Search This Blog

21.12.10

மதவெறி மாய்ப்போம்!மனிதநேயம் காப்போம்!!

ஜாதியை ஒழிக்க 3000 கழகத் தோழர்கள் சிறை சென்றனர்; 16 பேர் மாண்டனர்!

வைக்கத்தில் தமிழர் தலைவர் வரலாற்று உரை

ஜாதியை ஒழிக்க திராவிடர் கழக தோழர்கள் மூவாயிரம் பேர் சிறை சென்றனர். 16 பேர் மாண்டனர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

காந்தியாரைத் திணற வைத்தார் பெரியார்

நாய்க்கும், பன்றிக்கும் உள்ள உரிமை மனிதனுக்கு இல்லையா? என்று காந்தியாரைக் கேட்டுத் திணறடித்தவர் தந்தை பெரியார். காந்தியாருக்கு வேறு வழி தெரியவில்லை. வைக்கம் 85ஆம் ஆண்டு நினைவுநாளிலே சிறப்பாகச் சொல்ல வேண்டும்.

வைக்கம் போராட்ட வீரர்களுக்கு மரியாதை

தந்தை பெரியார் அவர்கள் இந்த வைக்கம் போராட்டம் தொடருவதற்கு முன்னாலே இதை முதலில் தொடங்கியவர்கள் டி.கே.மாதவன், அதே போல ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவமேனன், டாக்டர் பல்பு, தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார், பெரியாரின் தங்கை திருமதி எஸ்.ஆர். கண்ணம்மாள், கோவை அய்யாமுத்து, நாகர் கோவில் பெருமாள் நாயுடு, ஏ.கே.பிள்ளை, குஞ்சு ராமன், நாத்திகரான எஸ்.என்.டி.பி நாராயணகுரு தருமபரிபாலனத்தைச் சார்ந்த சகோதரன் பத்திரிகையின் ஆசிரியர் நாத்திகரான சகோதரர் அய்யப்பன், இப்படிப்பட்டவர்கள் அத்துணை பேருக்கும்தந்தை பெரியார் அவர்களோடு போராட்டத்தில் இறங்கிய இப்படி அத்துணை பேருக்கும் இந்த மாபெரும் அரங்கம் வீர வணக்கத்தை செலுத்தித்தான் இந்த விழாவை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இதிலே ஒரு வரலாற்றுக் குறிப்புச்செய்தி! காமராஜர் ஒரு இளைஞர். அவர் திருவனந்த புரத்துக்கு வந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்த நிலையில் இந்தச் செய்தியை அறிந்த அவரது வீட்டார் வற்புறுத்தல் அழைப்பின் பேரில் திரும்பச் சென்றார்.

காமராஜரே சொல்லியிருக்கிறார்

காமராஜர் அவர்களே சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சொல்லி, அது விடுதலையிலே பதிவாகியிருக்கிறது. எனவே, இந்தப் போராட்டம் என்பது சாதாரணமல்ல.

திருவில்லிபுத்தூர் தோழர் ச.அமுதன் அவர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார். கேரளாவைப் போல மூடநம்பிக்கைகள் அதிகமாகக் குடி கொண்டிருக்கின்ற ஒரு மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானம். கொச்சி சமஸ்தானம். இப்படி சமஸ்தானங்களுக்குள்ளே தனிஸ்தானங்கள்.

மலையாளத்தில் சொல்லும் பொழுது சொல்லுவார்கள்- அந்த விசுவாசம். அந்த மூடநம்பிக்கைகள் முகிழ்ந்திருந்த காரணத்தினாலே இன்னமும் சமுதாயத்திலே கீழ்நிலை இருக்கிறது. எண்ணிப்பார்க்க வேண்டும்.

வரலாற்றுக் குறிப்புகள்

வரலாற்றுக் குறிப்புமிக்க ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். இதே நவம்பரில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதைத்தான் நண்பர்கள் பேசும்பொழுது சொன்னார்கள். நம்முடைய சகோதரர் கோ.கருணாநிதி அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள். மற்றவர்களும் சொன்னார்கள்.

இதே நவம்பர் 20-இப்பொழுதுதான் கொண்டாடினோம். நீதிக்கட்சியினுடைய 95ஆம் ஆண்டு துவக்க விழா. அது போலவே வைக்கம் 85ஆம் ஆண்டு வெற்றி விழாவின் துவக்க விழா. அது போலவே அரசியல் சட்டத்தின் கையகலக் கடுதாசி ஜாதியைப் பாதுகாக்கிறது. மத சுதந்திரம் என்ற பெயராலே ஜாதியைப் பாதுகாக்கிறது என்ப தற்காகஅந்தக் கையகலக் கடுதாசியைக் கொளுத்தி, ஆறு மாதம் முதற்கொண்டு மூன்று வருடங்கள் வரை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித் தார்கள். பத்தாயிரம் பேர் கொளுத்தினார்கள்.

மூவாயிரம் பேர் சிறை சென்றனர்; 16 பிணங்கள் விழுந்தன!

மூவாயிரம் பேர் சிறைச்சாலைக்குப் போனார்கள். 16 பேர் சிறைச் சாலையிலேயே மாண்டனர். அவர்கள் சிறை சென்றது ஜாதி ஒழிப்பிற்காக-அவர்கள் என்ன மானியம் கேட்டார்களா?

பதவி பெற்றார்களா? அந்தப் பரிசு உண்டா இந்தக் கறுப்பு மெழுகுவர்த்திகளுக்கு? சமுதாயத்தில் என்ன நிலை? அதே நவ.26இல்தான் இந்தச் சூழ்நிலை. போராட்டம் நடந்தது. எனவே, இது ஒரு மிக முக்கியமான காலகட்டம். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வைக்கம் போராட்டம் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டு வந்திருக்கின்றோம்.

டாக்டர் டி.எம்.நாயர்

நீதிக்கட்சி தொடங்கிய நேரத்திலே அதற்கும் கேரளத்திலே இருந்து மிகப்பெரிய பங்காற்றியவர் நம்முடைய போற்றுதலுக்கும், நிரந்தர நன்றி உணர்ச்சிக்கும் உரியவரான டாக்டர் மாதவன் நாயர், டி.எம்.நாயர்-தரவாட் மாதவன் நாயர். மிகப்பெரிய டாக்டர்-காது, மூக்கு, தொண்டை (ENT) நோய்களைச் சரிப்படுத்துகின்ற டாக்டர் லண்டனிலே படித்தவர்.

நீதிக்கட்சி தொடங்கிய நேரத்திலே இரண்டு உரைகள் அற்புதமானவையாக வெளி வந்திருக்கின்றன. அதிலே ஓர் உரை முக்கிய மானது. நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர் அவர்களின் எழும்பூர் ஸ்பர்ட்டாங் சாலை உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரை.

வரலாற்றிலே சொல்லுவார்கள். நாடாளு மன்றத்திலே ஹெட்மண்ட் பர்க் என்பவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலே உரை யாற்றினார். வாரன் ஹேஸ்டிங் மீது குற்றம் சுமத்தப்பட்ட நேரத்திலே உரையாற்றினார் என்றெல்லாம் வரலாற்றிலே சொல்லுவார்கள். ஆனால், நம்முடைய டாக்டர் டி.எம்.நாயர் அவர்களுடைய ஆங்கிலப் பேச்சு முக்கியமானது.

சென்னை எழும்பூருக்குப் பக்கத்திலே சேத்துப்பட்டு பகுதியிலே, ஒரு ஏரிக்கரைப் பகுதியிலே அந்த ஸ்பர்டாங் சாலையிலே டி.எம்.நாயர் அவர்கள். பேசுகின்ற நேரத்திலே அதனுடைய தமிழ் மொழியாக்கத்தை நாங்கள் நூலாக வெளியிட்டிருக்கின்றோம். நாயர் பேசியது ஆங்கிலத்தில். அதுவே சிறப்பானது. அதிலே ஒரு செய்தியைச் சொல்லுகிறார்.

சமஸ்தானங்கள்...

திருவாங்கூர் தனி சமஸ்தானம் கேரளப் பகுதிகள் தமிழ் நாட்டிற்குள்ளே அன்றைக்கு இருந்தது. ஆந்திராவை தனியே பிரிக்கவில்லை. கன்னடத்தினுடைய கொள்ளேகால் பகுதி இணைந்திருந்தன. மொழிவாரி மாநிலங்கள் அப்பொழுது கிடையாது. இந்த இன உணர்வு போராட்டம்-அன்றைக்குத் தொடங்கிய போராட்டம் இன்றைக்கும் முடிவுறவில்லை. இன்றைக்கு அது தொடருகிறது.

எதிரிகளை நாம் கண்காணிக்கின்றோம். ஒவ்வொரு முறையும் கண்ணிவெடி வைக்கிறார்கள். ஏனென்றால் அது வீரத்தால் வெற்றிகளைப் பெற்ற இனமல்ல. நாம் வீரத்தால் வெற்றிகளைப் பெற்றவர்கள். அவர்கள் சூழ்ச்சியால் அதே ஆயுதத்தை வைத்து வளர்ந்து கொண்டு வரக்கூடியவர்கள். இதுதான் அடிப்படை யானது.

அன்றிலிருந்து இன்றுவரை ஆழ்வார்கள்-சிரஞ்சீவிகள்

நம்முடைய இன துரோகிகளைப் பிடிப்பார்கள். நம்முடைய இனத்திலே இருக்கிற விபீஷணர்களைப் பிடிப்பார்கள். அண்ணணுக்கு உண்மையாக இருக்கிற வரையிலே தம்பி அரக்கன். அண்ணனைக் காட்டிக்கொடுத்து வெளியே வந்தால் விபீஷண ஆழ்வார். விபீஷண ஆழ்வார் என்றும் சிரஞ்சீவி என்றும் பட்டம் கொடுத்து போற்றுவார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சிரஞ்சீவிகள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனால்தான் ஆழ்வார் யாராக இருந்தாலும், ஆள்வோர் யாராக இருந்தாலும், ஆழ்வார்களை வைத்தே வீழ்த்திவிடலாம் என்று நினைக்கக்கூடிய அந்தக் கட்டத்திலே இருக்கின்றார்கள்.

டி.எம்.நாயர் கேரளத்தைச் சார்ந்தவர். கேரளத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை நாயர் அவர்கள் அன்றைக்கே எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

டி.எம்.நாயர் அவர்களின் ஸ்பர்டாங் ரோடு உரையை ஒரு சின்ன நூலாகக்கூட வெளி யிட்டிருக்கின்றோம். டாக்டர் டி.எம்.நாயரின் முத்துக்கள் என்ற தலைப்பில் டி.எம்.நாயர் பேச்சு

டி.எம்.நாயர் சொல்லுவதைப் படிக்கின்றேன். இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது, வீட்டிற்குள் நுழைந்து விடும் திருடன் போன்ற ஆரியர் இனம்! இப்பொழுது நீங்கள் எப்படி கைதட்டினீர்களோ அது போல கை மட்டும் தட்டவில்லை. ஆங்கிலத்தில் ஷேம், ஷேம் என்று ஆரவாரித்திருக்கிறார்கள்.

ஆரியப் பரதேசிகள்

இத்தகைய இழிதகைமை கொண்ட ஆரிய இனம், நாட்டின் இந்தப் பகுதிகளில் திருட்டுத்தனமாக, நுழைவதற்கென்றே அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே ஏற்படுத்தப்பட்டு விட்டதோ என்று எண்ண வேண்டியிருக்கின்றது. வட இந்திய மலைப் பகுதிகளான இமயமலை, இந்துகுஷ் மலை ஆகியவற்றின் இடை இடையே உள்ள கைபர் கணவாய், போலன் கணவாய் முதலிய கணவாய்களின் வழியாகத் தாங்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து, ஆங்காங்குப் பரவி முகாம் அடித்துக் கொண்டவர்கள்தாம், இந்த ஆரியப் பரதேசிகள் (கைதட்டல்! ஆரவாரம்) என்று பேசினார் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள்.

------------------------------தொடரும் "விடுதலை” 17-12-2010


******************************************************************************************

ஜாதியை ஒழிக்க கேரளத்திலும் பெரியாரியக்கம் தேவைப்படுகிறது

வைக்கம் மாநாட்டில் தமிழர்தலைவர் விளக்கம்

ஜாதியை ஒழிக்க கேரளத்திலும் பெரியாரியக்கம் தேவைப்படுகிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

வைக்கத்தில் 26.11.2010 அன்று நடைபெற்ற வைக்கம் 85ஆம்ஆண்டு விழாவில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

1917ஆம் ஆண்டு டி.எம்.நாயர் பேச்சு

1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாளன்று இப்படி பேசினார். இந்த மண்ணிலே அவருடைய பேச்சை எடுத்துச் சொல்லுவதுதான் பொருத்த மானது. அவரைவிட இந்த சமுதாய நிலையைப் படம் பிடித்துக் காட்டியவர்கள் வேறு யாருமில்லை. மேலும் சொல்லுகிறார்:

அசல் ஆரிய தர்ம ஆட்சி!

அசல் ஆரிய தர்ம ஆட்சி இந்து தரும ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக்கொடிதான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானால் இராம ராஜ்ய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான்! சூத்திர சம்பூகன் கதிதான். எனக்கும், என் தலைவர் திரு.பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் (வெட்கம்! வெட்கம்!! இந்து மதம் ஒழிக! என்ற ஆரவாரம்) என்று சொல்லுகிறார். இப்பொழுது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மனுதர்மம்தான் நடக்கும்

வெள்ளைக்காரனை முதலில் வெளியே போங்கள் என்று சொல்லுகின்றபொழுது சொல்லுகின்றார். நீ எங்களுக்கு வழி சொல்லாமல் வெளியே போய்விட்டால் அப்புறம் மனுதர்மம் தான் இங்கே நடக்கும். ராமராஜ்யம்தான் இங்கே நடக்கும். ஆகவே எங்களுக்கு வழி சொல். நாங்கள் மிகப்பெரிய இனம். எங்களுடைய இனத்தை அடிமைப்படுத்தி கழுத்தில் நுகத் தடியை வைத்திருக்கின்ற இந்தக் காலகட்டம் இருக்கிறதே அது சரியானதல்ல என்று சொல்லுகிறார்.

ராம ராஜ்யம்

ராமராஜ்யம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் சம்பூகன் இடத்திலே ராசாக்கள். நபர்கள் மாறுகிறார்கள். ஆனால் நிலைமைகள் அப்படியே இருக்கின்றன. நியதிகள் அப்படித்தான் நடந்துகொண்டிருக் கின்றன. சம்பவங்கள் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்து மதம் ஒழிக!

1917-லேயே இந்து மதம் ஒழிக! என்று சொல்லுகிறார்கள் என்றால் அன்றைக்கு உள்ள நிலைமை, அன்றைக்கு இருந்த இன உணர்ச்சி எப்படிப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேலும் டி.எம்.நாயர் சொல்லுகிறார். இவ்வளவுக்கு நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை எங்கள் கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான், ஏடா நாயரே! என்று சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய ஜாதிக்கர்வம் படைத்திருக்கிறான்! என்று சொல்லுகிறார்.

இவர்கள் இல்லை என்றால் நமக்கு ஏது உரிமை?

இப்படிப்பட்ட தலைவர்கள் இது மாதிரி இயக்கத்தைத் தொடங்கியிருக்காவிட்டால் நமக்கு சட்டை போடுகிற உரிமை, இது மாதிரி தோளிலே துண்டு போடுகிற உரிமை இருக்காது. முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டுகிற உரிமை நமக்கு கிடைத்திருக்காது. தெருவிலே நடக்க உரிமை இல்லாததினாலே தானே பிறகு போராடு கின்றார்கள்.

லண்டனிலே படித்தவர்

லண்டன் போய் படித்துவிட்டு வந்தவரை கேரள நாயர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்க வேண்டும். இந்த நிலை மாறிவிட்டதா? என்று பார்க்க வேண்டும். இந்தக் கேள்வியை நம்முடைய கேரள சகோதரர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

ஏடா நாயரே!

கேரள நாட்டு நம்பூதிரி பார்ப்பான் எப்படி கூறுகிறான் பாருங்கள். ஏடா நாயரே! என்று சர்வ சாதாரணமாகக் கேவலமாக ஜாதிக்கர்வம் பிடித்து கூப்பிடுவானாம்.

இன்றைக்கு அந்த நிலை மாறிவிட்டது என்று கருத முடியாது. கோவிலுக்குப் போய் பாருங்கள். குருவாயூரப்பன் என்ன சொல்லுகிறார் பாருங்கள். இன்னமும் சபரிமலைக்குப் போகிற அப்பாவிகள் இருக்கிறார்களே, அங்கே போய் பாருங்கள்.

எப்படி இந்தக் கொடுமையை விளக்கிச் சொல்லுகிறார் பாருங்கள். 1917இல் டி.எம்.நாயர் சொன்னது இன்றைக்கும் கல்லிலே செதுக்கி வைத்த மாதிரி இருக்கிறது. இன்றைக்கும் நீதித்துறையில் கூட ஜாதி புகுந்துவிட்டது.

முதல் பார்ப்பனர் அல்லாத நீதிபதியின் நிலையே...

முதன் முதலிலே உயர்நீதிமன்ற நீதிபதியாக பார்ப்பனர் அல்லாதாரே வர முடியாத நிலை இருந்தது. முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் யார் என்றால் சர்.பி.சங்கரன் நாயர் அய்.சி.எஸ்.

ரொம்பக் கஷ்டப்பட்டு போராடி வந்தி ருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் எல்லாம் பார்ப் பனர்களே! சென்னை ராஜதானி பிரியவில்லை. கேரளப் பகுதி இணைந்திருக்கிறது. சங்கரன் நாயர் ஊருக்கு வருகிறார். அவருக்கும் மரியாதை இல்லை.

சர் சங்கரன் நாயர் அய்.சி.எஸ்.,

டாக்டர் டி.எம்.நாயர் சொல்லுகிறார். உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிரிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி, ஏடா! சங்கரா! நீ உயர்நீதிமன்ற நீதிபதியாமேடா என்று கேட்டானாம். ஆமாம் சாமி! எல்லாம் உங்கள் கடாட்சந்தான் என்று கூறியவாறே வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கைக்கட்டி வாய் பொத்தி நின்றாராம். அவர் என்று சொல்லுகிறார்.

சங்கரன் நாயர் அந்தக் காலத்தில் வெள்ளைக் காரனிடம் சர் பட்டம் பெற்றவர். அய்.சி.எஸ். பட்டம் பெற்றவர். நீதிபதியிடம் வழக்குரைஞராக இருந்தாலும், அய்யராக இருந்தாலும் என்ன பேச வேண்டும்? ஓ மை லார்டு-என் கடவுளே என்று சொல்லித்தான் பேச வேண்டும். அப்பேர்ப்பட்ட பதவி.

பார்ப்பனத் திமிர்...

ஒரு நம்பூதிரிப் பார்ப்பான். பார்ப்பனர். அல்லாத உயர்நீதிமன்ற நீதிபதியான சர் சங்கரன் நாயரைப் பார்த்து ஏடா சங்கரா என்று கேட்டது பாருங்கள் இதற்குப் பெயர்தான் பார்ப்பனத் திமிர் என்பது (கைதட்டல்).

இதுதான் ஜாதி ஆணவத்தினுடைய முகப்படாம் என்பதை ஜாதி ஆணவத்தினுடைய வெளிப்பாடு அது. பார்ப்பான் யாரையும் பார்த்தால் ஏண்டா என்றுதான் சொல்லுவான். எட்டு வயது பார்ப்பன பையன் 80 வயது பார்ப்பனரல்லாத பெரியவரைப் பார்த்து ஏண்டா! என்று இன்று சொல்ல முடியாததற்குக் காரணம் பெரியார் செய்த போராட்டத்தினுடைய விளைவு. இன்றைக்கு யாராவது அப்படி சொல்லக்கூடிய துணிவு உண்டா?

கேரளத்திற்கு பெரியாரியக்கம் தேவை!

கேரளத்தில் வேண்டுமானால் கூட இந்த நிலை இருக்கலாம். தமிழ்நாட்டில் அறவே கிடையாது. (கைதட்டல்). எனவேதான் கேரளத்திற்கும் பெரியார் தேவை. பெரியாருடைய இயக்கம் தேவை.

1917இல் ஏண்டா சங்கரா என்று பார்ப்பனர் இப்படிக் கேட்கிறார். 1917இல் நீ கேட்கவில்லை. நான் கேட்கவில்லை. நமக்கு இந்த சம்பவத்தைப் படிக்கின்ற பொழுதே இரத்தம் கொதிக்கிறது. ஏனென்றால் உணர்ச்சி இருக்கிறது. கலப்பில்லாத இரத்தம் அதனால் கொதிக்கிறது (கைதட்டல்).

ஆனால் அவர் நம்முடைய மூளையை அவன் எவ்வளவு அழகாக சாயம் ஏற்றி விலங்கு போட்டு எப்படி வைத்துவிட்டான் என்று பாருங்கள் சகோதரர்களே! சகோதரிகளே! அடுத்தது என்ன பாருங்கள். அவன் கூப்பிட்டது எனக்கு சங்கடமாகத் தெரியவில்லை.

நீதிபதி-பார்ப்பனர் காலைத்தொட்டுக் கும்பிடுகிறார்

உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் நாயர் ஓடோடி வெளியே வந்து நம்பூதிரி பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கை கட்டி, வாய்பொத்தி நின்றாராம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். யார்? உயர்நீதிமன்ற நீதிபதி. இதுதானய்யா சமுதாயத்தின் நிலை. இதை இன்றைக்குப் பார்க்க முடியுமா? அதற்கு யார் காரணம் பெரியார்தான். (கைதட்டல்). இதுதான் பெரியார் பெற்ற வெற்றி. எனவே பெரியார் வாழுகிறார். பெரியார் கொள்கை அன்றைக்கும் தேவைப்பட்டது. இன்றைக்கும் தேவைப்படுகிறது.

மருந்து என்றைக்கும் தேவை

மருந்துகளுக்கு என்றைக்கும் தேவை உண்டு. பன்றிக் காய்ச்சல் வரும் பொழுது, பன்றிக் காய்ச்சல் மருந்து, பதவிக் காய்ச்சல் வரும்பொழுது பதவிக்காய்ச்சல் மருந்து. அதுபோல காய்ச்சல்கள் மாறும். ஆனால் மருந்துக்கடைகளை மூடிவிடமுடியாது.

மருந்துகள் எப்போதும் தேவை. பெரியார் என்றைக்குமே தேவை. சுவாசிக்க பிராணவாயு தேவை; அது இல்லாமல் வாழ. முடியாது. பெரியார் இல்லாமல் இந்த சமுதாயம் தன்னை உயர்த்திக்கொள்ள முடியாது (கைதட்டல்).

கவிஞர் கனிமொழி பேசும்பொழுது....!

இங்கே கவிஞர் கனிமொழி பேசும்பொழுது ஒன்றை சொன்னார். ஒரு வழக்கைச் சொல்லி இது நடந்திருக்குமோ என்று நாம் நினைக்க வேண்டிய அளவுக்கு எவ்வளவு மோசமான ஒரு சூழல் வடநாட்டிலே இருக்கிறது என்று சொன்னார்.

ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தால் நீயே திருணம் செய்து கொள் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன தமிழ் சினிமாவா? என்று ஒரு கேள்வி கேட்டார். ஆனால் அதைவிட நண்பர்களே! ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.

இராசாவாக இருந்தாலும், மந்திரியாக இருந்தாலும்...!

இன்றைக்கு ஆ.இராசா செய்தியாக இருந்தாலும் மந்திரி செய்தியாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் என்ன நிலை? நீதித்துறையின் நிலை என்ன?

ஒவ்வொரு துறையாக கல்வித்துறை, உத்தியோகத் துறை இதிலேயிருந்து நாம் வெளியே வந்து கொண்டிருக்கின்றோம். இன்னமும் நீதித்துறை பார்ப்பனத் துறையாகத்தானே இருக்கிறது? அதைத்தான் நமது துணைப்பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சொன்னார்.

85 கோடி பேர் ஒடுக்கப்பட்ட மக்கள்

இந்திய நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 110 கோடி. இதில் 80, 85 கோடி மக்கள் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை சமுதாய மக்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ரூந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் நிலை என்ன?

30 நீதிபதிகள் இருக்கிறார்கள். இவர்கள்தான் நாட்டை நடத்துகிறவர்கள். மக்கள் எல்லாம் ஓட்டுப்போட்டு அனுப்பிய பிரநிதிகள் எப்படி நாடாளுமன்றத்தில் வேலை செய்தார்கள் என்பதை பொது மக்களே பார்த்தார்களே!

உச்சநீதிமன்றத்தின் அதிகாரம்

சூழல் எப்படி அமைகிறது என்று சொன்னால், நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஒரே வரி சிவப்புக் கோடு போட்டு அடித்து இது செல்லாது என்று அறிவித்தால் அவ்வளவுதான், உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் அந்த அளவிற்கு அதிகாரம் பெற்றதாக பார்ப்பனர் ஆதிக்கம் பெற்ற ஒரு துறையாக இருக்கிறது.

-(தொடரும்)-----------”விடுதலை”18-12-2010

************************************************************************************

*******************************************************************************


ஜாதி ஒழிந்தால்தான் இந்த நாட்டிலே

சமத்துவத்தை உருவாக்க முடியும்

வைக்கத்தில் தமிழர் தலைவர் தெளிவுரை

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிய வேண்டும். ஜாதி ஒழிந்தால்தான் இந்த நாட்டிலே சமத்துவ சமதர்மம் மலரும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

வைக்கத்தில் 26.11.2010 அன்று நடைபெற்ற வைக்கம் 85ஆம்ஆண்டு விழாவில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகியும்

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஆடுவோமே பள்ளு பாடுவோமே! என்று சுதந்திரம் கொண்டாடுகின்ற இந்த காலகட்டத்திலே என்ன சூழல்?

எங்களைத் தவிர, பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்க்கிறவரைத் தவிர, சமூக நீதிப் போராளிகளைத் தவிர, மற்றவர்களுக்கு கேள்வி கேட்பதற்கே அறிவுமில்லை, தெளிவுமில்லை, துணிவுமில்லை.

சுமார் 30 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திலே. இந்த 30 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, மலைவாழ் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் உண்டா? பதில் சொல்லட்டும்! அரசியல் சட்டத்தில் எடுத்தவுடனே சமூக நீதிதான் உள்ளது. இது சமூக அநீதியா? சமூக நீதியா? அப்படியானால் எப்படிய்யா ஒடுக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்கும்? ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவன் கூட நீதிபதியாக இல்லை.

தமிழ்நாட்டில்தான் அதிக தாழ்த்தப்பட்ட நீதிபதிகள்

நாங்கள் போராடியதினாலே தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையுள்ள தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் இருக்கின்ற ஒரே ஒரு மாநிலம்-சென்னை உயர்நீதிமன்றம் (கைதட்டல்). இதற்குப் போராடியவன்-கருப்புச்சட்டைக்காரனு டைய உழைப்பு-திராவிடர் கழகத்தினுடைய உழைப்பு-இன உணர்ச்சி. ஆனால், அதே மாதிரி நாடு தழுவிய அளவில் உணர்ச்சி வரவேண்டுமே.

பெரியார் ஏன் தேவைப்படுகிறார்?

பெரியார் ஏன் எல்லா இடங்களுக்கும் தேவைப்படுகிறார்? பெரியாருடைய உணர்வுகள் தேவைப்பட்டு சமூகநீதி வந்திருந்தால்-உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படி யார் இருக்க வேண்டும்? மக்கள் தொகையில் 25 சதவிகிதம் கொண்ட மக்களுடைய பிரதிநிதி ஒருவர் கூட இல்லை யென்றால் சமூக நீதி இந்த நாட்டிலே இருக்கிறதா? அந்தச் சமுதாய மக்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்கும்? சமூகநீதிக் கொடிக்குப் பதில் ஜாதிக்கொடியா?

எனவேதான் சமூகநீதிக் கொடி பறக்க வாய்ப் பில்லாமல் ஜாதிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் ஒரு தொலை நோக்காளர். தீர்க்கதரிசி என்று சொன்னார்களே. வருவதை முன்னாலே சொல்லக்கூடியவர்.

நாம் தீர்க்கதரிசி என்றால் அதை அவதாரம் என்று நினைப்பதில்லை. அய்யா அவர்கள் காங்கிரசில் இருக்கும்பொழுது சொன்னார். அய்யா அவர்கள் காங்கிரசில் இருக்கும்பொழுதுதான் ஜாதியை எதிர்த்துப் போராடினார். காங்கிரசில் இருக்கும்பொழுதுதான் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். தந்தை பெரியார் காங்கிரசில் இருக்கும்பொழுதுதான் குருகுலப் போராட்டம் நடத்தினார்.

சேலத்தில் பெரியார் பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு வேறு உணவு. பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கு வேறு உணவு. அதை எதிர்த்துப் போராட்டம் நடந்தது.

அப்பொழுது சேலத்திற்குச் சென்று பெரியார் பேசுகிறார். காந்தியாரிடம் போய் சமாதானம் சொல்லுகிறார்கள். வெண்டைக்காய், விளக் கெண்ணெய், கத்தாழை எல்லாவற்றையும் சேர்த்துக் குழைத்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு தீர்வைச் சொன்னார் காந்தியார். சேரமன்மாதேவி குருகுல வ.வே.சு.அய்யர் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது; நீங்கள் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது.

சமையல்காரனை மட்டும் பிராமணர் சமையல் காரனாக வைத்து சமைக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார். காந்தியார், வரதராஜுலு நாயுடுதான் அது கூடவே கூடாது என்று சொன்னார்.

ஜனநாயகம் அல்ல; பார்ப்பனநாயகம்தான் வரும்!

சேலத்தில் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடக்கிறது. எப்பொழுது? 1924இல். இதே வைக்கம் போராட்டம் நடந்த சமூக வரலாற்றை நான் படம் பிடித்துக்காட்டுகிறேன். பெரியார் பேசியதை இந்து பத்திரிகை தனது நூற்றாண்டு விழா மலரிலே எடுத்துப் போட்டிருக்கிறது. என்ன அந்தச் செய்தி தெரியுமா?

பிரிட்டிஷ்காரர்கள்-ஆட்சியில் இருக்கும் பொழுதே இந்த நாட்டை விட்டுச் செல்வதற்கு முன்பாகவே இந்த ஜாதிப் பிரச்சினையை ஒழித்துவிட வேண்டும். அப்பொழுது சுதந்திரம் வரவில்லை. 1924ஆம் ஆண்டு இதை ஒழிக்கா விட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்காது. பார்ப்பனநாயகம் தான் இருக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்து மலரிலே எடுத்துப்போட்டிருக்கின்றார்கள். மக்களுக்காக மக்கள் நடத்துகிற ஆட்சியாக இருக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார்.

ஜாதி இருக்கிற வரையிலே....

ஜாதி இருக்கிற வரையிலே இந்த நாட்டிலே ஜனநாயகம் வராது. அதற்குப் பதிலாக என்ன வரும்? பார்ப்பனநாயகம் தானே வரும். இன்றைக்கு அவர்கள் நேரடியாக வராமல் நம் முடைய கைகளைப் பிடித்து நம்முடைய கண் களைக் குத்த துரோகிகளைத் தயார் பண்ணு கின்றான்.

ஆகவே ஜாதியால் நீதி செத்துக்கொண்டி ருக்கிறது. ஜாதியால் கோடானு கோடி மக்களுடைய வாழ்வு தொல்லைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.

எனவேதான் நாம் இந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டிலே மிக முக்கியமாக இரண்டு கோரிக்கைகளை வைக்கின்றோம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு....

ஒன்று-உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்குரிய பிரதிநிதித் துவம் வேண்டும்-நீதிபதிகள் வரவேண்டும் என்ற மகத்தான ஒரு தீர்மானமாகவே இந்த அரங்கத்திலே நான் முன்மொழிகின்றேன்.

அதை வழிமொழியக் கூடிய அளவிற்கு நீங்கள் அத்துணைபேரும் கைதட்டல் மூலமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். (பலத்த தொடர் கைதட்டல்).

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா?

அது போலவே இரண்டாவதாக இந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டிலே ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் கொடுத்த கடைசி குரல்-ஜாதி ஒழிப்பு. இந்திய அரசியல் சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால், நடைமுறையில் தீண்டாமை இன்னமும் இருக்கிறது. இன்னமும் கிராமத்தில் இரண்டு கிளாஸ் வைத்திருக்கின்றான்.

எல்லா மாநிலத்திலும் இதே நிலைதான்

இன்னமும் பல கிராமங்களில் கேரளத்தில் இருக்கின்ற நிலை. எல்லா மாநிலத்திலேயும் ஒரே மாதிரியாகக்தான் இருக்கும். டீக்கடைக்குப் போனால் எதற்கு இரண்டு கிளாஸ்? ஒரு கிளாஸ்-பொதுத் தொகுதி. இன்னொரு கிளாஸ்-ரிசர்வ் தொகுதி. இன்னமும் இந்தக் கொடுமை இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பதை எதிர்த்து இன்னமும் நாங்கள் போராடிக்கொண்டிருக் கின்றோம்.

இது ஒரு மாநிலம் தழுவிய பிரச்சினை அல்ல; இது சமூகம் தழுவிய பிரச்சினை. எனவே, தீண்டாமையை எதிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நான் வேடிக்கையாக ஒன்றைச் சொல்லுவது-வழக்கமாக.

கள்ளச் சாராயம் வாங்கி ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வாங்கிக் குடிக்கிறார்கள் பாருங்கள், சாராயம் காய்ச்சுகிற இடத்தில். அந்த இடத்தில் குடிக்கும்பொழுது அங்கே தனித்தனி கிளாஸ் வைத்திருக்கின்றானா? இன்ன ஜாதிக்கு இன்ன கிளாஸ் என்று ஏதாவது வைத்திருக்கின்றானா?

சமரசம் உலவுகிற ஒரே இடம்

டீக்கடையில் கிளாஸ் இருக்கிறமாதிரி கள்ளச் சாராயம் விற்கிற இடத்தில் கிளாஸ் தனித்தனியே வைத்து இது தாழ்த்தப்பட்டவனுக்கு, இது உயர்ந்த ஜாதிக்காரனுக்கு என்று எங்கேயாவது கிளாஸ் வைத்திருக்கின்றானா? சமரசம், சகோதரத்துவம் உலவும் இடமே அங்கேதான்.

முதல் கிளாஸ் இவன் குடித்த சாராயம் உள்ளே போய் வேலை செய்ய ஆரம்பித்தவுடனே இவன் பாதி அவன் பாதி. குடித்தவுடனே பிரதர் என்று சொல்லுகின்றான்.

நாங்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று அய்ந்து வருடம் செய்த பிரச்சாரமும் சரி. நாங்கள் சாதிக்க முடியாததை இந்த அரைகிளாஸ் சாராயம் ஜாதியை ஒழித்துவிடுகிறதே! என்ன கொடுமை யய்யா இந்த சமுதாயத்தில் என்று நினைக்க வேண்டிய அளவுக்கு இருக்கிறது.

இன்னமும் இந்த நாட்டிலே தீண்டாமை இருக்கிறதென்றால் என்ன காரணம்? ஜாதி. அம்பேத்கர் ரொம்ப அழகாகச் சொன்னார். ஜாதி என்பது ஏணிப்படி முறையில் சமத்துவத்திற்கு எதிராக வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லு கின்றார்.

குருஜி கோல்வால்கர் வர்ணாஸ்ரம தர்மத்தை நியாயப்படுத்திச் சொன்னார். காந்தியார் சொன்னதைத்தான் அவர் சொன்னார். நம்மாள்களிலும் படித்த தற்குறி இருக்கிறான் பாருங்கள், அவன் தலையாட்டுகிறான். ஏங்க, எல்லோரும் ஒன்றாகி விட முடியுமா?

வித்தியாசம் ஒன்றுமில்லிங்களே! நம் முன்னோர்கள் ஏற்பாடு செய்தது. பகவான் கண்ணன் கீதையிலே சொன்னது.

நான்கு ஜாதியை கடவுள் உண்டாக்கினான்!

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று சொன்னது-நான்கு ஜாதிகளை நான்தான் உற்பத்தி பண்ணுவேன் என்று சொன்னது. எல்லாம் ஒன்றும் தப்பில்லிங்க, ஏன் தப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்? தலையிலே மூளையிருக்கிறது-அது தனி.

தோள் இருக்கிறது-அது இன்னொரு பகுதி. கை தனியாக இருக்கிறது, கால் தனியாக இருக்கிறது. அது மாதிரி கால் ஒரு பகுதி. சூத்திராள் என்று சொன்னார்கள். தோளிலே பிறந்தவன் சத்திரியன் என்று சொன்னான். தொடையிலே பிறந்தவனை வைசியன் என்று சொன்னான் என்றால், அது உருவகம்தான் என்று சொல்லி ஏமாற்றுகிறான்.

நம்மாள் இங்கிலீஷ் படித்துவிட்டானா? குழாய் எல்லாம் மாட்டிக்கொண்டானா? இவன் அரைவேக் காட்டுத்தனமாகக் கண்டு பிடித்திருக்கானாம் மனுதர்மத்தை. உடனே சொல்லுகிறான். தனித்தனியாகப் பிரித்துக் கொண்டால் உற்பத்தி பெருகும் தத்துவம் என்று சொன்னார்கள். பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கரைவிட அதிகம் படித்தவர்கள் அல்லர்.

ஏணிப் படிக்கட்டு ஜாதி முறை

அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கி, பார்-அட்-லா வாங்கி மிகப்பெரிய அளவுக்குப் படித்தவர். அவர் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் பாருங்கள்: ஊயளவந ளை ய டிவ ய னஎளைடி டிக டயடிரசநசள-இது தொழில் கூட்டமைப்பு அல்ல; மக்களைப் பிரிப்பது என்று சொன்னார்.

ஆகவேதான், ஏணிப் படிக்கட்டு ஜாதி முறை நம்முடைய சமுதாயத்தில் இருக்கிறது என்று சொன்னார்.

அவனுடைய சூழ்ச்சி எப்படி என்றால், ஒருத்தனுக்கு மேல் இன்னொரு ஜாதிக்காரன். பசயனநன நளூயரயடவைல-ஏணிப்படிக்கட்டில் ஒவ்வொரு அடுக்கு முறை இருக்கிற மாதிரி.

சண்டை எப்படி வருகிறது?

இங்கே ஏணி வைத்தால் எப்படி இருக்கும்? மேலே இருக்கிறவர் என்ன பண்ணுகிறார்? அவன் கெட்டிக் காரன். சண்டை எப்படி வருகிறது என்று கேட்டால் ஜாதிப் பிரச்சினையில் பிராமணர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் வருவதில்லையே! பாருங்கள் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள். அவாள் எல்லாம் அப்படிப் பார்ப்பதில்லையே. பிற்படுத்தப்பட்டவனும், தாழ்த்தப்பட்டவனும்தானே அடித்துக்கொண்டு நிற்கிறான் அது உண்மையும் கூட. அடித்துக்கொள்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அதற்கு அறிவியல் ரீதியாகக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா?

நான்காவது படிக்கட்டில் நின்றவன் தாழ்த்தப் பட்டவன். அதற்கும் கீழே நின்றவன் பஞ்சமன். வரிசையாக ஏணிப்படிக்கட்டு மாதிரி நிறுத்தி யிருக்கிறார்கள்.

மேலே இருக்கிற பார்ப்பன படிக்கட்டுக்காரன் ஏணியை ஆட்டுகிறான். அது இவர்கள் கண்ணுக்குத் தெரியாது. புவிஈர்ப்பு விசை மய்ய இழுப்பால் அடுத்தவன் மீது பட்டென்று விழுகின்றான். இரண்டாவது ஆள் மூன்றாவது ஆள் மீது அதைவிட வேகமாக விழுகிறான். உடனே அவன் நான்காவது ஆள் மீது விழுகிறான். நான்காவது ஆள் அய்ந்தாவது ஆள் மீது விழுகிறான். அய்ந்தாவது ஆள் ஏண்டா என் மீது விழுந்தாய்? என்று ஓங்கி ஒரு அடி அடிக்கின்றான். அய்ந்தாவது ஆள் நான்காவது ஆளை ஓங்கி அறைகின்றான். நானாடா தள்ளினேன்? என்று இவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொள்கிறார்கள். மேலே இருக்கிற அவாள் ரொம்ப சுலபமாகக் கேட்கிறான்.

இதுதான் ஜாதிச் சண்டை!

என்ன, உங்களுக்குள்ளே ஏதோ சண்டை மாதிரி தெரிகிறதே என்று (சிரிப்பு-கைதட்டல்). இதுதான் ஜாதிக் கலவரம். இதுதான் ஜாதிச்சண்டை.

தீண்டாமை ஒழிய வேண்டுமானாலும், ஜாதிக் கலவரம் இல்லாமல் ஆக்க வேண்டுமானாலும் ஜாதி ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும். ஏனென்றால் மதம் இல்லாமல் ஜாதி கிடையாது. -

-------------------------(தொடரும்)“விடுதலை” 19-12-2010

***********************************************************************************


ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்

வைக்கத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

ஜாதி ஒழிக்கப்பட்டது என்று அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முக்கிய வேண்டுகோள் விடுத்தார்.

வைக்கத்தில் 26.11.2010 அன்று நடைபெற்ற வைக்கம் 85ஆம்ஆண்டு விழாவில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்து மதத்தின் நிலை என்ன?

இந்து மதம் என்று ரொம்ப பெருமையாகச் சொல்லுவார்கள். அந்த இந்து மதத்திலிருந்து வெளியே போய், பிறகு வந்து தாய் மதத்திலே சேருகிறேன் என்று சொல்லுகின்றானே. அவன் எங்கேயாவது உயர் ஜாதிக்குப் போக முடியுமா?

ஆகவேதான் தந்தை பெரியார் அவர்கள் 1973லே டிசம்பர் முதல் வாரத்தில் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு என்ற மாநாட்டை சென்னையிலே நடத்தினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இந்த மாநாட்டிலே நிறைவேற்றிய தீர்மானத்தை இன்னமும் நாம் வலியுறுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அதைவிட ரொம்ப மிக முக்கியமான ஒன்று-அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் 17ஆவது விதியில் இருக்கின்ற ருவேடிரஉயடைவைல ளை யடிடளைநன என்று இருக்கின்ற இடத்திலே-தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லுகின்ற இடத்திலே தீண்டாமை என்ற சொல் எடுக்கப்பட்டு ஜாதி ஒழிக்கப் பட்டது என்று போடுங்கள். (கைதட்டல்).

ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு

ஜாதி இருக்கிறது. ஒவ்வொரு ஜாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஜாதி அடிப்படையிலே கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்று சொல்லுகின்றோம். இதை வைத்துக் குழப்புகிறார்கள். ஜாதியை மறுபடியும் உருவாக்குகிறார்கள். யார்?பூணூல் போட்டவன் சொல்லுகின்றான். நான் கேட்டேன் அவர்களிடம். இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம், சண்டைக்கு அல்ல; உன் முதுகு எப்படியிருக்கிறது? என் முதுகு எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்.

இரண்டு பேரும் பார்ப்போம். என் முதுகு வெறும் முதுகு. உன் முதுகில் பூணூல் போட்டிருக்கிறது. அந்த நூல் எதற்காக?

பூணூலிலும் ரிசர்வேஷன்

பிரம்மா பிண்டம் பிடித்தான் என்று சொல்லுகின்றாயே! அதில் என்ன நூலைப் போட்டு உன்னை உருட்டிவிட்டானா? மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறான். அதில் கூட ரிசர்வேஷன் எப்படியிருக்கிறது தெரியும்களா? பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு சணப்பை நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடம் தரிக்க வேண்டியது. வைசியர்கள் இன்றைக்கு நூல் போடக்கூடாது. வெள்ளாட்டின் மயிரால்தான் போட வேண்டும். வெள்ளாட்டின் மயிரால் நூல் போட்டால் இவன் ஒரு ஆளை கூடவே கூட்டிக்கொண்டு போக வேண்டும்-முதுகு சொறிந்து விடுவதற்கு (கைதட்டல்). எவ்வளவு அரிக்கும்?

நூலில் கூட பார்ப்பானுக்கு பஞ்சு நூல். இவனுக்கு இந்த நூல். நமது முட்டாள் பயல்களுக்கு இது தெரியவில்லையே! இன்னமும் நாம் கூட்டம் போட்டு எத்தனை வருடத்திற்கு இதைச் சொல்லுவது?

என்னய்யா அன்றைக்கும் இதையே பேசினார்; இறைக்கும் இதையே பேசுகிறார் என்று எண்ணலாமா? அன்றைக்கும் நீ முட்டாளாக இருந்தாய். இன்றைக்கும் நீ முட்டாளாக இருக்கிறாய் என்றுதானே சொல்ல வேண்டும்? (கைதட்டல்).

தடித்த தோலுக்கு எந்த ஊசி?

தந்தை பெரியாரிடம், என்னங்க பொதுமக்களிடம் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்களே? என்று கேட்டான்.

அதற்கு அய்யா பதில் சொன்னார், தடித்த தோல் என்றால் என்ன செய்யவேண்டும்? இந்தத் தோலில் நீ குண்டூசி வைத்துக் குத்த முடியுமா? அல்லது சாதாரண ஊசியை வைத்து குத்த முடியுமா? கோணி ஊசியால்தான் தைக்க வேண்டும்.

அம்பேத்கர் சொன்னார்...

ஏனென்றால், தோல் சாக்கு மாதிரி இருக்கிறது. அதனாலே இந்த ஊசிதான் தேவை என்று எடுத்துச்சொன்னார். அடுத்து நண்பர்களே! இதையே அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் ஒருவர் சொன்னாராம், என்னங்க, நீங்கள் ரொம்ப மென்மையாக எடுத்துச் சொல்லாமல் விட்டிருக்கிறீர்களே என்று மகாராட்டிரத்தில் மேல் சபையில் துணைத் தலைவராக இருந்தவர் டெல்லியில் சந்திரஜித் யாதவ் வீட்டில் பேசிக்கொண்டிருக்கின்றார். அப்பொழுது இந்த சம்பவத்தைச் சொன்னார், வீரமணி ஜி! உங்களிடம் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன்.

ஏன் பார்ப்பனர்களை கடுமையாகச் சாடுகிறீர்கள்?

பாபா சாகேப் அவர்களே! நீங்கள் ஏன் பார்ப்பனர்களைக் கடுமையாகப் பேசுகிறீர்களே! நீங்கள் மென்மையாகச் சொல்லலாமே என்று சொன்னாராம்.

பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர். ஷேவ் பண்ணிக்கொண்டிருந்தாராம். இது என்ன? என்று கேட்டாராம்-ஷேவ் பண்ணுகிற பிளேடைக் காட்டி-

என்ன இப்படி கேட்கிறீர்களே? என்று கேட்டாராம். இது பிளேடு, ஷேவ் பண்ணுவதற்கு பயன்படுகிறது. நான் இந்தப் பிளேடை வைத்து மரத்தின் வேர் அடிபாகத்தை வெட்ட முடியுமா? என்று கேட்டாராம். அது மாதிரி பார்ப்பனியம் என்பது.

இதை வெட்டுவதற்கு கோடாரிதான் தேவை. பிளேடால் வெட்ட முடியாது என்று சொன்னார். என்று இந்த நண்பர் சொன்னார். அது மாதிரி நண்பர்களே! தந்தை பெரியார் அறிவுபூர்வமாகச் சொன்னார்.

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிப்பு

எனவே, அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று போட்டாலே போதுமானது. நான் வழக்குரைஞர் என்ற முறையிலே சொல்லுகின்றேன். இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு இடம் அல்ல. இரண்டு இடம் அல்ல. பதினெட்டு இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது.

ஜாதியை நாம் உண்டாக்கவில்லை. மனு உண்டாக்கினார் என்று சொன்னார். ஆகவே ஜாதிக்கணக்கெடுப்பைக் கேட்பதும். ஜாதியை ஒழிப்பதும் ஒன்றுக்கு ஒன்று முரணல்ல.

யாராவது குழப்பினால்...

யாராவது குழப்பினால் அதற்குப் பலியாகிவிடக் கூடாது. எனவே நண்பர்களே! இந்த அருமையான வைக்கம் மண்ணிலே 85ஆம் ஆண்டு வெற்றி விழா, அதே போல தந்தை பெரியார் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்குத் திரளாக வந்திருக்கக்கூடிய கேரளத்துப் பெருமக்கள், கேரளத்தைச் சார்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் வந்திருப்பது கண்டு எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

நல்ல வெற்றி!

கட்சி வேறுபாடு இல்லாமல் இங்கு எல்லோரும் கலந்துகொணடார்கள். நல்ல வெற்றியை உருவாக்குவதற்கு உழைத்திருக்கிறார்கள். நம்முடைய அமுதன் போன்றவர்கள், மதுமோகன் போன்றவர்கள், அஜீத், மசூத் போன்றவர்கள் உழைத்திருக்கிறார்கள்.

மதவெறி மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்!

இன்றைக்கு நிறைய கருப்புச் சட்டைத் தோழர்கள் வந்திருக்கிறீர்கள். குடும்பம், குடும்பமாக வந்திருக்கிறீர்கள். இதைவிட நமக்கு ஓர் அறிவுச் சுற்றுலா வேறு கிடையாது. இது கொள்கை பூர்வமான விழா. இது வெறும் ஆடம்பரத் திருவிழா அல்ல; வழிபாட்டுக் கூட்டமல்ல நாம்.

நாம் புரட்சியாளர்கள். ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். மதவெறியை மாய்த்து மனிதநேயத்தை உருவாக்குவோம். ஜாதி பேதத்தைத் தகர்த்து சமத்துவத்தை உருவாக்க உறுதி எடுத்துக்கொண்டு கலைவோமாக என்று கூறி, அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

------------------”விடுதலை” 20-12-2010

0 comments: