Search This Blog

2.12.10

வாழ்க தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!தமிழர் தலைவர் வாழ்கவே!

அகவை 78 இல் அடியெடுத்து வைக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (2.12.2010).

பத்து வயது சிறுவனாக இருந்தபோதே கழக மேடையில் கர்ச்சனை புரிந்து படிப்படியாக தன் உழைப்பால், அளப்பரிய ஆற்றலால், விசுவாசமான நடவடிக்கைகளால் இன்று கழகத்தைக் கட்டிக் காக்கும் தலைவராக மிளிர்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் இருந்த காலகட்டத்திலேயே அவரால் அடையாளம் காட்டப்பட்டவர். 1960 இல் திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

விடுதலையின் ஆசிரியராகவும், அய்யா அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார் (1962).

இல்லறத்தின் துணையைத் தேர்வு செய்து கொடுத்ததிலிருந்து அவருக்கு எல்லாமே அய்யாவேதான்.

உங்கள் அடிமையை விட்டுவிட்டுச் சென்றீர்களே அய்யா! என்று அய்யா மறைந்தபோது அவர் கதறியபோது உதிர்த்த வார்த்தை கலப்படமற்ற உண்மை, உண்மையே!

விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். அது யாருக்குப் பொருந்துகிறதோ, பொருந்தவில்லையோ, மானமிகு வீரமணி அவர்களுக்குப் பொருந்தும் - முக்காலும் பொருந்தக் கூடியதாகும்.

கடலூர் மாநாட்டில் மேசைமீது ஏறி நின்று முழங்கிய சிறுவன் வீரமணியை திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தன் என்று அண்ணா கூறியதும், மிக முக்கியத்துவம் வாய்ந்த - நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்ற மாநாட்டில் (1944) ஒரு தீர்மானத்தின் மீது அவருக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டதும் அசாதாரணமானவை!

வாழ்க்கையின் கஷ்டங்களை சிறு வயதிலேயே அனுபவித்தவர்! கல்வி முதல் அனைத்திலும் அவருக்கிருந்த கடமை உணர்ச்சி, உழைப்பு அவரை மேலே மேலே வளர்த்துக் கொண்டு உச்சத்தில் அமர்த்தின. எதிலும் முதல் நிலை, எந்த இடத்திலும் அதே நிலை என்ற நிலையிலே முத்திரைகள் பொறித்தவர். எதிலும் துல்லியம் இருக்கவேண்டும் என்பதிலே கூர்மையான எண்ணம் கொண்டவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் மணியாகத் திகழ்ந்தவர்; பி.ஏ. (ஆனர்சு), பொருளாதாரத்தில் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று இரண்டு தங்க மெடல்களைத் தட்டிச் சென்றவர்.

பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பறித்துக் கொண்டு வந்தவர். படிக்கும்போதே அண்ணாமலைப் பல்கலைக் கழக அரங்குகளில் மாணவர் வீரமணி பேசுகிறார் என்றால், அதற்கென்று பெருந்திரள் கூடும் என்கிற அளவுக்குப் பேசும் கலை வளர்த்தவர்.

அவர் மேடைப் பேச்சாளர் மட்டுமல்ல; களப்பணியாளர்; மேடை களைக் கட்டக் கூடியவர், பேச்சாளர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்தக் கூடியவர் - பேச்சாளராகவும் வெளியூர்களுக்குச் சென்று வந்தவர்.

இயக்க வரலாற்றில் இந்தத் தன்மையில் படிப்படியான பரிணாமம் பெற்ற பெருஞ்சிறப்பு என்பது இவருக்கு மட்டுமேதான் உண்டு.

அந்தப் படிப்படியான பயிற்சிகளில் அத்துப்படியான காரணத்தால் தான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பின்னால், இயக்கத்தை மிகப்பெரிய உயரத்துக்கு வளர்த்து எடுக்க அவரால் முடிந்தது.

ஏடுகள், இதழ்கள், வெளியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும், திராவிடர் கழகத்திற்கு இணையாக யாரையும், எந்த அமைப்பையும் ஒப்பிட முடியாது என்கிற அளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த கல்விப் பணியை - பல்கலைக் கழகம் என்ற அளவுக்குப் பரிணமிக்கச் செய்த பாங்கு - கண்ணுள்ளவர்களுக்குத் தெரியும்; கருத்துள்ளவர்கள் கைகுலுக்கிப் பாராட்டுகிறார்கள்.

கல்வி நிறுவனங்களை எப்படி நடத்தவேண்டும் என்பதை நண்பர் வீரமணியிடம் தெரிந்துகொள்ளுங்கள் என்றாரே சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் - அது என்ன சாதாரணமா?

கழகத்திற்காக அவர் அமைத்துள்ள கட்டுமானப் பணிகள் (Infrastructure) கம்பீரமானவை.

தலைநகரமான புதுடில்லியில் நடுநாயகமாக அய்ந்து அடுக்குப் பெரியார் மய்யம் அசோகன் கல்வெட்டுப் போல காலாகாலத்திற்கும் பேசிக்கொண்டே இருக்கும்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தை உருவாக்கி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், மியான்மா, துபாய், குவைத் முதலிய நாடுகளில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரவச் செய்து மண்டைச் சுரப்பினை உலகைத் தொழச் செய்த நேர்த்தியை நேர்மை கொண்ட நெஞ்சங்கள் வாழ்த்திக் கொண்டு இருக்கின்றன.

சாதனைகள் என்று எடுத்துக்கொண்டால், அத்தியாயம் அத்தியாயமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தந்தை பெரியார் காலத்தில் மாநில அளவில் மட்டுமே இருந்த இட ஒதுக்கீடு இன்றைக்கு மத்திய அரசு அளவில் கிடைப்பதற்காக இவர் பட்டபாடு, மேற்கொண்ட முயற்சிகள் என்ன என்பதை ஒரு பிரதமராக இருந்தவரே (வி.பி. சிங்) ஒப்புக்கொண்டு பாராட்டினார்.

சமூகநீதியின் கழுத்தை நோக்கி சங்கு சக்கரம் வரும்பொழுதெல்லாம் தலை கொடுத்துக் காப்பாற்றிக் கொடுத்த காரியத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்கிறார்கள்.

கிராமப் பிரச்சாரத் திட்டம், கல்வி நிறுவனங்கள் முன் பிரச்சாரம், நடமாடும் புத்தகச் சந்தைகள், வீதி நாடகங்கள், பிரச்சினைகளின் அடிப்படையில் தொடர் கூட்டங்கள், அடுக்கடுக்கான மாநாடுகள், மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள், மகளிர் சங்கமம், குழந்தைகள் முகாம், பெரியார் சமூகக் காப்பு அணி, மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டிகள், பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் செயல்பாடுகள், விடுதலையும், பெரியார் பல்கலைக் கழகமும் இணைந்து வாகை சூட வாரீர்! எனும் புதிய அணுகுமுறைகள் மூலமாகக் கழகம் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக மணம் வீசி நிற்கிறது என்றால், எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் இந்தத் தலைவர் அல்லவா? பெரியார் திரைப்படம் - நாம் கனவில்கூட நினைத்துப் பார்க்காத ஒன்றாயிற்றே!

தமிழர் தலைவர் என்று திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்களாக இருக்கக் கூடிய கலைஞர் போன்றவர்கள் அங்கீகரிக்கும் தலைவராக ஒளிவீசிக் கொண்டு இருக்கிறார்.

78 வயதில் 68 ஆண்டு பொது வாழ்க்கை என்ற விகிதாச்சாரம் இந்தத் தலைவருக்குத்தான் உண்டு.

இன்னும் எத்தனையோ கூறலாம்; இந்த இயக்கத்தில் இருப்பது, இந்தத் தலைமை நமக்குக் கிடைத்திருப்பது, இந்தக் கொள்கையை நாம் பற்றிக் கொண்டது என்பதெல்லாம் வேறு யாருக்கும் கிடைக்காத - கிடைக்க முடியாத பெருஞ்செல்வமாகும்.

அந்தத் தலைவரின் ஆணையை ஏற்று அய்யா பணி முடிக்க நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோம்!

வாழ்க தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!

--------------------- “விடுதலை” தலையங்கம் 1-11-2010

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நமது ஆசிரியரின் பிறந்த நாள் மகிழ்வில் இந்த எளியோனும் பங்கு கொள்கிறேன்.

நலம் தானே குருவே..! ஆசிரியருக்கு திராவிட மணி அய்யா அவர்கள் எப்படியோ எனக்கு தாங்கள்! எனது மௌனங்கள் குறித்து தவறாக தாங்கள் எதுவும் கருத மாட்டீர்கள் என்றே உறுதியாக எண்ணுகின்றேன். மன்னியுங்கள் தோழர்! புத்தாண்டன்று அலை பேசுகிறேன்.விடை பெற்றுக் கொள்கிறேன் அது வரை!

Thamizhan said...

தமிழர் தலைவரின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்! (02/12/10)

(Pls see Attachment )

நம் பயணங்கள் முடிவதில்லை! - தமிழர் தலைவரின் பிறந்த நாள் செய்தி
http://www.viduthalai.periyar.org.in/20101201/news01.html

வீரமணி - நமக்குக் கிடைக்க முடியாத ஒரு நல்ல வாய்ப்பு!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news02.html

கண்மணி வீரமணியின் அரும்பணி!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news03.html

தமிழர் தலைவர் பற்றி ஏடு, இதழ்கள் (ஆனந்த விகடன்,தமிழ் முரசு இந்தியா டுடே)
http://www.viduthalai.periyar.org.in/20101201/news23.html

உயிர் போனாலும் வரமாட்டேன்!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news29.html

தமிழர்தலைவரின் பன்முகம்!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news24.html

சிலைகள் பேசுகின்றன!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news30.html

யார் இவர்...?
http://www.viduthalai.periyar.org.in/20101201/news39.html

சாவியின் பார்வையில்....
http://www.viduthalai.periyar.org.in/20101201/news37.html

சமூகச் சீர்திருத்தச் செம்மல் வீரமணியார் வாழ்க! வாழ்க!!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news44.html