Search This Blog

23.11.10

பெரியார் அய்யாவுடன் அய்யங்கார் மோதல்!



தஞ்சாவூரில் நடைபெற்ற வாலிப மாநாட்டுக்கு வருகை தந்த தந்தை பெரியார் அவர்களை அப்படியே சிதம்பரத்திற்கும் வர வேண்டும் என்று சில முக்கியஸ்தர்கள் வற்புறுத்தவே, தந்தை பெரியார் அவர்களும் அதற்கு இசைந்து சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள். இது 1928ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற்ற சம்பவம்.

அப்பாடா... மேளதாள ஊர்வலம்!

மேளதாள வாத்தியம் முழங்க கடைவீதி வழியாக மிகப் பெரும் ஊர்வலமாக தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். கூட்டத்திற்கு வக்கீல் இராமையா நாயுடு தலைமை தாங்கினார். தந்தை பெரியார் அவர்கள் சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சு மழை பொழிந்தார்.

பேச்சா அது - மழை! மழை!!

தந்தை பெரியார் அவர்களின் பேச்சு மழை முடிவடைந்ததும் திருவாளர்கள் முத்துகிருஷ்ணபிள்ளை, ரங்கநாதம் செட்டியார், காப்பிக்கடை நாராயண அய்யங்கார் ஆகியோர் சிறிதுநேரம் பேசினார்கள்.

அவர்கள் மாறுபாடான சில கருத்துகளைச் சொல்லி விடவே, அவற்றிற்கு மறு மொழி கூற சிறிது வாய்ப்புக் கொடுக்குமாறு தலைவர் ராமையா நாயுடு அவர்களை தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக் கொள்ளவே, அதற்கு அவரும் சம்மதித்தார்.

தக்க மறுமொழிகளை ஆதாரங்களுடன் தந்தை பெரியார் அவர்கள் கொட்டு கொட்டென்று கொட்டி முடித்து அமர்ந்தார்கள்.

வந்ததே வம்பு!

அந்த காப்பிக்கடை நாராயண அய்யங்காருக்கோ ஒரே ஆத்திரம் - அவரால் சும்மா இருக்க முடிய வில்லை. திடீரென்று எழுந்து நின்று தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து, நீங்கள் சாமியைக் கல்லென்று சொன்னீர்களே, இது சரியா? என்று கேட்டார்.

புறப்பட்டாரே பார்க்கலாம்!

உடனே தந்தை பெரியார் ஆம்; வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் என்று கூறி மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித் தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலை குனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் (பத்திரிகை நிருபர்): அந்த கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

பெரியார்: அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைந்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மை யில் சக்தி உள்ளதானால், இதோ எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்தக் கல்லு சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக் கூடாதா? என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

சும்மா இருந்து தொலையக்கூடாதோ?

மறுபடியும் திரு.நாராயணய்யங்கார், இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்களாவது ஒரு புதுமதம் சொல்லுவது தானே? என்றார்.

பெரியார்: நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வர வில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும், சாமி என்றும், புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும், சத்தியமாகவும், மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும், பரோபகார எண்ணத் துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகின் றேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மத மானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்: இருக்கின்றதை மறைப்பதனால் புதிதாக ஒன்றை காட்ட வேண்டாமா? என்றார்.

அதோ அசிங்கம் - அதற்குப் பதில் இன்னொன்றா?

பெரியார்: வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே அந்த துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே, இனி நான் என்ன சொல்ல வேண்டும்?

அய்யங்கார்: நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசு கின்றீர்களே; உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துகள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்க கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

பெரியார்: சிறீமான் அய்யங்கார் சொல்லுகின்ற படி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்து கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடிய தாயிருக்கின்றது. அதையும் எனக்கு சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகிறேன். அல்லாமலும் இந்த தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரம் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கிறேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்தப் பிரச்சாரச் செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகி வருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்ப தில்லை. நான் அநேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

எச்சில் கிளாஸ் கழுவுகிறேனய்யா!

அய்யங்கார்: புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாக கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்தப் புத்தகத்தைதான் படிக்கிறது?

பெரியார்: நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவ தில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிட மிருந்தாலும், மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன் என்றார். தந்தை பெரியார் அவர்களிடம் விடுக்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு முறையாக தந்தை பெரியார் அவர்கள் அளித்த பதில்களையும் கேட்டுக் கொண் டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெரிதும் ஆரவாரமாகக் கைதட்டி தந்தை பெரியார் அவர்களின் பதில்களை ரசித்தனர்.

---------------- நன்றி: - “விடுதலை” 12-11-2010

0 comments: