அய்யா ஒருமுறை சொன்னார், என்னைப் பார்த்து
உண்மை இல்லாத விஷயத்தைச் சொல்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. காரணம்,
நான் பொய் சொல்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.
மரண வாக்குமூலம்
கொடுக்கின்றவர்கள் யாரும் பொய் சொன்னதாக வரலாறு கிடையாது. மரண வாக்குமூலம்
என்று சொன்னால், அதற்கு சட்ட ரீதியான வலிமை உண்டு. ஏனென்றால்,
சாகும்பொழுது யாரும் பொய் சொல்ல மாட்டார்கள். அவர்கள் உண்மையைத்தான்
சொல்வார்கள், கடைசி கட்டத்தில் என்பதுதான் உண்மை. அதற்கு சட்டத்தில்
இருக்கின்ற தனித்தன்மையான வலிமையாகும்.
அதைத்தான் அய்யா அவர்கள் சொன்னார், மரண
வாக்குமூலம் மாதிரி நான் சொல்கிறேன். நாங்கள் ஏன் பொய் சொல்லவேண்டிய
அவசியம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அய்யா ஒன்றை சொன்னார்.
உண்மையைச் சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லை. நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன் என்று சொன்னார்.
ஆகவே, நினைத்துப் பாருங்கள், ஆரியர் -
திராவிடர் ஆராய்ச்சியில் சில பேர் ஈடுபடுவது. இன்னும் சில பேருக்குப் பதவி
ஆசையை உண்டாக்கி, நாக்கில் தேனைத் தடவி, அவரவர்கள் தனித்தனி அமைப்பை
உண்டாக்கிக் கொள்வோம் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவது.
இப்படிப்பட்டவர்களுக்காக நான் சொல்கிறேன், திராவிடர் விழிப்புணர்வு மாநாடு
என்ற தலைப்பில் இந்த மாநாட்டைப் போட்டிருக்கிறோம். திராவிடம் என்று
சொன்னால், அதையெல்லாம் நாங்கள் வீழ்த்தி விடுவோம், திராவிடர் இயக்கம்
எல்லாம் கீழே விழுந்து போய்விட்டது. திராவிடர் இயக்கம் இனிமேல் எழுந்து
நிற்க முடியாது என்று சொல்கிறார்கள். சோர்ந்துவிட்டார்கள் என்று
சொல்கிறார்கள்.
சோர்ந்துவிட்டதற்கு அடையாளமா, முன்பு 30
மாவட்டங்களாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்; இன்றைக்கு 65 மாவட்டங்களாக
வந்திருக்கிறது என்று சொன்னால், வளர்ச்சியா? தளர்ச்சியா? அய்யய்யோ, அது
இல்லை என்று சொன்னால், இவ்வளவு போட்டிகள் இல்லாமல் இருக்குமா? நல்ல
வாய்ப்பாக, இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மாவட்டச் செயலாளராகத்
தேர்ந்தெடுக் கப்பட்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் வந்திருக்கிறார். அப்படி
இருந்தால்கூட என்ன? எந்த அரசியல் கட்சியில் இல்லாமல் இருக்கு.
அத்வானி என்ன முழுக்க முழுக்க மோடியை
ஆதரிக் கிறாரா? முரளிமனோகர் ஜோஷி என்று ஒருத்தர் இருந்தாரே, அவர் என்ன
முழுக்க முழுக்க மோடியை ஆதரிக்கிறாரா? தேசிய அளவிலேயே அப்படி இருக்கிறது.
இங்கே மாநிலத்தில் ஏதாவது ஒன்று நடந்தால்,
அதைப் பெரிதுபடுத்துகிறார்கள். ஏனென்றால், பார்ப்பன ஆதிக்கக் கருவிகளாக
ஊடகங்கள் இன்றைக்கு இருக்கின்றன. இன்றைக்கு இவ்வளவு பெரிய மாநாடு
நடக்கிறது. அதிகமான அளவிற்கு, மாநாடுகளையும், கூட்டங்களையும் நடத்துவது
திராவிடர் கழகம். ஆனால், அதிகமான அளவிற்குப் பத்திரிகையில் இடம்பெறாத ஒரு
இயக்கம் இருக்கிறது என்றால், அது திராவிடர் கழகம்தான்.
ஏனென்றால், நாங்கள் பரபரப்பை
ஊட்டுவதில்லை; நாங்கள் அங்க மச்ச அடையாளங்களைப்பற்றி விமர்சனம் செய்
கிறவர்கள் அல்ல. நாங்கள் கருத்துகளைப் பேசக்கூடியவர்கள். எனவே,
கருத்துகளைப் பேசினால், அது செய்தியாகாது இவர்களுக்கு.
அவர் இவரைத் தாக்கினார்; இவர் அவரைத் தாக்கினார் என்று சொன்னால்தான், சில பேருக்கு செய்தி.
பெரியாரைப் பார்க்காதவர்கள் இங்கே
இருக்கிறீர்கள்; பெரியாரின் பேச்சைக் கேட்காதவர்கள் இங்கே இளைஞர்கள்
இருக்கிறீர்கள். பெரியாரைத் தெரிந்துகொள்ளாதவர்கள் பலர் இங்கே
இருக்கிறீர்கள். பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பெரியார்
பாடுபட்டது அவருக்காகவா? நாங்கள் என்ன பதவிக்குப் போகக்கூடியவர்களா?
எப்பொழுது எங்களுக்குப் பாரத ரத்னா பட்டம் கிடைக்கும் என்று
எதிர்பார்க்கக்கூடியவர்களா? அல்ல! தயவு செய்து நீங்கள் ஒன்றைப்
புரிந்துகொள்ளுங்கள். எப்பொழுது நம்முடைய சூத்திரப் பட்டம், இழிவுப்பட்டம்
நீங்கும் என்ற எதிர்பார்ப் பிற்காக, தங்களையே அர்ப்பணித்துக்
கொண்டிருக்கின்ற ஒரு தற்கொலைப் பட்டாளம் இருக்கிறது என்றால், அதுதான்
கருஞ்சட்டைப் பட்டாளம் என்கிற உணர்வோடு இருக்கக் கூடியவர்கள். எனவே, இதனை
நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்: நான்,
நம்மை திராவிடர் என்பதும், பின் சரித்திரக் காலத் தன்மை என்பதும் உங்களை
நான் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கருதாதீர்கள். திராவிடர் -
ஆரியர் என்று உடற்கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து, பிரித்துப்
பேசுவதாகக் கருதா தீர்கள். ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது,
பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர்
வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே
சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட
ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு
மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய
பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள்
என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும்,
சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலியர்கள் (திராவிடர்கள்) என்பவர்கள்
இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது கலந்து
விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி
திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன
கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?
கறுப்புச் சட்டைக்காரர்கள் என்று ஒரு
கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு
என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும்
எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர்
(அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து
உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன்
இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா? என்று
பாருங்கள்.
ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு
குறிச்சொல், லட் சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால்
நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக் கட்டை நிலைமாறி மேன்மை
அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம்
என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம்
இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள்
எதுவும் நேர்ந்துவிடாது.
பூணூல் போடவேண்டும்; ஆரியம் என்றால் என்ன?
பிறக்கும்பொழுதே ஒருவன் மேல்ஜாதி; பிறக்கும்பொழுதே இன்னொருவன் கீழ்ஜாதி;
அவனுக்குக் கீழே தொடக்கூடாத ஜாதி; பார்க்கக்கூடாத ஜாதி; புழங்கக்கூடாத
ஜாதி. இது ஆரியம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; எல்லாம் ஒன்றே; மனித குலம் ஒன்றே என்று சொல்வது திராவிடம்.
உங்களுக்கு விளங்குவதற்காக சொல்கிறேன்.
ஒருமுறை துக்ளக் ஏட்டிற்காக, நண்பர்
சோ.ராமசாமி, பெரியார் திடலுக்கு வந்து என்னை பேட்டி கண்டார். அந்தப்
பேட்டியை ஆறு வாரத்திற்கு வெளியிட்டார்கள்.
அந்தப் பேட்டிக்காக என்னிடம் கேள்விகளைக்
கேட்டார். அவர் பேசும்பொழுதே குயுக்தியாக பேசுவார் என்பது உங்களுக்கெல்லாம்
தெரியும்; எழுதும்போதும் அப்படித்தான் எழுதுவார்.
அவர் என்னிடம் கேட்டார், ஏன் சார்,
நீங்கள் எதற்கு இன்னும் ஆரியம் - திராவிடம்; பார்ப்பனர் - பார்ப்பனரல்லா
தார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, இப்பொழுது எல்லோரும்தான்
மாறிவிட்டார்களே என்று கேட்டார்.
நான் உடனே, அப்படிங்களா, நாம் இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம் என்றேன்.
என்ன சார் நீங்க, வம்புக்கு வருகிறீர்களே! என்று கேட்டார்.
அடிப்பதற்காகவோ, சண்டை போடுவதற்காக
சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. நாம் இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம்.
அவர்கள் மாறிவிட்டார்கள் என்று சொன்னால், உங்கள் முதுகில் ஏன் பூணூல்
தொங்குகிறது? என்னுடைய முதுகு ஏன் வெறும் முதுகாக இருக்கிறது என்றேன்.
சார், எங்க அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகப் போட்டுக் கொண்டேன் என்று சொன்னார்.
சரி, உங்க அப்பா, அம்மா சொன்னார்கள்; என்னுடைய அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகவே நான் போடாமல் இருக்கிறேன்.
ஜாதித் தத்துவத்தில் என்ன
எழுதியிருக்கிறார்கள்? அசல் மனுதர்ம சாஸ்திரம் இங்கே விற்கப்படுகிறது.
அதில், பூணூல் போடுவதைக்கூட எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?
நம்மாள் சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், ஏங்க, நம்ம செட்டியார்
போட்டிருக்கிறாரே, ரெட்டியார் போட்டிருக் கிறாரே, வன்னியர்
போட்டிருக்கிறாரே என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் சட்டபூர்வமாகவும் சரி,
சாஸ்திரபூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இது கள்ள 100 ரூபாய் நோட்டு
போல. கள்ள நோட்டுகளை எங்கேயாவது ஏற்றுக்கொள்வார்களா?
சோ முதுகில் போட்ட பூணூல் இருக்கிறது பாருங்கள், அதுதான் உயர்ஜாதி பூணூல்.
சோ, உடனே சொன்னார், சார் நீங்களும் போட்டுக் கொள்ளலாமே என்றார்.
உடனே நான், சோ அவர்களே, நான் போட்டால்,
அந்தப் பூணூலுக்கு மரியாதை கிடையாது என்பது தெரியும். உங்கள்
சங்கராச்சாரியாரை பூணூல் எடுத்துக்கொடுக்கச் சொல்லுங்கள், எல்லோரும்
போட்டுக் கொள்வதற்கு என்றேன். ஏற்கெனவே, ராமானுசர் எல்லோருக்கும் பூணூல்
போட்டாரே, தாழ்த்தப் பட்டவர்களுக்கெல்லாம் ராமானுசர் பூணூல் போட்டு
விட்டாரே, அவர்கள் எல்லாம் கறுப்பு அய்யர்களாக மாறி விட்டார்களா? இல்லையே!
நூலுக்குப் பிடித்த கேடே தவிர, நூல் விலை உயர்ந்ததே தவிர, வேறொன்றும்
இல்லை. நூல்தானே வீணாகப் போயிற்று. கொஞ்சம் பலமான நூலாக இருந்தாலும் கூட,
வேகமாக இழுத்தால், முதுகு அரிக்கும்பொழுது அவன் சொரிந்துகொள்ள முடியும்;
இந்த நூலை இழுத்தாலே அறுந்து போய்விடுமே! அதனை நீங்கள் எண்ணிப்
பார்க்கவேண்டாமா? இந்த நூல் படுத்துகிற பாட்டைப் பாருங்கள் என்றேன்.
அய்யய்யோ, இதற்குமேல் வேண்டாம் என்று சொன்னார்.
நான் சொன்னேன், இதோ பாருங்கள்,
எல்லோரையும் பூணூல் போட்டுக்கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதை விட,
நீங்கள் மூன்று பேர்; நாங்கள் 97 பேர். 97 பேர் நூலை வாங்கிப் போட்டால்,
நூல் விலை ஏறும். மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை
வாங்கிப் போடுவது சுலபமா? சொல்லுங்க என்று கேட்டேன்.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால்,
ஆரியம் - திராவிடம் இன்னும் இருக்கிறதா, இல்லையா என்று கேட்டால்,
இருக்கிறதா? இல்லையா? ராமகோபாலனும் இந்து முன்னணிதான்; அதிலொன்றும்
சந்தேகமில்லை. இன்னொரு வர் பிரிந்து போனவர் அர்ஜுன் சம்பத் என்பவர். இரண்டு
பேரையும் ஒரே மாதிரி பார்க்கிறார்களா? பா.ஜ.க. இயக்கத்திற்கு
காரைக்குடியிலிருந்து ஒரு அய்யர், ராஜா அய்யர் என்பவர், தமிழகத்திற்கு
பா.ஜ.க. தலைவராக வரவேண்டும் என்று நினைக்கிறார். தமிழிசை சவுந்திரராஜன்
என்று நம் குடும்பத்துப் பெண்; நம் குடும்பம் என்று ஏன் சொல்கிறேன்
என்றால், என்னைப் பார்த்தால், சிற்றப்பா, பெரியப்பா என்றுதான்
கூப்பிடுவார், எங்கேயாவது சந்தித்தால். காரணம் என்னவென்றால், நம்முடைய
குமரிஅனந்தன் அவர்களுடைய மகள் அவர். குமரிஅனந்தனும், நானும் பல்கலைக்
கழகத் தோழர்கள், பல ஆண்டுகாலமாக. அந்த தமிழிசை சவுந்திர பாண்டியன் அவர்கள்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த அம்மையாரை தலைவராகப்
போட்டிருக் கிறார்கள் என்றால், எதற்காக? மோடியைக் காட்டி
பிற்படுத்தப்பட்டவர் என்று ஒரு காலகட்டத்தில் தேர்தல் நேரத்தில் மோடி
வித்தை காட்டினார்கள் பாருங்கள், பிற்படுத்தப்பட்டவர் என்கிற முத்திரையை
காட்டவேண்டும் என்பதற்காகத்தான்.
ஆரியம் - திராவிடம்பற்றி அண்ணா அவர்களும் மிக அழகாக சொன்னார்; பெரியார் கருத்து என்னவோ, அதுதான் அண்ணாவின் கருத்தாகும்.
ஒரு இனம் தங்களை உயர்ந்தவர்கள் என்றும்,
தங்கள் நாகரிகமே சிறந்தது என்றும், தங்கள் மொழியே சிறப்புடையது என்றும்
கூறிக்கொண்டு, மற்ற மக்களையும், அவர் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இழிவாகப்
பேசும் போக்கையும் நாம் கண்டிக்கிறோம், வெறுக்கிறோம். ஆரியராவது,
திராவிடராவது ஒன்றுமில்லை. எல்லோரும் ஒன்றாகக் கலந்துவிட்டனர் என்று யார்
யார் வாய் வேதாந்தம் பேசுகிறார்களோ, அவர்களே இன்றைக்குத் தங்களை ஆரியர்கள்
என்றும், தங்கள் மொழியான சமஸ்கிருதம் கோவில்களிலும், பிற இடங்களிலும்
முதலிடம் பெறவேண்டும் என்றும் கூறி வருவதோடு, திராவிடர்களையும், திராவிட
மொழிகளையும் இழிவாகப் பேசி வருகின்றனர். ஆரியர்களில், படித்தவர்,
படிக்காதவர் யாராக இருந்தாலும், தங்களுடைய வேதம் நான்கென்றும், அது ரிக்,
யஜுர், சாமம், அதர்வணம் என்றும் கூறுகின்றனரே அன்றி, திருக்குறளையோ,
சிலப்பதிகாரத்தையோ, ஏனைய தமிழ் இலக்கியங்களையோ, தங்களுடைய நூல்களாக
ஒப்புக்கொள்ளுவதே கிடையாது என்று திராவிட நாட்டில் எழுதியிருக்கிறார்.
அண்ணா அவர்கள் பல ஆண்டுகாலம் எழுதினார் பெரியார் கருத்தை.
இன்றைக்கு என்ன சூழ்நிலை? இன்றைக்குப்
பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று, அந்த ஆரிய
இனத்தைச் சேர்ந்த அம்மையாராக இருக்கக் கூடிய திருமதி சுஷ்மா சுவராஜ்
அவர்கள் பேசுகிறார் என்றால், என்ன அர்த்தம்?
இன்னுங்கூட ஒருவரை விட்டு சொன்னார்கள்;
பகவத் கீதையை தேசிய புனித நூல் என்று அறிவிக்கவேண்டும் என்று
சொல்கிறார்கள். இங்கே உரையாற்றிய எங்களுடைய செயலவைத் தலைவர் அறிவுக்கரசு
அவர்கள் ஒரு கேள்வி கேட்டாரே, இந்து மதத்திலேயே எல்லோரும் ஒப்புக்கொள்
கின்ற நூலா பகவத் கீதை? முதலில் இந்து மதத்தில் உள்ள எல்லா பிரிவினரும்
பகவத் கீதையை ஏற்றுக்கொள்கிறார்களா? சைவர்கள் இந்நூலை
ஏற்றுக்கொள்கிறார்களா? மறைமலை யடிகள் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா?
கா.சு.பிள்ளை அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? என்பதை நன்றாக நீங்கள்
நினைத்துப் பார்க்கவேண்டும்.
விசுவ இந்து பரிசத் எல்லோரையும் மத
மாற்றம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் பாருங்கள், அவர்கள் மதுரையில்
மாநாடு போட்டு, நிறைவேற்றிய தீர்மானம் என்ன தெரியுமா?
இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு,
அந்த இடத்தில் நாட்டின் அரசியல் சட்டமாக எதை வைக்கவேண்டும் என்றால்,
மனுதர்மத்தைத்தான் வைக்கவேண்டும் என்று மதுரையில் தீர்மானம்
நிறைவேற்றினார்களே!
ஆர்.எஸ்.எஸ்.சிற்கு யார் இதனை சொல்லிக்
கொடுத்தது; இந்து மகாசபைத் தலைவர்களில் முதன்மையாக இருந்து, பெரிய
தேசபக்தர் என்று வேஷம் போட்டு, மக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும்
பாலகங்காதர திலகர்.
நியாயமாக சுதந்திர இந்தியா வந்தால், மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
அந்த மனுதர்மத்தில் என்ன
சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக்
காப்பாற்றுவதற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் உண்டான,
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும்
உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார் என்று சொல்லி
வைத்திருக்கிறார்கள்.
அம்பேத்கர் இதனை மறுத்தார்; அப்படி
மறுத்தால் உங்களுக்கு இடமில்லை என்று சொன்னார்கள். அப்படி யானால், எனக்கு
மந்திரி பதவி தேவையில்லை. எனக்கு மந்திரி பதவி முக்கியமல்ல; கொள்கைதான்
முக்கியம் என்று வெளியேறியவர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர்
விட்ட பணி இன்றைக்கு நடந்துகொண்டிருக் கிறது மிகத் தெளிவாக.
பெண்களுக்குச் சொத்துரிமையா? இந்து
மதத்தில் கிடையாது, கொடுக்கக்கூடாது என்று சொன்னார்கள். இதனை யார் சொன்னது
தெரியுமா? சாதாரண குப்பனோ, சுப்பனோ அல்ல. ஜனாதிபதி பதவியில்
உட்கார்ந்திருந்த சனாதிவதி பாபு ராஜேந்திர பிரசாத் சொன்னார்.
Read more:
http://viduthalai.in/page-3/96634.html#ixzz3SNwR9DPB
*******************************************************************************
கடவுள் இல்லை என்கிற எங்களால்
கோயிலுக்கோ, மனிதர்களுக்கோ ஆபத்து வந்ததுண்டா?
கிருட்டினகிரி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில்
தமிழர் தலைவர் எழுப்பிய அறிவார்ந்த வினா
சென்னை, பிப். 22- கடவுள் இல்லை என்கிற
எங்களால் கோயிலுக்கோ, மனிதர்களுக்கோ ஆபத்து வந்ததுண்டா? என்ற அறிவார்ந்த
வினாவை எழுப்பினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014
அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார
மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்
உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு
காரணம் என்ன? மனுதர்ம சிந்தனை; ஆரியம்,
அந்த ஆரியம் எங்கெங்கே சென்றாலும், அவர்களுடைய காரியம் என்னவென்றால்,
தங்களுடைய தத்துவத்தை சொல்வதுதான் அவர்களுடைய அடிப்படையாகும். ஆகவே, அந்த
அடிப் படையினுடைய அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்.
அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக்
காப்பாற்று வதற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவை களின்றும் உண்டான,
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று.
அடுக்கு ஜாதி முறை என்று அதைத்தான்
சொன்னார் கள். Graded inequality மற்ற இடங்களில் நடந்த அநியாயத்தைவிட,
இந்து மத வருணாசிரம தருமத்தில், ஏணிப் படிக்கட்டு மாதிரி.
நான்காவது ஜாதிக்குக் கீழே ஜாதிக்கு
அப்பாற்பட்ட வர்கள், ஜாதி அற்றவர்கள் இதில் யார் வருகிறார்கள் என்றால்,
பஞ்சமர்கள்; அய்ந்தாவது ஜாதி. ஆறாவது ஜாதி என்று ஒன்று இருக்கிறது. பல
பேருக்குத் தெரியாத ஒன்று, அது அத்தனை ஜாதியிலும் இருக்கின்ற பெண்கள்.
உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்கள் ஆறாவது ஜாதியாக, கீழ்ஜாதியாகக்
கொண்டு வந்தார்கள். எனவே தான், சூத்திரர்களுக்கு என்னென்ன அடிமையாக இருக்
கின்ற வேலையோ, அவை அத்தனையையும் சேர்த்து செய்யவேண்டிய வேலை பெண்களுக்கு
உண்டு.
மனுதர்மம் 415 ஆவது சுலோகம் என்ன சொல்கிறது.
சூத்திரன் என்றால் என்ன பொருள்?
சூத்திரன் ஏழு வகைப்படுவர்; 1)
யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப்
பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4)
விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒரு வனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை, தலைமுறை யாக ஊழியம் செய்கிறவன்.
இதை பாராட்டவேண்டிய அளவிற்கு, நம்முடைய
மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் துண்டறிக்கையாக அச்சடித்து
அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.
ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்
மேற்கண்ட நிலை மீண்டும் வரவேண்டும்
என்பதற் காகத் தான் ஆர்.எஸ்.எஸ். அதை மீண்டும் உருவாக்க வேண்டும்
என்பதுதான் பா.ஜ.க.வினுடைய இன்னொரு திட்டம். கொஞ்சம் ஏமாந்திருக்கிறார்களா,
இல்லையா என்று விட்டு விட்டுப் பார்க்கிறார்கள். தூங்கியவன் தொடை யில்
கயிறு திரித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். திராவிடர் இயக்கத்தின்மேல்
ஏன் கோபம் என்றால், இவர்களைத் தத்துவ ரீதியாக எதிர்க்கின்ற இயக்கம்,
இந்தியாவிலே இயக்கம் இருக்கிறது என்றால், அரசியல் ரீதியாகவும் சரி, சமூக
ரீதியாகவும் சரி, திராவிடர் இயக்கம்தான்.
இதற்கு நேர் எதிரானது; கருப்புக்கு நேர்
எதிரானது வெள்ளை என்பதுபோல, இருட்டுக்கு நேர் எதிரானது வெளிச்சம்
என்பதுபோல, ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்.
வள்ளுவர் எழுதியிருக்கிறாரே,
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
நம்மாள் சேற்றில் கால் வைக்காவிட்டால், இவன் சோற்றில் கை வைக்க முடியுமா?
ஆனால், பாருங்கள், மனுதர்மத்தில் எழுதுகிறான்:
பாவகரமான தொழில் உண்டு என்று சொன்னால்,
அது விவசாயம்; அதை செய்யவே கூடாது. அதிலும் பிராமணர் கள் ஏர் பிடிக்கவே
கூடாது என்று. இன்றுவரையிலும் அதைக் கடைபிடிக்கிறார்கள். நம்மாள்களில்
எத்தனையோ பேர் ஏர் பிடிக்கிறார்கள். அதில் ஒன்றும் தடையில்லை. எது ஆரியம்?
எது திராவிடம்? இந்த ஆராய்ச்சியைப் பார்க்காதீர்கள். இதுதான் ஆரியம்;
இதுதான் திராவிடம். அன்றைய நிலையைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்
கின்றான். இன்றைக்கும், டிராக்டர் வந்த காலத்தில்கூட, எங்கேயாவது அவன்
டிராக்டர் கம்பெனியில் மேனேஜராக இருந்திருப்பானே தவிர, உழுவதற்கு வயலில்
இறங்கி இருக்கிறானா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆகவே, இந்த சமுதாயத்தில் இது மீண்டும்
தலைகீழாக உண்டாக்கவேண்டும் என்ற அடிப்படையில், அதனை செய்வதற்காகத்தான்
அந்தப் பணிகளைச் செய்கிறார்கள். இதைத்தான் கீதையும் சொல்கிறது.
மகாபாரதம் எழுதியபோது கீதை கிடையாது
அந்த பிரம்மா உண்டாக்கினார் என்றான்.
மும்மூர்த்தி கடவுள்களில். இதில், கிருஷ்ண அவதாரக் கடவுள். இதை யெல்லாம்
ஆர்.எஸ்.எஸ். நம்பச் சொல்கிறார்கள்.
மகாபாரதம் எழுதியபோது கீதை கிடையாது.
ரொம்ப வருஷத்திற்குப் பிறகுதான், கீதை என்ற ஒன்றை உண் டாக்கி, அதைக் கொண்டு
போய் நடுவில் சொருகினார்கள். பகுத்தறிவோடு யோசனை செய்தால், பகுத்தறிவோடு
யாரும் சிந்தித்துப் பார்த்தால், அது நிற்காது.
காரணம் என்னவென்றால், ஒரு சிறிய விஷயத்தை
உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கிருஷ்ணன், சாரதியாக வந்து ரதம்
ஓட்டுகிறார். எதிரே கவுரவர்களின் படை நிற்கிறது. பாண்டவர்களுக்குத்
தேரோட்டியாக வருகிறார் கிருஷ்ணன் என்றுதான் கதை எழுதி வைத்திருக்கிறார்கள்.
எதிரே நிற்பவர்கள் எல்லோரும்
சொந்தக்காரர்கள். அவர் களை எதிர்த்து சண்டை போடு என்று கிருஷ்ணன் சொல்
கிறான். அர்ஜூனனுக்கு நியாயமான ஒரு சந்தேகம் இருக்கிறது. நம்
சொந்தக்காரர்களை சாகடித்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று
நினைத்து, ஆகவே, அதற்கு நான் தயாராக இல்லை என்கிறான்.
உடனே கிருஷ்ண பரமாத்மா என்ன செய்திருக்க
வேண் டும்? இங்கே கலவரம் நடைபெறுகிறது என்றால், காவல்துறை என்ன
செய்யவேண்டும்?
காவல்துறை கலவரத்தைத் தடுக்கவேண்டும். அதற்குப் பெயர்தான்
காவல்துறை. இல்லை, இல்லை நீங்கள் நன்றாகக் கலவரம் செய்யுங்கள்; நாங்களும்
உங்களுக்கு வசதி செய்து தருகிறோம். நீங்கள் ஏன் சோர்ந்து போய்
இருக்கிறீர்கள், இதோ இருக்கிறது பெட்ரோல் பாம் என்று சொன்னால், அது
காவல்துறையாக இருக்க முடியுமா?
சண்டைக்குப் போ, போ என்று சொல்வதற்கு ஒரு கடவுள் தேவையா?
அதுபோல, அர்ஜூனன் போர் செய்ய மாட்டேன் என்
கிறான், ஆனால், சண்டைக்குப் போ, போ என்று சொல்வ தற்கு ஒரு கடவுள் தேவையா?
உலகத்திலேயே நம் கட வுளைத் தவிர, இந்துக் கடவுளைத் தவிர சண்டைக்குப் போகச்
சொன்ன கடவுள் வேறு எங்காவது இருக்கிறானா? இதைவிட, அராஜகம், இதைவிட
பயங்கரவாதம் வேறு ஏதாவது உண்டா? போர் செய், எதிரே இருப்பவர்களை சாகடி என்று
சொல்கிறார். அப்போது உபதேசம் சொல் கிறார்.
700 சுலோகம் சொன்னார் என்று கதை எழுதி
வைத்திருக்கிறார்கள். ஆனால், 745 சுலோகம் இருக்கிறது என்றும், எத்தனையோ
கீதைகள் இருக்கிறது என்றும் திலகரே எழுதி வைத்திருக்கிறார்.
சரி, 700 சுலோகங்களை சமஸ்கிருத்தில்
சொல்கிறார். எதிரே, எதிரிப் படைகள் நின்று கொண்டிருக்கின்றன. அது நட்புக்
களம் அல்ல; போர்க்களம்; அந்தப் போர்க்களத்தில் படைகள் நின்று
கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் அமைதியாக நிற்கிறார்களாம்; இன்னும் 700
சுலோகம் முடியவில்லை; 645 சுலோகம்தான் முடிந்திருக்கிறது என்று அமைதியாக
நிற்பார்களா? இது அறிவுக்கு ஏதாவது சம்பந்தம் உள்ள விஷயமா? நன்றாக
நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அப்பொழுது என்ன டேப்ரிக்கார்டில் பதிவு
செய்தார் களா? யாராவது ஷார்ட்டெண்டில் எழுதினார்களா, கிருஷ்ணன் சொல்லச்
சொல்ல, பிறகு பின்னாளில் எப்படி புத்தகம் வந்தது? நம்பு என்று
சொல்கிறார்கள்; வெள்ளைக் காரன் சொன்னான், புராணங்கள் எல்லாம் கற்பனை என்று.
அவதாரம் எடுத்தான் என்று சொல்கிறார்களே, கிருஷ்ணன் பத்து அவதாரம் எடுத்தான் என்று.
தேவர்கள் எல்லாம் சென்று, தேவர்கள் என்றால், ஆரியர்களுக்குச் சமம். அசுரர்கள் என்றால், திராவிடர்கள் என்கிற கற்பனை.
அசுரர்கள் எல்லாம் அக்கிரமம் செய்கிறார்கள். அவர்களை அடக்க முடியவில்லை. அவர்களை ஏதாவது செய் என்று சொன்னவுடன்,
கிருஷ்ணன் உடனே, நான் அவதாரம் எடுத்து
வருகிறேன் என்று சொல்லி, பத்து அவதாரம் எடுத்தான். அய்ந்து அவதாரத்தை
மிருகமாக எடுத்தான். மீதி அய்ந்து அவதாரம் மனித உருவமாக.
அசுரர்களை அழிக்கவேண்டும்; அதில்
சத்திரியர்களே மிகத் திமிராக இருக்கிறார்கள். அவர்களையும் அடக்க வேண்டும்
என்று சொல்லி, இரண்டு அவதாரத்தை எடுக்கிறார். இவையெல்லாம் மகாபாரதத்தில்
எழுதியிருக் கிறது. அதைத்தான் நான் சொல்கிறேன்.
யாருக்காவது சந்தேகம் இருந்தால், காவல்
துறையாக இருந்தாலும் சரி, யாராவது ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னாலும்,
தயவு செய்து, இந்தப் பேச்சுக்காக என்மீது வழக்குப் போடுங்கள்; என் பேச்சை
பதிவு செய்துகொண்டு வழக்குப் போடுங்கள். நீதிமன்றத்தில் அதனை சந்திப்பதற்கு
நமக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதற்காக நான் சொல் கிறேன்.
நீங்கள் கேட்பது, பாரதக் கதையில்
இருக்கும் மிகப் புண்ணியமான ஒரு இடத்தை நான் சொல்லப் போகிறேன். சொல்கிற
எனக்கும் புண்ணியம்; கேட்கின்ற உங்களுக்கும் புண்ணியமாகும். பாதியில்
நிறுத்தினால், இரண்டு பேரும் நரகத்திற்குப் போய்விடுவோம். அவன் கதை சொல்லி
வைத்திருக்கிறான். அதனாலே பாதியிலே நிறுத்த நான் தயாராக இல்லை. முழுவதும்
சொல்லியாகவேண்டும்.
மகாவிஷ்ணு தடவிப் பார்க்கிறார், மார்பில்
இருக்கின்ற இரண்டு மயிரைப் பிடுங்கி எறிகிறார். ஒன்று கறுப்பு மயிர்;
இன்னொரு வெள்ளை மயிர். கறுப்பாக இருந்த மயிர் கிருஷ்ண அவதாரம்; வெள்ளை
மயிர் பலராமன் அவ தாரம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். யாருக்காவது
சந்தேகம் இருந்தால், பாரதத்தைப் பாருங்கள்;
இதை அப்படியே மறைமலையடிகள் தன்னுடைய
புத்தகத்திலேயே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். மாணிக்கவாசகர் காலமும்,
வரலாறும் என்பதிலேயும் எடுத்து எழுதியிருக்கிறார்.
புராணங்கள் எல்லாம் நடந்தவையாம்!
ஆகவே, இப்பொழுது என்ன சொல்கிறார்கள், ஆர்.எஸ். எஸ்.காரரை சரித்திர ஆராய்ச்சி தலைவராகப் போட்டவுடன், அவர் சொல்கிறார்,
புராணத்தையெல்லாம் கற்பனை என்று நினைக் காதீர்கள்; அவையெல்லாம் நடந்தது என்று சொல்கிறார்.
சரி, இப்பொழுது இந்த விஷயம் நடந்தது என்று ஒப்புக்கொண்டால், கடவுளை எவ்வளவு டேமேஜ் செய்கிற விஷயம் இது.
ஏண்டா, கற்பனை என்று நாங்கள் சொன்னதை
நீங்கள் நம்பினால், உன் கடவுளாவது காப்பாற்றப்படுகிறார்; இல்லை, நடந்தது
என்று ஒப்புக்கொள் என்று நீ சொன்னால், இதைவிட கடவுளைக் கேவலப்படுத்துவது,
கொச்சைப் படுத்துவது வேறு உண்டா?
அந்தக் கிருஷ்ணன் சொல்கிறார்,
சதுர்வர்ணம், மயாசிருஷ்டம்
நான்கு ஜாதிகளையும் நானே உண்டாக்கினேன். நானே நினைத்தாலும்கூட அதனை மாற்ற முடியாது.
ஏன் ஜாதி நம் நாட்டில் நிலைத்து இருக்கிறது. ஜாதி இருந்தால், ஜாதி சண்டை வரும்; மதம் இருப்பதினால், மதச் சண்டை ஏற்படுகிறது.
அந்த மதவெறி, இந்த மதவெறி என்று உண்டா?
அண்மையில் பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பெஷாவரில் உள்ள
பள்ளிக்கூடத்திலிருந்த குழந்தை களைக் கொன்றிருக்கிறார்களே! மனிதனுக்கு மதம்
பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து என்றால், மனிதனுக்கு
மதம் பிடித்தால் எவ்வளவு ஆபத்து என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப்
பார்க்கவேண்டும்.
பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருக்கின்ற நாட்டில், என் மதம் மட்டுமே ஆளவேண்டும் என்று சொல்வதுதான் இந்துத்துவா!
என் மதம் இந்து மதம்; அதுவும் பெரும்பான்மை நாங்கள், அதனால், இந்துக்கள் நாங்கள்.
மோகன்பகவத் என்கிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார், இந்தியாவில் உள்ள எல்லோரும் இந்துக்கள். ஆகவே, நாங்கள் இதனை செய்வோம் என்று.
இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும்தான்
இந்துக் களாயிற்றே! பிறகு ஏன், இந்துராஜ்ஜியம் என்ற ஒன்றை
உருவாக்கவேண்டும். இந்தியாவே இந்துராஜ்ஜியம் என்று சொல்லிவிட்டுப்
போகவேண்டியதுதானே! ஏன், இந்தியாவை மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
இதோ என் கையில் இருப்பதைப் பாருங்கள்:
எவ்வளவு பெரிய ஆபத்து வர இருக்கிறது
என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால், நண்பர்களே,
புரிந்துகொள்ளுங்கள், இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய, ஞானகங்கை
புத்தகமாகும். இது 1939 இல் கோல்வால்கர் எழுதியதாக சொல்லப்படுகின்ற
புத்தகம்.
அந்தக் கோல்வால்கர் என்ன சொன்னார் என்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று சொல்கிறார்.
அதனால்தான் இப்பொழுது கட்டாய மத மாற்றம்.
மத மாற்றம் நாங்கள் செய்வோம். எல்லோரையும் பிடிப்போம்; 2 லட்சம் ரூபாய்
கொடுத்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்து மத மாற்றம் செய்கிறார்கள்.
மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் வந்தபொழுது
கண்டித்த வர்கள், இன்றைக்கு மீண்டும் தாய் மதம் என்று சொல்கிறார்கள்;
எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் ஏற்பவர்கள் அல்ல திராவிடர்
கழகத்துக் காரர்கள். ஆனால், மனிதநேய நேய அடிப்படையில், நல்லெண்ணம்
இருக்கவேண்டும்.
நாத்திகர்களால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டுள்ளதா?
கடவுள் இல்லை என்கிற எங்களால்
யாருக்காவது, எந்தக் கோவிலுக்காவது ஆபத்து உண்டா? யாராவது வழிபடுகின்ற
இடத்திற்கு ஆபத்து உண்டா? ராமர் இங்கே பிறந்தார் என்று இவன்தான்
கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போகிறான்; இன்னொருத்தன், இல்லை, இல்லை
இங்கேதான் பாபர் மசூதி கட்டினார் என்று அவர் போகிறார், தடுக்கிறார். ரத்த
ஆறு ஓடுகிறது.
நாங்கள்தான் சொல்கிறோம், ஏம்பா, யார்
இடமாக இருந்தாலும் அமைதியாக இருங்கள் என்று சொல்வதற்கு எங்களைத் தவிர
நாட்டில் நாதி உண்டா? நாத்திகர்களால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டு
இருக்கிறதா? கடவுள் சண்டை உண்டா? மதச் சண்டை உண்டா?
பள்ளிக்கூடம் கட்டு, எல்லோரும் வருவார்கள்
என்று சொல்கிறோம்; ஒரு கோவில் கட்டினால், அந்த மதத்துக் காரர் மட்டும்தான்
வருவார்; மசூதி கட்டினால், அந்த மதத்துக்காரர் மட்டும்தான் வருவார்; சர்ச்
கட்டினால், அந்த மதத்துக்காரர் மட்டும்தான் வருவார். ஆனால், மருத்துவ மனை
கட்டுங்கள், அதற்கு எல்லா மதத்துக்காரர்களும் வருவார்களே, அதில் யாரும்
வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், பல்கலைக் கழகத்தில்கூட, இந்துப்
பல்கலைக் கழகம் என்று ஆரம்பித்தவர்தான், அண்மையில் இது வரையில் நீங்கள்
கேள்விப்படாத ஒரு பெயரை இரண்டு நாள்களுக்கு முன்பு
கேள்விப்பட்டிருப்பீர்கள். பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பண்டிட்
மதன்மோகன் மாளவியா என்று.
மாளவியா என்றால், பல பேருக்குத் தெரியாது.
தெரிய வேண்டிய பல பேரையே தெரியாது நமக்கு. மோடியே ஆறு மாதத்திற்கு முன்பு
பல பேருக்குத் தெரியாதே! இப்பொழுதுதானே மோடியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அந்த மதன்மோகன் மாளவியா என்ன செய்தார்
தெரியுமா? இந்துப் பல்கலைக் கழகத்தை, இந்து மகாசபையை உருவாக்கினார்.
அதனுடைய விளைவு என்ன? ஆறு மாதத்திற்கு முன்பு நீங்கள் ஏமாந்ததின் விளைவு,
என்ன அக்கிரமம் நடந்திருக்கிறது என்றால், காந்தி தேசப் பிதா, அண்ணல்
காந்தியடிகள், அவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான்; ராம் ராம் என்று
சொன்னவர்தான்.
ரகுபதி ராகவ ராஜாராம்!
பதீத பாவன சீதாராம்!
சீதாராம் ஜெய சீதாராம்!
பஜ து ப்யாரே சீதாராம்!
ஈஸ்வர அல்லா தேரே நாம்!
சப்கோ சன்மதி தே பகவான்!
ரகுபதி ராகவ ராஜா ராம்!
பதீத பாவன சீதாராம்!
காந்தியார்மீது அவர்களுக்கு ஏன் கோபம் வந்தது?
இவ்வளவையும் பாடியவர்தான் காந்தியார்;
அவர் ஒன்றும் நாத்திகர் அல்ல. அப்பேர்ப்பட்ட காந்திக்கு, கடைசியில், இந்த
ஆரியத்தின் சூழ்ச்சி புரிந்தது; வகுப்புவாரி உரிமைபற்றி பேசியதும்;
திராவிடர்களுடைய கோரிக்கை நியாயம் என்று சொல்லிவிட்டார் என்றவுடன், அவர்
களுக்கு காந்தியார்மீது கோபம் வந்தது.
காந்தியார் கேட்டார், வேதம் ஓதுவதுதானே
வேதியர்க்கு அழகு; நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லவேண்டும்
என்று ஆசைப்படுகிறீர்கள்; நீங்கள் ஏன் பிணத்தை அறுக்கவேண்டும் என்று
நினைக்கிறீர்கள். நீங்கள் ஏன் டி-ஸ்கொயர் எடுத்துக்கொண்டு பொறியியல்
கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்று கேட்ட ஒரு மாதத்தில் அவரை
துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். நாதுராம் விநாயக கோட்சே என்ற மராத்திய
பார்ப்பான்.
எவ்வளவு தைரியம் இருந்தால், இவ்வளவு நாள்
வரையில் அந்த கோட்சேயைப்பற்றி பேசாதவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை
வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுவும், தமிழ்நாட்டில் போஸ்டர்
அடித்து ஓட்டுகின்ற அளவிற்கு, இந்த ஆட்சிகளும், காவல் துறையும் எப்படி
அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. தயவு செய்து இதனை நீங்கள் நினைத்துப்
பார்க்கவேண்டும். காந்தியாருடைய நினைவு நாளான ஜனவரி 30; மதவெறி ஒழிப்பு
நாள்! அதனால்தான் நாங்கள் இன்றைக்கு மிகத் தெளிவாக அறிவித்தோம். வருகின்ற
ஜனவரி 30 ஆம் தேதி மதவெறி ஒழிப்பு நாள் என்று காந்தியாருடைய நினைவு நாளை
நாங்கள் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், ஒத்த கருத்துள்ள அத்துணைக்
கட்சித் தலைவர்களையும், பேச்சாளர்களையும் அழைத்து, மாவட்டத் தலைநகரங் களில்
நடத்தி, மக்கள் நல்லிணக்கத்தாடு இருக்கவேண்டும், ஒற்றுமையோடு
இருக்கவேண்டும்; மதவெறிக்கு ஆளாகக் கூடாது; இந்த நாடு
காப்பாற்றப்படவேண்டும்.
இது பெரியார் பூமி; திராவிட பூமி!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில்,
இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடியது. ஆனால், ஒரு சம்பவம்கூட, ஒரு
அசம்பாவிதம்கூட, ஒரு சிறு பிரச்சினைகூட இல்லாத ஒரு மாநிலம், இந்தியாவில்
தமிழ்நாடுதான். காரணம், இது பெரியார் பூமி; திராவிட பூமி.
இதையேதான் பத்திரிகைகளும் அன்றைக்கு
எழுதின. அதைக் குலைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள்
மடமடவென்று வேகமாக நடக்கின்றன. ஒரு பக்கம் மதமாற்றம்; இன்னொரு பக்கம்,
பச்சையாக கோட்சேவுக்கு நாங்கள் சிலை வைப்போம்; கோட்சே பிறந்த நாளை
கொண்டாடுவோம் என்று சொல்கிறார்கள்.
காந்தியார் அப்படி என்ன செய்தார்?
வகுப்புரிமையை ஆதரித்தார், அவ்வளவுதானே! அப்பேர்ப்பட்ட காந் தியாரை
சுட்டுக் கொன்றனர். எல்லாருக்கும் சம வாய்ப்புக் கொடுப்பதை நாங்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்கின்ற ஒரு ஆட்சி வந்து, நீங்கள் மீண்டும்
மீண்டும் ஏமாந்தால், அதனுடைய விளைவு என்ன?
ஆரியம் - பாசிசம்; திராவிடம் - ஜனநாயகம்
ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்?
பெரும்பான்மை மக்கள் ஆளவேண்டும்; அவர்களுடைய பிரதிநிதிகள் ஆளவேண்டும்.
சிறுபான்மைச் சமுதாய மக்கள் மாள வேண்டும் என்பதா? சிறுபான்மை சமுதாய
மக்களும் வாழவேண்டும், அதுதான் மிக முக்கியம். பெரும்பான்மை ஆளட்டும்;
சிறுபான்மைச் சமுதாயமும், மற்றவர்க ளைப்போல உரிமைப் பெற்று வாழவேண்டும்;
அதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவமாகும்.
நான் பெரும்பான்மை, நான் வைத்ததுத்தான்
சட்டம் என்று சொன்னால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது பாசிசம்,
பச்சைப் பாசிசம். ஆரியம் என்பது பாசிசம்; திராவிடம் என்பது ஜனநாயகம்.
எப்படி திருக்குறள் என்பது திராவிடம்; மனுதர்மம் என்பது ஆரியமோ அதுபோலத்தான், அதே தத்துவங்கள் தான்.
இந்த கோல்வால்கர் என்பவர் தெளிவாக அவருடைய நூலில் சொல்லியுள்ளார்.
*************************************************************************
ராஜபக்சே வெற்றிபெற வேண்டும் என்று உதவி புரிந்தவர் நரேந்திர மோடி தானே!
கிருட்டினகிரி மாநாட்டில் கழகத் தலைவர் உரை
சென்னை, பிப். 22- ராஜபக்சே வெற்றபெற
வேண்டும் என்று உதவி புரிந்தவர் நரேந்திர மோடி தானே! என்றார் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற
திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்
தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:
உயிர், கொள்கைக்காகப் போனால், அதைவிட மிகப்பெரிய வாய்ப்பு வேறு கிடையாது
நாங்கள் ஏன் திராவிடர் விழிப்புணர்வு
மாநாடு போட்டு இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்? எங்களுக்கு அதனால் என்ன
லாபம்? எங்களுடைய உயிரையும் பணயம் வைத்துப் பேசுகிறோம்; எங்களைப் பார்த்து
கேட்கிறார்கள், நீ வந்தால், இன்றைக்குத் திரும்பிப் போகமாட்டாய் என்று
சொல்கிறார்கள்.
இன்றைக்கு தைரியமாக அடையாளம் தெரியாத
ஆள்களெல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் திரும்பிப் போவது முக்கியமல்ல; நீ
திருந்தி வருவதுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, நாங்கள் என்ன உலகம்
உள்ளவரை வாழப் போகிறோமா? உயிர், நோயால் போகக்கூடாது; உயிர், விபத்தினாலே
போகக்கூடாது. உயிர், கொள்கைக் காகப் போனால், அதைவிட மிகப்பெரிய வாய்ப்பு
வேறு கிடையாது. அப்படி எண்ணக்கூடியவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்.
எனவே, இந்த சமுதாயத்திற்கு எச்சரிக்கை மணி
அடிப்பதற்கு எங்களைவிடத் தகுதியானவர்கள் வேறு யாரும் கிடையாது. எங்களுக்கு
அரசியல் ஆசாபாசங்கள் கிடையாது. எங்களுக்கு லட்சியப் பார்வை மட்டுமே உண்டு.
ஆகவே அந்த அடிப்படையில்தான் இதைச் சொல்கிறோம்.
கோல்வால்கரின் ஞானகங்கை என்ன சொல்கிறது?
அந்த கோல்வால்கர் நூலில் சொல்லியிருக்கிறார் பாருங்கள், அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:
இந்த
நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமுதாயத்தில், மிக முக்கியமாக
இருக்கக்கூடிய உங்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். நாட்டில்
வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்கள் நீங்கள் எல்லோரும் அந்நிய மக்கள்.
நாட்டில் வாழும் அன்னிய மக்களுக்கு, இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று, அவர்கள் சமுதாய இனத்தில் ஒன்றென
கலந்து, அவர்கள் பண்பாட்டை தழுவுதல் வேண்டும். அல்லது சமுதாய இனத்தின் தயவு
தாட்சண்யத்தில் வாழுபவராக இருக்கவேண்டும். அதுதான் தர்க்கரீதியாக உட்பட்ட
சரியான முறையாகும்.
ஒன்றுதான் மிக முக்கியம்,
இந்துஸ்தானத்தில் வாழும் இந்துக்கள்
அல்லாதார், இந்து பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, இந்து சமயத்தை
உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, இந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய
இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதா வது,
அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத
தன்மைகளை யும், நன்றிகெட்ட தன்மையையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான
எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளவேண்டும்.
ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால், அவர்கள் அன்னிய ராக இருப்பதை
விட்டொழித்துவிடவேண்டும். அவ்வாறு அவர்கள் இருக்க அவர்கள் விரும்பவில்லை
என்றால், அவர்கள் இந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக
சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதிலேயோ
அல்லது பிரஜா உரிமையோ கூட அவர் அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக்
கூறுமிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழுதல் வேண்டும்.
ராமனைக் கும்பிட்டால்தான்,
இஸ்லாமியர்களாகிய நீங்கள் இந்த நாட்டில் இருக்க முடியும். கிருஷ்ணனை
நீங்கள் வணங்கினால்தான், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் இருக்க முடியும்
என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். ஆதாரம் இருக்கிறதே!
இதை எவ்வளவு விரைவாக நம்முடைய ஆட்சியில்
செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் செய்யவேண்டும் என்பதுதான் இன்றைக்கு
ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.
இதைச் சொல்லாமல், மக்களை ஏமாற்றுவதற்காக
என்ன சொன்னார்கள், வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொன்னார்கள். நாங்கள்
வந்தால் மாறுதல் செய்வோம் என்று சொன்னார்கள்.
சகோதரர் வைகோ அவர்களுக்கு அன்றைக்கே புரிந்தது!
இவர்கள் வந்தால், நம்முடைய ஈழத்
தமிழர்களுக்கு விடியல் கிடைத்துவிடும். நம்முடைய மீனவப் பிரச்சினை கள்
தீர்ந்துவிடும். மோடி கையில் மந்திரக் கோல் வைத் திருக்கிறார், அதனை
நீட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் நினைத்துக்
கொண்டிருந்தார்கள்.
என்ன நடந்தது? இவர் பதவியேற்ற நாளிலேயே
அது அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிந்தது. சகோதரர் வைகோ அவர்களுக்கு
அன்றைக்கே புரிந்தது. ஆனால், வெட்கம் தடுத்தது; உடனே சொல்வதற்கு. அதனால்,
எதிர்ப்பைக் காட்டினார்.
மோடி பதவியேற்பு விழாவிற்கு, கொடுங்கோலன்
ராஜபக்சவை அழைத்தார்கள். அவரை மட்டுமல்ல, எல் லோரையும் அழைத்தார்கள்.
சார்க் மாநாட்டுத் தலைவர்கள் என்று அதற்கு வியாக்கியானம் சொன்னார்கள்.
சர்வதேச அரசியலுக்கு மாறாக, இலங்கையில்
தமிழினம் புண்பட்டுக் கிடக்கிறது. அதிபராக இருக்கின்ற ராஜபக்சே, அய்க்கிய
நாடுகளின் சபையின் சார்பாக போடப்பட்ட மனித உரிமையின் ஆணையத்தின் சார்பில்,
போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றவாளி, சர்வதேச
ரீதியாக.
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அதற்காக அய்.நா. தன்னுடைய குழுவை
அனுப்புகிறது. நான் அவர்களை அனுமதிக்கமாட்டேன் என்று நேற்று வரை சொல்லிக்
கொண்டிருந்தவர், அந்த சர்வாதிகாரி, சிங்கள வெறியன், இலங்கை அதிபர்
ராஜபக்சே. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; எங்கே, டில்லியில். இதைவிட
ஈழத் தமிழர்கள் நெஞ்சில் புண்ணை உருவாக் கக்கூடியது; வெந்த புண்ணில் வேலை
குத்துவது வேறு ஏதாவது உண்டா? அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன்
இலங்கையில் நடைபெறுகின்ற அதிபர் தேர்லில்,
நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று மோடி வாழ்த்துச் சொல்கிறார். அதைச்
சொல்லலாமா? தமிழர்களுடைய உணர்வுகளை அவர் புரிந்துகொண்டாரா? காங்கிரஸ்காரர்
மேல் இருந்த கோபம், தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு; உருட்டைக்கு நீளம்;
புளிப்புக்கு அதற்கு அப்பன் என்று சொல்வார்கள்.
உருட்டை என்றால் எலுமிச்சம்பழம்; புளியம்பழம் அதிகம் புளிப்பா? எலுமிச்சம் பழம் அதிகம் புளிப்பா? என்ற சந் தேகம் வந்தது.
சப்பிப் பார்த்தவுடன், இவன் வாயில் போட்டு
ருசித்துப் பார்த்தான்; உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன்
என்று சொன்னான். அதுபோல, காங்கிரசுக்கு அப்பன், எதில், அவர்கள்
நடந்துகொண்டது மோசம் என்று இவர்களை வைத்தால், இவர் ஒட்டக்கூத்தன்
பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்ட மாதிரி, அவருக்கு அடிக்கடி வரவேற்பு
கொடுத்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வராத துணிச்சல், அப்பொழுது ஏற்படாத
அக்கிரமம் இப்பொழுது வந்துவிட்டது. இதனைப் புரிந்துகொண்டோமே, இவ்வளவு
சீக்கிரத்தில்.
உண்மை உருவத்தைக் காட்டக்கூடாது; அதற்குப் பதில் ஒப்பனைதான் இருக்கவேண்டும்!
ராஜபக்சே வெற்றி பெறவேண்டும் என்று மோடி
சொன்னார்; அத்தோடு மட்டுமல்ல நண்பர்களே, அவருடைய வெற்றிக்கு உதவுகிறாராம்.
என்ன செய்கிறார் தெரியுமா? நேற்று முன்நாள்தான் ஒரு செய்தி வெளிவந்தது.
இந்தியாவில், இணையத்தில் இளைஞர்களை ஏமாற்றினார் பாருங்கள், அதற்கு அரவிந்த்
குப்தா என்பவர், அவர் அமெரிக்காவிலிருந்து வந்து இணைய தளத்தையெல்லாம்
சரிபடுத்திக் கொடுத்தவர். அந்த இணைய தளத்தின் உதவியுடன் மோடியின்
வெற்றிக்காக இளைஞர்களை ஏமாற்றுவது எப்படி? தேர்தல் பிரச்சாரம் செய்வது
எப்படி? வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சி!! என்று சொல்லி வித்தியாசம்
காட்டவேண்டும்; உண்மை உருவத் தைக் காட்டக்கூடாது; அதற்குப் பதில்
ஒப்பனைதான் இருக்கவேண்டும்.
ஒப்பனையை நம்பினால் என்னாகும்? அந்தக்
காலத்தில் சொல்வார்கள், கிராமத்திலிருந்து ஒருவன் நாடகம் பார்க்கச்
சென்றான். ஸ்திரீபாட் போட்ட ஒரு வனைப் பார்த்து, அவன் கல்யாணம் செய்துகொள்ள
வேண்டும் என்று நினைக்கிறான். அந்தக் காலத்தில், ஆண்கள்தான் ஸ்திரீபாட்
போடுவது வழக்கம். பெண்கள் நடிப்பதில்லை. இவன் ஒற்றைக்காலில் நின்றான், அவ
ளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று. அவன் அரிதாரத்தைக் கலைத்து, நான்
ஆண் என்றான்.
அதுபோன்று, இவர்கள் ஏமாற்றக்கூடிய அளவிற்கு அப் படியே உருவத்தை மாற்றுகிறார்கள்.
தமிழினம் பூண்டோடு அற்றுப் போவதற்கு உதவினால், இதைவிட மோடியினுடைய துரோகம் வேறு இருக்கமுடியுமா?
நீங்கள் எப்படி இந்தியாவில் வெற்றி பெற்றீர்களோ, அதற்காக இணையத்தில் பணி செய்தாரே, அவரை இலங்கைக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார்.
அரவிந்த் குப்தா என்பவர், அதற்காக
இலங்கைக்குச் சென்றிருக்கிறார். அவர்தான் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி
பெறுவதற்காக மேற்பார்வையாளராக இருக்கிறார்.
ஆனால், இலங்கையில் என் தமிழனை அழிக்கின்ற
ஒருவன் மீண்டும் அவன் பதவிக்கு வரவேண்டுமென்று உத வினால், தமிழினம்
பூண்டோடு அற்றுப் போவதற்கு உத வினால், இதைவிட மோடியினுடைய துரோகம் வேறு
இருக்கமுடியுமா?
இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இங்குள்ள
மீனவர் பிரச்சினை தீர்ந்ததா? இன்றைக்குக்கூட கச்சத்தீவுக்கு அருகில்
மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அடித்து, இலங்கைக் கடற்பனையினர்
பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்; இது அண்மைச் செய்தி. இல்லை யென்று
மறுக்கமுடியுமா?
ஆக, அந்த மீனவர்கள் அப்பாவிகளாக
இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகள் திருப்பிக்
கொடுக்கப்பட்டனவா? சுப்பிரமணியசாமி என்ன அதிபரா? அவனைவிட ஒரு அரசியல்
புரோக்கர் வேறு யாருமே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு ஆளை வைத்துக் கொண்
டிருக்கிறார்கள்; அவர் தமிழ்நாட்டில் எதையும் பேசினால், இவர்கள் எல்லாம்
பொறுத்துக் கொண்டிருப்பார்கள். சமய சந்தர்ப்பம் வரும்பொழுது, கோட்சேவுக்கு
சிலையா? அதற்கும், பி.ஜே.பி.,க்கும் சம்பந்தம் இல்லை என்று சொல் கிறார்கள்.
கோட்சே ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னவுடன்,
ஆதாரம் வேண்டுமானால், விடுதலையில் இருக்கிறது!
கலைஞர் அவர்கள் சட்டசபையில் இருந்தபொழுது
பிரச்சினை எழுந்தது ஒரு நாள். உடனே கலைஞர் சொன்னார், ஆதாரம் வேண்டுமானால்,
விடுதலையில் இருக்கிறது; ஆதாரம் வேண்டுமானால், பெரியார் திட லுக்குச்
செல்லுங்கள் என்றார்.
இல்லீங்க, அவர் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து
விலகி விட்டார். கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினரா? என்று கேட்டார்கள்;
மிகவும் சாமர்த்தியமாக. அப்பொழுது ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் சேர்க்கின்ற
பழக்கமே கிடையாது. அப்பொழுது அதில் உறுப்பினர் என்றால், எவ்வளவு
சாமர்த்தியமான வாதம் பாருங்கள்; உறுப்பினராக யாருமே சேர்க்க முடியாது என்று
சொன்னால், பிறகு அவர் எப்படி உறுப்பினராக இருந்திருப்பார். இந்து
மகாசபையில் பயிற்சி எடுத்தவர் என்று சொன்னார்கள்.
காந்தியாரைக் கொன்றவன் பயிற்சி எடுத்த ஒரு அமைப்பை உருவாக்கியவருக்கு, பாரத ரத்னா விருது
சரி, இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவர்
என்று சொன்னீர்கள் அல்லவா, நாங்கள் ஒரு கேள்வி கேட் கிறோம், அதற்குப் பதில்
சொல்லுங்கள். இந்து மகாசபையை உண்டாக்கியவர் பண்டிட் மதன்மோகன் மாளவியா.
இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவன்தான் கோட்சே, காந்தியாரைக் கொன்றவன்
என்றால், இப்பொழுது அவர்கள் மிகத் தெளிவாக பாரத ரத்னா விருதை யாருக்குக்
கொடுக்கிறார்கள் என்றால், காந்தியாரைக் கொன்றவன் பயிற்சி எடுத்த ஒரு
அமைப்பை உருவாக்கியவருக்கு, பாரத ரத்னா விருது கொடுக்கிறார்கள் என்றால்,
கோட்சவுக்கு சிலை வைக்கின்றவர்களுக்கும், மறைமுகமாக பாரத ரத்னா விருது
கொடுக்கின்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தத்துவத்தில்? இதைப்
புரிந்துகொள்ள வேண்டாமா? இதையெல்லாம் பெரியார் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு
பார்க்கவேண்டும். அதற்காகத்தான் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு.
நாங்கள் எச்சரிக்கிறோம்! எச்சரிக்கை மணி
அடிக் கின்றோம்; கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே உங்கள் தலை புண்ணாக இருக்கிறது என்று சொல்கிறோம். இதைச்
சொல்வதுதான் எங்களுடைய வேலை. ஆகவே, நண்பர் களே, உங்களிடமிருந்து நாங்கள்
எதிர்பார்ப்பதெல்லாம் நீங்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என்பதுதான்.
இந்தக் கூட்டத்தில் ஆதாரப்பூர்வமாக அதனைச்
சொல் கிறோம். நமக்கு ஆபத்து வருகிறது; திராவிடர் இயக்கம் என்று
சொல்லாதீர்கள்; திராவிடர் இயக்கத்தை கீழே தள்ளவேண்டும் என்று
நினைக்கிறார்கள். உடனே, பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம்,
போட்டு விட்டார்கள். 2ஜி ஊழல். வழக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது,
இன்னும் தண்டிக்கப்படவேயில்லை. இவர்கள் தண்டிக்கப்படாதவர்கள்;
உச்சநீதிமன்றத்திற்குப் போயிருக் கிறார்கள். புதிதாக சரக்கு ஒன்றும் இல்லை
என்றவுடன், இன்னொரு வழக்கை புதிதாகப் போடுகிறான். சரி, அதனை அவர்கள்
பார்த்துக் கொள்வார்கள், நாங்கள் ஒன்றும் அதற்காக வக்காலத்து வாங்கவேண்டிய
வேலையில்லை.
இந்தியா டுடே
ஆனால், நண்பர்களே, இப்பொழுது என்ன எழுது
கிறார்கள் தெரியுமா? எந்தப் பத்திரிகைக்காரன் எழு தினானோ, அதே
பத்திரிகைக்காரன், இந்த 2ஜி எல்லாம் மிகவும் மிகைப்படுத்தி பூஜ்ஜியம்,
பூஜ்ஜியமாகச் சேர்த்து விட்டோம். அது தவறாக நடந்துபோய்விட்டது. அப் பொழுது
ஊழல் என்று பெரிது படுத்திவிட்டோம் என்று சொல்கிறார்கள் இப்பொழுது யார்?
இந்தியா டுடே. அவர்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் மாற்றுவார்கள்.
ஆகவே, நீங்கள் எந்த வகையிலும் சாதாரணமாக
நாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல் கிறார்கள். வடக்கேயிருந்து
இங்கே வந்து ஒருவர் பேசு கிறார், திராவிட இயக்கமெல்லாம் சோர்ந்து
போய்விட்டது; திராவிட இயக்கத்தினுடைய கதையெல்லாம் முடிந்து போய்விட்டது.
நாங்கள் வந்துதான் இங்கே உட்கார போகிறோம் என்கிறார்.
உங்களுக்கு வாய்ப்பு ஏதாவது வந்தது என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சைதானே!
உன்னை அடையாளமே தெரியாதே, இன்றைக்குக்
கொஞ்ச நஞ்சம் உங்களுக்கு வாய்ப்பு ஏதாவது வந்தது என்றால், திராவிட இயக்கம்
போட்ட பிச்சைதானே! எங் களுடைய ஆள்களின் தோள்மீது மாறி மாறி ஏறி
உட்கார்ந்தீர்கள்; உங்கள் தோள்மீது எங்கள் ஆள்கள் ஏறினார்களோ இல்லையோ,
அவர்களுடைய தோள்மீது நீங்கள் ஏறி உட்கார்ந்தீர்கள். அதனாலே கொஞ்சம்
கணக்கைத் தொடங்கினீர்கள். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன் வாஜ்பேயி தனியே
வந்தாரே! 13 நாள்கள் ஆட்சியில் உட்கார்ந்தாரே, அதற்குப் பிறகு என்னாயிற்று?
வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வந்தவுடன், வாஜ்பேயினுடைய
கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுமா? நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்றார்.
ஏனென்றால், அவருக்குத் தெரியும் ஓட்டெடுப்பில் தோற்றுப் போய் விடுவோம்
என்பது. இவையெல்லாம் பழைய கதையாகும்.
சத்தியமூர்த்தி பார்ப்பனர் என்ன சொன்னார்?
ஆகவே, உங்களுக்குச் சொல்கிறோம், திராவிடர் இயக்கம் என்று சொன்னால்,
நீங்கள் அதனை அலட்சியமாக நினைக்காதீர்கள். இன்னும் பல பேர் புரியாமல் சொல்
கிறார்கள், திராவிட இயக்கங்களுடைய சகாப்தம் முடிந்து விட்டது என்று.
இப்படித்தான் நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னார், சத்தியமூர்த்தி என்ற ஒரு
பார்ப்பனர், காங்கிரஸ்காரர். ஜஸ்டீஸ் கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டோம்
என்றார்.
நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திமுகவின் ஆட்சி
அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டார்கள்,
10 வருஷத்தில் ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி, உலகத்தில் நீங்களேதான்; அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள் என்றனர் செய்தியாளர்கள்.
வேறு ஒருத்தராக இருந்தால், ஆமாம், ஆமாம்
என்று மார் தட்டி இருப்பார். ஆனால், அண்ணாவினுடைய அறிவும், அடக்கமும்
ஒப்பற்றவை. அண்ணா அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? 10 வருஷத்தில்
ஆட்சியைப் பிடிக்கவில்லை; 50 வருஷத்திற்கு முன்பு எனக்குப் பாட்டன் யார்
தெரியுமா? அதுதான் நீதிக்கட்சி; அதனுடைய தொடர்ச்சிதான் இப்பொழுது.
நீதிக்கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று சொன்னார்களே, நீ
புதைக்கவில்லை, நாங்கள் மறுபடியும் உயிரோடு வந்திருக்கின்றோம் என்று
காட்டுவதுதான் திராவிடர் இயக்கம் என்று சொன்னார்.
எப்போதும் ஏமாறுவதுதான் தமிழனுடைய வழக்கம்
எனவே, எந்தக் கொம்பனாலும் திராவிடர்
இயக்கத்தை அசைத்துவிட முடியாது. அதுவும் இன்றைக்கு சாதாரணமான இயக்கம் அல்ல
இது. இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக திராவிடர் கழகமும், திராவிட
முன்னேற்றக் கழகமும் இயங்குவோம்; எங்களுடைய வேலை இருக்கிறது பாருங்கள்,
நாங்கள் கோட்டைக்கு உள்ளே போகிறவர்கள் அல்ல; கோட்டைக்கு வெளியில்தான்
எங்கள் பணி. கோட் டையில் யாரும் ஓட்டை போட்டுவிடக்கூடாது என்பதற்காக!
நம்மாள் எப்பொழுதும் ஏமாந்துகொண்டே இருக்கிறான். ஏமாறுவதுதான் எப்பொழுதும்
தமிழனுக்கு வழக்கம்.
கதை எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்,
வாசுகி என்கிற பாம்பை, மத்தாக்கி பாற்கடலை கடைந்தார்களாம்; அப்படிக்
கடைந்தவுடன், அமுதம் வந்ததாம்; தலைப்பக்கம் யார் நின்றது என்றால்,
அசுரர்கள்; வால் பக்கம் யார் நின்றது என்றால், தேவர்கள்.
வெற்றிபெற்ற பின்பு ஏமாற்றுவதுதான் ஆரியத்தின் பண்பாடு
அமுதம் கிடைத்ததும் என்ன
செய்திருக்கவேண்டும்; ஒரு கூட்டம் தலைப்பக்கம் நின்றார்கள். இன்னொரு
கூட்டம் வால் பக்கம் நின்றார்கள். பங்கு போடவேண்டும் என்று வந்தவுடன்,
எனக்கு 50 சதவிகிதம் கொடு என்று கேட்டார்கள்; அய்ம்பது சதவிகித பிரச்சினை
அப்பொழுதே ஆரம்பித்துவிட்ட பிரச்சினையாகும். இது இப்பொழுது ஆரம்பித்தது
அல்ல. 50 சதவிகிதம் கொடு என்றார்கள் அசுரர்கள். நியாயமாக 100 சதவிகிதம்
கொடு என்று கேட்கவேண்டும். ஏனென்றால், இவர்கள் தலைப்பக்கம் நின்று
போராடியவர்கள். ஆனால், தேவர்கள் வால்பக்கம் நின்றவர்கள். ஆனால்,
அசுரர்களுக்கு 50 சதவிகிதம் கொடுப்பதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை.
முழுக்க முழுக்க இவர்களே அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தார்கள்.
ஏனென்றால், வெற்றிபெற்ற பின்பு ஏமாற்றுவதுதான் ஆரியத்தின் பண்பாடு. அதற்கு
அந்தக் காலத்துப் புராணத்திலிருந்து உதாரணம் சொல்லலாம்.
வரலாற்றிலிருந்துகூட அல்ல.
100 சதவிகிதமும் தங்களிடம் வரவேண்டும்
என்று நினைத்தார்கள். போரிட்டு அசுரர்களை வெல்ல முடியாது. அதற்காக என்ன
செய்தார்கள் என்றால், மோகினி அவதாரத்தை விட்டார்கள். நம்மாள்கள்
எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள், ஆனால், இந்த மோகினி அவதாரம் என்றாலே,
அதுதான் வீக்பாயிண்ட் அவனுக்கு; அந்த இடத்தில் நம்மாள் கீழே விழுந்தான்.
ஒவ்வொரு அவதாரங் களையும் எப்படி கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.
எச்சரிக்கை செய்வதற்குத்தான் திராவிடர் கழகம்
இப்பொழுதும் பல மோகினி அவதாரங்கள் வரப் பார்க்கின்றன. அதை எச்சரிக்கை செய்வதற்குத்தான் இந்த இயக்கம் இருக்கிறது.
எனவே, ஏமாறாதீர்கள் தமிழர்களே! நாம்
திராவிடர்கள். நம்முடைய உரிமைகள் திராவிடர்களுடைய உரிமைகள். சமத்துவம்,
ஜாதியற்ற சமுதாயம், எல்லோருக்கும் உரிமையுள்ள சமுதாயம் இவைகள்
மலரவேண்டுமானால், விழிப்போடு இருங்கள், விழிப்புற்று எழுங்கள் என்று கூறி,
வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, அனைவருக்கும் நன்றி! வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
--------------------------"விடுதலை” 23-02-2015