Search This Blog

12.2.15

வைக்கம் போராட்டம் முடிவதற்கு முன்னதாகவே பெரியார் புறப்பட்டு ஈரோடு வந்தாரா? பொய்யர்களுக்கு பதிலடி

வைக்கம் போராட்டம் முடிவதற்கு முன்னதாகவே
தந்தை பெரியார் புறப்பட்டு ஈரோடு வந்தாரா?
பொய்யர்களுக்குத் தமிழர் தலைவர் பதிலடி

சென்னை, பிப். 12- வைக்கம் போராட்டம் முடிவதற்கு முன்னதாகவே பெரியார் புறப்பட்டு ஈரோடு வந்தாரா? என்ற பொய்யர்களுக்கு பதிலடி கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

5.12.2014 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வரலாற்று பரிமாணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


அரிஜன நல சேவா சங்கம்

தீண்டாமை ஒழிப்பு என்ற பிரச்சினையில்கூட, தந்தை பெரியாருடைய அணுகுமுறைக்கும், காந்தியாருடைய அணுகுமுறைக்கும் இரண்டு பேரும் தலைவர், சீடராக இருந்தாலும்; வேறுபாடு அதிலிருந்து முளைத்தது. எப்படி? அரிஜன நல சேவா சங்கம் என்று சொல்லி, அவர்களுக்குத் தனிக் கிணறு, தனிக் கோவில், தனி இடம்; மற்றவை எல்லாம் தனியாகத் தரவேண்டும் என்று காந்தியார் சொன்னார்.


பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து நான் இந்தத் திட்டத்தை செய்வதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் என்னவென்றால், தனியாகக் கிணறு வெட்டினால், அதற்காக மானியம் கொடுத்தால், அது ஆதிதிராவிடர் கிணறு என்றுதான் ஆகுமே தவிர, பொதுக்கிணறு ஆகுமா? ஜாதியை ஒழிக்க முடியுமா? தீண்டாமையை ஒழிக்க முடியுமா? எல்லோரும் ஒரே கிணற்றில் தண்ணீர் எடுத்துக் குடித்தால், அவன் என்ன செத்துப் போய்விடுவானா? என்று கேட்டார் தந்தை பெரியார். ஆகவே, பொதுக்கிணறுதான் தேவை என்றார்.


இந்தப் பொதுப் பிரச்சினை, இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு வந்தது என்று சொன்னால் நண்பர்களே, உடனடியாக சுசீந்திரத்தில் இந்தத் தாக்கம் ஏற்பட்டது. அதை, எனது நினைவுகள் என்ற பெயரால், நம்முடைய அய்யா முத்து அவர்கள் எழுதியிருக்கிறார் 1926 ஆம் ஆண்டு.


வைக்கம் சத்தியாக்கிரகம் முடிந்தவுடன், அடுத்தபடியாக, கன்னியாகுமரிக்குச் செல்கின்ற வழியில் சுசீந்திரம் இருக்கிறது. அந்த சுசீந்திரத்தில் மிக முக்கியமாக இருக்கின்ற கடவுள்களுக்குப் பெயர், தாணுமாலயன் என்று சொல் வார்கள். தாணு, மால், அயன் மூன்றையும் இணைத்திருக் கிறார்கள். தாணு - பிரம்மா; மால் - விஷ்ணு; அயன் - சிவன்.

அங்கேயும் இந்தப் போராட்டம் தெளிவாக வெளியே வந்திருக்கிறது. இதைத் தெளிவாகவே அய்யா முத்து அவர்கள், பெரியார் அவர்களோடு வைக்கம் போராட்டத் தில் இருந்ததுதான் காரணம்.

தாணுமாலயன் கோவிலிலும் போராட்டம்

அதற்கு ஒரு வாய்ப்பை சொல்கிறார், சுசீந்திரம் என்ற ஊரின் நடுவில், தாணுமால்அயன் கோவில் இருக்கிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக அமர்ந்திருக்க, அரும்புகழ் பெற்ற ஆலயம் என சொல்லப் படுகிறது. இந்த மும்மூர்த்திகளின் சிருஷ்டிகளான மக்களில் சிலர், பறையர், புலையர், தீயர் எனப்படும் ஜாதியினரை, சுசீந்திரத்துப் பாதைகளில் நடமாடக் கூடாது எனத் தடை செய்திருந்தனர். அம்மக்கள் காளை மாட்டுவண்டிகளில் பாரம் ஏற்றிச் சென்றனர். ஊரின் வெளிப்புறத்தில் வண் டியை நிறுத்திவிடவேண்டும். உயர்ந்த ஜாதிக்காரனைத் தேடிப்பிடித்து, அவனுக்குக் கூலி கொடுத்து, வண்டியை ஊருக்குள் ஓட்டிச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.


தாணுமாலயன் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள தெருக் களில், பன்றிகள், நாய்கள், கழுதைகள் போன்ற மிருகங்கள் நடமாடலாம்; மல, ஜலம் கழிக்கலாம். ஆனால், மனித குலத்தவர்களில் சிலர் அங்கு போகவோ, தாணுமால யனைத் தரிசிக்கவோ கூடாது என்று ஒரு சட்டம்; இந்து மதத்தை அப்படி ஒரு காலக்கேடு பற்றியிருந்தது. வைக்கம் போர் வெற்றிகரமாக முடிந்த பின், அந்த சுசீந்தரம் போர் தொடங்கப் பெற்றது. கோட்டாறு டாக்டர் எம்பெருமாள் நாயுடு அவர்களும், அவர்கள் சகாக்கள் பலரும் கூடி யோசித்து, சுசீந்திரத்துப் போரை ஆரம் பித்தார்கள் என்று எழுதியிருக்கிறார்.


எனவே, வைக்கம் போராட்டத்திற்குப் பெரியாரைப் போகக்கூடாது என்று சொன்னார்கள்; பெரியார் இரண்டு முறை சென்று அந்தப் போராட்டத்தை நடத்தினார். அதற்காக ஆறு மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். ராஜா இறந்த பின், பெரியார் விடுதலை செய்யப்பட்டார். காந்தியார்தான் கடைசியாக ராணியிடம் சென்று பேசு கிறார்; அந்தப் பெருமை தன்னுடைய தலைவருக்கு வர வேண்டும் என்பதற்காக, காந்தியாரை முன்னிலைப்படுத் தித்தான் அந்தப் போராட்டத்தைத் தந்தை பெரியார் முடித்தார். இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு வந்தது என்றால், அந்த மாநிலத்தினுடைய இன்னொரு பகுதியுடன் நிற்கவில்லை.

ஏனென்றால், பல பேர் அதனை நினைத்துப் பார்க்க வில்லை. என்னுடைய கையில் இருப்பது நான் ஏற்கெனவே கூறியதைப்போல, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றி Baba Saheb Dr.Ambedkar Life and Mission என்று தனஞ்செய்கீர் எழுதிய புத்தகம்.


அந்தப் புத்தகத்தின் 63 ஆம் பக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கின்ற ஒரு செய்தி:


The most outstanding event of the year, concerning the survey of the depress what you sathyagraha are you passive resistance sponsored by Ramasamy Naicker a non-brahmin leader at vaikkom in the trivam for indicating the rights of the untouchable rocks confident country. is moral pressure and spirit ............effect.


அதனுடைய தாக்கம், அதனுடைய அறவழிப்பட்ட தாக்கம் இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய தாக்கத்தை எவ்வளவு சிறப்பாக உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால், தனசெய்கீர் சொல்கிறார், மிகவும் ஆதாரப் பூர்வமாக சொல்கிறார். அம்பேத்கர் அப்பொழுதுதான் வந்திருக்கிறார். மனித உரிமைகளுக்கான அமைப்புகளை உருவாக்கி, ஒரு விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் ஒடுக்கப்பட்டோர் மத்தியில். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் எல்லாரையும் இணைக்கிறார். இணைத்து அவர் செய்கின்ற நேரத்தில், அவருக்கு சில சிந்தனைகள். அப்பொழுது அவர் நடத்திய பத்திரிகை, வாய் பேச முடியா தவர்களுடைய குரல் மகாராஷ்டிராவில், மூக் நாயக் என்ற பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் அவர் எழுதுகின்றார்,
Ambedkar was watching these developments very carefully; He referred to be a females later. very touching the in one of the editorials on view of magoth satyagraha.


அம்பேத்கருக்கு போராட்ட உணர்வை தூண்டிய தந்தை பெரியார்


மகாராஷ்டிராவில் உள்ள மகோத் என்கிற இடத்தில் குளத்தில் இறங்கக்கூடாது என்று சொன்னார்கள். நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் வாருங்கள் என்று அம்பேத்கர் அழைத்துச் சென்றார். அதற்காக அவர் மீது வழக்குப் போட்டார்கள். அது ஒரு வைக்கம் போரட்டத் தைப்போலவே, மகாராஷ்டிராவில், வடக்கே நடைபெற்ற மிகப்பெரிய ஒரு போராட்டம்; மனித உரிமைப் போராட் டங்களில், இந்த மகோத் குளம் போராட்டம் இருக்கிறதே, அந்தப் பகுதி மிக முக்கியமானதாகும்.
அந்தப் போராட்டத்திற்கு மிக அடித்தளம் அமைத்து, இப்படி ஒரு போராட்டத்தை மக்களை அழைத்துச் செய் யலாம் என்கிற எண்ணத்தை எங்கிருந்து பாபா சாகேப் அம்பேத்கர் பெற்றார் என்றால், வைக்கம் சத்தியாகிரகத்தி லிருந்து பெற்றார்; தந்தை பெரியார் அவர்களுடைய அந்தக் கருத்து, எப்படியெல்லாம் இந்தியா முழுவதும் மனித உரிமைப் போராட்டத்திற்கு அடித்தளம் வகுத்தது.

வைக்கம் வீரர் என்று பட்டம் கொடுத்தவர் திரு.வி.க.


எனவே, வைக்கம் சத்தியாகிரகத்துப் போராட்டம், அவர்களுக்கு மட்டும் உரிமையை வாங்கித் தரவில்லை. சுசீந்திரத்து மக்களுக்கு மட்டும் அது பரவவில்லை. அது இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அதனுடைய பலன் பூத்து, காய்த்து, கனிந்தது என்பதுதான் முக்கியம்.

அந்த அடிப்படையில் மிக அற்புதமான விளைவு களைத் தெளிவாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.


தந்தை பெரியார் அவர்களுக்கு, வைக்கம் வீரர் என்கிற பட்டத்தைக் கொடுத்தவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்தான். நன்றியோடு பெரியாரை நினைக்கும் மலையாள மக்கள்


ஆனால், அப்படிப்பட்டவரை, திடீரென்று இந்த நாட்டிலுள்ள சில ஊடகங்கள், பெரியாருக்கும், வைக்கத் திற்கும் சம்பந்தமேயில்லை. இவர்கள் சும்மாவாவது வைக் கத்தைப்பற்றி பேசுகிறார்கள் என்றார்கள்.


ஆனால், இங்குள்ள சிலர் விஷமம் செய்தார்களே தவிர, கேரளத்து நண்பர்கள், மலையாளத்துப் பகுதியில் இன்றைக்கும் இருக்கின்ற நண்பர்கள் நன்றி உணர்ச்சி யோடு பெரியாரைப் பார்க்கிறார்கள்; பெரியார் இயக்கத்தை அவர்கள் நேசிக்கிறார்கள். பெரியார் கொள்கையால் நாங்கள் உரிமை பெற்றோம் என்று. அதற்கு என்ன அடையாளம் என்றால், மூன்று அடையாளங்களைச் சொல்கிறேன்.

பெரியார் அவர்கள் இருந்த காலத்தில், திடீரென்று ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த சங்கர் அவர்கள் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தார் கேரளத்தில்.
இங்கே காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டம். அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில்,


டி.கே.மாதவா மெமோரியல் காலேஜ்

திருச்சி பெரியார் மாளிகையில் நாங்கள் இருந்த பொழுது, நான்கு, அய்ந்து நண்பர்கள் பெரியாரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். டாக்டர் மதுசூதனன் என்ற நண் பருடன் மற்ற நண்பர்களும் சேர்ந்து வந்தார்கள். கேரளத்தில் உள்ள மாவல்லிக்கரை என்ற ஒரு பகுதியில், டி.கே.மாதவா மெமோரியல் காலேஜ் என்று சத்தியாகிர கத்தை முதலில் தொடங்கிய, அதற்கு அடித்தளமாக இருந்த டி.கே.மாதவன் பெயரில் மெமோரியல் கல்லூரியை வைத்திருக்கிறார்கள்; பள்ளிக்கூடங்களை வைத்திருக் கிறார்கள். அந்தக் கல்லூரி யில், புதிதாக ஒரு கூடத்தை பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த கூடத்தை திறக்க வேண்டும் என்று அய்யாவிடம் கேட்டார்கள்.


அவர்கள் அய்யாவிடம், அய்யா, வைக்கம் போராட் டத்தை நீங்கள் நடத்தும்பொழுது, நாங்கள் எல்லாம் சிறிய பிள்ளைகள். டி.கே.மாதவனை நீங்கள் அறிந்தவர்கள். ஆகையால், அந்தக் கூடத்தை நீங்கள் வந்துதான் திறந்து வைக்கவேண்டும். ஆகவேதான் நாங்கள் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறோம் என்றனர்.


பெரியார் அவர்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு, கேரளாவில் உள்ள மாவல்லிக்கரையில் சென்று, டி.கே.மாதவா மெமோரியல் கல்லூரியில் உள்ள அந்தக் கூடத்தைத் திறந்து வைத்தார். இந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தி என்ன வென்றால், வைக்கம் சத்தியாக்கிரகம் நடைபெற்று ஓராண்டு கழித்து, வைக்கம் சத்தியாக்கிரக வெற்றி விழா என்று கொண்டாடினார்கள். அதற்கு யார் தலைமை தாங் கியது என்றால், மன்னத்துப் பத்மநாதபிள்ளை அவர்கள். கேளப்பன் நாயர் அவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.


பச்சை அட்டைக் குடிஅரசில் உள்ளன

திருவிதாங்கூர் மகாராணி அவர்கள் நமக்கு இப் பொழுது அளித்துள்ள சில சவுகரியங்கள், மறுபடியும் பிடுங்கிக்கொள்ளும்படி, தமிழ்நாட்டு பிராமணர்களை திவான் கைவசப்படுத்திக் கொண்டு சூழ்ச்சி செய்து வருகிறார் என்று சொல்லி, சி.கே.மாதவன் அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். 29.11.1935 பச்சை அட்டைக் குடிஅரசில் இவை இருக்கின்றன.


அதுபோலவே, பெரியார் அவர்கள் அந்தக் கூட்டத்தில் பேசுகிறார்.


தனக்கும், தன் மனைவிக்கும் செய்த உபசாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு, சத்தியாகிரக இயக்கத்தின் வெற்றி பற்றியும், தோல்வியைப்பற்றியும் தெரிந்து கொள்ள அதற்குள் காலம் வந்துவிடவில்லை என்றும், தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களை, சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்பொழுது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன்வந்திருப்பதைப் பார்த்தால், சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்கும் என்று சத்தியாகிரக ஆரம்பத்தில், பிராமண கட்சியிலிருந்தவர்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறார்கள் என்று பெரியார் பேசினார்.


அங்கேகூட, காந்தியாரை முன்னிலைப்படுத்திக் கொண்டுதான் சென்றார்கள் என்பது மிக முக்கியம்.


பெரியாரின் பங்களிப்பு இல்லையானால்...

எனவே, பெரியாருடைய பங்களிப்பு இல்லையானால், அந்த விழாவிற்கு, பெரியாரையும், நாகம்மையாரையும் அழைத்து, அவ்வளவு பெரிய வெற்றி விழாவை அடுத்த ஆண்டு, அதே திருவனந்தபுரத்திலேயே வைக்கம் பகுதியிலேயே சிறப்பாக நடத்தியிருக்கமாட்டார்கள். அடுத்தது, அந்த நன்றி உணர்ச்சியை பல ஆண்டுகாலம் நினைவில் வைத்துக்கொண்டு, பெரியாரை அழைத்து, சி.கே.மாதவ மெமொரியல் கல்லூரியில் ஒரு கூடத்தைத் திறக்கச் சொல்கிறார்கள்.


அதைவிட இன்னொரு ஆதாரம் என்னவென்று சொன்னால், 1974 ஆம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரகத் தினுடைய பொன்விழா ஆண்டு - 50 ஆம்  ஆண்டு விழாவைக் கொண்டாடும்பொழுது, ஒரு வாரம் அந்த விழா நடைபெற்றது. அந்த விழாவைத் தொடங்கி வைப்பதற்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை அழைத்தார்கள்;  நிறைவு செய்வதற்கு அன்னை மணி யம்மையார் அவர்களை அழைத்தார்கள் என்பதை மகிழ்ச் சியோடு இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.


வைக்கத்தைப் பார்க்கின்ற முதல் வாய்ப்பு கிடைத்தது எனக்கு!


எவ்வளவு நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் கேரளத்து மக்கள்; அதிலும் குறிப்பாக வைக்கத்துப் பெருமக்கள். அன்னை மணியம்மையார் அவர்களாடு நானும் சென் றிருந்தேன். அப்பொழுதுதான் வைக்கத்தைப் பார்க்கின்ற முதல் வாய்ப்பு கிடைத்தது.


அதில் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய வியப்பு என்னவென்றால், வைக்கம் சத்தியாகிரகப் போராட் டத்தில் ஈடுபட்ட அத்தனை தலைவர்களுடைய பெய ராலும், பொதுவாக கேரளத்து நண்பர்கள் மிகவும் எளி மையானவர்கள்; ஆடம்பரத்தைப் பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. இதை நாம் கற்றுக்கொள்ளத் தவறியது; கற்றுக்கொள்ளவேண்டியதாகும்.


அப்படிப்பட்ட சூழ்நிலையில், வைகுந்த்பட் என்ற நண்பர், அவர் சேர்மன் ஆஃப் தி  வைக்கம் முனிசிபா லிட்டி அவர் நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அன்னை மணியம்மையாருக்கு வரவேற்பு கொடுக்கிறோம் என்று அழைத்துச் சென்றனர். ஊருக்குள் நுழையும்போதே, முதலில் பெரியார் ஈ.வி.ராமசாமி ஜெஸ் என்றுதான் போட்டிருந்தார்கள்.  முதலில் யாருக்கு மரியாதை செலுத் தினார்கள் என்றால், பெரியாருக்குத்தான் வளைவு போட்டு செய்திருந்தார்கள். பிறகு கேசவமேனன் அவர்களுக்கு, அடுத்து மற்றவர்களுக்கு.


பாரிஸ்டர் கேசவமேனன்


கேசவமேனன் அவர்கள் சோசியலிஸ்ட். தந்தை பெரியார் அவர்களிடத்தில் மிகவும் பாங்காக இருந்த வர்கள். பிறகு அவர் மலேசியாவிற்குச் சென்று பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். பிரபலமான வழக்குரைஞர் பாரிஸ்டர் கேசவமேனன் அவர்கள். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை எழுதியிருக்கிறார். அதில் தான் பெரியார் அவர்களைப்பற்றி சொல்கிறார்,


நமக்காக பெரியார் அவர்கள் கைகளிலும், கால் களிலும் இரும்புச் சங்கிலியை மாட்டிக்கொண்டு, கல் உடைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை எப்படிப் பட்டது? ஈரோட்டு ராமசாமி நாயக்கர் அவர்கள் நமக்காக அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் உருக்கமாக எழுதியிருக்கிறார்.


இன்னுங்கேட்டால், இதில் வேடிக்கை என்னவென் றால், பெரியார் கணக்குக் காட்டவில்லை என்றெல்லாம் அன்றைக்கு எழுதினார்கள்.


வைக்கத்திற்குச் சென்றதை கணக்குக் காட்டவில்லை பெரியார் என்றனர். பெரியார் அவர்கள் கைப்படவே எல்லா கணக்குகளையும் வைத்திருக்கிறார்கள். அய்யா அவர்கள் எவ்வளவு கவனத்தில் இருக்கிறார் என்பதை, நாங்கள் மலரில் எடுத்துப் போட்டுள்ளோம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டிக்குக் கடிதம் எழுதி, என்னென்ன செலவு வகையறா என்பதை, பெரியார் வைத்த ஆவணம் இருக்கிறதே, இன்றைக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என் பதை உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டத்தை நடுவில் விட்டுவிட்டு வரவில்லை பெரியார்
இன்னொரு செய்தியையும் இங்கே சொல்கிறேன்.


முதலில் பெரியாருக்குப் பங்களிப்பு இல்லை என்றார்கள். பிறகு, ஆறு மாத சிறைத் தண்டனை பெற்று, நான்கு மாதத்திலேயே விடுதலை செய்துவிட்டார்கள். உடனே பெரியார் அவர்கள் போராட்டம் முடிவதற்கு முன்பாகவே, ஈரோட்டுக்கு வந்துவிட்டார் என்று சொன்னார்கள்.


இரண்டிற்கும் முரண்பாட்டைப் பாருங்கள். பங்களிப்பே இல்லை என்று சொன்னவர்கள், போராட்டத்தை நடுவில் விட்டுவிட்டு வந்துவிட்டார் என்று சொன்னால், என்ன அர்த்தம்? அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் என்றுத னே அர்த்தம்.


அந்தப் போராட்டத்தை நடுவில் விட்டுவிட்டு வர வில்லை தந்தை பெரியார் அவர்கள். அதைப்பற்றிய ஒரு செய்தியையும் கூட, கு.வெ.கி. ஆசான் அவர்கள் எழுதிய புத்தகத்தில், என்னுடைய புத்தகத்திலிருந்து எடுத்து பதிவு செய்துள்ளார். பெரியார் அவர்கள் வைக்கத்திலிருந்து ஈரோட் டுக்கு வந்ததும்; குருதேவதர்மம் என்ற பத்திரிகையில் தவறான செய்தி வந்திருப்பதை, அவர் மறுத்து சொல்லியிருக்கிறார்.


வைக்கம் போராட்டம் முடிவு பெறுவதற்கு முன்பே, பெரியார் தமிழகம் வந்துவிட்டார். அதன் பிறகு, பல மாதங் கள் கழித்துத்தான், வைக்கம் போராட்டமே முடிவிற்கு வந்தது. வைக்கம் போராட்டத்தை இடையிலே விட்டு விட்டு, மேற்கொண்டு அக்கறை காட்டாமல் பெரியார் இருந்துவிட்டார் என்ற தொனிக்கு உட்பொருளுக்கு இந்த வரிகள் இடம்தருவதால், இன்றியமையாத செய்திகள் சிலவற்றை சொல்லவேண்டி இருக்கிறது.


அரசு எதிர்ப்பு, கவிழ்ப்பு வெறுப்பு!

பெரியார் ஈரோட்டிற்கு வந்ததும், 1924 செப்டம்பர் 12 இல் காவலர்கள் அவரை கைது செய்து, சென்னைக்குக் கொண்டு சென்று, சில நாள்கள் சிறையில் வைத்திருந்து, அவர்மீதிருந்த வழக்கை நடத்தினர். பெரியார் வைக்கம் செல்லும்முன், கதர்ப் பிரச்சாரம் செய்து வந்தபொழுது, 8.3.1924 இல் சென்னை மயிலாப்பூர் மந்தைவெளியில் ஒரு சொற்பொழிவாற்றினார். அதற்காக அவர்மீது அரசு எதிர்ப்பு, கவிழ்ப்பு வெறுப்பு, கிளாஸ் ஸ்டேட்மெண்ட்  153-ஏ, 124-ஏ என்ற இரு பிரிவின்கீழ், சென்னை அரசு வழக்குத் தொடர்ந்தது.
வழக்குத் தொடர்ந்ததினால், பெரியார் வந்ததும், கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் அவர்கள் உடனடியாக ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

திரு.வி.க. அவர்கள் பெரியாரைப்பற்றி என்ன எழுதினார்?


திரு.வி.க. அவர்கள் எழுதிய ஒரு செய்தியை சொல்லு கிறேன்:
ராயப்பேட்டையில் பெரியார் தங்கினார். ஓரிரவு முகாந்த நிலையத்தில், அவர் ஒரு திண்ணையில் உறங் கினார். நான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். 11 மணிக்கு மழை தொடங்கியது. கண்கள் மூடியபடியே இருந்தன. 4 மணிக்கு மழை நின்றது; 6 மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். மழை பெய்தது தெரியுமா என்று கேட்டேன். மழையா? என்றார். ஈ.வெ.ரா.வைத் தீண்டியுள்ள பாம்பு, 124-ஏ, வழக்கு நடப்புக் காலம்; அந்த நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம். அவர் மனம் பொன்னா? சஞ்சலம் அடைந்ததா என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன் என்று திரு.வி.க. சொல்கிறார்.
இந்த நேரத்தில் அன்னை நாகம்மையார் வெளியிட்ட அறிக்கை, சுயமரியாதை இயக்கத்தை பெரியார் வெளிப் படையாகத் தோற்றுவிப்பதற்கு முன்பே, அவர் உள்ளத்தில் அது உறுதியான நிலை பெற்றுவிட்டதை காட்டுகிறது.
வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், அவருடைய துணைவர் ஈ.வெ.ராமசாமி, சென்னை அரசால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அதற்குத் தேவையான செயல்களிலும், உதவிகளிலும் மக்கள் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளவேண்டும் என்றும், அரசியல் செயல்பாட்டை விட, சமுதாய சீரமைப்பே அவருக்குப் பிடித்தமானதென்றும் அம்மையாரின் அறிக்கை சொல்லியது.


எனவே, கடைசி தொகுதியில், அவர் முடித்து வைக் கின்ற காலகட்டத்தில் இல்லை. அதைத் தவறாக திசை திருப்புவதற்கு முயற்சி செய்தார்கள். அது தவறானது என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், நாகம்மையார் அவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.


நாகம்மையாரின் அறிக்கையை திரு.வி.க. அவர்கள், 1924, செப்டம்பர் 12 ஆம் நாளிட்ட நவசக்தி இதழ் வெளியிட்டது. இது காங்கிரஸ் பத்திரிகையாகும்.


அன்னை நாகம்மையாரின் அறிக்கை

இது வரலாற்றில் இதுவரை பதிவாகாத ஒரு முக்கியமான செய்தியாகும்.
என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலை யானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருடத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனைக் கிடைக்கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடைபெற்று புறப்பட்டுவிட்டார். அவர் திரும்பத் திரும்ப தேச ஒன்றியத்தைப் பொருட்டு, சிறைக்குப் போகவேண்டிய பாக்கியமே பெறவேண்டும் என்றும், அதற்காக அவர் ஆயுள் வளரவேண்டும் என்றும், கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன். அவர் பாக்கியை வைத்துவிட்டுப் போவதாக, நினைத்துக் கொண்டு போகிற, வைக்கம் சத்தியாக்கிரகம் விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து, அது சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி, அதனை அணுகூலமான முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமாறு, என் கணவரிடம் அபிமான மும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர் களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- நாகம்மாள்


ஆகவேதான், தந்தை பெரியாருடைய பங்களிப்பு, காந்தியாருடைய சிந்தனை, பாபா சாகேப் அவர்களுக்கு இந்தப் போராட்டத்தினால் ஏற்பட்ட தாக்கம், வரலாற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், யாகம் என்பது ஒரு பித்தலாட்டம், ஏமாற்று வேலை, அதற்கு எந்தப் பலனும் கிடையாது; அதனால் எதிர்விளைவுகள் இருக்கலாமே தவிர, ஒன்றுமில்லை என்பது நாம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை. இவை அத்தனையையும் இந்த வைக்கம் போராட்டம் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது.


மேலும் தெரிந்துகொள்ள, மேலும் படியுங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இந்தக் கருத்தில் மாற்றங்கள் இருந்தால், தெளிவுபடுத்தச் சொல் லுங்கள், இன்னும் ஆதாரங்களைக் கொடுக்கிறோம் என்று சொல்லி, வரலாற்றில் பதிவு செய்யுங்கள்; வரலாறாகவே பதிவு செய்யுங்கள்; புராணங்கள் வரலாறுகள் அல்ல; புராணங்கள், இதிகாசங்கள் வரலாறுகள் அல்ல. நிகழ்வுகள்தான் வரலாறு. நிகழ்வுகளை விட்டுவிட்டு, புராணங்களைப் புதுப்பிக்கின்ற போக்கு இருக்கக்கூடாது. இன்னும் புதுப்பிக்கவேண்டிய, இடம்பெறவேண்டிய நிகழ்வுகளே ஏராளம் வரலாற்றில் இருக்கும்பொழுது, வெறும் குப்பைகளைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு பக்கத்தில் வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன; இன்னொரு பக்கத்தில் கோமேதகக்ஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் வைரங்களைத் தேடுங்கள்; குப்பைகளைப் போய் ஆராயாதீர்கள்; குப்பைகளைக் கொட்டவேண்டிய இடத்தில் கொட்டுங்கள், அதுதான் மிக முக்கியம் என்று கேட்டு விடைபெறுகிறேன், 

 வணக்கம். நன்றி

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                  -----------------------------”விடுதலை” 12-02-2015
Read more: http://viduthalai.in/e-paper/96041.html#ixzz3RX12FhkG

0 comments: