Search This Blog

20.11.10

கிரிவலம் - எத்தனைப் பக்தர்கள் இதற்குத் தயார்?


கிரிவலம்

திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதற்காக ஓர் அடி எடுத்து வைத்தால் உலகை வலம் வந்த பலன் கிடைக்கும்; இரண்டு அடி எடுத்து வைத்தால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன்களும்; மூன்று அடி எடுத்து வைத்தால் தானங்கள் பல செய்த பலனும் கிடைக்கும்; முழுமையாகச் சுற்றினால் பதினாறு பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் செய்தால் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பர்.

ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவபதம் கிடைக்கும்; திங்கள்கிழமை ஆளுமைத் திறன் கிடைக்கும்; செவ்வாய்க்கிழமை செல்வ வளம் பெருகும்; புதன்கிழமை எனில் கலைகளில் தேர்ச்சி உண்டாகும்; வியாழக்கிழமை ஞானத்தைக் கொடுக்கும்; வெள்ளிக்கிழமை விஷ்ணு பதம் கிடைக்கும். சனிக்கிழமை நவக்கிரக அனுக்ரகம் அமையும். திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று புண்ணியம் தேடியவர்கள் இறந்த பின் சொர்க்கத்தில் நுழைவார்கள் - அப்போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிக்க, சூரியன் விளக் கேற்ற, இந்திரன் மலர்தூவ, குபேரன் பணிந்து வரவேற்பான் என்று கூறுவது அருணாசல தல புராணம். பரணி தீப வழிபாட்டு அன்று தங்கள் வீடுகளில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழி பட்டால் அனைத்துப் பாவங்களும் பறந்துவிடும்.

இப்படியெல்லாம் ஆன்மீக செய்திகளை ஏடுகளில், இதழ்களில் அள்ளிவிடுகிறார்கள்.

அறிவு வளர, ஞானம் செழிக்க, கலைகளில் தேர்ச்சி பெற, செல்வம் கொழிக்க, ஆளுமைத் திறன் அதிகரிக்க, பாவங்கள் தொலைந்து தலை தெறித்து ஓட ஒரு மலையைச் சுற்றி வந்தாலே போதுமானது; பள்ளிக்கூடம் போகவேண்டாம்; படிக்கவேண்டாம்; பரீட்சை எழுதவேண்டாம்; வேலைக்குப் போகவேண்டாம் - வீணாக சம்பாதிக்க வேண்டாம்; கலைகளுக்காகப் பயிற்சிகள் எடுக்க வேண்டாம் - அதில் காலத்தைக் கழிக்கவேண்டாம்; பாவங்கள் செய்ய பயப்படவேண்டாம்; பணம் தேடி அலையவும் வேண்டாம். இவை எல்லாம் கிட்டுவதற்கு மிகமிக எளிதான வழி இருக்கிறது - அதுதான் திரு வண்ணாமலையில் கிரிவலம் வருவதாம். ஆமாம், சகல நோய்க்கும் ஒரே ஒரு மருந்து! இவ்வளவு சுலபமான வழி இருக்கும்போது அரசாங்கம் ஏன்? அதிகாரிகள் ஏன்? திட்டங்கள் ஏன்? தெருவில் இறங்கி உழைப்பது ஏன்? காவல்துறை ஏன்? கல்விக் கூடங்கள் ஏன்? மருத்துவ மனைகள் ஏன்? மருந்துகளும்தான் ஏன்? - என்று எந்தப் பக்தராவது ஒரே ஒருமுறை எண்ணிப் பார்த்தது உண்டா?

நியாயமாக இவற்றையெல்லாம் நம்பாத நாத்திகர்கள்தான் படிக்கவேண்டும் - சம்பாதிக்கவேண்டும் - வீடு கட்டவேண்டும் - குடியி ருக்கவேண்டும் - கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

இவற்றை நம்புகிற பக்தர்களோ கிரிவலம் செல்வதைத் தவிர வேறு எந்த வேலை களிலும் ஈடுபடவே கூடாது. ஏனெனில், கிரிவலத்தால்தான் எல்லாமும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமே!

எத்தனைப் பக்தர்கள் இதற்குத் தயார்?

கிரிவலமும் சென்று வேறு பணிகளில் ஈடுபடும் பக்தர்கள் கடவுள் சக்தியில் - நடை முறையில் நம்பிக்கையற்றவர்கள் அல்லவா?

ஏனிந்த இரட்டை வேடம்?

இந்த இரட்டை வேடத் துக்குப் பிள்ளையார் சுழி போடுவதே இந்தப் பக்திதான் - என்ன சரிதானே!

------------------- மயிலாடன் அவர்கள் 19-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: