Search This Blog

20.12.10

ஜோதிடத்தை நம்பி குழந்தையைக் கிணற்றில் வீசி எறிந்த பெண்


ஜோதிடத்தை நம்பி குழந்தையைக் கிணற்றில் வீசி எறிந்த பெண்

சிறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா?

அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் இலட்சணம் இதுதானா? வேண்டுமானால் பக்தி வீட்டுக்குள்ளிருக்கட்டும்!

தமிழர் தலைவர் கண்டனம்

விண்வெளி ஆய்வுக்கூடமான சிறீஅரிகோட்டாவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன் ஆந்திர மாநில காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று விஞ்ஞானி அர்ச்சனை செய்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிரானதல்லவா - விஞ்ஞானிக்குப் பக்தி இருந்தால், அது அவர் வீட்டுக்குள் பூஜையறையில் இருக்கட்டும் - ஆனால், மதச் சார்பற்ற அரசுப் பணியில் அதனைத் திணிக்கலாமா? என்று வினா எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

இன்றைய ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள நெஞ்சை உருக்கும் செய்தி ஒன்று, மூட நம்பிக்கையால் நம் மக்கள் வாழ்வு எப்படி சீரழிந்து சின்னாபின்ன மாக்கப்படுகிறது என்பதை விளக்குவதாக உள்ளது!

ஜோதிடத்தால் பெற்ற பிள்ளையைக் கிணற்றில் தூக்கி எறிந்த குரூரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற 25 வயது நிறைந்த பெண், தன் குடும்பத்தாரின் சம்மதமின்றி தத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு ஸ்பின்னிங்மில்லில் வேலை பார்க்கும் தர்மராஜ் என்பவரை இரண்டாண்டு களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்; இரண்டு குடும்பங்களுமே இந்தக் காதல் திருமணத் தம்பதிகளை ஏற்க மறுத்துவிட்டன. (ஜாதி மறுப்புத் திருமணமாகவும்கூட இது இருந்திருக்கலாம் - உறுதியாகத் தெரியவில்லை).

இவர்களுக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று பிறந்து வளர்ந்துவரும் நிலையில், இந்த காளீஸ்வரி என்ற (தாய்) பெண், எவனோ வழியில் போகும் ஒரு ஜோசியக் காரனிடம் ஆரூடம் கேட்டாராம்; அவன், நீ இந்தக் குழந்தையை எப்படியாவது விட்டொழித்தால்தான் உங்களது குடும்பத்தவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வர் என்று ஜோசியம் கூறினானாம்!

அதைக் கேட்டு, இந்த மூட நம்பிக்கையால் தனது 18 மாத ஆண் குழந்தையை ஒரு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்ய முன்வந்தாராம்!

நாடகம் அம்பலமானது

இதைச் செய்துவிட்டு, கழுத்தில் போட்டிருந்த செயினைத் திருட, யாரோ ஒரு இளைஞன் தனது குழந்தையைப் பிடுங்கி கிணற்றில் வீசி எறிந்ததாக, காவல் துறையினரிடம் ஒரு போலி நாடகம் ஆடியுள்ளார்! காவல்துறை அதிகாரிகள் உண்மையை வரவழைத்து விட்டனர்!

என்னே மனிதாபிமானமற்ற கொடுமை!

இதில் ஜோதிட மூட நம்பிக்கை, காதல் திருமண எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புக்கு மறுப்பு என்ற சமூகக் கட்டுப்பாட்டு மூட நம்பிக்கை என்ற மூவகை மூடத்தனங்களும் சேர்ந்து, அந்த 18 வயது குழந்தையைக் கொன்றுள்ளது என்பது தானே உண்மை?

வன்மையான கண்டனத்திற்குரிய இச்சம்பவம் உணர்த்துவது என்ன? இன்னமும் பெரியாரும், அவர்தம் இயக்கமும், கொள்கைப் பிரச்சாரமும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதுதானே!

இவராவது படிக்காத ஒரு கிராமத்துப் பெண், இளம் வயதில் இப்படி ஒரு முடிவு எடுத்தால் இனிவரும் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் தப்புக் கணக்கு அதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

அதைவிட வெட்கத்தாலும், அவமானத்தின் ஆழத் தாலும் மிகவும் வேதனை அனுபவிக்கவேண்டிய மற்றொரு முக்கிய செய்தி:

விண்வெளி விஞ்ஞானியின் மூடநம்பிக்கை

சிறீஅரிகோட்டாவிலிருந்து இன்று பறந்திருக்க வேண்டிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - ஜி சாட் 5 பிரைம் என்ற செயற்கைக்கோள் (விண்வெளி ஆராய்ச்சித் துறையினரால்) தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்!

ரஷ்யாவிலிருந்து வந்த கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் என்ஜினில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, கசிவு காரணமாக, புறப்படுவது தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்! தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்!

இதன் தலைவர் (இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர்) திரு. ராதாகிருஷ்ணன் என்ற கேரளத்தைச் சார்ந்த விஞ்ஞானி (இவர் மாதவன் நாயருக்கு அடுத்தபடி இந்தப் பதவியை ஏற்றவர்) இந்த விண்வெளிக்குப் புறப்படும் ராக்கெட் நல்லபடி புறப்பட, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தாராம்!

ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி, காளஹஸ்தி கோவிலில் உள்ள கடவுளை வேண்டினார் என்பது எவ்வளவு அறியாமை! மடமை! மூட நம்பிக்கை! அறிவியலுக்கு நேர்மாறானது!

அந்தக் கோபுரம் இடிந்து கோயிலே சில மாதங்களுக்குமுன் தரைமட்டமான பிறகும்கூட - இவர்களுக்குப் புத்தி வரவில்லையே!

தன்னைக் காக்கத் தெரியாத - முடியாத கடவுளா உன்னைக் காப்பாற்றுவான் என்று தந்தை பெரியார் கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது! அதன் பின்னரும் கிளம்பவில்லையே! இதுதான் பக்தியின் சக்தி!

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நமது அரசு மதச்சார்பற்ற (Secular) அரசு; அதுமட்டுமல்ல - ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை (Fundamental Duties) என்பதில் அறிவியல் மனப்பாங்கு Scientific Temper,’’ ‘‘Spirit of Enquiry - கேள்வி கேட்கும் ஆராய்ச்சி, Humanism - மனிதநேயம், Reform - சீர்திருத்தம் - இவ்வளவும் தேவை என்று 51ஏ பிரிவின்படி கூறியுள்ளதே!

இவர்களுக்கு - மேதைகளுக்குப் பொருந்தாதா?

மதச் சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை எல்லாம் இவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறதே இது நியாயந்தானா?

திருப்பதி கோயிலுக்குச் சென்றபோதும் பலன் ஏற்பட்டதா?

ஏற்கெனவே, இவரின் முன்னோடி, விண்வெளி ஆராய்ச்சி செய்து கண்டறிந்த ராக்கெட்டை அனுப்புமுன் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வேண்டுவது, குருவாயூருக்குச் சென்று, குருவாயூர் கிருஷ்ணனை வேண்டுவது போன்ற கேலிக் கூத்தான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர்! கடைசியில் பலனின்றித் தோல்வியில் முடிந்ததும் உண்டு.

நாடு முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள், மதச்சார்பின்மை தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் இதனைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பவேண்டும்.

பக்தி வீட்டுக்குள் இருக்கட்டும்!

அந்த விஞ்ஞானிக்குப் பக்தியிருந்தால் அது அவரது வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும். விண்வெளிக் கூடத்திற்கு வரவழைக்கப்படலாமா?

இந்த மெத்தப் படித்த மேதாவிகளின் கேலிக் கூத்துக்குமுன், ஆனைமலை காளீஸ்வரிகளின் மூட நம்பிக்கை வெகுசாதாரணமான சின்ன கோடாக மாறிவிடுகிறதே!

படிப்புக்கும், அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா நம் நாட்டில்? மகா வெட்கக்கேடு!

தலைவர்,

திராவிடர் கழகம். “விடுதலை”20-12-2010

0 comments: