Search This Blog

2.11.10

திராவிடர் இயக்கம் ஏன்?



வடசென்னை மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் சென்னை இராயபுரம் அறிவகத்தில் நேற்று (1.11.2010) கருத்தரங்கம் ஒன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் ஒரு மணிநேரம் உரையாற்றினார்.

திராவிடர் இயக்கம் தோன்றவேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து முத்திரை பதிக்கும் கருத்தினை எடுத்து வைத்தார்.

தமிழர்களிடத்திலே ரோஷத்தை உண்டாக்கத்தான் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தேன் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினை முன்வைத்து பல ஆதாரங்களை எடுத்து வைத்தார்.

1899 ஆம் ஆண்டில் சென்னையில் அபிராமி சுந்தரி சரித்திரம் எனும் நாடகத்திற்காக வெளியிடப் பட்ட துண்டு அறிக்கையை எடுத்துக்காட்டி விளக்கம் அளித்தார்.

அந்தத் துண்டு அறிக்கையின் இறுதிப் பகுதியில் கீழ்க்கண்டவாறு அச்சிடப்பட்டு இருந்தது.

சோபா ஒரு ரூபாய்; ரிசர்வ் சேர் 12 அணா, இண்டர் மீடியட் சேர் எட்டணா, அன் ரிசர்வ்டு சேர் ஆறணா, காலரி 4 அணா, புருஷாளுக்குப் பாய் 3 அணா, ஸ்ரீகளுக்கு ஜமக்காளம் 4 அணா, ஸ்ரீகளுக்குப் பாய் 3 அணா.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்கட்கு பாய்க்கு அரை டிக்கெட் 2 அணா, பந்தலுக்குள் சண்டை சச்சரவு செய் பவர்களையும், சுருட்டு முதலிய லாகிரி வஸ்துக்களுடன் வருபவர்களையும் பழைய டிக்கெட்டுகளைக் கொண்டு வருபவர்களையும் போலீசார் வசம் ஒப்புவிக்கப்படும். பஞ்சமர்கட்கு இடமில்லை என்று அந்த நாடகத் துண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த நிபந்தனையை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கத் தகுதியிருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு (பஞ்சமர்களுக்கு) இடமில்லை என்று சென்னை மாநிலத்தின் தலைநகர மான சென்னையிலேயே அந்த நிலை என்றால், இந்தக் கொடுமையை நினைத்துப் பார்க்கவேண்டும் - சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் கற்பிக்கும் இந்தச் சமூக அமைப்பை தலைகீழாக மாற்றி அமைக்கத் தொடங்கப்பட்டதே திராவிடர் இயக்கம்.

மனிதன் பிறக்கும்போது அவன்மேல் சுமத்தப்பட்ட ஜாதி என்னும் நோய் சுடுகாட்டிலும்கூடத் தொடர் கிறதே. மனிதன் சாகிறான் - ஆனாலும் அவனைப் பிடித்த ஜாதி சாகவில்லை என்பதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார்.

பொருளாதார விடுதலை என்பது காலில் மாட்டப்பட்ட விலங்கை உடைப்பதாகும்; அரசியல் விடுதலை என்பது கையில் பூட்டப்பட்ட விலங்கை உடைப்பதாகும். பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மனிதனின் மூளையில் மாட்டப்பட்ட விலங்காகும். இந்த விலங்கை உடைத்து, மனிதனை விடுதலை செய்யப் பிறந்ததே திராவிடர் இயக்கம் - இதற்காகவே தன் வாழ்நாளையே முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டவர் தந்தை பெரியார்.

திராவிடர் இயக்கத்தின் இந்தக் கொள்கை தனித்தன்மையானது. வேறு எந்த அரசியல் கட்சியும் உரிமை கொண்டாட முடியாதது ஆகும்.

ஜாதி என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டது என்று வியாக்கியானம் செய்யும் சாமர்த்தியசாலிகள் உண்டு. வருணாசிரமம் என்பது குணத்தால் அல்லாமல், பிறப்பால் வருவதல்ல என்று திருவாளர் சோ ராமசாமி போன்ற குயுக்திப் பார்ப்பனர்கள் கூறுவதுண்டு.

அத்தகையவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் இந்து ஏட்டின் ஆசிரியராக இருந்த திருவாளர் ஜி. சுப்பிரமணிய அய்யர் (1893 இல்) மற்றும் சுப்பிரமணிய பாரதியார் கூறிய கருத்துகளை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து வைத்தார்.

மேலை நாட்டு சமூக அமைப்பு, பிறப்பு அடிப்படையிலான சமூக தராதரத்தை ஏற்பதில்லை. அங்கு ஒரு சக்லியின் மகன் தகுதிப்பாடு, ஒழுக்கம், செல்வம் காரணமாக வேல்ஸ் இளவர சருக்கு ஒத்த சமூக செல்வாக்கைப் பெற்று போற்றுதலுக்குரியவனாக முடியும். ஆனால், இங்கு ஒரு பறையர், வேதங்கள் அனைத்தையும் முற்றோதி ஒழுக்க சீலராகவும், செல்வந்தராகவும் விளங்கினாலும் ஊழலும், மோசடியும் புரியும் பிராமணனுடன் சமத்துவம் கோர முடியாது. இது இந்து சாதிய அமைப்பின் வினோதமான தீங்காகும்.

இதே கருத்தை டிசம்பர் 1904 இந்து நாளிதழுக்கு எழுதிய கடிதத்தில் பாரதியாரும் கூறியுள்ளார்.

(பெ.சு. மணியின் கட்டுரைத் தொகுப்பு,
பக்கம் 279).

இத்தகு சமூக அமைப்பை மாற்றியமைத்து அனைவருக்கும், அனைத்தும், எல்லார்க்கும் எல்லாமுமான சமூக அமைப்பைத் தோற்றுவிக்கப் பிறப்பெடுத்துப் பாடுபட்டு சாதித்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிடர் இயக்கமாகும்.

பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடமாகும்.

- தந்தை பெரியார்,

(குடிஅரசு, 11.11.1944, பக்கம் 11)

------------------- " விடுதலை” தலையங்கம் 2-11-2010

0 comments: