நினைவு நாள் சிந்தனை
டிசம்பர் 24 தந்தை பெரியார்தம் நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, அன்று மட்டும்தான் நினைக்கப்படும் தலைவர் அல்ல, அவர்!
காற்றுக்கென்று குறிப்பிட்ட நாள் உண்டா? கருத்துக் கதிரவன் தந்தை பெரியார் மானுட சமூகத்தில் கரைத்துவிட்ட சகாப்தவாதி.
வருணம் என்று சொன்னாலும், வருக்கம் என்று சொன்னாலும், பாலியல் நீதி என்று வந்தாலும் வாழ்வின் சகல பரப்புகள் மீதும் தன் சித்தாந்தத்தை ஆழமாகச் செதுக்கிச் சென்றுள்ள தலைவருக்கு ஒரு நாள் மட்டும் நினைவு நாளாக இருக்க முடியாது.
அதுவும் மத மாச்சரியங்களின் நச்சுக் கிருமிகள் மனிதனை மிருகமாக்கி சக மனிதனைப் பார்த்து உறுமும். ஒரு காலகட்டத்தில், அதன் சவாலாக எழுந்து நிற்கும் சரித்திர நாயகர் ஒவ்வொரு நொடியும் மானுடத்திற்குத் தேவைப்பட்டவராகிறார்.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கிறது, அதன் தீய நஞ்சான தீண்டாமை இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் அரண் போன்ற பகுதிகள் உண்டு.
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா என்ற பகுத்தறிவுப் பகலவனின் கேள்விக் கணைக்கு இந்நாள் வரை பதில் கிடையாது.
ஆனாலும் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் - குடியரசு நாளும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது/
எந்தெந்தப் பிரச்சினைகளை எல்லாமோ கையில் எடுத்துக்கொண்டு சிலம்பாட்டம் ஆடும் இந்திய அரசியல்வாதிகளுக்கு மனிதனைப் பிறப்பின் அடிப்படையிலேயே பேதப்படுத்தும் இந்த ஜாதிச் சழக்கை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆளானதில்லை.
ஒழிக்க முன்வராவிட்டாலும் பரவாயில்லை; ஜாதிய உணர்வு நோய்க்கு ஆளாகிவிட்டவர்களாக ஆகிக் கிடக்கிறார்களே - அதை நினைத்தால் தான் ஆத்திரம் வருகிறது.
வெட்கம் இல்லாமல் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்ற சூளுரைக்கிறார்களே அதன் பொருள் என்னவாம்! வருணாசிரமக் காப்புதானே?
தனது இறுதிப் போராட்டம் என்று தந்தை பெரியார் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போர்க் கொடியைத் தூக்கினார்.
மானமிகு கலைஞர் அரசு இரண்டு முறை சட்டங்கள் செய்தது.
இரண்டு முறையும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் செல்லுகின்றனர். இப்படிப் பச்சையாக ஜாதி வர்ணம் காட்டும் பார்ப்பனர்கள் நல்ல பாம்பாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நம் மக்களும் பொறுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
சமூகத்திலே இந்த உயர்ஜாதித் தன்மையில் நிலைக்கக் கூடியவர்கள், பெரும்பாலான மக்களுக்கான அரசியலிலும் கூட மூக்கை நுழைத்து நம் மக்களைக் கூறுபோட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஊடகங்கள் வாயிலாக அவர்களின் கருத்தை பொதுக் கருத்தாகத் திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். பக்திப் போதையிலே சிக்குண்டு கிடக்கும் நம் மக்கள் பார்ப்பனியத்தின் கண்ணிவெடிகளில் சிக்குவது ஆச்சரியப் படத்தக்க ஒன்றல்ல.
பெரும்பான்மை மக்களின் உரிமைகளை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் செல்லுகிறார்களே பார்ப்பனர்கள் - அந்த நீதிமன்றத்தில் பெரும்பான்மை மக்களுக்கான நீதியாவது கிடைக்கிறதா?
இதுதான் இன்றைய சமூகத்தின் யதார்த்தமான நிலைப்பாடு.
சமுதாயத்தின் அடித்தளத்தில் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தாமல் வெறும் கொசு வேட்டையாடுவதால் பயனில்லை.
தந்தை பெரியார் நினைவு நாளில் அதனைத்தான் அசை போடவேண்டும். மூல பலத்தை நோக்கிப் போர் புரிய கிளர்ந்தெழவேண்டும்.
இங்கு கடவுள் மறுப்பு என்பது வெறும் பகுத்தறிவைச் சார்ந்தது மட்டுமல்ல - ஜாதி எதிர்ப்பைச் சார்ந்தது - பாலியல் உரிமையைச் சார்ந்தது, சமூகநீதியைச் சார்ந்தது.
காரணம் ஜாதியை உண்டாக்கியது கடவுள் என்றும், ஏற்ற தாழ்வுக்குக் காரணம் கர்மபலன் என்றும், பெண்ணடிமை என்பது சாஸ்திர ரீதியானது என்றும் ஆக்கி வைக்கப்பட்ட நிலையில், கடவுள்மீதும், மதத்தின் மீதும், வேத, இதிகாச, புராண, சாஸ்திரங்கள்மீதும் கை வைத்தாகியே தீரவேண்டும். இதனைப் புரிந்துகொள்ளாமல் பெரியார் ராமனை செருப்பால் அடித்தார், பிள்ளையாரை உடைத்தார், மனுதர்மத்தைக் கொளுத்தினார் என்று மேம்போக்காகப் பேசும் படித்தவர்கள் முதலில் தந்தை பெரியாரின் உண்மை நோக்கினைப் புரிந்துகொள்ள வேண்டும்; ஆம், நாம் மேலும் புரிய வைக்கவேண்டும்.
தந்தை பெரியார் நினைவு நாள் என்பது இத்தகு ஆக்க ரீதியான சிந்தனைகளை மேலும் கூர்தீட்டிக் கொள்ளக் கூடிய வரலாற்றுக் குறிப்பு நாள்.
பெரியார் பணி முடிக்க உறுதி கொள்வோம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
------------------”விடுதலை” தலையங்கம் 24-12-2010
1 comments:
அந்த அரிமா நோக்கில்...!
நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.
அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!
ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.
அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.
அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,
சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!
மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!
சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.
காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.
ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?
ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!
பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!
மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!
பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!
பெரியார் மறைய மாட்டார்!
பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?
திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,
விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்
பாதையில் பயணிக்கிறோம் என்பதை
நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து
தந்தையின் தன்னிகரற்ற
தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.
நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,
இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!
அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!
எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.
வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
--------தலைவர்,திராவிடர் கழகம். ”விடுதலை” 24-12-2010
Post a Comment