Search This Blog

13.11.10

ஆரியர் - திராவிடர் என்பது பெரியாரால் உருவாக்கப்பட்டதா?


கல்கிக்கு வந்த எரிச்சல் (1)

கேள்வி: நாளை நமது ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, பார்ப்பனீயத்தைப் பாதுகாக்கும் ஆட்சி ஏற்படுமானால் என்ன ஆகும்? என்று முதல்வர் தரம் தாழ்ந்து கேட்டிருக்கிறாரே!

பதில்: இனவுணர்வு அரசியல் என்ற பழைய பெருங்காய டப்பாவை மீண்டும் மீண்டும் தட்டிப் பார்க்கிறார் கலைஞர். அங்கே ஒன்றும் இல்லை என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை.

------------------------(கல்கி, 14.11.2010, பக்கம் 5)

இப்படி சொல்கிற கல்கிக்கு இனவுணர்வே கிடையாதா? கல்கி அலுவலகத்திலும், இந்து அலுவலகத்திலும், டி.வி.எஸ். நிருவாகத்திலும் நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை மடங்கு அதிக சதவிகிதத்தில் பணியாற்றுகிறார்கள் என்ற கேள்விக்கு நாணயமான முறையில் கல்கி பதில் சொல்லுமா?

முதலமைச்சராகவிருந்த ஓமாந்தூர் இராமசாமி அவர்களை தாடி இல்லாத ராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனர்கள் ஏன் கூறினார்கள்? பார்ப்பனர் அல்லாதாருக்கும் வேலை வாய்ப்பில் கொஞ்சம் கருணை காட்டினார் என்பதால்தானே? காந்தியார்வரை சென்று புகார் செய்தது யார்? பார்ப்பனர்கள்தானே! காந்தியாரிடம் சென்று புள்ளி விவரங்களோடு ஓமாந்தூரார் விளக்கியபோதுதான் காந்தியாருக்கே பார்ப்பன விஷமம் - வல்லாண்மை என்னவென்று தெரிந்தது. உண்மையைத் தெரிந்துகொண்ட காந்தியார் பார்ப்பனர்களைப் பார்த்து, பிராமணர்களாகிய நீங்கள் ஏன் பிணம் அறுக்கும் டாக்டர்களாக ஆகவேண்டும்? வேதம் படிக்கவேண்டியதுதானே? என்று கேட்டாரா - இல்லையா? காந்தியாரைச் சந்தித்தபின், தம்மைப்பற்றிப் புகார் கூறி எழுதிவரும் இந்து ஆசிரியரை அழைத்து, உங்கள் அலுவலகத்தில் எத்தனைப் பேர் பார்ப்பனர் அல்லாதார் பணியாற்றுகின்றனர்? என்று கேட்டபோது விழி பிதுங்க வில்லையா? இந்த யோக்கியதை உள்ள கூட்டம்தான் உண்மையைச் சொன்னால் இன உணர்வு என்பது பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் என்று சொல்கிறது. இந்தப் பிரச்சினை வெடித்தால் தங்கள் இனத்துக்கு ஆபத்து என்ற உணர்வில் துடிக்கிறது.

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் அல்லது ஆரியர் - திராவிடர் என்பது ஏதோ தந்தை பெரியாராலும், திராவிட இயக்கத்தாலும் கற்பனையாக உருவாக்கப்பட்டது என்பதுபோல எழுதுகிறார்களே, இது உண்மையா?

பார்ப்பனர்களுடைய வேதங்களும், மனுதர்மங்களும் பிராமணர் - சூத்திரர்பற்றிப் பேசவில்லையா? ஒரு குலத்துக் கொரு நீதி என்பதுதான் தர்மம் என்று கூறவில்லையா? 1967 ஆம் ஆண்டு தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடச் சொன்னதன் பொருள் என்ன? ஏன் பிராமணர்களுக்குத் தனி வேண்டு கோள் விடுத்தார்? பூணூல் என்று ஏன் குறிப்பிட்டுச் சொன்னார்? தேர்தல் முடிந்து தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க. பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் (இப்பொழுது கல்கி பயன்படுத்திய அதே உதாரணத்தை) அதனைத் துடைத்து எடுத்துவிட்டேன் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) இதே கல்கியில் எழுதினாரோ - அப்பொழுது தந்தை பெரியார் என்ன கூறினார்? நான் கண் ஜாடை காட்டினால் அவர்கள் என்னிடம்தான் வருவார்கள் என்று சொல்லவில்லையா? அதேபோல் நடந்ததா - இல்லையா? 1971 பொதுத் தேர்தலில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று வெளிப்படையாகத் தேர்தல் பிரச்சாரம் நடக்கவில்லையா? அதன் காரணமாக தி.மு.க. அமோக வெற்றி பெற்றதே - கல்கி மறந்துவிட்டதா? இந்தத் தேர்தலில் (1971) என்ன சிறப்பு அம்சம் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? முன்பு தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் துவங்கினார். இந்தத் தேர்தலில் ராஜாஜி அதனைத் துவக்கியுள்ளார் என்று பதில் கூறினாரே (3.3.1971) - அதன் பொருள் என்ன? திருவொற்றியூரில் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் பேசினாரே (18.9.1953) தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்றாரே இதற்கு என்ன வியாக்கியானம்? ஆச்சாரியார் சொன்னதைத்தானே தந்தை பெரியார் வேறு சொற்களில் சொன்னார்? இன்றைய அரசியல் போராட்டம் என்பதே கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள்தான் அடிப்படை லட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்வதற்குக்கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான் (விடுதலை, 22.5.1971) என்றாரே தந்தை பெரியார். ஆச்சாரியாரே ஒப்புக்கொண்ட இந்த இனப் போராட்டத்தைத்தான் கலைஞர் உண்மையைச் சொல்லும்போது கல்கிகளுக்கு ஏன் உள்ளங்கால் முதல் உச்சிக்குடுமிவரை எரிச்சல்? இவ்வளவு எழுதுகிறதே கல்கி - அவாள் வீட்டில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுவதில்லையா? பூணூல் புதுப்பிப்பு நடைபெறுவதில்லையா? சட்டமன்றத்தில் நான் பாப்பாத்திதான் என்று ஜெயலலிதா சொன்னபோது கல்கி இதே பாணியில் எழுதாதது ஏன்? அதுவும் பார்ப்பனப் புத்திதானே? கலைஞர் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் மீண்டும் 1971 நடக்கும் என்ற உதறல்தான் கல்கிகளை இப்படி எழுதச் சொல்கிறது.

தமிழர்களே உஷார்! உஷார்!!

------------------ "விடுதலை” தலையங்கம் 12-11-2010


கல்கிக்கு வந்த எரிச்சல் (2)

கல்கி இதழ் கூறுவதுபோல் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்பது பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் என்பது உண்மையானால், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று கொண்டு இருப்பதேன்? பிராமணர் சங்கம் வைத்துக்கொண்டு இருப்பது ஏன்? அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் என்று நூல்களை எழுதுவானேன்? அதனை சங்கராச்சாரியார் (ஜெயேந்திர சரஸ்வதி) வெளியிடுவானேன்? கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று அந்த நிகழ்ச்சியில் ஜெயேந்திர சரஸ்வதி பேசினாரே - கல்கி கண்டித்ததுண்டா? காஞ்சி மடம் ஏற்பாடு செய்துள்ள டிரஸ்டுகள் எல்லாம் பார்ப்பனர்களுக்காக மட்டுமே என்று வைக்கப்பட்டுள்ளதே - காஞ்சி மடம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி விடுதி நடத்துவது ஏன்? பார்ப்பனர்களுக்கு வேதங்களும், மற்றவர்களுக்குப் புராணங்களும் சொல்லிக் கொடுக்கப்படும் என்று காஞ்சி மடம் விளம்பரம் செய்வது எந்த அடிப்படையில்? காந்தியார் நேரில் கேட்டுக்கொண்டும் - தீண்டாமை க்ஷேமகரமானது என்றும், அனுஷ்டிக்கப்படத்தான் வேண்டும் என்று மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூற வில்லையா? பிராமணன் ஸ்தூலமாக பிராமணரல்லாதாரோடு ரொம்பவும் ஒட்டி வாழ்ந்தால், அவனிடையே உட்கார்ந்து கொண்டு இன்னும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசி பார்ப்போமே என்று சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் அவனை இழுத்துக்கொண்டு போய் கடைசியில் இவன் தர்மத்துக்கு ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும் என்று எழுதியவர்தானே அந்தச் சங்கராச்சாரியார்? (தெய்வத்தின் குரல், பாகம் 2, பக்கம் 600). இப்படிச் சொல்லுவது தெய்வத்தின் குரலாம் - இப்படிப்பட்டவர்களைத் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் கல்கிகள் கலைஞர் கூறிவிட்டாராம் - பார்ப்பனீயத்தைப்பற்றி, அடேயப்பா எப்படி நையாண்டி மேளம் அடிக்கிறது! லாலா லஜபதி ஒருமுறை மிக நன்றாகவே அழுத்தம் திருத்தமாகவே சொன்னார்: தென்னாட்டுப் பார்ப்பனர்கள் எப்பொழுதும் துவேஷம் உடையவர்களாகவே இருந்து கொண்டு, அடுத்தவர்களைப் பார்த்து துவேஷிகள் துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று சொன்னாரே, அது ஆயிரம் டாலர் பெறுமே!

வெகுதூரம் போவானேன், இந்தக் கல்கியின் வரலாறு என்ன?
காமராசரை இழிவுபடுத்தி, ராஜாஜியைத் தூக்கிப் பிடித்து எப்படி எப்படியெல்லாம் இதே கல்கி கார்ட்டூன் போட்டது. பெரிய பதவி சின்னப்புத்தி என்று காமராசரைக் கரித்துக் கொட்டவில்லையா? குயில் முட்டையிட்டு காகம் அடைகாப்பதுபோல திராவிடர் கழகத்தின் கொள்கை என்னும் முட்டையை காமராசர் அடைகாக்கிறார் என்று கல்கி கார்ட்டூன் போட்டது எந்த அர்த்தத்தில்? இந்தியாவிலேயே ஒரு கறுப்புக் காக்கை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனைக் கல்லால் அடிக்கவேண்டும் என்று ராஜாஜி சொன்னது யாரை? காக்கை என்றாலே கறுப்பு தான்; அப்படி இருக்கும்போது கறுப்புக் காக்கை என்று காமராசரை அழுத்திச் சொல்வானேன்? அதன் உள்ளீடு என்ன?

லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக வந்தபோது ராஜாஜி சுயராஜ்யா ஏட்டில் (1.2.1964) என்ன எழுதினார்?

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் சாஸ்திரி என்ற பட்டப் பெயர் அவருடைய ஜாதியைக் குறிக்கும் சொல்லாகவோ, குடும்பப் பெய ராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதை யும், காசி வித்யா பீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதால் பெறப்பட்ட பட்டப் படிப்புப் பட்டமே என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்யவேண்டியது அவசியமாகிறது. அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார் என்று ராஜாஜி எழுதினாரே, எதற்காக? பார்ப்பன சாஸ்திரியல்ல லால்பகதூர் என்று தெரியப்படுத்தத்தானே இந்த அறிக்கை?

1938 இல் இதே ஆச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக வந்தபோது விசுவகர்மா எனப்படுபவர்கள் ஆச்சாரி என்று போடக்கூடாது - ஆசாரி என்றுதான் பெயருக்குப் பின் போடவேண்டும் என்று ஆணை பிறப்பித்ததன் உள்நோக்கம் என்ன?

கடைசியாக ஒன்று - சென்னை சட்டப் பேரவையில் நடைபெற்றதுதான். ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கல்வி அமைச்சராக அவினாசிலிங்கம் இருந்தார். அப்பொழுது ராகவய்யா என்ற உறுப்பினர் கேள்வி ஒன்றைக் கேட்டார்: பிராமணர், பிராமணர் அல்லாதார் வேற்றுமையை சர்க்கார் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்பது கேள்வி. அதற்குக் கல்வி அமைச்சர் சொன்ன பதில்: பிறப்புமுதல் இறப்புவரை இவ்வேற்றுமை இருக்கும் வரை அவற்றை சர்க்கார் எப்படி அங்கீகரிக்காமல் இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாரே! (சட்டமன்ற நடவடிக்கை 21.4.1948).

அவினாசிலிங்கனார் என்ன திராவிடர் கழகத்துக்காரரா?

ஒரு காங்கிரஸ்காரரே இப்படி சட்டமன்றத்தில் பேசி இருக்கும்போது, திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வு குறித்துப் பேசியதில் என்ன குற்றம்? கல்கியார் பதில் கூறுவாரா?

--------------------------- "விடுதலை” தலையங்கம் 12-11-2010

0 comments: