பிரமுகர்கள் பேசுகிறார்கள் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது ஏன்?
திராவிடர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாத இந்தத் தீரர்கள் என்ன சொல்கிறார்கள்?
நம் துக்க நாளை, நாமே கொண்டாடலாமா?
அமைச்சர் உ. மதிவாணன்
தீபாவளி கதைப்படி தேவர்களுக்கு எதிரான நரகாசுரனை அழித்த நாள் அதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.. நரகாசுரன் கதைப்படி அசுரன். எனவே திராவிடன். இது ஆரிய திராவிடப் போராட்டம்தான். திராவிடனான நரகாசுரனை அழித்த நாள் ஆரியர்களுக்கு வெற்றியாகும். நமக்கு எப்படி விழாவாக முடியும்?
நம் இனத்தவரான நரகாசுரன் மறைந்த நாளை நாமே கொண்டாடலாமா? வேண்டுமானால் துக்கம் கடைப்பிடிக்கலாம், கதையை நம்புகின்ற மக்கள். நான் நம்பவில்லை. அய்யாவின் வழி நடப்பவன். எனவே, தீபாவளிக் கொண்டாடுவது தமிழர்களின் அறியாமையையும், இழிவையும் குறிப்பதாகும்.
தமிழர் மரபு சார்ந்த விழா அல்ல!
தமிழச்சி தங்கபாண்டியன்
(கவிஞர் -பேராசிரியர்)
தீபாவளி என்ற பண்டிகை தமிழர்கள் மரபு சார்ந்த பண்டிகை அல்ல. என் மண் சார்ந்த செய்திகளால் முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டும், தமிழ் மரபோடு இயைந்து வளர்ந்த காரணத்தாலும் பொங்கல் திருநாள் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை சார்ந்த பதிவுகளை மய்யப்படுத்தியே நான் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.
ஏர்க்கலப்பை, மாடு, வைக்கோல் போர், சேறு இவற்றின் மணத்தை மனது முழுக்கப் பூசிக் கொண்ட கிராமம் சார்ந்த பெண்ணாகவே பதிவாகி இருக்கும் என் சிந்தைக்குள் தமிழர்களின் மரபிற்கு அப்பாற்பட்ட தீபாவளியை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை.
மூடநம்பிக்கையின் உச்சம்
த. உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ்.,
தீபாவளியை நான் 9ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே கொண்டாடுவதில்லை. எனக்கு தீபாவளி குறித்த கதையில் நம்பிக்கை இல்லை. காரணம், இந்தப் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் இரண்யட்சகன் என்னும் அரக்கன் கடலுக்குள் ஒளிந்து கொண்டான் என்பதையோ, பின்னர் பன்றி உருவத்துடனான மகாவிஷ்ணுவுடன் பூமி உறவு கொண்டு நரகாசுரன் பிறந்தான் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை.
இக்கட்டுக் கதை மூடநம்பிக்கையின் உச்சமாகும். உலகில் கொடிகட்டிப் பறந்த தமிழர் நாகரிகத்தின் சிறப்பினை இதுபோன்ற கதைகள் ஊடுருவி சிதைப்பது மட்டுமே இதன் நோக்கமாகும்.
நமக்கு எதிரான கதை
ரமேஷ் பிரபா
தீபாவளிக் கதை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான கதையாகும். அதில் நமக்கு எதிரான கருத்துகள் தான் அதிகம் அடங்கியுள்ளன. பெரும்பாலும் கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போல இவ்விழா இல்லை. பொங்கல் பணம் சார்ந்த பண்டிகை அல்ல. அதாவது ஏழை - பணக்காரன் வேறுபாட்டை அதில் காண முடியாது. அனைவரின் வீட்டிலும் பொங்கல் கொண்டாடப்படும்.
வீட்டு வாசலில் பொங்கலிடுவது, மாட்டுப் பொங்கல், கரும்பு என மகிழ்ச்சியுடன் சமத்துவமாய் பாகுபாடின்றிக் கொண்டாடுவோம். ஆனால், தீபாவளிப் பண்டிகை அவ்வாறு இல்லை. வசதியுள்ளவன் ஆயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்கி வெடிப்பான். வசதி இல்லாத ஏழைச் சிறுவர்கள் கிழிந்த சட்டையுடன், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள். எனவே, இதை நான் கொண்டாடுவதில்லை.
தொகுப்பு
- நம்பியூர் மு. சென்னியப்பன் 3-11-2010
0 comments:
Post a Comment