Search This Blog

23.11.10

ஞானசூரியன்

ஞானசூரியன் -1

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.

முன்னுரை

இந்த ஞானசூரியன் தன் பெயருக்கேற்ப, இந்து மதம் என்பதன் பெயரால் நடைபெற்று வரும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம், ஸ்மிருதி, உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் புரட்டுகளையும், ஆதாரத்தோடு விளக்கிக் காட்டித் தமிழ் மக்களிடம் அறிவுப் பயிரைச் செழித்து வளரச் செய்யும் சிறந்ததொரு நூலாகும்.

இதனை ஒரு முறை படிப்பவர்கள் ஜாதி, மதம், வருணாச்சிரம தருமம், யாகம், பூஜை திருவிழா முதலியவைகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்தி வைத்தவை என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்து, அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாற்றும் தன்மை ஒழிந்து, பகுத்தறிவும், சுயமரியாதையும் உடைய வர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.

இந்நூலைத் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ், வட மொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர். இதனை எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட்செலவில அச்சிட்டு வெளியிட்டவர், பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழரு மாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு.சண்முகம் அவர்களாவார்.

இவ்விருவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து, ஆரியச் சூழ்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடனேயே மிகவும் குறைந்த விலையில் வெளியிடுகிறோம். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் வாங்கிப்படித்து உண்மை உணர்வார்களாக.

சிறப்புரைகள்

திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது

ஞானசூரியன் கூறும் பொருள்களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என ஆண் பாலாற் கூறுதல் தகுதி யேயாம்.

அவன் வடமொழி வேதங் களிலும், மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம் முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும், சாதிக் கோட்பாடுகளையும், கொடுமைகளையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலிய வற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப்பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார். பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.

பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமண ரல்லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர் களையும், பூசாரிகளையும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்கு கின்றான்.

வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ஞான சூரியன் கிரணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.

சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

----------------கோயிற்பட்டி, வ.உ.சிதம்பரம்பிள்ளை 7.10.1927

*********

எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட

திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்கள் எழுதியதன் சுருக்கம்.

தமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள் வதற்கு இந்நூல் பெரியார் ஒளி காட்டியாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்ம னோர்கள் விடுதலை அடை வதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ் கின்றேன்.

---------------சென்னை, கா.சுப்பிரமணியபிள்ளை

24.10.1927.மறைமலை அடிகளார் கருத்து

ஞான சாகரம் பத்திராதிபர் சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன் சாரம்:

-

வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப் பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக் கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக் குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை ஓட்டி, வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்கு வதற்குப் பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந் திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும் தமிழுரை களும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப் பொருள் வாய்ந்தது.

--------------------பல்லாவரம் சுவாமி வேதாசலம்

7.10.1927

ஆரியர் சித்தாந்தம்

அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர் களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.

(13-10-1935 குடி அரசு பக்கம் 9)

இந்து மதம் ஒழிகிறது

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம் சீர்திருத்த மடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.

(17-10-1935 குடி அரசு பக்கம் 11)

பெண்களும் - கற்பும்

பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

(3-11-1935 குடி அரசு பக்கம் 13)

சூத்திரர்கள் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

(19-9-1937 குடி அரசு பக்கம் 9)

****************************************************************************ஞான சூரியன் --2

முதல் அத்தியாயம்

சக்தி சத்தர் சனாதனப் பேரொளிச்

சித்தர் முத்தர் திருமிகு மேனியர்

சுத்த நெஞ்சுறுத் தூய்மைகண் டுய்ந்திடப்

பத்தி யாலவர் பாதம் பணிகுவாம்

செழுந்தமிழ்க் குடித்தீரரே; வீரரே;

எழுந்து மின்னே இழிதகை யோர்ந்துநாம்

அழுந்தி நாளும் அடிமைசெய் காரணம்

கொழுந் தறிவினிற் கூர்ந்துணர் வாமரோ.

நமது நாட்டின்கண் தமிழர்களாகிய (திராவிடர்கள்) நம்மவர்கள் கல்வி கற்பதில் சிறிது காலமாகவே ஊக்கங்கொண்டு உழைத்து வருகின்றனர். அதன் பயனாக, நம்மவர்களின் மனக்கண்ணை மூடியிருந்த அறியாமை என்னும் மாசு சிறிது சிறிதாக நீங்கிற்று. நீங்கவே, இதுவரையிலும் நம்மை ஏமாற்றி வந்த ஆரியப் பார்ப்பனர்களின் சமய நூற்களாகிய, சிரவுத, ஸ்மார்த்த தருமங் களின் மேற்பூச்சு விளங்கலாயிற்று. அதனால், அந்நூற்களில் நமக்கிருந்த மதிப்பு குறையலாயிற்று. எதிர்காலத்தில் நம்மவர்கள் அடையும்படியான மேல் நிலையைக் குறிக்கிற இத்தருணத்தில், ஆரிய சமாசத்தினர், இந்து சபையார், பிரம்மசமாசத்தினர் முதலிய பல குழுவினரும் மேற்சொன்ன நூற்களின் பழைய பூச்சைத் துடைத்துப் புதிதாகப் பூசி மினுக்குமாறு, வேஷத்துடன் நம்மவர்முன் காட்டி, நம்மவர்களை ஏமாற்ற முயன்று வருகிறார்கள். எனவே, இவர்களின் எண்ணத்தை உற்று நோக்குமிடத்து, மேற்குறித்த சமய நூல்களிலுள்ள மூட நம்பிக்கைகளை நம்மவர்களின் உள்ளத்தில் தழைத்தோங்கி வளரச் செய்து, நம்வர்களை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியினின்றும் கரையேற வொட்டாமல் தடுக்க வேண்டுமென்பதேயல்லாது வேறில்லை என்றே கொள்ளக் கிடைக்கும். இவர்களின் முயற்சியும் சிறிது சிறிதாகப் பயன்கொடுத்துக் கொண்டே வருகிறது. இம்மைக்குரிய பயன்களுள் சிலவற்றை இவர்களின் வயப்பட்ட (சூத்திரர் என்று அழைக்கப்படுகிற) நம்மவர்கள் அடைகின்றார்களெனினும், பார்ப்பன நூற்களாகிய வேதம், ஸ்மிருதி முதலியவைகட்கு இவர்கள் சொல்லுகிற யுக்தி வாதங்களும், உரைகளும் அந்தந்த நூற்களுக்கு1 மகீதரர் முதலிய பழைய உரையாசிரியர்களின் கருத்திற்கு ஒத்திட்டுப் பார்த்த பிறகே ஒப்புக்கொள்ளத் தக்கவை. இதற்காக முயற்சிப்போர், தயானந்த திமிர பாஸ்கரம் முதலிய நூற்களின் ஆசிரியரான2 பண்டித ஜ்வால்ப்ரஸாத் மிஸ்ரஜி முதலிய மேதாவிகளைப்போல் இவர்களைக் கண்டிக்க முற்படுவார்கள். நாம் இங்கு எதைக்குறித்து ஆராயப்போகிறோம் என்றால், நமது நாட்டில் யாவராலும் பிராமணங்களாகக் கொள்ளப்படுகின்ற வேதம், ஆகமம், ஸ்மிருதி இவைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங் களையும், அவைகளின் உண்மைக் கருத்துகளையுமேயாம். பகவான் புத்தன் அவதரிப்பதற்கு முன்னும் அதன் பின்னரும் உள்ள நமது தேச சரித்திரத்தைப் பதினாறு ஆண்டுகளாக ஆராய்ந்தவுடன், நமது தேசம் முழுவதும் நேபாளம், காஷ்மீரம், சிலோன் முதலிய பல தேசங்களிலும் சஞ்சரித்து, அந்தந்த தேசத்தார்களின் முற்கால, தற்கால வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் அறிஞர்களிடத்தும், சரித்திர வாயிலாகவும், நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததன் பயனாகத் தமிழ் மக்களாகிய நம்மவர்கள் நெடுநாட்களாகவே அடிமைப்படுகுழியில் தள்ளப்பட்டிருப் பதையும், கரையேற முயற்சி செய்யாதிருப்பதையும், அறிந்த யான் நம்மவர்களின் முன்னேற்ற வழியை எடுத்துக் கூறத் துணிந்தனன். இதனால் நம்மவர்கள் அறியாமை என்னும் நித்திரையை விட்டெழச் செய்து, சமய நூல்களில் மனத்தை ஒருமுகப்படுத்திக் கீழ்க் கூறுகின்ற பொருட்களைப் படித்தறியும்படி மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். ஆராய்ச்சி இல்லாமல் ஒருவரை யொருவர் ஆட்டு மந்தையைப்போல் பின்பற்றி நடக்கும் இயற்கையுள்ள நம்மவர்களுக்கு, உண்மையை அறிய வேண்டுமென்னும் விருப்பமும், அதற்குரிய ஆற்றலும் மேன்மேலும் பெருகி வளரும்பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

உயிர்களுக்கு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் இயற்கையிலேயே எற்பட்டுள்ளது. இதன் பொருட்டே முயற்சியும் நடைபெற்று வருகின்றது. ஆனால், அதற்கு எதிர்மறையான பலனை அனுபவிக்க நேருவதும் உண்டு. ஆயினும், எல்லா உயிர்களும் மேன்மையைத்தான் விரும்புகின்றன. இந்த மேன்மையும் இம்மைக்குரியது, மறுமைக்குரியது என இருவகைப்படும். மனிதன் தன்னால் பழக்கப்பட்ட எந்த விஷயத்திலும் நிறைந்த சுகத்தை அனுபவிக்காததனால், உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் முதன் முதலாக மனிதனது உள்ளத்தில் எழுந்தன. இவ்வாறு எழுந்ததன் பயனாகவே இப்போது பல வேற்றுமைப்பட்ட கொள்கையுடைய பல்வேறுவகைச் சமயங்களைக் காண்கிறோம். அவைகளில் இவ்வேற்றுமையினால் சமூக முன்னேற்றத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன பிரிவினையானது எல்லாச் சமயத்தினராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளத் தக்கதேயாகும். இதில் சமுதாயத்தை (Social), கல்வித்துறை (Educational), ஒழுக்கம் (Moral), அரசியல் (Political) ஆகிய நான்கு வகையான முன்னேற்றங் களையும் இம்மைக்குரியது என்கிற முதலாவது இனத்திலும், தவம், யோகம், ஞானம், இவைகளை மறுமைக்குரியது என்கிற இரண்டாவது இனத்திலும் சேர்க்க வேண்டும். இம்முன்னேற்றங்கள் எல்லாச் சமயங்களுக்குள்ளும் ஒரே தன்மையா யிருப்பின், வேற்றுமைகளுக்கு வழியேயில்லை. ஆனால், உருவங் களுள் வேற்றுமை காணப்படுவதுபோலச் சமுதாய விஷயங்களிலும் வேற்றுமை காணப்படுகின்றது. மேற்கூறிய வேற்றுமைகளால்தான் மத வேற்றுமைகளும் உண்டாயின.

சமயங்களின் காலம்

இந்து சமயம் உற்பத்தியாகி இன்றைக்கு நூற்றுத் தொண்ணூற்றாறு கோடியே எட்டு லட்சத்து அய்ம்பத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்தெழுபத்தாறு (196,08,52,976) ஆண்டுகள் ஆகின்றனவென்று, ஆரிய சமாசத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி கணக்கிட்டுக் கூறுகிறார். அதற்கு அவர் ஏழு மனுக்களையும் அவர்களின் அரசாட்சிக் காலத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வளவு காலப் பழக்கமுள்ள இந்தச் சமயத்தைத் தங்கள் சமயமென ஒத்துக் கொள்வோரின் தொகை இருபத்தொன்றரைக் கோடியாகும். முகம்மதிய மதம் எற்பட்டு 1372 ஆண்டுகளாகின்றன. முகம்மதியர்களின் தொகை முப்பத்துமூன்று கோடியாகும். கிறிஸ்து மதம் உண்டாகி 1956 ஆண்டுகளாகின்றன. கிறிஸ்தவர்களின் தொகையோ அய்ம்பது கோடியாகும். 2498 ஆண்டாகப் புத்தரையும், திரிபீடக நூலையும் நம்புகின்றவர்கள் அறுபதுகோடி மக்கள் இருக்கிறார்கள்.

இனி இருபத்தொன்றரைக் கோடி இந்துக்களுள் ஒன்றரைக்கோடி மக்கள் பார்ப்பனர்களாவார்கள், ஏனையோர் பார்ப்பனரல்லாதவர்கள். இந்தக் கணக்குப்படி பார்ப்பனரல்லாதவர்களுள் பதினெட்டுப் பேர்களுக்கு ஒரு பார்ப்பனப் புரோகிதன் ஆகின்றான் என்று கணக்கிடலாமன்றோ? மேற்கூறிய ஒன்றரைக் கோடி பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதாரின் இனத்திலிருந்து ஒவ்வொரு காலங்களில் பார்ப்பனர் களாக மாற்றப்பெற்றவர்களும், தாங்களாகவே மாறினவர்களுமாவார்கள். குமாரில பட்டர், சங்கராச்சாரியார், இராமாநுசர், மத்துவர் முதலிய மதாச்சாரியார்கள் அநேக தடவைகள் சூத்திரர்களைப் பார்ப்பனராக்கியதாகச் சங்கர திக்விஜயம் முதலிய நூல்களாலும் தேச சரித்திரங்களாலும் அறியக் கிடக்கின்றது. உண்மையில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களல்லரென்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு, இவர்களையும் இந்துக்க ளென்றும் கூறி ஏமாற்றிய தாகவும் கொள்ளவேண்டும். இப்படிக்கிருந்தால், உண்மை இந்துக்கள் (ஒன்றரைக் கோடி) எவ்வளவு குறைவு என்பதைக் காரணத்துடன் ஆராய்வோம்.

இந்துக்கள் தவிர, மற்ற எல்லா மதத்தினருக்கும் தங்களுக்கெனச் சொந்தமான ஒரு மதத்தலைவரும், அத்தலைவரால் பரம்பரையாக வெளியிடப்பட்ட மதக் கொள்கைகளும், இவைகளடங்கிய மத நூலும் அம்மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் பொதுவாக உண்டு. விளக்கமாகக் கூறுங்கால், முகம்மதியர் களுக்கு முகம்மதுநபி என்ற சமயத் தலைவரும், குரான் என்ற மத நூலும் அம்மதத்தில் பொதுவாக இருக்கின்றன. இவர்களுள் ஒவ்வொரு ஆண் மகனும், பெண்களும் தங்கள் குருவையும் மத நூலையும் மதத் கொள்கைகளையும் முறையே அன்புடன் வணங்கியும், போற்றியும் வருகிறார்கள். புத்த சமயிகளுக்குப் புத்தர் என்னும் மதத்தலைவரும், திரிபீடகம் என்னும் மத நூலும் இருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறே கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்து என்னும் மதத் தலைவரும் பைபிள் என்னும் மத நூலும் இருக்கின்றது. இந்துக்கள் நீங்கலாக மற்ற சமயத்தினரும் ஆண், பெண் வேற்றுமையின்றி ஒவ்வொருவருக்கும் தங்கள் மத நூல்கள் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றனவோ, அந்தந்த மொழியிலேயே அதைப் படிக்கவும், அதில் சொன்னபடி ஒழுகவும் அதிகாரமுண்டு. இதில் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை காட்டப்படுவதேயில்லை. இவ்விதம் சமய நூற்களைக் கற்று, அதன்படி ஒழுகாத ஒருவனை நிந்திக்கவும் செய்கிறார்கள்.

******************************************************************************

ஞானசூரியன்

தொடர்-3

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.)

ஒரு முகம்மதியன் தோட்டி வேலை செய்பவனா யிருந்தாலும், தான் முகம்மது மதத்தினன் என்கின்ற உரிமையால், மவுல்வி (மதபோதகன்) ஆக வேண்டு மென்றாலும் ஆகலாம். பணம் திரட்டிப் பெரிய பிரபு (சாயபு) ஆக வேண்டுமென்றாலும் ஆகலாம். துறவியாக வேண்டுமென்றாலும் ஆகலாம். தேவாலயம், பாடசாலை முதலிய இடங்களிலும் இவனைக் குறித்து யாதொரு வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இவ்விதமே புத்த சமயிகளுக்குள்ளும், கிறித்துவர்களுக்குள்ளும் எல்லோருக்கும் சமமான உரிமை இருப்பதை நன்கு உணர்தல் வேண்டும்.

இந்துக்களின் நிலைமையோ இவைகளினின்றும் எவ்வளவோ வேற்றுமை உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்து மதத்தினுடைய சாதிக்கோட்டையானது சமாதான காலங்களில் நல்லெண்ணத்துடன் பிரவேசிக்கின்ற நண்பனையும் பிரவேசிக்கவொட்டாமல் தடுக்கின்றது. முன் கூறப்பட்ட முகம்மதியர் முதலிய சமயத்தாரின் சமுதாயப் பெயர், அந்தந்தச் சமயத் தலைவனது திருநாமத்தைத் தலையில் சூடிக் கொண்டு விளங்குகின்றது. இந்துவென்னும் பொதுப்பெயரை, அதன் உண்மையை உணராமலேயே அதனை அநேகர் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து என்றும், இந்தியர் என்றும் வழங்கிவரும் சொற்கள் நமது நாட்டிலிருந்து வழங்கிவரும் எந்த மொழியினின்றும் தோன்றினவல்ல. மற்ற வேற்று நாட்டாரால் நமக்கு அப்பெயர்கள் அளிக்கப்பெற்றன. இவற்றை நமக்குத் தந்தவர்கள பாரசீகர்கள். அவர்களின் மொழியில் இப்பதங்களுக்கு நாகரிகத்தன்மை இல்லாத வர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருடர்கள் என்பன முதலிய பல இழிந்த பொருள்கள் காணப்பெறலாம். இப்பெயரை நாம் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுறுகின்றோம். இதில் வியப்பிற்கு இடமில்லை. ஏனென்றால், முதலில் நமது நாட்டில் புகுந்து ஆரியர்களால் அளிக்கப்பெற்ற 1தஸ்யூ (கொள்ளைக்காரன்), தாசன் (அடிமை), சூத்திரன் (திருடன்) முதலிய இழிவான பெயர்களை இங்குள்ள பழைய குடிகளின் கால்வழிகளாகிய நாம் இன்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஒருவனை வஞ்சித்த

1. தஸ்யூ - தாசன், சூத்திரன் என்னும் பெயர்களை வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் பலவிடங்களிலும் பார்க்கலாம்.

நம்மை மற்றொருவன் வஞ்சிக்கும்போது துக்கப்படுவது தகுதியன்று. இம்மதத்தில் (இந்து) இருக்கிற பலதிறப்பட்ட கொள்கைகளும் பெரும்பாலும் வெளிப்படை யாகையால், ஈண்டு விவரித்துக் கூறவில்லை. ஆனாலும், இந்துக்கள் எனப்படுவோரில் சிலர் தவிர, ஏனையோருக்கு இந்து மதத்தின் உருவம் இன்னது, அதை உணர்த்தவல்ல நூற்கள் இன்னின்னவை; அந்நூற்களால் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறிவு சற்றேனு மில்லை. சனாதன தர்மம் (மிகப் பழைய தர்மம்) வருணாச்சிரம தர்மம் என்பன முதலிய சில பெயர்களும் இதற்குக் கொடுத்துத் தூயதாகக் கருதுகிறார்கள். ஆயினும், பெயருக்குத் தக்க பொருளைத் தருவதாக இல்லை. நாம் விரும்புகிற பொருள் மற்றொருவனிடம் இருக்கிறவரையில் நாம் அதை வைத்திருப்பவனுக்கு அடிமையாவோம். பணக்காரனது வாசலில் காத்துநிற்கிற பிச்சைக்காரனையும், தான் காதலித்த கட்டழகியின் ஏவற்படிக்குப் பாவைபோல் கூத்தாடுகிற காதலனையும் இவ்வடிமைத் தொழில் நிலைக்கச் செய்தது. இவ்விருவராலும் விரும்பப்படுகிற செல்வத்திற்கும், அழகுக்கும் முறையே பிரபுவும் பெண்ணும் உடையவர்களா யிருப்பதேயாம்.

அவ்வாறே நமது உள்ளத்தில் இருந்துகொண்டே நம்மை அடிமை யாக்குவது இந்த ஆசைதான். இதற்குரிய பொருளை அடைந்தவுடன், அதன் கண்ணிருந்த மேலான எண்ணமும், அத்துடன் அதைக் குறித்த ஆசையும் போய்விடுகின்றன.

இதனால்தான் அஸ்வாதீனேகாம (விரும்பிய பொருள் வசப்படாத வரையில் ஆசை) என்று பெரியோர்கள் மொழிந்தார்கள். பயனற்ற பொருளைக் குறித்துச் சிலர் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு, அத்தகைய பொருள்களிடத்தும் ஒவ்வொரு வேளை விருப்பம் வைப்பதுண்டு. இது ஆராய்ச்சி செய்யாமை யினாலேயே நிகழ்வது.

எல்லா மனிதர்களுடைய மனமும் 1ஞானவிழுப்பத்திற்கு அடிமையாய் இருக்கிறது. இது சாஸ்திரங்களுக்குள் இருக்கிறதென்றும், சாஸ்திரங்கள் ஞான ரத்தினக் களஞ்சியங்கள் என்றும் பெரும்பான்மையாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் ஒன்றுக்கும் உதவாத தாயினும், ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் விரும்புகிற பொருளைச் சேமித்து வைத்திருக்கிற களஞ்சியம் இதுவே; மோட்சம் இதற்குள்

1. ஞானத்தில் பிறவித்துன்பம் அடியோடு தொலைந்து பேரின்ப சித்தப் பெருவழியை நல்குவதாக இருத்தலிலென்க.

அடங்கியிருக்கிறது என்றிவ்வாறு புகழ்ந்து கூறி மக்களை நம்பச்செய்தும், அந்தச் சுவடி பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியதாகவும் இருந்தால், அந்தச் சுவடியும் மொழியும் எவன் வசம் இருக்கிறதோ, அவனுக்கு மனிதர்கள் அடிமையாவது திண்ணமே. பொருளாக விருந்தால் கொள்ளையடித்தோ மற்றெவ்விதமாகவோ கைப்பற்றி விடுவார்கள். கல்வியானது அதையுடைவன் விரும்பிக் கொடுக்காதவரையில் எங்ஙனம் அடைய முடியும்? உண்மையாக அந்தச் சுவடியில் பொதுமக்களுக்கு நல்ல பயனைக் கொடாததும், தீய ஒழுக்கங்களைப் பழக்குவதும், தீய வழியில் செலுத்துவதுமான கொள்கைகள் நிறைந் திருந்தாலும், எல்லோராலும் விரும்பத்தக்கது. இது ஒன்றேயென்று புகழ்ந்து கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காலம் வரையில், அதை வைத்துக் கொண்டிருப்பவன் கழுதைக்குச் சமனாக இருந்தாலும், அவனை எல்லோரும் வணங்குவார்கள்.

இவ்வாறே தீய எண்ணங்களையுடைய பார்ப்பனர்கள், வேதம் எல்லா விருப்பங்களையும் தரவல்லது எனக் கூறிக்கொண்டு, அது யாருக்கும் பயன்படாத மொழியிலிருப்பதால், அதனைப் புகழ்ந்துகூறிக் காப்பாற்றி வருவதோடு, நம்மவர்களைக் குறித்து,

பத்யுஹ்வா ஏதத்ஸ்மசானம்

சூத்ரஸ் தஸ்மாத் சூத்ரஸமீபேநாத்யேதய்வம்

அதாஸ்ய வேதமுபஸ்வருண்வதஸ்த்ர

புஜதுப்யாம்ஸ் ரோத்ரபூரணம்

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விட வேண்டும்.

சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையாதால், அவன் பக்கத்தில் வேதமோதக் கூடாது.

வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத

வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.

1. பார்ப்பனர்கள் தங்கள் இனத்தாரைத் தவிர, மற்ற யாவரையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதி முதலிய நூற்களும் அவர்களுடைய கூற்றுக்கு அனுகூலமாகவே இருக்கின்றன.

இவ்வாறு நல்லோர்கள் காதினால் கேட்கவும் பெறாத அநேகக் கொடிய விதிகளை ஏற்படுத்தி, இந்த விதிகளும் வேதத்திலுள்ளது; வேதம் கடவுளால் பிராமணர்களாகிய எங்களுக்குச் சொந்தமாகத் தரப்பெற்றது என்று வாய்ப்பறை சாற்றித் திரிவதோடு, தங்களது மோசவலையில் சிலரைச் சிக்கவைத்து அவர்கள் மூலமாகவும், சில இடங்களில் (தங்களுக்குச் சமூக பலமுள்ள இடங்களில்) தாங்களாகவும் தங்களுக்குக் கீழ்ப்படியா நம்மவர்களைப் படுத்திய பாடு இவ்வளவெனச் சொல்லத்தரமன்று. மகாமேதாவிகளாகிய சிலரும் உயிருக்காகப் பயந்தோ, மற்றெதனாலோ, நான் பிராமண தாசன் என்று சொல்லியிருப்பது போஜசம்பு முதலிய நூற்களால் காணக்கிடக்கின்றது. மகாகவியும் பெரிய வள்ளலுமான போஜராஜர் பிராமணர்களைப் புகழ்ந்து கூறியிருப்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாகக் கூறுகிறேன். எத்தகைய பெரியாரையும் ஏமாற்றும்படியான இந்திரஜால வித்தையைக் கற்ற பார்ப்பனர்களின் மோசக் கருத்து, எவ்வளவு தூரம் பலனைக் கொடுத்து வருகிறதென்பது எல்லோருக்கும் அனுபவமானதால், அதிகம் சொல்லத் தேவையில்லை. இக்காலத்தில் இந்து என்று வெட்கமின்றித் தங்களைக் குறித்துச் சொல்லித் திரிகின்ற பலரும் இம்மோசவலைக்குள் அகப்பட்டவர்களே.

ஆனால், மோசம் பண்ணுவதற்குக் காலம் எப்பொழுது வாய்க்குமோ? பட்டப்பகலில் பலர் சேர்ந்திருக்கும்போது களவாடுவது கடினமன்றோ? அதைப்போலவே பார்ப்பனர் களுக்கும் தங்களது ஜாலம் பலிக்கிற காலம் மலை யேறிவிட்டது.0 comments: