Search This Blog

27.12.10

நுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும்


வழிகாட்டும் தலைமைச் செயற்குழு! வெற்றி நமதே-வீறு கொண்டெழுக!

(1)

தோழர்களே, நமக்கு அடுக்கடுக்கான பணிகள். ஒரு நிமிடம் சிந்தனையைப் பின்னோக்கிப் பயணிக்க வைத்தால் எத்தனை எத்தனைப் பயணங்கள்! மலைப்பாகவே இருக்கிறது!

கரூர் மாநாடு, வாலாஜா மாநாடு, சீர்காழி மாநாடு, திருப்பத்தூர் மாநாடு, திருவரங்கம் மாநாடு, மதுரை மாநாடு என்று அடுக்கடுக்காக அலைகள்!

திருப்பத்தூரில் பொதுக்குழுவுடன் கூடிய மாநாடு-ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. நமது தோழர்களும் சளைக்காமல் ஈடு கொடுத்து இணையற்ற பணிகளைத் தோள் மீது சுமந்து புது அத்தியாயங்களைப் படைத்து வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரிகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வாம்-நமது மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை எப்படிச் சேர்ப்பது என்பதை முடிவு செய்ய நமக்கு உரிமையில்லையாம், நமது தமிழ்நாடு அரசுக்கு அருகதையில்லையாம்.

டில்லியில் குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள சொகுசு அறையில், அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் நாமதாரிகள் முடிவு செய்கிறார்களாம்.

சூட்சமம் புரிகிறதா? நுழைவுத் தேர்வை ஒழித்துவிட்ட காரணத்தால் நமது சுப்பனும், குப்பனும், காத்தாயி மகள் கருப்பாயும் மருத்துவக் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்துள்ளார்களே,

கருவேல் முள்ளாக உறுத்தாதா, இந்தக் கனக விசயன் பரம்பரைக்கு?

நெடுநாள் போராடி நம் மக்களுக்கு நாம் பெற்றுத்தந்த உரிமைகளையெல்லாம் நெட்டித்தள்ள-நெடுநாள் பகைவர்கள் சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்த நேரத்திலேயே அதனை எதிர்த்துக் கனல் கக்கியவர்கள் நாம்- போராட்டம் நடத்தியவர்கள் கருஞ்சட்டையினர்!

மானமிகு கலைஞர் அவர்களின் காலத்தில்-சமூக நீதி வரலாற்றின் நெடும்பாதையில், ஒரு கட்டத்தில் நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்டியது-காலத்தைக் கடந்த கல்வெட்டாக நிலைக்கக்கூடியதாகும்.

சமூகநீதிக்காகப் பிறந்தது திராவிடர் இயக்கம். அதன் ஒரே அரசியல் வாரிசு தி.மு.க-அதன் தன்னிரகற்ற தலைவர். தலைகொடுத்தேனும் சமூகநீதிப் பயிரைக் காக்கும் பகுத்தறிவாளர்.

அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் முன் மார்பை நிமிர்த்திக்காட்டி, தமிழ்நாடு அரசையும், நுழைவு தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் இணைத்துள்ளார் (Implead). மிக மிகப் பிற்படுத்தப்பட்டவன் நான்; இதில் எத்தனை, எத்தனை மிக என்பதை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்வீர்! என்று சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்த சரித்திரத் தலைவர் கலைஞர்.

நுழைவுத்தேர்வில் தொடக்கத்தில் தடுமாற்றத்திற்கு ஆளாகிய மத்திய அரசினை தன் அரிமாக் குரலால் நேர்கோட்டில் கொண்டு வந்து நிமிர்த்தி வைத்த சாதனை நமது மானமிகு கலைஞர் அவர்களையே சாரும். மத்திய அரசு சொன்னாலும் கேட்கமாட்டோம், மாநில அரசுகளும் சட்டம் செய்தாலும் குப்பைக்கூடையில் தூக்கி எறிவோம் என்ற இறுமாப்பில் மருத்துவக் குழுமம் மமதையோடு இருப்பதாகத் தெரிகிறது. முதலமைச்சர் கலைஞர் சங்கநாதம் செய்துவிட்டார், நுழைவு தேர்வுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லையென்று கறாராக அடித்துக்கூறிவிட்டார். திராவிடர் கழகம் வழக்கம்போல் வீதிக்கு வந்து விட்டது- நேற்று (டிச.18) சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் அவர்களின் வழிகாட்டுதலின் படி தீர்மானித்து விட்டோம். வரும்29 ஆம் தேதி மாலை 4மணிக்கு மாவட்ட தலை நகரங்களில் (கழக மாவட்டங்கள் அல்ல). ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டு பாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் முன்னின்று மாணவர் பட்டாளத்தை ஒன்று திரட்டி கிளம்பிற்று காண் சிங்கத்தின் கீர்த்திமிகு கூட்டம் என்று காட்ட வேண்டும். இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புப் பெட்டகம்-அதன் திறவுகோல் தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் அல்லவா!

களம் காண்பதிலே தம் காலத்தைச் செலுத்தி, நாட்டின் வரலாற்றை மாற்றும் கட்டுமானப் பணியில் ஈடுபடும் கருஞ்சட்டைப் படை தேதி குறித்துவிட்டது.

சமூகநீதிக்கொடி மூச்சுக்காற்றை தாழ்ந்து பறக்க அனுமதிக்காத அரிமா சேனையே!

டெல்லி மாநகரை அசைத்துக்காட்ட டிசம்பர் 29அய் ஒரு குறியீடாகக் கொண்டு களத்தில் குதித்திடுவீர்!

இடஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முதலாகத் திருத்திய சாதனைக்குச் சொந்தக்காரர் நமது தலைவர் தந்தை பெரியார். மண்டல் குழு பரிந்துரையை மக்கள் மத்தியில் பரிமாறச் செய்ய அழுத்தம் கொடுத்துச் செயல்படுத்திய இயக்கம் திராவிடர் கழகம். ஆம், இந்தப் போராட்டத் திலும் வென்று காட்டுவோம்!

தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் தலைமையிலே மண்டல் குழுப் பரிந்துரைகளின் பலன் இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக் குப் போய்ச்சேர முழுமுதற் காரணமாகப் போராடி வெற்றிக்கொடியை சமூகநீதித் தம்பத்தில் ஏற்றி காட்டினோமே! அதே போல நுழைவுத்தேர்வைத் தூக்கி எறியச் செய்து கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துக் காட்டுவோம்.

இது உறுதி! இது சபதம்! இந்த வகையில் நேற்று கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம் வரலாற்றில் ஒரு வைரக் கல்வெட்டாகும்.

வெற்றி நமதே வீறு கொண்டெழுக!

காரணம் புரிகிறதா?

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குரிய இடங்கள் : 460

இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் : 300

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் : 72

தாழ்த்தப்பட்டோர் : 18

முஸ்லிம்கள் : 16

உயர்ஜாதியினர் : 54

இதில் 200க்கு 200 கட் ஆஃப்

மதிப்பெண் வாங்கியோர் : 8

இதில் பிற்படுத்தப்பட்டவர் : 7

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 1

உயர் ஜாதியினர் : பூஜ்யம்

மானமிகு கலைஞர் ஆட்சியில் சட்ட ரீதியாக நுழைவுத் தேர்வு நொறுக்கித் தூக்கி எறியப்பட்டதால் ஏற்பட்ட பலன் இது.

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை உறுத்துகிறது. எனவேதான் மீண்டும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வர பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகிறார்கள்.

உஷார்! உஷார்!! உஷார்!!!

------------------ "விடுதலை”19-12-2010


***********************************************************************************

வழிகாட்டும் தலைமைச் செயற்குழு (2)

நுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும்


எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தொழிற்கல்லூரிகளில் சேர மாணவர் களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டு (செய்தி வெளியீட்டுத்துறை) செய்தி வெளி யீடு எண். 322; நாள் 30.5.1984 நுழைவுத் தேர்வுக்கான சுற்றறிக்கையாக இது அமைந்தது.

இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச் சங்கு ஊதி கலகக் கொடி உயர்த்தியவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆவார்கள் (விடுதலை, அறிக்கை, 8.6.1984).

நுழைவுத் தேர்வுக்கு அரசு ஆயத்தமாகிவிட்டதாம்; நாமும் கிளர்ச்சிக்கு ஆயத்தமாவோம்!

கிராம மக்களே,

பெற்றோர்களே,

தயாராகுங்கள்!

பல ஆயிரக்கணக்கானோர் சிறைச் சாலைகளை நிரப்பத் தயாராகுங்கள்!

அரசின் வீண் பிடிவாதம் உடையும்வரை போராடு வோம்!

காமராஜர் செய்யாததை, அண்ணா செய்யாததை, எம்.ஜி.ஆர். செய்வது எவ்வளவு சமூகத் துரோகம்?

இதனை எதிர்த்துப் போராடுவோம்!

நுழைவுத் தேர்வு ஒட்டகம் நுழையும் கதைதான் - மறந்து விடாதீர்கள்! (விடுதலை, 8.6.1984) என்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு முன்னதாகவே திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று அவசர அவசரமாக சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது (25.3.1984). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: திருவாளர்கள் எஸ்.ஜே. சாதிக் பாட்சா (தி.மு.க. பொருளாளர்) அப்துஸ் சமது எம்.பி., டி.என்., அனந்தநாயகி (காங்கிரஸ், தேவர் பேரவை) தி.சு. கிள்ளிவளவன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்), கே.ஆர். ராஜகோபால் (தலைவர், ஜனநாயகக் கட்சி, இளைஞர் பிரிவு) அய். சங்கரமணி (சாலியர் மகாஜனசங்கத் தலைவர்) ஆர். அருணாசலம் (பொதுச்செயலாளர், பிற்படுத்தப்பட்ட அரசு அலுவலர் சங்கம்) கே. சண்முகவேலு (தலைவர், தமிழ்நாடு சேனைத் தலைவர், மகாஜன சங்கம்), டாக்டர் வி. இராமகிருஷ்ணன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு தேவர் பேரவை), ஆர். கதிர்வேலு (தலைவர், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முற்னேற்ற சங்கம்), ஆர். நாகராசன் (துணைத் தலைவர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் இரயில்வே தொழிலாளர் கழகம்), அர. அரவிந்தன் (பொதுச்செயலாளர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் அஞ்சல் - தந்தித் துறை ஊழியர் சம்மேளனம்), பண்டரிநாதன் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் இயக்குநர்) முதலியோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் படிப்பு சொல்லித்தரும் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களைச் சேர்க்க, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நேர்முகத் தேர்வை நிறுத்திவிட்டு, இந்த ஆண்டுமுதல் நுழைவுத் தேர்வு ஒன்றைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை இந்தக் கூட்டம் மிகவும் கவலையோடு விவாதித்தது. நம்முடைய வருங்கால சந்ததியினருடைய படிப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புப் பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், குறிப்பாகத் திறந்த போட்டி என்ற பொதுப் போட்டியில் கிடைக்கவேண்டிய பங்கு மற்ற முன்னேறிய ஜாதிக்காரர்களால் கபளீகரம் செய் யப்படும் என்பதாலும் ஊழலை ஒழிப்பது என்பதுதான் இதன் அடிப்படை என்றால், நுழைவுத் தேர்வுமூலம் ஊழல் வராது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக கைவிடவேண் டும் என இக்கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக்கொள் கிறது.

அப்படி உடனடியாகக் கைவிடவில்லையானால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவதென்றும், திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்தவேண்டுமென்றும் இதற்கு அனைவரும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புக் கொடுப்போம் என்றும், இதை அரசியல் பிரச்சினை யாகக் கருதாமல் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எல்லா அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

திராவிடர் கழகம் மூட்டிவிட்ட எதிர்ப்புத் தீ நாடெங் கும் பற்றிக்கொண்டு விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன மாரி பொழிந்தார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

செய்தியாளர்: தொழிற் கல்லூரிகளுக்கெல்லாம் இன்டர்வியூ முறையை நீக்கிவிட்டு நுழைவுத் தேர்வு முறையை வைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் களே?

கலைஞர்: இண்டர்வியூ முறையினால் ஊழல் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டு அதை ஒழிப்பதாகச் சொல்கிறார்கள். இண்டர்வியூ முறை என்பது காமராசர் காலம், பக்தவத்சலம் காலம், அண்ணா அவர்கள் காலம், நான் முதலமைச்சராக இருந்த காலம் - அப்போதெல்லாம் அந்த முறையில்தான் நடைபெற்றிருக்கிறது. அப்போது யாராவது மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சியில் 140-க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் சென்று மீண்டும் ஒரு இண்டர்வியூ தேர்வு அவர்களில் பெரும் பாலோருக்கு நடைபெற இருக்கிறது. அதனால் அந்த முறையில் ஒன்றும் தவறு இல்லை. அதை நடைமுறைப் படுத்துகிறவர்கள் ஊழல் புரிகின்ற காரணத்தி னால்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுகிறது.

ஏற்கெனவே ப்ளஸ் 2 (பன்னிரண்டாவது வகுப்பு) அரசுத் தேர்வு எழுதி அதில் தேறியவர்கள் மீண்டும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு பரீட்சை எழுதவேண்டும் என்பது முதலில் அரசாங்கம் நடத்திய பரீட்சையை சந்தேகிப்பதாக ஆகும்.

புதிய முறை ஏற்கப்பட்டால், இண்டர்வியூ முறை எடுக்கப்பட்டால், அது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குத்தான் தீங்காக முடியும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ - இட ஒதுக்கீட்டு முறை யின்மீது எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு ஒரு வெறுப்பு உண்டு. அதை பலமுறை அவரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உண்மையான திராவிடர் இயக் கத்திற்குப் பயந்துகொண்டுதான் அந்த முறை இப் பொழுது அமலில் இருப்பதற்கு எம்.ஜி.ஆர். இடம் கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ணத்தைச் செயல்படுத்தக் கையாளுகின்ற வேறொரு வழிதான் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முறையாகும்.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அட் மிஷன்களுக்கு அமைச்சர்களும், ஆளுங்கட்சிக்காரர் களும் லட்சக்கணக்கிலே லஞ்சம் பெற்றதால் இப் பொழுது ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு இன்டர்வியூ முறையைக் குறை கூறுவது சரியல்ல.

இது எப்படி இருக்கிறது என்றால், ஜலதோஷம் பிடித்துவிட்டது என்பதற்காக மூக்கை அறுப்பதுபோல் இருக்கிறது என்று கூறினார் கலைஞர் அவர்கள்.

முசுலிம் லீக், வன்னியர் சங்கம் (வன்னிய அடி களார்), ஃபார்வர்டு பிளாக், யாதவர் மகாசபை, நாயுடு சங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் கட்சி (டாக்டர் சந்தோஷம்), இந்தியக் குடியரசுக் கட்சி, ஜனதா கட்சி, காமராஜ் காங்கிரஸ் (பழ. நெடுமாறன்) முதலியோர் எதிர்ப்புக் கற்களை வீசினர்.

அ.தி.மு.க.வுக்குள்ளேயே மதுரை முத்து அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர்கள் காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்களும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததில் அதிருப்தி உள்ளவர்களாக இருந்தனர்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திராவிட இயக்கப் பின்னணியோ, அதனைச் சார்ந்த சித்தாந்தமோ தெரிந்திருக்க - தெரிந்திருந்தாலும் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்ள வாய்ப்பில்லையே! அவர் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பினைக் கொண்டு வந்ததும் இந்தத் தன்மையால்தான்.

இல்லாவிட்டால் இப்படிப் பேசியிருப்பாரா?

பிராமணர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். இதற்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அவர்கள் ஏன் சங்கம் வைத்திருக்கிறார்கள்? அந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் (மாலைமுரசு, 31.5.1981, தஞ்சாவூர்).

இப்படிப் பேசியிருப்பவர் எப்படி திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவராக, அய்யா - அண்ணா கொள்கை களைப் புரிந்தவராக இருக்க முடியும்?

இன்னொரு படி மேலே சென்றும் பேசினார்:

நானாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கிய பொழுது, ராஜாஜி என் பின்னால் இருந்து ஆதரவு காட்டி அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறிய அறிவு ரையைப் பயன்படுத்திய நேரத்தில், அதைப் பார்க்க அவர் இல்லையே என்று எண்ணுகிறேன். (சென்னை, பாரதீய வித்யா பவன் நடத்திய விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு, 20.4.1984).

அரசியலில் நுழைந்த திராவிடர் இயக்கத்தின் பாட்டையில் பல காலகட்டங்களில் இத்தகு தடுமாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராட்டத்தினை அறிவித்துவிட்டார்!

23 இடங்களில் நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் இப்போராட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதித்தனர். நாடே தீப்பற்றி எரிந்தது போன்ற உணர்வு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே தகித்தது.

இதுதான் தமிழ்நாடு. இதனைப் புரிந்துகொள்ளாமல், டில்லியில் உள்ள மருத்துவக் குழுமம் வாலாட்டிப் பார்க்கிறது.

வரும் 29 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகம் - இளைஞரணியினர் களத்தில் குதிக்கின்றனர். ஆர்ப்பாட்டப் போர்ச் சங்கு முழங்க இருக்கின்றனர்.

தமிழகம் தொடங்கிவிட்டது - இந்தியா எதிரொலிக்கப் போகிறது.

-------------- “விடுதலை” 23-12-2010 இல் கலி. பூன்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

29 ஆம் தேதி ஆர்பாட்டம் ஆயத்தமாகி விட்டீர்களா?

நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்டி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக மாணவச் செல்வங்களைக் கரையேற்றிய சாதனையை நிகழ்த்திக் காட்டியது சமூகப்புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகம் - அதற்காக சட்டத்தை மிகச் சரியான முறையில் உருவாக்கி, சமூகநீதி மகுடத்தில் வைரக் கல்லைப் பதித்தது மானமிகு கலைஞர் தலைமையிலான இந்தச் சூத்திரர் அரசு.

பெரும்பாலும் மத்திய நிருவாகம் என்றாலே பார்ப்பனர் ஆதிக்கம்தான் என்பது தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்த பாலபாடமாகும்.

அதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டுதான், மத்திய மருத்துவக் கவுன்சிலின் - மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய அளவிலே திணித்திருக்கும் நுழைவுத் தேர்வாகும்.

இதனை வாபஸ் வாங்கவேண்டும் என்று அரிமா குரல் கொடுக்க, கண்டனக் கணைகளை வீச, வரும் 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார் தமிழர் தலைவர்.

கழகத் தோழர்களே, இடையில் ஒரே ஒரு நாள்! ஆயத்தமாகி விட்டீர்களா? ஒத்த கருத்துள்ள தோழர்களை அணுகிவிட்டீர்களா?

வெடிக்கட்டும், வெடிக்கட்டும்! கண்டனக் குரல் வெடிக்கட்டும் - வெடிக்கட்டும்!

போராடுவோம், வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

-----------”விடுதலை” 27-12-2010