Search This Blog

7.12.10

இப்படியும் ஒரு தலைவரா?


மதுரையில் ஞாயிறன்று (5.12.2010) நடைபெற்ற தென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்கள் 75 மணித் துளிகள் ஆற்றிய உரை நறுக்குத் தெறித்ததுபோல அமைந்திருந்தது.

கூட்டு முயற்சிக்கு வெற்றி

எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், மாநாடாக இருந்தாலும் அதில் கூட்டு முயற்சி இருக்குமானால், அது வெற்றி பெறும். அதற்கு எடுத்துக்காட்டாக இம் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற தற்காகப் பாராட்டினார்.

கூட்டு முயற்சி என்கிற போது அதற்கு ஒரு தாக்கமும், மக்கள் மத்தியிலும் ஏற்படக் கூடியதாகும். தனி மனிதராக இருக்கும்போது பலவீனமாகத் தோன்றும் ஒரு பிரச்சினை, நான்கு பேர் சேர்ந்து செயல்பட முனையும்போது ஒரு தனி பலமே ஏற்படும் என்பது யதார்த்தம்!

நன்கொடை திரட்டச் செல்லும்போது கூட தனியாகச் சென்று கேட்பதைவிட, நான்கு பேர் சேர்ந்து சென்று கேட்கும் போது நூறு ரூபாய் கிடைப்பதற்குப் பதிலாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது அனுபவமாகும்.

பொதுக் கூட்டங்களுக்கு வசூல் செய்ய கடைக்குக் கடை செல்லும்போது கழகக் கொடியைக் கையில் ஏந்தி பொதுக் கூட்டத் துண்டறிக்கையை கொடுக்கும் போது, நன்கொடைகள் தடங்கலின்றித் தண்டல் செய்யப்படுவதை அனுபவத்தில் அறிய முடியுமே! இதில் பணம் என்பதை விட பொதுக்கூட்டத்திற்குப் பெரிய அளவும் பிரச்சாரமும், விளம்பரமும் கிடைத்துவிடுமே!

திராவிடர் கழகம் என்கிறபோது பொது மக்கள் மத்தியில் ஒரு பொது மரியாதை உண்டு. எதிலும் நாணயமாக இருக்கக் கூடியவர்கள் என்ற மதிப்புண்டு. எனவே, தாராளமாகவே கொடுப்பார்கள்.

எந்தவிதமான பதவி பொறுப்பு களிலும், அதிகார மய்யத்திலும் இல்லாத திராவிடர் கழகத் தோழர்களால் தெரு முனைக் கூட்டங்கள் முதல் பெரிய மாநாடுகள் வரை நடத்த முடிகிறது என் றால், அவற்றிற்கு இதுதான் காரணமும் - மூலதனமும் ஆகும்.

கடலூரில் ஒருமுறை பொதுக்கூட்டத் திற்காக நன்கொடை திரட்டினார்கள் கழகத் தோழர்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்தப் பொதுக்கூட் டத்தை நடத்த இயலாமற் போயிற்று.

தோழர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? வசூலித்த நன்கொடையை ஒவ்வொரு கடைக்கும் சென்று திருப்பிக் கொடுத்தார்கள். கடைக்காரர்களுக்கு அதிசயத்திலும் அதிசயம்! இப்படியும் ஓர் இயக்கமா? என்று வியந்தார்கள். இந்தத் தொகையை நீங்களே வைத்துக்கொள் ளுங்கள் - அடுத்த நிகழ்ச்சிக்கு வைத் துக் கொள்ளுங்கள் என்று கடைக்காரர் கள் சொன்னபோது, பரவாயில்லை அடுத்த நிகழ்ச்சி நடக்கும்போது உங் களிடம் வருவோம்! என்றார்களே - ஆகா, இந்த நேர்மைக்கு என்ன விலை?

நமது கழகப் பொருளாளர் மறைந்த மானமிகு தஞ்சை கா.மா. குப்புசாமி அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு முக்கியமானது.

தஞ்சையில் காங்கிரஸ் சார்பில் ஏ.ஒய்.எஸ். பரிசுத்தம் (நாடார்) அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார். பச்சைத் தமிழர் காமராசரை தந்தை பெரியார் ஆதரித்த காலகட்டம் அது.

தேர்தல் செலவுக்காகக் கழகப் பொருளாளரிடம் ஒரு தொகை கொடுக் கப்பட்டு இருந்தது. தேர்தலில் பரிசுத்தம் அவர்கள் தோல்வியுற்றார்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலை யில், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தொகைக்கான செலவினைப் பட்டிய லிட்டு எழுதி, மீதித் தொகையையும் நேரில் சென்று ஒப்படைத்தார்.

இதனைக் கண்டு பெரிய அதிர்ச்சிக்கு ஆளானவர் பரிசுத்தம் அவர்கள். இப்படியும் ஓர் இயக்கமா? தந்தை பெரியார் உங்களையெல்லாம் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள்?

இதுவரை தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்திற்குக் கணக்குக் காட்டி மீதித் தொகையை ஒப்படைத்த வர்கள் யாரும் கிடையாது! என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுவிட்டு, அதோ வெளியில் நின்றுகொண்டு இருக்கிறார்களே என் கட்சிக்காரர்கள் - எதற்காகத் தெரியுமா? அதிகமாக செலவு செய்துவிட்டதாகவும், மீதிப் பணத்தை நான் கொடுக்கவேண்டும் என்று கூறி வெளியில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்; உங்கள் இயக்கம் எங்கே? நாங்கள் எங்கே? என்று பரிசுத்தம் அவர்கள் உணர்ச்சி வயப்பட்டதைக் கழகப் பொருளாளர் கூறியதுண்டு.

அதேபோல, திருவாரூர் பவுத்திர மாணிக்கம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு சிவசங்கரன் அவர்கள் திருவாரூர் நகர மன்ற தேர் தல் செலவுக்காகத் தம்மிடம் அளிக் கப்பட்ட பணத்துக்கான செலவினை எழுதி, மீதித் தொகையை ஒப்படைத் தார். தி.மு.க. தலைவர் அவர்கள் தம் தோழர்களிடம் இதுபற்றி சிலாகித்து எடுத்துக் கூறினார்.

நமது கழகத்தைப்பற்றிச் சொல்லும் போது தந்தை பெரியார் கூறுகிறார்:

நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால், நாணயத்தில், ஒழுக் கத்தில் தவறு இருக்கக்கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கிய மான பலம்.

- மன்னார்குடியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (விடுதலை, 11.10.1964, பக்கம் 3).

மலைவாழைப் பழம் வாங்கியது 0-0-3 (காலணா) என்று தம் நாள்குறிப்பில் எழுதி வைத்த கோடீஸ்வரர் நம் தலைவர் தந்தை பெரியார்.

வருமான வரித்துறை மேல்முறையீட்டு வழக்கில் தந்தை பெரியார் அவர்கள் எழுதி வைத்த இந்த நாள்குறிப்புத் தகவலைக் காட்டியபோது இரு பார்ப்பன நீதிபதிகளே அசந்து போனார்கள் - இப்படியும் ஒரு தலைவரா? என்று ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார்கள்.

இலட்சியம் - நாணயம் - ஒழுக்கம் என்ற பாட்டையில் பயணிக்கும் ஒரே இயக்கம் சமூகப்புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். நம் முதுகை நாமேகூட ஒருமுறை தட்டிக் கொள்ளலாம்.

கழகத் தலைவரிடம் மாலைக்குப் பதிலாகக் கொடுக்கும் ஒரு ரூபாய்கூட கழக நிதியில் சேர்ந்துவிடும். தொட்டு வாங்குவதோடு அவர் கடமை முடிந்து விடும்.

சொந்த சோற்றைத் தின்றுவிட்டுப் பொதுப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்கள் குழாம் திராவிடர் கழகம் என்கிறபோது - இது தான் நமக்குப் பெரும் பதவியும் பத்ம பூஷண் பட்டங்களுமாகும்.

----------------------------(வளரும்)

குறிப்பு: வைக்கம் போராட்டத்தின் போது தந்தை பெரியாருக்கு காங் கிரஸ்மூலம் அனுப்பப்பட்ட ரூபாய் ஆயிரமும், அது தொடர்பான சுவையான விவரங்களும், சர்ச்சைகளும் நாளை.


-------------------கலி.பூங்குன்றன் ,தி.க.பொதுச்செயலாளர் அவர்கள் 7-12-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


1 comments:

well-wisher said...

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியவர்களின் பரம்பரையே, பணிவான வணக்கங்கள்.
ஜாதி ஒழிப்பில் ஏன் எங்களுடன் கைகோர்க்கக்கூடாது. நமது நண்பர்களைச் சந்தியுங்கள் -
http://www.vivekanandaashram.org/
http://srilalitambikaiparnasalai.blogspot.com/

http://www.arvindneela.blogspot.com/

http://sonjari.blogspot.com/
http://porkkalam.blogspot.com/

http://puthiyaparvai.blogspot.com/