Search This Blog

14.12.10

யார் ஆரியர்?யார் திராவிடர்?


திராவிட சமுதாயத்தை நசுக்குவதே ஆரியரின் திட்டம்!


இன்றைய தினம் ஆரிய - திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க, வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்தப்படி பார்க்கிறபோது, யார் ஆரியர், யார் திராவிடர் என்றால், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்றும், அந்தப்படி பிராமணர்கள் என்பதால் உயர் ஜாதிக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிற பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள். அதுபோலவே அந்தப் பார்ப்பனர்களாலும், அவர்களின் கடவுள், மதம், சாஸ்திரம், புராண, இதிகாசங்கள் என்பவைகளின் பேரால் நாலாவது ஜாதி மக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று சொல்லப்படுகிற சூத்திர மக்கள் என்பவர்கள் திராவிடர்கள் ஆவார்கள்.

ஏன் இதை இவ்வளவு தூரம் விளக்குகிறேன் என்றால், இந்த நாட்டில் யாரும், எந்தக் கட்சிக்காரரும் காங்கிரசுக்காரர்களாய் இருந்தாலும், கம்யூனிஸ்டுகளாய் இருந்தாலும், சோஷியலிஸ்டாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் இந்த ஆரிய திராவிடப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாதவர்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், இந்தக் காரியத்துக்கு முழு முயற்சி எதிரிகளாவார்கள். அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காங்கிரசுக்காரர்கள் கம்யூனிஸ்டுகள், சோஷியலிஸ்டுகள் என்பவர்கள் மாத்திரம் இந்தப்படி ஆரியராவது, திராவிடராவது என்று கேட்பதுடன் பார்ப்பனர்களை அய்யர்கள் என்று சொல்லுகிறதோடு நம்மவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற நம்மிடம் இருந்து பிரிந்து போனவர்களும் இந்தப்படியே அதாவது இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்ல என்பதாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
காங்கிரசு, கம்யூனிஸ்டு என்ன? அனைவரும் சோஷலிஸ்டுகள் எல்லோரும் பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள கட்சிகள்தான்; இன்னும் கொஞ்ச நாளில் கண்ணீர்த்துளிக்கும் அவனே தலைவனாகி விடுவான்.(பெரியாரின் தொலைநோக்கு நிஜமாகிவிட்டது-ஆம் தோழர்களே அ.இ.அ.தி.மு.க. வுக்கு பார்ப்பன அம்மையார் ஜெயலலிதா தான் தலைவி ----- தமிழ் ஓவியா)

இந்தப்படியாக எல்லோருமே இந்தக் காரியத்துக்கு எதிரிகளாகவும் இந்த முயற்சியை ஒழித்துக்கட்டும் வேலை, தொழில்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

திராவிடர் கழகம் ஒன்றுதான் கடந்த 30 ஆண்டுகளாக இந்தக் கொள்கைகளை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. இந்த 30 ஆண்டு பாடு பெருகி, கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்து, இன்றைய தினம் இது மடி கட்டிக் கொண்டு யுத்தத்துக்குத் தயாராக வேண்டிய நிலையிலே உள்ளது. அந்த அளவுக்கு ஆரியர்கள் வந்துவிட்டார்கள். திராவிடர் சமுதாயத்து மக்களை எப்படி எப்படி நசுக்க வேண்டும், அடக்க வேண்டும், ஒழித்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் போட்டு அதிகாரத்தின் மூலமாகவும், மற்றச் சாதனங்கள் மூலமாகவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

சுதந்தரம் வந்தது என்றவுடன், திராவிட மக்களுக்கு ஓரளவுக்காவது உத்தியோகத்திலும், படிப்பிலும் வசதி செய்து கொடுத்திருந்த கம்யூனல் ஜீ.ஓ.வை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். அதோடு உத்தியோகங்கள் என்பவைகளில் எல்லாம் பார்ப்பனர்களையே நிரப்பி, நம்முடைய அதிகாரிகளைத் தலையெடுக்கவிடாமல் அடிக்கிறார்கள். இவ்வளவு போதாது என்று இப்போது நம்மைப் படிக்கவும் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

ஆரிய மத, சாஸ்திரம், கடவுள் தன்மைகளைக் காட்டி, நம்மை நாலாஞ்சாதி, இழி சாதி மக்களாகப், பாடுபடுகிற பாட்டாளி மக்களாக, மூடத்தனம் நிரம்பிய மக்களாக 2000 வருடமாக வைத்திருந்த ஆரியர்கள், இப்போது ஓரளவுக்கு நம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது என்றவுடன், பழைய முறையை மீண்டும் புகுத்தி எந்தத் துறையிலும் நாம் தலையெடுக்க முடியாமல் ஒழித்துக்கட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள்.

இப்போது நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் நமக்குள்ள குறைகளையெல்லாம் போக்கிக் கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்தப் பார்ப்பனர்கள் இருக்கிறவரை நாம் எந்தத் துறையிலும் முன்னேற முடியாது. நம்முடைய முன்னேற்றத்திற்குத் தடையாகவும், தடங்கலாகவும், எதிராகவும் இருக்கிற பார்ப்பானை வெளியேற்றினாலல்லாது திராவிட மக்களது வாழ்வு சீர்படாது, எனவே தான் சொல்லுகிறோம் "பார்ப்பானே வெளியேறு" என்று. இல்லை நாங்கள் வெளியேறவில்லை; இங்கேயே இருக்கிறோம் என்று சொல்லுவார்களேயானால் இரு; ஆனால் "பார்ப்பானாக" இருக்க முடியாது மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

உள்ளபடியே எதற்கு ஆக இந்த நாட்டில் பார்ப்பான் இருக்க வேண்டும்? உலகத்தில் உள்ள மற்ற நாடுகளில் பார்ப்பான் இல்லை என்பது மாத்திரமல்லாமல் வருணாசிரம தரும முறை என்கிறார்களே அந்த முறைப்படியே நான் கேட்கிறேன், பார்ப்பான் எதற்கு ஆக இருக்க வேண்டும்?

வருண முறையில் சொல்லப்படுகிறது: "வண்ணான்" இருக்க வேண்டும் துணி துவைக்க; "நாவிதன்" இருக்க வேண்டும் சிரைக்க; "குயவன்" இருக்க வேண்டும் மண்பாண்டம் செய்ய; "தோட்டி" இருக்க வேண்டும் அசிங்கத்தைச் சுத்தப்படுத்த; சரி என்று வாதத்துக்கு ஆக ஒத்துக் கொள்வதானாலும் பார்ப்பான் எதற்கு ஆக இருக்க வேண்டும்? அவனுக்கு என்ன தொழில்? மணியடிப்பதற்குத் திதி கொடுப்பதற்கு என்றே ஒரு ஜாதியா? அப்படித்தான் அந்த ஜாதித் தொழிலை அவர்கள் செய்கிறார்களா? மணியடிக்கா விட்டால், திதி கொடுக்காவிட்டால் யார் குடி என்ன முழுகிப்போய்விடும்? சொல்லட்டுமே, இன்ன காரியத்துக்கு ஆகப் பார்ப்பான் இருக்க வேண்டும்; பார்ப்பான் இல்லாவிட்டால் இவ்வளவு நட்டம், கஷ்டம் ஏற்படும் என்று! சுரண்டுவதற்காகவா ஒரு ஜாதி இருக்க வேண்டும்? மற்றவர்கள் எல்லோரும் அந்த ஜாதி ஆதிக்கத்துக்கு அடிமையாய் நடக்க வேண்டும்! எனவேதான் சொல்லுகிறோம், "பார்ப்பானே வெளியேறு," என்று!

இது சட்டத்துக்கு விரோதமாக இருக்கலாம். ஆனால் சட்டத்துக்கு விரோதம் என்று சொல்லப்பட்டு விடுவதனாலேயே இந்த மானங்கெட்ட கீழ்நிலையிலேயே திராவிட இனம் இருந்துவிட முடியுமா? இன்றைக்கா, நேற்றைக்கா இந்த நெஞ்சம் பதறும் நிலை? 2000 வருடமாக நாங்கள் 'சூத்திரர்கள்', நாங்கள் 'தேவடியாள் மக்கள்', தாழ்ந்த ஜாதி! 2000 வருடமாக பார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதி! பரம்பரையாக நாம் 'சூத்திரர்.' நம் பாட்டன், கொள்ளுப் பாட்டன், அவர்கள் பாட்டன் 'சூத்திரன்' நம் பிள்ளை, பேரப்பிள்ளை 'சூத்திரர்கள்!' இதுதானா நம்முடைய வாழ்வு? இப்படித்தான் இருக்க வேண்டுமா? இந்தக் கீழ்நிலையை ஒழித்துக்கட்ட வேண்டாமா?

உள்ளபடியே வயிறு எரிந்து பேசுகிறேன் இவ்வளவு நடந்த பிறகும் மானமுள்ள தமிழன் எவனாவது காங்கிரசில் இருப்பானா? சும்மா சுயநலத்துக்குப், புகழுக்கு இருப்பவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன்.

அதுபோலவே மற்றக்கட்சிக்காரர்களுக்கும் என்ன சொல்லுகிறேன்; யாருடனும் எங்களுக்குத் தகராறு இல்லை; யாருக்கும் நாங்கள் விரோதிகள் அல்ல; பார்ப்பனர்களுக்குத் தவிர. பார்ப்பனர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள், விரோதிகளே தவிர, அவர்கள்தான் எங்களை அந்தப்படி கருத முடியுமே தவிர, மற்றவர்களிடம் எங்களுக்கு என்ன தகராறு? எல்லாக்கட்சியிலும் உள்ள திராவிட மக்களின் சூத்திரப்பட்டம், இழிநிலை போக வேண்டும் என்பதற்கு ஆகத்தானே நாங்கள் பாடுபடுகிறோம். எனவே இந்தக் காரியத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

----------------- 28.08.1953-இல் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு- “விடுதலை” 07-09-1953

0 comments: