Search This Blog

3.11.10

தீபாவளியின் தீங்குகள்!



தீபாவளி மூடப் பண்டிகை - தமிழர்களை இழிவு படுத்தும் பண்டிகை மட்டுமல்ல - பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மக்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யக்கூடியதுமாகும்.

ஏழை மக்களாக இருந்தாலும் கடன் வாங்கியாவது தீபாவளியைக் கொண்டாடியே தீரவேண்டும் என்ற சுற்றுச்சூழல் இருக்கிறது.

பக்கத்து வீட்டில் பலகாரம், புத்தாடைகள், மத்தாப்பு, வெடிகள் என்கிறபோது தம் வீட்டுப் பிள்ளைகள் ஏங்கிவிடக் கூடாதே என்ற பாச உணர்ச்சியில் கடனை வாங்கித் தொலைக்கவேண்டியுள்ளது.

பொதுவாக மதக் காரணங்களுக்காக மக்கள் செலவழிப்பது - அரசுக்குச் செலுத்தும் வரியைவிட வெகு அதிகமானதாகும். மதச் சமாச்சாரங்களில் பணமுடை காரணமாக அலட்சியமாக இருந்தால், சாமி குத்தம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் - அவர்கள் பழகிப் போன பக்திநோயால் ஏற்பட்டுவிடுகிறது.

தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருந்துக்குச் செலவழிப்பதைக்கூட அலட்சியப்படுத்தி விடுவார்கள்; ஆனால், கோயில்கள், பண்டிகைகள், நேர்த்திக் கடன் கள் சமாச்சாரம் என்றால் தலை கொடுத்தாவது அவற்றை நிறைவேற்றிவிடுவதில் ஒற்றைக்காலில் நிற்பார்கள். அந்த அளவுக்கு மக்களின் புத்தியை பக்தி நாசப்படுத்திவிட்டது.

கோயில் விசேஷங்களுக்குச் சென்றுவிட்டு, ஊர் திரும்பியவர்கள் கையில் உள்ள கடைசி பைசாவைக்கூட வீட்டுக்கு எடுத்துவரக் கூடாது என்பது அய்தீகமாம். அப்படி கையில் ஏதாவது மீதியிருந்தால், உள்ளூர் கோயில் உண்டியலில் போட்டுவிடவேண்டுமாம்.

மக்களின் பணத்தை மிச்சம் விடாமல் சுரண்டுவதில் மதம் எந்த அளவுக்குத் தந்திரங்களையும், குயுக்திகளை யும் திணித்திருக்கிறது என்பதை இதன்மூலம் மிக நன்றாகவே அறிந்துகொள்ளலாம்.

பகுத்தறிவுவாதிகளாக இருப்பதால் இந்தத் தொல்லைகளும், இழப்புகளும் அறவே இல்லை.

தீபாவளி பண்டிகை அமைந்துள்ள முறை, அந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஏற்படுத்தி வைத்துள்ள அம்சங்கள் ஒவ்வொன்றுமே அறிவையும், பொருளையும், உழைப்பையும் விழலுக்கு இறைப்பவையாக உள்ளன.

அதுவும் பட்டாசு வெடிப்பது என்ற ஒன்றை முக்கியமாக இதற்குள் வைத்துள்ளார்கள். பெரும்பாலும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் சிறுவர்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சட்டப்படி குற்றம் என்றாலும், யார் அதைப் பொருட்படுத்துகிறார்கள்?

சிங்கப்பூரில் பட்டாசுக்குத் தடை - அங்குள்ள இந்தியர்கள் பட்டாசு வெடிக்காமல்தானே தீபாவளி கொண்டாடவேண்டும்?

குழந்தைத் தொழிலாளர்கள் கொடுமையிலிருந்து இந்தப் பட்டாசு விவகாரம் தொடங்குகிறது. பட்டாசு வெடிப்பதால், ஆண்டுதோறும் பல விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

தீபாவளியையொட்டி நடைபெறும் தீ விபத்துகள் பற்றி தீயணைப்புத் துறை ஒவ்வொரு ஆண்டும் புள்ளி விவரங்களைத் தெரிவிக்கத்தான் செய்கிறது.

பட்டாசு கொளுத்துவதில் பெரும்பாலும் குழந்தைகள், சிறுவர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கண் மருத்துவர்கள் இதுபற்றி தீபாவளிக்கு முன்னதாக எச்சரிக்கை அறிக்கைகளைவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பாதிக்கப்படுவது கண்கள் தான். கருவிழி மாற்று சிகிச்சை தீபாவளியன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் அதிகமாக நடைபெறுகிறது. இறந்தவர்களின் கண்களைக் கொடையாக அளிப்பதன்மூலம்தான் இதுபோன்ற குழந்தைகளின் பார்வை மீண்டும் கிடைக்கிறது.

தீயணைப்புத் துறையும், மருத்துவமனைகளும், குறிப்பாகக் கண் மருத்துவமனைகளும் தீபாவளியன்று போர்க்கால நடவடிக்கைகள்போல செயல்படவேண்டிய நிலை இருந்து வருகிறது.

பட்டாசில் உள்ள இரசாயனப் பொருள்கள் கண் களில் படும்போது ஏற்படும் காயம் மற் றும் கண்களில் தீப்புண்ணும் வரலாம் கண்களில் பலமாக பட்டாசு வெடிக்கும்போது அதிகமான காயங்கள் ஏற்படலாம் பார்வை நரம்புகளும் பாதிக்கப்படலாம். தீபாவளியையொட்டி அவ்வளவு முன் அறிவிப்பு எச்சரிக்கைகள் வருகின்றன.

ஒரு விழா என்றால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்ப தற்குப் பதிலாக என்னென்ன கேடுகள் ஏற்படக்கூடும் என்ற பட்டியல் போடுவது என்பது இந்தத் தீபாவளிக்குத்தான்.

தமிழ்ப் புத்தாண்டு - தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் என்கிறபோது எத்தகு மகிழ்ச்சி ஆரவாரம் - சுற்றம் சூழ கூடி மகிழும் நிலை.

அவ்விழா வரும் பருவமும் ரம்மியமானது. விவசாயத்தின் பலனைக் காணும் வருவாயும் சேர்ந்து கொள் கிறது. கடன்படும் அவசியத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இன இழிவு, பொருள் இழப்பு, உடல்நலக் கேடு என்று பல வகையிலும் இடந்தரும் இந்தத் தீபாவளியை புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனம் - பொறுமையுடன் சிந்தித்தால் இதன் உண்மை கண்டிப்பாக விளங்கும் - சிந்திப்பார்களாக!

------------------ “விடுதலை” தலையங்கம் 3-11-2010

0 comments: