Search This Blog

9.12.10

கருப்புச் சட்டை அணியவேண்டும் - ஏன்?


-

மதுரையில் கடந்த 5.12.2010 அன்று நடைபெற்ற தென்மண்டல திராவிடர் மாண வர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மதுரையில் 1946 இல் நடைபெற்ற முத லாவது மாகாண கருப்புச் சட்டைப்படை மாநாடுபற்றிக் குறிப்பிட்டார்.

அந்த மாநாடுகள் 1946 மே 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. மதுரை வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ்ப்புறத்தில் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்தக் கருப்புச் சட்டை மாநாட்டினை அறியும் முன் கருப்புச் சட்டை அணிவதுபற்றி ஒரு குறிப்பும் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திருச்சிராப்பள்ளியில் 17 ஆவது திராவிடர் கழக - 4 ஆவது மாகாண சுயமரியாதை மாநாடு 29, 30.9.1945 ஆகிய நாள்களில் நடைபெற்றன. அம்மாநாட்டில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.

அதில் தீர்மானம் 3(ஆ) பிரிவில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது.

கழகத்திற்கு ஆண்டுதோறும் அங்கத்தினர் சேர்த்தல், அவ்வப்பொழுது பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து, இயக்கப் பிரச்சாரகர்களைக் கொண்டு கழகக் கொள்கைகளை பொது மக்களுக்கு விளக்கிக் கூறல்; இயக்கத் தினசரி, வாரப் பத்திரிகைகள் மூலம் தலைமை நிலை யத்திலிருந்தும் இயக்கத் தலைவராலும் அவ்வப் பொழுது விடுக்கப்படும் வேண்டுகோள்களை நிறைவேற்றல்; கருஞ்சட்டை அணிதல் மற்றும் அந்தந்த ஊர் வசதிக்கேற்ப பகுத்தறிவு நூல் நிலையம்; முதியோர் பள்ளி அமைத்தல் முதலியன.

இயக்கத் தொண்டர்களாயிருப்போர் இயக்கக் காரியங்களைக் கவனிக்கும்பொழுதும், கூடுமாயின் முழுநேரமும் கருஞ்சட்டை அணிந்து இருக்கலாம். கழக உறுப்பினர்கள் அனைவருமே திராவிட இன மக்களின் இன்றைய இழி நிலையைக் காட்டும் அறி குறியாக சமயம் வாய்க்கும்பொழுதெல்லாம் கருப்புடை அணிதல் அவசியமாகும் என்று தீர்மானிக்கப்பட்டது.

23 ஆவது தீர்மானமாக, திராவிடரின் விடுதலைக்காகப் போரிடவும், சகலவித நட வடிக்கைக்கும் தயாராக இருக்கவும் இசையும் ஒரு மாகாண திராவிட விடுதலைப் படை(Dravidian Freedom Force) அமைக்க வேண்டு மென்றும், அதற்கு ஊர்தோறும் கிளைப் படைகள் அமைக்கவேண்டுமென்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

இத்தகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கருப்புச் சட்டைப் படை அமைக்கும் பணிகளும் தீவிரமாகத் தொடங்கப்பட்டன. அதற்கு ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகியோர் தற்காலிக அமைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தக் கருப்புச் சட்டைப் படை எதற்கு? குடிஅரசு (17.11.1945) தலையங்கம் கூறுகிறது.

இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக் கிறார்கள் என்பதைக் காட்டவும், அந்த இழிவை நீக்கிக் கொள்ளத் தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும், அதற்கான முயற்சிகளைச் செய்யத் தலைவர் அவர்கள் கட்டளைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படையின் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில்தான் மதுரையில் 1946 மே 11 மற்றும் 12 ஆகிய நாள்களில் முதலாவது மாகாண கருப்புச் சட்டைப் படை மாநாடு நடைபெற்றது.

தொடர்வண்டி நிலையத்திலிருந்து மாநாட் டுப் பந்தலுக்கு தலைவர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டனர். 20 ஆயிரம் கருப்புச் சட்டைத் தொண்டர்கள் (நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா!) அணி வகுக்க, நடிகவேள் எம்.ஆர். இராதாவும், பாவலர் பாலசுந்தரமும் புரவிகளில் இராணு வக் கருப்புடையில் கம்பீரமாக அமர்ந்து அந்த எழுச்சி மிகு பேரணியை வழி நடத்தி வந்தனர்.

முதல் நாள் மாநாடும், பேரணியும் எழுச்சிப் பண்பாடின.

பார்ப்பனர்களுக்கு அளவு கடந்த ஆத் திரம். மதுரையில் வக்கீல் பார்ப்பனர் வைத் தியநாதய்யர் (ஆச்சாரியார் ராஜாஜியின் கோஷ்டியைச் சேர்ந்தவர்) முதல் நாள் இரவே ஒரு கூட்டத்தைக் கூட்டி, சதித் திட் டங்கள் தீட்டி, கூலிகளை வாடகைக்கு அமர்த்தி மதுரையில் தென்படும் கருப்புச் சட்டைக்காரர்களைத் தாக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

இரண்டாம் நாள் மாநாடு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நகருக் குள் கருப்புச் சட்டைக் கண்மணிகள் ஆண் - பெண் இருபாலரையும் தாக்குகிறார்கள் என்ற செய்தி மாநாட்டுக்கு வந்து சேர்கிறது.

பந்தலை விட்டு யாரும் போகவேண்டாம் என்று தந்தை பெரியார் கூட்டத்தை அமைதிப்படுத்தினார் - ஒழுங்குபடுத்தினார்.

மதுரைக் கோயிலுக்குள் கருப்புச் சட்டை யினர் செருப்பு அணிந்து சென்றனர்; பெண் பக்தர்களைக் கேலி செய்தனர் என்று, தாங்கள் ஈடுபடும் வன்முறைக்கு ஒரு நியாயத்தை உண்டாக்குவதற்காகப் புரளியைக் கிளப்பிவிட்டனர் (மகளிருக்கு மரியாதை கொடுக்கும் இயக்கத்தின்மீது பார்ப்பனர் சுமத்திய வீண் பழியை தமிழர் தலைவர் 5.12.2010 மதுரை மாநாட்டில் எடுத்துக் காட்டினார்) மாநாட்டு அலுவலகத்துக்குள் புகுந்து பொருள்களை உடைத்தனர் - விலை மதிப்புள்ள பொருள்களைத் திருடியும் சென்றனர்.

கழகக் கொடியைக் கொளுத்தி காலித்தனத்தின் உச்சியில் நிர்வாணக் கூத்தாடினர்.

காவல்துறை கைகட்டி நின்றது - மதுரையில் தென்பட்ட கருப்புச்சட்டையினரைப் பிடித்து ஒரு பங்களாவில் அடைத்துவிட்ட னர். தோழர்களைத் தேடி குதிரை வண்டியில் சென்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ. திராவிடமணியை வண்டியிலிருந்து கீழே தள்ளித் தாக்கினார்கள். ஒரு முசுலிம் வீட்டில் அடைக்கலம் தேடி உயிர்ப் பிழைத்தார்.

காலிகள் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்ததுபோல கடைசியில் மாநாட்டுப் பந்தலுக்கே திரண்டு வந்து தீ வைத்தனர். (பார்ப்பனர்கள் தங்கள் தருமத்தைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்திப் போராடலாம் என்று மனுதர்மம் (அத்தி யாயம் 8; சுலோகம் 348) கூறியுள்ளதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது).

தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து தாக்கிட முனைந்தனர். கற்களை வீசினர்; கைகட்டி நின்ற காவல்துறை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு வானத்தை நோக்கிச் சுட்டது. ஒரு வழியாகக் கழகத் தோழர்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தை பெரியார் அவர்களை கொடை ரோடு சென்று ரயிலில் அனுப்பி வைத்தனர்.

மிகப்பெரிய அளவிற்குக் கலவரம் மூண்டு பல உயிர்கள் நாசமடைந்திருக்கவேண்டிய ஒரு சூழலை, அளவற்ற நிதானத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொண்ட பெரும் போக்கினால் தடுத்து நிறுத்திய தந்தை பெரியார் அவர்களின் தலைமைப் பண்பு கவனிக்கத்தக்கதாகும் - வழிகாட்டத் தகுந்ததும் ஆகும்.

11, 12 ஆகிய நாள்களில் மதுரையில் இவ்வளவுப் பெரிய கலவரம் நடந்து முடிந் திருக்கிறது. அதனால் கழகம் சோர்வடைந்து விடவில்லை. தந்தை பெரியார் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த வாரமே 18 மற்றும் 19 ஆம் நாள்களில் கும்பகோணத்தில் மாநாடுகள் நடைபெற்றன என்றால், அதன் பெற்றியை நினைத்துப் பாருங்கள்.

இதில் ஒரு வேடிக்கை உண்டு. அப்பொழுது சென்னை மாநில முதல் அமைச்சரா யிருந்தவர் தங்குதூரிப் பிரகாசம் என்ற பார்ப்பனர் (காங்கிரஸ்). மதுரைக் கலவரம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்தார். அவர் யார் என்றால், அவரும் ஒரு பார்ப்பனர். பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்துகொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான். நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைதான்!

மதுரை மாநாட்டுக் கலவரத்தைப்பற்றி தந்தை பெரியார் குடிஅரசு தலையங்கத் தில் (18.5.1946) எழுதுவதைக் கருத்தூன்றிக் கவனிக்கவேண்டும்.

மதுரையில் நடந்த பார்ப்பன சூக்ஷி, தொல்லை, துன்பம் ஆகியவை நாம் வேகமாய் நமது லக்ஷியத்தை நாடிச் செல்வதற்குச் சாட்டை அடியேயாகும். நம் பெண்களுக்கும், சில பிரதிநிதிகளுக்கும் மதுரையில் ஏற்பட்ட இழிவு, துன்பம் ஆகியவை நமக்கு உணர்ச்சியை உட்கொள்ளும் மருந்தின் மூலம் கொடுக்காமல், இஞ்சக்ஷன் (அதாவது ஊசி போடுவதன்) மூலம் செலுத்தப்பட்ட மருந்துமூலம் கொடுக்கப்பட்ட தாகக் கருதவேண்டும். பார்ப்பனர் இப்படிச் செய்தும் நமக்கு மானம், உணர்ச்சி வரவில்லை யானால், பிறகு நமக்கு பார்ப்பனர் சொல்லும் வேசி மகன், சூத்திரன், கீழ்ஜாதி என்பனவாகிய பேர் மிகமிகப் பொருத்தமானதாகும். ஆகையால், மதுரைப் படிப்பினையைக் கொண்டு யார் யார் பரீக்ஷையில் தேறுகிறார்கள் என்று பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம்தான் நாம் மனிதத் தன்மை பெற்று திராவிடத்தைப் பெறப் போகி றோம். ஆகவே, நாம் செய்யவேண்டியது யாவரும் கருப்புச் சட்டை அணியவேண்டும். எங்கும் கருப்புக்கொடி பறக்கவேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும், உடையிலும் கருப்புக் கொடி சின்னம் துலங்க வேண்டும்.

இந்தக் காரியம்தான் நாம் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும், வீரமும் கொண் டோமா என்பதை உறுதிப்படுத்தும் என்கிறார் உலகத் தலைவர் தந்தை பெரியார்.

(குடிஅரசு, 18.5.1946).

ஒரு நெருக்கடியை, ஒரு தொல்லையை, அடக்குமுறையைக் கழகம் சந்திக்கும் போது, எப்படி நடந்துகொள்ளவேண்டும் - எந்த உணர்வைப் பெறவேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டும் அகராதியை அறிவுலக ஆசான் அவர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார் என்றுதான் கருதவேண்டும்.

மதுரையில் நடந்த கலவரம் குறித்து கழகத்தின் பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் மரண சாசனம் எனும் தலைப்பில் எழுதியதும் கருஞ்சட்டைத் தோழன் ஒவ்வொருவனின் மார்பில் பொறிக்கத் தக்கவையே!

நான் சாகவில்லை! நோய்க் கிருமிகள் என் உடலைத் துளைத்து, இரத்தத்தைக் குடித்து, என்னை நடைப் பிணமாக்கிய பிறகு, படுக்கையில் புரண்டு, கண் மங்கி, காது பஞ்சடைந்து, ஈளை கட்டி, இருமி, விக்கி வியர்த்து, நான் சாகவில்லை. பாம்பு கடித்து விஷம் ஏறிச் சாகவில்லை. புலி கடித்து இறக்கவில்லை. நான் சாகவில்லை, தோழர்களே! கொல்லப்பட்டேன்!! என் கடமையைக் களிப்புடன் செய்துகொண்டு இருக்கையில் கொல்லப்பட்டேன். உள்ளத்திலே, மூண்ட உணர்வுத் தீயினால் உந்தப் பட்டு, உற்சாகத்துடன், ஊர் சீர்பட உழைத் துக் கொண்டிருந்த நேரத்தில் கொல்லப் பட்டேன். எந்த மக்களுடைய வாழ்வு துலங்க வேண்டுமென்பதற்காக என் சொந்த வாழ்வு சிதைவதையும் பொருட் படுத்தாது பணிபுரிந்து வந்தேனோ, அதே மக்களாலேயே கொல்லப்பட்டேன். நண் பனை விரோதி என்று கருதிக் கொண்டு தொண்டு செய்பவனைத் துரோகி என்று எண்ணிக்கொண்டு, மனதிலே மாற்றான் தூவிய எண்ணத்தை வளரவிட்டுக் கொண் டதால், மருண்ட மக்கள் என்னைக் கொன்றனர். என்னைக் கொல்வதன்மூலம், ஏதோ ஓர் பெரிய கேட்டினைக் களைவதாக அவர்கள் எண்ணிக் கொண்டனர். அவர்கள் அறியார்கள், அவர்கள் கொன்றது, தங்களு டைய தோழனை, நண்பனை, இனத் தவனை என்பதை. என் இரத்தம் அவர் களின் கண்களுக்குக் காட்சியாக இருந்திருக்கும். அவர்கள், நெடுநாளைக்குப் பிறகேனும், கண்ணீர் சொரிவதால் சிந்தப் பட்ட இரத்தம், சமுதாயக் கறையைக் கழுவத் தியாகம் செய்த கடைசிப் பணி என்பதை உணர்ந்து, சொல்லால், செயலால் அவர்களுக் காகவே, பாடுபட்டேன். இரத்தமும் அதற்கே பயன்பட்டது. நான் வீணுக்கு மடியவில்லை. வேலையைச் செய்துவிட்டே மடிந்தேன். இகழ்வோர் இன்று உளர்; நாளை அறிவர் உண்மையை, அறியாமற் போயினும் என்ன? நான் அறிவேன், உயிர் போகும் வரை, நான், மனமார நம்பிய உன்னதமான கொள்கைகளைப் பரப்ப உழைத்து, அதே பணியிலேயே, இறந்துபட்டேன் என்பதை நான் சாகவில்லை. செத்துவிட்டிருந்தால் இந்தச் சாசனம் தேவைப்பட்டிராது. ஏனெனில், என் வாழ்நாள் முழுவதும், பணிபுரிந்து விட் டிருப்பேன். இப்போதோ, நான் கொல்லப்பட் டேன். வாழ்ந்திருப்பின், பணி புரிந்திருப்பேன்; அந்தப் பணி புரிய முடியாத நிலை ஏற்பட்டது. செய்யக்கூடியது அத்தனையும் செய்து முடிக்கு முன், கொல்லப்பட்டதால், செய்யவேண்டிய பணியில், செய்யாது விட்ட அளவு கொஞ்சம் இருக்கிறது. பாக்கி இருக்கிறது. என்னிடம் இரக்கம் காட்டுவோர், என் பொருட்டு கண்ணீர் விடுவோர், அந்தப் பாக்கிக் காரியத்தை, என் சார்பில் செய்யவேண்டும். இதுவே என் மரண சாசனம்.

(திராவிட நாடு, 26.5.1946).

திராவிடர் கழகத்திலுள்ள தோழர்கள் ஒவ் வொருவரும், தயாரித்துக் கொள்ளவேண்டிய அண்ணாவின் மரண சாசனம் இது.

இந்த மரண சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி தந்தை பெரியார் அவர்கள் பொதுவாழ்வில் எத்தனை எத்தனையோ முறை தாக்குதலுக்கு ஆளானதுண்டு. நமது கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் நான்கு முறை உயிருக்குக் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

நம்முடைய கருஞ்சட்டைத் தோழர்கள் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதும் உண்டு. உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அடிக்கப்பட்டுக் கொடியோர்களால் தூக்கில் தொங்கவிடப்பட்டதுண்டு.

என்றாலும், கழகம் அழிந்துவிடவில்லை. கருஞ்சட்டைப் பட்டாளம் குறைந்து போய் விடவில்லை. மதுரை மாநாட்டில் (5.12.2010) கழகத் தலைவர் மிக அழகாகவே சொன்னார்: அன்று கருஞ்சட்டை மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினர். கருஞ்சட்டைத் தோழர்களைத் தாக்கினர். அதே மதுரையில்தான் தந்தை பெரியார் சிலை நிமிர்ந்து நிற்கிறது. அதே மதுரை மாநகராட்சிதான் திராவிடர் இயக்கத் தின் ஆளுகையில், தமிழ்நாடே திராவிடர் இயக்கத்தின் ஆட்சியின்கீழ் என்று அழகாக ஒப்பிட்டுக் காட்டினார் நமது ஆசிரியர்.

இன்னும் சொல்லப்போனால், கருஞ்சட்டையினருக்குச் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது. எந்த அவைக்குச் சென்றாலும் அவனுக்குக் கைலாகு முதலாவதாகக் கொடுக் கப்படுகிறது.

காக்கிச் சட்டை அணியும் காவல்துறைத் தலைமை அதிகாரிகள் கூறுவதுண்டு - உங்கள் கருப்புச் சட்டை இல்லையென்றால், இந்தக் காக்கிச் சட்டை எங்களுக்கு ஏது? என்று நெகிழ்ந்து நன்றிக் கண்ணீர்த் திவலைகள் கண்களின் ஓரத்தில் கசிய தழுதழுக்கக் கூறுகின்றனரே!

தந்தை பெரியார் தந்துவிட்டுச் சென்ற இந்தத் தத்துவ உடைக்கு, வண்ணத்துக்கு ஒரு மாபெரும் வரலாறு உண்டு.

நம் பிள்ளைகளுக்கு எதைக் கொடுக்கத் தவறினாலும், இந்தக் கருப்புடையைப் பெரும் சொத்தாக அளிக்கத் தவறக்கூடாது.

குழந்தைப் பருவத்திலேயே கருப்புடையைத் தரிக்கச் செய்யவேண்டும். கழக ஊர்வலத்தில் கருப்புடை அணிந்து கைகளில் கழகக் கொடியைக் கொடுத்து முழக்கமிட்டு வரச் செய்யவேண்டும். கருஞ்சட்டைச் சிப்பாய்கள் கழகக் குடும்பத்திலிருந்து புறப்படட்டும்! -------------- (வளரும்)

--------------- கலி. பூங்குன்றன் ,தி.க. பொதுச் செயலாளர் அவர்கள் “விடுதலை” - 9-12-2010 இல் எழுதிய கட்டுரை


0 comments: