் கதையே சுட்டுக் கதையாக முடிகின்றபோது, தீபாவலியை எப்படி நமக்குரிய பண்டிகையென்று கொள்ள முடியும்? இத்தகைய மூடக் கதையை பொருந்தாத போலிக் கதையை ஆதாரமாகக்கொண்ட தீபாவலியை வீண் செலவு செய்து ஏன் கொண்டாட வேண்டுமென்றுதான் கேட்கின்றோம்?

இந்துக்கள் என்பவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவலிப் பண்டிகையும் ஒன்றாகும். இதுவும், இந்து மதவழக்கத்தில் ஒன்றாகும். ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு புராணக் கதை கற்பிக்கப்பட்டு இருப்பதை யாவருமறிவோம். அவ்வாறே தீபாவலிக்கும் ஒரு புராணக் கதையைச் சுருங்கக் கூறி முடித்துவிட்டு அதன் பின்னர் நமது எண்ணத்தை வெளியிடுகின்றோம்.

இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்து கொண்ட பொழுது, திருமால் பன்றியுருக்கொண்டு வந்து இரண்யாட்சதனைக் கொன்று பூமியை நிலைக்கச் செய்தாராம். அப்பொழுது பன்றியுருவோடிருந்த திருமாலை, பூமி தேவி மணம் செய்து கொள்ள விரும்பினாளாம், உடனே பன்றியும் பூமிதேவியும் திருமணம் செய்து கொண்டார்களாம். அவ்விரு வர்களுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நரகாசுரன் என்று பெயர். இவன் மாகிஷ்மதி என்னும் பட்டணத்தை அரசாண்டு கொண்டிருந்தான். துவஷ்டாவின் பெண்ணாகியணா கசேரு என்பளை இவன் ஒரு யானை உருவத்துடன் சென்று சிறை பிடித்துக்கொண்டு வந்து மணம் செய்து கொண்டானாம். இவன் காசிபரின் மனைவியாகிய அதிதியென்பவளின் காதணியையும், வருணனுடைய குடையையும் கவர்ந்து கொண்டானாம். அன்றியும் எப்பொழுதும் தேவர்களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தானாம். இவ்வாறே இவன் அனேக, ஆண்டுகள் வாழ்ந்து வந்தானாம்.

இந்நரகாசுரன் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல், தேவர்களனைவரும், முறையிட்டதைக் கேட்ட திருமால் அவனைக் கிருஷ்ணாவதாரத்தில் கொன்று விடுவதாக வாக்களித்திருத்திருந்தாராம். அதன்படியே, கிருஷ்ணன், ஒரு சமயத்தில் திருமாலின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற தானும், பூமிதேவி அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமையென்னும் தனது மனைவியும் சேர்ந்து நரகாசுர பட்டினத்தையடைந்தார்கள். கண்ணன் நரகாசுரனுடன் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றான். நரகாசுரன் இறக்கும்போது தான் இறந்த நாளை உலகத்தார் கொண்டாடும்படி செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டானாம். அவன் வேண்டுகோளை நிறைவேற்றவேண்டுமென்று சத்தியபாமையும், விரும்பினாளாம். அதற்கறிகுறியாகத்தான் தீபாவலிப் பண்டிகை ஏற்பட்டதாம். இதுதான் பாகவதம் முதலிய புராணங்கள் வழங்கும் கதையாகும்.

இனி இக்கதை எவ்வளவு தூரம் உண்மையாக விருக்க வேண்டுமென்பதைச் சிறிது ஆராயலாம். பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்தான் என்னுங் கூற்று பொருந்துமா? பூமி உருண்டை வடிவமா? தட்டை வடிவமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிப்பது எப்படி? பூமியெங்கிருக்கின்றது, கடல் எதன் மீது இருக்கின்றது? என்ற கேள்விகளைக் கேட்போமாயின், திருமாலின் பன்றியவதாரத்திற்கே ஆபத்து வந்து விடுகின்றதன்றோ? பிறகு பூமிதேவி பன்றியைக் கண்டு ஆசைப்பட்டாள் என்று கூறுவதனால் பூமி என்பது ஒரு பெண்ணுருவமா? ஒரு பெண்ணின் மேலா நாம் இவ்வளவு காரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றோம்? என்ற கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லையன்றோ? ஒரு இயற்கைப் பொருளைப் பெண்ணாக ஆக்கி அப்பெண் ஒரு பன்றியோடு சேர்ந்து பெரும் புகழ் வாய்ந்த ஒரு பிள்ளையைப் பெற்றதாகக் கூறப்படும் கதையையும் உண்மையென்று நம்புவார் பகுத்தறிவுடையராகவிருக்க முடியுமா?

இனிக் கடைசியாக நரகாசுரனைக் கொன்றதாகக் கூறப்படும் கண்ணனைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்ப்போம். திருமாலவதாரமென்று சொல்லப்-படுகின்ற கண்ணன் நரகாசுரனுக்குத் தந்தையாக வேண்டுமன்றோ? ஆகவே தகப்பன் மகனைக் கொலை புரிந்த கதைதான் தீபாவலியென்று முடிக்கின்றதன்றோ? தகப்பன் தான் மட்டுஞ் சென்று மகனைக் கொல்லாமல் தாயாரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கொன்றானாம், பூமி தேவியின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை நரகாசுரனுக்கு தாயன்றோ? மகனைக் கொன்ற கண்ணன் பெருமையைத்தான் பெருமையாகப் பேசுகின்றோம். அந்தோ, இதை விட குறைந்த அறிவுடைய செயல் வேறென்னவிருக்கின்றது!

மேற்கூறிய உத்தமமான புராணக்கதையினால், நமது பரிசுத்தமான தீபாவலிப் பண்டிகையின் பெருமையை நீங்களே ஊகித்து உண்மையை உணர லாம். சிலர் தீபாவலிப் பண்டிகை மழைக் காலத்தில் வருவதால் அன்று சுகாதார முறையைக் கைக்கொள்வதற்குப் பதிலாக இப்பண்டிகையின்மூலம் நம்மையும் நமது வீடுவாசல்களையும் சுத்தஞ்-செய்கின்றோம் என்கிறார்கள். எண்ணெய் தேய்த்து முழுகுவதும் புதிய ஆடையை உடுத்துக்கொள்வதும், சுகாதாரத்திற்கறிகுறியாம். வாணங்களை வாங்கிக் கொளுத்திக் கெட்ட காற்றை உட்ககொள்வதும் சுகாதாரமாம். எண்ணெய்ப் பண்டங்களை உண்டு பிணியடைவதும் சுகாதாரமாம் என்னே இவர்தம் அறியாமை?

நாம் தீபாவலியைப் பற்றிக் கூறுங்கால் ஏராளமான பொருளை வீண் செலவு செய்யும், பொருளற்ற மத சம்பந்தமான சடங்குகளில் ஒன்றுதான் தீபாவலி என்றுதான் கூறுவோம். தீபாவலியன்று நமது இந்தியாவில் எவ்வளவு பொருள் வீணாகின்ற, தென்பதைக் கணக்கிடுவோமாயின் கோடிக்கணக்கான பொருள் வீணாகின்றதென்பது விளங்கும், புதிய ஆடைகளுக்காக ஆடம்பரமான உடைகளுக்காக அந்நிய நாட்டினர்க்கு அளவு கடந்த பொருளை அள்ளிக் கொடுக்கிறோம். ஒரு பயனுமற்ற வெடிகளுக்காக எத்தனை லட்சம் ரூபாய் அள்ளி இறைக்கின்றோம். காசைக் கரியாக்காதே வாணத்தை வாங்கிச் சுடு என்ற பரிகாசப் பழமொழி நம்மை ஏளனஞ் செய்வதற்கு எழுந்த பழமொழியன்றோ? நமது இச்செய்கையைக் கண்ட அந்நியர் எவர்தான் நகைக்க மாட்டார்கள்? எவர்தான் நம்மை அறிவிலிகள் என்று கூறமாட்டார்கள்?

இம்மட்டோ! இன்னும் இவ்வெடிகளால் உண்டாகும் ஆபத்துக்கள் எவ்வளவு? வெங்காயவெடி செய்வதனால் கண்ணிழக்கின்றவர்கள் எத்தனை பேர்? கை யிழக்கின்றவர், காலிழக்கின்றவர் எத்தனை பேர்? உயிர் விடுவோர் எத்தனை பேர்? மற்றும் வெடிக்கும் வெடிகளால் காயமடைவோர் எத்தனை பேர்? இதற்கெல்லாம் காரணம், தீபாவலி யென்னும் பாழும் கடன்கார மதச்சடங்கன்றோ? மதச்-சடங்கு என்பதைவிட மடச்சடங்கென்று கூறுவது பொருந்துமென்று நினைக்கின் றோம்.

இதுமட்டோ? மழை நாளில் எண்ணெய்ப் பண்டங்களையுண்டு வயிற்று நோய் கொண்டோர் எத்தனை பேர்? விஷ பேதிக்குட்படுவோர் எத்தனை பேர்? சுரநோய் கொள்வோர் எத்தனை பேர்? இதற்கு வேறு உதாரணம் வேண்டாம், தீபாவலியன்று காலையில் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பார்வை யிடுவீர்களாயின் பலகாரப் பெருமையையும் தீபாவளியின் மாண்பையும் உணரலாம்.

ஆகவே, மதம் மதம் என்று சொல்லிக்கொண்டிருப்பதனால் எவ்வளவு துன்பமுண்டாகின்ற தென்பதை ஆராய்ந்து பாருங்கள். இந்தத் தீபாவளிச் சடங்கினால், நமது பொருளுக்கும், உடம்புக்கும், அறிவுக்கும், எவ்வளவு சேதமுண்டாகின்றதென் பதைச் சிறிது கூர்ந்து நோக்குவோமாயின் இதுபோன்ற சடங்குகளைக் கொண்டாட மத சம்பந்தமான சடங்கென்று சொல்ல முன் வருவோமா? தமிழ் மக்களுக்குப் பல வகையிலும் சேதம் விளைவிக்கின்ற இத்தீபாவலிப் பண்டிகையை ஆரியப் புராணக்கதையில் ஏற்பட்ட இத் தீபாவலிப் பண்டிகையை இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையிடும் இத்தீபாவலிப் பண்டிகையை ஒழிப்பதற்கு வழி தேடவேண்டும். இவ்வாறனா மூடச்சடங்குகளையும், பண்டிகைகளையும், வழக்கங்களையும், ஒழிப்பதில்தான், நமது விடுதலை அடங்கிக் கிடக்கின்றது.

-----------------------சாமி.சிதம்பரனார் எழுதிய கட்டுரை “விடுதலை” அசுரன் மலர் 3-11-2010

0 comments: