Search This Blog

7.7.13

முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு ஒரு திறந்த மடல் -கி.வீரமணி


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
ஆசிரியர் தகுதி தேர்விலும், பணி நியமனத்திலும் சமூகநீதிக்கு எதிரான வழி முறைகள் பின்பற்றப்பட்டு இருப்பது தொடர்பாக சர்ச்சைகள் தமிழ்நாட்டில் கிளம்பி இருப்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது எங்களது தலையாய கடமையாகும். பொதுவாக இந்தத் தகுதி தேர்வே தேவையற்றது என்றாலும், தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) அறிவுறுத்தலின்படி தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அதே நேரத்தில் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர்க்குத் தகுதி மதிப்பெண்கள் தனித்தனியே நிர்ணயிக்கப்படுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆந்திர மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும் பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண்களும், தாழ்த்தப் பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பீகாரில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோருக்கும் மற்றவர்களுக்கும் 55 சதவீத மதிப்பெண்களும், ஒடிசா மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண்களும் தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சமூகநீதியின் விளை நிலமான தமிழ்நாட்டிலோ இந்தச் சமூக நீதிக் கண்ணோட்டம் பின்பற்றப்படாமல் முன்னேறிய பிரிவினர் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் தகுதி மதிப்பெண்கள் 60 சதவீத மதிப்பெண்கள் என்று சகட்டுமேனிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!

இது தேசிய ஆசிரியர் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு முரணானது என்பதோடு சமூகநீதிக்கும் எதிரானது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்றே கருதுகிறோம்.

எடுத்துக்காட்டாக, பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் 35 சதவீதம் என்று தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது. அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலோ 40 சதவீதம் என்று நிர்ணயித்துள்ளது. அதனை எதிர்த்தே தங்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றம் சென்ற நிலையில், அரசுக்கு எதிரான தீர்ப்பையும் புறந்தள்ளி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளீர்கள். பாராட்டுகிறோம்.
பொறியியல் கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்ட அந்தச் சமூக நீதிக் கண்ணோட்டம் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் இல்லாமல் போனது ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஒருக்கால் இந்தப் பிரச்சினை உங்கள் கவனத்துக்கு வராமலே நடந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற தாங்கள் காட் டிய ஆர்வத்தை அறிந்தவர்கள் என்கிற  முறையில் இப்படி நினைக்கத் தோன்றுகிறது. உங்கள் ஆட்சியில் சமூகநீதிக்கு இப்படி ஒரு அபாயம் தோன்றியிருக்கவே கூடாது.

சமீபத்தில்கூட, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்தேர்வுகளை ஆங்கில மொழியில் தான் எழுத வேண்டும் என்ற தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் ஆணை என் கவனத்திற்கு வராமலேயே பிறப்பிக்கப்பட்டது என்று கூறி தாங்கள் அந்த ஆணையை ரத்து செய்தீர்கள். அதேபோல இந்தப் பிரச்சினையிலும் நடந்திருந்தால், தாங்கள் தலையிட்டு சமூகநீதிக்கு எதிராக ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைச் சரி செய்து மறு ஆணை பிறப்பிக்க ஆவன செய்யுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை இது!

இடஒதுக்கீட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படைத் தகுதியாக வைக்கப்பட்டுள்ளதால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாமல் காலியாக உள்ளன என்பதிலிருந்தே இந்த அளவுகோல் சமூக நீதிக்கு எதிரானது என்பது மிகவும் வெளிப்படையாகவே தெரியவில்லையா?

எல்லோருக்கும் 60 சதவீத மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், திறந்த போட்டி என்பது முழுக்க முழுக்க உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்து விடப்படும் விஸ்தாரமான இடமாகி விட்டதே! (Open  Competition என்பது Other Community  அல்ல) திறந்த போட்டியிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் கிடைத்து வந்த இடங்களும் இதனால் பறி போயுள்ளன.

எனவே அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் (60 சதவீதம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஆணை எண் 181 திருத்தப்பட்டு ஆந்திரா மாநிலம் போன்று தனித்தனியே தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

அது போலவே தமிழ்நாடு அரசு ஆணை எண் 252 இல் கூறப்பட்டுள்ள பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறை என்பதும் சமூகநீதிக்கு எதிரானதாகும். எனவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை குறித்து சி.பி.எம். உறுப்பினர் தோழர் அ. சவுந்தரராசன் அவர்கள் கேள்வி எழுப்பியபோது உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பி.பழனியப்பன் அவர்கள் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் உள்ளது என்று குறிப்பிட்டார். பிறகு அதே அமைச்சர் அரசின் கொள்கை முடிவு என்று சட்டப் பேரவையில் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகநீதிக்கு எதிரான அணுகுமுறைதான் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்பதுதானே இதன் பொருள்! இதுகுறித்து முதல் அமைச்சர் அவர்களின் கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வு  நியமனம் குறித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புக் குரல்கள் கிளப்பி வருகின்றன.

திராவிடர் கழக மாணவர் அணியின் சார்பாக நேற்று (5.7.2011) மாலை சென்னை பெரியார் திடலில் கருத்தரங்கமும் பொது மாநாடும் நடைபெற்றன.

கருத்தரங்கில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு. க. மீனாட்சி சுந்தரம் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்லூரி பேராசிரியர் தேவா. தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு டி.எம்.என். தீபக் ஆகியோர் சிறந்த முறையில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

தொடர்ந்து எனது தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் மேனாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பேராசிரியர் டாக்டர் க. பொன்முடி, விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. தொல். திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்ஸிஸ்டு) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில மாணவர் பேரவைச் செயலாளர் திரு ஏ. செய்யது பட்டாணி ஆகியோர் கலந்து கொண்டு, அரசியல் உணர்வுகளுக்கு அப்பால் நின்று தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு பணி நியமனம்  குறித்துத் தெளிவான கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

கருத்தரங்கிலும் மாநாட்டிலும் பங்கு கொண்ட அனைவரும் இந்தப் பிரச்சினையை மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினர். அந்த அடிப்படையில்தான் இந்தத் திறந்த வேண்டுகோள் மடல் தங்களுக்கு எழுதப்படுகிறது. தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதற்கட்ட முடிவின்படி இந்தக் கடிதம் மூலம் இந்தப் பிரச்சினையில் தங்கள் கவனத்துக்கு மேற்கண்ட தகவல்களையும், கருத்துக்களையும், வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இடஒதுக்கீடு 9வது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதற்கு முந்தைய தங்களது ஆட்சியின் பங்கே முழுக் காரணம் என்ற வரலாறு இருக்கும் மாநிலத்தில் சமூகநீதி இப்படி குடை சாயலாமா? அருள்கூர்ந்து சிந்தித்து ஆவன செய்திட வேண்டுகிறோம்.

மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு சமூக நீதிக்கு இணக்கமான நல்லதோர் முடிவை எடுப்பீர்கள் என்று எதிர்பார்த்து இம்மடலை முடிக்கின்றோம்.நன்றி.

தங்கள்
 
கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை   
6.7.2013

33 comments:

தமிழ் ஓவியா said...


சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண் 181அய் திருத்துக!

அரசாணை எண் 252அய் ரத்து செய்க!

சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் முனைவர் பாவலர் க. மீனாட்சிசுந்தரம், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, பேராசிரியர் தேவா, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மனநல மருத்துவர் டி.எம்.என். தீபக் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி பெரியார் நூல்களை வழங்கினர். (சென்னை பெரியார் திடல் - 5.7.2013)

சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனத்தில் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்தவர்: பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரணி.

தீர்மானம் வருமாறு:

தீர்மானம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 181 ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களை இடைநிலை (SGT)
மற்றும் பட்டதாரி (BT Asst.) ஆசிரியர் பணிகளில் பணி நியமனம் செய்ய வழி செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இனி வருங்காலங்களில் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கான பணி நியமனத்திற்குத் தேவைப்படும் ஒரு தகுதித் தேர்வில் சமூகநீதி பின்பற்றப்படாமல் அனைத்துப் பிரிவு மக்களும் 60 சதவீதம் பெற்றால்தான் தேர்ச்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கான பணியை மறுக்கும் செயலாகும்.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின் படியே இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தனித்தனியே தகுதி மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீதம் என்பதை கட்டாயமாக்கியது மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு விரோதமானதும், சமூகநீதிக்கு எதிரானதும் ஆகும்.

அரசாணை எண் 181 திருத்தப்பட்டு, வெவ்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வெவ்வேறு தகுதி மதிப்பெண்கள் வழங்கி இடஒதுக்கீட்டை ஆசிரியத் தேர்வு வாரியம் பின்பற்ற வழி செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

அரசாணை எண் 252 தகுதித் தேர்வின் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான வழியைக் கூறாமல் வெயிட்டேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளது. பட்டாயம், பட்டம் பெற்றவரின் மேல்நிலைப்பள்ளி (+2) கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படை வெயிட்டேஜ் வழங்கி உள்ளது மிகப் பெரும் சமூக அநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வே தேவையில்லை என்பது நமது நிலைப்பாடு எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது என்ற அரசின் முடிவிலும் சமூகநீதிக்கு எதிராக உள்ள வெயிட்டேஜ் முறையைக் கைவிட்டு, அரசாணை எண் 252 திரும்பப் பெற்று, பதிவு மூப்பையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையிலான பணி நியமனங்கள் /மாற்றுத் திறனாளி/பெண்கள் /திருநங்கை என அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் சமூகநீதி அடிப்படை யிலான வெவ்வேறு கட்-ஆஃப் நிர்ணயித்து இடஒதுக் கீட்டு முறையைக் கடைப்பிடிக்க இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பலத்த கரவொலிக்கிடையே தீர்மானம் நிறைவேற்றப் பட்டது).

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாடு - கருத்தரங்கம்

சென்னை, ஜூலை 6- திராவிடர் கழக மாணவரணி சார்பில் நேற்று (5.7.2013) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இரவு 8 மணியளவில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு - பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமூகநீதி பாதுகாப்பு மாநாடு

பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரை வழங்க, திராவிடக் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையாற்ற, தமிழர் தலைவர் தலைமையேற்க, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், தோழர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க சமூகநீதி பாது காப்பு மாநாடு நடைபெற்றது.

பி.பி. மண்டல் என்ன சொன்னார்?


தமிழ் ஓவியா said...

கவிஞர் கலி. பூங்குன்றன் தனது அறிமுக உரையில், பி.பி. மண்டல் இதே பெரியார் திடலில் பேசும்போது நினைவு கூர்ந்ததை மக்கள் மன்றம் முன் வைத்தார். அதாவது, பி.பி. மண்டல் எனக்கு முன்னால் காகா கலோலிகர் தலைமையில் ஒரு குழு ஒரு பரிந்துரையைக் கொடுத்தது. அது எங்கே இருக்கிறது என்று தெரியாது. நான் கொடுத்ததுகூட அதே நிலைதான் ஏற்படும். அதை செயல்பட வைக்க வேண்டியது இந்த பெரியார் திடல்தான் - தமிழக மண்தான் என்று பி.பி. மண்டல் கூறினார் என்று கூறி பொருத்தமாக நினைவுகூர்ந்தார் துணைத்தலைவர். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிராக இருந்தவர்கள் வென்றதாக வரலாறு இல்லை. ஆகவே, வெற்றி காணும்வரை இந்தப் பணி தொடரும் என்று கூறி தனது அறிமுக உரையை நிறைவு செய்து கொண்டார்.

தந்தை பெரியார், கலைஞர், தமிழர் தலைவர்

துணைத் தலைவரைத் தொடர்ந்து, மேனாள் உயர்கல்வித் துறை அமைச்சர், முனைவர் க. பொன்முடி உரையாற்றினார். தொடக்கத்திலேயே அவர், இந்த அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரு கிறது என்று கூறிவிட்டு, பரிமாறு கிறவன் நம்ம ஆளாக இருந்தால் எந்த பந்திக்கு வேண்டுமானாலும் போக லாம் - என்ற ஒரு பழமொழியைக் கூறிவிட்டு, அது தமிழர் தலைவர் அடிக்கடி மேடைகளில் பேசுகிற பழமொழிதான். அவருடன் தான் இருந்த காலத்தில் தான் ரசித்தது அது என்று கூறி, இன்று பரிமாறுகிறவன் நம்ம ஆள் இல்லை. அதனால்தான் இந்த ஆபத்து. இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் கூட்டணிதான் சமூகநீதிக் கூட்டணி. அந்தக் கூட் டணி ஆசிரியரும் கலைஞரும்தான் என்று கூறி, கலைஞர் முதல்வராக இருந்தபோது இடஒதுக்கீட்டுக்கு செய்த பணிகளைப் பற்றி குறிப் பிட்டுவிட்டு, சமூகநீதிக்கு எதிராக ஆபத்து இல்லாத காலமே இல்லை. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளைச் செய் கின்றன. அதை முறியடிக்க கலைஞர் தலைமையிலான தி.மு.க. என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.

இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்

அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தோழர் கனகராஜ் இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண் டும் என்று கூறி தனதுரையை முடித்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

தவறு செய்யும் போது மட்டும் அவாளுக்கு மூளை நன்றாக வேலை செய்யும்

அவரைத் தொடர்ந்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேரா. சுப.வீர பாண்டியன் பேசும்போது, இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வருகின்ற போதெல்லாம், அந்த அரசுக்கு ஆபத்து வந்து விடுகிறது என்று நகைச்சுவையோடு தொடங்கினார். அதற்கு உதாரணமாக தோல்வியே காணாத எம்.ஜி.ஆர். கொண்டு வந்த 9000 வருமான வரம்பாணையை சுட்டிக்காட்டினார். ஆசிரியர் நுழைவுத் தேர்வு நியமனத்தில் நடந்திருக்கும் மோசடி திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு, பார்ப்பனர்களுக்கு நமக்கு எதிராக செயல்படும்போதுதான் அவர்களின் மூளை நன்றாக வேலை செய்யும் என்று கூறி மன்றத்தில் சிரிப் பலையை ஏற்படுத்தினார். தொடர்ந்து கலைஞர் முதல் தலைமுறை மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கொடுத்ததையும், இப்போதைய அ.தி.மு.க. அரசு றயவையபந என்ற பெயரில் செய்யும் படுபாதகத்தையும் ஆதாரங்களுடன் விவரித்தார்.

உலகிலேயே கொடிய நோய் தாழ்வுமனப்பான்மைதான்

தமிழ் ஓவியா said...

சுப.வீ.யைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் பேசுகையில், தருமபுரிக்கு செல்ல வேண்டியவன். தமிழர் தலைவரின் ஆலோசனையின் பேரில் இந்த சமூகநீதி மாநாட்டுக்கு வந்திருக் கிறேன் என்று தொடங்கினார். பிறகு, சமூகநீதி என்றால் என்ன என்பதில் தொடங்கி, சமூக நீதி எப்படியெல் லாம் முழுமையடையாமல் இருக் கிறது என்பதையும் சுட்டிக்காட்டி, தனியார் துறையில் பதவி உயர்வு, பெண்களுக்கு ஒடுக்கப்பட்ட மக் களுக்கு அரசு சொத்துக்களை ஏலம் எடுக்கும் உரிமை, மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் என்று அனைவருக்குமாக இருக்க வேண் டும். அப்பொழுதுதான் சமூகநீதி முழுமை பெறும் என்று கூறி விட்டு, இளவரசன் திவ்யா பற்றி கனத்த இதயத்தோடு பல்வேறு கேள்விகளை எழுப்பி அமர்ந்தார். மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். அதைத் தொடர்ந்து, தலைமை உரையைத் தொடர்ந்தார். அவர் தனது உரையில், இந்த ஆசிரியர் தகுதித்தேர்வு-பணி நியமனம் பற்றி ஆழமாக, விரிவாக கருத்தரங்கத்தில் பேசப்பட்டுவிட்ட தால், தான் அதுபற்றிப் பேசப்போவ தில்லை என்று கூறிவிட்டு, இதன் அடுத்த கட்டம் என்ன என்பதற்கு மூன்று முத்தான திட்டங்களை மாநாட்டில் அறிவித்தார். ஒன்று, இந்த கருத்தரங்கம், மாநாடு ஆகியவற்றில் பேசப்பட்ட கருத்துகள் சுருக்கமாக தொகுக்கப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்படும் என்றும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லையென்றால், உயர்நீதி மன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் செல்வோம் என்றும், அடுத்த கட்டமாக இந்த பிரச் சினையை மக்கள் மன்றத்திற்கு எடுத் துச் செல்வோம் என்றும் பலத்த கைத் தட்டல்களுக்கிடையே அறிவித்தார்.

முன்னதாக, இம்மாநாட்டின் தீர்மானத்தை பிரின்சு என்னாரெசு பெரியார் வாசித்தார். மக்கள் பலத்த கையொலி எழுப்பி தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தனர். தமிழர் தலை வர் தனது உரைக்கு முன்னதாக ஜாதிக் கொடுமையால் உயிர்நீத்த மாவீரன் இளவரசனுக்கு அரங்கத் தினரை ஒரு மணி துளி எழுந்து நின்று அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
இறுதியாக மரகதமணி நன்றியுரை கூறி மாநாட்டை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் மூ.வி. சோமசுந்தரம், தாம்பரம் முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், தமிழன் பிரசன்னா, அருணகிரி, தளபதிபாண்டியன், சத்திய நாராயண சிங், மனோகரன், கோ. கருணாநிதி, இறைவி, பண்பொளி, புயல், திருமகள், பார்வதி, வெற்றிச்செல்வி, வீரமர்த் தினி, கனிமொழி, கர்ணா, கோவி. கோபால், ரவிக்குமார், ராஜசேகர், மங் களபுரம் பாஸ்கர் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், ஆசிரியப் பெருமக் கள், பொதுமக்கள் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங் கம், மாநாட்டின் கருத்துக்களை நினைவில் ஏந்திச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

தமிழ் ஓவியா said...


சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் கருத்துகள் முதலமைச்சருக்கு அனுப்பப்படும்!


உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!!

மக்கள் மன்றத்துக்கு சென்று பிரச்சாரம் செய்யப்படும்!!!

சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் தந்த முத்தான மூன்று திட்டங்கள்!

சென்னை, ஜுலை 6- இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் மூன்று முத்தான திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவித்தார்.

ஆசிரியர் தகுதித்தேர்விலும், பணி நியமனத்திலும் நடந்த சட்டமீறல்களை சுட்டிக்காட்டும் வண்ணம், சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சி சார்பில், கருத்தரங்கமும் அதனையடுத்து சமூக நீதி பாதுகாப்பு மாநாடும் நேற்று (05-07-2013) நடைபெற்றது.

கனல் தெறித்த கருத்தரங்கம்

சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டுக்கு முன்னதாக, இந்த பிரச்சினை குறித்த ஆழமான கருத்துக்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் கருத்தரங்கம் தொடங் கியது. அதில், கருத்தரங்கத்தின் தலைவராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பாவலர் க. மீனாட்சி சுந்தரத்தை தலைமையேற்கும்படி திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் முன் மொழிந்தார். அதை மாணவரணி இணைச் செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் வழிமொழிந்தார்.

மோடிக்கு நீதிமன்றம் வைத்த குட்டு

மீனாட்சி சுந்தரம் தனது தலைமையுரையில்: மேட்டுக்குடியினர் மட்டுமே பணிக்கு வரவேண்டுமென்று இந்த அரசு திட்டமிட்டு செய்த சதிதான் இது என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து, இந்த அரசுக்கு ஆசிரியர் என்றாலே அலர்ஜி என்று குறிப்பிட்டுவிட்டு, அரசுதான் நீ, ஆசிரியர் பணிக்கு தேர்வாகிறாய் என்று சான்றளிக் கிறது. ஆனால், மீண்டும் தகுதி தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்கிறது. இது சரியா? இந்த முறை வேறு எந்த துறையிலும் கிடையாது என்று குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சியே அளிக்காமல் ஆசிரியர்களை நியமித்த குஜராத் முதல்வர் மோடியை நீதிமன்றம் குட்டு வைத்ததையும், கல்வித்துறையையே பாழாக்குகிறாய் என்று குற்றம் சாட்டியதையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, தமிழக அரசு, ஆசிரியர் தேர்வும் பணிநியமனமும் தனது கொள்கை முடிவு என்று அறிவித்ததை கடுமையாக கண்டித்தார். ஆகவே, தகுதித்தேர்வையும் ஒழிக்க வேண்டும். தேர்வு நடைபெற்றால் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று கூறி, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழர் தலைவருக்கு நன்றியையும், இந்தப் போராட்டத்தில் தான் தொடர்ந்து ஆதரவு தருவேன் என்றும் கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...

திருத்து, கைவிடு

இறுதியாக இத்தகைய சிக்கல்களுக்கு காரணமான அரசு ஆணை 181-அய் திருத்த வேண்டும். அதேபோல அரசு ஆணை 252-அய் கைவிட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக அவர், தமிழர் தலைவருக்கு இந்த கருத்தரங்கத்தை கூட்டியதற்கு நன்றி தெரிவித்து பேசினார்.

மகாமோசடி

அவரைத் தொடர்ந்து, பேராசிரியர் தேவா கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையை ஒலி ஒளி சாயல்களுடன் அமைத்துக் கொண்டார். ஒளி ஒலிக் காட்சிகளைப் பெரியார் வலைக்காட்சி தோழர்கள் ஒருங்கிணைத்துக் கொடுத்தனர். அவர் இந்த பிரச்சினை பற்றிய தெளிவான இரண்டு பகுதிகளைப் பிரித்துக் காட்டி விளக்கினார்.

1. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - பணி நியமனம் என்பது சமூக நீதிக்கு எதிரான ஒரு குற்றம்.
2. அப்பட்டமான சட்ட மீறல்.

முன்னதாக சொன்ன சமூகநீதிக்கு எதிரான குற்றம் என்பது விவாதத்திற்குரியது. காரணம், நமது எதிராளிகள் இதில் மாறுபட்டவர்கள். ஆனால், பின்னது சட்டமீறல். அது விவாதத்திற்கப்பாற்பட்டது என்று கூறிவிட்டு இந்த இரண்டு கருத்துகளின் அடிப்படையில் கூநுகூ என்றால் என்ன? சூஊகூநு என்ன சொல்கிறது, என்பதைப்பற்றி விவரித்தார். அதோடு, கேரள நீதிபதி கே.வி. தாமஸ் சூநுகூ-ருழுஊ தேர்வில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்த போது, மாணவர்களின் நலனுக்குத்தான் விதிகளை பயன்படுத்த வேண்டுமே தவிர, எதிராக பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி, அந்தத் தீர்ப்பு இதற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்.
நீதிபதி நாகமுத்து குட்டிய குட்டு
சட்டமீறல்பற்றி புள்ளி விவரங்களோடு பேசிய பேராசிரியர் தேவா, இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, நீதிபதி நாகமுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்த பட்டியல் அத்தனையும் தவறு என்பது அப்பட்டமாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி குறிப்பிட்டது மட்டுமல்ல, அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்ட தையும் மக்கள் மன்றம் முன்வைத்தார். அத்தோடு விட்டுவிடவில்லை பேராசிரியர் தேவா, நீதிபதி நாகமுத்து எந்த தவறுகளை திரும்பப் பெறவேண்டும் என்று தீர்ப்ப ளித்தாரோ, அந்தத் தவறுகளை இந்த அரசு தொடர்ந்து செய்தது என்று கூறிவிட்டு, இத்தகைய போக்குகளுக்கு இந்த மாநாடு ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு தனது கருத்துரையை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...

தகுதி திறமைக்கு பிறந்தார்களா பார்ப்பனர்கள்

அவரைத் தொடர்ந்து, வழக்குரைஞரும், திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளருமான அ. அருள்மொழி கருத்துரை வழங்கினார். அவர் தனது கருத்துரையில்:- இத்தாலி மொழியில் வெளிவந்து தமிழில் மொழிபெயர்க் கப்பட்ட ஏன் டீச்சர் என்னை பெயிலாக்கினீர்கள்? - என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். கிராமத்தி லிருந்து, பள்ளிக்குச் சென்ற மாணவன் தேர்வு செய்யப் படாமல் பள்ளியிலிருந்து வெளியேறுகிறான். அவன் பின்னாளில் உழைத்து நன்கு உயர்ந்து சொந்தமாக பள்ளிக்கூடமே கட்டி அவனைப் போன்ற பிள்ளைகளுக்கு கல்வி கற்றுத் தருகிறான். அந்த நிலையில், அவன் படித்த பழைய பள்ளிக்கூட ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறான். அன்று படிக்காத மாணவன் இன்று நல்ல நிலையில் இருப்பதைச் சொல்லி, டீச்சர் நீங்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்திருக்கக்கூடாதா? என்று கேட்பது போலச் சொல்லும் அந்தப் புத்தகத்தின் தலைப்புதான், ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கினீர்கள் - என்பதைச் சொல்லி, 60 மார்க் எடுத்த அவர் நல்ல வாத்தியாரா? குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இன்னும் ஒருபடி மேலேபோய், இட ஒதுக்கீட்டால் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்திவரும் பார்ப்பனர்களை இவர்கள் என்ன தகுதித் திறமைக்கே பிறந்தவர்களா? என்று மற்றொரு கேள்வியும் கேட்டார். அதைத்தொடர்ந்து, றுயவையபந பற்றியும் அது எப்படி ஈவு இரக்கமற்றது என்பதைப் பற்றியும், எம்.ஜி.ஆர். 9000ம் ரூபாய் வருமான வரம்பு கொண்டு வந்ததையும், திராவிடர் கழகம் அதை பின்வாங்கச் செய்தததையும் சுட்டிக்காட்டி தனதுரையை முடித்துக் கொண்டார். இறுதியாக மரகதமணி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மயிலாடுதுறை தளபதிராஜ் இணைப்புரையை சிறப்பாக வழங்கி சிறப்பித்தார். கருத்தரங்கத்தின் முடிவில், தமிழர் தலைவர் உரையாற்றி, பேராளர்களுக்கு இயக்க நூல்களை வழங்கி சிறப்புச் செய்தார்.

தமிழ் ஓவியா said...

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்

ஸ்ரீமான் பி.எ. குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஒ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகர சபைத் தேர்தலுக்கு அபேட்சகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மேஜிஸ்திரேட்டாக இருந்த தால் சட்டப்படி அபேட்சகராயிருக்க அருக ரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர் தல் நடத்த உத்திரவிட்டார். இதன்மேல் அத்தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை மால் கே கோர்ட்டில் (ளுஅயடட உயரளந உடிரசவ) ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிட மே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக்கோர்ட்டில் பார்ப்பனரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக் குள் தேர்தல் நடத்த உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோத மாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப்பனர் அத் தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள். இந்த நிலையில் சென்னை பிரதம நீதிபதி அவர்கள் இந்த நடவடிக்கையில் சந்தேகப் பட்டு மூன்று ஜட்ஜிகள் கூடி பைசல் செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் ஒரு ஜட்ஜிடம் போய் எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று கூட கோர்ட்டில் பார்ப்பன வக்கீல் களைக் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் சட்ட சம்பந்தமான ஆதாரமிருப் பதாகவும் ஒரிஜினல் என்ற காரணத்தை உத்தேசித்து அங்கு போனதாகவும் சொல்லி திருப்தி செய்திருக்கிறார்கள். அப்படியானால் அதையும் என்னிடமே ஏன் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் பிரதம நீதிபதி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்குச் சட்ட சம்பந்தமான சமாதானமாக அந்தக் காரணம் இந்தக் கோர்ட்டுக்கு வரக் கூடியதல்ல என்று சொன்னதாக தெரிய வருகிறது. இதைப் பார்த்தால் சட்டமியற்றுவது பார்ப்பனர்; அதை விவாதிப்பது பார்ப்பனர்; அதற்குத் தீர்ப்புச் சொல்லுவதும் பெரும்பாலும் பார்ப்பனர் என்று ஏற்படுகிறது. இந்நிலையில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி உள்ள விவகாரங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் கிடைக்கு மென்று உறுதியாய் நம்ப இடமிருக்கிறதா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடு கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

எழுத்துச் சீர்திருத்த வரலாறு!

ஓமந்தூர் இராமசாமியார் முதலமைச்சராகவும் டி.எஸ். அவினாசிலிங்கம் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழ் எழுத்துச் சீர் திருத்தம் பற்றி கருத்து தெரி விக்க குழு ஒன்று அமைக்கப் பட்டது. டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வ.கல்கி ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றனர். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தத்தை அக்குழு ஒப்புக் கொண்டு பரிந்துரைத்தது. அரசு அதை ஏற்று நடை முறைபடுத்துமுன், ஆட்சி மாறுதல் ஏற்பட்டு விட்டது. 2.2.75 அன்று தமிழக புலவர் குழுவும் தந்தை பெரியாரின் சீர்திருத்தத்தை ஒப்புக் கொண்டது. தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு அதற்கு அங்கீகாரம் வழங்கி விட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்

எல்லா இந்திய காங்கிர தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிர கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.
அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும்.

2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக் கப்பட வேண்டும்.

3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர் களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம். அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

தீண்டாமை விலக்குச் சட்டம்

பொதுத் தெருக்களில் எவரையேனும் நடக்கக் கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் போடலாம் என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல் போர்டு சட்டங்களில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறிவிட்டதாகவும், முனிசிபாலிட்டி சட்டத்திலும் இவ்வித திருத்தம் செய்ய வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம்தான் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக வும் ஸ்ரீமான் வீரய்யன் அவர்களால் தெரி விக்கப்படுகின்றன.

குறிப்பு : இவ்வித சட்டம் செய்யப்பட்டது பற்றி நாம் மிகுதியும் களிப்பெய்துகிறோ மானாலும் பார்ப்பன வக்கீல்களும் பார்ப்பன நீதிபதிகளும் இச்சட்டம் செய்தவர் கருத் துப்படி பலனளிக்கச் சம்மதிப்பார்களா? அவர்களது சட்ட ஞானமும் பாஷ்ய ஞான மும் இச்சட்டத்தை உயிருடன் வைத்தி ருக்கச் சம்மதிக்குமா என்று கேட்கிறோம்?
- குடிஅரசு - செய்திவிளக்கம், 03.10.1926

தமிழ் ஓவியா said...


ஜாதி வெறியை மாய்ப்போம்! சமூகநீதியைக் காப்போம்! தமிழர் தலைவர் முழக்கம்

சென்னை, ஜூலை 6- சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) மாலை திராவிடர் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஜாதி வெறியை மாய்ப்போம் - சமூகநீதியைக் காப்போம் என்று முழக்கமிட்டார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்ட தாவது:
மிக முக்கியமான பிரச்சினை; பல்லாயிரக்கணக் கான ஆசிரியர் பெருமக்களுக்கு தமிழக அரசில் நடந்த மிகப்பெரிய சமூக அநீதியைக் களைய வேண்டும்; அதற்கடுத்த கட்டத்திற்கு சரியான பரிகாரத்தைத் தேடவேண்டும்; ஒத்தக் கருத்துள் ளவர் எல்லாம் ஓங்கி குரல் கொடுப்பது மட்டு மல்லாமல், அடுத்தகட்ட நடவடிக்கையைப்பற்றி சிந்திக்கவேண்டும் என்ற அந்த ஆழமான எண் ணத்தை உள்ளே வைத்து, அதற்காகவே கூட்டப் பட்டுள்ள இந்த சமூகநீதி பாதுகாப்பு மாநாடு என்ற இந்த மாநாட்டிலே கலந்துகொண்டு, தன்னுடைய மனக்குமுறல்களையெல்லாம் இங்கே எடுத் துரைத்தனர். இங்கே உரையாற்றிய அனைவரும் இந்தப் பிரச்சினையைப்பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கின்றனர். எல்லோருடைய மனதிலும் பதியக்கூடிய வகையில் அதை அழகாகவும், சிறப் பாகவும், சுருக்கமாகவும் எப்படி நாம் பொதுமக் களிடையே கொண்டு செலுத்தவேண்டும் என்பதை மிக அற்புதமாக சுப.வீ. அவர்கள் கூறியிருக் கிறார்கள்.

அடிப்படை உரிமைகளில் ஒன்று!

மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு, அரசியல் சட்டம் வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளில் ஒன்று சமூகநீதிப் பார்வை. இதை உருவாக்குகின்ற காலகட்டத்திலே, தலைவராக இருந்து உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர் கள், சமூகநீதிக்குத்தான் முதலிடத்தை முன்னாலே வைத்தார்கள்.

இந்த நீதி என்று வரும்பொழுது, Justice Social, Economic, Political என்று வரிசைப்படுத்தப்படும் பொழுது, முதலில் சமூகநீதி, இரண்டாவது பொரு ளாதார நீதி, மூன்றாவது அரசியல் நீதி என்ற அளவிலே இருக்கும். எனவே, சமூகநீதி என்பதை நாம் வலியுறுத்துகிறபொழுது, சுருக்கமாக சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

திராவிடர் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில், அறிஞர் பெருமக்களின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சென்னை பெரியார் திடல், 5.7.2013)

அடுத்து நாம் செய்யப்போகிற திட்டம்தான் முக்கியம். எல்லோரும் விளக்கி விட்டார்கள் அந்த அநீதிகளையெல்லாம். இப்பொழுது நடைபெற் றிருக்கின்ற அநீதிபோல், இதுவரை நடைபெற்றது இல்லை தமிழ்நாட்டில் என்கிற அளவில், பல்லா யிரக்கணக்கான ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டிருக் கிறார்கள். இப்பிரச்சினை ஆசிரியர் பிரச்சினை மட்டுமல்ல; இது சமூகநீதியைப் புறந்தள்ளுகின்ற, ஒரு துறையில் ஆரம்பித்து, பல துறைகளுக்குப் பரவக்கூடிய மிகப்பெரிய ஒரு ஆபத்தான சூழ லாகும்.

தமிழ் ஓவியா said...

அருமை நண்பர்களே! மிகத் தெளிவாக நம்முடைய தோழர்கள் இப்பிரச்சினையில் நடந் ததைச் சொல்லி இருக்கிறார்கள். ஏற்கெனவே ஒரு நடந்த செய்தியைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் பிரச்சினையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் நாகமுத்து அவர்கள் குறிப்பிடுகின்ற நேரத்தில், பல செய்திகளை சுட்டிக்காட்டி, அதில் எவ்வளவு பெரிய அக்கிரமம் நடைபெற்றது என்பதையும் சொல்லி, வழக்குப் போட்டவர்களைப் பாராட்டி இருக்கிறார். அப்படி பாராட்டுகின்ற நேரத்தில் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். நேரமின்மை காரணத்தினால், சில கருத்துகளை மாத்திரம் எடுத்துச்சொல்லி, அடுத்தகட்டத்திற்கு நாம் எப்படி செல்லவேண்டும் என்பதற்கு அதுவே ஒரு முகவுரையாக அமைந் திருக்கிறது என்கிற காரணத்திற்காக சொல்லுகி றேன்.

Before parting with the cases I would like to express my displeasure over the way என்று சொல்லி, இந்த அரசாங்கம், இந்தக் குழு எவ்வளவு மோசமாக இதில் நடந்துகொண்டார்கள், எவ்வளவு சமூக அநீதியைச் செய்தார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார் உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்கள்.

அவர் விளக்கமாக அத்தீர்ப்பிலே சொல்லிவிட்டு, கடைசியாக கண்டித்தும் இருக்கிறார்.

இந்த வழக்கைப்பற்றியே பல பேருக்குத் தெரி யாது. அந்த ஒரு அம்சம் மிகவும் முக்கியமானது.

அந்தக் கண்டனத்திலிருந்து தப்புவதற்காக, அடிஷனல் அட்வகேட் ஜெனரல் நீதிபதியிடம் போய் கெஞ்சி, நாங்கள் இனிமேல் சரி செய்து கொள்கிறோம்; அந்த வாசகங்களை மட்டும் அருள்கூர்ந்து நீங்கள் விலக்கி விடுங்கள்; எங்களைக் காப்பாற்றுங்கள் என்று, சில அதிகாரிகளைக் காப் பாற்றுவதற்காக அந்த முயற்சியை எடுத்திருக்கிறார். அதற்குப் பிறகும் சரியான புத்தி வரவேண்டாமா? அதற்குப் பிறகும் அடுத்த நடவடிக்கைகள் முறை யாக இருக்கவேண்டாமா? சமூகநீதியைக் காப் பாற்றக்கூடியதாக இருக்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...

ஆனால், ஒன்று நிச்சயம், அது என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அது ஜாதி வெறியினரால் ஏற்பட்ட பலி - அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஜாதி வெறி என்பது இருக்கிறதே, ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிப்பதைத்தான் வீர சபதமாக, சூளுரையாக நாம் எடுத்துக்கொள்வதுதான், அந்த வீரனுக்கு நாம் செலுத்துகின்ற மிகப்பெரிய வீரவணக்கமாக இருக்க முடியும்.

நாளைக்கோ, மறுநாளோ, சில நாள்களுக்குப் பிறகோ அவன் புதைக்கப்படலாம்; ஆனால், அவன் புதைக்கப்படமாட்டான்; விதைக்கப்படுவான் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதைப்போல, அன்புச்சகோதரர் எழுச்சித் தமிழர் நினைக்கவேண்டாம்; இறுதியில் சிரிப்பவர் யார் என்பது தெரியும். உண்மையான வீரன் அவன்தான். அந்த உணர்வு நமக்கு நிச்சயமாக வரும். அந்த வகையிலே, உங்களுடைய நிதானம் பாராட்டப்படவேண்டியதாகும்.

காலையில்கூட அவர் மிகுந்த ஆவேசத்தோடு, உணர்ச்சிவயப்பட்டு என்னிடம் பேசியபொழுது, நான் சில கருத்துகளைச் சொல்லியதாகச் சொன்னார். ஆம், நம்முடைய மவுனம் இந்த நேரத்திலேயே பல பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த மவுனத்திற்கு அர்த்தம் நாம் தோற்றுவிட்டோம் என்பதல்ல; நாம் தான் இறுதியாக வெற்றி பெறப் போகிறோம். அது நிரந்தர வெற்றியாக அமையவேண்டும்; அது தற்காலிக வெற்றியாக அமையக்கூடாது என்பதற்கு அடிப்படையாகத்தான் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. மறைந்த இளவரசன் அவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜாதி வெறிக்குப் பலியான ஒரு மாவீரன், காதல் உணர்வு என்பதற்காக பலியான ஒரு மாவீரனுக்காக அருள்கூர்ந்து அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் காத்து வீர வணக்கத்தைச் செலுத்துவோம். (அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்).

- சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்



இங்கே உரையாற்றியவர்களின் கருத்தையெல்லாம் மய்யப்படுத்தி, அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டியது ஒரு பக்கம். அதனை உடனடியாக நாம் செய்வோம். ஏனென்றால், முதலமைச்சரின் கவனத் திற்குச் செல்லவில்லை என்று இங்கே உரையாற்றியவர்கள் கூறியதாலே, கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு திரா விடர் கழகம் நண்பர்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்வது முதற்கட்டப் பணியாக இருக்கும்.

அதற்கடுத்து இடைவெளியில்லாமல் நாம் செய்யப் போவது என்னவென்றால், நீதிமன்றத்திற்கு பாதிக்கப் பட்டவர்களின் சார்பாக பொதுநல வழக்காக கொண்டு செல்ல இருக்கிறோம். அது உயர்நீதிமன்றமாக இருந்தாலும், உச்சநீதிமன்றமாக இருந்தாலும் நாங்கள் விடப்போவதாக இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

ஏனென்றால், இங்கே பாதிக்கப்பட்டவர்கள் ஆசி ரியர்கள் அல்ல, சமூகநீதி; காலங்காலமாகப் பாதுகாக்கப் பட்ட சமூகநீதி. அடுத்தகட்டம் இந்தப் பிரச்சினையை பொதுமக்களிடம் கொண்டு செல்லவிருக்கிறோம்.

திருத்தப்படவேண்டிய ஆணை ஏது? இணைக்கப் படவேண்டிய ஆணை ஏது? என்பதை இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...

எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த வருமான வரம்பை எதிர்த்து இடைவிடாத பிரச்சாரத்தின் காரண மாக அதில் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தி, இன்றைக்கு ஒரு நிலைப்பாட்டையே உறுதி செய்துவிட்டது உச்சநீதிமன்றம் வரையிலே!

ஆகவேதான் நண்பர்களே, ஒன்றே ஒன்றைச் சொல்லி இறுதியாக நான் என்னுடைய உரையை முடிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மூன்று முக்கியமான பணிகள்!

ஒன்று, அரசினுடைய காதுகளுக்கு, பார்வைக்கு மீண்டும் இந்த அக்கிரமங்களை இன்றைக்கு இருப்பதை யெல்லாம் தொகுத்து, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செலுத்துகின்ற பணி ஒரு பக்கத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும். இரண்டு, ஓரிரு வாரங்களில் அதற்குச் சரியான பரிகாரம் இல்லை என்று சொன்னால், மீண்டும் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று போராடுவோம்.
மூன்றாவது கட்டமாக, இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பிரச்சாரம் செய்து; இது சாதாரணப் பிரச்சினையல்ல; சமூகநீதிப் பிரச்சினை என்று - எப்படி வருமான வரம்பு பிரச்சினையில் பிரச் சாரம் செய்து வெற்றி பெற்றோமோ - அதுபோல் பிரச் சாரம் செய்து இந்தப் பிரச்சினையில் வெற்றி பெறுவோம்.

அதேநேரத்தில், அரசாங்கத்திற்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர விருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம். அத்தேர்தலில் இப்பிரச்சினை பிரதிபலிக்குமா? சமூகநீதியில் கை வைத்தவர்கள் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றினை நினைவூட்டக் கடமைப்பட்டிருக் கிறோம். ஆகவே, எங்கள் பயணங்கள் நிற்காது; எங்கள் பயணங்கள் முடியாது; ஆனால், நாங்கள் எடுத்து வைக்கின்ற அடிகள் இருக்கிறதே, முறையாக, படிப் படியாக இருக்கும். எடுத்தவுடனே நாங்கள் எல்லா குண்டுகளையும் எங்கள் துப்பாக்கியில் இருந்து காலி செய்துவிடமாட்டோம்; உடனே இதற்காக ஒரு வழக்குப் போடவேண்டாம்; உதாரணத்திற்காக துப்பாக்கி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினோம். எல்லா சரக்கு களையும் ஒரே நேரத்தில் காலி செய்துவிடமாட்டோம் என்று அர்த்தமே தவிர வேறொன்றுமில்லை.

இந்த அற்புதமான கருத்தரங்கத்தில் கருத்துகளை எடுத்து வைத்த பேராசிரியப் பெருமக்களுக்கும், சமச்சீர் கல்வியில் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் பணி இருக்கிறதே, மிகவும் அற்புதமானப் பணியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனியாக ஒரு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினார்கள்; அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள்.

மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்

இந்தப் பிரச்சினை ஒரு கட்சியை சார்ந்ததல்ல; கூட்டணிப் பிரச்சினையல்ல; இது முழுக்க முழுக்க சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்; ஆகவே, நாம் ஒன்றுபட்டு நிற்போம்; அதன்மூலமாக, சமூகநீதி என்பதைக் காப்போம்; ஜாதிவெறியை சாய்ப்போம்! சமூகநீதியைக் காப்போம் என்று கூறி முடிக்கிறேன், வணக்கம்.

எங்களுடைய அழைப்பினை ஏற்று இந்த மாநாட் டில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள் கிறேன். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

இளவரசன் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளான்!

தருமபுரியில், எதிர்பாராமல் இளவரசனுடைய மரணம் என்பது தற்கொலையா? அல்லது அவர்கள் சொல்கிறபடி படுகொலையா? என்ற உண்மை விரைவில் வெளிவரும்.

ஆனால், ஒன்று நிச்சயம், அது என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அது ஜாதி வெறியினரால் ஏற்பட்ட பலி - அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஜாதி வெறி என்பது இருக்கிறதே, ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிப்பதைத்தான் வீர சபதமாக, சூளுரையாக நாம் எடுத்துக்கொள்வதுதான், அந்த வீரனுக்கு நாம் செலுத்துகின்ற மிகப்பெரிய வீரவணக்கமாக இருக்க முடியும்.

நாளைக்கோ, மறுநாளோ, சில நாள்களுக்குப் பிறகோ அவன் புதைக்கப்படலாம்; ஆனால், அவன் புதைக்கப்படமாட்டான்; விதைக்கப்படுவான் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதைப்போல, அன்புச்சகோதரர் எழுச்சித் தமிழர் நினைக்கவேண்டாம்; இறுதியில் சிரிப்பவர் யார் என்பது தெரியும். உண்மையான வீரன் அவன்தான். அந்த உணர்வு நமக்கு நிச்சயமாக வரும். அந்த வகையிலே, உங்களுடைய நிதானம் பாராட்டப்படவேண்டியதாகும்.

காலையில்கூட அவர் மிகுந்த ஆவேசத்தோடு, உணர்ச்சிவயப்பட்டு என்னிடம் பேசியபொழுது, நான் சில கருத்துகளைச் சொல்லியதாகச் சொன்னார். ஆம், நம்முடைய மவுனம் இந்த நேரத்திலேயே பல பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த மவுனத்திற்கு அர்த்தம் நாம் தோற்றுவிட்டோம் என்பதல்ல; நாம் தான் இறுதியாக வெற்றி பெறப் போகிறோம். அது நிரந்தர வெற்றியாக அமையவேண்டும்; அது தற்காலிக வெற்றியாக அமையக்கூடாது என்பதற்கு அடிப்படையாகத்தான் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. மறைந்த இளவரசன் அவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜாதி வெறிக்குப் பலியான ஒரு மாவீரன், காதல் உணர்வு என்பதற்காக பலியான ஒரு மாவீரனுக்காக அருள்கூர்ந்து அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் காத்து வீர வணக்கத்தைச் செலுத்துவோம். (அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்).

- சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்

தமிழ் ஓவியா said...


கும்மிடிப்பூண்டி மாநாட்டின் தீர்மானங்கள்

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்!

இளவரசன் மரணத்திற்கு பதிலடி; ஜாதியை முற்றாக ஒழித்துக் கட்டுவதே!

கும்மிடிப்பூண்டி மாநாட்டின் தீர்மானங்கள்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 7- இளவரசன் மரணத் திற்குப் பதிலடி ஜாதியை முற்றாக ஒழிப்பதே என்கிற சூளுரைத் தீர்மானம் உட்பட 5 தீர்மானங்கள் கும்மிடிப் பூண்டியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் (6.7.2013) நிறைவேற்றப்பட்டன.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பலத்த கரவொலி கிடையே 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மா னங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

தோழர் இளவரசன் மறைவிற்கு இரங்கல்

1. ஜாதி மறுப்பு - காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் தோழர் இளவரசன் அவர்களின் அதிர்ச்சியூட்டக்கூடிய மறை விற்கு இம்மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலையும், சொல் லொணாத் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இளவரசனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற அய்யப்பாடு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்பதில், தமிழ்நாடு அரசு சற்றும் தயக்கம் காட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மறைவிற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஜாதிய சிந்தனையையும், வெறியையும், கட்டமைப்பையும் எதிர்த்துப் போராடுவதே - ஒழிப்பதே இதற்குக் கொடுக்கும் பொருத்தமான பதிலடி என்பதால், திராவிடர் கழகம் மேலும் தீவிரத் தன்மையுடனும், ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்தும் ஜாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திக் கடுமையாகப் பாடுபடுவது - போராடுவது என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

தீர்மானம் 2:

ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்)

ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் முக்கிய அம்சமான கோவில் கருவறைகளில் அதிகாரப்பூர்வமாக ஆணவத் துடன் குடிகொண்டிருக்கும் - பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் என்கிற நிலையை மாற்றி, அனைத்து ஜாதியினருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களால் இறுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் பெருந்திரளாக ஈடுபடுவது என்றும், திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்துக்குத் தமிழினப் பெருமக்கள் அனைவரும் பெரும் ஒத்துழைப்புக் கொடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டுமெனவும் இம்மாநாடு தமிழ்ப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ளவேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (அ):

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் பதவி ஏற்புக்குப் பாராட்டும் - வேண்டுகோளும்!

ஒரு தமிழர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு இம்மாநாடு தனது பாராட்டுதலையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் மகிழ்ச்சியை ஊட்டும் வகையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் தமிழரான திரு.பி.சதாசிவம் அவர்கள் கூறியிருப்பதற்கு இம்மாநாடு மகிழ்ச்சியையும், நல் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்வதுடன், மிகப்பெரிய பொறுப்பில் - அதிகாரத்தில் இருக்கும் நீதிபதியவர்கள் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திட ஆவன செய்து, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனையைச் செய்து முடிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (ஆ):

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துக!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு

வயதை 62-லிருந்து 65 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்

தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழ்நாடு பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாக்கப்பட்டுள் ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இத்தகு பொதுப் பிரச்சினைகளில் சுருதி பேதம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் உரிமைக்குரல் கொடுக்கவேண்டுமாய் ஒட்டுமொத்த தமிழர்களையும், தலைவர்களையும், அமைப்புகளையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் இத்தகு பொதுப் பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒன்றுபட்ட கருத்தைத் திரட்டும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யுமாறு இம்மாநாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசும் இப்பிரச்சினையில் நியாயமாகவும், சட்டப்படியாகவும், அரசியல் கண்ணோட்டமில்லாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வழி செய்யவேண்டிய தமிழ்நாடு அரசு, அந்தத் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது - தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், அத்தகு பழிக்கு ஆளாகாமல், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், வழக்கை விலக்கிக் கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டவேண்டுமாய் இம்மாநாடு தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் திராவிடர் இயக்கத்தவர்கள் விரும்பிய திட்டம் மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதையும் இம்மாநாடு நினைவூட்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணியில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை என்பதையும், அது அரசுக்குக் கடும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கசப்பான உண்மையையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பக்தர்களுக்காக நாத்திகர்கள் நடத்தும் போராட்டம் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு


ராமநாதபுரம், ஜூலை 7- அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டமானது பக் தர்களுக்காக நாத்திகர் களாகிய நாங்கள் எங் களையே வருத்திகொண்டு போராடுகிற போராட் டம். இந்த போராட்டத் துக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஆதரவுதர வேண்டும் என திரா விடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசினார். பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கோவில் பட்டி, சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆற்றிய போராட்ட விளக்க உரை யிலிருந்து: இந்திய அர சியல் அமைப்பு சட்டத் தில் 18 இடங்களில் ஜாதி பற்றிபேசப்பட்டுள்ளது. இதேபோல், 17-ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுளளது. தீண் டாமைக்கு காரணமே ஜாதி தான். எனவே, ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார். இதனடிப்படையில், ஜாதியை பாதுகாக்கும் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.

இதில், 5,000 போராட்ட வீரர்கள் கலந்துகொண்டு, 3000-க்கும் மேற்பட் டோர் சிறை சென்றனர். இந்த போராட்டத்தில் 3 ஆண்டுகள் வரை எமது தோழர்கள் சிறை சென் றனர். ஜாதி ஒழிப்பு கிளர்ச் சியில், 16 பேர் உயிரிழந் தனர். இப்படி 56 ஆண்டு களுக்கு முன் அடிக்கப் பட்ட ஜாதி பாம்பு தப்பியோடி இன்று கோயில் கருவறையில் நுழைந்து தன்னை பாது காத்துக்கொண்டுள்ளது. கோயில் கருவறைக்குள் நுழைந்த பாம்பை அடித்துக்கொல்வதற்கும், தந்தையின் (தந்தை பெரி யார்) நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற் கும் இன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் போராட்ட களத் தில் நமது உரிமையை நிலைநாட்டும் போராட்ட களத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டமானது 1969-ஆம் ஆண்டு தமிழர்க ளின் இழிவை நீக்க கர்ப்ப கிரக கிளர்ச்சி நடத்தப் படும் என தந்தை பெரி யார் அறிவித்தார். இதில், 2000-க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு போராட்ட களத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிலையில், 1970-ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை பிரச் சினையில், அனைவருக் கும் சமவாய்ப்பளிக்க சட்டம் உருவாக்கப் படும் எனக்கூறியதைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக பெரியார் அறிவித்தார். இதனையடுத்து கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் காலத் திலும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காலத்திலும் ஏராள மான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டத்தின் பல னாக திமுக, அரசு சட்ட மியற்றியது. இதனை யடுத்து அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக பயிற்சி அளிப்பதற்கு திருச்சி கம்பரசம்பேட்டையில் வேதஆகம கல்லூரி தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்தார். இதற்கு தமிழர் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர் பயிற்சியில் வேதம் சொல்லித்தரக் கூடாது. ஆகமம்தான் சொல்லித்தர வேண்டும் என அரசுக்கு அறிவுறுத் தினார். இந்நிலையில் வேதம் படித்தவர்கள் சைவக் கோயில்களில் நுழையக் கூடாது என சைவர்கள் வழக்குத் தொடுத்துள்ள னர். ஆகமத்தில், சைவம், வைஷ்ணவம், காணபத் தியம், கவுமாரம், சாக் தம், சவ்ரவம் முறையே சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அம்மன், சூரி யன் ஆகிய கடவுள் வழி பாடாகும். இதில், பல அர்ச்சகர்களுக்கு கணப திக்கு ஓதுகிற மந்திரத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நந்தி, கருடன், கொடி மரம், பலிபீடம், அர்த்த மண்டபம், மகாமண்ட பம் கடந்து கருவறைக் குள் சென்று வழி பாட்டை நடத்துகிற வழிமுறைகளை சொல் லித்தருவதே. ஆத்திகர் களின் உரிமைக்கு நாத்தி கர்கள் நடத்தும் போராட் டம். இதற்கு பொது மக்களும், பக்தர்களும் ஆதரவு வழங்க வேண் டும் என கேட்டுக்கொண் டார்.

தமிழ் ஓவியா said...


காரணம்



எதற்கும் பகுத்தறிவை உப யோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்கா மலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப் பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

- (குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


நிதி வழங்க விரும்புகிறேன்


நிதி வழங்க விரும்புகிறேன்

தமிழர் தலைவர் அவர்களுக்கு என்றும் உங்கள் கொள்கைத் தொண்டன் இன்று திருவாரூர் மாவட்ட கழகக் குடும்பங்களின் கலந்துரையாடலில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராது செயலாற்றி வரும் தங்களின் தொண்டறம் தொடர பெரிதும் விழைகின்றேன்.

மூடநம்பிக்கையிலிருந்து இன்னும் விடுபடாத மக்கள், அரசியலிலும் தெளிவற்ற நிலை, இன உணர்வற்ற தமிழர்கள், இவற்றுக்கிடையே இனமான பகுத்தறிவுப் பேரொளியாக அய்யாவின் வழியில் தங்கள் எழுத்தும், பேச்சும், செயல்பாடுகளும் என்றும் தொடர என்றும் எங்கள் துணை உங்களுக்கு இருக்கும்.

தங்களை 2013-ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரிதும் மகிழ்ந்து தங்கள் உடல்நல மருத்துவ பாதுகாப்பு நிதியாக ரூ.2013/- (இரண்டா யிரத்து பதின்மூன்று ரூபாய் மட்டும்) வழங்கி மகிழ்கிறேன். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் நிதி வழங்கிட விரும்புகிறேன்.

- மணியம் கிருஷ்ணமூர்த்தி, புலிவலம்.

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி

28.6.2013 விடுதலை இதழின் மழை வேண்டி யாகமாம் என்ற தலையங்கமும், மும்மாரி என்ற ஒற்றைப் பத்தியும் பல முறைப்படித்து பயனுற மட்டுமல்ல, பத்திரப்படுத்தவுமான பதிவுகள். தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்து எழுப்பப்பட்டவை அனைத்தும் வெறும் கேள்விகள் அல்ல. கொள்கைக் கூர் ஆயுதங்கள்! அறிவின் பகைவர்கள் எவரும் பதில் கூறும் திராணியற்று விழி பிதுங்கச் செய்யும் வினாக்களைத் தொடுக்கும் பேராண்மை பெரியார் பேரியக்கத்துக்கு மட்டுமே உண்டு என்பதை இனியாவது தெரிந்து கொள்ளட்டும்.

ஆயிரம் அறிவை இவர்கள் பெற்றிருக்கலாம். ஆறாம் அறிவு இல்லையே!

மடமைப் படுகுழிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மதபோதையர்களை நல்வழிப்படுத்த இதுபோல் வீறுகொண்டு எழட்டும் விடுதலை.

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


தலைவர்கள் சிந்திக்கட்டும்!


கும்மிடிப்பூண்டி மாநாடு பல வகைகளிலும் சிறப்பானது. கழகத்தின் புதிய மாவட்டமாக உதயமான இம்மாவட்டத்தில் இப்படி ஓர் எழுச்சி மாநாடு நடைபெற்றது என்பது சாதாரணமானதல்ல.

மூடநம்பிக்கையை முன்னிறுத்திப் பேசப்படும் கருத்துகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிய முடிகிறது. மாநாட்டின் நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆற்றிய அந்த வகையான பேச்சுக்குப் பெரும் வரவேற்பைக் காண முடிந்தது. அரசியல் தொடர்பான தலைப்புக்குச் செல்லாமல் மக்களின் அறியாமை குறித்துச் சுட்டிக் காட்டி அவர் பேசிய பேச்சுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.

குறிப்பாக கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தவிர்த்து பார்ப்பனர் அல்லாதார் செல்லக் கூடாது; அர்ச்சனை செய்யக் கூடாது - அப்படி சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்ற ஏற்பாட்டின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் கருத்துக்களை எடுத்து வைத்தார்.

கடவுள் தீட்டுப்பட்டு விடும்; தோஷம் பட்டு விடும் என்று கூறுவதே அவர்கள் கூறும் கடவுள் தன்மைக்கு முரண்பாடு இல்லையா? என்ற கேள்வி எல்லோரையும் கவர்ந்தது.

கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகம் கோயில் அர்ச்சகர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு நியாய மான அறிவு நாணயமான பதிலை வழங்கினார்.

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை என்று அழகான முறையில் பதில் அளித்தார்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் திராவிடர் கழகத்தினர் எவரும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினர்.

இந்தப் பிரச்சினையில், ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றி, நீதியரசர் மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குவது ஆகமங்களுக்கு விரோதமானதல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதே!

அந்தக் குழுவில் திருமுருக கிருபானந்தவாரியார், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களும் அங்கம் வகித்தனரே!

நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், பயிற்சிப் பள்ளி அமைத்துப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளதே!

இதற்குமேல் என்ன ஆதாரங்கள், நியாயங்கள் தேவை? உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் எதற்கு முட்டுக்கட்டை போடுகிறது?

தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதலமைச்சர் (1999-2004) ஆட்சிக் கால கட்டத்தில், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பச்சைக் கொடி காட்டியதே! இப்பொழுது ஏன் இந்தப் பிரச்சினையில் அழுத்தமான அமைதியை மேற்கொள்கிறது?

இந்தப் பிரச்சினை குறித்து திராவிடர் கழகம் தவிர, மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் ஏன் போதுமான அக்கறை இல்லை? இது என்ன ஓர் இயக்கப் பிரச்சினை மட்டும் தானா?

தந்தை பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத, மதிக்காத கட்சியோ, தலைவரோ தமிழ் நாட்டில் இருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது தந்தை பெரியார் தன் இறுதிப் போராட்டம் என்று அறிவித்த - இந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?

அதே நேரத்தில் தன் ஜாதி ஆதிக்கத்தைச் சற்றும் விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில் பார்ப்பனர்கள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுவதை அறிந்திருந்தும் பார்ப்பனர்பற்றிய புரிதல் நம் பார்ப்பனர் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் புரியவில்லையா? தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கப் பெற்றால், அது இந்தியா விலேயே புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துமே.

ஜாதி வெறியைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்தப்படுவதற்கும் முடிவு கட்டப்பட்டு விடுமே!

நிதானமாகச் சிந்திக்கட்டும்; இது மிக மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை - அலட்சியம் காட்டுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

வேறு தடங்களில் எதைச் சாதித்து இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதன் மூலமே தலைவர்களும் அமைப்புகளும் எதிர்காலத்தில் மதிக்கப்பட முடியும்.

சிந்திப் பார்களாக!

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

மதுரை, ஜூலை 9- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண் டும் என மதுரையில் நேற்று (8.7.2013) நடை பெற்ற பொதுக் கூட்டத் தில் தமிழர் தலைவர் வலியுறுத்தினார்.

அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, சேது சமுத்திரத் (தமிழன் கால்வாய்) திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகர் கோவில் முதல் மதுரை வரை -ஒரு குழுவும் தென்காசி முதல் மதுரை வரை மற்றொரு குழுவும் தொடர் பிரச்சாரம் நடத்தி வந்தன. இந்த பிரச்சார நிறைவு விழா மதுரை டி.எம். கோர்ட் அருகே 8.7.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரிமை மீட்பு எழுச்சி உரை

இக்கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: "இரண்டு பிரச்சினை களை முன்னிறுத்தி இங்கே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. ஒன்று அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, இன்னொன்று சேது சமுத்திரத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது 43 ஆண்டு களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை. தந்தை பெரியார் தொடங்கி, அன்னை மணியம்மை யார் தலைமையில், அதற்கு பின் என்னைப் போன்றோர் தலைமை யில் தொடர்ந்து எழுப் பப்பட்டு வரும் கோரிக்கை. கட்சிக ளுக்கு அப்பாற்பட்டு, நாத்திகமா, ஆத்திகமா என்பதற்கு அப்பாற் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் எழுப் பப்படும் கோரிக்கை. இன்னும் சூத்திரன், பஞ்சமன் என்றில்லாமல் மனிதராக இருக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் பிரச் சினை. இதை அலட்சி யப்படுத்தினால் ஆட்சிய திகாரமே ஆட்டம் காணக் கூடும் என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். மற்ற நாடுகளில் மனிதன் மனிதனாகப் பிறக்கிறான். ஆனால் இந்த நாட்டில் தான் மனிதன் பிறக்கும் போதே, சூத்திரானாக, பஞ்சமனாகப் பிறக்கின் றான். சாகும்போதும் சூத்திரனாக, பஞ்சம னாகத்தான் சாகின்றான். இன்னும் தீண்டாமை இருக்கிறது,ஜாதி வேற்றுமை இருக்கிறது. இன்றைக்கும் ஜாதி வேற்றுமையால்தான் திவ்யாக்களும், இளவர சன்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை.

தீண்டாமை, இன்னும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை நீக்கப்பட்டது (ருவேடிரஉடைவைல ஹடிடளைநன) என்று தான் இருக்கிறது: இன்னும் ஜாதி ஒழிக்கப் பட்டது என்று அரசியல் சட்டத்தில் இல்லை. அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி சிறீ ரங்கம் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் போன்ற இடங்களில் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட வேண்டும். ஜாதி இழிவு நீங்கும் வரை விட மாட்டோம். சட்டப்படி யாக போராடுவோம்! அறப் போராட்டமாக போராடுவோம். ஒரே நாளில் முடியும் போராட்டமாக அல்ல பல கட்டங்களாக போராடுவோம் உறுதி யாக வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்பட்டும்கூட இப்பொழுதுதான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (சதாசிவம்) ஆகியிருக் கிறார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதியரசர் பி. சதா சிவம் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார் கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழர் தலைவர் பேசி னார். மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு

திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

இந்த நாட்டினுடைய 65 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக தமிழ்நாட்டைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருகின்ற 19 ஆம் தேதி பதவியேற்க விருக்கிறார். ஆனால், ஒரு கொடுமை என்னவென்றால், அவர் அந்தப் பதவியில் 9 மாதங்கள்தான் இருப்பார்.

இந்த 9 மாதத்திலும் அய்ந்து மாதங்கள் வரவேற்பு; மீதி நான்கு மாதத்தில் பிரிவு உபசார விழா; இதிலேயே பதவிக்காலம் முடிந்துவிடுமே! ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்; ஏர் பிடித்த உழவர் அவர்; ஈரோட்டு மண்ணிலே பிறந்த ஒருவர், முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்னாலேயே, நீதிபதிகள் நியமனங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று கூறியுள்ளார். இதுவரை மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனங்களில் மட்டும்தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. முதல் முறையாக பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார்.

அவர் பதவி ஏற்பதற்கு முன்பு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதற்காகத்தான் திராவிடர் கழகத்தினுடைய அடுத்த கிளர்ச்சி! அதில் ஒன்றும் சந்தேகமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

(8.7.2013 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து...)

தமிழ் ஓவியா said...


தலைமைச் செயற்குழுவில் கழகத் தலைவரின் பன்மணித் திரள்கள்!

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

1. தென்மாவட்டங்களில் ஜாதி தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களுக்கும், மந்திரமா? தந்திரமா? கலைஞர்களுக்கும், ஒருங்கிணைத்த வர்களுக்கும், கூட்டங்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள் - நிறைவு விழா மதுரைப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் - பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர், மகிழ்ச்சி!

2. கும்மிடிப்பூண்டி மாநில மாநாடு திட்டமிட்ட முறையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கும், ஒருங்கிணைத்தவர்களுக்கும் சிறப்பான பாராட்டுகள் - எனக்குப் பெரும் அளவில் மனநிறைவை அளித்த மாநாடு இது!

3. மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலா ளரணி இவற்றின் செயல்பாடுகள் தனித்தனியாக நடை பெற்று, மேற்கொள்ளப்பட்ட பணிகள் தலைமைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இயக்கம் வலிமை பெற அவ்விரு அணிகளும் செயல் திட்டத்தோடு சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்.

4. தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மாண வரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் தனித்தனியே நாடு தழுவிய அளவில் கருத்தரங்கம் நடைபெறவேண்டும். அவற்றின் முக்கிய பொருள்: ஜாதி ஒழிப்பு, மகளிர் உரிமை, சமூகநீதி.

5. மன்றல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பல தரப்பினரும் பாராட்டுகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் நடைபெற்றுள்ளதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் நெல்லையில் நடைபெறவுள்ளது. ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம், அதற்கான ஆக்க ரீதியான செயல்பாடுகள் இன்னொருபுறம் - அதுதான் நாம் நடத்தும் மன்றல் நிகழ்ச்சி.

6. மண்டலத் தலைவர்கள், செயலாளர்களுக்கென தனியே ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, அவர் களின் பணிகள் வரையறுக்கப்படவேண்டும் (இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்).

7. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெறும். ஒவ்வொரு ஊரிலும் இந்தப் போராட்டம்பற்றி பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் - அவர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுவர் எழுத்துகள், துண்டறிக்கைகள், கழகம் வெளியிட்ட கையடக்க ஆவண நூல் பரப்புதல் (நன்கொடை ரூ.5 மட்டும்தான்) என்று புது உத்வேகத்தோடு பணிகள் நடைபெற்றாகவேண்டும்.

8. இந்தப் போராட்டத்திற்கு எந்தப் பக்கத்திலிருந்தும் எதிர்ப்புக் கிடையாது. ஆளும் கட்சி - எதிர்க்கட்சி, ஆத்தி கம் - நாத்திகம் என்பது போன்ற எந்தப் பிரச்சினையும் இந் தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் கிடையவே கிடை யாது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து நடத்தலாம்.

9. பணி செய்பவர்களுக்கு இயக்கத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும். பணிதான் அளவுகோலே தவிர மற்றவையல்ல.

10. இயக்கத்தைப் பனைமரத்துக்கு ஒப்பிட்டுக் கூறுவார் தந்தை பெரியார். தண்ணீர் ஊற்றாமலேயே வளரக்கூடியது! காரணம், நம் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை சுயநலமின்றி, எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செய்யக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம் - தொண்டர்கள் திராவிடர் கழகத்தினர்.

11. என்னைப் பொறுத்தவரை உடல் உபாதைகள் பல இருப்பினும், கழகத்தின் செயல்பாடுகள் எனக்கு உற்சாகம் என்கிற டானிக்கை அளிக்கின்றன! ஓய்வு குறைகிறது - நல்ல ரத்த ஓட்டம் ஏற்படுகிறது - எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்!

- பன்மணித் திரளாக மேற்கண்ட கருத்துகளை சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்துக் கூறினார் (9.7.2013).

தமிழ் ஓவியா said...


இலங்கையில் 13-ஏ சட்டம் தப்புமா?


கொழும்பு, ஜூலை 10- இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையில் இலங்கை சென்ற குழு இலங்கை அதிபர் ராஜபக் சேவைச் சந்தித்து 13-ஏ திருத்தச் சட்டம் செயல் படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடத்தப் பட்ட போர் முடிவுக்கு வந்த பின்பு, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் துவங்கின. மறுவாழ்வு திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்து வருகிறது.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியா இலங்கையின் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தமிழர்கள் வசிக்கும் மாகாண கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்தத் திருத்தத்தை மறு ஆய்வு செய்து அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசு முயற் சித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தலை மையில் 6 பேர் குழு கொழும்பு வந்துள்ளது. கொழும் பில் அதிபர் ராஜபக்சேவை மேனன் சந்தித்து பேசி னார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் மறுசீரமைப்பு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தனர். இதன்பின்னர், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களும் சமமாகவும், கண்ணியமாகவும் நடத்தப் பட வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்த அடிப்படையில், உலக நாடுகளுக்கு இலங்கை அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். 13 ஆவது திருத்தத்தையும் கடந்து சிறப்பான அரசியல் தீர்வை விரைவில் காண வேண்டுமென மேனன் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு கூட்டாக செயல்படுவது என முடிவு செய்து, இதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சிவசங்கர் மேனன், இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு ராணுவ அமைச்சர் முகமத் நசீம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: கழக முயற்சிக்கு முதல்கட்ட வெற்றி!

94 பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்க!

சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை, ஜூலை 10- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் பலன் பெறுவர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.

அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.

இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அவர்கள் 70 பேரும் உயர்நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு தாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப் பளித்தனர்.
தீர்ப்பு விவரம் வருமாறு:

2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றி ருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக் கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற் றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001 ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.

ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும் போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கடந்த 5.7.2013 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...



போர்ச் சங்கு!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நேற்று கூடி போர்ச் சங்கு ஊதிவிட்டது.

தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதாம் - கூடாதாம் - கருவறைக்குள் நுழைந்து தமிழர்கள் அர்ச்சனை செய்தால் கடவுள் சக்தி வெளியே தலைதெறிக்க ஓடிவிடுமாம். எஞ்சி இருப்பது கல்லோ, செம்போ அவ்வளவுதானாம்.

இவ்வளவுக்கும் அந்தக் கோவிலைக் கட்டியதில் பார்ப்பனர்களுக்கு எந்தவிதப் பாத்தியதையும் இல்லை. ஒரு செங்கல்லைத் தூக்கிக் கொடுத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் கோவிலுக்குள் இருக்கும் அந்தக் கடவுள் சிலையைச் செய்தவன்கூட சிற்பியாகிய தமிழன்தான்.

கோவிலைக் கட்டி கோவிலில் கருவறையையும் உருவாக்கி, அதற்குள் வைக்கவேண்டிய சாமி சிலை யையும் வடித்து, கோவிலுக்கு குடமுழுக்கு என்று அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்த நிலையில், கும்பத்தில் ஏறுவதற்குச் சாரம் அமைத்துக் கொடுத்து, கும்பத்தில் ஊற்றவேண்டிய பால் உள்பட அனைத்துப் பொருள்களையும் கொண்டுவந்து கொடுப்பவன் எல்லாம் தமிழன்! தமிழன்!! தமிழன்தான்!!!

அதுவரை எள் மூக்கு முனை அளவுகூட எந்தவித உதவியும் செய்யாத பார்ப்பனர் கும்பத்திற்கு அபிஷேகம் செய்து, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் - சம்பந்தமே இல்லாத புரியாத சமஸ்கிருத மந்திரங்களை ஓதிய அக்கணமே கோவிலுக்கும், தமிழனுக்கும் எந்தவிதமான ஒட்டுறவும், சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

இதைவிட கொடுமையான சூழ்ச்சி உண்டா? மண்ணின் மைந்தர்களுக்கு இதைவிட அவமானம் உண்டா?
எந்த அளவுக்குக் கொடுமை என்றால், அந்தக் கடவுள் சிலைக்குக்கூட பூணூல் மாட்டி வைப்பதுதான் - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோ தங்கத்தினால் ஆன பூணூலை மாட்டியது மறக்கப்படக் கூடியதுதானா?

கோவில் என்பது பார்ப்பன உயர்ஜாதி ஆணவத்தை, வருணாசிரமத்தை பாதுகாக்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்!

உலகத்தில் வேறு எங்கேயாவது - சொந்த நாட்டுக் காரன் இவ்வளவுக் கேவலமாக அவமதிக்கப்படு வதுண்டா? அப்படி அவமதித்தால் மயிலே மயிலே இறகு போடு! என்று யாசகம் கேட்டுக்கொண்டுதான் இருப் பானா? மனு போட்டுக் கொண்டுதான் இருப்பானா?

மனிதனுக்கு முதலாவது உணர்வு என்பது சுய மரியாதைதானே. அதற்கே சவால் என்றால், அதனைக் கண்டு கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க முடியுமா?

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று திருக்குறளைவிட சுருக்கமாக மனிதனைப் படம் பிடித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்.

ஏதோ ஆகமமாம், அதில் சொல்லப்பட்டுள்ளதாம் - பார்ப்பனர் அல்லாதவன் கருவறைக்குள் சென்றால் கடவுள் தீட்டுப் பட்டுப் போய்விடுவாராம். யாரால் எழுதப்பட்டது அந்த ஆகமங்கள்? அவர்களாகவே எந்தக் காலத்திலோ சூழ்ச்சியாக எழுதி வைத்துக்கொண்டு அதனைப் பூச்சாண்டியாகக் காட்டி நம்மை மிரட்டு கிறார்கள் என்றால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்களா?

தன்மான உணர்வினை தமிழர்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார் அவர்களால், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட போராட்டம் இது.

இன்றைக்கு 43 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் சட்டம் கொண்டுவந்தாலும், அதனை மலம் துடைக்கும் காகிதமாகப் பார்ப்பனர்களும், நீதிமன்றங்களும் நினைப்பது என்றால், இதனை எப்படி அனுமதிக்க முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி. ஆத்திகம் - நாத்திகம் என்கிற பிரச் சினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுப் பிரச்சினை இது.

எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களும், அவர் களின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடிய நீதிமன்றமும்தான்.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட மூன்று கட்டப் போராட்டங்களுக்கும் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் போரணியாக நின்று போர்ச் சங்கு ஊதிப் புறப்படுவோம் - வாரீர்!

தமிழர்களின் பழம்பெருமை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; இப்பொழுது கோவில்களில் நாம் மீட்கும் இனவுரிமையில்தான், இழிவை ஒழிக்கும் உரிமையில் தான் தமிழர்களின் உண்மையான வீரதீரமும், தன்மான மும் உண்மையில் இருக்கிறது!

மறவாதீர்! மறவாதீர்!! முதல் கட்டப் போராட்டம் ஆகஸ்ட் முதல் தேதியில் - கழக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! ஆர்ப்பரித்துக் கிளம்புக அரிமா சேனையே!