Search This Blog

8.11.10

சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறாரா?


சொர்க்கம்

கேள்வி: சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா இரண்டில் ஒன்று சொல்லு.

பதில்: இவ்வளவு அவசரப்பட்டால் நம்மால் பதில் சொல்ல முடியாது. பந்தியில் உட்காரவே அனுமதி இல்லை என்றால் ஓட்டை இலை என்று சொல்லுவதில் பயன் என்ன?

சொர்க்கலோகம் என்பது எந்தப் பூகோளத்தில் இருக்கிறது? கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் மேலே பதினாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மைல்களுக்கும் வானசாஸ்திரிகள் விவரம் கண்டுபிடித்து விட்டார்கள். எங்கும் சொர்க்கலோகம் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே சொர்க்கலோகமே சந்தேகத்தில் இருக்கும்போது சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறாரா என்றால் என்ன பதில் சொல்லுவது?

கே.: அப்படியானால் மேல்லோகம், வைகுந்தம், கைலாயம், பரமண்டலம் முதலிய எதுவுமே இல்லை என்கின்றாயா?

பதில்: நான் இவைகளையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து இல்லை என்று சொல்ல வரவில்லை. பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம் ஆகிய எதற்கும் இந்த லோகங்களில் எதுவுமே தென்படவில்லையே என்றுதான் மயங்குகிறேன்.

கே.: அப்படியானால் அண்ட, பிண்ட, சராசரம், அதள, சுதள, பாதாளம் முதலிய கீழேழுலோகம், மேலேழுலோகம் என்பவைகளைக்கூட நீ ஒப்புக் கொள்ளுவதில்லை என்று தானே அர்த்தம்.

பதில்: இதுவும் முன்னைய கேள்வி போல் தானிருக்கிறது. மேலே ஒரு லோகத்தைப் பற்றியே சந்தேகத்தில் இருக்கும்போது மேலும், கீழும் பதினாலு லோகத்தை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா? என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது?

கே.: மேல்லோகங்களை நம்பாத நீ கடவுளை நம்புகின்றது என்பது முடியாத காரியம் தான். ஆகவே நீ நாஸ்திகன் தானே?

பதில்: என்னமோ சொல்லிக் கொள்ளப்பா. நமக்குத் தெரியாத சங்கதியைப் பற்றி தெரியும் என்று சொல்லிவிட்டு அப்புறம் உன்னிடம் விழிக்க நம்மால் ஆகாது.

கே.: விழிக்கிறதென்ன இருக்கிறது?

பதில்: சொர்க்கலோகம் ஒன்று இருக்கிறது என்றே சொல்லி விட்டேன் என்று வைத்துக் கொள். அப்புறம் "அது எப்படி இருக்கிறது" "அது உனக்கு எப்படித் தெரியும்" "நீ பார்த்தாயா?" "அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள்" என்றெல்லாம் கேட்பாய். அப்புறம் அங்கு கடவுள் இருக்கிறாரா என்பாய் இருக்கிறார் என்று சொன்னால் அது உனக்கு எப்படித் தெரியும், அவர் எப்படி இருக்கிறார். உட்கார்ந்து கொண்டா, படுத்துக் கொண்டா, நின்று கொண்டா இருக்கிறார்? என்பாய். அவருக்கு கைகால் உண்டா, கண் மூக்கு உண்டா, ஜல உபாதை, மல உபாதை உண்டா என்பாய், இன்னும் என்ன என்னமோ கேட்பாய். இந்த எழவுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீ நாஸ்திகன் என்றாலும் சரி, வேற என்ன சொன்னாலும் சரி, அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நமக்குத் தெரியாததைச் சொல்லிவிட்டு உம்மிடம் சிக்கிக் கொண்டு விழிப்பதைவிட நாஸ்திகன் என்கின்ற பெயரே மிகவும் யோக்கியமானதும், நாணயமானதும் ஆகும் என்று கருதுகிறேன்.

கே.: நாஸ்திகனைக் கடவுள் எப்படித் தண்டிப்பார் தெரியுமா?

பதில்: தெரியும் தெரியும். அப்புறம் நான் அந்தக் கடவுளை சும்மா விட்டுவிடுவேனாக்கும்.

கே.: என்ன செய்வாய்?

பதில்: அந்தக் கடவுளுடைய சிண்டைப் பிடித்துக் கொண்டு நன்றாய் கேட்பேன். அதாவது நீ இருப்பதை என் கண்ணுக்கும் தெரிவிக்கவில்லை. மனதுக்கும் தெரிவிக்கவில்லை. உன்னுடைய லோகத்தையும் நமக்கு காட்டவில்லை. பூகோள படத்திலுமில்லை. எந்த சர்வேயிலும், எந்த ஆராய்ச்சியிலும் கிடைக்கவும் இல்லை. இந்த மாதிரி நான் அறிய முடியாத காரியத்தை நீயே செய்துவிட்டு என்னைத் தண்டிப்பது என்றால் அப்புறம் தெரியுமா என்று கேட்டுவிடுவேன்.

கே.: இப்படியெல்லாம் பேசாதே. மகா தோஷமாக்கும். கடவுள் எதை மன்னித்தாலும் மன்னிப்பார். திருடினாலும், கொலை செய்தாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் ஊரான் உழைப்பில் சோம்பேறியாய் இருந்து தொப்பைப் போட்டாலும் சரி, இன்னமும் பண்ணாத காரியம் எது செய்தாலும் சரி கடவுள் மன்னித்து விடுவார். ஆனால் அவர் விஷயத்தில் கொஞ்சமாவது நம்பிக்கைக் குறைவோ சந்தேகமோ அடைந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்.

பதில்: சரி சரி ரொம்ப யோக்கியம் தான். கடவுள் ஒரு யோக்கியன். நீ ஒரு மகா யோக்கியன். நான் நாஸ்திகன்தான். உங்களாலானதைப் பாருங்கள்.

------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் - “குடி அரசு”12.05.1935

2 comments:

ஒசை said...

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாக ஒரு மகாயோக்கியன் சொல்லி இருக்கார்.

நம்பி said...

//ஒசை. said...

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாக ஒரு மகாயோக்கியன் சொல்லி இருக்கார்.
November 9, 2010 11:26 AM //

ஏழையின் சிரிப்பில தானே! (ஏழை சிரிப்பதே அபூர்வமான விஷயமாகி விட்டதே)...ஆனா
உயிரற்ற கல்லில தான் இறைவன் இருக்கிறான் என்று மகா மகா அயோக்கியர்கள் இன்றுவரை சொல்லிக்கொண்டு திரிகிறார்களே!...சொன்னது மட்டுமில்லாமல் அதனிடம் வேட்டியை தூக்கி காட்டுகிறார்களே!...