Search This Blog

10.11.10

கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்களைக் கண்டிப்பீர்களா?

இந்து யார் என்று தெரியவில்லை


12.10.1939 அன்று நடைபெற்ற காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் இருபத் திரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் தலைமை வகித்த திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் நிகழ்த்திய முகவுரைப் பிரசங்கத்தின் சுருக்கம் வருமாறு:

ஹிந்து மதத்தைப்பற்றிச் சிந்திக்கும் பொழுது ஒரு சமயம் கவலையும், இன்னொரு சமயம் பெரும் ஏமாற்றமும் ஏற்படுகின்றன. புராதன காலமாக இது நம்நாட்டில் கைக்கொள்ளப்பட்டு வரும் கொள்கையா? அல்லது ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டிருப்பதுதான் ஹிந்து மதமா? பிரசங்கிகளிடம் கேட்கின்றோமே அதுதான் மதமா? அல்லது அது ஒரு வெறும் சடங்குச் சட்டந்தானா? எது ஹிந்துமதம்? ஒன்றுமே புரிவதில்லை.

ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் யாருக்குமே புரியவில்லை என்று சொல்லிவிடலாம். ஹிந்து என்ற பதம் நம் நாட்டைச் சேர்ந்ததல்ல. அந்நியர்களால் நாமகரணமிடப்பட்டது. சனாதனம் -_ புராதனமான வார்த்தை. ஆனால், அதன் பெயரால் நடக்கும் சம்பவங்களைக் கவனித்தால் அதுவும் ஹிந்து மதமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அந்த வார்த்தைக்கு அழியாதது என்று பொருள். அது சிந்து நதிக்கரைக்குக் கிழக்கேயுள்ள ஜனங்களின் கொள்கை. முஸ்லிம்கள் முகமது நபியைக் கொண்டாடியே தீர வேண்டும். கொள்கையை விட்டுத் தவறினால் தண்டனை கிடைக்கும். கிறிஸ்தவர்களும் அப்படியே.

பாதிரியார் ஜாப்சாவில் பதிந்து கொள்ள வேண்டும். மதம் மாறினாலும் பதிந்து கொள்ள வேண்டியதுதான். பவுத்த மதத்தினரும், சந்யாசிகள் சட்டத்திற்கு அடங்கியேயிருக்க வேண்டும். ஹிந்து யார் என்று தெரியவில்லை. தெய்வமில்லையென்று கூறும் நாஸ்திகனும் ஹிந்துதான். அதற்கு ஆட்சே பனையில்லை. உபநிஷத்துகளில் ஒரு தர்சனம் நாஸ்திக மதத்தையே போதிக்கிறது. விக்ரகத்தை வணங்குபவனும் ஹிந்துதான்! அதை உடைப்பவனும் ஹிந்துதான்! ஆதி காலத்தில் மக்களுக்குக் கோவிலேது? நாடும், மதமும் இருக்கிற நிலையில் யார் ஹிந்து என்று சொல்ல முடியாது. மற்ற மதங்களுக்கும் இதற்குமுள்ள வித்தியாசம் இதுதான். யார் யார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று வரை யறுத்துச் சொல்ல முடியாது; ஆனால் மற்ற மதங்களுக் கெல்லாம் அப்படிச் சொல்ல முடியும்.

ஆனால், இப்படி வரம்பின்றிப் போய் விட்டதால், சமுகத்தில் பற்பல கொள்கைகளுக்கேற்றவாறு பல்வகைப் பிரிவினைகள் ஏற்பட்டு, அவற்றிற்கேற்ற சட்ட திட்டங் களையும், பழக்க வழக்கங்களையும் வகுத்து, ஒற்றுமையின்மையை உண்டு பண்ணிவிட்டார்கள். இது அடிப்படையான ஆபத்தாக முடிந்தது. கணக்கற்ற உபதேசகர்கள் ஏற்பட்டார்கள். யார் எதைச் சொன்னாலும் அதைப் பின்பற்ற ஒரு கூட்டம் ஏற்பட்டது. அதைக் காப்பாற்றச் சட்ட திட்டங்கள் ஏற்பட்டன. சாதாரணப் பிரிவினைகள் அதாவது ஒரு சமயத்துக்குள்ளேயே ஏற்பட்டுள்ள பிரிவினைகளின் வித்தியாசத்தைப் பார்த்தால் வெறும் ஆச்சார அனுஷ்டானத்தில் மட்டுமே வித்தியாசமிருக்கக் காண்கின்றோம்.

உதாரணமாக வடகலை தென் கலைகளை எடுத்துக் கொண்டால் நாமம் போடுவதிலுள்ள சிறு வித்தியாசத்துடன் சாப்பிடும் முறையிலும் வித்தியாசம் புகுத்தப்பட்டிருக்கிறது. வடகலையார் வெறும் இலையில், முதலில் சாதத்தைப் பரிமாறி விட்டுப் பிறகுதான் கறி முதலியவைகளைப் பரிமாறுவார்கள். ஆனால் தென் கலையாரோ முதலில் கறி முதலியவற்றைப் பரிமாறி விட்டுத்தான் சாதம் பரிமாறுவார்கள். இந்த மாதிரி வேறுபாடான அனுஷ்டானங்கள் நன்மையிலும், தீமையிலும் புகுத்தப்பட்டுப் பிரிவினை உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இந்த மாதிரிப் பிரிவினைகளிருக்கும்போது, நாம் ஒத்து வாழவே யோக்யதையில்லாதவர்கள் என்று கூறி விடலாம்.

------------------ ”திராவிடநாடு” 21.6.1945 இதழில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

****************************************

முரண்பாட்டின் மொத்த உருவம்

ஹிந்து மதம் ஹிந்து மதம் என்று கதைக்கிறார்களே _ அதற்கென்று ஒரு வரையறை உண்டா? வகுக்கப்பட்ட கொள்கை உண்டா? இதோ இண்டர் நேஷனல் என்சைக்ளோபீடியா ஆப் சோஷியல் சயின்ஸ் (தொகுதி 6, பக்கம் 358) என்ற நூல் இந்து மதத்தின் தன்மைபற்றி விளக்கம் அளிக்கிறது.

இஸ்லாம், கிறிஸ்தவம்போல ஹிந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்குச் சரித்திர ரீதியில் ஒரு அமைப்பாளரும் கிடையாது. ஒன்றல்ல பல கடவுள்களைக் கொண்டது. ஹிந்துவாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. இம் மதத்தில் முரண்பாடுகள் செழித்து மலர்ந்து கிடக்கின்றன. எல்லா ஹிந்துகளுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ, அமைப்புகளோ ஒன்றும் கிடையாது. ஹிந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் ஏதாவது ஒரு ஹிந்துக் கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.


******************************

இந்துவின் யோக்கியதை என்ன?

இந்துமதத்தின் யோக்கியதை என்ன? அந்த மதத்தைக் கடைப்பிடிக்கும் இந்து சமுகத்தின் யோக்கியதை என்ன? சங்கராச்சாரியார்கள் செய்யும் கைங்கரியங்கள் என்னென்ன என்று இந்து சனாதன ஆஷாடபூதிகளின் முகமூடியைக் கிழித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன்

சுபாயுதாஸ் குப்தா என்ற வங்காளி இளைஞர் எழுதியுள்ள இந்து சமுகப் பண்பும் மாறுதல் யுகத்தின் சவாலும் என்ற நூல் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் அதன் ஆசிரியர் பிராங்க் மோரேஸ் எழுதிய விமர்சனக் கட்டுரை பற்றியும் அதற்கு மத்திய அமைச்சர் கரன்சிங் கூறிய பதில் பற்றியும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சந்தேகம் இல்லை

சுபாயுதாஸ் குப்தா தமது நூலை சமர்ப்பணம் செய்யப் பொருத்தமானவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவன் நான். எனவே, அந்த நூல் பற்றி பிராங்க் மொரேஸ் எழுதிய விமர்சனம் பற்றியும், அதற்கு டாக்டர் கரண்சிங் கூறிய பதில் பற்றியும் நான் எனது கருத்துகளைக் கூற அனுமதிக்க வேண்டுகிறேன்.

அவரவர் முறையின்படி இருவர் கூறியதும் முற்றிலும் சரியானதே என்று நான் கூறுவது, அந்த இருவரில் யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது. இந்து மதத்தின் மனம் பிரம்மத்தைப் பற்றிய பரிசுத்தமான சிந்தனையில் அமைந்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இந்துவின் அடையாளம் எது?

ஆனால், காலஞ்சென்ற ராஜ தந்திரி, வரலாற்றாசிரியர் கே.எம். பணிக்கர் அவர்கள் கூறியிருப்பதுபோல இந்துமதத்தின் இதயம் தர்ம சாஸ்திரங்களிலேயே வெளிப்படுகிறது...

சமுகப் பண்பும் தத்துவமும் ஒரே பொருள் அல்ல. ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர், அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்க-லாம் ஆனால், அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவதில்லை.

முட்டுக்கட்டை போடுவது எது?

சாதியும், தீண்டாமையும் மட்டும் ஒரு இந்துவை இனம் காட்டுவன அல்ல. ஆனால், வழக்கங்கள், சடங்குகள், அனுஷ்டானங்கள் கற்களை, மரங்களை, மிருகங்களை நாம் வழிபடுவது கர்மகாண்டம் என்பது ஆகியவைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன படுபயங்கரமான சிக்கலாகக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத்தைப் பிணைத்து வைத்திருப்பது இறுக்கி வைத்திருப்பது. அத்துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொருளாதார முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பதும் இதுவே ஆகும்.

சங்கர மடங்களைப் பாருங்களேன்

மகாயான புத்த மதத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர்கள் ஆழங் குறைந்தவர்கள் அல்லர். என்றாலும், புத்தருக்கும், உபநிஷதங்களுக்குப் பின்னால் இந்தியாவில் உருவாகிய தத்துவ ஞானிகளில் சங்கரர்தான் மிகவும் ஆழமானவர் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளுவோம்.

ஆனால், இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்துபட்டுக் கிடக்கும் எண்ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின்றன? பச்சையான சுரண்டல் களங்களாக அல்லவா இருக்கின்றன?

சங்கராச்சாரியின் அவமானச் செயல்

இந்து மதத்தின் உச்சகட்ட உறைவிடங்களான சங்கர பீடங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக்கொண்டிருப்பவர்களில் குறைந்தபட்சம் ஒரு சங்கராச்சாரியாராவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன் மாதிரியாக விளங்கவில்லையா? இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டுகளுக்கு முன் அவமானத்துக்குள்ளாக்கிய பசுவதைத்தடைப் போராட்டத்துக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

திரைமறைவில் நாம் செய்வது என்ன?

நமது முன்னோர்களில் சிறப்பானவர்கள் சிலர் நிர்மாணித்த பிரம்மாண்டமான சிந்தனைக் கோட்டைகளின் பின்னால் மறைந்துகொள்ள இந்துக்களாகிய நாம் விரும்புபவர்கள், அந்தத் திரையின் பின்னாலிருந்தபடியே உப்நிஷத ரிஷிகளின் ஆன்மிக உள்ளாளியிலிருந்து லட்சோப லட்சம் மைல்களுக்கு அப்பாலுள்ள அனுஷ்டானங்களையும் சமய வடிவங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறவர்கள்.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தப் பழக்கம்நம் முதுகிலேயே நாம் தட்டி சபாஷ் போட்டுக் கொள்ளும் இந்தப்பழக்கம்தான் இன்றைய இந்து சமுகத்துக்கும் அறிவொளிக்கும் முன்-னேற்றத்துக்கும் இடையில் நிற்கிறது.

புதிய புத்தன் ஒருவன் நமக்குத் தேவை

நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்; நமது சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்: நம் சமுதாயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஓட்டைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதனைச் சுத்தப்படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக்கொள்ளுவோம்.

_ இவ்வாறு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
(விடுதலை 21.9.1972)



நான் இந்து அல்ல; தமிழனே!

பேராசிரியர் க. அன்பழகன் பிராமணருக்கு முன்னாலே அத்தனைபேரும் சூத்திரர்கள்தான். செட்டி நாட்டரசர் முத்தையா செட்டி யாரும் பிராமணருக்கு முன்னாலே சூத்திரர்தான். இங்கே ஏழையாக இருக்கிற வலையரும் பிராமணருக்கு முன்னாலே சூத்திரர்கள்தான். எங்களைப் போல அமைச்சர்களாக இருந்தவர்களும் சூத்திரர்கள்தான். ஆக எல்லோரும் சூத்திரர்கள்தான். நான் இதைச் சொல்கிறபோது பிராமணர்களைக் கண்டிப்பதற்குக்கூட அல்ல; நமக்குப் புத்திவரவேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

பிராமணரிடத்திலேயா நாம் கோபித்துக்கொள்வது? என்னுடைய முட்டாள்தனத்தை வைத்து நீ என்னை ஏமாற்றலாமா? என்று கோபித்துக் கொள் வதைப் போல நாம் முட்டாளாக இருந்தால் எவனும் நம்மை ஏமாற்றத்தான் செய்வான். ஆகவே நாம் யார் என்று கேட்டால், நாம் ஜாதி அடிப்படையை ஒத்துக் கொள்ளாத ஏற்றுக் கொள்ளாத வள்ளுவர் வழியிலே வந்த வடலூர் வள்ளலார் வழியிலே வந்த தமிழ்ப் பண்பாட்டு வழியிலே வந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேதான் இந்துக்கள் என்று சொல்வதிலேகூட எங்களுக்கு அக்கறை இல்லை.

இங்கே பேசிய நண்பர்கள் சொன்னார்கள். நம்முடைய முகவை ராமச்சந்திரன் பேசுகிறபோது சொன்னார். கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்களைக் கண்டிப்பீர்களா? இந்துவைத்தானே கண்டிக்கிறீர்கள் என்று வேறு ஒரு கட்சியிலே உள்ள ஒருவர் சொன்ன கருத்தை இங்கே எடுத்துச் சொன்னார்.

நான் இந்துவைக்கூடக் கண்டிக்க வில்லை. எங்களை இந்து என்று சொல்கிறான். இந்து என்று சொன்னால் இந்தப் படிக்கட்டுகளிலே ஏதாவது ஒரு படிக்கட்டிலே நின்றாக வேண்டும். நான் இந்து இல்லை என்று சொன்னால் படிக்கட்டிலே நிற்கவேண்டியதில்லை. இந்து என்று சொன்னால் நான் சூத்திரன். இந்து என்று சொன்னால் நான் பிராமணருடைய உயர்வை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்து என்று சொன்னால் நான் நால்வகை ஜாதிக்கும் ஆட்படவேண்டும். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்குகிற காரணத்தாலேதான் நான் தமிழனே தவிர இந்து அல்ல என்று சொல்லக் கடமைப்பட் டிருக்கிறேன்.

----------------------------- பேராசிரியர் க. அன்பழகன்
(பள்ளத்தூரில் "விடுதலை" 25.3.1982




0 comments: