Search This Blog

1.12.10

இன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்?


(1927 ஆம் ஆண்டு பெரியார் எழுதிய இத்தலையங்கம் 2010 இலும் எப்படிப் பொருந்த்தி வருகிறது என்பதை இன்றைய நாட்டு நடப்புக்களுடன் மூலம் அறியலாம். )

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களது விஷங்களை பெரும்பாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமாகவே கக்கி பார்ப்பனரல்லாத மக்கள் அதுகளைப் படிப்பதாலேயே அவ்விஷம் ரத்தத்தில் ஊரிப் போகின்றது. இதை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்பொழு தும் நமது பார்ப்பனர்களின் பிழைப்புக்கான சகல ஆயுதங்களும் அதாவது தேசத்தின் பேரால் காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்னும் ஆயுதமும் மதத்தின் பேரால் மோக்ஷம் என்னும் ஆயுதமும் ஏறக்குறைய அடியோடு மழுங்கிப் போய் வருகிறதென்றே சொல்லலாம். காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்பதன் மூலம் அல்லாது வயிறு வளர்க்க மார்க்கமில்லாத சில வயிற்றுச் சோற்று கூலிகள் தவிர மற்றவர்கள் இதை மதித்திருந்த காலம் மலையேரிப் போய் விட்டது. அது போலவே - மதத்தின் பேரால் அல்லது வாழ முடியாத - வெளியில் தலைகாட்ட முடியாத - சில பாஷாண்டிகள் தவிர மற்றவர்கள் பார்ப்பனர் மூலம் அடையும் மோட்சத்தை மதிக்கும் காலமும் மலையேறிப் போய் விட்டது. ஆகவே இது சமயம் நமது பார்ப்பனர்களுக்கு மிஞ்சி இருப்பது அவர்கள் பத்திரிகை விஷமப்பிரசாரந்தான். அதன் மூலம் அவர்கள் பிரசாரம் செய்யும் யோக்கியதையை இரண்டொரு உதாரணத்தால் எடுத்துக் காட்டுவோம்.

சென்ற வாரம் திருவண்ணாமலையில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் பேசியதை பொதுஜனங்கள் ஆதரிக்கவில்லை என்றும் ஏதோ ஒரு சில ஆசாமிகள் மாத்திரம் தான் கேட்டதாகவும் வாத்தியமில்லாமலும் போலீஸ்காரர்கள் பந்தோபஸ்துடனும் வீடு சென்றதாகவும் அதே சமயத்தில் இதற்கு எதிரிடையாய் கூட்டப்பட்ட கூட்டத்தில் பெருந்திரளான ஜனங்கள் வந்திருந்ததாகவும் அதில் நாயக்கர் முதலானவர்கள் பதில் சொல்ல முடியாத அநேக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் நாயக்கர் வாயை மூடிக் கொண்டு போய் விட்டதாகவும் இன்னும் சில பொய்யுரைகள் முன்னுக்குப் பின் சம்மந்தமில்லாமல் உளரிக் கொட்டிவிட்டு கடைசியாக எழுதியிருப்பது என்னவென்றால் “ஞாயிற்றுக்கிழமை நடத்திய திராவிட கூட்டத்தில் சுயநலக்காரரான நாயக்கர் முதலானவர்கள் கக்கிய விஷப்புகை திருவண்ணாமலை நகர முழுதும் பரவி எங்கும் பிராமணத்துவேஷம், பிராமணத்தூற்றல் தேசீய பத்திரிகை வெறுப்பு, காங்கிரஸ் மீது குறை கூறல், சுயராஜ்ஜிய கக்ஷியை வைதல் காங்கிரஸ் திட்டங்களை பரிகாசம் செய்தல், ஆலயம் செல்லல் வீண் சிலவெனல், கடவுளுக்கும் திராவிடருக்கும் இடையில் பார்ப்பனத் தரகர் வேண்டாம் எனல், அந்த மூட வழக்கத்தை ஒழிக்க வேண்டுமெனல், கண்ட கண்ட விடங்களில் பார்ப்பனரைப் பரிகசித்தல், காங்கிரசை விட்டு திராவிடக் கூட்டத்தில் சேரவேண்டுமெனல் ஆகிய இதுபோன்ற விஷயங்களே நகர முழுதும் சீறி நிற்கின்றன’’ என்று தனது நிரூபர் பேரால் 11. 2. 27 தேதி தமிழ் சுயராஜ்ஜியா பத்திரிகையில் குறிப்பிட் டிருப்பதாக ஒரு நண்பர் நமக்கு அனுப்பியிருக்கிறார். இது முன்னுக்குப் பின் எவ்வளவு முரணானதும் அயோக்கியத்தனமானதுமான பிரசாரம் என்பதை நேயர்கள் கவனிக்க வேண்டும்.

நாம் பேசிய கூட்டத்தில் யாரும் இல்லையென்றும் ஏதோ காங்கிரஸ் விரோதிகள் சிலபேர் இருந்தார்கள் என்றும் அதுவும் போலீஸ் பந்தோபஸ்துடன் நடந்தது என்றும் வாத்தியங்கள் கூட இல்லாமல் வீட்டிற்கு போனதாகவும் எழுதிவிட்டு தாங்கள் போட்ட கூட்டத்தில் ஏராளமான ஜனங்கள் வந்திருந்ததாகவும் எழுதிஇருக்கிறது. அப்படியானால் அவ்வளவு “ரகசியத்தில் கக்கிய விஷப்புகை” ஊர் முழுவதும் எப்படி பரவி மேல்கண்ட பலன்கள் ஏற்பட்டிருக்கும்? என்பதை வாசகர்கள் தான் உணரவேண்டும். இதுதவிர சுதேசமித்திரனோ “ நாயக்கர் தனது வாய் வலிக்குமட்டும் இரண்டரை மணிநேரம் 3 மணி நேரம் 5 மணி நேரம் பார்ப்பனர்களையும் புரோகிதர்களையும் வைதுப் பேசினார்’’என்று எழுதுகிறதே அல்லாமல் என்ன பேசினார் என்பதை இச்சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகிறதேயில்லை. இன்னும் இதுபோல் மீட்டிங் போட்டதாகவும் கூட்டம் கூடினதாகவும் என்ன என்னமோ பேசினதாகவும் எழுதிவிடுகிறது. இதைப்பற்றி எத்தனையோ தடவை எழுதியிருக்கிறோம். பேசியும் இருக்கிறோம். கொஞ்சமாவது மானம் வெட்கம், சுத்த ரத்த ஓட்டம் முதலியதுகள் இருக்குமானால் இனியும் 10 தலைமுறைக்கு இந்தக் கூட்டம் இவ்வித இழிவான காரியங்களில் தலையிடவே தலையிடாது. அப்படிக்கு இல்லாமல் “தாயாரை பெண்டாட்டி ஆக்கிக் கொண்டாலும் நாள் வந்து தானே சாக வேண்டும்” என்கிற தூர்த்த வாக்கியத்தை தனக்கு ஆதரவாய் வைத்துக் கொண்டு நாம் என்னதான் எழுதினாலும் நம்மை யார் என்ன செய்யக்கூடும் என்கிற தைரியத்தில் எல்லாவற்றையும் மறந்து இதே வேலையில் ஈடுபட்டிருக்கிறதுகள்.

இவைகளுக்கு இனி நாம் மறுப்பு எழுதுவதாலோ அல்லது கண்டிப்பதாலோ ஒருக்காலும் புத்தி வரும்படி செய்யமுடியவே முடியாது. மானமுள்ள ஆயிரம் பேரையும் ஒருவன் எதிர்த்து போர் புரிய முடியும். மானமில்லாத ஒருவனை வெல்ல ஆயிரம் பேராலும் ஆகாது என்கிற முதுமொழிப் படி மானம், ஈனம், தைரியமற்ற கூட்டத்தை நாம் எப்படி சமாளிக்க முடியும் என்று பார்ப்போமேயானால் அம்மாதிரிப் பத்திரிகைகளை பார்க்காமலி ருப்பதனால்தானே ஒழியும். மற்றபடி இதற்கு வேறு மார்க்கம் இல்லை என்றுதான் நாம் சொல்லுவோம். இதையே பல தடவைகள் சொல்லி யுமிருக்கின்றோம். அநேக ஜனங்கள் அப்பத்திரிகைகளுக்கு புத்தி வரும்படி செய்வதற்காக அதைப் பஹிஷ்கரித்திருப்பதாய் நமக்கு எழுதியும் வருகிறார்கள். ஆனபோதிலும் அது தகுந்த பலனை அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆதலால் இனியாவது இவ்வித பத்திரிகைகளை ஆதரிப்பதன் மூலம் நமது சமூகத்திற்கு கேடு வருவித்துக் கொள்ள கூடாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு இவ்விதப் புரட்டுகளையும் விஷமப் பிரசாரத்தையும் ஒழித்து மக்களுக்கு உண்மையை விளக்கி சுயமரியாதையை உண்டாக்கவென்றே பாடுபட்டு வரும் “திராவிடனையே” ஒவ்வொரு தமிழ்மக்களும் அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று வேண்டுகிறோம்.

-------------------தந்தைபெரியார் - "குடி அரசு" - துணைத் தலையங்கம் - 20.02.1927

0 comments: