Search This Blog

4.11.10

தன்மானமுள்ள தமிழனே தீபாவளியைக் கொண்டாடாதே!

தீவாளியா?

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
_ இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட் பவனை, ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும் நாள்,
மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்,
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீ என்று விடுவிரே!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

*********************************************

எது உண்மை தீபாவளியோ!

மேற்கு வங்காளத்தில் தீபாவளிக்கு புத்தாடை அணிவதில்லை. மகாநிஷர் என்ற பெயரில், காளிதேவியின் உக்கிரத்தை சங்கரனார் தணித்த நாள்தான் தீபாவளி.

கோவா மாநிலத்தில் புத்தாண்டுத் தொடக்கமே தீபாவளி

இமாசலப்பிரதேசத்தில் மாடு கன்றுகளைக் குளிப்பாட்டி பூஜை செய்வார்கள் -_ அதுதான் தீபாவளி

பீகாரில் பழைய பொருள்களை அப்புறப்படுத்துவார்கள். துடைப்பத்தைக் கொளுத்தி வீதியில் போடுவார்கள் _ அதுதான் தீபாவளி

குஜராத்தில் புதுக்கணக்குப் போடும் நாளே தீபாவளி

தீபாவளிக்கு மறுநாள் உளுந்துவடை தயாரித்து மாலை வேளையில் நாற்சந்தியில் எறிந்துவிட்டு திரும்பிப் பாராமல் வந்து விடுவார்கள் _ அதுதான் தீபாவளி.

ராஜஸ்தான் மாநிலத்தில் குபேரனை வழிபடுவார்கள் -_ அதுதான் தீபாவளி

ஒரிசாவில் மூதாதைகளின் ஆவிகளை அழைக்கும் நாள் அது. சணல் துண்டுகளைக் குவித்து பற்ற வைத்து தீயின்முன் அமர்ந்து ஒருமித்த குரலில் கூவி அழைத்து மந்திரங்களை உச்சாடனம் செய்வார்கள். _ அதுதான் தீபாவளி.

ராஜஸ்தானில் ராமன் வழிபாடே தீபாவளி. ஆந்திராவில் அதிகாலை முதல் உச்சிப் பொழுது வரை லட்சுமி பூஜையே தீபாவளி.

கருநாடகாவில் மாபலி சக்ரவர்த்தியின் நினைவாக பட்டாசு கொளுத்தி, புத்தாடை உடுத்திக் கொண்டாடுவதுதான் தீபாவளி.

இவையெல்லாமல் வேறு பல கதைகளும் உண்டு.

இராவணனை அழித்து சீதையை மீட்ட ராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி.

மாபலியின் தலையில் கால் வைத்து விஷ்ணு கொன்ற நாளே தீபாவளி என்பது இன்னொரு கதை.

லட்சுமி நாராயணன் திருமண நாளே தீபாவளி.

இப்படி கேள்வி கேட்க ஆள் இல்லாவிட்டால் ஆள் ஆளுக்குத் தோன்றிய முறையில் எல்லாம் தீபாவளி கொண்டாடத்தான் செய்வார்கள்.

தீபாவளி இந்துக்களின் பண்டிகை என்பது உண்மையென்றால் இந்தியா முழுமையும் உள்ள இந்துக்கள் ஒரே மாதிரியாகத்தானே கொண்டாட வேண்டும்

ஏன் அப்படி கொண்டாடவில்லை?

கள் குடித்த பைத்தியக்காரனுக்குத் தேள் கொட்டினால் எப்படியெல்லாம் உளறுவானோ அப்படியெல்லாம் இந்து மதப் பைத்தியக்காரர்கள் உளறி வைத்ததுதான் இந்தத் தீபாவளி.

அதே நேரத்தில் அசுரனை அழித்தான்.

அந்த நாள்தான் தீபாவளி என்று வரும் போது யார் அந்த அசுரன்? வரலாற்றில் அசுரன் என்று கூறப்படுபவர்கள் யார் என்ற வினாவைத் தொடுத்து ஆராயும்போது _ இது ஆரியர் -திராவிடர் போராட்டம் என்ற அச்சில் சுழலக் கூடியது என்று உணரும் நிலையில் தன்மானமுள்ள திராவிடனே தீபாவளியைக் கொண்டாடாதே என்று குரல் கொடுக்கிறோம்.

-------------------நன்றி : - “விடுதலை” அசுரன் மலர் 3-11-2010

*************************************************


தீபாவளிக் கதை வெறும் கற்பனையே

- வினோபா பாவே-

ஆச்சாரியா வினோபா பாவே, பழையக்கோட்டையில் நிருபர்களுக்களித்த பேட்டியில், நரகாசுரனைக் கிருஷ்ண பகவான் கொன்றதாகச் சொல்லப்படுவதெல்லாம் வெறும் புராணம் என்றும், அது வெறும் கற்பனையே என்றும் சொன்னார். தீபாவளிப் பண்டிகை என்பது அன்னியர்களின் பண்டிகை என்றும், அது திராவிடர்கள்மீது ஆரியர்கள் வெற்றி கொண்டதைக் குறிக்கும் பண்டிகை என்றும், அது தமிழர்களுக்குத் துக்கநாள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கூறுவதுபற்றி திரு. வினோபாபாவிடம் எடுத்துக்காட்டப்பட்டது.

புது விளக்கம்!

இதற்கு திரு.வினோபா இந்த விழா இருளைப் போக்கும் ஒளியைக் குறிப்பதாகும். தீபாவளி காலத்தில் மழை குறைகிறது. மக்கள் தாங்கள் உழைப்பின் பலனாகிய கனியை உண்டு மகிழும் பொருட்டே இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். மேலும், அமாவாசை தினத்தில்தான் வானம் தெளிவாக இருக்கும்.

நட்சத்திரங்கள் மிகவும் நன்றாக ஒளி வீசும். வீடுகளில் அன்று விளக்குகளை ஏற்றி வைத்து பெரியவர்கள் இளைஞர்களுக்கு நட்சத்திரங்களைப்பற்றியும், வான இயல் பற்றியும் கற்பிப்பார்கள் என்று சொல்லி, திரு.வினோபாவேயும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு நட்சத்திரங்களின் இயலை விளக்கிக் கூறினார்.

பக்தியாகாது!

மக்களிடமிருந்து மூட நம்பிக்கைகளை, தவறான கருத்துகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்னும் பெரியார் கருத்தை திரு. வினோபா ஒப்புக்கொண்டார். உண்மையிலேயே தானும் பெரியாரின் பாதையில்தான் செல்வதாகவும், விக்ரகங்களை வணங்குவது பக்தியாகி விடாது என்றும், பக்தி என்பது ஏழைகளுக்குப் பணியாற்றுவதுதான் என்றும் அவர் கூறினார்.

பெரியாரின் கடவுள் உருவ உடைப்புபற்றி குறிப்பிடுகையில், இது ஒன்றும் புதிதல்ல என்றும், 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பல இந்துக் கடவுள் சிலைகளை முஸ்லிம்கள் உடைத் தெறிந்ததாகவும் கூறினார்.

(விடுதலை 1.11.1956)
0 comments: