Search This Blog

10.9.10

கடவுள்கள் என்பவைகளை உடைத்துத்தள்ள வேண்டும்! -- பெரியார்


முதலில் பிள்ளையாரை உடைப்போம்!


நம்மை சூத்திரனாக தாழ்ந்த ஜாதி மகனாகப் பிறப்பித்து இன்னொருவனை மேல் ஜாதிக்காரனாக, பிராமணனாகப் பிறப்பித்து, ஒருவன் சதா காலமும் உழைத்துப் போட்டு ஒன்றுமில்லாமல் வாடவும், தற்குறியாய் இருக்கவும், இன்னொருவன் பாடுபடாமல், உழைக்காமல், மேல் ஜாதிகாரனாக இருக்கவுமான அமைப்புக்குக் காரணமாக இருக்கிற இன்றைய கடவுள்கள் என்பவைகளை ஒழிக்க வேண்டும்; உடைத்துத்தள்ள வேண்டும்!

ஒவ்வொரு கடவுளாக உடைக்கும் பணியை திராவிடக்கழகம் விரைவிலே ஆரம்பிக்கப் போகிறது. அதற்காக விரைவில் ஒரு நாள் போடப் போகிறேன். சென்னை சென்றவுடன் நாள் குறித்து 'விடுதலை'யில் எழுதுவேன். திராவிடக் கழக தோழர்களே! தயாராய் இருங்கள்! கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு, விரைவில் நாள் தரப் போகிறேன். இப்போதே மண்ணுடையாரிடம் சொல்லி வைத்து அட்வான்சாக 'கடவுள்' என்று சொல்லப்படுகிற உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ண பொம்மைகள் அதையாவது வாங்கி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே நடுரோட்டிலே, முச்சந்தியிலே பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய்ப் போட்டு, "இன்ன காரணத்துக்கு ஆக பொம்மையை உடைக்கிறேன்; என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்கு ஆக உடைக்கிறேன்; என்னை சூத்திரன் வேசி மகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்" என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும்!

உடைப்பதற்கு முதல் 'கடவுளாக' எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன்! தோழர்களே! தயாராய் இருங்கள்! பொம்மைகளை இப்போதிருந்தே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் நாள் கொடுப்பேன்.

விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன், (குழவிக் கற்களை) கோயிலுக்குள் போய் புகுந்து உடைப்போம் என்று யாரும் கருதவேண்டாம். இந்தப்படி கோயிலுக்குள்ளே புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. கோயிலுக்குள் ஒருவரும் போக மாட்டோம், குயவரிடத்தில் மண் கொண்டு இன்றைய கோயிலில் இருக்கிற சாமியைப் போல செய்துதரச் சொல்லி, அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ணம் அடித்த பொம்மைகள் அதை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு நடுரோட்டிலே போட்டு உடைப்போமே தவிர, கோயிலில் புகுந்து விக்ரத்தை பெயர்த்துக் கொண்டு வரும் வேலையையோ, அல்லது அவைகளுக்குச் சேதம் ஏற்படுகிற மாதிரியோ யாரும் நடந்துக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதுபற்றின பூரா விவரங்களையும் சென்னை சென்றவுடன் தெரிவித்து உடைப்பதற்கு தேதியும் கொடுக்கிறேன்.

இந்தப் புத்தாண்டு திட்டமாக சில காரியங்கள் செய்ய வேண்டுமென்று, "விடுதலை"யில் கொஞ்ச நாளைக்கு முன் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையிலேயே இந்தக் காரியம் துவங்கப்படுகிறது.

பல தோழர்கள் எனக்குப் பல ஊர்களிலிருந்தும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதாவது திராவிட கழகத்தார் கோவிக்குக்குள் புகுந்து கோயில் விக்கிரகங்களை சித்திரை துவக்க நாளில் உடைக்கப் போகிறார்கள் என்று கருதி பலத்த போலீசு பாதுகாப்பு வைத்திருப்பதாகவும், இந்தப்படி உடைக்கப்போகிறார்களா? என்று போலீசார், கழக நிர்வாகிகளைக் கூப்பிட்டுக் கேட்டதாகவும், இன்னும் சி.அய்.டி.கள் தொடருவதாகவும் எழுதியிருக்கிறார்கள். அதனால் தான் சொல்லுகிறேன், நாங்கள் கோயிலுக்குள்ளே புகுந்து அந்தக் கோவில் விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் பயப்படத் தேவையில்லை என்று.

மேலும், இந்த நாட்டில் வழிவழியாய் இருந்து வரும் சமுதாய அமைப்பை விளக்கியும், இப்படிபட்ட அமைப்பின் காரணமாக ஒரு ஜாதி வேதனைப்படவும், இன்னொரு ஜாதி சுகப்படவுமான தன்மை இருந்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி, வேத சாஸ்திரங்கள் என்பவைகளின் பித்தலாட்டத்தை விளக்கியும், இந்தக் கடவுள்கள் என்பவைகளின் யோக்கியதையை விளக்கியும், நடத்தையின் ஆபாசங்களை எடுத்துக் காட்டியும், இன்றைய சமுதாய அமைப்பு மாறினால் தான் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியுமே தவிர, பொருளாதார உரிமை, ஜனநாயகம் என்று பேசிக் கொண்டிருப்பதால் எந்தவித பலனும் ஏற்பட்டு விடாது!


--------------------28-04-1953 அன்று வடக்கு மாங்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 04-05-1953 "விடுதலை" இதழில் வெளியானது

3 comments:

Vishnu said...

பெரியாரின் "கடவுளை நம்புவன் முட்டாள்" என்ற கொள்கையை முழு முதல் சீடரே ஏற்காமல்தான்,
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன் " என்று பாடினார்.
அவருடைய சீடரோ மஞ்சள் துணி சுற்றி, "பகுத்தறிவு பாமரனுக்கு, எனக்கு மஞ்சள் துணியும் பல கல் மோதிரமும்தான்" என்று ஊரை ஏமாற்றுகின்றாரே

Vishnu said...

பெரியாரின் "கடவுளை நம்புவன் முட்டாள்" என்ற கொள்கையை முழு முதல் சீடரே ஏற்காமல்தான்,
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன் " என்று பாடினார்.
அவருடைய சீடரோ மஞ்சள் துணி சுற்றி, "பகுத்தறிவு பாமரனுக்கு, எனக்கு மஞ்சள் துணியும் பல கல் மோதிரமும்தான்" என்று ஊரை ஏமாற்றுகின்றாரே

Vibunan said...

பெரியாரின் கருத்துக்கள் தற்போதும் மிகத்தேவையாக இருக்கிறது.இன்னும் தமிழன் கடவுள், மதம் போன்றவற்றை நம்பி சீரழிவது வருத்தமாகவே உள்ளது.