Search This Blog

17.11.10

சுயமரியாதை இயக்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?


சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் என்ன காரணத்துக்கு ஆக ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அக் காரணத்தை இதுவரை சு.ம. இயக்கம் ஆதரித்து வந்திருக்கிறதா அல்லது மாறிவிட்டதா என்பதும் வாசகர்கள் அறிந்ததேயாகும். ஆனாலும் அதைப்பற்றி சிறிது மறுபடியும் எடுத்துக்கூறுவது மிகையாகாது என்றே கருதுகிறோம்.

பார்ப்பனரல்லாத மக்கள் சமூகத்துறையிலும் அரசியல் துறையிலும் பார்ப்பனர்களால் ஏய்த்து அடிமைப்படுத்தப்பட்டு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் தாழ்ந்து கிடப்பதை மாற்றி அவர்களை எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தை முக்கியமாய்க் கொண்டே ஆரம்பிக்கப்பட்டதாகும். மற்றும் பல நோக்கங்களும் இருக்கலாம்.

இந்த நோக்கத்தில் ஈடுபட்டு உழைத்ததில் ஆரம்ப முதல் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஏற்றே நடந்து வந்திருப்பதுடன் அரசாங்கத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கூட அவசியம் நேர்ந்த போதெல்லாம் ஏற்று நடந்து வந்திருக்கிறது.

இவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்ன என்பதைப்பற்றி இந்த வியாசத்தில் நாம் விவரிக்க முன் வரவில்லை.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பகாலம் முதல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு துறையிலும் காங்கிரசை எதிர்த்தும் பார்ப்பன ஆதிக்கத்தை வெறுத்தும் வந்திருப்பதுடன் சு.ம. இயக்கத்தில் பார்ப்பனர்கள் அங்கத்தினராவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. சு.ம. இயக்கத்தின் முக்கியமெல்லாம் சமூகத்துறையில் பார்ப்பனீயத்தை அழிப்பதை எப்படி ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு வந்ததோ அதேபோல் அரசியலிலும் காங்கிரசைத் தாக்கி அதன் ஆதிக்கத்தை ஒழிக்க ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு மூச்சும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது சு.ம.காரர்கள் மாத்திரமல்லாமல் மற்றும் எவரும் உணர்ந்ததேயாகும்.

சைமன் கமிஷனை வரவேற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது முதல் சென்ற மாதம் பண்டிட் ஜவஹர்லாலை பகிஷ்கரித்தது வரை காங்கிரசின் ஒவ்வொரு நிலையையும் எதிர்த்தே வந்திருக்கிறது. இதனால் சு.ம.காரர்கள் நாஸ்திகர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள். காங்கிரசும் தன்னால் கூடுமானவரை சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதமாகவே அதன் சகல ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறது.

இந்த நிலையை பூரணமாய் உணர்ந்தே காங்கிரசிலிருந்த பலர் சு.ம. இயக்கத்துக்கு வந்து சேர்ந்ததும் சு.ம. இயக்கத்தில் இருந்த பலர் காங்கிரசில் போய்ச் சேர்ந்ததுமான காரியங்கள் நடந்திருக்கின்றன.

ஆகவே இவற்றை பொது மக்கள் அறியாததல்ல என்பதே நமது நம்பிக்கை.

இந்நிலையில் இன்றும் சில சு.ம. காரர்கள் காங்கிரசில் சேர்ந்தும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசுக்கு ஆதரவாய் பிரசாரம் செய்தும் அப்பிரசாரங்களில் ஜஸ்டிஸ் கட்சியையும் சு.ம. இயக்கத்தையும் இகழ்ந்து கூறியும் வருவதுடன் காங்கிரஸ் சார்பாய் சில தேர்தல் ஸ்தானங்களுக்கு அபேட்சகர்களாய் இருக்க முயற்சிப்பதாயும் சேதிகள் வருகின்றன.

இவற்றைப்பற்றி நாம் ஆச்சரியப்படவில்லை. இப்படிப்பட்ட நிலை இன்று நேற்று அல்லாமல் இயக்க ஆரம்ப காலம் முதல் கொண்டே நடந்து வந்திருக்கிறது. இது நமது இயக்கத்துக்கு மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதுபோலவே இந்த 15 வருஷ காலமாகவே நடந்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கும் நடந்து வந்திருக்கிறது. ஆதலால் அரசியலை வாழ்வுக்கு ஆதாரமாய்க் கொண்டவர்கள் உள்ளவரையில் இக்காரியங்களுக்கு அனுமதி அளித்துத்தான் தீர வேண்டும். இப்படிப்பட்டவர்களால் பொது ஜனங்கள் ஏமாந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தான் தவிர்க்க முடியாத நமது கடமையாகும். அதென்னவென்றால் இன்று பல பத்திரிகைகளில் "சு.ம.காரர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்கள்" என்றும் "சு.ம. இயக்கத் தலைவர் நடத்தை பிடிக்காமல் சிலர் காங்கிரசுக்கு வந்து விட்டார்கள்" என்றும் எழுதுவதுடன் சு.ம. இயக்கமே காங்கிரசில் கலந்துவிட்டது போலவும் கருதும்படி விஷமத்தனமாகவும் சில பத்திரிகைகளில் எழுதி பாமர மக்களை ஏய்க்கிறார்கள். அதனால் சிற்சில சமயங்களில் இயக்க முயற்சிக்கு கெடுதி உண்டாக இடமேற்படுகிறது. ஆதலால் அதைப்பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

சு.ம. இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் உள்ள முரண்களில் முக்கிய முரண் சு.ம. இயக்கம் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க வேண்டும் என்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உத்தியோகம் ஆகியவைகளில் ஜாதி மதம் உள்ள வரை ஜாதி மத வகுப்பு எண்ணிக்கைக்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

இந்தக் காரியங்களுக்கு மாறாகவே இன்று காங்கிரஸ் வேலை செய்து வருகிறது. காங்கிரசின் உயிர் வாழ்வுக்கு அவசியம் வகுப்புகளை காப்பாற்றவும் வகுப்பு உரிமைகளை ஒழிக்கவுமான காரியமே ஆகையால் அந் நிலையில் இருந்து காங்கிரஸ் மாறுகிறவரை அல்லது தனது நிலையில் இருந்து சு.ம. இயக்கம் மாறுகிறவரை காங்கிரசும் சு.ம. இயக்கமும் இரண்டு நேர்கோடுகளேயாகும். ஒன்றுக்கொண்டு சம்மந்தம் ஏற்பட இடமே இருக்க நியாயமில்லை. இந்த இரு லட்சியங்களையும் ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக்கொண்டு அதற்கு ஆகத் தன்னாலான காரியத்தை செய்து வந்ததாலும் செய்து வருவதாலும் ஜஸ்டிஸ் கட்சியினிடம் சு.ம. இயக்கம் சம்மந்தம் வைத்திருக்கிறது.

இந்த இரண்டு காரியமும் தங்களுடைய லட்சியம் அல்ல என்று கருதுகின்ற எவருக்கும் சு.ம. இயக்கத்தில் இடமில்லை. இடம் ஏற்பட்டால் அது நாணயக் குறைவான முறையின் சம்பாத்தியமும் வினியோகமுமேயாகும்.

இந்த இரண்டு காரியத்துக்கு ஆக சு.ம. இயக்கம் ஏகாதிபத்தியமோ அந்நிய ஆட்சியோ அல்லது வேறு எதுவோ ஆனாலும் அவற்றுடன் அவசியம் ஏற்படும் போதெல்லாம் ஒத்துழைத்தும் ஆதரித்தும் தான் தீரும். இந்த இரண்டு காரியமும் வெற்றிபெறாமல் சு.ம. இயக்கம் அரசாங்கத்தாரோடு போரிடவோ அல்லது அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒருநாளும் சம்மதியாது. மற்றும் இந்த இரண்டு காரியங்களுக்கு விரோதமாய் இருக்கும் எந்த ஸ்தாபனமும் சு.ம. இயக்கத்துக்கு விரோதமானதே என்பது நமது தாழ்மையான அபிப்பிராயம்.

மற்றொரு விஷயம் கூட சொல்லுவோம். அதாவது தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னது போலவே நாமும் சொல்லுவோம்.

சத்தியமூர்த்தியார் என்ன சொன்னார் என்றால் "அபேதவாதிகள் என்பவர்கள் எனது விரோதியேயாவார்கள், காங்கிரசின் விரோதியே ஆவார்கள்" என்பதாகக் கூறினார். அதுபோல் தான் நாமும் மற்றொரு விஷயத்தில் கூறுவோம். அதாவது ஜாதிப் பிரிவு ஒழிப்பதற்கும் அது உள்ளவரை வகுப்புவாத பிரதிநிதித்துவத்துக்கும் எவன் விரோதியோ அவனெல்லாம் சு.ம. இயக்கத்துக்கும் விரோதி என்றே சொல்லுவோம்.

இதற்கு மாறாக ஏதாவது சு.ம. இயக்கத்தில் ஏற்படுமானால் அது எது அதிக கெடுதி? எது குறைந்த கெடுதி என்கின்றதைப் பொறுத்துத்தான் இருக்குமே ஒழிய விட்டுக்கொடுப்பதற்கு ஆக ஒரு நாளும் ஏற்பட்டுவிடாது.

சு.ம. இயக்கம் தனிப்பட்ட ஒரு சமதர்ம இயக்கத்தில் சேரக்கூடாதா என்று சிலர் கேட்கலாம். சேரலாம் என்றே பதில் கூறுவோம். ஆனால் வகுப்புகள் ஒழியும் வரை வகுப்புவாரி சம உரிமைகளுக்கு இணங்கிவரக்கூடிய சமதர்ம இயக்கமாய் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களே தங்களை சு.ம. சமதர்ம வாதிகள் என்று அழைத்துக் கொள்ளக்கூட உரிமையுடையவர்களாவார்கள். அதில்லாமல் சு.ம. சமதர்மவாதிகள், சு.ம. காங்கிரஸ்காரர்கள், சு.ம. தேசீய வாதிகள் என்று சொல்லிக்கொள்வதெல்லாம் ஏமாற்று வித்தை அல்லது நாணையக் குறைவான காரியம் அல்லது அறியாத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை ஏன் எழுதுகிறோம் என்றால் இந்தமாதிரியான பெயர்களைக் கண்டு பொது ஜனங்கள் ஏமாந்து போகக்கூடாது என்பதற்கு ஆகவே எழுதுகிறோம்.

சு.ம. இயக்கம் ஒரு குறிப்பிட்ட கொள்கையையே அடிப்படையாகக் கொண்டது. அதற்கு ஆக வேண்டி "ஒரு குண்டு" இருக்கிறவரையிலும் அது போராடியே தீரும். மற்றும் அது தனக்கு போதிய ஆதரவு இருக்கிறது, எதிரிகளின் தொல்லை நமது முயற்சியைக் கெடுக்காது, நம்மைக் காட்டிக் கொடுப்பதற்கு ஆள் இல்லை, அதனால் நமக்கு இடையூறு உண்டாகிவிடாது என்றெல்லாம் விளங்கும்வரை அரசாங்கத்தாரோடு முரண்பாடு செய்துகொள்ள முயற்சிக்காது என்பதையும் பட்டவர்த்தனமாகத் தெரிவித்துவிடுகிறோம்.

இதன் மத்தியில் அவசியம் நேர்ந்தால் அது தனிப்பட்ட முறையில் தனிநபர்கள் காரியமாய் இருக்க நேருமே அல்லாமல் இயக்கத்தின் கொள்கையாக இருக்க இன்றைய நிலையில் முடியவே முடியாது.

தோழர்கள் டி.என். ராமன் அவர்களும், டி.எஸ்.எஸ். மணியம் அவர்களும் "விடுதலை"யில் (குடி அரசில் மற்றொரு பக்கம் பிரசுரித் திருகிறது) எழுதி இருப்பதுபோல் தங்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட சுயநலங்காரணமாகவும் வெறுப்பு விருப்பு காரணமாகவும் பல மாஜி சுயமரியாதை தோழர்கள் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் அதன் உழைப்பாளிகளைப் பற்றியும் செய்துவரும் விஷமப் பிரசாரங்களுக்கு மக்கள் இடம் கொடுக்காமல் எவ் விஷயத்தையும் ஆர அமர பொறுமையாய் யோசித்து ஒரு துறையில் இறங்கி பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு தங்கள் தங்களால் ஆன தொண்டை ஆற்ற வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

------------------ தந்தைபெரியார் - “குடி அரசு” தலையங்கம் 06.12.1936

2 comments:

Unknown said...

fuck you

நம்பி said...

//sam said...

fuck you
November 18, 2010 10:50 AM //
அதுக்கு நீ கோயிலுக்கு போகவேண்டும்.