Search This Blog

19.12.10

மாறு அல்லது மாண்டுபோ! - பெரியார்இன்றைய தினம் சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக, சென்னையில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கவே இந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்கள். நான் இந்தத் தியாகராயர் நகருக்குக வந்து சுமார் 10 ஆண்டு களுக்கு மேலாகிறது. இதன் காரணமாக எனது புதிய கருத்துகள் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம். நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக நண்பர் வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைக் கூறினார்கள். கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் -கடவுளை பரப்பியவன் அயோக்கியன் - கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி ! இதன் தன்மைகளைப்பிறகு விளக்கு கிறேன்.

பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோயிலுக்குள் வர வேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடையாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுயராஜ்யத்திலும் நாம் சூத்திர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.

இந்து என்றால் என்ன?

எதன்படி என்றால் சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான். இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால் 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2,3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்கமுடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவு இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக்கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது; பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக்கப்பட்டான் என்கிறான். சிந்து நதிக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்துநதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை!

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான்; மற்றவன் சூத்திரன் . பார்ப்பான் என்றால் மேல் ஜாதி; சூத்திரன் என்றால் கீழ் ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறது தான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி.... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால் ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?

நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்ப மாட்டானா? உன்னை இன்னொருத்தன் பெண்டாட்டி என்ற சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

உலகம் எவ்வளவு முன்னேறுகிறது?

பெரிய சமுதாயம், எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்ற காட்டுமிராண்டியாக அல்லவா வாழுகிறோம்? வெள்ளைக்காரளைப் பாரய்யா; எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! மிகவும் காட்டு மிராண்டியாக இருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இன்றைய தினம் , ஆகாயத்திற்கு, சந்திரனுக்கு அல்லவா பறக்கிறார்கள்?

அமெரிக்காவைப் பார்!

அமெரிக்காவில் ஆண் இந்திரியம் கொண்டுவந்து சீனாவிலே போய் பெண் இந்திரியம் கொண்டுவந்து இரண்டையும் சேர்த்துப் பிள்ளை உண்டாக்குகிறானே. இப்ப நேற்று, முந்தாநாள் வந்த விஷயத்திலே இரண்டு பேர் இந்திரியத்தையும் டப்பியில் வாங்கி வைத்து 10 வருடம் கழித்துப் பிள்ளையை உண்டாக்கலாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு டெலிபோனில் பேசுகிறோம். நம்ம முட்டாள் பசங்களுக்கு 100, 200 கடவுள்! ஒரு காரியமும் செய்யமுடியவில்லை இவன்களாலே! இதற்கு எவ்வளவு செலவு? கல்யாணம், கருமாதி, உற்சவம் என்று எவ்வளவு செலவு? வேளைக்கு வேளை சோறு, உற்சவம்! அரசாங்கம் வரி போடுகிறது என்று சொல்லுகிறானே தவிர, இதை எவன் எதிர்க்கிறான்?

கோயிலுக்குப் போகிறான், குளிக்கிறான், முழுகு கிறான். கடவுள் சாமிகிட்ட போன உடனே டக் என்ற வெளியே நிற்கிறானே! ஏண்டா வெளியிலே நிற்கிறே என்றால், சூத்திரன் உள்ளே போகலாமா என்கிறான். எப்போ? 1973 -இல்! நமக்கு ஒரு நாடாம்; நாம் ஒரு சமுதாயமாம். இதற்கு யார் பாடுபடுகிறார்கள்? நாம் மூணே முக்கால் பேரைத் தவிர யார் இதைப் பேசுகிறார்கள்?

இந்தியக் கம்யூனிஸ்ட்கள்!

ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான்; பாதிரிகளை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்! மனிதனைப் பற்றி எவனும் பேசவில்லையே. இவ்வளவு மாநாடு நடத்தினோம்! எவனய்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே, ஓட்டுப் போய்விடும் என்று!

இருப்பது கஷ்டமல்ல; சாவதே கஷ்டம்!

ஆகவே, தோழர்களே! முதலில் நமக்கு இருக்கிற இழிவு நீங்க வேண்டும். மனிதனுக்கு இருக்கிற ஜாதி உரிமை என்ன தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10கூட இல்லை; 7 வயதுதான். அவன் வந்த பிறகு வைத்தியம் சுகாதாரம் எல்லாம்.

எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்! அவ்வளவு அற்புத அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறான்.

சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால்

நாம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மகனாக இருப்பதால்தான். நமக்கு, நமது சுயமரியாதை இயக்கம் வராவிட்டால் படிப்பேது? சொல்லுங்கள்! சுயமரியாதை இயக்கம் வராவிட்டால், 100-க்கு 10 கூட படித்திருக்கமாட்டார்களே! சுயமரியாதை இயக்கம் வந்ததற்குப் பிறகுதானே இவ்வளவு! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? கடவுள் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான்.

காந்தியாரை பார்ப்பான் விட்டுவைத்தானா?

காந்தி நம்ம கொள்கைப் பக்கம் திரும்பினார். காங்கிரசுக்கும், கடவுளுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். உடனே காந்தியைக் கொன்று போட்டான், சொன்ன 30 நாளிலே! இவரும் ராமசாமி ஆகிவிட்டார்; இவன் இந்தியாவிலே பெரியஆள்; இவனை விட்டுவைக்கக் கூடாது என்று உடனே கொன்று போட்டான்.

செருப்பால் அடித்தோமே கடவுளை!

கடவுள் கதையும் சிரிப்பாய்ச் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரே; செருப்பால் அடித்தார்களே கடவுளை! என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டுப் போடமாட்டான் என்று காமராஜர் முதற்கொண்டு பிரசாரம் செய்தார். தி.மு.க. 183 வந்துவிட்டதே! காங்கிரசு, காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20பேர்கூட வரவில்லையே. சாமியைத் திட்டுகிறோம் என்று குறை சொல்லுகிறார்களே தவிர, சாமியை செருப்பாலடித்தவர்கள் 200 பேர் வந்து விட்டார்களே!

நாம் பள்ளத்தில் கிடக்கிறோம்!

ஆனதனால் மக்கள் அறிவு பெற்று வருகிறார்கள்; நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும். தெரியாது அனேகம் பேருக்கு. இப்போது நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலே வரவேண்டும். அப்புறம் இன்னும் மேலே போகலாம். இப்போது நாம் பள்ளத்தில் கிடக்கிறோம். 4ஆவது ஜாதி, 5ஆவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றல்லவா நாம் இருக்கிறோம்? இது அல்லவா மாற வேண்டும்? இது மாறாமல் மேலே போக முடியுமா? இதை மாற்றிவிட்டு அல்லவா மேலே போகவேண்டும்? நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டு வருகிறோம்; எங்களால்தான் முடிய வேண்டும என்று இருக்கிறது நிலைமை! வேறு எந்தக் கட்சிக்காரருக்கும் கவலை இல்லை! எலக்ஷனிலே ஓட்டுப் போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆகவே நாம் மாநாடு போட்டோம்,. அதற்குக் காரணம் கூட வீரமணி சொன்னாரே!

சட்டத்தில் தந்திரம்!

தீண்டாமை இல்லை என்று சட்டம் செய்துபோட்டான். எல்லாவற்றிலும் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற சொல்லிவிட்டு மதத்திற்கு மட்டும் தீண்டாமை என்று நிபந்தனை போட்டுவிட்டான். நாம் கர்ப்பகிரகத்திற்குள் போகக்கூடாது என்று சட்டம் செய்தான். எனவேதான். மாற்றவேண்டும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம். சட்டத்திலும், சாஸ்திரத்திலும் இருப்பதாலே முதலில் அதை மாற்ற வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டோம்.

ஆட்சியை ஒழித்தாக வேண்டும்!

சட்டத்திலே இருப்பது ஒழியவேண்டுமானால், சட்டத்தை ஒழித்தால்தான் உண்டு; சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு! அந்த அளவுக்கு நாம் பக்குவமாக வேண்டும். ஆனால், அவன் ஆட்சி ஒழியும்படி இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான். நாடு கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நாட்டை 14,15 நாடாகப் பிரித்தான். அந்தந்த நாடு மற்ற நாட்டோடு சம்பந்தம் இல்லை என்றான். 16 மாநிலத்திலே மக்கள் இருக்கிறார்கள்.அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே! மலையாளம் , தெலுங்கு, இந்தி வங்காளி என்று தனித்தனி மாநிலங்கள்.

அரிய முயற்சி தேவை!

தமிழ்நாட்டில் உள்ள நாலரைக் கோடி மக்களில் துலுக்கன், கிறிஸ்தவனைத் தவிர, மூன்று கோடி மக்கள் சூத்திரன்தானே? முஸ்லிம், கிறிஸ்துவன் எல்லாம் சேர்த்தால் 10 லட்சம் இருக்கும். ஆகவே, இதை மாற்றியாக வேண்டும்; பெரிய விஷயந்தான். பெரிய முயற்சி செய்ய வேண்டும்! பெரிய முயற்சி செய்ய வேண்டும்!!

மனிதன் இருக்க வேண்டும்!

ஒரு அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும்தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான், சூத்திரன் இருக்கிறானா? ஆகவேதான், அவன் வைத்திருக்கிற பாதுகாப்பு எல்லாம் எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பது, பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. நாம்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.

மாறு அல்லது மாண்டு போ!

நாம் நடத்திய மாநாட்டுக்கு வேறு கட்சிக்காரர்கள் ஒருவரும் வரவில்லையே; ஓர் உதவியும் செய்ய வில்லையே; சி. அய். டி. யும் வேறு கட்சிக்காரன் வருகிறானா என்று கவனித்து வந்தான். எனவே பயந்து கொண்டு ஒருவரும் வரவில்லை. இழிவுக்கு ஆளான வன் எல்லாம் வரவேண்டுமே! வந்து உதவி செய்ய வேண்டுமே! மந்திரிகள் வரவேண்டுமே! ஆகவே விஷயம் முக்கியமானது, மாறியே ஆகவேண்டும்; மாறாவிட்டால் சாகவேண்டும்!

--------------------------தந்தை பெரியாரின் இறுதிப்பேருரையாம் மரண சாசனத்திலிருந்து ஒரு பகுதி