ஆண்டவனாலும் ஆகவில்லை
கிட்டப்பா (தி.மு.க.): பிற்போக்குக் கூட்டணியினர் ஆண்டவன் படத்தைப் போட்டு மிகவும் கேவலமான தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்ட வனால் கூட அவர்கள் கட்சிகளைக் காப்பாற்ற முடியவில்லை. ஆண்டவனின் சக்தியையும் மீறி மாயூரத்தில் நான் வெற்றி பெற்றேன்.
(30.3.1971 அன்று ஆளுநர் உரைக்கான நன்றிப் பேச்சின் போது)
காவிரிப் பிரச்சினைக்கு குருவாயூரப்பன்
தியாகராசன் (த.அ.கழகம்): குருவாயூரப்பனுக்குத் தமிழ்நாடு அரிசி வழங்குகிறது. இந்த நிலையில் காவிரி நீர் பற்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு நல்ல முடிவு ஒன்று ஏற்பட குருவாயூரப்பன் அருள் புரிவாரா?
அமைச்சர் ப.உ.ச.: பக்தர்கள் எனப்படுவோர் வேண்டிக் கொள்ள வேண்டிய விஷயமல்லவா இது.
(காவிரிச் சிக்கல் பற்றி தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீதான விவாதத்தின் போது: 8.7.1971)
கும்பி வெம்பிய குருவாயூரப்பன்
சங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): குருவாயூரப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இப்போது அரிசி அனுப்பப்பட்டு வருகிறதா?
அமைச்சர் ப.உ.ச.: ஆம்; அனுப்பப்பட்டு வருகிறது.
நரசிம்மன்: கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பத்மனாபசாமி கோயில் உள்ளது. அப்படி இருக்க குருவாயூரப்பன் கோயிலுக்கு மட்டும் - ஏன், அரிசி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படுகிறது?
அமைச்சர் ப.உ.ச.: இந்தக் கோயிலுக்கும் தமிழ்நாட்டு அரிசி அனுப்பப்பட்டு வருகிறது.
ஆறுமுகம்: தமக்கு அரிசி வேண்டும் என்று குருவாயூரப்பனே தமிழ்நாடு அரசிடம் மனு செய்து கொண்டிருந்தாரா?
அமைச்சர் ப.உ.ச.: இல்லை; தர்மகர்த்தாக் குழுவினர்தான் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்கள்.
பொன்னப்ப நாடார் (சிண்டிகேட்): கேரள அரசே குருவாயூரப்பனுக்கு அரிசி வேண்டும் என்று கேட்டதா - அல்லது தர்மகர்த்தாக் குழுதான் அரிசி கேட்டதா?
அமைச்சர் ப.உ.ச.: தர்மகர்த்தாக் குழுதான் கேட்டது.
வீராசாமி (தி.மு.க.): ஆண்டவன்தான் மக்களுக்குப் படியளப்பதாகச் சொல்வார்கள்; இப்போது ஆண்டவனுக்கே (குருவாயூரப்பனுக்கு) தமிழ்நாடு அரசு தான் படியளக்கிறது. (சிரிப்பு)
- (கேள்வி நேரம்: 8.7.1971)
அர்ச்சனைக்கு அப்ளிகேஷன்
சுப்ரமணியம் (தி.மு.க.): சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆண்டவன் விண்ணப்பம் போட்டிருந்தாரா?
அமைச்சர் கண்ணப்பன்: அப்படி விண்ணப்பம் எதுவும் போடவில்லை; தமிழ் உணர்ச்சி உள்ளவர்கள் மூலம் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று ஆண்டவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): ஆண்ட வன் கேட்டாரா என்றெல்லாம் கூறி புண்படுத்தலாமா?
அவைத் தலைவர் மதியழகன்: ஆண்டவனைப் புண்படுத்துகிறமாதிரி கேட்கவில்லை.
கே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): மனிதர்களை அவமானப்படுத்துவதே ஆண்டவனை அவமானப்படுத்துவது போல் தான்.
அவைத் தலைவர்: அப்படி எதுவும் இல்லை.
-(கேள்வி நேரம், 12.7.1971)
ஆண்டவனுக்கும் அரசின் பாதுகாப்பு
அனந்தநாயகி (சிண்டிகேட்): ஜனாதிபதி, ஆளுநர் போன்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அரசு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது; ஆண்டவனே அவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு தவிர அரசு பாதுகாப்பு கொடுக்கத் தேவையா?
கலைஞர்: சில சமயங்களில் ஆண்டவனையே கூட அரசு காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
- (கேள்விநேரம், 17.6.1971)
சைவ ஓட்டல்களில் சிவ-பார்வதி தாண்டவம்
சங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): சென்னை எத்தனை சைவ - அசைவ ஓட்டல்களில் உணவு - நாட்டியம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது?
கலைஞர்: ஆறு புலால் உணவு விடுதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது; சைவ விடுதிகள் எதற்கும் அனுமதி இல்லை.
வீராசாமி (தி.மு.க.): சைவர்கள் எனன பாவம் செய்தார்கள்? உணவு நடனத்தை சைவ விடுதிகளிலும் நடத்த அரசு ஏற்பாடு செய்யுமா? கலைஞர்: சைவ விடுதிகளில், வேண்டுமானால் சிவ- பார்வதி நடனம் ஏற்பாடு செய்யப்படலாம்.
-(கேள்வி நேரத்தின் போது, 21-7-1971) 29-10-2010
0 comments:
Post a Comment